Showing posts with label உக்ரசேனன். Show all posts
Showing posts with label உக்ரசேனன். Show all posts

Sunday, 27 February 2022

ஹிடிம்பன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 101

(ஹிடிம்பேந ஸாகம் வஸுதேவோக்ரஸேநயோர்யுத்தம் பலபத்ரேண ஹிடிம்பபராபவஷ்ச)

Hidimba | Bhavishya-Parva-Chapter-101 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: ஹிடிம்பனுடன் போரிட்ட வசுதேவரும், உக்ரசேனனும்; ஹிடிம்பனை வீழ்த்திய பலராமன்...


Balarama and hidimba

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வசுதேவரும், உக்ரசேனனும் நரைமுடியும், சுருங்கிய தோலும் கொண்ட கிழவர்களாக இருந்தாலும், அவர்களும் மகிழ்ச்சியாக அந்தப் போரில் ஈடுபட்டனர்.(1) ஞானத்திலும், அதன் நடைமுறை பயன்பாட்டிலும் முன்னேற்றம் அடைந்தவர்களான அவர்கள் இருவரும், அரச வகையின் கடமைகளை முழுமையாக அறிந்திருந்தனர். ராக்ஷசனான அந்தத் துராத்மாவிற்கு {ஹிடிம்பனுக்கு} எதிரான போரில் அவர்கள் இருவரும் ஒன்றுகூடிப் போரிட்டனர்.(2) ராக்ஷசேந்திரனும், துராத்மாவுமான ஹிடிம்பன் மீது ஆயிரக்கணக்கான கணைகளை ஏவி அவனை அவர்கள் துன்புறுத்தினர்.(3)

Sunday, 14 March 2021

அநிருத்தன் உஷை திருமண வரவேற்பு | விஷ்ணு பர்வம் பகுதி – 187 – 131

(உஷயா ஸஹாநிருத்தஸ்ய விவாஹ꞉ உஷாஹரணஸமாப்திஷ்ச)

Aniruddh's wedding and reception | Vishnu-Parva-Chapter-187-131 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : துவாரகையில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்த பெண்கள்; உஷை அநிருத்தனுடன் இன்புற்றிருத்தல்; விஷ்ணு மஹாத்மியம்; பலஸ்ருதி...


Krishna with Aniruddha and Usha

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அப்போது, பெருந்தோள்களைக் கொண்ட ஆஹுகன் {உக்ரசேனன்}, பேரொளி படைத்த கிருஷ்ணனிடம், தன் விழிகள் விரிய, "ஓ! யதுவின் வழித்தோன்றலே, நான் சொல்வதைக் கேட்பாயாக.(1) ஓ! என் குழந்தாய், நீ {அநிருத்தனும், நீயும்} நலத்துடன் திரும்பியதைக் கண்டோம். அவன் முறையாகக் கவனிக்கப்படுகிறான். அநிருத்தன் மீண்டதற்கும், திருமணம் செய்து கொண்டதற்கும் பெரும் விழா ஒன்றை {திருமண வரவேற்பை} ஏற்பாடு செய்வாயாக.(2) பெருமைமிகு உஷை, அநிருத்தனுடன் சேர்ந்தவளாகவும், தோழிகளால் சூழப்பட்டவளாகவும் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறாள்.(3) உயரான்மக் கும்பாண்டனின் பெருமைமிகு மகள் {ராமா / ராமை / ரமை} உஷையின் தோழியாகச் சேர்க்கப்பட வேண்டும். வைதர்ப்பி {விதர்ப்ப மன்னனின் மகள்}[1] செழித்திருக்கட்டும்.(4) எழில்மிகு கும்பாண்டன் மகளைச் சாம்பனுக்கும், எஞ்சிய கன்னிகையரை பிற இளவரசர்களுக்கும் முறையாக {திருமணம் முடித்துக்} கொடுப்பாயாக.(5)

Monday, 1 March 2021

அநிருத்தனுக்கான கவலையில் யாதவர்கள் | விஷ்ணு பர்வம் பகுதி – 178 – 122

(ஷ்ருதஹ்ருதாநிருத்தபாஷபந்தநஸ்ய க்ருஷ்ணஸ்ய ஷோணிதபுரகமநம்)

Anxiety of the yadavas for Aniruddha | Vishnu-Parva-Chapter-178-122 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : துவாரகையில் பெண்களின் ஓலம்; அநிருத்தனைத் தேடிச் சென்ற ஒற்றர்கள்; கிருஷ்ணனைத் துதித்த கருடன்; பாணனோடு போர்புரியச் சென்ற கிருஷ்ணன்...


Krishna and yadavas

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அநிருத்தன் பணயக் கைதியான போது, அவனது அன்புக்குரிய மனைவியரும், தோழியரும், அவனில்லாமல் அன்றில் பறவைகளைப் போல அங்கே {துவாரகையில்} அழுது கொணிடருந்தனர்.(1) {அவர்கள்}, "ஐயோ, தலைவர் கிருஷ்ணரின் பாதுகாப்பிலும் நாங்கள் அச்சத்தாலும், துயரத்தாலும் பீடிக்கப்பட்டவர்களாகவும், ஆதரவற்றவர்களாகவும் அழுது கொண்டிருக்கிறோம்.(2) எவருடைய தோள்களின் நிழலில் ஆதித்யர்கள், மருத்துகள், இந்திரனின் தலைமையிலான தேவர்கள் ஆகியோரும் தேவலோகத்தில் கவலையில்லாமல் வாழ்கின்றனரோ அவருக்கே இவ்வுலகில் இத்தகைய பேரிடர் நேர்ந்திருக்கிறது. ஐயோ, அவரது வீரப் பேரனான அநிருத்தனை அபகரித்துச் சென்றவன் எவன்?(3,4) ஐயோ, தாங்கிக் கொள்ள முடியாததாக இருக்கும் வாசுதேவரின் கோபமெனும் நெருப்பைத் தூண்டிய அந்தத் தீய மனம் படைத்தவன், இவ்வுலகில் நிச்சயம் அச்சமற்றவனே.(5) அவன், வாயை அகலமாகத் திறந்திருக்கும் யமனுடைய பற்களின் முன் நிற்கிறான். உண்மையில் அத்தகையே பகைவனாலேயே வாசுதேவனின் முன்பு போரில் நிற்க இயலும். சச்சியின் தலைவனாகவே {இந்திரனாகவே} இருந்தாலும், யது மன்னனான கேசவனுக்கு இத்தகைய தீங்கை இழைத்துவிட்டு உயிரோடு தப்ப முடியுமா?(6,7) ஐயோ, இன்று எங்கள் கணவர் அபகரிக்கப்பட்டாரோ, எங்கள் தலைவன் எங்களைக் கைவிட்டு எங்களைப் பரிதாபத்திற்குரியோர் ஆக்கினாரோ. ஓ! எங்கள் தலைவனின் பிரிவால் நாங்கள் யமனின் வசத்தை அடைந்திருக்கிறோம்" என்று சொல்லி அழுதனர்.(8)

Tuesday, 8 September 2020

கிருஷ்ணனை வரவேற்ற உக்ரசேனன் | விஷ்ணு பர்வம் பகுதி – 112 – 056

(துவாரவதீப்ரயாணஸங்கேதம்)

Ugrasena receives Krishna | Vishnu-Parva-Chapter-112-056 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : குசஸ்தலியில் இடம்பார்க்கச் சென்ற கருடன்; மதுராவில் கிருஷ்ணனை வரவேற்ற உக்ரசேனன்; குசஸ்தலிக்குப் புலம்பெயரும் ஆலோசனை...

Rama and Krishna being received at the Court of the King Ugrasena at Mathura

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! பிராமணரே, சக்ரனின் ஆற்றலைக் கொண்ட தலைவன் கிருஷ்ணன் விதர்ப்ப நகரில் இருந்து புறப்பட்ட போது, பெருஞ்சக்திவாய்ந்த வினதையின் மகனை {கருடனை வாகனமாகப்} பயன்படுத்தவில்லை; பிறகு ஏன் அவனைத் தன்னுடன் அழைத்துச் சென்றான்? வினதையின் மகன் {கருடன்} என்ன செய்தான்? ஓ! பெரும் முனிவரே, நான் இதில் ஆவல் நிறைந்தவனாக இருக்கிறேன்; ரகசியத்தைச் சொல்வீராக" என்று கேட்டான்.(1,2)

Sunday, 23 August 2020

ருக்மிணியின் சுயம்வரம் | விஷ்ணு பர்வம் பகுதி – 103 – 047

(ருக்மிணீஸ்வயம்வரார்தம்)

Rukshmini's swayamvara | Vishnu-Parva-Chapter-103-047 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : விதர்ப்ப இளவரசி ருக்மிணியின் சுயம்வரம் குண்டினபுரத்தில் நடைபெறுவதை அறிந்த கிருஷணன்...

Lord Krishna riding a chariot

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அந்த நேரத்தில் குடிமுதல்வனின் வீட்டுக்கு ஒப்பான பலதேவனின் வீட்டில் ஒற்றர்கள்[1] கூடினர்.(1) அந்த ஒற்றர்கள், வருங்காலச் சச்சரவுகள் குறித்து அறிவிக்க விரும்பி அங்கே வந்தபோது, கிருஷ்ணனின் ஆணையின் பேரில் முன்னணி யாதவர்கள் அனைவரும் சபையில் கூடினர்.(2)

Tuesday, 18 August 2020

மதுரா வந்த கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 101 – 045

(ராமக்ருஷ்ணயோர்மதுராகமனம்)

Krishna's arrival at Mathura | Vishnu-Parva-Chapter-101-045 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கரவீரபுரத்திலிருந்து மதுரா திரும்பிய ராமனும், கிருஷ்ணனும்; அவர்களுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு...

Krishna and Balarama

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வசுதேவனின் வீர மகன்கள் {பலராமன், கிருஷ்ணன்} இருவரும் தமகோஷனுடன் சேர்ந்து வழியில் பயணிகளின் விதிகளுக்கு இணங்க ஐந்து இரவுகளை ஓரிரவைப் போலக் கழித்தனர். மதுரா நகரை அவர்கள் அடைந்த போது, உக்ரசேனனின் தலைமையிலான யாதவர்கள் அனைவரும் அவர்களை வரவேற்பதற்காக நகரத்தைவிட்டு வெளியே வந்தனர்.(1-3) மதுராவைச் சேர்ந்த வணிகர்கள், குடிமக்கள், அமைச்சர்கள், சிறுவர்கள், முதியவர்கள் அனைவரும் அவர்களை வரவேற்பதற்காக வெளியே வந்தனர்.(4)

Monday, 20 July 2020

உக்ரஸேனனிடம் மறுமொழி கூறிய கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 87 – 032

(உக்ரஸேநாபிஷேகம்)

Krishna's reply to Ugrasena | Vishnu-Parva-Chapter-87-032 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் :  கம்ஸன் கொல்லப்பட்டதை யாதவர்களுக்கு விளக்கிய கிருஷ்ணன்; ஈமச்சடங்கு செய்ய கிருஷ்ணனிடம் அனுமதி கேட்ட உக்ரஸேனன்; உக்ரஸேனன் பட்டாபிஷேகம்...

Krishna crowning Ugrasena

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "நஞ்சு பருகிய மனிதனைப் போல மூச்சுவிட்டுக் கொண்டிருந்த உக்ரஸேனன், தன் மகனுக்கான துயரில் எரிந்தபடியே கிருஷ்ணனை அணுகினான்.(1) அவன் {கிருஷ்ணன்}, கம்ஸனை அழித்த பாவத்திற்காக மனம் வருந்திக் கொண்டிருப்பதையும், யாதவர்களால் சூழப்பட்டிருப்பதையும் அங்கே கண்டான்.(2)

Wednesday, 29 April 2020

பப்ருவின் குடும்பம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 37

(பப்ரு வம்ச வர்ணனம்)

Vabhru's Family | Harivamsa-Parva-Chapter-37 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : சாத்வத குலத்தில் தோன்றிய தேவாவ்ருதன்; பர்ணஸை ஆற்றின் எண்ணம்; தேவாவ்ருதன் மற்றும் பப்ருவின் சிறப்புகள்; மார்த்திகாவத போஜர்கள்; ஆஹுகன் மற்றும் ஆஹுகி; ஆஹுகனின் மகன்களான தேவகன் மற்றும் உக்ரஸேனன்...

Vabhru
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, நல்லியல்பின் குணத்துடன் கூடிய சாத்வதன், கௌஸல்யையிடம், பஜினன், பஜமானன், திவ்யன், தேவாவ்ருதன், அந்தகன், துவின் மகனான {யதுகுலத்தைத் தழைக்கச் செய்த} விருஷ்ணி எனப் பல மகன்களைப் பெற்றான். அவர்களுடைய மூதாதையரைக் குறித்து விரிவாகக் கேட்பாயாக.(1,2) பஜமானன், ஸ்ருஞ்ஜயனின் மகள்களும், பாஹ்யகை, உபபாஹ்யகை என்ற பெயர்களைக் கொண்டவர்களுமான இரு மனைவியரைக் கொண்டிருந்தான். {பஜமானனால்} க்ருமி, க்ரமணன், த்ருஷ்டன், ஸூரன், புரஞ்ஜயன் ஆகியோர் பாஹ்யகையிடம் பெறப்பட்டனர். மேலும், அயுதாஜித், ஸஹஸ்ராஜித், சதாஜித், தாசகன் ஆகியோர் ஸ்ருஞ்ஜயனின் மகளான உபபாஹ்யகையிடம் பஜமானனால் பெறப்பட்டனர்.(3-5)



{சாத்வதனின் நான்காம் மகன்} வேள்விகளைச் செய்பவனான மன்னன் தேவாவ்ருதன், "சிறப்புகள் அனைத்துடன் கூடிய ஒரு மகனை நான் கொள்ள வேண்டும்" என்று தீர்மானித்துக் கடுந்தவங்களைச் செய்தான்.(6) அவன் தன் மனத்தைக் கட்டுப்படுத்தி, பர்ணசை ஆற்றில் நீராடி, அந்நீரைக் கொண்டே தன் வாயையும் அலசி வந்தான். அவனது தொடர் தீண்டலின் காரணமாக அந்த ஆறானாவள் அவன் விரும்பியதை நிறைவேற்றினாள்.(7) ஆறுகளில் முதன்மையானவளான பர்ணஸை, தனிமையில் சிந்தித்து, அந்த மன்னனுக்கு ஏதேனும் நன்மையைச் செய்யத் தீர்மானித்தாள். இவ்வாறு தியானித்த அவளால், அத்தகைய சிறப்புமிக்க மகனைப் பெறவல்ல பெண்ணின் மீது அவனது கண்களை நிலைக்கச் செய்ய முடியவில்லை. அதன்படியே, அவள் தானே அந்த மன்னனுக்கு மனைவியாவதெனத் தன் மனத்தில் தீர்மானித்தாள்[1].(8,9) எனவே அவள் {பர்ணசை ஆறு}, தானே கன்னிகையாகி, மிக அழகிய வடிவை ஏற்று, அந்த மன்னனை {தேவாவ்ருதனைத்} தன் கணவனாக ஏற்றாள். அவனும் அவளை விரும்பினான்.(10)

[1] தேசிராஜுஹனுமந்தராவின் பதிப்பில், "’சமூகத்தின் நலனுக்கான சரியான வழித்தோன்றலாக மாறக்கூடிய சிறப்புமிக்க மகனைப் பெறவல்ல பெண்ணின் மீது இந்த மன்னன் இதுவரை தன் கண்களைச் செலுத்தவில்லை. இங்கே அவன் தவம் செய்கிறான். எனவே, நானே அவனை அணுகி, அவனை என் துணைவனாக்கிக் கொள்ளப் போகிறேன்’ என்று நினைத்தாள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "’மனிதர்களின் தலைவனான இவன், நன்மையை நோக்கித் தன் மனத்தைத் திருப்பியிருக்கிறான். எனினும், அத்தகைய மகனைப் பெறக்கூடிய பெண்ணை அவன் இன்னும் அணுகவில்லை. எனவே நானே அவனை அணுகி, அவனது நோன்பில் பங்கெடுக்கப் போகிறேன்’ என்று நினைத்தாள்" என்றிருக்கிறது.

பிறகு அவள் அந்தத் தயாள மனம் கொண்ட மன்னனால் கருவுற்றாள். பத்தாம் மாதத்தில் அவள், மன்னன் தேவாவ்ருதனிடம் இருந்து, பப்ரு என்ற பெயரில் பெருஞ்சிறப்புமிக்க ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். புராணங்களை நன்கறிந்த முனிவர்கள், இந்தக் குடும்பத்தில் உன்னதனான தேவாவ்ருதனின் சிறப்புகளை விளக்கும்போது, "மன்னன் தேவாவ்ருதன், தன் மாயாசக்தியின் மூலம் பல்வேறு வடிவங்களை ஏற்று, எங்களிடம் இருந்து தொலைவிலோ, எங்கள் அருகிலோ எங்கள் முன்னிலையிலேயே திரிவதை நாங்கள் காண்கிறோம்" என்று சொல்வார்கள்[2].(11-13) மனிதர்களில் முதன்மையானாகப் பப்ருவும், தேவர்களுக்கு இணையானவனாகத் தேவாவ்ருதனும் இருந்தனர். தேவாவ்ருதன் மற்றும் பப்ருவினால் போரில் கொல்லப்பட்டு நானூற்று அறுபத்திரண்டாயிரம் {நான்கு லட்சத்து அறுபத்திரண்டாயிரம்}[3] மனிதர்கள் பிரம்மலோகத்தை அடைந்தனர். பப்ரு வேள்விகள் பலவற்றைச் செய்தான், கொடைகளைக் கொடுத்தான், கல்விமானாகவும், பிரம்மஞானத்தை அறிந்தவனாகவும் இருந்தான். அவனுடைய ஆயுதம் வலிமைமிக்கதாக இருந்தது. மேலும் அவன் மகிமையான செயல்களைச் செய்பவனாகவும், பெரும்பிரகாசம் கொண்டவனாகவும், சாத்வதர்களில் முதன்மையானவனாகவும் இருந்தான். அவனது குடும்பம் மிகப் பெரியதாக இருந்தது, அவனது {தேவாவ்ருதன் மற்றும் பப்ருவின்} வழித்தோன்றல்கள் மார்த்திகாவத போஜர்களாக இருந்தனர்.(14-16)

[2] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில், "எங்கள் முன்னிலையிலோ, தொலைவிலோ, தற்போதோ, மிகப் பழங்காலத்திலோ நற்குணங்களில் தேவாவ்ருதனுக்கு ஒப்பான எவனையும் நாங்கள் கண்டதில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பப்ரு மனிதர்களில் சிறந்தவனாவான், தேவாவ்ருதன் தேவர்களுக்கு இணையானவனாவான். இதற்கு முன்பு இத்தகைய ஒருவனைக் குறித்து நாங்கள் கேள்விப்பட்டதில்லை. இத்தகைய ஒருவனை அருகிலோ, தொலைவிலோ நாங்கள் கண்டதில்லை" என்றிருக்கிறது.
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும், "தேவாவ்ருதனின் மகனான பப்ரு, ஏழாயிரத்து அறுபத்தாறு பகைவீரர்களை {கொன்று} சொர்க்கத்திற்கு அனுப்பினான்" என்றிருக்கிறது.

{சாத்வதன், கௌஸல்யையிடம், பெற்ற ஐந்தாவது மகனான அந்தகனிடம்} அந்தகனிடம், காசியனின் {த்ருடசிரவனின்} மகள், குகுரன், பஜமானன், சமி, மற்றும் கம்பலபர்ஹிஷன் என்ற பெயர்களைக் கொண்ட நான்கு மகன்களைப் பெற்றாள்.(17)

{அந்தகனின் முதல் மகன் குகுரனின்} குகுரனின் மகன் த்ருஷ்ணுவும், த்ருஷ்ணுவின் மகன் கபோதரோமனும் ஆவர். அவனுடைய {கபோதரோமனின்} மகன் தைத்திரி ஆவான்.(18) அவனிடம் {தைத்திரியிடம்} புனர்வஸுவும், அவனிடம் {புனர்வஸுவிடம்} அபிஜித்தும் பிறந்தர்கள், அவனுக்கு இரு பிள்ளைகள் இருந்தனர்.(19) ஆஹுகன் (என்ற ஒரு மகன்) மற்றும் ஆஹுகி (என்ற ஒரு மகள்) ஆகியோர் நன்கறியப்பட்டவர்களாகவும், கொண்டாடப்படுபவர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களாகவும் இருந்தனர். பின்வரும் ஸ்லோகம், ஆஹுகனைப் புகழ்ந்து பாடப்பட்டது.(20) "தூய ஆன்மா கொண்ட வழித்தோன்றல்களால் சூழப்பட்ட அவன் {ஆஹுகன்} ஓர் இளம் குதிரையைப் போல (உன்னதமானவனாகவும், சக்திமிக்கவனாகவும்) இருந்தான். அந்த மன்னன் முதலில் படையெடுத்த போது அவன் தேவர்களால் பாதுகாக்கப்பட்டான்"[4].(21)

[4] "இந்த உரைக்கு மற்றொரு பொருள் இருக்கிறது. அவன் எண்பது மனிதர்களால் இழுக்கப்பட்ட வண்டியில் வெளியே சென்றான். அசீதி என்றால் எண்பது. சர்மணா என்றால் மரவண்டி, யுக்தம் என்றால் இருக்கை என்றும் பொருள். நான் பின்பற்றியிருக்கும் பொருள் இவ்வாறே அமைக்கப்பட்டது. அசீதயர்கள் என்றால் தேவர்கள், சர்மா என்றால் கணைகளைப் பாதுகாக்கும் தோலுறை, யுக்தம் என்றால் பாதுகாக்கப்பட்டவன் என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது, தோலுறைகளில் பாதுகாக்கப்படும் கணைகளைப் போலத் தேவர்களால் அவன் பாதுகாக்கப்பட்டான். அதாவது தேவர்கள் அவனுக்குத் தோலுறைகளைப் போல இருந்தனர். இரு பொருள்களும் சரியானவையே. முன்னது அவனுடைய காந்தியைக் குறித்தும், பின்னது தேவர்கள் அவன்மீது கொண்ட நல்லெண்ணத்தையும் எடுத்துக் காட்டும்" என இங்கே மன்மதநாததத்தர் விளக்குகிறார். தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில், "இந்த ஸ்லோகத்திற்கு "ஆஹுகன், எப்போதும் போர்க்களத்தின் முன்னணியில் முன்னேறிச் செல்லும் இளைஞனைப் போல எண்பது தோல் கவசங்களை அணிந்து கொண்டவனாகவும், வெள்ளுடை அணிந்த படையினரால் சூழப்பட்டவனாகவும் சென்றான்" என்று பொருள் கொள்ளலாம், அல்லது, "ஆஹுகன் எண்பது மனிதர்களால் சுமக்கப்படும் வண்டியில், வெள்ளுடை உடுத்திய காவலர்களால் சூழப்பட்டவனாக ஓர் இளங்குதிரையைப் போல எப்போதும் வெளியே செல்வான்" என்றும் கொள்ளலாம், அல்லது "ஆஹுகன், தேவர்களின் பாதுகாப்புடனும், வெள்ளுடைய உடுத்திய காவலர்களுடனும் எப்போதும் வெளியே செல்வான்" என்றும் கொள்ளலாம்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஆஹுகன் வெண்குதிரைகளால் சூழப்பட்டிருந்தான். அவன் பெரியவனாகவும், வடிவில் இளைஞனாகவும் இருந்தான். அவன் எண்பது கேடயங்களுடன் படையின் முன்னணியில் முன்னேறிச் சென்றான்" என்றிருக்கிறது.

இந்தப் போஜ மன்னனை {ஆஹுகனை} பின்பற்றியவர்களில் பிள்ளை இல்லாதவர்களோ, நூறு கொடைகளைக் கொடுக்காதவர்களோ, ஆயிரம் வருடம் நீடித்த வாழ்வு இல்லாதவர்களோ, தூய செயல்களைச் செய்யாதவர்களோ, யாகங்களைச் செய்யாதவர்களோ எவரும் இல்லை.(22) கொடிகள் இணைக்கப்பட்டவையும், அடியில் மரத்துண்டுகளைக் கொண்டவையும், மேகம், தங்க மற்றும் வெள்ளி சங்கிலிகளின் சிணுங்கலைப் போல ஒலியுள்ளவையும், நுகத்தடிகளைக் கொண்ட பத்தாயிரம் யானைகளுடன் கூடியவையுமான பத்தாயிரம் தேர்கள், ஆஹுகனின் ஆணையின் பேரில் கிழக்குப் பகுதியை நோக்கிச் சென்றன.(23,24) அதற்கு இணையான எண்ணிக்கையிலான தேர்களும், யானைகளும் வடக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டன. ஆஹுகன், தன் தளபதிகள் அனைவரையும் {குறுநில மன்னர்களைத் தளபதிகளாக்கி} தன் கட்டுக்குள் கொண்டுவந்து, சிறு மணிகளால் அலங்கரிக்கப்பட்ட தன் தேரில் தன் உற்றார் உறவினருடன் வெளியில் சென்றான்.(25)

அந்தகர்கள், ஆஹுகனுடன் பிறந்தவளான ஆஹுகியை அவந்தி மன்னனுக்கு அளித்தனர். ஆஹுகன், காசி மன்னனின் மகளிடம் இரு மகன்களைப் பெற்றான்.(26) அவர்கள் தேவர்களின் மகன்களைப் போல இருந்த தேவகனும், உக்ரஸேனனும் ஆவர்.

{ஆஹுகனின் முதல் மகனான தேவகனுக்குத்} தேவகனுக்குத் தேவர்களைப் போன்ற நான்கு மகன்கள் இருந்தனர்.(27) அவர்கள் தேவவான், உபதேவன், ஸுதேவன், தேவரக்ஷிதன் ஆகியோராவர். அவனுக்கு {தேவகனுக்கு} இருந்த ஏழு மகள்களையும் வஸுதேவனுக்கு அளித்தான். அவர்கள் தேவகி, ஸாந்திதேவி, ஸ்ரீதேவி {ஸுதேவி}, தேவரக்ஷிதை, விருகதேவி, உபதேவி, ஏழாவதாக ஸுனாமதி {ஸுனாஸி} ஆகியோராவர்.(29)

{ஆஹுகனின் இரண்டாம் மகனான உக்ரஸேனனுக்கு} உக்ரஸேனனுக்கு ஒன்பது மகன்கள் இருந்தனர், அவர்களில் கம்ஸன் மூத்தவனாவான். மற்றவர்கள் ந்யக்ரோதன், ஸுநாமன், கங்கன், சங்கு, ஸுபூமிபன், ராஷ்ட்ரபாலன், ஸுதேனு, அனாத்ருஷ்டி, புஷ்டிமான் ஆகியோராவர். அவர்களுக்கு, கம்ஸை, கம்ஸாவதி, ஸுதேனு, ராஷ்ட்ரபாலி, மற்றும் அழகிய கங்கை ஆகிய ஐந்து தங்கைகள் இருந்தனர்.

குகுர குலத்தில் பிறந்த உக்ரசேனனின் குடும்பத்தை நான் விளக்கிச் சொன்னேன்.(30-32) பெருஞ்சக்திவாய்ந்த இந்தக் குகுர குலத்தைத் தியானிக்கும் மனிதன் சந்ததியையும், பெரும் குடும்பத்தையும் அடைகிறான்" என்றார் {வைசம்பாயனர்}.(33)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 37ல் உள்ள சுலோகங்கள் : 33
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Saturday, 25 April 2020

குரோஷ்டுவின் குடும்பம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 34

(விருஷ்ணி வம்ச வர்ணனம்)

Krousthu's Family | Harivamsa-Parva-Chapter-34 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : குரோஷ்டுவின் மகன்கள்; விருஷ்ணி குலத்தின் மூன்று கிளைகள்; உக்ரஸேனரின் மகளான ஸுகாத்ரியை மணந்து கொண்ட அக்ரூரர்; குரோஷ்டுவின் மூன்றாவது மகனான சூரன்; சூரனுக்குப் பிறந்த வஸுதேவனும், மேலும் ஒன்பது பேரும்; சூரனுக்குப் பிறந்த ஐந்து மகள்கள்; அவர்களுடைய சந்ததிகள்...

Vrishni Heroes - depiction from 4th century

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "குரோஷ்டுவுக்குக் காந்தாரி மற்றும் மாத்ரி என இரு மனைவிகள் இருந்தனர்; அவர்களில் காந்தாரி, பெருஞ்சக்தி கொண்ட அனமித்ரனைப் பெற்றாள், மாத்ரி, யுதாஜித் மற்றும் தேவமீடுஷன் ஆகியோரைப் பெற்றாள். அங்கே விருஷ்ணி குலத்தின் மூன்று கிளைகள் இருப்புக்கு வந்தன.(1,2) மாத்ரியின் மகன் {யுதாஜித்}, விருஷ்ணி மற்றும் அந்தகன் என்ற இரு மகன்களைப் பெற்றான். விருஷ்ணியின் மகன்கள், சுவபல்கன் மற்றும் சித்ரகன் ஆகியோராவர்.(3) ஓ! மன்னா, சுவபல்கன் எங்கெல்லாம் வாழ்ந்தானோ, அங்கெல்லாம் நோயையோ, பஞ்சத்தையோ குறித்த அச்சமில்லை.(4) ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, ஒரு காலத்தில் மழைத்தேவனான இந்திரன் காசி மன்னனின் நிலப்பரப்பில் மூன்று ஆண்டுகளாக மழைபொழியாதிருந்தான்.(5)



அதன்படி அந்த மன்னன் மதிப்புக்குரிய சுவபல்கனை தன் நாட்டுக்கு அழைத்து வந்தான். அவன் அங்கே வாழ்ந்து வந்ததன் விளைவால் இந்திரன் மழையைப் பொழிந்தான்.(6) சுவபல்கன், காசி மன்னனின் மகளான காந்தினியைத்[1] தன் மனைவியாக அடைந்தான். அவள் {காந்தினி} நாள்தோறும் பிராமணர்களுக்குப் பசுக்களைக் கொடுத்து வந்தாள்.(7) அவள் தன் தாயின் கருவறையில் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தாள். அவ்வாறு அவள் தன் தாயின் கருவறையில் பல ஆண்டுக்ள வாழ்ந்து வந்ததால், அவளுடைய தந்தை, அவளிடம், "விரைவில் பிறப்பாயாக. உனக்கு நன்மை நேரட்டும், ஏன் நீ இன்னும் அங்கே வாழ்வகிறாய்?" என்று கேட்டான். கருவறையில் இருந்த மகள், "நான் நாள்தோறும் ஒரு பசுவைக் கொடையளிப்பேன். இதற்கு நீர் உடன்பட்டால் நான் பிறப்பேன்" என்று மறுமொழி கூறினாள். தந்தை, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லித் தன் மகளின் விருப்பத்தை நிறைவேற்றினான்.(8-10)

[1] காம்+தினி; காம்தததி = பசுவைக் கொடையளிப்பவள் என்பதால் காந்தினி எனக் கொள்க

சுவபல்கன், காந்தினி என்ற அந்தப் பெண்ணிடம் வீரனும், தயாளனும், சாத்திரங்களை நன்கறிந்தவனும், பல யாகங்களைச் செய்தவனும், பல கொடைகளை அளித்தவனும், விருந்தினர்களுக்கு அன்பானவனுமான அக்ரூரனைப் பெற்றான்.(11) உபாசஞ்சன் {உபாஸங்கன்}, சத்கு {மத்ரு}, மிருதுரன், அரிமேஜயன், அரிக்ஷிபன் {அவிஹிபன்}, உபேக்ஷன், சத்ருக்னன், அரிமர்தனன், தர்மத்ருக், யதிதர்மன், கித்ரமோஜன் {கிருத்ரன்}, {போஜன்}, அந்தகன், ஆவாஹு, பிரதிவாஹு ஆகியோர் அக்ரூரனுடன் பிறந்தோராவர். அழகிய ஸுந்தரி அவனுடைய தங்கையாக இருந்தாள்.(12,13) ஓ! குருவின் வழித்தோன்றலே, அக்ரூரன், உக்ரசேனனின் மகளான ஸுகாத்ரியிடம், தேவர்களைப் போன்ற சக்திமிக்கவர்களான பிரஸேனன் மற்றும் உபதேவன் ஆகியோரைப் பெற்றான்.(14) பிருது, விப்ருது, அஷ்வக்ரீவன், அஷ்வபாஹு, ஸுபார்ஷ்வகன், கவேஷி {கவேஷணன்}, அரிஷ்டனேமி, அஷ்வன், ஸுதர்மன், தர்மப்ருத், ஸுபாஹு, பஹுபாஹு ஆகியோர் அக்ரூரனுடன் {அக்ரூரனின் தாத்தா சுவபல்கனுடன்} பிறந்தவனான சித்ரகனின் மகன்களாவர். அவனுக்கு {சித்ரகனுக்கு} சிரவிஷ்டை மற்றும் சிரவணை என்ற பெயர்களில் இரு மகள்களும் இருந்தனர்.

குரோஷ்டுவின் மூன்றாவது மகன் தேவமீடுஷன் அஷ்மகியிடம் சூரன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான். அவன் {சூரன்}, தன்னுடைய போஜ ராணியிடம் {மாரிஷையிடம்} பத்து மகன்களைப் பெற்றான்.(15-17) அவர்களில் வலிமைமிக்கக் கரங்களையும், ஆனகதுந்துபி என்ற பட்டப்பெயரையும் கொண்டவ வஸுதேவன் முதலில் பிறந்தான். அந்நேரத்தில் சொர்க்கத்தில் எக்காளங்களின் ஒலிகளும், பூமியில் துந்துபிகளின் பேரொலிகளும் எழுந்தன. சூரனின் வீட்டில் பெரும் மலர்மாரி பொழிந்தது. வஸுதேவனின் அழகு, மனிதர்களின் உலகில் ஒப்பற்றதாக இருந்தது. மனிதர்களில் முதன்மையானவனான அவன் சந்திரனைப் போன்ற அழகு நிறைந்தவனாக இருந்தான்.(18-20) அதன் பிறகு, தேவபாகன், தேவஷ்ரவன், அனாத்ருஷ்டி, கனவகன், வத்ஸாவான், கிருஞ்ஜிமன், சியாமன், சமீகன், கண்டூஷன் ஆகியோர் வரிசையாகப் பிறந்தனர். இவர்களே சூரனின் பத்து மகன்களாவர். இவர்களைத் தவிரச் சூரனுக்கு, பிருதுகீர்த்தி, பிருதை, சுருததேவி, சுருதசிரவை மற்றும் ராஜாதிதேவி என்ற ஐந்து அழகிய மகள்களும் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் வீரமிக்க மகன்களை ஈன்றனர்.

ஓ! குருவின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, குந்தி மன்னன் {குந்திபோஜன்} பிருதையை {சூரனின் இரண்டாம் மகளைப்} பெற விரும்பினான்.(21-23) எனவே, சூரன், முதியவனும், வழிபடத்தகுந்தவனுமான குந்திபோஜனுக்கு அவளை {தன் இரண்டாம் மகளான பிருதையை} அளித்தான். இவ்வாறு அவள் {பிருதை} குந்திபோஜனால் தத்தெடுக்கப்பட்டதன் விளைவாக அவள் குந்தி என்ற பெயரைப் பெற்றாள்.(24)

அந்தன், {சூரனின் மூன்றாம் மகளான} சுருததேவியிடம் ஜக்ருஹுவைப் பெற்றான்.

சேதியின் மன்னன், {சூரனின் நான்காம் மகளான}சுருதசிரவையிடம் பெருஞ்சக்திமிக்கச் சிசுபாலனைப் பெற்றான்.(25) அவன் தன்னுடைய முற்பிறவியில் ஹிரண்யகசிபுவாக இருந்தான்.

விருத்தசர்மன், {சூரனின் முதல் மகளான} பிருதுகீர்த்தியிடம் பெருஞ்சக்திமிக்க வீரனும், கரூஷ மன்னனுமான தந்தவக்ரனைப் பெற்றான்.

குந்திபோஜன் {சூரனின் இரண்டாம் மகளான} பிருதையைத் தன் மகளாகத் தத்தெடுத்தான். பாண்டு அவளைத் {பிருதையைத்/ குந்தியைத்} திருமணம் செய்து கொண்டான்.(26,27) அறவோனான யுதிஷ்டிரனை தர்மனும், பீமசேனனை வாயுவும் (காற்றின் தேவனும்), வீரர்களில் முதன்மையானவனும், சக்தியில் தன்னைப் போன்றவனும், உலகில் கொண்டாடப்பட்டவனுமான தனஞ்சயனை[2] இந்திரனும் அவளிடம் பெற்றனர்.

[2] "இஃது அர்ஜுனனின் மற்றுமொரு பெயராகும். அவன் வளங்களின் தேவனான குபேரனை வீழ்த்தியதால் இந்தப் பெயரைப் பெற்றான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

விருஷ்ணி மகன்களில் இளையவனான {க்ரோஷ்டு மூலம் காந்தாரிக்குப் பிறந்த} அனமித்ரனிடம் ஸினி/சினி பிறந்தான்.(28,29) அவனுடைய மகன் ஸத்யகனும், அவனுடைய {ஸத்யகனின்} மகன்கள் யுயுதானனும், ஸாத்யகியுமாவர்?[3]. யுயுதானனின் {ஸாத்யகியின்} மகன் அஸங்கனும், அவனுடைய {அஸங்கனின்} மகன் பூமியும் ஆவர். அவனுடைய {பூமியின்} மகன் யுகந்தரனோடு அந்தக் குலத்தின் வரிசை முடிந்து.

பெரும் உத்தவன், {சூரனின் இரண்டாம் மகனான} தேவபாகனின் மகனாவான். அவன் கல்விமான்களில் முதன்மையானவனாகவும், தேவர்களைப் போன்ற சிறப்புமிக்கவனாகவும் அறியப்பட்டான்.

{சூரனின் நான்காம் மகனான} அனாதிருஷ்டி தன் மனைவியான அஷ்மகியிடம் நிவ்ருத்தசத்ரு என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான்.

{சூரனின் மூன்றாம் மகனான} தேவசிரவன், சத்ருக்னன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான்.(32) தேவசிரவனின் {மற்றொரு} மகன் ஏகலவ்யன் நிஷாதர்களால்[4] வளர்க்கப்பட்டு, அதன்படியே நைஷாதி என்று அழைக்கப்பட்டான் {என்று நாம் கேள்விப்படுகிறோம்}[5].(33)

{சூரனின் ஆறாம் மகனான} வத்ஸவானுக்குப் பிள்ளையில்லை என்பதால் சூரனின் மகனான பலமிக்க {சூரனின் மகன்களில் மூத்தவனான} வசுதேவன், தனக்குப் பிறந்த வீர மகன் கௌசிகனை அவனுக்குக் கொடுத்தான்.(34)

[3] இங்கே மன்மதநாததத்தரின் பதிப்பில் யுயுதானனும், சாத்யகியும் வெவ்வேறாகக் காட்டப்படுகின்றனர். நிச்சயம் இது பிழையாகவே இருக்க வேண்டும். தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "ஸாத்யகி என்கிற யுயுதானன்" என்று இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஸத்யகனின் மகன் யுயுதான சாத்யகி ஆவான்" என்றிருக்கிறது.

[4] தாழ்ந்த சாதி மக்கள் என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "தேசிரவனுக்கு மற்றொரு மகன் இருந்தான் என்றும், அவன் ஏதோவொரு காரணத்திற்காகக் குழந்தைப் பருவத்திலேயே வெளியேற்றப்பட்டு, பழங்குடி மக்களால் வளர்க்கப்பட்டான் என்றும் நாம் கேள்விப்படுகிறோம், அவனை அவர்கள் ஏகலவ்யன் என்று அழைக்கிறார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "சுருததேவன் சத்ருக்னன் என்ற பெயரில் ஒரு மகனைக் கொண்டிருந்தான். அவனுக்கு மற்றொரு மகனும் இருந்தான் அவன் உன்னதமற்ற நிஷாதர்களால் வளர்க்கப்பட்டான் என்றும் கேள்விப்படப்படுகிறது. அவன் நிஷாதர்களால் வளர்க்கப்பட்டான், அவனுடைய பெயர் ஏகலவ்யன் ஆகும்" என்றிருக்கிறது.

{சூரனின் பத்தாம் மகனான} கண்டூஷனுக்கும் பிள்ளை இல்லை என்பதால், சாருதேஷ்ணன், ஸுசாரு, பஞ்சாலன், க்ருதலக்ஷணன் என்ற நான்கு மகன்களை விஷ்வக்ஸேனன் {விஷ்ணு} அவனுக்குக் கொடுத்தான்.(35) அந்த வீரன் (சாருதேஷ்ணன்} போர்க்களத்தில் போரிடாமல் ஒருபோதும் திரும்பியவனல்ல. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பெருங்கரம் கொண்ட ரௌக்மிணேயனே அவர்கள் அனைவரிலும் இளையவனாவான்.(36) அவன் பயணப்படும்போதேல்லாம், "சாருதேஷ்ணனால் கொல்லப்படும் பல்வேறு விலங்குகளின் இனிய இறைச்சியை நாம் உண்ணலாம்" என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான காக்கைகள் அவனைப் பின்தொடர்ந்து சென்றன[6].(37)

[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த மூன்று ஸ்லோகங்களிலும் உள்ள வாக்கியங்களைப் பகுப்பது மிகக் கடினமாகும். எம்.என்.தத் {மன்மதநாததத்தர் இதை மிக மேலோட்டமாக மொழிபெயர்த்திருக்கிறார். கிடைத்திருக்கும் வட்டார மொழிபெயர்ப்புகளில், விஷ்வக்ஸேனன், சாருதேஷ்ணன், ரௌக்மிணேயன் என்ற பெயரிடல் மூலம் சாருதேஷ்ணன் ருக்மிணியின் இளைய மகன் என்று பொருத்தமற்ற வகையில் கூறப்பட்டுள்ளது. {இக்கதைப்படி} இன்னும் பிறக்காத கிருஷ்ணனின் வருங்கால மனைவியான ருக்மிணிக்கு விஷ்வக்ஸேனனின், அதாவது கிருஷ்ணனின் அருளால் பிறக்கும் இளைய மகனான சாருதேஷ்ணன் கண்டூஷனுக்குக் கொடுக்கப்பட்டான் என்று {பொருத்தமற்ற வகையில்} சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பட்டால், கிருஷ்ணன், தான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத மனைவியான ருக்மிணியிடம் தன் தந்தையின் தம்பிக்காகப் {தன் சிறியதந்தைக்காகப்} பெற்றான் என்ற பொருளைத் தரும். ரௌக்மிணேயன் மற்றும் விஷ்வக்ஸேனன் ஆகியோர் யாராக இருந்தாலும், சாருதேஷ்ணன் என்பது உணவைக் கொடுப்பவன் என்ற பொருளைத் தரும். எனவே இஃது இந்தக் கேள்வியில் உள்ள கதாபாத்திரத்திற்குக் காக்கைகள் தரும் பெயர் என்று கொள்ளலாம்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "வலிய கரங்களைக் கொண்டவனும், துணிச்சல்மிக்கவனுமான ருக்மிணியின் மகனே அவர்கள் அனைவரிலும் இளையவனாகவும், போரில் இருந்து ஒருபோதும் புறமுதுகிடாதவனுமாக இருந்தான்" என்றிருக்கிறது. இதன் அடிக்குறிப்பில், "இது பொருத்தமற்றதாக இருக்கிறது. ருக்மிணி கிருஷ்ணனை மணந்து கொண்டாள். அவர்களது மகன் பிரத்யும்னன் ஆவான். ஆனால் இங்கே இன்னும் கிருஷ்ணன் பிறக்கவே இல்லையே" என்றிருக்கிறது.

{சூரனின் ஐந்தாம் மகனான} கனவகனுக்குத் தந்த்ரிஜன் மற்றும் தந்த்ரிபாலன் என்ற இரு மகன்கள் இருந்தனர்.

{சூரனின் ஏழாம் மகனான} அவகிருஞ்ஜிமன், வீரன், அஷ்வபானு என்ற இரு மகன்களைக் கொண்டிருந்தான்.

{சூரனின் எட்டாம் மகனான} சியாமனின் மகன்கள் ஸுமித்ரனும், சமீகனுமாவர். பின்னவன் {சமீகன்} நாட்டை அடைந்தான். அவன் தன்னை ஒரேயொரு மாகாணத்தின் மன்னனாக இருப்பதற்குத் தகுந்தவனென்று எனக் கருதியதால், ராஜசூய வேள்வியைச் செய்தான்[7].(38,39) அவன், பகைவர்களற்றவனான யுதிஷ்டிரனின் உதவியைப் பெற்று தன் பகைவர்கள் அனைவரையும் கொன்றான்.

இனி வசுதேவனின் வழித்தோன்றல்களைச் சொல்கிறேன் கேட்பாயாக.(40) பல கிளைகளைக் கொண்டதும், பெருஞ்சக்திமிக்கதும், மூன்று வகையானதுமான விருஷ்ணி குலத்தைக் குறித்துத் தியானிப்பவன், இவ்வுலகில் எந்தத் தீப்பேற்றினாலும் துன்பமடையமாட்டான்" என்றார் {வைசம்பாயனர்}.(41)

[7] மற்ற சக்திகள் அனைத்தையும் அடக்கிவிட்டு உயர்ந்த தலைவனாகும் ஒரு பேரரசனால் மட்டுமே செய்யக்கூடிய அறம் சார்ந்த ஒரு விழாவாகும். மன்னன் சமீகன், ஒரே ஒரு மாகாணத்திற்கு மட்டுமே மன்னனாக இருப்பதில் நிறைவடையவில்லை" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "வசுதேவனின் மற்றொரு தம்பியான சியாமன், அவனுடைய தம்பியான சமீகனைத் தன் மகனைப் போலவே பார்த்துக் கொண்டான். எனவே, சமீகன் போஜர்களின் நாட்டை அடைந்தான். அவன் போஜ நாட்டுக்கு மட்டும் மன்னனாக இருப்பதை விரும்பாமல் ராஜசூய வேள்வியைச் செய்தான்" என்று இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "சியாமனின் மகன் சுமித்ரனாவான். சமீகன் நாட்டை அடைந்தான். அவனுடைய மகன் அஜாதசத்ரு பகைவர்களை அழித்தான்" என்றிருக்கிறது.

ஹரிவம்ச பர்வம் பகுதி – 34ல் உள்ள சுலோகங்கள் : 41
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்