(ருக்மிணீஹரணம்)
An account of Rukshmi: Krishna takes away Rukshmi | Vishnu-Parva-Chapter-116-060 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : ருக்மிணியை அபகரித்துச் சென்ற கிருஷ்ணன்; ஜராசந்தனுடனும், சிசுபாலனுடனும் கடும்போர் செய்த யாதவர்கள்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதேவேளையில் வலிமைவாய்ந்த ஜராசந்தன், சேதிகளின் மன்னனை நிறைவடையச் செய்யும் வகையில், "மன்னன் சிசுபாலனுக்கும், பீஷ்மகனின் மகளான ருக்மிணிக்கும் இடையில் பொன் நாணய, ஆபரணக் கொடைகளுடன் திருமணம் நடைபெறும்" என அறிவித்தான்.(1,2) பெரும் பலம்வாய்ந்தவனும், ஆயிரங்கண் தேவனைப் போன்று மாயைகளில் தேர்ந்தவனும், தந்தவக்ரனின் மகனுமான சுவக்தரன்,(3) பெருஞ்சக்தியும், வலிமையும் கொண்டவனும், ஓர் அக்ஷௌஹிணி படைவீரர்களின் தலைவனுமான சுதேவன், பௌண்ட்ர மன்னன் வாசுதேவனின் மகன்,(4) பெருஞ்சக்திவாய்ந்த ஏகலவ்யனின் மகன், பாண்டிய மன்னனின் மகன், கலிங்கத்தின் பலம்வாய்ந்த மன்னன்,(5) கிருஷ்ணனின் பகைவனான மன்னன் வேணுதாரி, அம்சுமான், கிரதன் சுருததர்மன்,(6) பகைவரைப் புறமுதுகிடச் செய்யும் காளிங்கன், காந்தார மன்னன், பெரும் வீரமிக்கவனான கௌசம்பியின் மன்னன்,(7) பெரும்படையுடன் கூடிய பகதத்தன், சலன், பலம்வாய்ந்தவனான சால்வன், பெரும்படையுடன் கூடிய பூரிஸ்ரவஸ், வீரனான குந்திவீர்யன் ஆகியோரையும் இதை ஆதரிக்குமாறு அவன் {ஜராசந்தன்} தூண்டினான்[1]" என்றார்.(8)

