Showing posts with label ஹரிவம்ச பர்வம். Show all posts
Showing posts with label ஹரிவம்ச பர்வம். Show all posts

Thursday, 25 June 2020

கிருஷ்ணனைத் துதித்த இந்திரன் | விஷ்ணு பர்வம் பகுதி – 74 – 019

(கோவிந்தாபிஷேகம்)

Indra comes and eulogises Krishna | Vishnu-Parva-Chapter-74-019 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனைத் துதித்த இந்திரன்; கிருஷ்ணனுக்கு கோவிந்தப் பட்டம் கொடுத்தது; அர்ஜுனனை அருகில் இருந்து காக்குமாறு கிருஷ்ணனை வேண்டிக்கொண்ட இந்திரன்; கிருஷ்ணன் அளித்த உறுதிமொழி...

<
Indra worships Lord Krishna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தேவர்களின் மன்னனான புரந்தரன் {இந்திரன்}, இவ்வாறு கோவர்த்தன மலை உயர்த்தப்பட்டதையும், பசுக்கள் காப்பாற்றப்பட்டதையும் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்து கிருஷ்ணனைக் காண விரும்பினான்.(1) அவன், பெருகி வழியும் மதநீருடன் கூடியதும், நீரற்ற ஒரு மேகத்திற்கு ஒப்பானதுமான தன் யானை ஐராவதத்தின் மேல் அமர்ந்து கொண்டு பூமிக்கு வந்தான்.(2) களைப்பில்லாமல் செயல்புரிபவனான கிருஷ்ணன் கோவர்த்தன மலையின் அடியில் அமர்ந்திருப்பதைப் புரந்தரன் கண்டான்.(3) அழிவற்றவனான விஷ்ணு, ஓர் இடையனின் வடிவை ஏற்றுப் பெரும் பிரகாசத்துடன் அங்கே ஒளிர்ந்து கொண்டிருப்பதைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தான்.(4) பல கண்களைக் கொண்டவனான சக்ரன் {இந்திரன்}, ஸ்ரீவத்ஸமெனும் மாயக்குறியையும், நீலோத்பலத்திற்கு ஒப்பான வண்ணத்தையும் கொண்ட கிருஷ்ணனைத் தன் கண்கள் அனைத்தாலும் கண்டான்.(5) சக்ரன், அழகைக் கொடையாகக் கொண்டவனும், மனிதர்களின் நிலத்தில் {உலகத்தில்} தேவனைப் போன்றவனுமான அவன் மலையின் அடிவாரத்தில் மகிழ்ச்சியாக அமர்ந்திருப்பதைக் கண்டு நாணமடைந்தான்[1].(6)

[1] சித்திரசாலை பதிப்பில், 3ம் ஸ்லோகத்தில், "கோவர்த்தன மலையின் பாறை மீது அமர்ந்திருந்த கிருஷ்ணனைக் கண்டான்" என்றும், 6ம் ஸ்லோகத்தில், "பாறை மீது சுகமாக அமர்ந்திருந்த கிருஷ்ணனைக் கண்டான்" என்றும் இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், 3ம் ஸ்லோகத்தில், "கோவர்த்தனத்தின் அருகில் இருந்த பாறையில் அமர்ந்திருந்த கிருஷ்ணனைக் கண்டான்" என்றும், 6ம் ஸ்லோகத்தில், "பாறையின் மீது அமர்ந்திருந்த கிருஷ்ணனைக் கண்டான்" என்றும் இருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், 3ம் ஸ்லோகத்தில், "கிருஷ்ணன் கோவர்த்தன மலையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான்" என்றும், 6ம் ஸ்லோகத்தில் "மலை முதுகில் பூமியின் தேவன் போன்று பெருமையுடன் வீற்றிருக்கும் கிருஷ்ணனைப் பார்த்தான்" என்றும் இருக்கிறது.

காட்சியில் இருந்து மறைந்திருந்தவனும், பாம்புகளை உண்பவனுமான பறவைகளில் முதன்மையானவன் (கருடன்), சுகமாக அமர்ந்திருக்கும் அவனை {கிருஷ்ணனைத்} தன் சிறகுகளைக் கொண்டு சூரியக் கதிர்களில் இருந்து பாதுகாத்துக் கொண்டிருந்தான்.(7) பலனைக் கொன்றவனான இந்திரன், தன் யானையை விட்டுவிட்டு, மனிதச் செயல்பாடுகளில் ஈடுபட்டுக் காட்டில் விளையாடிக் கொண்டிருந்தவனான கிருஷ்ணனை அணுகினான்.(8) சூரியனைப் போன்ற பிரகாசத்தைக் கொண்டதும், மின்னலைப் போன்று மின்னுவதுமான மகுடத்தாலும், தெய்வீகமான இரண்டு காது குண்டலங்களாலும் அவனுடைய முகம் பளபளத்தது.(9) உடல் ஆபரணமான பத்மகாந்தத்தின் ஐந்து அடுக்குகளைக் கொண்ட ஆரத்தால் அவனது மார்பு அலங்கரிக்கப்பட்டிருந்தது. சக்திவாய்ந்தவனும், வஜ்ரபாணியுமான வாசவன் {இந்திரன்}, தன் ஆயிரம் கண்களாலும் வாசுதேவனைக் கண்டு, அந்த உபேந்திரனை {கிருஷ்ணனை} அணுகி தெய்வீக மாலைகளாலும், குழம்புகளாலும் பேரழகுடன் தெரிந்தான்.(10,11)

அவன் {இந்திரன்}, மேக முழக்கம் போல ஆழமானதும், தேவர்களுக்கு எப்போதும் ஆணையிடுவதுமான தன் இனிய குரலில்,(12) "ஓ! கிருஷ்ணா, ஓ! நீண்ட கரங்களைக் கொண்டவனே, ஓ! உற்றாரின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனே, உன் பசுக்களிடம் நிறைவடைந்தவனாக நீ செய்த செயல்கள் தேவர்களின் சக்திக்கும் அப்பாற்பட்டவையாகும்.(13) உலகிற்கு அழிவைக் கொண்டு வர என்னால் உண்டாக்கப்பட்ட மேகங்களிடம் இருந்து நீ பசுக்களைப் பாதுகாத்ததில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன்.(14) வானில் உள்ள வீட்டைப் போல உன் யோக சக்தியால் இந்தச் சிறந்த மலையை நீ உயர்த்தியதைக் கண்டு யாருடைய மனம்தான் ஆச்சரியமடையாது?(15) ஓ! கிருஷ்ணா, என் வேள்வியை நிறுத்தியதால் நான் கோபமடைந்தேன். எனவேதான் ஏழு இரவுகளுக்கு நீண்டதும், பசுக்களுக்கு அழிவை ஏற்படுத்துவதும், தேவர்கள் மற்றும் தானவர்களாலும் தாக்குப்பிடிக்க முடியாததுமான இந்தப் பெரிய மழையைப் பொழியச் செய்தேன். ஆனால் என் முன்னிலையிலேயே இந்தப் பயங்கர மழையை உன் சக்தியால் நீ தடுத்துவிட்டாய்.(16,17) ஓ! கிருஷ்ணா, கோபமடைந்த நீ உன் மனித வடிவத்திற்குள் முழு வைஷ்ணவ சக்தியையும் குடியேற்றியதில் நான் பெரிதும் நிறைவடைந்திருக்கிறேன்.(18)

மனித வடிவில் இருந்தாலும் நீ உன் சக்தியுடன் கூடியவனாகவே இருப்பதால் தேவர்களின் பணி நல்லபடியாக முடிந்து விட்டதாகவே தோன்றுகிறது.(19) ஓ! வீரா, தேவர்களின் பணிகளுக்குத் தலைவனாகவும், அவர்களின் வழிகாட்டியாகவும் நீ இருப்பதால், அனைத்தும் நிறைவடையும், செய்யப்படாமல் எதுவும் விடுபடாது.(20) தேவர்களிலும், பிற உலகங்கள் அனைத்திலும் நீயே நித்தியமானாவன். உன்னால் தாங்கப்படும் கனத்தைச் சுமக்கவல்ல இரண்டாமவன் எவனையும் நான் காணவில்லை.(21) ஓ! பறவையை வாகனமாகக் கொண்டவனே, சிறந்த சக்கரமானது ஒரு துருவத்தின் முன் வைக்கப்படுவதைப் போலவே துன்பக் கடலில் மூழ்கியிருக்கும் தேவர்களைத் துயரில் இருந்து விடுவிப்பதில் நீ ஈடுபடுகிறாய்[2].(22) ஓ! கிருஷ்ணா, உலோகங்களில் பொன்னைப் போலவே, பெரும்பாட்டனால் (பிரம்மனால்) படைக்கப்பட்ட இந்த அண்டமும் உன் உடலில் இருக்கிறது.(23) வேகமாக ஓடுபவனை ஒரு முடவனால் பின்தொடர முடியாததைப் போலவே, சுயம்புவான தலைவனாலும் (பிரம்மனாலும்) புத்தியினாலோ, வயதினாலோ உன்னைப் பின்தொடர {புரிந்து கொள்ள} முடியாது.(24)

[2] சித்திரசாலை பதிப்பில், "கனமான சுமைகளை இழுக்க அவற்றின் முன்னே காளைகளைப் பூட்டுவதைப் போல, துயரில் இருக்கும் தேவர்கள் (தங்களைக் காப்பதற்காக) பறவையை (கருடனை) வாகனமாகக் கொண்ட உன்னை அவர்களின் முன் நிறுத்திக் கொள்கின்றனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "கடுஞ்சுமை இருக்கும்போது, சிறந்த காளைகள் பூட்டப்படுகின்றன. ஓ! பறவையை வாகனமாகக் கொண்டவனே, அதே போலவே தேவர்களும் உன்னைத் தங்கள் புகலிடமாகக் கொள்கின்றனர்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "உயர்ந்த காளை பொறுப்பேற்பதில் முதல் ஸ்தானத்தில் செலுத்தப்படுகிறது. அது போல் கருட வாகனனாகிய நீர் துன்பத்தில் மூழ்கிய தேவர்களுக்கு இருக்கிறீர்" என்றிருக்கிறது.

மலைகளில் இமயத்தைப் போலவும், நீர்ப்பரப்புகளில் பெருங்கடலைப் போலவும், பறவைகளில் கருடனைப் போலவும் தேவர்களில் நீ முதன்மையானவனாக இருக்கிறாய்.(25) ஓ! கிருஷ்ணா, இதற்கெல்லாம் அடியில் நீருலகம் இருக்கிறது; அதற்குமேலே பூமியின் தூண்கள் {மலைகள்} மிதக்கின்றன; அவற்றுக்கும் மேலே மனிதர்களின் உலகம் இருக்கிறது;(26) அதற்கும் மேலே வானுலகம் இருக்கிறது; அதற்கும் மேலே சொர்க்கத்தின் வாயிலாக அமைந்திருக்கும் பிரகாசமான சூரியலோகம் இருக்கிறது;(27) அதற்கும் மேலே தேவர்களின் வசிப்பிடமாக அமைந்திருக்கும் தேவர்களின் பேருலகம் இருக்கிறது. அங்கே நான் தேவர்களின் மன்னன் என்ற நிலையை அடைந்திருக்கிறேன்;(28) அதற்கும் மேலே பிரம்மவாதிகள் வாழ்வதும், உயரான்ம சோமனும் (சந்திரனும்), கோள்கள் பிறவும் திரிவதுமான பிரம்மலோகம் இருக்கிறது.(29) அதற்கும் மேலே உள்ள பேராகாயப் பகுதியில் கோலோகம் அமைந்திருக்கிறது. ஓ! கிருஷ்ணா, உலகங்கள் அனைத்திலும் முதன்மையான கோலோகம் சாத்யர்களால் பாதுகாக்கப்படுகிறது.(30) பெரும்பாட்டனிடம் கேட்டும் எங்களால் அறிய முடியாத தவத்தைச் செய்து கொண்டு நீ அங்கே வாழ்ந்து வருகிறாய்.(31)

இந்தப் பூமியானது, செயல்களில் ஈடுபடுவோருக்கான செயலுலகம் ஆகும். அதன் அடியில் கொடியவர்களுக்கான பயங்கர உலகம் இருக்கிறது.(32) வானுலகம் காற்று போன்ற அசையும் பொருட்களின் புகலிடமாக இருக்கிறது. சொர்க்கமானது, தற்கட்டுப்பாடு, பொறுமை என்ற குணங்களுடன் கூடிய நல்லோரின் சிறந்த புகலிடமாக இருக்கிறது.(33) பிரம்மனை வழிபடுபவர்கள் பிரம்மலோகத்தில் வாழ்கின்றனர். பசுக்கள் மட்டுமே கோலோகத்தை அடைகின்றன; கடுந்தவங்களைச் செய்தாலும் கூட எவராலும் அதை {கோலோகத்தை} அடைய முடியாது.(34) ஓ! வீரனும், நுண்ணறிவுமிக்கவனுமான கிருஷ்ணா, இந்தப் பசுக்களைப் பாதுகாப்பதற்காகவே நீ கோவர்த்தன மலையைத் தூக்கி என்னால் அனுப்பப்பட்ட பேரிடர்களைத் தடுத்தாய்.(35) எனவே, பெரும்பாட்டன் மற்றும் பசுகளின் வேண்டுகோளின்படியும், உன்னிடம் கொண்ட மதிப்பினாலும் நான் இங்கே வந்தேன்.(36) ஓ! கிருஷ்ணா, நான் பூதங்கள்[3] மற்றும் தேவர்களின் தலைவனாவேன், நான் புரந்தரனாவேன் {இந்திரனாவேன்}. நான் {முற்காலத்தில்} அதிதிக்குப் பிறந்த உன் அண்ணனாவேன்.(37) உன் சக்தியின் விளைவான மேகங்களின் வடிவில் என் சக்தியை நான் வெளிக்காட்டியதற்கு என்னை நீ மன்னிப்பாயாக.(38)

[3] "ஒரு குறிப்பிட்ட வகையைச் சார்ந்த சிறுதெய்வங்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். சித்திரசாலை பதிப்பில், "நான் உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், தேவர்களின் மன்னனுமான புரந்தரன் ஆவேன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நான் உயிரினங்கள் அனைத்தின் தலைவன். நான் தேவர்களின் மன்னனான புரந்தரன்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "நான் ஜீவராசிக்குத் தலைவன், தேவர்க்குத் தலைவன் இந்திரன்" என்றிருக்கிறது.

ஓ! யானையின் நடையைக் கொண்ட கிருஷ்ணா, இப்போது உன் மென்மையான சக்தியில் மகிழ்ந்திருந்து {பொறுமையுடன்}, பிரம்மன் மற்றும் பசுக்கள் சொல்லி அனுப்பிய சொற்களைக் கேட்பாயாக.(39) உன்னுடைய தெய்வீகச் செயல்களிலும், தங்கள் மகிமைகளைப் பாடுவதிலும், {உன்னுடைய} பாதுகாப்புப் பணியிலும் நிறைவடைந்திருக்கும் தலைவன் பிரம்மனும், வானத்தின் {தெய்வீகப்} பசுக்களும் இதை உனக்குச் சொல்லி அனுப்பியிருக்கின்றனர்.(40) {அவர்கள் சொன்னது}, "பெரும் கோலோகமும், பசுக்கள் அனைத்தும் உன்னால் பாதுகாக்கப்பட்டதால், காளைகளின் மூலம் எங்கள் குலம் தன்னாலேயே பெருகும்.(41) விரும்பியபடி திரியும் நாங்கள் அனைவரும் சுமை விலங்குகளான காளைகளால் உழவர்களையும், ஹவிஸ் படையல்களால் தேவர்களையும், ஏராளமான பெரும் தானியங்களால் ஸ்ரீயையும் {லட்சுமியையும்} நிறைவடைச் செய்கிறோம்.(42) ஓ! தலைவா, ஓ! பெரும்பலம் கொண்டவனே, நீயே எங்களின் ஆசானும், மீட்பனுமாவாய்" {என்றனர்}.(43) நீயே எங்களின் மன்னனும் தலைவனுமாகி, என்னால் கொண்டுவரப்பட்டிருக்கும் பொற்குடுவை நிறைந்த தெய்வீக நீரைக் கொண்டு இன்றே என் கைகளால் தெளித்துக் கொள்வாயாக {அபிஷேகம் செய்து கொள்வாயாக}.(44)

நான் தேவர்களின் மன்னனாவேன், நீ நித்தியமானவனாக இருந்தாலும் இப்போது பசுக்களின் மன்னனாக இருக்கிறாய். எனவே, இவ்வுலகின் மக்கள் உன்னைக் கோவிந்தன் எனப் பாடுவார்கள்.(45) இந்திரன் என்ற உயர்நிலை எனக்கு அளிக்கப்பட்டதால், நீ பசுக்களின் மன்னன் {என்ற உயர்ந்த நிலையில்} இருக்கிறாய். ஓ! கிருஷ்ணா, தேவர்கள் உன்னை உபேந்திரன் என்ற பெயரில் கொண்டாடுவார்கள்[4].(46) நான்கு மாதங்களைக் கொண்ட என் மழைக்காலத்தில், கூதிர் {சரத்} காலமாக அமையும் பிற்பாதியை {இரண்டு மாதங்களை} நான் உனக்கு அளிக்கிறேன்.(47) இன்றிலிருந்து மக்கள் முதல் இரண்டு மாதங்களை என்னுடையவையாகக் கருதுவார்கள். மழை நின்ற பிறகு, அவர்கள் என் கொடியை அகற்றுவார்கள், நீ துதிகளை ஏற்பாய். உற்சாகமிழந்து, எப்போதாவது அகவும் மயில்கள், என் மேகங்களின் மூலம் அடைந்த செருக்கைக் கைவிடும். என் காலத்தில், மேகங்களைக் கண்டு இனிய ஒலிகளை வெளியிடும் பிற விலங்குகள் அனைத்தும் அமைதியடையும்.(48,49)

[4] சித்திரசாலை பதிப்பில், "நான் தேவர்களின் இந்திரனாக இருக்கிறேன். நீ பசுக்களின் மன்னனாக இருப்பாயாக. பூமியின் பரப்பில் உள்ள மொத்த மக்களும் இன்றிலிருந்து நித்தியமாக உன்னை கோவிந்தனாகத் துதிப்பார்கள்.(45) கிருஷ்ணா, பசுக்கள் எனக்கும் மேல் உன்னையே தங்கள் இந்திரனாக நிறுவியுள்ளன. சொற்க்கத்தில் தேவர்கள் உன்னை உபேந்திரனாகத் துதித்துப் பாடுவார்கள்.(46)" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "44. நான் தேவர்களுக்கு இந்த்ரன் அல்லவா, நீர் பசுக்களுக்கு இந்த்ரனாயிருக்கும் தன்மையை அடைந்துள்ளீர். உலகில் ஜனங்கள் உம்மை கோவிந்தன் என்று என்றென்றும் துதிப்பார்கள். 45. அடியேனுக்கு மேல் இந்த்ரனாக நீர் பசுக்களால் தலைவராக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆக ஸ்வர்க்கத்தில் தேவதைகள் உம்மை உபேந்த்ரன் என்று கானம் செய்வார்கள்" என்றிருக்கிறது. மேற்கண்ட இந்த உரைகளே கிருஷ்ணனின் பரத்துவத்தை விளக்கிக் காட்டுவதாகச் சொல்லப்படுகிறது.

கனோபசு {அகஸ்திய நட்சத்திரம்} என்ற நட்சத்திரத்தின் ஆட்சியாளரான அகஸ்தியர், தென் பகுதியில் ஒரு பறவையைப் போலத் திரிவார், ஆயிரங்கதிர்களைக் கொண்ட சூரியன் தன் பிரகாசத்தால் அனைவரையும் சங்கடப்படுத்துவான்.(50) இவ்வாறு கூதிர் காலம் தொடங்கியதும், மயில்கள் அமைதியடையும், பறவைகள் நீரைத் தேடிச் செல்லும், தவளைகள் குதிப்பதை நிறுத்தும்,(51) ஆறுகளின் விளிம்புகள் இனிய ஒலிகளை வெளியிடும் அன்னங்கள், ஸாரஸங்கள் மற்றும் கிரௌஞ்சங்களால் நிறைந்திருக்கும், காளைகள் உற்சாகமாகும்,(52) பசுக்கள் நிறைவடைந்து ஏராளமான பாலைத் தரும், மேகங்கள் பூமியை நீரால் நிறைத்த பிறகு மறையும்,(53) கொக்குகள் கரிய வானில் திரியும், காட்சிக்கு இனிய தடாகங்கள், குளங்கள், ஆறுகள் ஆகியன தெளிந்த நீராலும், புதிதாய் முளைத்த தாமரைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும், கருநீல வயல்கள் தானியங்களால் நிறைந்திருக்கும், ஆறுகள் தங்களுக்கு நடுவில்[5] நீர்ப்பாய்ச்சலைக் கொண்டிருக்கும், முனிவர்களின் ஆசிரமங்கள் தானியங்களால் நிறைந்து அழகாக இருக்கும், பல மாகாணங்கள் நிறைந்த பூமி, மழைக்குப் பிறகு பேரெழிலுடன் திகழ்வாள், மரங்கள் கனிகளால் மறைக்கப்பட்டிருக்கும், வீதிகள் அழகாக இருக்கும், நாடு கரும்புகளால் நிறைந்திருக்கும், வாஜபேயமும், பிற வேள்விகளும் நடைபெறும். அப்போது நீ உன் படுக்கையில் இருந்து எழுவாய். இவ்வுலகின் மனிதர்களும், தேவலோகத்தின் தேவர்களும் பூமியின் கொடிக்கம்பங்களில் என்னை மஹேந்திரனாகவும், உன்னை உபேந்திரனாகவும் வழிபடுவார்கள்.(54-59) மஹேந்திரன் மற்றும் உபேந்திரன் என்ற மகத்தான, நித்தியமான கருப்பொருளை ஓதி நம்மை வணங்கும் மனிதன் எந்தத் துயரத்திற்கும் ஆளாகமாட்டான்" என்றான் {இந்திரன்}.(60)

[5] "அதாவது நீரானது மழைக்காலத்தில் நேர்வதைப் போலக் கரைகளைக் கடந்து பாயாது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

அதன்பிறகு யோகத்தை அறிந்தவனான தேவர்களின் மன்னன் {இந்திரன்}, தெய்வீக நீர் நிறைந்த அந்தக் குடுவையை எடுத்து {அதிலிருந்த நீரைக் கொண்டு} கோவிந்தன் மீது தெளித்தான் {அவனுக்கு அபிஷேகம் செய்து வைத்தான்}.(61) தேவலோகத்தில் இருந்தவையும், காளைகளுடன் கூடியவையுமான பசுக்கள், இவ்வாறு கிருஷ்ணன் நீராட்டப்படுவதை {கிருஷ்ணனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதைக்} கண்டு, மேகங்களின் மூலமாகத் தங்கள் பாலைப் பொழிந்தன.(62) வானில் இருந்த தெளிந்த மேகங்கள் அவன் மீது அந்த அமுத மழையைப் பொழிந்தன. வானில் இருந்து உரக்க முழங்கிய தேவர்கள் மலர் மாரியைப் பொழிந்து எக்காளம் இசைத்தனர்.(63,64) எப்போதும் மந்திரங்களையே பின்தொடரும் {பாடும்} மஹரிஷிகள், நலம்பயக்கும் ஸ்லோகங்களில் அவனது மகிமைகளைப் பாடினர், பூமியின் உடலானது பரந்து விரிந்திருக்கும் பெருங்கடலில் இருந்து பிரிக்கப்பட்டது[6].(65) உலகிற்கு நன்மை நேர்வதால் கடல்கள் மகிழ்ச்சியடைந்தன, காற்று வீசத் தொடங்கியது. விண்மீன்களுடன் கூடிய சூரியனும் சந்திரனும் தங்களுக்குரிய வீதிகளில் நின்றன.(66) மன்னர்கள் தங்கள் பகைவரிடம் இருந்து விடுபட்டனர், பெருமழையினால் ஏற்பட்ட துன்பம் தணிக்கப்பட்டது. மரங்கள் இலைகளுடனும், பல்வேறு வண்ணங்களின் சக்தியுடனும் பளபளத்தன. காட்டில் மான்கள் இன்புற்றன, யானைகள் மதம்பெருக்கின, மலைகள் தங்களில் முளைத்த மரங்கள் மற்றும் உலோகங்களுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தன.(67,68)

[6] சித்திரசாலை பதிப்பில், "பூமியானது, ஏகார்ணவக் கடலில் இருந்து வெளிப்பட்டுத் தன் வடிவத்தை அடைந்தது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பூமியானது, ஒரே பெருங்கடல் என்ற வடிவில் இருந்து விடுபட்டு தன் வடிவை ஏற்றது" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "பூமி ப்ரளய ஸமுத்ரங்கள் தெளிந்திருந்தன" என்றிருக்கிறது.

தேவலோகத்தைப் போலவே மனிதர்களின் உலகமும், அமுதம் போன்ற சாற்றால் நிறைவடைந்தது. தேவலோகத்தில் இருந்து பொழிந்த அமுத மழையின் துணையுடன் தலைவன் கிருஷ்ணனின் அரச நீராட்டு விழா நிறைவடைந்த போது,(69) தெய்வீக மலர்மாலைகளைச் சூடியவனும், பசுக்களின் அரசுரிமையில் நிறுவப்பட்டவனும், நித்தியனுமான கோவிந்தனிடம் தேவர்களின் மன்னனான புரந்தரன் {இந்திரன்},(70) "ஓ! கிருஷ்ணா, பசுக்களின் மன்னனாக {கோவிந்தனாக} உன்னை நிறுவியதில் இப்போது என் முதல் பணி நிறைவடைந்தது. நான் இங்கே வந்ததற்கான அடுத்த நோக்கத்தை இப்போது கேட்பாயாக.(71) கம்ஸன், குதிரைகளில் இழிந்த கேசி, எப்போதும் மதங்கொண்டவனான அரிஷ்டன் ஆகியோரை விரைவாகக் கொன்று உன் அரசை ஆள்வதில் நீ ஈடுபடுவாயாக.(72) என் சக்தியின் ஒரு பகுதியானவன், அர்ஜுனன் என்ற பெயரில் உன் அத்தையின் {உன் தந்தை வஸுதேவனின் அக்காளான குந்தியின்} மகனாகப் பிறந்திருக்கிறான்.(73) நீ அவனுக்கு ஆதரவாக இருக்க வேண்டும், அவனும் உன்னுடைய ஆலோசனையின் பேரில் செயல்பட்டு, உன்னைப் பின்பற்றிப் பெரும்புகழை அடைவான்.(74) பரதனின் வழித்தோன்றல்களில் அவன் முதன்மையான வில்லாளியாகவும், உன்னைப் பின்தொடர்பவனாகவும் இருப்பான். உன் உதவி இல்லாமல் தனியாக அவன் ஒருபோதும் தன் பணியில் நிறைவடைய மாட்டான்.(75) எதிர்காலத்தில் நேரப்போகும் பாரதப் போர்[6] அவனையும், மனிதர்களில் முதன்மையான உன்னையும் சார்ந்தே இருக்கிறது. நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் மன்னர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள்.(76)

[7] "உலகின் மன்னர்கள் அனைவரும் பங்கேற்ற குருக்ஷேத்திரப் போரை இது குறிக்கிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

ஓ! கிருஷ்ணா, குந்தியிடம் நான் பெற்ற மகன் {அர்ஜுனன்} ஆயுதப் பயன்பாட்டில் திறன்பெற்றவனாகவும், வில்லாளிகளில் முதன்மையானவனாகவும், குருக்களில் பெரியவனாகவும் இருக்க வேண்டுமென நான் தேவர்களிடமும், ரிஷிகளிடமும் சொல்லியிருக்கிறேன். போர்வீரர்களான மன்னர்கள் அனைவரும் அவனுடைய கல்வியைக் குறித்துப் பேசுவார்கள்.(77,78) எப்போதும் க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றும் அவன் {அர்ஜுனன்} மட்டுமே போரில் திறன் பெற்ற மன்னர்களின் ஓர் அக்ஷௌஹிணியைக் கொல்லவல்லவனாக இருப்பான்.(79) ஓ! தலைவா, உன்னைத் தவிர வேறு மன்னர்களாலோ, தேவர்களாலோ அவனது வில்லின் சக்தியை பலவீனப்படுத்தவும், அவனது ஆயுதங்களின் பாதையைப் பின்பற்றவும் முடியாது.(80) ஓ! கோவிந்தா, அவன் உனக்கு நண்பனாக இருந்து போரில் துணை புரிவான். எனவே, என் வேண்டுகோளின்படி அவனுக்கு ஆன்ம அறிவைப் போதிப்பாயாக.(81) நீ அர்ஜுனனையும், உலகங்கள் அனைத்தையும் நன்கறிவாய். எனவே, நீ எப்போதும் என்னைப் போலவே அவனைக் கருதி கவனித்துக் கொள்வாயாக.(82) பெரும்போரில் நீ அவனைப் பாதுகாத்தால் மரணத்தால் {மிருத்யுவால்} அவனிடம் ஆதிக்கம் செலுத்த இயலாது.(83) ஓ! கிருஷ்ணா, அர்ஜுனனை நானாகவும், என்னை நீயாகவும் அறிவாயாக. நான் உன்னோடு ஒன்றாயிருப்பதைப் போலவே அர்ஜுனனும் ஒன்றாயிருப்பான்.(84)

நான் உன் அண்ணன் என்பதால், பழங்காலத்தில் உன் மூன்று காலடிகளைக் கொண்டு பலியிடமிருந்து மூவுலகங்களையும் அடைந்து தேவர்களின் அரசுரிமையில் என்னை நீ நிறுவினாய்.(85) வாய்மையை விரும்புபவனாகவும், வாய்மையையே ஆற்றலாகக் கொண்டவனாகவும், வாய்மையே ஆகவும் உன்னை நான் அறிவேன். தேவர்களுக்களித்த ஓர் உறுதிமொழியில் நீ அவர்களுக்குக் கட்டுப்பட்டிருப்பதால், தங்கள் பகைவரை அழிக்கும் இந்தப் பணியில் அவர்கள் {தேவர்கள்} உன்னை ஈடுபடுத்தியுள்ளனர்.(86) ஓ! கிருஷ்ணா, உன் அத்தையின் மகனான அர்ஜுனன் என் மகனாவான். பழங்காலத்தில் அவன் உன் தோழனாக இருந்ததைப் போலவே[8], இப்போதும் உன்னுடன் நட்பு கொள்வான்.(87) ஓ! மாதவா, அவன் தன் வீட்டிலோ, உன் வீட்டிலோ, பகைவரிடம் போரிடும் போர்க்களத்திலோ இருக்கும்போது நீ சுமையைச் சுமக்கும் ஒரு காளையைப் போலவே எப்போதும் அவனைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.(88) காரியங்களின் உண்மை நோக்கத்தை எப்போதும் நோற்கும் உன்னால் கம்ஸன் கொல்லப்படும்போது, மன்னர்களுக்கிடையே ஒரு பெரும்போர் நடைபெறும்.(89) அர்ஜுனன், மீமானிடச் செயல்களைச் செய்பவர்களான வீர மனிதர்களை வெல்வான், நீ மகிமையால் அவனை அலங்கரிப்பாய்.(90) ஓ! கேசவா, வாய்மையையும், என்னையும், தேவர்களையும் உனக்குப் பிடித்திருந்தால், நான் சொன்னவை அனைத்தையும் நீ செய்ய வேண்டும்" என்றான் {இந்திரன்}.(91)

[8] "விஷ்ணு நாராயணனின் வடிவை ஏற்றபோது, அர்ஜுனன் அவனுடைய தோழனான நரனாக இருந்தான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

கோபாலனாக இருந்த கிருஷ்ணன், சக்ரனின் {இந்திரனின்} இந்தச் சொற்களைக் கேட்டு, மனத்தில் மகிழ்ச்சியுடன், "ஓ! சச்சியின் தலைவா, உன்னைக் கண்டதில் நான் மகிழ்கிறேன். நீ சொன்னவற்றில் எதுவும் விடுபடாது.(93) ஓ! சக்ரா, நான் உன் இதயத்தை அறிவேன். என் அத்தை {என் தந்தையின் தமக்கை} உயர் ஆன்மப் பாண்டுவுக்கு {திருமணம் செய்து} கொடுக்கப்பட்டாள் என்பதும், அவள் அர்ஜுனனைப் பெற்றிருக்கிறாள் என்பதும் நான் அறியாதவையல்ல.(94) தர்மனால் {யமனால்} பெறப்பட்ட இளவரசர் யுதிஷ்டிரரையும் நான் அறிவேன். வாயுவின் குலத்தைப் பெருக்கவல்ல பீமசேனரையும் நான் அறிவேன். மாத்ரியிடம் அஸ்வினி இரெட்டையர்களால் பெறப்பட்ட நகுலனையும், சகாதேவனையும் நான் அறிவேன்[9].(95,96) என் அத்தையின் {குந்தியின்} கன்னிப் பருவத்தில் சூரியனால் பெறப்பட்டவனும், தேரோட்டியின் மகனாக இப்போது அறியப்படுபவனுமான கர்ணனையும் நான் அறிவேன்[10].(97)

[9] "இந்த மகன்கள் அனைவரும் பிறந்த விரிவான கதையை அறிய மஹாபாரதம் ஆதிபர்வம் அத்யாயம் 123-ஐ காணவும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். 

[10] "குந்தி, கன்னிப்பெண்ணாக இருந்த போது, அவள் எவனைத் துணைவனாக விரும்பினாலும் அவன் உடனே அவளிடம் வருவான் என்ற வரத்தை துர்வாச முனிவரிடம் இருந்து பெற்றாள். இதைச் சோதித்துப் பார்க்க அவள் சூரியனை இருப்புக்கு அழைத்தாள், அவனுடனான கலவியால் கர்ணன் பிறந்தான். அவனுடைய பிறப்பு மஹாபாரதம் ஆதிபர்வம் அத்யாயம் 111ல் இருக்கிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். 

பாண்டு, இடிபோன்ற சாபத்தால் மரணம் அடைந்தார்[11] என்பதையும், திருதராஷ்டிரரின் மகன்கள் போரில் விருப்பமுடையவர்கள் என்பதையும் நான் அறிவேன்.(98) ஓ! தேவர்களின் மன்னா, இப்போது நீ தேவர்களின் தலைநகருக்குத் திரும்பிச் சென்று அவர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பாயாக. அர்ஜுனன் என் முன்பு இருக்கும் வரை எந்த எதிரியாலும் அவனுக்குத் தொல்லைக் கொடுக்க முடியாது.(99) பாரதப் பெரும்போர் முடிவடையும்போது, அர்ஜுனனுக்காக நான் பாண்டுவின் மகன்கள் அனைவரையும் சிறு தீங்கும் அற்றவர்களாகக் குந்தியிடம் அனுப்புவேன்.(100) ஓ! தேவர்களின் மன்னா, நான் அன்பில் கட்டப்பட்டிருப்பதால், உன் மகனான அர்ஜுனன் எனக்கு ஆணையிடும் எதையும் ஒரு பணியாளைப் போல நிறைவேற்றுவேன்" என்றான் {கிருஷ்ணன்}.(101) தேவர்களின் மன்னன் {இந்திரன்}, வாய்மை நிறைந்த கிருஷ்ணனின் இந்தச் சொற்களைக் கேட்டு தேவர்களின் தலைநகருக்குத் திரும்பினான்" என்றார் {வைசம்பாயனர்}.(102)

[11] "ஒரு காலத்தில் பாண்டு வேட்டையாடுவதற்காகக் காட்டுச் சென்றான். மானின் வடிவில் தன் இணையுடன் கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு முனிவரின் மகனை அவன் தாக்கினான். அவன் பாண்டுவிடம், "ஓ! மூடா, மானின் வடிவில் நான் ஆசை நிறைந்திருக்கும்போது நீ என்னைக் கொன்றதால், எனக்கு நேர்ந்த இதே விதியை நீயும் நிச்சயம் சந்திப்பாய். என்னைப் போலவே நீயும் உன் அன்புக்குரியவளிடம் செல்லும் வேளையில் நிச்சயம் இறந்தோரின் உலகத்திற்குச் நீ செல்வாய். உன் மனைவியும் உன்னைப் பின்தொடர்வாள்" என்று சொல்லி அவனைச் சபித்தான். மஹாபாரதம் ஆதிபர்வம், சம்பவ பர்வம் அத்யாயம் 118ல் உள்ள 30 மற்றும் 31ம் ஸ்லோகங்களைப் பார்க்கவும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். 

விஷ்ணு பர்வம் பகுதி – 74 – 019ல் உள்ள சுலோகங்கள் : 102
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Saturday, 20 June 2020

ஹரிவம்சம் 1 - ஹரிவம்சபர்வம் - கிண்டில் மின்நூல்

Harivamsha (Harivamsam) 1 - Hari Vamsha Parva


ஹரிவம்சம் முதல் பர்வமான ஹரிவம்ச பர்வம் கிண்டில் நூல்

பக்கங்கள்: 558 கிண்டில் பக்கங்கள்

விலை: ₹ 280.00

விலைக்கு வாங்க: https://bit.ly/hv1-harivamsha-parva என்ற சுட்டிக்குச் செல்லவும்


ஹரிவம்சம் அல்லது ஹரியின் (ஸ்ரீகிருஷ்ணனின்) தலைமுறை என்பது பெருங்காப்பியமான மஹாபாரதத்தின் பின்தொடர்ச்சியாகும். விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள் ஆகிய இருபெரும் குலங்களின் கதையைச் சொல்லுமாறு சௌதியிடம், சௌனகர் வைக்கும் வேண்டுகோளுடன் இந்தப் படைப்புத் தொடங்குகிறது.

Thursday, 28 May 2020

விஷ்ணுவின் மறுமொழி | ஹரிவம்ச பர்வம் பகுதி – 55

(விஷ்ணும் ப்ரதி ப்ரஹ்ம வாக்யம்)

Vishnu's reply | Harivamsha-Parva-Chapter-55 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : நாரதரிடம் பேசிய விஷ்ணு; சாபத்தின் காரணமாக கசியப முனிவர் வஸுதேவனாகப் பிறந்திருப்பதை விஷ்ணுவுக்குச் சொன்ன பிரம்மன்; வஸுதேவனின் மகனாகப் பிறக்கத் தீர்மானித்த விஷ்ணு...

Vishnu Narada and Brahma

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தேவர்களை ஆள்பவனும், தலைவனுமான மதுசூதனன், நாரதரின் சொற்களைக் கேட்டுப் புன்னகைத்தவாறே {பின்வரும்} மங்கலச் சொற்களில்,(1) "ஓ! நாரதா, மூவுலகங்களின் நன்மைக்காக நீ என்னிடம் சொன்ன சொற்கள் அனைத்திற்கும் உரிய மறுமொழியைக் கேட்பாயாக.(2) இந்தத் தானவர்கள் அனைவரும் மனித வடிவங்களை ஏற்றுப் பூமியில் பிறந்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.(3) கம்ஸனும், பூமியில் உக்ரசேனன் மகனாகப் பிறந்திருக்கிறான் என்பதை அறிவேன். கேசி ஒரு குதிரையாகப் பிறந்திருக்கிறான் என்பதையும் அறிவேன்.(4) குவலயப்பீடன் என்ற யானையையும், சாணூரன் மற்றும் முஷ்டிகன் என்ற மற்போர்வீரர்களையும், காளையின் வடிவில் இருக்கும் தைத்தியன் அரிஷ்டனையும் நான் அறிவேன்.(5) கரனையும், பேரசுரன் பிரலம்பனையும் நான் அறிவேன். பலியின் மகளான பூதனையையும் நான் அறிவேன்.(6) வினதையின் மகனிடம் {கருடனிடம்}[1] கொண்ட அச்சத்தால் யமுனையில் புகுந்து அங்கே வாழும் காளியனை நான் அறிவேன்.(7)

[1] "பாம்புகளை உண்பவனான கருடன்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

மன்னர்கள் அனைவரின் தலைவனான ஜராசந்தன், பிராக்ஜ்யோதிஷ நகரத்தில் வாழும் நரகாசுரனையும் நான் நன்கறிவேன்.(8) பூமியில் சோணிதபுரம் என்ற நகரத்தில் பாணன் ஒரு மனிதனாகப் பிறந்திருக்கிறான். ஆயிரம் கரங்களைக் கொண்டவனும், ஆற்றல்மிகுந்தவனும், செருக்கு நிறைந்தவனுமான அந்த அசுரன் தேவர்களாலும் வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறான். பாரதவர்ஷத்தின் பெரும்பொறுப்பு என்னைச் சார்ந்தது என்பதையும் நான் அறிவேன்.(9,10) இந்த மன்னர்கள் அனைவரும் எவ்வாறு காணாமல் போவர்கள் என்பதையும் நான் அறிவேன். மனித வடிவில் இருப்பவர்களும், போர்க்களத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவர்களுமான அந்தத் தானவர்களின் அழிவையும், சக்ரலோகத்தின் மகிழ்ச்சியையும் நான் காண்கிறேன்.(11) நான் எனக்காகவும், பிறருக்காகவும் யோகத்தில் நுழையப் போகிறேன். நான், மனிதர்களில் உலகிற்குச் சென்று, மனித வடிவை ஏற்று, கம்ஸனின் தலைமையில உள்ள அந்த வலிமைமிக்க அசுரர்கள் அனைவருக்கும் அழிவைக் கொண்டு வருவேன். எந்த வழிமுறையின் மூலம் அவன் {கம்ஸன்} அமைதியை அடைவானோ அவ்வழிமுறையிலேயே நான் அவனைக் கொல்வேன்.(12,13) என் யோகத்தின் மூலம் நான் இந்த வழிமுறைகள் அனைத்தையும் வகுப்பேன். தேவர்களின் எதிரிகள் அனைவரையும் போரில் அழிப்பதே என் தற்போதைய கடமையாகும்.(14) பூமியின் சார்பாகவும், என் ஆணையின் பேரில் பூமிக்கு இறங்கி வந்த தேவர்கள், ரிஷிகள் மற்றும் கந்தர்வர்கள் அனைவரின் சார்பாகவும் தங்களைத் தியாகம் செய்த பெருமைமிக்கவர்கள் அனைவரின் பகைவரையும் நான் கொல்வேன்.(15) ஓ! நாரதா, நான் ஏற்கனவே இதைத் தீர்மானித்துவிட்டேன். பெரும்பாட்டன் பிரம்மன் அங்கே எனக்கு ஒரு வீட்டை அமைக்கட்டும்.(16) ஓ! பெரும்பாட்டனே, நான் எந்த நாட்டில் பிறந்து, எந்த வீட்டில் வாழ்ந்து அவர்களைக் கொல்ல வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக" என்றான் {நாராயணன்}.(17)

பிரம்மன், "ஓ! தலைவா, ஓ! நாராயணா, வெற்றிக்கான திறவுகோலையும், பூமியில் உன் பெற்றோராகப் போவது யார் என்பதையும் என்னிடம் கேட்பாயாக.(18) உன் குடும்பத்திற்கு மகிமையேற்படுத்தும் வகையில் நீ யாதவர்களின் குலத்தில் பிறக்கப் போகிறாய்.(19) நன்மைக்காக இந்த அசுரர்களை ஒழித்தும், உன் பெருங்குடும்பத்தைப் பெருக்கியும் நீ மனித குல வகைகளை {வர்ணங்களை} நிறுவுவாய். இது குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக.(20)

ஓ! நாராயணா, பழங்காலத்தில் உயரான்ம வருணன் பெரும் வேள்வியை நடத்திக் கொண்டிருந்தபோது, அந்த வேள்விக்குப் பால்தரும் பசுக்கள் அனைத்தையும் கசியபர் அபகரித்தார்.(21) கசியபர், அதிதி மற்றும் ஸுரபி என்ற இரு மனைவிகளைக் கொண்டிருந்தார். அவர்கள் வருணனிடம் இருந்து பசுக்களை ஏற்க விரும்பவில்லை[2].(22) அதன்பிறகு என்னிடம் வந்து தலைவணங்கிய வருணன், "ஓ! மதிப்புமிக்கவரே, ஆசான் என் பசுக்கள் அனைத்தையும் அபகரித்துச் சென்றார்.(23) ஓ! ஐயா, அவரது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்ட பின்னரும் அவர் அந்தப் பசுக்களைத் திருப்பித் தரவில்லை. அவர் தமது மனைவியரான அதிதி மற்றும் ஸுரபியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்.(24) ஓ! தலைவா, என்னுடைய பசுக்களான அவை அனைத்தும் தெய்வீகமான, நித்தியமான பாலை விரும்பும்போதெல்லாம் தரக்கூடியவையாகும். அவை, தங்கள் சக்தியாலேயே தங்களைப் பாதுகாத்துக் கொண்டு கடல்களில் திரிந்து வருபவையாகும்.(25) தேவர்களின் அமுதத்தைப் போல அவை இடையறாமல் பால் தரக்கூடியவை ஆகும். கசியபரைத் தவிர அவற்றைக் கவர்ந்து செல்ல வேறு எவராலும் இயலாது.(26) ஓ! பிரம்மா, தேர்ந்தவராக இருந்தாலும், ஆசானாக இருந்தாலும், யாராக இருந்தாலும் ஒருவர் வழிதவறினால் அவரைக் கட்டுப்படுத்த வேண்டியவர் நீரே. எங்கள் உயர்ந்த புகலிடமாக இருப்பவர் நீரே.(27) ஓ! உலகின் ஆசானே, தங்களுக்குரிய வேலையைச் செய்யாத சக்திவாய்ந்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்படாவிட்டால் உலகில் ஒழுங்கு நீடிக்காது.(28) நீர் எல்லாமறிந்தவரும், அனைத்தின் தலைவருமாவீர். என் பசுக்களை என்னிடம் தந்தால் நான் பெருங்கடலுக்குச் செல்வேன்.(29) இந்தப் பசுக்களே என் ஆன்மாவாகவும், எனக்கு எல்லையற்ற பலத்தைத் தருபவையாகவும் இருக்கின்றன. உமது படைப்புகள் அனைத்திலும் பசுக்களும், பிராமணர்களும் சக்தியின் நித்திய பிறப்பிடங்களாவர்.(30) பசுக்களே அனைத்திலும் முதன்மையாகக் காக்கப்பட வேண்டியவை. அவை பாதுகாக்கப்படும்போது, அவை பிராமணர்களைப் பாதுகாக்கின்றன. பசுக்களையும், பிராமணர்களையும் பாதுகாப்பதன் மூலம் உலகம் ஆதரிக்கப்படுகிறது" என்றான் {வருணன்}.(31)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "பழங்காலத்தில் மழையின் தேவனான உயரான்ம வருணன் ஒரு வேதச் சடங்கைச் செய்து கொண்டிருந்தபோது, அந்த வேள்விக்குப் பால்தருபவையும், வருணனுடையவையுமான கறவைப்பசுக்கள் அனைத்தையும் கசியபர் கைப்பற்றினார். கசியபரின் மனைவியரான அதிதி மற்றும் சுரபி ஆகிய இருவரும், பசுக்களைத் திருப்பித் தருமாறு வருணன் அவர்களிடம் பலமுறை வேண்டிக் கேட்டாலும் அவனுக்கு அவற்றைத் திருப்பித்தர மறுத்தனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பழங்காலத்தில் உயரான்ம வருணன் ஒரு வேள்வியைச் செய்தான். எனினும் கசியபர் அந்த பெரும் வேள்விக்குப் பால் தரும் பசுக்களை அபகரித்தார். அதிதி மற்றும் சுரபி ஆகிய இருவரும் கசியபரின் மனைவியராக இருந்தனர். வருணன் அவர்களை வேண்டிக் கொண்டும் அவர்கள் பசுக்களைத் திருப்பித் தரவில்லை"" என்றிருக்கிறது.

ஓ! அச்யுதா, நீரின் மன்னனான வருணனால் இவ்வாறு சொல்லப்பட்டும், பசுக்கள் களவாடப்பட்டது உண்மையென்பதை அறிந்தும் நான் கசியபனை சபித்தேன்.(32) பசுவைக் களவு செய்த உயரான்ம கசியபனின் அந்தக் கூறுடன் {அம்சத்துடன்} அவன் பூமியில் ஒரு கோபாலனாக {இடையனாகப்} பிறப்பான்.(33) தேவர்கள் பிறப்பதற்கான மரத்துண்டுகளைப் போன்றவர்களும், அவனது மனைவியருமான ஸுரபி மற்றும் அதிதி ஆகிய இருவரும் அவனுடனேயே செல்ல வேண்டும்.(34) அவர்களுடன் கோபாலனாகப் பிறந்து அங்கே மகிழ்ச்சியாக வாழ்வான். கசியபனைப் போன்றே சக்திமிக்க அவனது கூறானவன் {அம்சமானவன்}, வஸுதேவன் என்ற பெயரைப் பெற்று, பூமியில் பசுக்களுக்கு மத்தியில் வாழ்வான். மதுராவுக்கு அருகில் கோவர்த்தனம் என்ற பெயரில் ஒரு மலை இருக்கிறது.(35,36) கம்ஸனுக்குக் கப்பம் கட்டி வாழும் அவன் {கசியபன் / வசுதேவன்}, பசுக்களிடம் பற்று கொண்டவனாக இருப்பான். அவனது மனைவியரான அதிதி மற்றும் ஸுரபி ஆகிய இருவரும் தேவகி மற்றும் ரோஹிணி என்ற பெயரில் வசுதேவனின் இரு மனைவிகளாகப் பிறப்பார்கள்.(37,38) அவன் ஒரு கோபாலனின் குணங்கள் அனைத்தையும் கொண்ட ஒரு சிறுவனாகப் பிறந்து, முன்பு மூன்று காலடிகளைக் கொண்ட உன் வடிவில் நீ வளர்ந்ததைப் போலவே வளர்வான்.(39) ஓ! மதுசூதனா, உலகின் நன்மைக்காக (யோக) வடிவில் உன்னை மறைத்துக் கொண்டு நீ அங்கே செல்வாயாக.(40) உன் வெற்றி மற்றும் ஆசிகளுக்கான வியப்பொலிகளுடன் கூடிய தேவர்கள் அனைவரும் உன்னை வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர்.(41) நீ பூமிக்கு இறங்கி, ரோஹிணி மற்றும் தேவகி ஆகியோருக்கு பிறந்து அவர்களை நிறைவடையச் செய்வாயாக. ஆயிரக்கணக்கான கோபகன்னிகைகளும் {கோபியரும்} பூமியை மறைத்திருப்பார்கள்.(42) ஓ! விஷ்ணு, நீ காட்டில் பசுக்களை மேய்த்துத் திரிந்து வரும்போது, அவர்கள் காட்டு மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் உன் அழகிய வடிவைக் காண்பார்கள்.(43) ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, ஓ! பெருந்தோள்களைக் கொண்ட நாராயணா, கோபாலர்களின் கிராமங்களில் நீ சிறுவனாகச் செல்லும்போது மக்கள் அனைவரும் சிறுவர்களாவார்கள் {சிறுவர்களைப் போலாகிவிடுவார்கள்}.(44) ஓ! தாமரைக் கண்களைக் கொண்டவனே, காட்டில் பசுக்களை மேய்த்து, மேய்ச்சல் நிலங்களில் ஓடி, யமுனையின் நீரில் நீராடும் அவர்கள் உன்னிடம் பெரும்பற்றும் ஆர்வமும் கொண்ட கோபாலர்கள் அனைவரும் தங்கள் மனங்களை உனக்கே அர்ப்பணித்து, உனக்கு உதவி செய்வார்கள். வஸுதேவனின் வாழ்வு அருளப்பட்டதாக இருக்கும்.(45,46) நீ அவனைத் தந்தை என்றும், அவன் உன்னை மகன் என்றும் அழைப்பீர்கள். கசியபனைத் தவிர வேறு எவனை உன்னால் தந்தையாக ஏற்க முடியும்?(47) ஓ! விஷ்ணு, அதிதியைத் தவிர வேறு எவளால் உன்னைக் கருவில் கொள்ள முடியும்? எனவே, ஓ! மதுசூதனா, தன்வயமான யோகத்துடன் நீ வெற்றியை நோக்கிச் செல்வாயாக. நாங்கள் எங்களுக்குரிய வசிப்பிடங்களுக்குச் செல்லப் போகிறோம்" என்றான் {பிரம்மன்}".(48)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தலைவன் விஷ்ணு, தேவர்களைத் தேவலோகத்திற்குச் செல்ல ஆணையிட்டுவிட்டுப் பாற்கடலின் வடக்குப் பகுதியில் உள்ள தன் வசிப்பிடத்திற்குச் சென்றான்.(49) இந்தப் பகுதியில், மேரு மலையில், நடந்து செல்வதற்கு மிகக் கடினமானதும், சூரிய கணநிலை நேரத்தில் அவனது மூன்று காலடிகளைக் கொண்டு வழிபடப்படுவதுமான ஒரு குகை {பார்வதி குகை} இருக்கிறது.(50) எல்லாம்வல்லவனும், நுண்ணறிவுமிக்கவனுமான ஹரி, அந்தக் குகையில் தன் பழைய உடலை விட்டுவிட்டு, தன் ஆன்மாவை வசுதேவனின் இல்லத்திற்கு அனுப்பினான்" என்றார் {வைசம்பாயனர்}[3][4].(51)

[3] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில், "தேவர்களைத் தங்கள் தெய்வீக உலகங்களுக்குச் செல்ல அனுமதித்த விஷ்ணு, மேரு மலை குறுக்கிடும் தன் வசிப்பிடமான பாற்கடலின் வடக்குப் பகுதிக்குச் சென்றான். இந்த வடக்குப் பகுதியில் இருக்கும் அந்த மலையில் ஆழமானதும், ஊடுருவ முடியாததுமான பார்வதி குகை இருக்கிறது. அங்கே மூன்று காலடிகளில் நடந்தவனும் குள்ளச் சிறுவனுமான வாமனனாக இருந்த விஷ்ணுவின் காலடித்தடங்கள் இருக்கின்றன, அந்தக் காலடித்தடங்கள் மங்கல நாட்களின் போது வழிபடப்படுகின்றன. அப்போது அந்த விஷ்ணு, தன் இன்றியமையாத வடிவத்தை அந்தக் குகையில் எவ்வாறு வைக்கலாம் என்பதையும், மனிதகுலத்தில் தன் எதிர்காலத் தந்தையான வசுதேவனின் இல்லத்தில் எவ்வாறு தான் இணைய வேண்டும் என்பதையும் சிந்தித்தான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "விஷ்ணு, தேவர்களைச் சொர்க்கத்திற்குச் செல்ல அனுமதித்தான். அவன் க்ஷீரோதக் கடலின் {பாற்கடலின்} வடக்கில் இருக்கும் தன் உலகத்திற்குச் சென்றான். அங்கே மேரு மலையில் ஊடுருவிச் செல்ல மிகக் கடினமானதும், பார்வதி என்ற பெயரைக் கொண்டதுமான ஒரு குகை இருக்கிறது. மூன்று காலடிகளைக் கொண்டவனின் காலடித் தடங்கள் அங்கே இருக்கின்றன, மங்கலத் தருணங்களில் அவை எப்போதும் வழிபடப்படுகின்றன. அந்தப் புராதன இடத்தில் ஹரி தன் உடலை ஓய்வில் கிடத்தினான். அந்தத் தலைவன், தான் வஸுதேவனின் இல்லத்தில் பிறக்கும் வகையில் தன் ஆத்மாவை யோகத்தில் பூட்டினான்" என்றிருக்கிறது.

[4] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் ஹரிவம்சத்தின் முதல் பர்வமான ஹரிவம்ச பர்வம் நிறைவடைகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் முதல்பர்வம் நிறைவடையும் குறிப்புக் கொடுக்கப்படாமல், அடுத்தடுத்த அத்யாயங்களுக்கு அடுத்தடுத்த அத்யாய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹரிவம்ச பர்வம் பகுதி – 55ல் உள்ள சுலோகங்கள் : 51

 ***ஹரிவம்சத்தின் முதல் பர்வமான ஹரிவம்ச பர்வம் முற்றும்***

***அடுத்தது இரண்டாம் பர்வமான விஷ்ணு பர்வம்***

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Wednesday, 27 May 2020

தைத்தியர்களின் பிறப்பு | ஹரிவம்ச பர்வம் பகுதி – 54

(விஷ்ணும் ப்ரதி தேவருஷே நாரத வாக்யம்)

The birth of the daityas | Harivamsha-Parva-Chapter-54 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : நாராயணனைச் சந்தித்த நாரதர்; லவணனுக்கும் சத்ருக்கனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; மதுரா நகரத்தை நிறுவிய சத்ருக்னன்; பூமியில் பிறந்திருக்கும் அசுரர்கள் செய்யும் கொடுமைகளைச் சொன்னது; நாராயணன் அவதரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட நாரதர்...

Shatrugna and Lavanasura

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "நாராயணன் வெற்றியடைந்ததும், பூமியில் தன் நிலையாகப் பூமியில் இருக்கும் ஒரு வீட்டுக்குச் சென்ற பிறகு, தேவர்கள் தங்கள் கூறுகளை {அம்சங்களை} பாரதக் குலத்தில் பிறக்க {அவதரிக்கச்} செய்த பிறகு, தர்மன், இந்திரன், பவனன், தெய்வீக மருத்துவர்களாக அஸ்வினி இரட்டையர், சூரியன் ஆகியோரின் கூறுகள் பூமியில் இறங்கிய பிறகு, தேவர்களின் புரோஹிதர் {பிருஹஸ்பதி} தன் கூறொன்றில் பூமியில் இறங்கிய பிறகு, வஸுக்களின் எட்டாவது கூறும் {பீஷ்மரும்} பூமியில் இறங்கிய பிறகு, காலன் மற்றும் கலியின் கூறுகள் பூமிக்கு வந்த பிறகு, சுக்ரன், வருணன், சங்கரன், மித்ரன், குபேரன், கந்தர்வர்கள், உரகர்கள், யக்ஷர்கள் ஆகியோரின் கூறுகள் பூமியில் இறங்கிய பிறகு, நாரதர் நாராயண சக்தியில் ஒரு கூறாக வெளியே வந்தார்[1].(1-6) நெருப்பைப் போன்று பிரகாசமாக இருந்த அவர், உதயச் சூரியனைப் போன்ற கண்களையும், பெரியதும், பரந்ததுமான ஜடமுடியையும் கொண்டிருந்தார். அவர் சந்திரக் கதிர்களைப் போன்ற வெள்ளை உடையை உடுத்திக் கொண்டு, பொன்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவராக இருந்தார்.(7) அவர், அறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் பெண்தோழியைப் போல இருந்த {மஹதி என்ற பெயரைக் கொண்ட} ஒரு வீணையைச்[2] சுமந்து கொண்டு, தன் உடலில் போர்த்திய மான்தோலுடனும், பொன்னாலான புனித நூலுடனும் {முப்புரிநூலுடனும்} இருந்தார். தன் கரங்களில் தண்டம் மற்றும் கமண்டலுவுடன்[3] அவர் இரண்டாவது சக்ரனை {இந்திரனைப்} போல இருந்தார்.(8)

[1] "தர்மனின் கூறு {அம்சம்} யுதிஷ்டிரன், சக்ரனின் கூறு அர்ஜுனன், பவனனின் கூறு பீமசேனன். அசுவினி இரட்டையர்கள் நகுலன் மற்றும் சகாதேவனாகப் பிறந்தனர். சூரியன் கர்ணனாகவும், தேவர்களின் புரோகிதரான பிருஹஸ்பதி துரோணராகவும், எட்டாவது வஸு, பீஷ்மராகவும், காலன் விதுரனாகவும், கலி துரியோதனனாகவும் பிறந்தனர். சோமன் அபிமன்யுவாகவும், சுக்ரன் பூரிஸ்ரவஸ் ஆகவும், வருணன் சுருதாயுவாகவும், சங்கரன் அஸ்வத்தாமனாகவும், மித்ரன் கணிகராகவும், குபேரன் திருதராஷ்டிரனாகவும், கந்தர்வர்கள் மற்றும் பிறர் உக்ரசேனன், துச்சாசனன் மற்றும் பிறராகவும் பிறவி எடுத்தனர் {அவதரித்தனர்}" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். தேசிராஜுஹனுமந்த ராவின் பதிப்பில், இந்த 1 முதல் 6ம் ஸ்லோகம் வரை, "பூமி அன்னை பிரம்மனிடம் உறுதிமொழியைப் பெற்றுக் கொண்டு திரும்பிய போது, பாரத வம்சத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தேவர்கள் பூமியில் அவதரித்தனர்" எனத் தொடங்கி, "இவ்வாறு தேவர்கள் பூமியில் அவதரித்த போது, அவர்களை வானத்தில் இருந்து தேவ முனியான நாரதர் கண்டு, பூமியில் அவர்களுக்கு மத்தியில் விஷ்ணு இல்லாததை உணர்ந்தார்" என்று முடிகிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இவ்வாறே இருக்கிறது.

[2] "இது நரம்புகளைக் கொண்ட இசைக்கருவி" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[3] "இது நீரெடுத்துச் செல்ல பயன்படும் ஒரு பாத்திரம்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

எப்போதும் சச்சரவுகளை வளர்க்கும் அந்தப் பெரும் முனிவர், கல்விமானாகவும், கந்தர்வ வேதத்தை[4] நன்கறிந்தவராகவும், இந்தப் பூமியில் ஏற்படும் பிளவுகளுக்கான ரகசிய காரணங்களைப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டராகவும் இருந்தார். தம் விருப்பத்தின் பேரில் பகைவர்களை உண்டாக்கும் வழக்கம் கொண்ட அந்தப் பிராமணர் {நாரதர்}, இரண்டாவது கலியைப் போன்றிருந்தார். அந்தப் பெரும் முனிவர் தேவர்கள் மற்றும் கந்தர்வர்களின் நிலத்தில் முதன்மைப் பேச்சாளராகவும், நான்கு வேதங்களை ஓதுபவராகவும், முதல் ரிக்கை உரைப்பவராகவும் இருந்தார்.(9-11) இறப்பிலியும், எப்போதும் பிரம்மலோகத்தில் திரிபவருமான அந்த நாரத முனிவர், {பிரம்மலோகத்தில்} தேவர்களின் கூட்டத்திற்கு மத்தியில்(12) சோர்வடைந்த இதயத்துடன் விஷ்ணுவிடம் பேசினார். {அவர்}, "ஓ! நாராயணா, மன்னர்களின் அழிவுக்காக ஏற்பட்ட தேவர்களின் பிறவிகள் {அவதாரங்கள்} பயனற்றவையாகின.(13) ஓ! தேவலோகத்தின் தலைவா, நீ இங்கிருக்கும்போது, மன்னர்களுக்குள் உண்டாகும் இந்தப் பிளவு எந்தப் பயனையும் விளைவிக்காது. நாராயணனின் யோகமில்லாமல் அவர்களின் பணி நிறைவடையாது என்றே நான் நினைக்கிறேன்.(14) ஓ! தேவர்களின் தேவா, நீ ஞானியும், பொருட்களின் உண்மையான சாரங்களை அறிந்தவனும் ஆவாய். பூமிக்காக இத்தகைய பணியை ஏற்படுத்துவது உனக்குச் சரியானதல்ல.(15) விழிகளின் பார்வையும், பலமிக்கவையின் தலைவனும் நீயே. யோகியரில் முதன்மையானவனும், அனைத்தின் புகலிடமும் நீயே.(16) பூமியில் தேவர்களின் பிறப்பைக் கண்டும், சுமையில் இருந்து பூமியை விடுவிப்பதற்காக உன் சக்திக்கூறை {அம்சத்தை} ஏன் நீ முதலில் அனுப்பவில்லை?(17) தேவர்கள் அனைவரும், உன்னைத் தங்கள் உதவியாகக் கொண்டும், உன்னால் வழிநடத்தப்பட்டு, உன்னோடு அடையாளங்காணப்பட்டும் இந்தப் பூமியல் ஒரு செயல்பாட்டில் இருந்து மற்றொன்றுக்கு நீந்திச் செல்வார்கள்.(18) ஓ! விஷ்ணு, எனவேதான் உன்னை அனுப்பி வைப்பதற்காக நான் இந்தத் தேவர்களின் கூட்டத்திற்கு விரைந்து வந்தேன்; அதற்கான காரணத்தைக் கேட்பாயாக.(19) ஓ! நாராயணா, தாரகனை வேராகக் கொண்ட போரில் உன்னால் கொல்லப்பட்டுப் பூமியின் பரப்பிற்குச் சென்ற தைத்தியர்கள் பலரின் இயக்கங்களைக் கேட்பாயாக.(20)

[4] "இஃது இசைக்கலையாகும். இது கந்தர்வர்களுக்கான சிறப்புக் கொடையாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

பூமியின் பரப்பில் மதுரா என்ற பெயரில் ஓர் எழில்மிகு நகரம் இருக்கிறது. யமுனைக் கரையில் அமைந்திருக்கும் அதனில் செழிப்புமிக்கக் கிராமங்கள் பல நிறைந்திருக்கின்றன. அங்கே போரில் தடுக்கப்பட முடியாதவனும், மது என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு பெரும் தானவன் இருந்தான். அவன் பெரும் சக்திவாய்ந்தவனாகவும் உயிரினங்கள் அனைத்தையும் அச்சுறுத்துபவனாகவும் இருந்தான். பெரும் மரங்கள் நிறைந்ததும், பயங்கரமானதும், மது என்ற பெயரைக் கொண்டதுமான ஒரு பெரிய காடு இருந்தது; முன்பு அவன் {தானவன் மது} அங்கே வாழ்ந்திருந்தான்.(23) பெருந்தானவனான லவணன், மதுவின் மகனாவான். அபரிமிதமான பலத்தைக் கொடையாகக் கொண்டிருந்த அவன் உயிரினங்கள் அனைத்தையும் அச்சுறுத்தி வந்தான்.(24) அங்கே பல ஆண்டுகள் விளையாடிக் கொண்டிருந்த அந்தத் தானவன், செருக்கால் நிறைந்தவனாகத் தேவர்கள் அனைவரையும், பிறரையும் அச்சுறுத்தி வந்தான்.(25)

தரசரதனின் பக்தியுள்ள {அறம்சார்ந்த} மகனும், ராட்சசர்களுக்குப் பயங்கரனுமான ராமன் அயோத்யாவை ஆண்டுக் கொண்டிருந்த போது, தைத்தியர்கள் அனைவராலும் துதிக்கப்பட்ட அந்தத் தானவன் {லவணன்}, அந்தப் பயங்கரமான காட்டுக்குச் சென்றான். அந்த லவணன், கடுமையாகப் பேசக்கூடிய ஒரு தூதனை ராமனிடம் அனுப்பினான். அவன் {அந்தத் தூதன்}, "ஓ! ராமா, நான் உன் நாட்டின் எல்லைக்கருகே வாழ்கிறேன். தானவன் லவணன் உன் பகைவனாவான். மன்னர்கள் ஒரு பலமிக்கப் பகைவனை வைத்துக் கொள்ள விரும்புவதில்லை.(26-28) தன் குடிமக்களின் நலத்தை நாடும் மன்னன் ஒருவன், தன் அரச கடமைகளைச் செய்து, தன் எல்லை மற்றும் வளங்களைப் பெருக்கி, தன் பகைவர்களை எப்போதும் வீழ்த்த வேண்டும்.(29) தன் குடிமக்களை நிறைவடையச் செய்ய விரும்புபவனும், முடிசூட்டு நீரால்[5] நனைத்த மயிரைக் கொண்டவனுமான மன்னன், புலன்களில் சிறப்பாளுமை கொள்வது நிச்சய வெற்றியைக் கொடுக்கும் என்பதால் முதலில் தன் புலன்கள் அனைத்தையும் வெல்ல வேண்டும்.(30) தன் நிலையை எப்போதும் வலுவாகவும், முழுமையாகவும் வைத்திருக்க விரும்பும் மன்னனைப் போன்ற ஆசான் மக்களுக்கு வேறெவனும் இல்லை என்பதால், அவன் தன் மக்களுக்கு ஒழுக்கம் சார்ந்த விதிகளைக் கற்பிக்க வேண்டும்.(31) ஒரு நுண்ணறிவுமிக்க மன்னன், ஆபத்துகளுக்கும், தீமைகளுக்கும் நடுவே இருக்கும்போது, தன் படையைப் பலப்படுத்த வேண்டுமேயன்றி தன் பகைவர்களிடம் அச்சங்கொள்ளக் கூடாது.(32) மனிதர்கள் அனைவரும், தங்களுடன் பிறந்த பலமிக்கப் பகைவர்களான தங்கள் புலன்களாலேயே கொல்லப்படுகின்றனர். பொறுமையற்ற மன்னன் ஒருவன், தங்கள் பகைவர்கள் தங்களுக்கு நன்மை செய்கிறார்கள் என்று கொள்ளும் தவறான கருத்தினால் கொல்லப்படுகிறான்.(33) நீ, உன் மனைவியின் காரணமாகவும், மடத்தனமான பற்றின் காரணமாகவும், ராவணனையும், அவனது படையையும் கொன்றாய். நீ செய்த அந்தப் பாவச்செயலை நான் பெரிதாகவோ, மதிப்பிற்குரியதாகவோ நான் கருதவில்லை.(34) காட்டில் வாழ்ந்து, நோன்பு நோற்று வந்த நீ, ஓர் அற்ப ராட்சசனைக் கொறாய். இத்தகையை நடத்தையைப் பக்திமான்களிடம் காண முடியாது.(35) சகிப்பினால் பிறக்கும் அறமானது, பக்திமான்களை ஒரு மங்கலமான, நியாயமான இடத்திற்கு இட்டுச் செல்லும். அறியாமையினால் நீ ராவணனைக் கொல்லவும், காடுறை வானரர்களைக்[6] கௌரவிக்கவும் செய்தாய்.(36) நீ நோன்பை நோற்று வந்தபோது, அற்ப மனிதர்களின் நடத்தையைப் பின்பற்றி உன் மனைவிக்காக ராவணனைப் போரில் கொன்றதால் அவன் உண்மையில் அருளப்பட்டவனென ஆகிவிட்டான்.(37) தீய மனம் கொண்டவனும், தன் புலன்களைக் கட்டுப்படுத்தாதவனுமான அந்த ராவணன் போரில் உன்னால் கொல்லப்பட்டான். எனவே, நீ போரிட வல்லவனாகிறாய். வா, இன்று என்றோடு போரிடவாயாக" என்று {லவணன் சொன்னதாக அந்தத் தூதன்} சொன்னான்.(38)

[5] "முடிசூட்டுவிழாவின் போது, மன்னனின் தலையில் புனித நீரைத் தெளிப்பது வழக்கமாகும். எனவே, இங்கே இது முடிசூட்டு விழாவைக் கண்ட மன்னன் என்ற பொருளைத் தரும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[6] "சரியாகச் சொல்வதென்றால் இங்கே சொல்லப்படுபவர்கள் குரங்குகளல்ல; அவர்கள் தென்னிந்தாவின் ஒரு மாகாணத்தில் வாழ்ந்த காட்டுமிராண்டி இனத்தைச் சேர்ந்தவர்களாவர்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். ஆசிரியர் வலிந்து இந்தப் பொருள் கொள்ள வேண்டிய அவசியமேதும் இல்லை. எனினும் செய்திருக்கிறார்.

கடுமொழி உரைப்பவனான அந்தத் தூதனின் இந்தச் சொற்களைக் கேட்ட ராமன், பொறுமையுடன் புன்னகைத்தவாறே, "ஓ! தூதா, அந்த இரவுலாவியிடம் கொண்ட மதிப்பினால், என்னைப் பழிப்பதைச் சுகமாகக் கருதி நீ சொல்பவை நியாமானவையல்ல.(39,40) என் மனைவி அபகரித்துச் சென்ற அந்த ராவணன் கொல்லப்பட்டிருந்தாலும், என் மனைவி அபகரிக்கப்பட்டிருந்தாலும் , நீதியின் வழிகளைப் பின்பற்றி செல்லும் நான் கலங்கடிக்கப்பட்டிருந்தாலும் அதில் பழிப்பதற்கென்ன இருக்கிறது?[7](41)

நீதியின் வழிகளை அறவழிகளை எப்போதும் பின்பற்றும் அறவோர், தங்கள் சொற்களாலும் பிறரைப் பழிக்கமாட்டார்கள். பக்திமான்களுக்காக எப்போதும் விழித்திருக்கும் தெய்வத்தைப் போல, அதற்கு இணையாக அவனும் தீயவர்களுக்காக விழிந்திருந்தான்.(42) தூதனின் கடமையை நீ செய்தாய். தாமதம் செய்யாதே, இப்போதே செல்வாயாக. தங்களைத் தாங்களே பெரிதாகக் காட்டிக் கொள்ள விரும்பும் அற்பர்களை என்னைப் போன்ற மனிதர்கள் காயப்படுத்துவதில்லை.(43) போரில் பகைவரை ஒடுக்குபவனான என் தம்பி சத்ருக்னன் இதோ இருகிறான். தீய மனம் கொண்ட அந்தத் தைத்தியனுக்காக இவன் காத்திருப்பான்" என்றான் {ராமன்}.(44)

ராமனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், அந்த மன்னனால் ஆணையிடப்பட்டவனும் அந்தத் தூதன், சத்ருக்னனுடன் புறப்பட்டுச் சென்றான். சுமித்ரையின் மகனான சத்ருக்னன், வேகமாகச் செல்லும் ஒரு தேரில் ஏறி, பெரிதான மதுவனத்திற்குச் சென்று, போரில் ஈடுபட விரும்பியவனாக அங்கே ஒரு கூடாரத்தை அமைத்தான்.(45,46) தைத்தியன் லவணன், அந்தத் தூதனின் சொற்களைக் கேட்டுக் கோபமடைந்தான். மதுவனத்தைவிட்டுப் போருக்குப் புறப்பட்டான். பிறகு அங்கே சத்ருக்னனுக்கும், லவணனுக்கும் இடையில் ஒரு பயங்கரப் போர் நடந்தது. அவர்கள் இருவரும் வீரர்களாகவும், வலிமைமிக்க வில்லாளிகளாகவும் இருந்தனர். இருவரும், கூரிய கணைகளால் ஒருவரையொருவர் தாக்கினர். போர்க்களத்தைவிட்டு எவரும் பின்வாங்கவும் இல்லை, ஒருவரும் களைப்படையவும் இல்லை.(47-49) சத்ருக்னனின் கணைகளால் அந்தப் போரில் பெரிதும் தாக்கப்பட்ட தானவன் லவணன், தன் கைகளில் கதாயுதம் {ஜயசூலம்} இல்லாததால் தோல்வியைச் சந்தித்தான்.(50) அதன்பிறகு அவன், தனக்கு வரமாகக் கிடைத்ததும், உயிரினங்கள் அனைத்தையும் கலங்கடிக்கவல்லதுமான தெய்வீக அங்குசத்தை எடுத்துக் கொண்டு அந்தப் போரில் முழங்கத் தொடங்கினான்.(51) அவன் அதைக் கொண்டு சத்ருக்னனின் தலைப்பாகையைப் பற்றி, ராகவனின் தம்பியான அவனை இழுக்கத் தொடங்கினான்.(52) அப்போது சத்ருக்னன், தங்கக் கைப்பிடி கொண்டதும், மிகச் சிறந்ததுமான தன் குத்துவாளை எடுத்துக் கொண்டு, அந்தப் போரில் லவணனின் தலையை அறுத்தான்.(53) சுமித்ரையின் வீரமகனும், நண்பரைகளை மகிழ்ச்சியடையச் செய்பவனுமான அவன் {சத்ருக்னன்}, அந்தப் போரில் லவணாசுரனைக் கொன்று, தன் ஆயுதங்களால் அந்தக் காட்டை அழித்தான்.(54) சுமித்ரையின் பக்திமிக்க மகனான அந்தச் சத்ருக்னன், அந்தக் காட்டை அழித்து, அந்த மாகாணத்தின் நன்மைக்காக ஒரு நகரத்தை அமைத்து அங்கே வாழத் தொடங்கினான். பழங்காலத்தில் மதுவனத்தில் லவணாசுரனைக் கொன்ற சத்ருக்னன் அங்கே மதுரா என்ற பெயரில் ஒரு நகரத்தைக் கட்டினான்.(55,56)

அந்தப் பெரிய நகரம், சுவர்கள், நுழைவாயில்கள் மற்றும் கதவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கிராமங்கள், உயர்ந்த கட்டடங்கள் மற்றும் தோட்டங்கள் பலவற்றையும் {அஷ்டப்ரஹாரங்களை} அது கொண்டிருந்தது.(57) அதன் எல்லைகள் நன்கு அமைக்கப்பட்டு, அழகாகக் கட்டப்பட்டிருந்தன. சுவர்கள் மிக உயரமாக இருந்தன. அகழிகள், ஒரு பெண்ணின் இடையைச் சுற்றி இருக்கும் ஆபரணத்தைப் போல இருந்தன.(58) கற்களாலும், செங்கற்களாலும் அமைந்திருந்த கட்டடங்கள் கேயூரங்களைப் போல இருந்தன. அழகிய அரண்மனைகள் காது குண்டலங்களைப் போல இருந்தன. நன்கு பாதுகாக்கப்பட்ட வாயில்கள் திரைகளைப் போல இருந்தன, குறுக்குச் சாலைகளான உலாவீதிகள் {பெண்ணின்} புன்னகையைப் போல இருந்தன. நலமிக்க வீரர்கள், யானைகள், குதிரைகளையும், மற்றும் தேர்களையும் அது {அந்நகரம்} கொண்டிருந்தது. பிறை வடிவத்திற்கு ஒப்பான அது யமுனையின் கரையில் அமைந்திருந்தது. அழகிய சந்தைகளைக் கொண்டிருந்த அது, தன் ரத்தினத்திரள்களுக்கான பெருமையைக் கொண்டிருந்தது. அங்கே இருந்த வயல்கள் தானியங்களால் நிறைந்திருந்தன. தேவர்களின் மன்னன் (இந்திரன்) சரியான பருவ காலத்தில் மழையைப் பொழிந்தான். அங்கே இருந்த ஆண்களும் பெண்களும் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தனர்.(59-61) போஜர்களின் குலத்தில் பிறந்தவனும், பெருஞ்சக்தி கொண்டவனுமான மன்னன் சூரசேனன் அங்கே ஆட்சி செய்து கொண்டிருந்தான். உக்ரசேனன் என்ற பெயரில் கொண்டாடப்படும் மஹாசேனனைப் போன்ற பலமிக்கவன் {உக்ரசேனன்}, {இப்போது} அங்கே {ஆட்சி செய்து கொண்டு} இருக்கிறான்.(62,63)

ஓ! விஷ்ணு, நீ எவனைக் கொன்றாயோ, அவன் அவனது {உக்ரசேனனின்} மகனாக இருக்கிறான். தாரகனை வேராகக் கொண்டிருந்த போரில் நீ யாரைக் கொன்றாயோ அந்தக் காலநேமி என்ற பெயரைக் கொண்ட தைத்தியன், போஜ குலக்கொழுந்தாகக் கம்ஸனாகப் பிறந்திருக்கிறான். சிங்கத்தைப் போன்ற நடையைக் கொண்ட அந்த மன்னன் உலகில் கொண்டாடப்பட்டு வருகிறான்.(64,65) அவன் உலகின் மன்னர்கள் அனைவருக்கும் பயங்கரனாகவும், உயிரினங்கள் அனைத்தையும் அச்சுறுத்துபவனாகவும் இருக்கிறான்.(66) அவன் விடா முயற்சி கொண்டவனாகவும், இரக்கமற்றவனாகவும் இருக்கிறான். அவனது குடிமக்கள் அவனைக் கண்டு மயிர்சிலிர்க்கும் அளவுக்கு அவன் செருக்கு வாய்ந்தவனாக இருக்கிறான்.(67) அவன் ஒருபோதும் தன் அரச கடமைகளைச் செய்யாதவனாகவும், தன் சொந்த மக்களுக்கே ஒருபோதும் மகிழ்ச்சி அளிக்காதவனாகவும் இருக்கிறான். அவன் தன் நாட்டுக்கென எந்த நன்மையையும் ஒருபோதும் செய்யாமல், ஒரு கொடுங்கோலனைப் போலவே எப்போதும் நடந்து கொள்கிறான்.(68) எவன், தாரகப் போரில் உன்னால் வீழ்த்தப்பட்டானோ, அவன் இப்போது போஜ குலத்தில் கம்ஸனாகப் பிறந்திருக்கிறான். இறைச்சியை உண்டு வாழும் அவன் தன் அசுர இதயத்துடன் உலகங்கள் அனைத்தையும் ஒடுக்கி வருகிறான்.(69) எவன் குதிரையைப் போன்றிருந்தானோ, ஹயக்ரீவன் என்ற பெயரால் அறியப்பட்டானோ, அவன் கம்ஸனின் தம்பியான கேசியாகப் பிறந்திருக்கிறார்.(70) உடலற்றவனும், தீயவனும், {சிங்கம் போன்ற} பிடரி மயிருடன் கூடிய அசுரனும், குதிரையைப் போலக் கனைப்பவனுமான அவன் இப்போது பிருந்தாவனத்தில் தனியாக வாழ்ந்து வருகிறான். அவன் மனித இறைச்சியை {நரமாமிசத்தை} உண்டு வாழ்ந்து வருகிறான்.(71) பலியின் மகனான அரிஷ்டன், தான் விரும்பும் வடிவங்களை ஏற்கவல்ல பேரசுரன் ககுத்மியாகப் பிறந்திருக்கிறான். காளையைப் போன்ற வடிவத்தைக் கொண்டிருக்கும் அவன், பசுக்களின் பகைவனாக இருக்கிறான்.(72) திதியின் மகனும், தானவர்களில் முதன்மையானவனுமான ரிஷ்டன், கம்ஸனின் யானையாகப் பிறந்திருக்கிறான்.(73) பயங்கரம் நிறைந்த தைத்தியன் லம்பன், பிரலம்பனாகப் பிறந்திருக்கிறான். அவன் ஓர் ஆல மரத்தினடியில் பாண்டரன் {பாண்டீரன்} என்ற பெயரில் வாழ்ந்து வருகிறான்.(74) கரன் என்ற பெயரில் அறியப்பட்டிருந்த தைத்தியன், பயங்கரம் நிறைந்த அசுரன் தேனுகனாகப் பிறந்திருக்கிறான். பனைமரக்காட்டில் வாழ்ந்து வரும் அவன் உயிரினங்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறான்.(75) வராஹன் மற்றும் கிஷோரன் என்ற பெயர்களைக் கொண்ட முதன்மையான அசுரர்கள் இருவர், சாணூகன் {சாணூரன்} மற்றும் முஷ்டிகன் என்ற பெயர்களில் எப்போதும் அரங்கில் இருக்கும் மற்போர் வீரர்களாகப் பிறந்திருக்கின்றனர்.(76) தானவர்களுக்கும் அந்தகர்களாகத் தெரியும் மயன் மற்றும் தாரன் {தாரகன்} என்ற இரு தானவர்கள், பிராக்ஜ்யோதிஷம் என்ற பெயரைக் கொண்டதும், பூமியின் மகனான நரகனுக்கு உரியதுமான நகரத்தில் இப்போது வாழ்ந்து வருகின்றனர்.(77)

ஓ! நாராயணா, இந்தத் தானவர்கள் அனைவரையும் கொன்றவனும், அவர்களின் வடிவங்களை அழித்தவனும் நீயே. அவர்கள் இப்போது மனித உடல்களை ஏற்று உலகின் மக்களை ஒடுக்கி வருகின்றனர்.(78) அவர்கள் உன் பெயரைப் பாடுவதை எதிர்த்து உன்மீது பற்றுக் கொண்டவர்களை அழிக்கின்றர். உன் தயவால் மட்டுமே அவர்கள் அழிவைச் சந்திப்பார்கள்.(79) சொர்க்கத்தில் அவர்கள் உன்னைக் கண்டு அஞ்சினார்கள், கடலிலும் அவர்கள் உன்னைக் கண்டு அஞ்சினார்கள், பூமியிலும் அவர்கள் உன்னிடம் அஞ்சுவார்கள். அவர்களுக்கு அச்சத்தின் பிறப்பிடம் வேறேதும் இல்லை.(80) ஓ! ஸ்ரீதரா, அந்தத் தீய தானவர்களை நீ கொல்வாயாக; வேறு எவராலும் அவர்களைக் கொல்ல முடியாது. சொர்க்கத்தில் இருந்து அனுப்பப்பட்ட தைத்தியர்கள் பூமியில் புகலிடத்தைக் காண்கின்றனர்.(81)

ஓ! கேசவா, நீ விழித்திருப்பதால், தேவலோகத்தில் உன்னால் கொல்லப்பட்ட அந்தத் தைத்தியன் சொர்க்கத்திற்குச் செல்வது கடினம் என்பதால், அவன் மனித உடலை ஏற்று மீண்டும் எழுந்திருக்கிறான்.(82) எனவே, ஓ! நாராயணா, உலகிற்கு நீ வருவாயாக. நாங்களும் பூமியில் இறங்குகிறோம். தானவர்களின் அழிவுக்காக நீ உன்னைப் படைப்பாயாக.(83) வெளிப்படாத உன் வடிவங்கள், தேவர்களுக்குப் புலப்படுவதும், புலப்படாதவையுமாக இருக்கின்றன. உன்னால் படைக்கப்பட்ட தேவர்கள் அந்த வடிவங்களில் பூமியில் இறங்குவார்கள்.(84) ஓ! விஷ்ணு, நீ பூமிக்கு இறங்கி வரும்போது, கம்ஸனால் ஆள இயலாது, பூமி எதற்காக வந்தாளோ அந்த நோக்கமும் நிறைவேறும்.(85) பாரத நிலத்தில் தொழில்கள் அனைத்தின் ஆசான் நீயே, அனைத்தின் விழிகளும், உயர்ந்த புகலிடமும் நீயே. எனவே, ஓ! ரிஷிகேசா, நீ பூமிக்கு வந்து, தீயவர்களான அந்தத் தானவர்களைக் கொல்வாயாக" என்றார் {நாரதர்}".(86)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 54ல் உள்ள சுலோகங்கள் : 86
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Saturday, 23 May 2020

சந்தனுவின் குடும்பம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 53

(தேவ அம்ச அவதரணம்)

The account of Santanu's family | Harivamsha-Parva-Chapter-53 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பூமியின் நலத்துக்காக பிரம்மனிடம் வேண்டிய தேவர்கள்; பழங்காலத்தில் நடந்தவற்றைச் சொன்ன பிரம்மன்; பெருங்கடலுக்கும், கங்கைக்கும் சாபம் கிடைத்தது; எதிர்காலத்தில் நடக்கப்போவதையும் சொன்ன பிரம்மன்...

Lord Brahma

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பூமியின் சொற்களைக் கேட்ட பிறகு, அவளது நோக்கத்தைக் குறித்து நுட்பமாகச் சிந்தித்த தேவர்கள், பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்},(1) "ஓ! தலைவா, உயிரினங்கள் அனைத்தின் உடல்களைப் படைத்தவர் நீரே. உலகங்கள் அனைத்தின் தலைவன் நீரே. சுமையில் இருந்து பூமியை நீர் விடுவிப்பீராக.(2) ஓ! தலைவா, பேரிடரில் இருக்கும் பூமியின் நோக்கத்தை நிறைவேற்ற விரும்பினால், மஹேந்திரன், யமன், வருணன், வளங்களின் மன்னன் {குபேரன்}, நாராயணன், சந்திரன், சூரியன், காற்றானவன் {வாயு}, ஆதித்யர்கள், வஸுக்கள், ருத்திரர்கள், உலகின் குடிமுதல்வர்கள் {பிரஜாபதிகள்}, தெய்வீக மருத்துவர்களான அஸ்வினிகள், சாத்யஸ்கள், பிருஹஸ்பதி, சுக்ராச்சாரியர், காலன், கலி, மஹேஷ்வரன், கார்த்திகேயன் {முருகன்}, யக்ஷர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், சாரணர்கள் ஆகியோர் மற்றும் பெரும்பாம்புகள், பறவைகள், பெரும் மலைகள், கங்கையின் தலைமையிலான ஆறுகளின் பெரும் அலைகளைக் கொண்ட பெருங்கடல்கள் ஆகியனவும் செய்ய வேண்டிய கடமைகளைத் தாமதமில்லாமல் உறுதிசெய்வீராக.(3-8) ஓ! பெரும்பாட்டனே {பிதாமஹரே}, எங்கள் பிறவிக்கூறுகளை {அம்ஸ அவதாரங்களை} கீழே அனுப்பவது எவ்வாறு? எங்களை வானத்தில் உலவும் மன்னர்கள், பூமியில் நடக்கும் மன்னர்கள், அரசவை பிராமணர்கள் மற்றும் பிற இளவரசர்களின் குடும்பங்களில், எந்தப் பெண்ணிடமும் பிறக்காத உடல்களைப் படைக்கவிடுவீராக[1]" என்றனர்.(9-10)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "ஓ! பெரும்பாட்டனே, தேவர்களாகிய நாங்கள் பூமியைக் காப்பாற்றக்கூடிய முன்மாதிரியான அவதாரங்களை எவ்வழியில் எடுக்க வேண்டும் என்பதை எங்களுக்குச் சொல்வீராக. நாங்கள் உமது உத்தரவின் பேரில் எங்களை நாங்களே மாற்றிக் கொள்ள ஆயத்தமாக இருக்கிறோம். நீர் விரும்பும் எந்த வடிவையும் ஏற்க நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம். எனவே, வானுலாவிகளாகப் போவது யாவர்? பூமியில் இருக்கப்போவது யாவர்? பிராமண சபைகளின் உறுப்பினர்களாகப் போவது யாவர்? மன்னர்களின் குலங்களில் பிறக்கப்போவது யாவர்? கருவறையற்ற பிறவிகொள்ளப் போவது யாவர்? யார் எந்த உடலை ஏற்க வேண்டும் என்பதை தயவுகூர்ந்து எங்களுக்குச் சொல்வீராக" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இவர்கள் எக்கூறுகளை ஏற்க வேண்டும் என்பதை விரைவாக இவர்களுக்குச் சொல்வீராக. பூமியின் பணியை நிறைவேற்றவும், மன்னர்களுக்கு மத்தியில் பிணக்கை உண்டாக்கவும் இஃது ஏற்படப்போகிறது. ஓ! பெரும்பாட்டனே, எங்களில், பல்வேறு கூறுகளாகப் பிறக்கச்செய்ய செயல்படப் போகிறவர்கள் யாவர்? சொர்க்கத்தில் எஞ்சியிருக்கப் போகிறவர்கள் யாவர்? பூமியில் மன்னர்களாகப் பிறக்கப் போகிறவர்கள் யாவர்? பிராமணர்களுக்கு மத்தியில் துணைப் புரோகிதர்களாக இருக்கப் போகிறவர்கள் யாவர்? பூமியில், கருவறைகளில் இருந்து பிறக்காத உடல்களை உண்டாக்கப் போகிறவர்கள் யாவர்?" என்றிருக்கிறது.

தேவர்கள் அனைவராலும் துதிக்கப்படுபவனும், அனைத்தின் பெரும்பாட்டனுமானவன் {பிரம்மன்}, ஒரு பொதுவான காரியத்திற்காக ஒன்று திரண்டிருக்கும் தேவர்களின் இந்தப் பெருந்தீர்மானத்தைக் கேட்டு, அவர்களிடம்,(11) "ஓ! முன்னணி தேவர்களே, உங்கள் தீர்மானத்தை நான் பெரிதும் விரும்புகிறேன். நீங்கள் உங்கள் சக்தியைக் கொண்டு பூமியில் உங்கள் உடல்களின் கூறுகளைப் படைப்பீராக {அவதாரம் செய்வீராக}.(12) முன்னணி தேவர்களான நீங்கள் அனைவரும் உங்கள் சக்தியுடன் பூமியில் இறங்குவீராக. நீங்கள், மூவுலகங்களின் செழிப்பை அடைந்து, சுமையில் இருந்து பூமியை விடுவிப்பீராக.(13) பழங்காலத்தில் அவளது சுமை குறித்து எனக்குத் தெரியவந்தபோது, அதை அகற்றுவதற்கு நான் என்ன செய்தேன் என்பதைக் கேட்பீராக.(14) 

பழங்காலத்தில் நான் கிழக்குக் கடலின் மேற்குக் கரையில் என் பேரனான பெரும் கசியபனுடன் அமர்ந்திருந்தேன்.(15) வேதங்கள் தொடர்பாக ஏற்கனவே விளக்கப்பட்ட பல்வேறு கருப்பொருட்களையும், புராணங்களில் இருந்து வேறு பகுதிகள் பலவற்றையும் {கசியபனுக்கு} நான் விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தேன்.(16) இவ்வாறு நான் உரையாடிக் கொண்டிருந்தபோது, உடல்வடிவங்களுடன் கூடிய மருத்துகள், பெருங்கடல் மற்றும் கங்கையுடன் சேர்ந்து நீங்கள் அனைவரும் என்னிடம் வந்தீர்கள்.(17) சந்திரனின் துணையுடன் கூடிய பெருங்கடலானவன், நீர்வாழ் விலங்குகளுடன் கூடிய பலவண்ண உடையை உடுத்திக் கொண்டு விரையும் அலைகளுடனும், பவளங்கள் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு, சிப்பிகள் மற்றும் முத்துகளுடன் ஒளிரும் உடலுடனும், நீர் நிறைந்த ஒரு மேகத்தைப் போல முழங்கிக் கொண்டு என்னை வீழ்த்திவிடுபவனைப் போலத் தன் கரைக்கு வந்தான். உப்பு நீரை வீசியெறிந்து அந்த இடத்தைக் கலங்கடித்தான்.(18-20)

பெருங்கடலானவன் தன் நீரால் அந்த இடத்தைத் தாக்க இருந்தபோது, நான் அவனிடம், "அமைதியாக இருப்பாயாக" என்ற சொற்களைக் கோபத்துடன் சொன்னேன்.(21) "அமைதியாக இருப்பாயாக" என்று நான் சொன்ன உடனேயே அவன் ஒரு வடிவத்தை ஏற்றான். தன் அலைகள் அனைத்துடன் அசையாமல் இருந்த அவன், நல்ல அரச அருளுடன் {நல்ல கம்பீரமான தோற்றத்துடன் / ராஜஷ்ரியஜ்வலனாக} அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(22) உங்களுக்கு நன்மையைச் செய்யவும், சுமையில் இருந்து பூமியை விடுவிக்கவும் விரும்பிய நான், பெருங்கடலையும், கங்கையையும் சபிக்கும் வகையில், "ஓ! பெருங்கடலே, நீ அரச வடிவில் வந்திருப்பதனால் நீ ஒரு மன்னனாவாயாக. பூமியில் உன் சக்தியைக் கொண்டு அருஞ்செயல்கள் பலவற்றைச் செய்யும் வகையில் பெரும் பரதனின் குலத்தில் பிறந்து மனிதர்களைக் காப்பாயாக. பொறுமையற்றவனாக இருந்தாலும் நீ அமைதியாக இருக்கும்படி நான் கேட்ட உடனேயே ஒரு வடிவத்தை ஏற்றாய். எனவே, அழகிய மேனியைக் கொடையாகக் கொண்டவனாக, சந்தனு என்ற பெயரில் நீ பூமியில் கொண்டாடப்படுவாய். மேலும் மாசற்ற அங்கங்களையும், அகன்ற விழிகளையும் கொண்டவளும், ஆறுகளில் முதன்மையானவளுமான இந்தக் கங்கை, அழகிய வடிவில் உன்னுடன் வருவாள்" என்றேன்.(23-27)

நான் இதைச் சொன்னபோது, பெருங்கடலானவன், சோர்ந்த இதயத்துடன் என்னைப் பார்த்தான். அவன் {பெருங்கடல்}, "ஓ! தலைவா, ஓ! தேவர்களின் தேவா, என்னை ஏன் சபித்தீர்? நான் உமது ஆணைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடக்கிறேன். எனவே, நான் உமது மகனாவேன். அவ்வாறிருக்கையில், பொருந்தாத சொற்களால் என்னை நீர் சபித்தது ஏன்?(28,29) ஓ! தலைவா, ஓ! தேவர்களின் தேவா, உமது தயவால் என் அலைகள் ஏற்ற இறக்கங்களுடன் பெருகியதால் நான் கலங்கினேன். ஓ! பிரம்மா, இதில் என்னை எவ்வாறு குறைகூற முடியும்?(30) அந்நேரத்தில் காற்றால் வீசப்பட்ட நீரினால் நீர் தீண்டப்பட்டிருந்தாலும் என்னைச் சபிக்க உமக்குக் காரணமேது?(31) வீசும் காற்று, பெருகும் மேகம், சந்திரனுடன் கூடிய பர்வம் {வளர்பிறைச் சந்திரன்} என்ற மூவகை கருவிகளால் நான் கலங்கியிருந்தேன்.(32) ஓ! பிரம்மா, உம்மால் செயலில் நிறுவப்பட்ட இந்த மூன்று கருவிகளால் நான் குற்றமேதும் இழைத்திருந்தால் என்னை மன்னிப்பதே உமக்குத் தகும், இந்தச் சாபத்திற்கு ஒரு முடிவு ஏற்படட்டும்.(33) ஓ! தேவர்களின் தலைவா, சான்றேதும் நீர் கண்டால், குற்றமேதும் இல்லாமலே பெற்ற சாபத்தினால் சோர்வடைந்திருக்கும் என்னிடம் இரக்கம் காட்டுவீராக.(34) ஓ! தலைவா, உமது ஆணையின் பேரில் இந்தக் கங்கை பூமியில் இறங்குவாள். நான் குற்றவாளியாக இருந்தாலும், அப்பாவியான எனக்கு நீர் இரக்கம் காட்ட வேண்டும்" என்றான்.(35)

அப்போது, விளைவுகளை அறியாத தேவர்களின் சாபத்தினால் கலங்கியவனும், அச்சமடைந்திருந்தவனுமான பெருங்கடலிடம் நான், இனிய சொற்களில், "ஓ! பெரும் மனம் கொண்டவனே, ஓ! ஆறுகளின் தலைவா, சுகமாயிருப்பாயாக, அஞ்சாதே, நான் உன்னால் நிறைவடைந்தேன். இனி இந்தச் சாபத்தில் உள்ள எதிர்கால நோக்கத்தைக் கேட்பாயாக.(36,37) ஓ! தலைவா, நீ இந்தக் கடலுடலைத் துறந்து, பாரத குலத்திற்குச் செல்வாயாக. அப்போது, ஓ! பெருங்கடலே, ஓ! பெரும் மன்னா, நீ அரச அருளால் {கம்பீரத் தோற்றத்தால்} சூழப்படுவாய். ஓ! நீரின் தலைவா, நான்கு வர்ணங்களையும் ஆட்சி செய்து நீ நிறைவையடைவாய்.(38,39) ஆறுகளில் முதன்மையானவளான இந்தக் கங்கை ஓர் அழகிய பெண் வடிவை ஏற்று உனக்குத் தொண்டு செய்வாள்.(40) என் ஆணையின் பேரில் ஜானவியுடன் {கங்கையுடன்} விளையாடும் நீ மனிதக் கவலையை அனுபவிக்க மாட்டாய்.(41) ஓ! பெருங்கடலே, விரைவில் கங்கையைத் திருமணம் செய்து கொண்டு என் ஆணையை நிறைவேற்றுவாயாக.(42) வஸுக்கள் தேவலோகத்தில் இருந்து கடத்தப்பட்டு, ரஸாதளத்திற்குள் நுழைந்திருக்கின்றனர். அவர்களை சந்ததியாகப் பெற நான் உன்னை நியமிக்கிறேன்.(43) ஜானவி {கங்கை}, நெருப்பைப் போன்ற பிரகாசமான எட்டு வசுக்களை சந்ததியாகப் பெறுவதற்காக அவர்களைக் கருவில் கொண்டு, தேவர்களின் இன்பத்தைப் பெருக்கட்டும்.(44) வசுக்களைப் பிள்ளைகளாகப் பெற்று, குரு குலத்தைப் பெருகச் செய்து, உன் மனித உடலைக் கைவிட்டு, மிக விரைவில் நீ உன்னுடைய கடலுடலை ஏற்பாய்" என்றேன்.(45)

ஓ! தேவர்களில் முதன்மையானவர்களே, இவ்வாறு பழங்காலத்தில் பூமியின் எதிர்காலச் சுமையைக் கண்டு, தேவலோகத்தில் வாழும் வசுக்கள் பிறக்கப் போகும் சந்தனுவின் குல வித்துகளை உங்கள் நன்மைக்காக நான் விதைத்தேன்.(46,47) இப்போதும் கங்கையின் மகன் {மகனாகப் போகும்} பீஷ்மன் எட்டாம் வஸுவாக தேவலோகத்தில் இருக்கிறான். மற்ற ஏழு வசுக்களும் {கங்கைக்குப் பிறந்து இறந்து} தங்கள் தங்கள் உலகங்களுக்குச் சென்றுவிட்டனர். விஷ்ணு மட்டுமே இப்போது வாழ்கிறான்[2].(48) மன்னன் சந்தனு தன் இரண்டாம் மனைவியிடம் {சத்யவதியிடம்} பெரும் பிரகாசம் கொண்டவனும், பலமிக்கவனுமான மன்னன் விசித்ரவீரியனைப் பெறுவான்.(49) விசித்ரவீரியனின் இரண்டு மகன்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான திருதராஷ்டிரன் மற்றும் பாண்டு ஆகிய இருவரும் உலகில் புகழ்பெற்ற இரண்டு மன்னர்களாக இருப்பார்கள்.(50) அவர்களில் பாண்டு, இளமை நிறைந்தவர்களும், அழகியருமான இரண்டு மனைவிகளைக் கொண்டிருப்பான். முதலாமவள் குந்தி என்ற பெயரையும், இரண்டாமவள் மாத்ரி என்ற பெயரையும் கொண்டிருப்பர். அவ்விருவரும் தேவர்களின் மனைவியரைப் போன்றவர்களாக இருப்பர்.(51) திருதராஷ்டிரன், காந்தாரி என்ற பெயரில் ஒரு மனைவியைக் கொள்வான். அவள் தன் கணவனுக்கு உறுதியாகத் தொண்டு செய்ததால் உலகில் புகழ்பெற்றவளாக இருப்பாள்[3].(52) 

[2] ஒப்புநோக்கப்படும் மற்ற இரு பதிப்புகளிலும் "விஷ்ணு மட்டுமே இப்போது வாழ்கிறான்" என்ற வாக்கியம் இல்லை. எட்டாம் வஸுவான பீஷ்மன் மட்டுமே பூமியில் வாழ்வான் என்றிருக்க வேண்டும். அவ்வாறே மற்ற இரு பதிப்புகளிலும் இருக்கிறது.

[3] இங்கே 49 முதல் 52ம் ஸ்லோகம் வரை கடந்த கால வழக்கிலேயே மன்மதநாததத்தரின் உரை இருக்கிறது. தேசிராஜுஹனுமந்தராவ் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் எதிர்கால வழக்கில் இருக்கிறது. எதிர்கால வழக்கே சரியாகத் தோன்றுவதால் நான் அவ்வாறே மாற்றி அமைத்திருக்கிறேன். இதை நோக்க விரும்புவோர் ஆங்கில மொழிபெயர்ப்பைக் காண்க.

இங்கே அவ்வீடு இரண்டு பகை தரப்புகளாகப் பிரியும், அவ்விரு மன்னர்களின் மகன்களுக்கும் இடையில் ஒரு பயங்கரப் பிளவு ஏற்படும்.(53) இந்த மன்னர்களின் உட்பிளவுகளால், அரச குடும்பங்கள் அனைத்தும் அழிக்கப்படும். அண்ட அழிவின் போது ஏற்படுவதைப் போன்ற பேரச்சம் அப்போது மேலோங்கும்.(54) படைகளுடன் கூடிய மன்னர்கள் அனைவரும், ஒருவரையொருவர் கொல்லும்போதும், நகரங்களும் நாடுகளும் தங்களில் குடியிருப்பவர்களை இழக்கும்போதும், பூமி உய்வை அனுபவிக்கும்.(55) துவாபர யுகத்தின் முடிவில் படைகளுடன் கூடிய மன்னர்கள் அனைவரும் ஆயுதங்களால் அழிக்கப்படுவார்கள் என்று புராணங்களில் நான் படித்திருக்கிறேன். அப்போது சங்கரனின் பிறவிக்கூறானவனும் {அவதாரமும்}, நெருப்பாயுதத்துடன் கூடியவனுமான அஸ்வத்தாமன்,  இரவு உறக்கத்தில் நினைவிழந்தவர்களாகப் போரில் எஞ்சிக் கிடக்கும் மனிதகுலத்தையும் எரிப்பான்.(56,57) காலனைப் போன்றவனான அந்தக் கொடுஞ்செயல்புரிபவன் நிறுத்தும்போது, துவாபர யுகம் தொடர்பான இந்தக் கதையும் முடிவுக்கு வரும்.(58) சிவனின் கூறான அஸ்வத்தாமன், மறையும்போது, மஹேஸ்வரனின் யுகமான பயங்கரம் நிறைந்த கலியுகம் தொடங்கும்.(59) இந்த யுகத்தில் மனிதர்கள் பல கொடுமைகளைச் செய்வார்கள், அறத்தின் ஒரு பகுதி மட்டுமே தழைக்கும். வாய்மை மறைந்து, பொய்மை பெருகும்.(60) இந்த யுகத்தில் மனிதர்கள் மஹேஸ்வரனையும், ஸ்கந்தனையும் மட்டுமே வழிபடுவார்கள்; முதியவர்களும், நீண்ட வாழ்நாளைக் கொண்ட மனிதர்களும் பூமியில் இருக்க மாட்டார்கள்.(61) இவ்வுலகில் மன்னர்களுக்கு மிகச்சிறப்பான அழிவு ஏற்படப்போவதை இவ்வாறு நான் விளக்கினேன். எனவே, ஓ! தேவர்களே, உங்களுக்குரிய கூறுகளுடன் {அம்சங்களுடன்} தாமதமில்லாமல் பூமியில் இறங்குவீராக {அவதரிப்பீராக}.(62) குந்தியும், மாத்ரியும் தர்மனின் கூறுகளைக் கருவில் கொள்ளட்டும்[4], காந்தாரி, பிளவுகள் அனைத்தின் கருவியான கலியைக் கருவில் கொள்ளட்டும்.(63) விதியால் தூண்டப்படும் இம்மன்னர்கள் இரண்டு தரப்புகளாக அமைவார்கள், பூமியை அடைய விரும்பும் அவர்கள் போரை நாடுவார்கள்.(64) உலகங்கள் அனைத்தையும் தாங்கும் பூமி தன் மூல இயல்புக்குள் நுழையட்டும். புனிதமானவையும், நன்கறியப்பட்டவையுமான மன்னர்களின் வழிமுறைகள் இவ்வாறே உண்டாக்கப்பட்டன" என்றான் {பிரம்மன்}.(65) பெரும்பாட்டனின் சொற்களைக் கேட்ட பூமி, மன்னர்களுக்கு அழிவை ஏற்பாடு செய்த மகிழ்ச்சியில் காலனுடன் {காலத்தை அறிந்தவளாகச்} சென்றாள்.(66)

[4] தேசிராஜுஹனுமந்தராவின் பதிப்பில், "குந்தி தர்மதேவனின் அம்சத்துடன் ஒரு மகனையும், மாத்ரி சில அவதாரங்களையும் பெறட்டும். அதே போல காந்தாரி, தொல்லையை உண்டாக்கும் கலியைப் பெறுவாள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "குந்தி தர்மன் மற்றும் பிறரின் கூறுகளைப் பெறுவாள், மாத்ரியும் அவ்வாறே பெறுவாள். சச்சரவின் அடித்தளமான கலியின் கூறு காந்தாரியின் கருவறையில் பிறக்கும்" என்றிருக்கிறது.

அதன்பிறகு பிரம்மன், பகைவர்களைக் கொல்வதற்காக தேவர்களை அனுப்பினான். புராதன ரிஷியான நரன், பூமியைத் தாங்கும் (பாம்பு) சேஷன், சனத்குமாரர், சாத்யர்கள், அக்னி, பிற தேவர்கள், வருணன், வசுக்கள், சூரியன், சந்திரன், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், ருத்திரர்கள், விஷ்வர்கள், அஷ்வினி இரட்டையர்கள் ஆகியோர் அனைவரும் தங்கள் தங்கள் கூறுகளில் பூமியில் இறங்குவார்கள்.(67-69) ஏற்கனவே நான் {மஹாபாரதம், ஆதிபர்வம், அம்சாவதார பர்வத்தில்} விளக்கியதைப் போலவே, தேவர்களின் கூறுகளான அந்த முதன்மையான புருஷர்கள், பெண்களின் மூலமாகவோ, அல்லாமலோ தைத்திர்கள் மற்றும் தானவர்களை அழிப்பவர்களாப் பூமியில் பிறவியை அடைந்தனர் {அவதரித்தனர்}. அவர்களில் சிலர் தங்கள் குடும்பங்களை ஆல மரங்களைப் போலப் பெருக்கினர். மேலும் சிலர் வஜ்ரத்தைப் போன்ற கடும் உடல்களைக் கொண்டவர்களாக இருந்தனர்.(70,71) அவர்களில் சிலர் பத்து லக்ஷம் யானைகளின் பலத்தைக் கொண்டவர்களாக இருந்தனர். சிலர் பேராறுகளைப் போன்று பலம் நிறைந்தவர்களாகவும், சிலர் கதாயுதங்கள், பரிகங்கள் மற்றும் பிற ஆயுதங்களைக் கையாள வல்லவர்களாகவும் இருந்தனர்.(72) அவர்கள் அனைவரும் மலைகளின் சிகரங்களை நொறுக்கவல்லவர்களாக இருந்தனர். பரிகங்களைப் போன்ற கரங்களைக் கொண்ட நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மனிதர்கள் விருஷ்ணி குலத்தில் பிறந்தனர்.  தேவர்கள், குரு மற்றும் பாஞ்சால குலங்களில் மன்னர்களாகப் பிறந்தனர். செழிப்பு மிக்க யது குடும்பங்களிலும், பிராமணர்களின் குடும்பங்களிலும், பக்திச் செயல்பாடுகளுடன்  பல வேள்விகளைச் செய்பவர்களாகவும், சாத்திரங்களை நன்கறிந்தவர்களாகவும், வலிமைமிக்க வில்லாளிகளாகவும், வேத சடங்குகள் நோற்பவர்களாகவும், செழிப்பையும், சாதனைகளையும் கொண்டவர்களாகவும் அவர்கள் பிறந்தனர்.(73-75) கோபமடையும்போது, மலைகளையும், ஆறுகளையும், பூமியின் பரப்பையும் அசைக்கக் கூடியவர்களாகவும், வானத்தில் எழக் கூடியவர்களாகவும், பெருங்கடலையே கலங்கடிக்கக்கூடியவர்களாகவும் அவர்கள் இருந்தனர்.(76) 

நிகழ்காலம், கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தை ஆள்பவனும், பெரும்பாட்டனுமான பிரம்மன், தேவர்களுக்கு இவ்வாறு ஆணையிட்டு, உலகங்கள் அனைத்தையும் நாராயணனிடம் கொடுத்துவிட்டு அமைதியை அடைந்தான்.(77) எல்லாம்வல்லவனும், புனிதமான புகழைக் கொண்டவனும், செல்வம் மற்றும் உயிரின் தலைவனும், நாராயணனுமான விஷ்ணு, பூமியில் யயாதியின் வழித்தோன்றலும், நுண்ணறிவுமிக்கவனுமான வஸுதேவனின் குடும்பத்தில் {கிருஷ்ணனாகப்} பிறந்த பிறகு, உயிரினிங்களின் நன்மைக்காக என்ன செய்தான் என்பதை மீண்டும் கேட்பாயாக" என்றார் {வைசம்பாயனர்}.(78,79)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 53ல் உள்ள சுலோகங்கள் : 79
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Friday, 22 May 2020

தேவர் சபைக் கூட்டம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 52

(விஷ்ணும் ப்ரதி ப்ருதிவ்யா வாக்யம்)

The assembly of gods | Harivamsha-Parva-Chapter-52 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : தேவர்களுடன் மேரு மலைக்குச் சென்ற நாராயணன்; விஷ்ணுவிடம் மன்றாடிய பூமாதேவி...

Lord Vishnu and Goddess Earth

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மேகத்தின் நிறத்தைக் கொண்டவனும், செவ்வையற்ற நாளில் அதன் {மேகத்தின்} முழக்கத்தைப் போன்ற குரலைக் கொண்டவனுமான தலைவன், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி, மேகங்களால் மறைக்கப்பட்ட ஒரு மலையைப் போலத் தேவர்களுடன் சென்றான்.(1) அந்நேரத்தில், கருநீல மேனியைக் கொண்ட ஹரி, சந்திரனுடன் கூடிய ஒரு மேகத்தைப் போல ரத்தினங்கள் மற்றும் முத்துக்கள் சூடிய ஒளிரும் சடாமுடியைத் தரித்தான்.(2) மயிர்கள் நிமிர்ந்து நிற்கும் அவனது அகன்ற மார்பில், ஸ்ரீவத்சம் எனும் மாயக்குறி இருந்தது.(3) உலகின் ஆசானான அந்த நித்திய ஹரி, இரண்டு துண்டுகளாக இருந்த மஞ்சள் உடையைச் சூடி, மாலைநேர மேகங்களால் மறைக்கப்பட்ட ஒரு மலையைப் போலத் தெரிந்தான்.(4) அவன், கருடனின் முதுகில் ஏறி செல்லத் தொடங்கியபோது, அவனில் கண்கள் நிலைத்திருந்த தேவர்களும், தாமரையில் பிறந்த தேவனும் (பிரம்மனும்) அவனைப் பின்தொடர்ந்து செல்லத் தொடங்கினர்.(5) ரத்தினங்கள் நிறைந்த அந்த மலையை உடனே அடைந்த அவர்கள், அங்கே தங்கள் இதயங்களால் {தங்கள் இதய விருப்பங்களின்படி} கட்டப்பட்ட சபா மண்டபத்தைக் கண்டனர்.(6)

சுமேரு மலையின் சிகரத்தில் கட்டப்பட்டிருந்த அது, சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் இருந்தது. அதன் தூண்கள் தங்கத்தாலானவையாகவும், அதன் நுழைவாயில்கள் வைரங்களால் அலங்கரிக்கப்பட்டனவாகவும் இருந்தன.(7) மனத்தால் கட்டப்பட்ட அதனில் பல்வேறு ஓவியங்களும், நூற்றுக்கணக்கான தேர்களும் இருந்தன. அதன் சாளரங்கள் ரத்தினமயமான வலைகளால் மறைக்கப்பட்டிருந்தன. அது விரும்பிய எங்கும் செல்லவல்லதாகவும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதாகவும் இருந்தது.(8) அது பலவகைப்பட்ட ரத்தினங்களாலும், பல்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட மலர்களாலும் நிறைந்திருந்தது. தெய்வீக மாயை நிறைந்த அந்தத் தெய்வீக சபா மண்டபம், விஷ்வகர்மனால்[1] கட்டப்பட்டதாகும்.(9) மகிழ்ச்சி நிறந்த மனங்களுடன் கூடிய தேவர்கள் அனைவரும், மங்கலமான அந்தச் சபா மண்டபத்தில் தங்கள் ஒவ்வொருவருக்கும் முறையாக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் சரியாக அமர்ந்தனர்.(10) தேர்கள், இருக்கைகள், பத்ராஸனங்கள்[2], பீடங்கள்[3] குத இருக்கைகள்[4] ஆகியவற்றில் அவர்கள் அமர்ந்தனர்.(11) அதன்பிறகு, பிரம்மனின் ஆணையின் பேரில் அங்கே எவ்வொலியும் எழாத வகையில் பிரபஞ்சனக் காற்றானது, அந்தச் சபா மண்டபத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சுற்றித் திரியத் தொடங்கியது.(12) அந்தத் தேவ சபையில் அனைத்தும் ஒலியற்று அமைதியாக இருந்தபோது, அவலநிலையில் இருந்த பூமியானவள், பரிதாபகரமான முறையில் அவர்களிடம் {தேவர்களிடம்} பேசத் தொடங்கினாள்.(13)

[1] "இவன் தேவர்களின் கட்டடக் கலைஞனாவான் {சிற்பி}" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[2] "மிகச் சிறந்த இருக்கை" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[3] "சீடனுக்காகக் குசப் புற்களால் முறையாக அமைக்கப்பட்ட இருக்கை" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[4] "ஒரு வகை மரத்தாலான இருக்கைகள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

பூமி, "ஓ! தேவா, என்னை நீ ஆதரிப்பாயாக. மொத்த அண்டமும் உன்னால் நிலைத்திருக்கிறது. உயிரினங்களையும், மூவுலகங்களையும் பாதுகாப்பவன் நீயே.(14) உன் ஆற்றலினாலும், பலத்தினாலும் நீ நீடிக்கச் செய்யும் எதையும், உன் உதவியின் மூலம் நான் பின்னர்த் தாங்குகிறேன்.(15) நீ தாங்கும் எதையும் நான் தாங்குகிறேன், மேலும், நீ நீடிக்கச் செய்யாத எதையும் நானும் வைத்துக் கொள்வதில்லை. உன்னால் தாங்கமுடியாத எதுவும் இந்த அண்டத்தில் இல்லை.(16) ஓ! தலைவனான நாராயணா, பல்வேறு யுகங்களில், உலகின் நன்மைக்காகச் சுமையில் இருந்து என்னை நீ விடுவித்திருக்கிறாய்.(17) நான் உன் ஆற்றலால் பீடிக்கப்பட்டு, பாதாள லோகத்திற்குச் சென்றேன். ஓ! தேவர்களில் முதன்மையானவனே, நான் உன் தயவில் இருக்கிறேன். என்னை நீ காப்பாயாக.(18) தீயவர்களான தானவர்கள் மற்றும் ராட்சசர்களால் நான் தாக்கப்பட்டிருக்கிறேன். என் நித்திய மீட்பன் நீயே, உன் தயவிலேயே எப்போதும் நான் இருக்கிறேன்.(19) சுமைகள் அனைத்திலிருந்தும் என்னை விடுவிக்கும் நாராயணனின் புகலிடத்தை நான் நாடாதவரை, பேரச்சத்தின் ஆதிக்கத்திலேயே நான் இருப்பேன் என்பதை நூறு மடங்கு {நூறு வழிகளில்} அறிந்திருக்கிறேன்.(20)

தாமரையில் உதித்த பிரம்மனால் உழவு, வணிகம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான பிற வழிமுறைகள் அமைக்கப்படுவதற்கு முன்னர், நான் பழங்காலத்தில் அளவில் சிறுத்திருந்தேன். மண்ணாலான இருபெரும் அசுரர்கள் என்னைப் பிணைத்துக் கொண்டு முன் பிறந்திருந்தனர்.(21) இந்த உயரான்ம விஷ்ணு பெருங்கடலில் உறங்கிக் கொண்டிருந்தபோது, இவனது காதுகளில் இருந்து உண்டான அவர்கள், இரண்டு மரத்துண்டுகளைப் போல இருந்தனர்.(22) பெரும்பாட்டனால் {பிரம்மனால்} அனுப்பப்பட்ட காற்றானது {வாயு}, உயிர் மூச்சின் வடிவில் அவ்விரு தானவர்களின் உடலுக்குள் நுழைந்தது. அதன்பிறகு அந்தப் பேரசுரர்கள் இருவரும் வானத்தை மறைத்தபடி வளரத் தொடங்கினர்.(23) உயிர் மூச்சுகளைக் கொடையாகப் பெற்ற அவ்விருவரையும் பிரம்மன் கொஞ்சம் கொஞ்சமாகத் தொட்டான். அவர்களில் ஒருவன் மென்மையானவனாகவும், மற்றவன் கடுமையானவனாகவும் தோன்றினான்.(24) நீரில் பிறந்த தலைவனான பிரம்மன், அவர்களுக்குப் பெயர்களைக் கொடுத்தான். மென்மையானவன் மது என்று பெயரிடப்பட்டான், கடுமையாக இருந்த மற்றவன் கைடபன் என்று அழைக்கப்பட்டான்.(25)

அவ்விரு தைத்தியர்கள் இவ்வாறு பெயரிடப்பட்டபோது, தங்கள் பலத்திலும், அச்சமற்ற நிலையிலும் செருக்கு மிகுந்தவர்களாக ஒரே நீர்ப்பரப்பாக மாற்றப்பட்ட உலகில் போரை நாடித் திரியத் தொடங்கினர்.(26) அனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மன், இவ்வாறு அவர்கள் அணுகுவதைக் கண்டு, அண்டப் பெருங்கடலான நீரில் மறைந்து போனான்.(27) நான்கு முகங்களைக் கொண்ட பெரும்பாட்டன் {பிரம்மன்}, தாமரை உந்தி {பத்மநாபனான} விஷ்ணுவின் உந்தியில் உதித்த தாமரையில் கமுக்கமாக வாழ விரும்பினான்.(28) நாராயணனின் பேரர்களான மதுவும், கைடபனும் இவ்வாறு நீரில் நீண்ட பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தபோதும் கிஞ்சிற்றும் கலக்கமடையாதிருந்தனர்.(29) பல ஆண்டுகள் கழிந்த பிறகு, மது மற்றும் கைடபன் என்ற அவ்விரு அசுரர்கள், பிரம்மன் இருந்த இடத்திற்கு வந்தனர்.(30)

பிரம்மன், பயங்கரமானவர்களும், பேருடல் படைத்தவர்களும், அடக்கப்பட முடியாதவர்களுமான அவ்விரு தானவர்களையும் கண்டு, {தான் இருந்த} தாமரையின் தண்டால் நாராயணனைத் தொந்தரவு செய்தான். பெரும் பிரகாசம் கொண்டவனும், தாமரை உந்தி கொண்டவனுமான அந்தத் தேவன் இதனால் தன் படுக்கையில் இருந்து எழுந்தான்.(31) அந்த நேரத்தில் மூவுலகங்களும் நீரால் மறைக்கப்பட்டிருந்ததால், அந்த நீர்ப்பரப்பில் நாராயணனுக்கும், மதுகைடபர்களுக்கும் இடையில் ஒரு பயங்கரப் போர் நடைபெற்றது.(32) அந்தப் பயங்கரப்போர் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்தது, அந்தப் போரினால் அந்தத் தானவர்கள் இருவரும் கிஞ்சிற்றும் களைப்படையவில்லை.(33) நீண்ட காலத்திற்குப் பிறகு, போரில் பயங்கரர்களான அவ்விரு தானவர்களும், இதய மகிழ்ச்சியுடம் தலைவன் நாராயணனிடம், "உன்னுடனான போரில் நாங்கள் பெரும் நிறைவடைந்தோம். பெரும் விருப்பத்திற்குரிய எங்கள் காலன் {மரணம்} நீயே. நீர் நிறையாத பூமியில் ஓரிடத்தில் எங்களுக்கு அழிவைக் கொண்டு வருவாயாக.(34,35) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, உன்னால் கொல்லப்பட்டு, போரில் எங்களை வீழ்த்தும் உனக்கே நாங்கள் மகன்களாவோம்" என்றனர்[5].(36)

[5] தேசிராஜு ஹனுமந்தராவின் பதிப்பில், "நீ எங்களுடன் செய்த போரில் நாங்கள் நிறைவடைகிறோம், சூழ்நிலை அமைந்தால் எங்களுக்குக் காலனாகப் போகும் உன்னைப் பாராட்டுகிறோம். ஆனால் நாங்கள் எங்களைக் கொல்பவர்களின் மகனாவோம் என முன்பே விதிக்கப்பட்டிருக்கிறோம். எனவே, பூமியில் நீரில்லாத ஓரிடத்தில் எங்களை நீ வீழ்த்தப் பரிந்துரைக்கிறோம். அதன் மூலம் நாங்கள் உன் மகன்களாக மீண்டும் பிறப்போம்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஓ! தேவர்களில் உயர்ந்தவனே, உன்னுடனான இந்தப் போரால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இந்தப் போரில் உன் கைகளால் எங்களுக்கு மரணம் ஏற்படும் என்பதில் செருக்குக் கொள்கிறோம். எனினும், நீரில்லாத ஓரிடத்தில் எங்களைக் கொல்வாயாக. நாங்கள் கொல்லப்பட்டதும், நாங்கள் உன் மகன்களாப் பிறக்க வேண்டும். போரில் எங்களை ஒருவன் வீழ்த்தினால், நாங்கள் அவனது மகன்களாக வேண்டும்" என்றிருக்கிறது.

போரில் நாராயணன், தன் இரு கைகளிலும் அவ்விரு அசுரர்களையும் பற்றி அவர்களைத் தாக்கினான். அதன் பேரில் மதுவும், கைடபனும் மரணத்தைச் சந்தித்தனர்.(37) இவ்வாறு கொல்லப்பட்ட இரு தைத்தியர்களும் நீரால் நிறைந்தனர். அவர்கள் இருவரின் உடல்களும் ஒன்றாக இணைந்தன. பிறகு, நீரின் அலைகளால் கடையப்பட்ட அவர்கள் கொழுப்பை வெளியிடத் தொடங்கினர். நீர் அந்தக் கொழுப்பால் மறைக்கப்பட்டது. ஓ! பாவமற்றவனே, அதன்பின்னர் அவர்கள் மறைந்தனர், தலைவன் நாராயணன், தன் படைப்புத் தொழிலில் மீண்டும் ஈடுபட்டான்.(38-39) மது மற்றும் கைடபன் என்ற அசுரர்களின் கொழுப்பால் நான் மறைக்கப்பட்டதால் மேதினி என்ற பெயரைப் பெற்றேன். இந்தத் தாமரை உந்தி தேவனின் சக்தியால் நான் நித்திய அண்டமானேன்[6].(40)

[6] தேசிராஜுஹனுமந்தராவின் பதிப்பில், "அப்போது நாராயணன், நீரற்ற தளமான தன் உள்ளங்கைகளெனும் கிண்ணத்திற்குள் அவர்களைத் தட்டினான்; தன் கக்கங்களுக்குள் வைத்து மது மற்றும் கைடபன் என்ற அவ்விரு அசுரர்களையும் தாக்கினான்; அவர்கள் நசுக்கிக் கொன்று, அவர்களின் எச்சங்களைத் தன்னைச் சுற்றி இருந்த நீருக்குள் வீசி எறிந்தான். இவ்வாறு கொல்லப்பட்டு, நீரில் வீசப்பட்ட அவ்விரு அசுரர்களின் சடலங்களும் நீரில் மிதந்து ஒன்றாக இணைந்தன, பிறகு அலைகளால் தாக்கப்பட்ட அந்த உடலானது தன் கொழுப்பை நீரில் வெளியிட்டு, நீரின் மொத்த பரப்பிலும் அந்தக் கொழுப்பின் நுரை பரவியதால் அவ்விரு அசுரர்களின் உடல்களும் மறைந்தன. ஓ! பாவமற்ற ஜனமேஜயா, அதன்பிறகு, நாராயணன், படைப்புத் தொழிலில் மீண்டும் ஈடுபட்டான். அந்த அசுரர்களின் கொழுப்பில் கொஞ்சத்தைத் திரட்டி என்றென்றும் நான் கடினப்படுத்தப்பட்டேன். அதே வேளையில் எஞ்சிய கொழுப்பானது மறைந்து போன அந்த அசுரர்களுடன் மறைந்தே போனது. அசுரர்களின் கொழுப்பான மேதஸ் என்னை மூடியதன் விளைவால் நான் மேதினி என்ற பெயரைப் பெற்றேன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அந்தப் போரில் தைத்தியர்களைத் தன் கரங்களில் பற்றிய அவன் {நீரற்ற இடமான} அங்கேயே அவர்களை நசுக்கினான். இவ்வாறு மதுவும், கைடபனும் கொல்லப்பட்டனர். அவன் அவர்களது உடலை நீரில் வீசினான். நீரின் அலைகளில் வீசப்பட்டதும் அந்தத் தைத்தியர்களின் உடல்கள் ஒன்றாகி, கொழுப்பை வெளியிடும் வகையில் கடையப்பட்டன. அந்தக் கொழுப்பு நீரை மறைத்ததும் உடல்கள் மறைந்தன. இவ்வாறு சிறப்புமிக்க நாராயணன், குடிமக்களைப் படைக்கத் தொடங்கினான். அந்தத் தைத்தியர்களின் கொழுப்பால் படைக்கப்பட்டதாலேயே நான் மேதினி என்று அழைக்கப்பட்டு வருகிறேன்" என்றிருக்கிறது.

மீண்டும் அந்தத் தலைவன், மார்க்கண்டேய முனியின் முன்னிலையில் ஒரு பன்றியின் {வராகத்தின்} வடிவை ஏற்றுத் தன் தந்தம் ஒன்றால் நீரில் இருந்து என்னை உயர்த்தினான்.(41) மீண்டும் மற்றொரு நேரம் கனல்தெறிக்கும் உங்கள் முன்னிலையில் பலம்நிறைந்தவனான விஷ்ணு, தைத்திய தலைவன் பலியிடம் இருந்து என்னை விடுவித்தான்.(42) இப்போது ஒடுக்கப்படுகிறவளும், பாதுகாக்க யாரும் அற்றவளுமான நான், தன் பற்றார்வங்களில் எப்போதும் விருப்பம் கொண்டவனும், அண்டத்தின் தலைவனுமான கதாதரனின் புகலிடத்தை நாடுகிறேன்.(43) பொன்னுக்குக் காரணம் நெருப்பு {அக்னி}, வீண்மீன்களுக்குக் காரணம் சூரியன், அவ்வாறே எனக்கு ஆதரவு நாராயணன் ஆவான்.(44) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த அண்டத்தை நான் தனியாகவே தாங்குகிறேன். என்னால் தாங்கப்படும் இவை அனைத்தையும் கதாதரன் ஆதரிக்கிறான்.(45)

என் சுமையில் இருந்து என்னை விடுவிக்க விரும்பிய ஜமதக்னியின் மகன் ராமர் {பரசுராமர்}, என்னை இருபத்தோரு முறை க்ஷத்திரியர்கள் அற்றவளாகச் செய்தார்.(46) பிருகுவின் மகனான ராமர், ஒரு வெற்றித்தூணை எழுப்பி, தன் தந்தையின் ஈமச் சடங்கில் அரசக் குருதியைக் கொண்டு என்னைத் தணிவடையச் செய்து, பிறகு கசியபரிடம் தெரிவித்தார்.(47) கொழுப்பு, இறைச்சி, எலும்புகளில் இருந்து வெளிவரும் கெட்ட நாற்றத்தால் நிறைந்தவளாக, க்ஷத்திரியர்களின் குருதியால் நிரம்பியவளாக, மாதவிடாய் காலத்தில் இருக்கும் ஓர் இளங்காரிகையைப் போலக் கசியபரின் முன்பு நான் தோன்றினேன்.(48) அப்போது பிராமண முனிவரான கசியபர் என்னிடம், "ஓ! பூமியே, நீ ஏன் இவ்வளவு மனச்சோர்வுடன் இருக்கிறாய்? ஒரு வீரனின் மனைவியாக இருந்து கொண்டு, நீ ஏன் அவமான நோன்பை நோற்கிறாய்?" என்று கேட்டார்[7].(49) அதற்கு நான் உலகின் குடிமுதல்வரான கசியபரிடம், "ஓ! பிராமணரே, பெரும்பார்க்கவர் {பரசுராமர்} என் கணவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டார்.(50) ஆயுதங்களில் வாழும் பலமிக்க க்ஷத்திரியர்கள் அனைவரையும் நான் இழந்துவிட்டேன், நான் என் கணவனை இழந்துவிட்டேன். நான் என்னில் வெறுமையான நகரங்களைச் சுமக்க விரும்பவில்லை. எனவே, ஓ! மதிப்புக்குரிய ஐயா, கிராமங்கள் மற்றும் நகரங்களால் நிறைந்திருப்பவளும், கடல்களால் மாலையிடப்பட்டவளுமான என்னைப் பாதுகாக்க வல்ல மன்னனை எனக்கு அளிப்பீராக" என்று கேட்டேன்.

[7] தேசிராஜுஹனுமந்தராவின் பதிப்பில், "பூமிப்பெண்ணே, உன் முகம் எதனால் தாழ்ந்திருக்கிறது. நீ வீரர்களின் மனைவித்தன்மை என்ற நோன்பு {வீரபத்னீவிரதத்தை} மேற்கொண்டாலும் மனந்தளர்ந்திருக்கிறாயே" என்று கேட்பதாக இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஏன் உன் முகம் தாழ்ந்திருக்கிறது? துணிச்சல்மிக்கவர்களின் மனைவியாக இருக்கும் நோன்பை நீ மேற்கொள்கிறாய். ஒரு வீரனுக்கு மனைவியாக இருக்கும் அந்நோன்பைப் பின்பற்றுவாயாக" என்றிருக்கிறது.

என் சொற்களைக் கேட்ட எல்லாம்வல்ல தலைவன் {கசியபர்}, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்னார். அதன்பிறகு மனிதர்களின் மன்னனான மனுவை எனக்குக் கொடுத்தார்.(53) அதன்பிறகு மனுவில் இருந்து தோன்றியவர்களும், தேவர்களைப் போன்றவர்களுமான இக்ஷ்வாகு குல மன்னர்களை அடைந்த நான், சக்திமிக்கக் காலத்தின் ஆதிக்கத்தின் கீழ் ஒரு மன்னனின் கைகளில் இருந்து மற்றொரு மன்னனின் கைகளுக்குக் கொடுக்கப்பட்டேன்.(54) அந்தத் தலைவன் {கசியபர்}, மனிதர்களின் மன்னனான நுண்ணறிவுமிக்க மனுவை எனக்குக் கொடுத்தபோது, பெரும் முனிவர்களின் குடும்பங்களில் பிறந்த பல மன்னர்கள் என்னை ஆட்சி செய்தனர்.(55) வீர க்ஷத்திரியர்கள் பலர் என்னை வென்று தேவலோகம் சென்றனர். காலத்தின் ஆதிக்கத்தின் கீழ் அவர்கள் என்னில் மறைந்தனர்.(56) போரில் எப்போதும் வெல்பவர்களான சக்திவாய்ந்த க்ஷத்திரியர்கள், என் நிமித்தமாக இவ்வுலகில் ஒருவரோடொருவர் போரிட்டனர், இன்னும் போரிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.(57) உன்னால் அனுப்பப்பட்ட விதியின் எல்லை இதுதான். உனக்கு என்னிடம் பரிவிரக்கம் இருந்தால், என் சுமையில் இருந்து என்னை விடுவிக்க நீ விரும்பினால், உலகின் நன்மைக்காகவும், மன்னர்களின் அழிவுக்காகவும் ஒரு போரை ஏற்பாடு செய்வாயாக. எழில்மிகுந்த சக்கரதரனே எனக்குப் பாதுகாப்பை அருள்வாயாக.(58,59) சுமையால் ஒடுக்கப்பட்டு வந்த என்னை அதலிருந்து விடுவிக்க விரும்பினால், நாராயணனே எனக்கு ஆணையிடட்டும்" என்றாள் {பூமாதேவி}" என்றார் {வைசம்பாயனர்}.(60)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 52ல் உள்ள சுலோகங்கள் : 60
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்