Thursday, 30 April 2020

சியமந்தக மணி | ஹரிவம்ச பர்வம் பகுதி – 38

(பஜமான வம்சம் - ஸ்யமந்தகோபாக்யானம்)

An account of Swyamantaka Jewel | Harivamsa-Parva-Chapter-38 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பஜமானனின் வம்சம்; குரோஷ்டுவின் பேரர்களான பிரஸேனன் மற்றும் ஸத்ராஜித்; சூரியனிடம் சியமந்தக மணியை அடைந்த பிரஸேனன்; சியமந்த மணியை விரும்பிய கிருஷ்ணன்; சிங்கத்தால் கொல்லப்பட்ட பிரஸேனன்; ஜாம்பவானை வீழ்த்தி, சியமந்தக மணியை அடைந்த கிருஷ்ணன்; ஸத்ராஜித்தின் குடும்பம்; இரண்டாம் விருஷ்ணியின் வம்சம்...

Jambavan makes over Syamantaka jewel and Jambavati to krishna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "{சாத்வதனின் ஐந்தாவது மகன் அந்தகன். அந்த அந்தகனின் இரண்டாம் மகனான} பஜமானனின் மகன், தேர்வீரர்களில் முதன்மையான விதூரதன் ஆவான். வீரமிக்க ராஜாதி தேவன் விதூரதனின் மகனாவான்.(1) பெரும்பலமிக்கவர்களான தத்தன், அதிதத்தன், சோணாஷ்வன், ஸ்வேதவாஹனன், சமி, தண்டசர்மன், தண்டசத்ரு மற்றும் சத்ருஜித் ஆகியோர் ராஜாதிதேவனின் மகன்களாவர். அவர்களுக்குச் சிரவணை மற்றும் சிரவிஷ்டை என இரு சகோதரிகளும் இருந்தனர்.(2-3) {அந்தகனின் மூன்றாம் மகனான} சமியின் மகன் ப்ரதிக்ஷத்ரனும், அவனுடைய {பிரதிக்ஷத்ரனின்} மகன் ஸ்வயம்போஜனும், அவனுடைய {ஸ்வயம்போஜனின்} மகன் ஹ்ருதிகனும் ஆவர்.(4) அவனுடைய {ஹ்ருதிகளின்} மகன்கள் பேராற்றல் படைத்தவர்களாக இருந்தனர். அவர்களில் மூத்தவன் கிருதவர்மனும், இரண்டாமவன் சததன்வனும் ஆவர்.(5) தெய்வீக முனிவரான சியவனர் அவனுக்காக {ஹ்ருதிகனுக்காக மேலும்} நான்கு மகன்களையும், இரு மகள்களையும் பெற்றார். மகன்கள் பீஷகன், வைதரணன், ஸுதாந்தன், விதாந்தன் ஆகியோராவர். மகள்கள் காமதை மற்றும் காமதந்திகை ஆகியோராவர்.(6)



{சாத்வதனின் ஐந்தாவது மகன் அந்தகனின் நான்காம் மகனான} கம்பலபர்ஹிஷன், கல்விமானும், தேவவான் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனைக் கொண்டிருந்தான், அவனுக்கு {தேவவானுக்கு} அஸமௌஜன், வீரன் மற்றும் நாஸமௌஜன் என்ற மூன்று மகன்கள் இருந்தனர்.(7) அஸமௌஜனுக்குப் பிள்ளைகள் இல்லை, எனவே, அந்தகன், {குகுரன் முதலிய நான்கு மகன்களைத் தவிர்த்து மேலும் பிறந்த} ஸுதம்ஷ்ட்ரன், ஸுபாஹு {சாருரூபன்}, கிருஷ்ணன் என்ற பெயர்களைக் கொண்ட தன்னுடைய மூன்று மகன்களையும் அவனுக்கு {அஸமௌஜனுக்கு} அளித்தான்.(8) இவர்களும், அந்தகக் குடும்பத்தைச் சாரந்த இன்னும் பலரையும் நான் உனக்கு விளக்கிச் சொன்னேன். இந்தக் குலத்தைத் குறித்து நாள்தோறும் தியானிக்கும் எவனும் தன் குடும்பத்தைப் பெருக்குவான்.

{யதுவின் மூன்றாம் மகனான குரோஷ்டுவுக்கு}
குரோஷ்டுவுக்குக் காந்தாரி மற்றும் மாத்ரி என்ற இரு மனைவியர் இருந்தனர்.(9-10) காந்தாரி, பெருஞ்சக்தி கொண்ட அனமித்ரனைப் பெற்றாள், மாத்ரி, யுதாஜித் மற்றும் தேவமீடுஷன் ஆகியோரைப் பெற்றாள்.(11)

அனமித்ரன், எப்போதும் தடுக்கப்பட முடியாதவனாகவும், பகைவரை ஒடுக்குவனாகவும் இருந்தான். அவனுடைய {அனமித்ரனின்} மகன் நிக்னனும்[1], அவனுடைய {நிக்னனின்} மகன்கள் பகைவரின் படைகளை ஒடுக்குபவர்களான பிரஸேனன் {பிரஸேனஜித்}, மற்றும் ஸத்ராஜித் என்ற இருவரும் ஆவர். துவாரகை நகரத்தில் வாழ்ந்து வந்த பிரஸேனன், சியமந்தகம் என்றழைக்கப்படுவதும், தெய்வீகமானதும், ஒப்பற்றதுமான மணியைப் பெருங்கடலில் அடைந்தான். அவனுக்கு, உயிரைப் போன்ற மதிப்புமிக்க நண்பனாகச் சூரியன் இருந்தான்.(12-14)

[1] ஹரிவம்ச பர்வம் 34:28-32ல் "குரோஷ்டுவின் மகனான அனமித்ரனிடம் ஸினி/சினி பிறந்தான்.(28,29) அவனுடைய மகன் ஸத்யகனும், அவனுடைய {ஸத்யகனின்} மகன் ஸாத்யகி என்கிற யுயுதானனும் ஆவர். யுயுதானனின் {ஸாத்யகியின்} மகன் அஸங்கனும், அவனுடைய {அஸங்கனின்} மகன் பூமியும் ஆவர். அவனுடைய {பூமியின்} மகன் யுகந்தரனோடு அந்தக் குலத்தின் வரிசை முடிந்து" என்றிருக்கிறது.

ஒரு காலத்தில், தேர்வீரர்களில் முதன்மையான அவன் {பிரஸேனன்}, இரவு கடந்ததும், நீராடுவதற்காகவும், சூரியனை வழிபடுவதற்காகவும் தன் தேரில் ஏறி கடற்கரைக்குச் சென்றான்.(15) அவன், கதிர்களின் தேவனை வழிபட்டபோது, புலப்படாத தலைவனான விவஸ்வான் பிரகாசத்துடன் அவன் முன்பு தோன்றினான்.(16) அதன் பேரில் அந்த மன்னன் {பிரஸேனன்}, தன் முன்பிருந்த தலைவன் விபாகரனிடம் {சூரியனிடம்}, "ஓ! கதிர்களின் தலைவா, நான் எப்போதும் வானத்தில் உன்னைக் காணும் பிரகாசமிக்க வட்ட வடிவிலேயே இப்போதும் காண்கிறேன். நீ என் முன்பு ஒரு நண்பனாகத் தோன்றினாலும், எந்தச் சிறப்பான உதவியும் எனக்குக் கிடைக்கவில்லை" என்று கேட்டான்.(17,18)

இதைக் கேட்ட அந்தத் தலைவன் {சூரியன்}, தன் கழுத்தில் இருந்த ஒப்பற்ற மணியான சியமந்தகத்தை எடுத்து அவனிடம் கொடுத்தான்.(19) அதன்பேரில் மன்னன் {பிரஸேனன்}, அவனை {சூரியனை} அவனுடைய சொந்த வடிவில் கண்டான். அவனைக் கண்டதில் நிறைவடைந்தவன் சிறிது நேரம் அவனுடன் உரையாடிக் கொண்டிருந்தான்.(20) விவஸ்வான் {சூரியன்} திரும்பிச் செல்ல எத்தனித்தபோது, அந்த மன்னன் {பிரஸேனன்} மீண்டும் அவனிடம் {சூரியனிடம்}, "ஓ! தலைவா, உலகங்களுக்கு ஒளியூட்ட நீ எப்போதும் பயன்படுத்தும் இந்த மணியை எனக்கு அளிப்பதே உனக்குத் தகும்" என்று கேட்டான்.(21)

அதன்பேரில், பாஸ்கரன் அந்தச் சியமந்தக மணியை அவனிடம் {பிரஸேனனிடம்} கொடுத்தான். அந்த மன்னன் {பிரஸேனன்} அதை எடுத்துக் கொண்டு தன் நகருக்குச் சென்றான்.(22) சூரியன் செல்வதாக நினைத்து மக்கள் அனைவரும் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர். அந்த மன்னன் குடிமக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் நிறைத்தபடியே தன் அந்தப்புரத்திற்குள் நுழைந்தான்.(23) பெரும் மகிழ்ச்சியுடன் கூடிய மன்னன் சத்ரஜித், தெய்வீகமானதும், ஒப்பற்றதுமான சியமந்தக மணியைத் தன்னுடன் பிறந்த பிரஸேனனுக்கு அளித்தான்[2].(24) அந்த மணி, விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் அரண்மனையில் தங்கத்தை உண்டாக்கியது. (அதன் சக்தியால்) மழையின் தேவன் உரிய பருவத்தில் மழையைப் பொழிந்தான், நோய் குறித்த அச்சமேதும் அங்கிருக்கவில்லை.(25)

[2] தேசிராஜுஹனுந்தராவின் பதிப்பில், சூரியனிடம் இருந்து சியமந்தக மணியைப் பெறுவது சத்ரஜித் என்றே இருக்கிறது. அப்படி இருந்தால் இந்த 24ம் ஸ்லோகம் சரியானதாக இருக்கும். ஆனால் இங்கே சூரியனிடம் இருந்து அம்மணியைப் பெறுவது பிரஸேனன் என்றிருக்கும்போது, மீண்டும் அதை ஸத்ராஜித்திடம் இருந்து பெறுவது முரணாகத் தெரிகிறது.

ஒப்பற்ற மணியான சியமந்தகத்தைப் பிரஸேனனிடம் இருந்து அடைய வேண்டும் என்ற விருப்பத்தைக் கோவிந்தன் {கிருஷ்ணன்} வளர்த்து வந்தான். இயன்றவனெனினும் அவன் அதைப் பலவந்தமாக அபகரிக்கவோ, களவாடவோ செய்யவில்லை.(26) ஒரு காலத்தில் பிரஸேனன் அந்த மணியால் அலங்கரிக்கப்பட்டவனாக வேட்டைக்குச் சென்றான். காட்டுச் சிங்கம் ஒன்று அந்தச் சியமந்தகத்துக்காக அவனை {பிரஸேனனைக்} கொன்றது.(27) பெருஞ்சக்தி மிக்கக் கரடியொன்று, {அவ்வாறு பிரஸேனனைக் கொன்றுவிட்டுத்} தப்பிச் சென்ற அந்தச் சிங்கத்தைக் கொன்று, அந்த மணியை எடுத்துக் கொண்டு தன் குகைக்குள் நுழைந்தது.(28)

விருஷ்ணி மற்றும் அந்தகக் குடும்பங்களைச் சேரந்தவர்கள் அனைவரும், அந்த {சியமந்தக} மணியின் மீது கிருஷ்ணன் கொண்டிருந்த ஆசையை அறிந்ததால், பிரஸேனன் இறந்ததைக் கேட்டதும், அவன் {கிருஷ்ணன்} மீது ஐயங்கொண்டனர்.(29) அற ஆன்மாவான கிருஷ்ணன், அவர்களது ஐயத்தை அறிந்து, தன்னை அப்பாவியாகக் கருதி, "நான் அந்த மணியைக் கொண்டு வருவேன்" என்று தீர்மானித்து, பிரஸேனன் வேட்டையாடச் சென்ற காட்டுக்குப் புறப்பட்டான். பெரும் கிருஷ்ணன், தன் தொண்டர்களுடன் அவனுடைய {பிரஸேனனின்} காலடித் தடங்களைப் பின்பற்றிச் சென்று, ரிக்ஷவான் மற்றும் விந்திய மலைகளைச் சூறையாடிக் களைப்பால் பீடிக்கப்பட்டான். பிறகு அவன் பிரஸேனனும் அவனுடைய குதிரையும் அங்கே கொல்லப்பட்டிருப்பதைக் கண்டாலும், அந்த மணியைக் கண்டானில்லை. அப்போது அவன் பிரஸேனனின் அருகில் கரடியால் கொல்லப்பட்ட சிங்கத்தைக் கண்டான். அங்கே இருந்த பாதச்சுவடுகளைக் கொண்டு ஊகம் செய்யப்பட்டது. அவன், அவற்றை {அந்தப் பாதச்சுவடுகளைப்} பின்பற்றி, தப்பி ஓடிய கரடியின் குகையைத் தேடிச் சென்றான்.(30-34)

{விந்திய மலையில்} அந்தக் கரடியின் பெருங்குகையில் ஒரு பெண்ணின் குரலை அவன் கேட்டான். {கரடியான} ஜாம்பவானின் மகனிடம் ஒரு செவிலி, "அழாதே" என்று சொல்லி அந்த மணியைக் கொண்டு அவனுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள்.(35)

அந்தச் செவிலி {தாத்ரி}, "பிரஸேனனைச் சிங்கமானவன் கொன்றான், அவனும் {அந்த சிங்கமும்} ஜாம்பவானால் கொல்லப்பட்டான். எனவே, ஓ! என் நல்ல பிள்ளாய், அழாதே. இந்தச் சியமந்தகம் உனக்குரியதே" என்றாள்.(36)

அதன் பேரில் கிருஷ்ணன், பலதேவனுடன் {பலராமனுடன்} கூடிய யாதவர்கள் அனைவரையும் குகையின் வாயிலில் விட்டுவிட்டு, அழகிய வடிவுடனும், குரலுடனும், சாரங்க வில்லுடனும் அமைதியாகக் குகைக்குள் நுழைந்தான். பலவந்தமாக அங்கே நுழைந்த அந்தத் தலைவன் {கிருஷ்ணன், ஜாம்பவான் என்ற அந்தக்} கரடியைக் கண்டான்.(37,38) கோவிந்தன் ஜாம்பவானுடன் அந்தக் குகைக்குள் இருபத்தோரு நாட்கள் மற்போர் புரிந்தான்.(39) கிருஷ்ணன் குகைக்குள் நுழைந்தபிறகு, பலதேவன் தலைமையிலான யாதவர்கள் துவாரகைக்குத் திரும்பிச் சென்று, அவன் {கிருஷ்ணன்} கொல்லப்பட்டதாக அறிவித்தனர்.(40)

பெருஞ்சக்திமிக்க ஜாம்பவானை வீழ்த்தியவன் {கிருஷ்ணன்}, ஜாம்பவதி என்ற பெயரைக் கண்டவளான அந்தக் கரடிகளின் மன்னனுடைய {ஜாம்பவானுடைய} அன்புக்குரிய மகளை மணந்து கொண்டு, (குற்றச்சாட்டில் இருந்து) தன்னை விடுவித்துக் கொள்ள அந்த {சியமந்தக} மணியையும் எடுத்துக் கொண்டான்.(41) பிறகு அவன் {கிருஷ்ணன்}, ரிக்ஷர்களின் மன்னனை {ஜாம்பவானை} வணங்கிவிட்டு, அந்தக் குகையை விட்டு வெளியே வந்தான். பேரழகுடன் கூடிய அவன் துவாரகா நகரத்திற்குத் திரும்பிச் சென்றான்.(42) அந்தச் சியமந்தக மணியைக் கொண்டு வந்து, {சாத்வதனின் வாரிசுகள் நிறைந்த சபையில்} சாத்வதர்களின் சபையில் இருந்த ஸத்ராஜித்திடம் கொடுத்துவிட்டு, தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து அவன் {கிருஷ்ணன்} விடுபட்டான்.(43) பகைவரைக் கொல்பவனும், தவறான குற்றஞ்சாட்டுக்கு உள்ளானவனுமான கிருஷ்ணன். இவ்வாறே அந்தச் சியமந்தக மணியை அடைந்து, {அடைந்த மணியை ஸத்ராஜித்திடமே திரும்பக் கொடுத்து, மணிமீது ஆசை கொண்டவன் என்ற}  குற்றத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டான்.(44) {இந்நிகழ்வால் ஸத்ராஜித்தின் மகள்களான ஸத்யபாமா, விரதினி, பிரஸ்வாபினி ஆகியோரை கிருஷ்ணன் மணந்தான்}

ஸத்ராஜித்துக்குப் பத்து மனைவிகள் இருந்தனர், அவர்கள் நூறு மகன்களைப் பெற்றனர். அவர்களில் மூவர் நன்கறியப்பட்டவர்களாக இருந்தனர். மூத்தவன் பங்ககாரனும், இரண்டாமவன் வாதபதியும், மூன்றாமவன் வியத்ஸ்நாதனும் {உபஸ்வாவானும்} ஆவர். ஓ! மன்னா {அவனுக்கு} அனைத்துப் பகுதிகளில் நன்கறியப்பட்ட மூன்று மகள்களும் இருந்தனர்.(45,46) அவர்கள், பெண்களில் மிகச் சிறந்த ஸத்யபாமா, உறுதியான நோன்புகளைக் கொண்ட விரதினி, பிரஸ்வாபினி ஆகியோராவர். ஸத்ராஜித் அவர்கள் அனைவரையும் கிருஷ்ணனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான்.(47) பங்ககாரனுக்கு மனிதர்களில் முதன்மையானவர்களான ஸிபாக்ஷன் {ஸமாக்சன்} மற்றும் நரேயன் {நரேயு} என்ற இரு மகன்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் சிறப்புமிக்கவர்களாகவும், தங்கள் அழகுக்காக நன்கறியப்பட்டவர்களாகவும் இருந்தனர்.(48)

{யதுவின் மூன்றாம் மகனான குரோஷ்டுவின் இரண்டாம் மனைவி மாத்ரி} மாத்ரியின் {முதல்} மகனான யுதாஜித்துக்கு, விருஷ்ணி என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். அவனுக்கு {விருஷ்ணிக்கு}, சுவபல்கன் மற்றும் சித்ரகன் என்ற இரு மகன்கள் இருந்தனர்.(49)

{யது > 3குரோஷ்டு(மாத்ரி) > யுதாஜித் > விருஷ்ணி > 1சுவல்கன்...}
சுவபல்கன், காசி மன்னனின் மகளைத் திருமணம் செய்து கொண்டான். அவளுடைய பெயர் காந்தினி ஆகும். அவளுடைய தந்தை {காசி மன்னன்} நாள்தோறும் ஒரு பசுவைக் கொடையளித்தான்.(50) அவள் {காந்தினி}, விருந்தினர்களை மிக விரும்புபவனும், அபரிமிதமான கொடைகளுடன் வேள்விகளைச் செய்பவனான அக்ரூரன், உபாஸஞ்ஜன் {உபாஸங்கன்}, மங்கு, மிருதுரன், அரிமேஜயன், கிரிக்ஷிபன், உபிக்ஷன் {உபேக்ஷன்}, சத்ருஹன், அரிமர்தனன், தர்மப்ருத், யதிதர்மன், கிருத்ரன், போஜன், அந்தகன், ஸுபாஹு, பிரதிபாஹு ஆகியோரையும், ஸுந்தரி {வராங்கனை} என்ற பெயரில் ஓர் அழகிய மகளையும் பெற்றாள். அந்த அழகிய பெண் {ஸுந்தரி}, அழகுடனும், இளமையுடனும் கூடியவனும், அனைவருக்கும் இனிமையானவனுமான விருதாஷ்வனின் {ஸாம்பனின்} ராணியாவாள்[3].(51-54)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "காந்தினி, வராங்கனை என்ற அழகான பெண்ணையும் பெற்றாள் (அல்லது சுந்தரி என்ற அழைக்கப்படும் வளைவு நெளிவுகளுடன் கூடிய ஒரு பெண்ணைப் பெற்றாள்). அவள் சாம்பனின் புகழ்பெற்ற மனைவியாவாள். சாம்பனும், சுந்தரியும், அழகும், இளமையும் கொண்டவளும்,அனைவருக்கும் இனியவளும், வஸுந்தரை என்று அழைக்கப்படுபவளுமான ஒரு மகளைப் பெற்றனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "வராங்கனை என்ற பெயரைக் கொண்ட ஓர் அழகிய மகள் இருந்தாள். அவள் சாம்பனின் புகழ்பெற்ற ராணியாவாள், அவளுடைய மகள், அழகும், இளமையும் கொண்டவளும், அனைத்து உயிரினங்களுக்கும் இனியவளுமான வஸுந்தரையாவாள்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் ஸாம்பனின் மகள் வஸுந்தரை தவிர்க்கப்பட்டிருக்கிறாள். ஸாம்பனின் பெயரும் மாற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஓ! குருவின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, {யது > 3குரோஷ்டு(மாத்ரி) > 1யுதாஜித் > விருஷ்ணி > 1சுவல்கன்( > 1அக்ரூரன்...} அக்ரூரன், உக்ரஸேனியிடம், தேவர்களைப் போன்ற பலமிக்கவர்களான ஸுதேவன் மற்றும் உபதேவன் என்ற இரு மகன்களைப் பெற்றான்.

{யது > 3குரோஷ்டு(மாத்ரி) > 1யுதாஜித் > விருஷ்ணி > 2சித்ரகன்...} சித்ரகனுக்கு, பிருது, விப்ருது, அஷ்வக்ரீவன், அஷ்வபாஹு, ஸுபார்ஷ்வகன், கவேஷணன், அரிஷ்டனேமி, அஷ்வன், ஸுதர்மன், தர்மப்ருது, ஸுபாஹு, பஹுபாஹு என்ற மகன்கள் பலரும் சிரவிஷ்டை மற்றும் சிரவணை என்ற மகள் இருவரும் இருந்தனர். ஸ்ரீகிருஷ்ணனுக்கு எதிரான இந்தப் பொய்க் குற்றச்சாட்டைப் படிப்பவன், தன் வாழ்வில் அவ்வாறு ஒருபோதும் பீடிக்கப்பட மாட்டான்" என்றார் {வைசம்பாயனர்}.(56-58)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 38ல் உள்ள சுலோகங்கள் : 58
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்