(ஏகார்ணவே பகவந்மார்கண்டேயஸம்வாத꞉)
The God after dissolution | Bhavishya-Parva-Chapter-10 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : நாராயணனின் வயிற்றுக்குள் இருந்து வெளிப்பட்ட மார்க்கண்டேயர்; ஒற்றைப் பெருங்கடலையும், சிறுவனையும் கண்டு கலங்கியது; மார்க்கண்டேயருக்கும் நாராயணனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இவ்வாறு அனைத்தும் ஒற்றைப் பெருங்கடலாக மாற்றப்பட்டதும், பெருஞ்சிறப்புவாய்ந்த தலைவன் ஹரி, பொருள் காரணமாக அமைந்திருந்த அண்டத்திற்கு அழிவை ஏற்படுத்தித் தூய புத்தியாக நிலைத்திருக்கிறான்.{1,2} ரஜஸ் குணத்திற்கு அப்பாற்பட்டவனும், நித்தியனெனக் கல்விமான்களால் சொல்லப்படும் பெரியவனுமான நாராயணன், தன் நனவால் மறைக்கப்பட்டவனாக, ரஜஸ் குணம், பூதங்கள் ஆகியவற்றின் பயனாக இருக்கும் கடக்கப்பட முடியாத பெருங்கடலுக்குள் மூன்று யுகங்கள் உறங்கிக் கிடக்கிறான்.{3,4} தலை, பாதங்கள் முதலியவற்றைக் கொண்ட புருஷனை யோகத்தாலும், வேள்விகளாலும் அடையலாம், ஆனால் மஹாபுருஷன் அவனிடம் இருந்து வேறுபட்டவனாவான். இந்தத் தூய புத்தி அனைத்திலும் கிடக்கிறது.{5}





