(பலதேவாஹ்நிகம்)
Baladeva's mantra for protecting Pradyumna | Vishnu-Parva-Chapter-166-110 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : பிரத்யும்னனின் பாதுகாப்புக்காக பலராமனால் சொல்லப்பட்ட துதி; நீண்ட வாழ்நாள், செல்வம், வெற்றி ஆகியவற்றைக் கொடுக்கும் ஆஹ்நிக ஸ்தோத்திரம்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! வெற்றியாளர்களில் முதன்மையானவனே, பிரத்யும்னன் சம்பரனைக் கொன்றுவிட்டு துவாரகா நகரை அடைந்தபோது மாலை வேளைக்கான ஓர் அற்புத மந்திரம் ஓதப்பட்டது.(1) பிரத்யும்னனின் பாதுகாப்புக்காக அந்நேரத்தில் பலதேவனால் ஓதப்பட்ட மாலை நேர மந்திரத்தை {ஆஹ்நிக ஸ்தோத்திரத்தை}[1] நான் சொல்லப் போகிறேன்.(2) இதை ஒருவன் மாலை வேளையில் ஓதினால் ஆன்மா தூய்மையடைந்தவன் ஆவான். பலதேவன், வாசுதேவன், அறப்பற்றுள்ள ரிஷிகள், முனிவர்கள் ஆகியோரால் இஃது ஓதப்பட்டது.(3)
[1] உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்கார் பதிப்பில் இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில், "இந்த ஸ்தோத்ரத்தில் பிரம்மா, வேதங்கள், அங்க உபாங்கங்கள், பஞ்சபூதங்கள், மகரிஷிகள், முப்பத்துமூன்று தேவர்கள், அஷ்டகுல பர்வதங்கள், ஸர்ப்பராஜாக்கள், புண்ய நதி தீர்த்தங்கள், தேவ கன்னிகைகள், மாதாக்கள், க்ரஹங்கள், ஆபத்ஸஹாயர்கள், முனிவர்கள், யக்ஞசிரேஷ்டர்கள், மங்களத்ரவ்யங்கள், ஆயுதங்கள் இவை முக்கியமாக ரக்ஷைக்காகச் சொல்லப்பட்டுப் பலஸ்ருதியோடு முடிகிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்தப் பகுதி {அத்யாயம்} முழுமையும் இல்லை. ஆனால் அடுத்த அத்தியாயத்தில் இருந்து உள்ளபடியே தொடர்கிறது.
{ஒரு நாள் ருக்மிணியின் மகன் (பிரத்யும்னன்) ஹலியின் (பலராமனின்) வீட்டில் கூப்பிய கரங்களுடன் அவனை வணங்கிவிட்டு, பின்வருமாறு வேண்டினான்.(4) பிரத்யும்னன், "ஓ! கிருஷ்ணரின் தமையனாரே, ஓ! பெரும்புகழ்வாய்ந்தவரே, ஓ! ரோஹிணியின் மைந்தரே, ஓ! தலைவா, நான் அச்சமற்றவனாவதற்கான ஒரு மந்திரத்தை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(5) அப்போது பலராமன் சொன்ன அந்த ஆஹ்நிகத் துதி பின்வருமாறு}[2],
[2] அடைப்புக்குறிக்குள் இருக்கும் பகுதி மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. சித்திரசாலை பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதி உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பிலும் இருக்கிறது.
"அண்டத்தின் தலைவனும், தேவாசுரர்களின் ஆசானுமான பிரம்மன் என்னைக் காக்கட்டும். ஓங்காரம், வஷட்காரம், சாவித்ரி, மூன்றுவிதிகள்[3] ஆகியவை என்னைக் காக்கட்டும்.(6)
[3] சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில், "மூன்றுவிதிகள் என்பன அபூர்வ, நியம, பரிசங்கிய விதிகள் ஆகும் என நீலகண்டரின் உரையில் காணக்கிடைக்கிறது" என்றிருக்கிறது.
{ரிக், யஜுர், சாம, அதர்வணமெனும்} நான்கு வேதங்களும், புராணங்களும், இதிஹாஸங்களும், கிலாக்கள், உபகிலாக்கள் {அங்கங்களும், உப அங்கங்களும்}, வேதாங்கங்கள்,[4] அவற்றின் உரைகள் {வியாக்யானங்கள்} ஆகியனவும் என்னைக் காக்கட்டும்.(7,8)
[4] சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில், "வேதாங்கங்கள் என்பன, சிக்ஷை, வியாகரணம், சந்தம், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியனவாகும். உபாங்கங்கள் என்பன, புராணம், நியாயம், மீமாம்ஸம், தர்மஸாஸ்திரங்கள் ஆகும்" என்றிருக்கிறது.
நிலம், காற்று, ஆகாயம், நீர், ஒளி, புலன்கள், மனம், புத்தி, சத்வ ரஜஸ் தமோ குணங்கள்,(9) வியானம், உதானம், ஸமானம், பிராணம், அபானம் என்றழைக்கப்படும் ஐந்து உயிர்க்காற்றுகள் {வாயுக்கள்}, அண்டத்தில் படர்ந்தூடுருவி இருக்கும் பிற ஏழு காற்றுகள்[5] ஆகியன என்னைக் காக்கட்டும்.(10)
[5] சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில், "ஏழு காற்றுகள் என்பன, ஆவஹம், பிரவஹம், உத்வஹம், ஸம்வஹம், விவஹம், பிரணவஹம், பரிவஹம் என்பனவாகும் என நீலகண்டர் உரையில் இருக்கிறது" என்றிருக்கிறது.
மஹாரிஷிகளான மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது, பிருகு, தெய்வீகரான வசிஷ்டர் ஆகியோர் என்னைக் காக்கட்டும்.(11)
கசியபரின் தலைமையிலான பதினான்கு முனிவர்களும், பத்துத் திக்குகளுடனும், கணங்களுடனும் கூடிய நர நாராயணர்களும் என்னைக் காக்கட்டும்.(12)
பதினோரு ருத்ரர்களும், பனிரெண்டு ஆதித்யர்களும், எட்டு வசுக்களும், இரண்டு அஸ்வினிகளும் என்னைக் காக்கட்டும்[6].(13)
[6] சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில், "அஜைகபாத், அஹிர்புத்நியன், பிநாகீ, அபராஜிதன், ருதன், பித்ருரூபன், த்ரையம்பகன், மஹேஷ்வரன், விருஷாகபி, சம்பு, ஹவனன், ஈஷ்வரன் ஆகியோர் பதினோரு ருத்ரர்கள் ஆவர். அம்சன், பகன், மித்ரன், வருணன், ஜலோஷ்வரன், தாதா, அர்யமான், ஜயந்தன், பாஸ்கரன், திவஷ்டா, பூஷன், இந்திரன், விஷ்ணு ஆகியோர் பனிரெண்டு ஆதித்யர்கள் ஆவர். தரன், துருவன், ஸோமன், சாவித்ரி, அநிலன், அநலன், பிரத்யூஷா, பிரபாஸன் ஆகியோர் அஷ்ட வசுக்கள் ஆவர். நாஸத்யன், தஸ்ரன் ஆகியோர் அஸ்வினி இரட்டையர்களாவர்" என்றிருக்கிறது..
தேவாசுர அன்னையரான ஹ்ரீ, ஸ்ரீ, லக்ஷ்மி, ஸ்வதை, புஷ்டி, மேதை, துஷ்டி, ஸ்மிருதி, திருதி, அதிதி, திதி, தனு, சிம்ஹிகை ஆகியோர் என்னைக் காக்கட்டும்.(14)
ஹிமவான் {இமயம்}, ஹேமகூடம், நிஷதம், ஸ்வேதம், ரிஷபம், பாரியாத்ரம், விந்தியம், வைடூர்யம்,(15) ஸஹ்யம், உதயம், மலையம், மேரு, மந்தரம், தர்துரம், கிரௌஞ்சம், கைலாசம், மைநாகம் ஆகிய மலைகள் என்னைக் காக்கட்டும்.(16)
சேஷன், வாசுகி, விசாலாக்ஷன், தக்ஷகன், ஏலாபத்ரன், சுக்லவர்ணன், கம்பலன், அஸ்வத்ரர்கள்,(17) ஹஸ்திபத்ரன், பிடரகன், கார்க்கோடகன், தனஞ்ஜயன், பூர்ணகன், கரவீரகன்,(18) ஸுபநாஸ்யன், ததிமுகன், சிருங்காரபிண்டகன், மூவுலகங்கள் முழுவதும் அறியப்பட்ட தலைவன் மணி {மணிநாகன்} ஆகியோரும்,(19) நாக மன்னர்களான ததிகர்மன் {அதிகரணன்}, ஹாரித்ரகன் ஆகியோரும், என்னால் பெயர் குறிப்பிடப்படாதவர்களும்,(20) வாய்மை நிறைந்தவர்களும், அண்டத்தைத் தாங்குபவர்களுமான பிற நாகர்களும் என்னைக் காக்கட்டும்.
பெருங்கடல்கள் நான்கும் என்னைக் காக்கட்டும். ஓடைகளில் முதன்மையான கங்கையாறு,(21) சரஸ்வதி, சந்திரபாகை, சதத்ரு, தேவிகை, சிவை, இராவதி {துவாரசுவதி}, பிபாஸை, ஸரயு, யமுனை,(22) கல்மாஷி, ரதோஷ்மை, பாஹுதை, ஹிரண்யதை, பலக்ஷை, இக்ஷுமதி, சிரவந்தி, பிரஹத்ரதை,(23) விக்யாதை, கொண்டாடப்படும் சர்மண்வதி, புனிதமான வதூஸரை ஆகிய ஆறுகளும், என்னால் பெயர் குறிப்பிடப்படாதவையும்,(24) வடக்கில் பாய்பவையுமான ஆறுகளும் என் மீது தங்கள் நீரைத் தெளிக்கட்டும். வேணி, கோதாவரி, {ஸீதா}, காவிரி, கொங்கணாவதி,(25) கிருஷ்ணை, வேணை, சுக்திமதி, தமஸை, புஷ்பவாஹினி, தாமிரபரணி, ஜோதிரதை {ஜோதிதரை}, உத்கலை, உதும்பராவதி,(26) வைதரணி, புனிதமான விதர்ப்பை, நர்மதை, விதஸ்தை, பீமரதி, மஹாநதி, ஐலை,(27) காளிந்தி, கோமதி, சோணை ஆகிய ஆறுகளும், என்னால் பெயர் குறிப்பிடப்படாதவையும்,(28) தெற்கில் பாய்பவையுமான ஆறுகளும் என் மீது தங்கள் நீரைத் தெளிக்கட்டும். க்ஷிப்ரை, புனிதமான சர்மண்வதி, மஹி, சுப்ரவதி,(29) ஸிந்து, வேத்ரவதி, போஜாந்தை, வனமாலிகை, பூர்வபத்ரை, அபராபத்ரை, ஊர்மிளை, பரத்ருமை,(30) வேத்ரவதி, நன்கறியப்பட்ட சாபதாங்கி {சாபதாஸி}, {பிரஸ்தரவதி, குண்டந்தி}, புனிதமும், அழகும் மிக்க ஸரஸ்வதி,(31) மித்ரக்னி {சித்ரக்நி}, இந்துமாலா, மதுமதி, உமை, குருந்தி, தாபி, விமலோதகை,(32) விமலை, விமலோதை, மத்தகங்கை, பயஸ்விநி ஆகிய ஆறுகளும், என்னால் பெயர் குறிப்பிடப்படாதவையும்,(33) மேற்கில் பாய்பவையுமான ஆறுகளும், சிவனால் தரிக்கப்பட்டவளும், கிழக்கில் பாய்பவளும், புனிதமானவுமான பாகீரதியும் என் மீது தங்கள் நீரைத் தெளிக்கட்டும்.(34)
புனிதத் தடாகங்களான பிரபாஸம், பிரயாகை, நைமிஷம், புஷ்கரம், கங்கை, குருக்ஷேத்திரம், ஸ்ரீகண்டம், கௌதமாஸ்ரமம், ராமஹ்ரதம், விநசநம், ராமதீர்த்தம்,(35,36) சோமன் எழுந்த காங்கத்வாரம், {கநகலம்}, கபாலமோசனம், {ஜம்பூமார்க்கம்},(37) நன்கறியப்பட்ட ஸ்வர்ணபிந்து, கனகபிங்களம், தசாச்வமேதிகம்,(38) நர நாராயணாஸ்ரமமாகக் கொண்டாடப்படும் பதரி, பல்கு தீர்த்தம், நன்கறியப்பட்ட சந்திரவடம்,(39) கோகாமுகம், கங்காஸாகரம், மகத நாட்டின் தபோதம், நன்கறியப்பட்ட கங்கோத்பேதம் ஆகிய தீர்த்தங்களும், நான் பெயர் குறிப்பிடாதவையும்,(40) மஹாரிஷிகள் வாழ்ந்து வந்த இடங்களுமான தீர்த்தங்களும் தங்கள் புனித நீரை எங்கள் மீது தெளிக்கட்டும்.
புனிதத் தலங்களான ஸூகரம், யோகமார்க்கம், ஸ்வேதத்வீபம்,(41) பிரஹ்மதீர்த்தம், ராமதீர்த்தம் ஆகியவையும், பாவங்களை அழிக்கும் கங்கையும், அவளது ஓடைகளும்,(42) வைகுண்டத்தைப் போன்ற கேதாரம், ஸுகரோத்பேதனம், பாபமோசனம் {சாபமோசனம்} ஆகியவையும் என் பாவங்களை அழித்து என்னைத் தூய்மையாக்கட்டும்.(43)
தர்மம், அர்த்தம், காமம், புகழ், பிராப்தி, சமம், தமம், வருணம், குபேரம், {தனதம்}, யமம், நியமம்,(44) காலம், நயம், ஸந்நதி, கோபம் {குரோதம்}, மயக்கம் {மோஹம்}, மன்னிக்கும் தன்மை, பொறுமை {க்ஷமை, திருதி}, மின்னல் {வித்யுத்}, மேகங்கள், மூலிகைகள் {ஓஷதி}, கிரஹங்கள், {பிரமாத, உன்மாத, விக்ரஹ},(45) யக்ஷர்கள், பிசாசங்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், ஸித்தர்கள், சாரணர்கள், இரவுலாவிகள் {நிசாசரரர்கள்}, வானுலாவிகள், விலங்குகள், மங்கலக் கோள்கள், {கேசரர்கள்},(46) லம்போதரன், பலி, பிங்காக்ஷன், விஸ்வரூபி, காற்றுகளுடன் கூடிய இந்திரன், {மருதர்கள், பர்ஜன்யன்}, கலை, திருதி, லவம், க்ஷணம்[7],(47) காலத்தின் பிற பிரிவினைகள், விண்மீன்கள் {நக்ஷத்ரங்கள்}, கோள்கள் {கிரஹங்கள்}, பருவகாலங்கள் {சிசிராதி ருதுக்கள்}, மாதங்கள், பகல்கள், இரவுகள், சூரியன், சந்திரன்,(48) கவலை, அச்சம், உணர்வுகள், செருக்கு, வாய்மை {ஆமோதம், பிரமோதம், பிரஹர்ஷம், சோகம், ஜனம், தமம், தபம், ஸத்யம்}, சித்தி {சுத்தி}, விருத்தி {புத்தி}, ஸ்ருதி, திருதி,(49) ருத்ராணி, பத்ரகாளி, பத்ரா ஜ்யேஷ்டை, வாருணி, பாஸி, காளிகை, சாண்டிலி,(50) {ஆர்யை,} குஹூ, ஸிநிவாலி, பீமை, சித்ரவதி, ரதி, {ஏகாநம்ஸை, கஷ்மாண்டீ}, காத்யாயனி,(51) லோஹித்யை, அயனமித்ரை, கனதை {ஜனமாதா, கோநந்தா, தேவபத்னி} ஆகியோரும், வேறு தெய்வீகக் காரிகையரும் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து என்னைக் காக்கட்டும்[8].(52)
[7] சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில், "கலை, திருதி, லவம், க்ஷணம் என்பன காலப்பிரிவினைகள் {நேர அலகுகள்} ஆகும். ஹெச்.ஹெச்.வில்சன் அவர்கள் மொழிபெயர்த்த விஷ்ணு புராணத்தில், பாகவதம் மற்றும் வைவர்த்த புராணத்தில் இருந்து குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை பின்வருமாறு: 2 பரமாணு = 1 அணு, 3 அணுக்கள் = 1 திரஸரேணு, 3 திரஸரேணுக்கள் = 1 திருதி, 100 திருதிகள் = 1 வேதம், 3 வேதங்கள் = 1 லவம், 3 லவங்கள் = 1 நிமேஷம் {நிமிஷம்}, 3 நிமேஷங்கள் = 1 க்ஷணம், 5 க்ஷணங்கள் = 1 காஷ்டை, 15 காஷ்டைகள் = 1 லகு, 15 லகுக்கள் = 1 நாரிகம் {நாழிகை}, 2 நாரிகங்கள் = 1 முஹூர்த்தம், 6 அல்லது 7 நாரிகங்கள் {7.5 நாழிகை}= 1 யாமம்" என்றிருக்கிறது. ஒரு யாமம் என்பது 3 மணி நேரம் கொண்ட கால அளவு. ஒரு பகலில் 4 யாமங்களும், ஓர் இரவில் 4 யாமங்களும் நேரும்.
[8] மன்மதநாததத்தரின் பதிப்பில் இத்துடன் இந்த அத்தியாயம் நிறைவடைகிறது. அதாவது 52ம் ஸ்லோகத்துடன் நிறைவடைகிறது. சித்திரசாலை, உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்கார் பதிப்புகளில் இன்னும் அதிகம் இருக்கிறது. இந்தத் துதி முழுமையடையாமல் இருப்பதால், விடுபட்ட அந்தப் பகுதியை சித்திரசாலை பதிப்பில் இருந்து மொழிபெயர்த்து இங்கே அளிக்கப்படுகிறது. அது பின்வருமாறு...
பல்வேறு ஆடைகளை உடுத்தியவர்களும், பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பல்வேறு வடிவங்களில் தோன்றுபவர்களும், பல்வேறு நிலங்களில் திரிபவர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரிப்பவர்களும் என்னைக் காக்கட்டும்.(53)
கொழுப்பையும், ஊனீரையும் விரும்புபவர்கள், மது, இறைச்சி, குடல் ஆகியவற்றை விரும்புபவர்கள், பூனைகள், புலிகள், யானைகள், சிங்கங்கள் ஆகியவற்றின் முகங்களைக் கொண்டவர்கள்,(54) கோழி, காகம், கழுகு, கிரௌஞ்சம் ஆகியவற்றின் முகங்களைக் கொண்டவர்கள், பாம்புகளைப் பூணூலாக அணிந்தவர்கள், தோல்களை உடுத்துபவர்கள்,(55) வாயில் குருதி கொண்டவர்கள், முரசு, பேரிகை போன்ற குரலைக் கொண்டவர்கள், கோபக்காரர்கள், முழுமையான மகிழ்ச்சி கொண்டவர்கள், அழகிய வீடுகளைக் கொண்டவர்கள்,(56) வெறி கொண்டவர்கள், அதிகம் குடிப்பவர்கள், பிறரை அடிப்பவர்கள், மஞ்சள் கண்களைக் கொண்டவர்கள், மஞ்சள் முடி கொண்டவர்கள், மழித்த தலைகளைக் கொண்டவர்கள்,(57) மேல்நோக்கிய தலைமயிர் கொண்டவர்கள், கருப்பு முடி கொண்டவர்கள், வெள்ளை முடி கொண்டவர்கள், ஆயிரம் யானைகளின் பலத்தைக் கொண்டவர்கள், காற்றின் வேகத்தில் பயணிப்பவர்கள்,(58) ஒரே கையைக் கொண்டவர்கள், ஒரே காலைக் கொண்டவர்கள், மஞ்சள் நிறத்தில் ஒரே கண்ணைக் கொண்டவர்கள், பல பிள்ளைகளைப் பெற்றவர்கள், குறைந்த அளவு பிள்ளைகளைப் பெற்றவர்கள், இரண்டே பிள்ளைகளைப் பெற்றவர்கள், சிறுவர்களுடன் விளையாடுபவர்கள்,(59) முகமண்டி, பிடாலி, பூதனை, கந்தபூதனை, சீதவாத உஷ்ண வேதாலி, ரேவதி ஆகிய பெயர்களைக் கொண்டவர்கள்,(60) நகைச்சுவை, கோபம் ஆகியவற்றை விரும்புபவர்கள், ஆடைகளை விரும்புபவர்கள், நற்சொல் பேசுபவர்கள், இன்ப துன்பங்களைக் கொடுப்பவர்கள், இருபிறப்பாளர்களால் விரும்பப்படுபவர்கள்,(61) இரவில் திரிபவர்கள், நன்மையைக் கொண்டு வருபவர்கள், எப்போதும் கொடூரர்களாக இருப்பவர்கள், பிள்ளைகளைப் பாதுகாக்கும் தாய்மாரைப் போல என்னை எப்போதும் காக்கும் தாய்மார்கள்,(62) பெரும்பாட்டனின் முகத்தில் இருந்து பிறந்தவர்கள், பயங்கரர்கள், ருத்ரனின் அங்கங்களில் இருந்து பிறந்தவர்கள், குமரனின் (கார்த்திகேயனின்) வியர்வையில் இருந்து பிறந்தவர்கள், வைஷ்ணவ ஜ்வரங்கள்,(63) பேருடல் படைத்தவர்கள், பெரும் வீரர்கள், போலி செருக்கில் பிறந்தவர்கள், பெருஞ்சக்திவாய்ந்தவர்கள், கோபக்காரர்கள், கோபமடையாதவர்கள், கொடூரர்கள், தேவர்களைப் போலத் தெரிபவர்கள்,(64) இரவில் திரிபவர்கள், சிங்க முகம் கொண்டவர்கள், பெரிய பற்களைக் கொண்டவர்கள், சச்சரவுகளை உண்டாக்குபவர்கள், பெரிய வயிற்றைக் கொண்டவர்கள், பெரிய இடையைக் கொண்டவர்கள், மஞ்சள் கண்களைக் கொண்டவர்கள், பெரிய வடிவங்களைக் கொண்டவர்கள்,(65) சக்தி, ரிஷ்டி, சூலம், பரிகம், பராஸம், சர்மம், அஸி ஆகிய ஆயுதங்களைத் தரித்தவர்கள், பிநாகம், வஜ்ரம், முசலம், பிரம்மதண்டம் முதலிய ஆயுதங்களை விரும்புபவர்கள்,(66) தண்டங்களையும், கமண்டலங்களையும் கொண்டவர்கள், துணிவுமிக்கவர்கள், சடாமுடி தரித்தவர்கள், மகுடம் தரித்தவர்கள், வேதங்களில் நிபுணர்கள், எப்போதும் வேள்விக்கான பூணூலைத் தரித்தவர்கள்,(67) பாம்புகளைத் தலையில் சூடியவர்கள், காதுகுண்டலங்களைத் தரித்தவர்கள், புஜங்களில் கேயூரங்கள் தரித்தவர்கள், பல்வேறு வகை ஆடைகளை அணிபவர்கள், அழகிய மாலைகளால் தங்களை அலங்கரித்துக் கொள்பவர்கள், களிம்புகளைத் தங்கள் உடலில் பூசிக் கொள்பவர்கள்,(68) யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், கரடிகள், பூனைகள், சிங்கங்கள், புலிகள் ஆகியவற்றின் முகங்களைக் கொண்டவர்கள், பன்றி, ஆந்தை, நரி, மான், எலி, எருமை ஆகியவற்றின் முகங்களைக் கொண்டவர்கள்,(69) உயரம் குறைந்தவர்கள் {குள்ளர்கள்}, அங்கப்பழுதுடையவர்கள், கூன் முதுகைக் கொண்டவர்கள், கராலர்கள், தலையை மழித்துக் கொண்டவர்கள், ஆயிரவர், நூற்றுவர், ஆயிரம் சடை தரித்தவர்,(70) கைலாசம் போன்று வெள்ளையாக இருப்பவர்கள், சூரியனைப் போன்று பிரகாசமாக இருப்பவர்கள், மழை மேகங்களைப் போலக் கருப்பாக இருப்பவர்கள், அஞ்சன மை போல நீலமாக இருப்பவர்கள்,(71) ஒற்றைக் கால் கொண்டவர்கள், இரு கால் கொண்டவர்கள், இரு தலைகளைக் கொண்டவர்கள், சதையற்றவர்கள், பெரும் இடை கொண்டவர்கள், அகலத் திறந்த வாய்களைக் கொண்டவர்கள், பயங்கரர்கள்,(72) கோள்கள், தடாகங்கள், மடுக்கள், குளங்கள், கடல்கள், ஆறுகள், இடுகாடுகள், மலைகள், மரங்கள், ஆகியவற்றிலும் சூன்யமான வீடுகளிலும் வசிப்பவர்கள் ஆகியோர் அனைத்து வகையிலும் என்னைக் காக்கட்டும்.(73)
கணங்களின் பெருந்தலைவன் (கணேசன்), நந்தி, பெருங்காலன், பெருஞ்சக்திவாய்ந்தவன், உலகில் அஞ்சப்படுபவர்களான பெருந்தலைவன் (சிவன்), விஷ்ணு ஆகிய இருவருக்கும் உடைய ஜ்வரங்கள்,(74) கிராமணி, கோபாலன், பிருங்காரீடி, கணேஷ்வரன், தலைவன் வாமதேவன், காதுகளில் மணிகளைக் கொண்டவன் (கண்டாகர்ணன்), கரந்தமன்,(75) ஸ்வேதமோதன், கபாலி, ஜம்பகன், பகைவரை எரிப்பவன் {சத்ருதாபனன்}, மஜ்ஜன், உனமஜ்ஜன், சந்தாபனன், விலாபனன்,(76) நிஜாகஸன், அகஸன், ஸ்தூணாகர்ணன், பிரசோஷணன், உல்காமாலி, தபதமன், ஜ்வாலாமலி, பிரதர்ஷனன்,(77) ஸங்கட்டணன், ஸங்குடனன், காஷ்டபூதன், சிவங்கரன், கூஷ்மாண்டன், கும்பமூர்த்தன், ரோசனன், {கிரஹமாகிபலி}, வைக்ருதன்,(78) அனிகேதன், ஸுராரிக்னன், சிவன், அசிவன், க்ஷேமகன், பிசிதாஸி, ஸுராரி, ஹரிலோசனன்,(79) பீமகன், கிரஹகன், உக்ரமயகிரஹன், உபக்ரஹன், அர்யகன், ஸ்கந்தக்ரஹன்,(80) சபலன், அஸ்மவேதாளன், தாமஸன், ஸுமஹாகபி, ஹிரதயுதவாதனன், ஜடன், குண்டாசி, கங்கணப்ரியன்,(81) ஹரிமசம்ஸ்ரு, மனோவேக காற்று வேகம் கொண்ட கருத்மான், பார்வதியின் கோபத்திலிருந்து பிறந்த சக்திமிக்க நூற்றுவர், ஆயிரவர்,(82) பெருஞ்சக்திவாய்ந்தவர்கள், உறுதிமிக்கவர்கள், பிராமணர்களிடம் அர்ப்பணிப்புமிக்கவர்கள், வாய்மைக்குக் கட்டுப்பட்டவர்கள், போரில் பகைவரின் ஆசைகள் அனைத்தையும் முற்றிலும் அழிப்பவர்கள்(83) ஆகியோர் அனைவரும் இரவிலும், பகலிலும், கடினமான காலங்களிலும் துதிக்கப்படும்போது, கணங்களின் துணையுடன் கூடிய கணேசனுடன் சேர்ந்து எப்போதும் என்னைக் காக்கட்டும்.(84)
நாரதர், பர்வதர், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், கணங்கள், பித்ருக்கள், காரணம், காரியம், ஆதி, வியாதி,(85) அகஸ்தியர், காலவர், கார்க்யர், சகிதி, தௌம்யர், பராசரர், கிருஷ்ணாத்ரேயர், அசிதர், தேவலர், பலர்,(86) பிருஹஸ்பதி, உதத்யர், மார்க்கண்டேயர், சுருதச்ரவர், துவைபாயனர், விதர்ப்பர், ஜைமினி, மாடரர், கடர்,(87) விஷ்வாமித்ரர், வசிஷ்டர், பெரும் முனிவரான லோமசர், உதங்கர், நைப்யர், பௌலோமர், துவிதர், திருதர்,(88) காலவிருக்ஷ்யரிஷி, மேதாதிமுனி, ஸாரஸ்வதர், யவக்ரீதி, குசிகர், கௌதமர்,(89) ஸம்வர்த்தர், ரிஷ்யசிருங்கர், ஸ்வஸ்திகயாத்ரேயர், விபாண்டகர், ரிசீகர், ஜமதக்னி, தவங்களின் கருவூலமான ஔர்வர்,(90) பரத்வாஜர், ஸ்தூலசிரர், கசியபர், புலஹர், கிரது, பிருஹதக்னி, ஹரிஸ்மஸரு, விஜயர், கண்வர்,(91) வைதண்டி, தீர்கதாபர், வேதகார்த்தர், அம்சுமான், சிவர், அஷ்டாவக்ரர், ததீசி, ஸ்வேதகேது,(92) உத்தாலகர், க்ஷீரபாணி, சிருங்கி, கௌர்முகர், அக்னிவேஸ்யர், சமீகர், பிரமுசு, முமுசு ஆகியோரும்,(93) நோன்புகளை நோற்பவர்களான பிற முனிவர்கள் பலரும், ஆன்மாக்களைக் கட்டுப்படுத்திய முனிவர்களும், இங்கே துதிக்கப்படாதவர்களும்,(94) வேள்விகளைச் செய்யும் பிற முனிவர்களும், அமைதியான முனிவர்களும் எப்போதும் எனக்கு அமைதியை அருளட்டும்.
மூன்று அக்னிகள், மூன்று வேதங்கள், மூன்று வித்தைகள், கௌஸ்துபமணி,(95) உச்சைஸ்ரவஸ் குதிரை, மருத்துவத்தில் திறன்மிகுந்த மங்கலமான தன்வந்திரி, ஹரி, அம்ருதம், கருடன் {ஸுபர்ணம்}, வெண்பறவைகள்,(96) வெண்கடுகு, வெண்மலர்கள், கன்னிகைகள், வெண்குடை, யவம், அக்ஷதை, அருகம்புல், தங்கம், நறுமணப்பூச்சு, விசிறி,(97) சக்கராயுதம், பெரும் காளை, சந்தனம், நஞ்சு, வெள்ளை காளை, மதங்கொண்ட யானை, சிங்கம், புலி, குதிரை, மலை,(98) பூமாதேவி {நிலம்}, நெற்பொரி, பிராமணர்கள், தேன், பாயஸம், சுவஸ்திகாவளதக்கை, நந்தியாவர்த்த மலர், குங்குமப்பூ, வில்வம், கோமயம், மீன் {மத்ஸயம்}, துந்துபி, படகம் ஆகியவற்றின் ஒலி,(99) முனிவர்களின் மனைவியர் {ரிஷிபத்னிகள்}, கன்னிகைகள், மங்கல இருக்கைகள் {ஸ்ரீமத்பத்ராஸனம்}, விற்கள், கோரோசனை, மங்களத்திரவியம், ஆறுகளின் (ஆறுகள் கடலுடன் கலக்கும்) சங்கமத்தில் கிடைக்கும் நீர்,(100) நல்ல இலைகள், தாமரை, சகோரம், ஜீவ ஜீவக பறவை, நந்தீமுகப் பறவை, மயில் {மயூரம்}, முத்து, ரத்தினம் பதித்த கொடிக்கம்பங்கள்,(101) நல்ல ஆயுதங்கள் எனக் காரியங்களை நிறைவேற்றவல்லவையும், நற்பேற்றை வழங்குபவையும், கடினமான நிலைமைகளை அழிப்பவையும், நல்ல விளைவுகளை உண்டாக்குபவையுமான இவை அனைத்தும் என்னைக் காக்கட்டும்[9].(102)
[9] இந்த ஆஹ்நிக துதி, மஹாபாரதம் அநுசாஸனபர்வம் பகுதி 150ல் சொல்லப்படும் சாவித்ரி மந்திரத்திற்கு நெருக்கமானதாக இருக்கிறது.
இது நீண்டகாலத்திற்கு முன்னர்ப் பலராமனால் ஓதப்பட்டது. நீண்ட வாழ்நாள், செழிப்பு, வெற்றி ஆகியவற்றை விரும்பும் மனிதர்கள் நல்லோரைக் கொண்டு ஓதச் செய்து இதைக் கேட்க வேண்டும்.(103) திதிகள் தோறும் {நாள்தோறும்} நீராடிவிட்டு, நூற்றெட்டு மங்கலப் பெயர்களுடன் கூடிய இந்த மந்திரத்தை {ஆஹ்நிகத் துதியை} ஒருவன் ஓதினால் அவன் மரணம், பற்று, நோய், கவலை ஆகியவற்றால் பீடிக்கப்படமாட்டான்.(104) இந்த மந்திரம் இம்மையிலும், மறுமையிலும் நன்மையை ஏற்படுத்தும். வேதங்களுக்கு இணையான இந்தப் புனித மந்திரம் நற்பேற்றையும், நீண்ட வாழ்நாட்களையும், புகழையும் கொடுக்கும்.(105) இந்த மந்திரம் {ஆஹ்நிக ஸ்தோத்ரம்} எப்போதும் செழிப்பைக் கொடுக்கும். தெய்வீகமானதும், புனிதமானதுமான இது சந்ததியையும், மங்கலத்தையும் அருளும். இது நற்பேற்றையும், செழிப்பையும் அருளும். தவத்தின் பலன்களைக் கொடுக்கக்கூடிய இது {ஆஹ்நிக மந்திரம்} மனிதர்களுக்கு மிகச் சிறந்த துதியாகும்.(106) இந்த மந்திரம் அனைத்து பிணிகளையும் போக்கவல்லதும், ஒருவனுடைய புகழையும், அவனுடைய குலத்தின் புகழையும் அதிகரிக்கவல்லதும் ஆகும். அன்பு நிறைந்த இதயம் கொண்ட ஒருவனால் இந்த மந்திரம் கவனத்துடன் ஓதப்பட்டால், அவனுடைய ஆன்மா அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடையும், அவன் மங்கல உலகை அடைவான்" என்றார் {வைசம்பாயனர்}.(107)
விஷ்ணு பர்வம் பகுதி – 166 – 110ல் உள்ள சுலோகங்கள் : 52 (107)
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |