(பித்ரு கல்பம் - 7 | ஹம்ஸ வர்ணனம்)
The story of the birds | Harivamsa-Parva-Chapter-23 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : பறவைகளின் யோக நிலையைக் கண்டு நாணமடைந்த மன்னன் விப்ராஜன்; தன் மகன் அணுஹனை அரியணையில் ஏற்றியது; பிரம்மதத்தனைப் பெற்ற அணுஹன்; பிரம்மதத்தனின் அமைச்சர்கள்; ஸ்ரோத்ரிய பிராமணர்களாகப் பிறந்த மற்ற நான்கு வாத்துகள்; தந்தையைப் பிரம்மதத்தனிடம் செல்லுமாறு தூண்டிவிட்டு நற்கதியை அடைந்த நால்வர்...
மார்க்கண்டேயர் {பீஷ்மரிடம்}, "எப்போதும் யோகம் பயில்பவையும், மானஸத் தடாகத்தில் திரிபவையும், பத்மகர்ப்பன், அரவிந்தாக்ஷன், க்ஷீரகர்ப்பன், ஸுலோசனன், உருபிந்து, ஸுபிந்து, ஹைமகர்ப்பன் என்ற பெயர்களைக் கொண்ட அந்த ஏழு வாத்துகளும் {அன்னப்பறவைகளும்}, எப்போதும் காற்றையும், நீரையும் உண்டு தங்கள் உடல்களைப் பேணி வாழ்பவையாக இருந்தன[1].(1,2) அந்த நேரத்தில், மன்னன் {விப்ராஜன்} தன் மேனி எழிலில் ஒளிர்ந்து கொண்டிருப்பவனும், தன்னுடைய பெண் துணைவிகளால் சூழப்பட்டவனுமாக, நந்தனம் எனும் இன்பத் தோட்டத்தில் தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போல அந்தக் காட்டில் திரிந்து கொண்டிருந்தான்.(3) அந்தப் பறவைகளின் பேராவல் மற்றும் வேறு புற அடையாளங்கள் ஆகியவற்றின் மூலம் அவை யோகியர் என்பதை அந்த மன்னன் {விப்ராஜன்} கண்டான். பிறகு வெட்கத்தாலும்[2], அதை நினைத்துப் பார்த்தும் தன் நகரத்திற்குத் திரும்பிச் சென்றான்.(4)
