Friday 9 July 2021

வாமனஸ்தவம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 47

(விஷ்ணோராதேஷாத் பலே꞉ பாதாலப்ரவேஷ꞉ தத்க்ருதவிஷ்ணுஸ்தவ꞉ பலிம் ப்ரதி கருடஸ்ய உக்திப்ரத்யுக்தீ வாமநஸ்தவபலகதநம் ச)

The Danavas described | Bhavishya-Parva-Chapter-47 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : போரில் தைத்தியர்களை அடக்கி பலியைப் பாதாளத்தில் கட்டிப்போட்ட விஷ்ணு; நாரதர் பலிக்குக் கற்பித்த விஷ்ணு துதியான வாமனஸ்தவம்...

Mahabali in sutala patala

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தானவர்களின் பெயர்கள், வடிவங்கள், சாதனைகள், முக்கிய ஆயுதங்கள் ஆகியவற்றை இனி கேட்பாயாக.{1} விப்ரசித்தி, சிபி, சங்கு, அயசங்கு, அயசிரன், அஷ்வசிரன், பெருஞ்சக்திவாய்ந்த ஹயக்ரீவன்,{2} {வேகவான்}, கேதுமான், உக்ரன், யுயோக்ரன், வியக்ரன், பேரசுரனான புஷ்கரன், புஷ்கலன், ஸ்வஷா, அஷ்வபதி,{3} பிரஹ்லாதன் {பிரஹ்ராதன்}, அஷ்வசிரன், கும்பன், ஸம்ஹ்ராதன், ககநப்ரியன், அனுஹ்ராதன், ஹரிஹரன், வராஹன், ஸம்ஹரன், அருஜன்,{4} விருஷபர்வன், விரூபாக்ஷன், முனீந்திரன், சந்திரலோசனன், நிஷ்பிரபன், சுப்ரபன், நிருத்ரன்,{5} ஏகவக்தரன், மஹாவக்தரன், திவிவக்தரன், சேரஸன் {காலஸம்நிபன்}, சரபன், {சலபன்}, குந்தன் {குணபன்}, குபதன் {குலபன்}, குவதன்,{6} மஹாகர்பன், சங்குகர்ணன், மஹாத்வனி, தீர்கஜிஹ்வன், அர்க்கவதனன், மிருதுசாபன் {மிருதுபாஹு}, மிருதுபிரியன்,{7} வாயு, கரிஷ்டன், நமுசி, சம்பரன், விக்ஷரன், சந்திரஹந்தன், குரோதஹந்தன், குரோதவர்தனன்,{8} காலகன், கலகாக்ஷன், விருத்ரன், குரோதவிமோக்ஷணன், கவிஷ்டன், ஹவிஷ்டன், பிரலம்பன், நரகன், பிருது,{9} சந்திரதாபனன், வாதாபி, கேதுமான், அஸிலோமன், விதோமன் {புலோமன்}, பாஸ்கலன், பிரமதன், மதன்,{10} சிருகாலவவனன், {கராலன்}, கேசி, ஏகாக்ஷன், பாகு, துஹுண்டன், ஸ்ருமலன், ஸ்ருபன் ஆகிய இவர்களும்,{11} பிற தைத்தியர்கள் பலரும் பாதங்களை வைக்க எத்தனித்த பெரும் விஷ்ணுவின் முன் தோன்றினார்கள்.{12}(1-12)

அவர்களில் சிலர் பாசக்கயிறுகளைக் கொண்டிருந்தனர், சிலர் தங்கள் வாயை அகல விரித்துக் கொண்டிருந்தனர், சிலர் கழுதையின் குரலைக் கொண்டிருந்தனர், சிலர் சதாக்னிகளைக் கொண்டிருந்தனர், சிலர் தங்கள் கைகளில் சக்கரங்களைக் கொண்டிருந்தனர், சிலர் வஜ்ரங்களையும்,{13} சிலர் தண்டங்களையும், சிலர் உலக்கைகளையும், சிலர் வாள்களையும், சிலர் பட்டிசங்களையும், சிலர் பரஷ்வதங்களையும், சிலர் பராசங்களையும், சிலர் கதாயுதங்களையும், சிலர் பரிகங்களையும்,{14} சிலர் பெருங்கற்களையும், சிலர் தங்கள் கைகளில் புஷலங்களையும் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் கரங்களில் மரங்களைக் கொண்டிருந்தனர், சிலர் விற்களையும்,{15} சிலர் கதாயுதங்களையும், சிலர் புஷுண்டிகளையும், சிலர் தங்கள் கைகளில் குத்துவாள்களையும் கொண்டிருந்தனர்.{16} பயங்கரம் நிறைந்தவர்களும், பெருஞ்சக்தி வாய்ந்தவர்களுமான தானவர்கள் பல்வேறு வகைகளில் உடைகள் பூண்டு, பல்வேறு ஆயுதங்களையும் தரித்திருந்தனர்.{13-17}

சிலர் ஆமைகளைப் போன்ற வாயைக் கொண்டிருந்தனர். சிலர் நீர்க்கோழிகளைப் போன்றும், சிலர் அன்னங்களைப் போன்றும், சிலர் கழுதைகளைப் போன்றும், சிலர் ஒட்டகங்களைப் போன்றும், சிலர் பன்றிகளைப் போன்றும்,{18} சில பயங்கரத் தானவர்கள் மகரங்களைப் போன்றும் வாய்களைப் படைத்திருந்தனர். முயல்கள், பூனைகள், கிளிகள், பசுக்கள், மான்கள், கருடன், வாள்கள், மயில்கள் போன்ற முகங்களைச் சிலர் கொண்டிருந்தனர்.{19,20} சிலர் குதிரைப் போன்ற வாயைக் கொண்டிருந்தனர், சிலர் யானை போன்ற வாயையும், சிலர் பல்வேறு ஆயுதங்களைப் போன்ற முகங்களையும் கொண்டிருந்தனர்.{21} அவர்கள் யானைத் தோலையும், மான் தோலையும் உடுத்தியிருந்தனர். அவர்களின் மேனிகள் மரவுரியால் மறைக்கப்பட்டிருந்தன. அவர்களில் சிலர் தங்களைப் பொன்னால் அலங்கரித்திருந்தனர். அந்த அசுரர்கள் மகுடங்களையும், குண்டலங்களையும் அணிந்திருந்தனர். அவர்கள் பல்வேறு உடைகளைத் தரித்துக் கொண்டு, பல்வேறு மாலைகளாலும், குழம்புகளாலும் தங்களை அலங்கரித்திருந்தனர்.{22-26} தானவர்கள் அசுரர்களும், எரியும் தங்கள் ஆயுதங்களை ஏந்தியபடியே, பாதத்தை வைக்க எத்தனித்த ரிஷிகேசனை எதிர்த்தனர்.{27}

மூவுலகங்களையும் வெல்ல இருந்த அந்த நேரத்தில் தலைவனின் பிரகாசம் சூரியனைப் போன்றிருந்தது. எல்லாம்வல்லவனான அந்தத் தலைவன், திதியின் மகன்கள் அனைவரையும் தன் உள்ளங்கையால் நொறுக்கிவிட்டு, தன்னுடைய மூன்று காலடிகளால் மூவுலகங்களையும் அடைந்தான். அவன் பெரும் வடிவை எடுத்ததும் முதலில் பூமியை அடைந்தான்;{28} அவன் பூமியை அடைந்ததும் சூரியனும், சந்திரனும் அவனுடைய இதயத்தில் இருந்தனர், அவன் வானத்தை அடைந்தபோது அவர்கள் அவனது இடையில் இருந்தனர், அவன் சொர்க்கத்தை அடைந்தபோது அவர்கள் அவனது கால்மூட்டுகளில் இருந்தனர்.{29}(13-29) ஒப்பற்ற ஆற்றல்படைத்தவனான விஷ்ணுவின் வடிவை இவ்வாறே இருபிறப்பாளர்கள் விளக்குகின்றனர்.{30} அண்டத்தால் துதிக்கப்படும் ஹரி, மூவுலகங்களையும் வென்று, முன்னணி அசுரர்களைக் கொன்றுவிட்டு, பூமியை தேவர்களின் மன்னனான இந்திரனுக்கு அளித்தான். பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணு, பூமிக்கடியில் சுதலம் என்றழைக்கப்படும் பகுதியை பலிக்கு ஒதுக்கினான்.{31} அசுரர்களின் முதன்மையான பலி, அந்தப் பகுதியைத் தன் வசிப்பிடமாக அடைந்து நிறைவடைந்தான். அதுமுதல் அசுரர்களின் மன்னனான அவன் ரஸாதலத்தில் வாழ்ந்து வருகிறான்{32}. பெரும்பிரகாசமிக்கப் பலி, அங்கே வாழ்ந்து கொண்டே பெருந்தியானத்தில் ஈடுபட்டான். நுண்ணறிவுமிக்கப் பலி, அண்டத்தால் துதிக்கப்படும் நாராயணனிடம்,{33} "ஓ! தலைவா, நான் இனி என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பாக எனக்கு ஆணையிடுவாயாக" என்றான். அப்போது தேவர்களின் தலைவனான விஷ்ணு, தைத்திய மன்னன் பலியிடம் பேசினான்.{34}(30-34)

விஷ்ணு, "ஓ! பேரசுரா, நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன்; நான் உனக்கு ஒரு வரமளிக்கத் தயாராக இருக்கிறேன்; அதை வேண்டுவாயாக. உனக்கு நன்மை நேரட்டும். விரும்பிய பொருட்களை வேண்டுவாயாக.{35} தேவர்களின் மன்னனான சக்ரனின் {இந்திரனின்} சொற்களுக்கு ஒருபோதும் எந்தச் சூழ்நிலையிலும் கீழ்ப்படியாதிராதே. இஃது உனக்கான என் ஆணையாகும்.{36} நீ கீழ்ப்படியவில்லை எனில், உன் நலத்திற்குக் கேடு நேரும். ஓ! தைத்தியா, நீ அளித்த நீரை நான் என் உள்ளங்கைக் குழியில் ஏற்றதால், எங்கும் தேவர்களிடம் இருந்து உனக்கு அச்சம் நேராது.{37,38} பாதாள லோகத்தில் சுதலம் என்றழைக்கப்படும் பகுதியில் நீயும், உன் தொண்டர்களும், தைத்தியர்கள் அனைவரும் என் தயவில் வாழ்வீராக.{39} என் ஆணையை {சாஸனத்தை} நினைவுகூர்ந்து ஒப்பற்ற ஆற்றல் படைத்த சக்ரனின் சொற்களை ஒருபோதும் அவமதிக்காதே.{40} ஓ! பேரசுரா, தேவர்கள் அனைவரும் உன்னால் வழிபடத்தகுந்தவர்களாவர். நீ விரும்பிய பொருட்கள் அனைத்தையும் அடைவாய்; இம்மையிலும், மறுமையிலும் ஆடைகள் பலவற்றையும் அடைவாய். என் தயவால் எப்போதும் நீ தைத்தியர்களின் தலைவனாக அவர்களை ஆள்வாய். நீ பல்வேறு பொருள்களை அனுபவித்துக் கொடைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்வாய்.{41,42} என்னுடைய ஆணையை நீ மீறினால் பெருஞ்சக்திவாய்ந்த நாகர்கள் தங்கள் தலைகளால் {நாகப் பாசத்தால்} உன்னைக் கட்டுவர்.{43} நீ எப்போதும் மஹேந்திரனையும், பிற தேவர்களையும் வணங்க வேண்டும். தேவர்களின் மன்னனான இந்திரன் என் அண்ணன் ஆவான்; எனவே நீ அவனது ஆணைக்குக் கீழ்ப்படிய வேண்டும்" என்றான்{44}.(35-44)

பலி, "ஓ! பெருந்தேவா, ஓ! சங்கு சக்கர, கதாதாரியே, ஓ! தேவர்களின் தேவா, ஓ! தேவாசுரர்களின் ஆசானே, ஓ! தேவர்களின் மன்னா, ஓ! தேவர்களில் முதன்மையானவனே, நான் பாதாள லோகத்தில் வாழும்போது என் நிலை என்னவாக இருக்கும்? நான் எவ்வாறு அங்கே வாழ்வேன்? என் புகழ் எவ்வாறு சிதையாமல் இருக்கும்?" என்று கேட்டான்.(45-46)

தலைவன் {பகவான்}, "ஓ! தானவர்களில் முதன்மையானவனே, ஸ்ரோத்ரியம் இல்லாத சிராத்தம், நோன்புகள் இல்லாத கல்வி, கொடைகள் இல்லாத வேள்வி, ரித்விக்குகள் இல்லாத ஹோமம், மதிப்பில்லாத கொடைகள், தூய்மையற்ற ஹவிஸ் என்ற இந்த ஆறு பாகங்களும் உனக்குச் சொந்தமாகும்.{47} என் பக்தர்களிடம் தீய மனம் கொண்டவர்களின் {பக்தத்வேஷிகளின்} அறம் {புண்ணியம்}, கிரய விக்கிரையத்தில் {கொள்முதல் செய்து விற்பனை செய்வதில்} ஈடுபடுபவர்களின் அறம் {புண்ணியம்}, அக்னிஹோத்ரங்களின் அறம், மதிப்பில்லாமல் ஈகை புரிவோரின் அறம், புரோஹிதராகச் செயல்படுகிறவர்களின் அறம் ஆகியவை, ஓ! தைத்தியர்களின் மன்னா, என் தயவால் உன் பங்காகும்" என்றான்".{48}(47,48)

வைசம்பாயனர், "அசுரர்களில் முதன்மையான பலி, உயரான விஷ்ணுவின் சொற்களைக் கேட்டு, "அவ்வாறே ஆகட்டும்" என்றான்.{49} அவன், அந்தத் தேவனின் ஆணையை மேற்கொண்டு பாதாள லோகத்தில் நுழைந்தான்.{50}

அதே நேரத்தில் தேவர்களால் துதிக்கப்படும் தெய்வீகனான விஷ்ணு, {அந்த தெய்வீக அரசில்} பிரிவினைகளை {பாகங்களை} உண்டாக்கினான்.{51} அவன், கிழக்குப் பகுதியை ஒப்பற்ற ஆற்றல் படைத்த தேவர்களின் மன்னனுக்கும் {இந்திரனுக்கும்}, தெற்குப் பகுதியைப் பித்ருக்களின் மன்னனான பெரும் யமனுக்கும்,{52} மேற்குப் பகுதியை உயரான்ம வருணனுக்கும், வடக்குப் பகுதியை யக்ஷர்களின் மன்னனான குபேரனுக்கும் கொடுத்தான்;{53} பூமிக்கு அடியில் இருந்த பகுதியை நாகர்களின் மன்னுக்கும், மேலே இருந்த பகுதியை சோமனுக்கும் அளித்தான்.{54} பெருஞ்சக்திவாய்ந்தவனும், தேவர்களின் தலைவனும், மஹாரிஷிகளால் துதிக்கப்படுபவனுமான விஷ்ணு இவ்வாறு மூவுலகங்களையும் பிரித்துக் கொடுத்துவிட்டு தெய்வீக லோகத்திற்குச் சென்றான்.{55} அடக்கப்பட முடியாதவனான அந்தக் குள்ளன் {வாமனன்} புறப்பட்டுச் சென்ற பிறகு, தேவர்கள் அனைவரும், தங்கள் முன் நூறு வேள்விகளைச் செய்தவனை {இந்திரனைக்} கொண்டு மகிழ்ச்சியில் நிறைந்தனர்".{56}(49-56)

வைசம்பாயனர், "கிருஷ்ணன், விரோசனன் மகனான பலியை ஏழு தலைகளைக் கொண்ட கம்பனன், அஷ்வதரன் முதலிய பாம்புகளால் கட்டிவிட்டுப் புறப்பட்டுச் சென்றான்.{57} தெய்வீக முனிவரான நாரதர், மேற்கண்ட விளைவால் துன்பத்தில் பீடிக்கப்பட்டிருந்த அவனிடம் தாமாகவே வந்தார்.{58}(57-58) அவன் இவ்வாறு பீடிக்கப்பட்டதைக் கண்டு கருணையில் நிறைந்த அவர் {நாரதர்}, அந்தத் தானவ மன்னனிடம், {மோக்ஷ உபாயங்களைச் சொல்லும் பொருட்டு},{59} "உன்னை விடுவிக்கும் வழிமுறைகளை நான் கண்டடைகிறேன். ஓ! தைத்தியர்களின் மன்னா, தொடக்கமும் முடிவுமற்றவனும், நித்தியனும் சிதைவற்றவனும், தேவர்களின் தேவனுமான வாசுதேவனைத்{60} தூய இதயத்துடன் தியானிப்பாயாக; உன் மனத்தை அவனிடம் அர்ப்பணித்தால் நீ உடனே முக்தியை அடைவாய்" என்றார்.{61}(59-61)

அதன்பிறகு, அந்த விரோசனன் மகன் {பலி}, கைகளைக் கூப்பி நாரதரிடமிருந்து முக்தியை அடைவதற்கான வழிமுறைகளைக் கற்றறிந்தான்.(62) அந்தப் பேரசுரன் பலி, நாரதரால் பாடப்பட்ட தெய்வீகப் பாடலைக் கற்றறிந்து, பூமியை உயர்த்திய பெருந்தேவனின் பெயர்களை ஓதத் தொடங்கினான்.(63) {அவன்} "ஓம், நித்தியனும், எல்லையற்றவனுமான பெருந்தலைவனை வணங்குகிறேன். நீரில் கிடக்கும் பத்மநாபனான தெய்வீக விஷ்ணுவை வணங்குகிறேன்.{64} எழு வடிவங்களைக் கொண்ட சக்திகளுடன் கூடிய உடலை ஏற்று மூவுலகங்களிலும் படர்ந்தூடுருவி இருப்பவன் நீயே. ஓ! தலைவா, காலனின் காலன் நீயே. என்னை நீ விடுவிப்பாயாக {எனக்கு மோக்ஷம் அருள்வாயாக}.{65} வானம் சூரியனும், சந்திரனும் அற்றிருக்கும்போதும், வேள்விகளும், தபங்களும் வீழ்ச்சியடையும் போதும், அண்டத்தை மீண்டும் படைக்க நினைப்பவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ விடுவிப்பாயாக.{66} இருபிறப்பாளரில் முதன்மையான மார்க்கண்டேயர், உன்னில் பிரம்மன், ருத்திரன், இந்திரன், வாயு, அக்னி ஆகியோரையும், ஆறுகள், பாம்புகள், மலைகள் ஆகியனவற்றையும் கண்டார். என்னை நீ விடுவிப்பாயாக {எனக்கு மோக்ஷம் அருள்வாயாக}.{67} முந்தைய கல்பத்தில், உன் வயிற்றுக்குள் நுழைந்த மார்க்கண்டேய முனி, அசைவன, அசையாதன உள்ளிட்ட மொத்த அண்டத்தையும் அங்கே கண்டார். உன் சக்தியால் நீ என்னைக் காப்பாயாக.{68} உன் அறிவால் ஆதரிக்கப்படும் யோக சக்தியை அடைந்து தனியனாக மூவுலகங்களையும் படைத்து மீண்டும் யோகத்தில் ஈடுபடுபவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{69} நீரில் கிடந்த யோகத்துயிலை அனுபவித்து, மீண்டும் படைப்பைச் சிந்திப்பவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{70} வேள்விப் பன்றியின் வடிவை ஏற்று முன்னர்ப் பூமியை உயர்த்தியவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{71} தந்தங்களால் பூமியை உயர்த்திப் பித்ருக்களுக்கான மூன்று பிண்டங்களை விதித்தவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{72} தேவர்கள் ஹிரண்யாக்ஷனுக்குப் பயந்து தப்பித்து ஓடினாலும் அவர்களைக் காத்தவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{73} பெரும் வாயைக் கொண்ட ஒரு வடிவை ஏற்று, போரில் சக்கரத்தால் ஹிரண்யாக்ஷனின் தலையைக் கொய்ந்தவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{74} முன்னர் உன்னுடைய முழக்கத்தால் தைத்தியன் ஹிரண்யகசிபு தலையும், எலும்புகளும் நொறுங்கிக் கொல்லப்பட்டான். உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{75} முற்காலத்தில் பிரம்மனின் கண் எதிரிலேயே அவ்விரு தைத்தியர்களால் வேதங்கள் கொள்ளை போன போதும் அவற்றை மீட்டவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{76} ஹயசிரனின் வடிவை ஏற்று மது கைடபர் என்ற இரு தானவர்களையும் கொன்று பிரம்மனிடம் வேதங்களைத் திருப்பிக் கொடுத்தவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{77} தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், சித்தர்கள், உரகர்கள் ஆகியோரால் உன் எல்லையைக் காண இயலாது. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{78} வேதங்களை விளக்கிச் சொல்லும் அபாந்தரதமன் என்ற பெயரைக் கொண்ட மகனைப் பெற்றவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{79} ஓ! தலைவா, அக்னிஹோத்ரமும், பிற வேதச் சடங்குகளும், பித்ருக்களை மதித்துச் செய்யப்படும் வேள்விகளும், ஹவிஸ்களும் ஆகிய அனைத்தும் உன் புதிர்களே {ரஹஸ்யங்களே}. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{80} தீர்க்கதமஸ் ரிஷி, தம்முடைய குருவின் சாபத்தால் குருடாகப் பிறந்தாலும், உன் தயவால் தமது பார்வையை மீண்டும் பெற்றார். உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{81} ராகுவால் பீடிக்கப்படும் யானையான பரிதாபத்திற்குரிய உன் பக்தனை விடுவிப்பாயாக.(82} சிதைவற்றவன் நீயே, நித்தியன் நீயே, பிரம்மத்துக்கும், பக்தர்களுக்கும் அர்ப்பணிப்புள்ளவன் நீயே. தீய வழிகளில் செல்வோரைத் தண்டிப்பவன் நீயே. என்னை நீ காப்பாயாக.{83} சங்கு, சக்கரம், கதாயுதம், அம்பறாதூணி, சாரங்க வில், கருடன் ஆகியோரை நான் வணங்குகிறேன். அவர்கள் என் தளைகளில் இருந்து என்னை விடுவிக்கட்டும்" என்று வேண்டினான்[1].{84}

[1] 64 முதல் 84ம் ஸ்லோகம் வரையுள்ள இந்தப் பகுதி வாமனஸ்தவம் என்று சொல்லப்படுகிறது. இதன் முக்கியத்துவம் இந்த அத்தியாயத்திலேயே 98 முதல் 107ம் ஸ்லோகம் வரை குறிப்பிடப்படுகிறது. இது ஸம்ஸ்கிருத மொழியில் அறிய https://harivamsam.arasan.info/2021/07/Harivamsa-Bhavishya-Parva-Adhyaya-47.html என்ற சுட்டிக்குச் செல்லவும்.

அப்போது, சங்கு, சக்கரம், கதாயுதம், {பத்மம்}அம்பறாதூணி, சாரங்கும், கருடன் ஆகியோர் தலைவனைத் தணிவடையச் செய்து, பலியை அவனது தளைகளில் இருந்து விடுவிக்கும்படி அவனை வேண்டினர்.{85}(64-85)

அப்போது தணிவடைந்த தலைவன், பாம்புகளை அழிப்பவனும், பறவைகளின் மன்னனுமான கருடனிடம், "பலியைத் தளைகளில் இருந்து விடுவிப்பாயாக" என்றான்.{86} ஒப்பற்ற ஆற்றல் படைத்த கருடன் தன் சிறகுகளை அடித்துப் பாம்புகளால் கட்டப்பட்டிருந்த பலி இருக்கும் பாதாள லோகத்திற்குச் சென்றான்.{87} கருடனின் வரவை அறிந்த பாம்புகள், பேரசுரன் பலியை விடுவித்து, வினதையின் மகன் {கருடன்} மீது கொண்ட அச்சத்தால் போகவதி நகரத்திற்குத் தப்பிச் சென்றனர்.{88} பாம்புகளை உண்பவனான கருடன், செழிப்பை இழந்த பலியிடம் சென்று, தலை குப்புற தியானித்துக் கொண்டிருந்தவனைக் கிருஷ்ணனின் தயவால் நாகபாசங்களில் இருந்து விடுவித்தான்.{89}

கருடன், "ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, ஓ! தானவர்களின் மன்னா, நீ தளைகளில் இருந்து விடுபட்டு, உன் பிள்ளைகளுடனும், நண்பர்களுடனும் பாதாள லோகத்தில் வாழ வேண்டும் என்பது உனக்கு அந்தப் பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணு இட்டிருக்கும் ஆணையாகும்.{90} ஓ! தானவா, இவ்விடத்தில் இருந்து ஓர் அங்குலமும் நகர்ந்துவிடாதே. இந்த ஒப்பந்தத்தை நீ முறித்தால் உன் தலை நூறு துண்டுகளாகச் சிதறும்" என்றான்.{91}

பறவைகளின் மன்னனுடைய {கருடனின்} சொற்களைக் கேட்ட அந்தத் தானவன் {பலி}, "நான் அந்தப் பரமனின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவேன்.{92} ஓ! பறவைகளின் மன்னா, நான் இங்கே மகிழ்ச்சியாக வாழும் வகையில் தலைவன் எனக்கான வாழ்வாதாரங்களை {ஜீவ்யோபாயங்களை} ஏற்பாடு செய்யட்டும்" என்றான்.{93}

பலியின் சொற்களைக் கேட்ட கருடன், "தலைவன் ஏற்கனவே உன் பராமரிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டான்.{94} புரோஹிதர்கள் {ரித்விக்குகள்} இல்லாமல் செய்யப்படும் வேள்விகளின் காணிக்கைகளிலும், தவ வழிமுறைகளை அறியாத நபர்களின் விதிமுறைகளிலும் உனக்கு உரிமை உண்டு.{95} தேவர்கள் அத்தகைய காணிக்கைகளை ஏற்பதில்லை. அத்தகைய வேள்விக் காணிக்கைகளால் ஊட்டம் பெற்று நீ இங்கே மகிழ்ச்சியாக வாழ்வாயாக" என்றான்"{96}.(92-96)

வைசம்பாயனர், "கசியபரின் மகனும், மூவுலகங்களையும் ஆதரிப்பவனுமான விஷ்ணு, பெருந்தோள்களைக் கொண்ட தானவர்களின் மன்னனுக்கு இந்தச் செய்தியை அனுப்பினான்.{97} பாவங்கள் அனைத்தையும் அழிக்கும் இந்தப் பாடலை மதிப்புடன் ஓதும் மனிதன், அனுபவிக்கும் கொடுமைகள் அழிந்து போகும்.{98} பசுவைக் கொன்றவன், அதன் விளைவால் உண்டாகும் பாவத்தில் இருந்து விடுபடுவான், ஒரு பிராமணனைக் கொன்றவனும் கூடத் தன் பாவங்களில் இருந்து விடுபடுவான். மகனற்ற மனிதன் மகனைப் பெறுவான். {இதை ஓதும்} கன்னிகை, தன் இதயம் விரும்பும் கணவனை அடைவாள்.{99}(97-99) பெண்ணானவள், கருவை ஈனும் வலியில் இருந்து விரைவில் விடுபட்டு ஒரு மகனைப் பெறுவாள். சாங்கிய யோகியான கபிலரும், முக்தியை விரும்பிய பிற ரிஷிகளும், இந்தப் பாடலை ஓதி பாவங்களில் இருந்து விடுபட்டு, மோக்ஷத்தின் இருப்பிடமான ஸ்வேதத்வீபத்திற்குச் சென்றனர். இந்தப் பாடல் {ஸ்தவம்} தெய்வீகப் பொருட்கள் அனைத்தையும் அருளும்.{100,101} உண்மையில், காலையில் விடியலில் எழுந்து தன்னைத் தூய்மை செய்து கொண்டு, கட்டுப்பாடு கொண்ட மனத்துடன் இதைப் படிக்கும் ஒரு மனிதன், தான் விரும்பும் அனைத்துப் பொருள்களையும் அடைகிறான்.{102} தலைவனின் குள்ள அவதாரமானது {வாமன அவதாரமானது}, வேதங்களை நன்கறிந்த விப்ரர்களால் விஷ்ணுவின் மகிமைமிக்கச் செயல்களை விளக்குவது என நினைவுகூரப்படுகிறது.{103} குள்ள அவதாரமெனும் இந்தத் தெய்வீகக் கருப்பொருளின் ஒவ்வொரு பர்வத்தையும் சொல்லும்போது மதிப்புடன் கேட்பவன், தன் பகைவர் அனைவரையும் வென்று, பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணுவைப் போலவே பெருஞ்சக்திவாய்ந்த மன்னனாவான். அவன், மாசற்ற புகழையும், ஏராளமான செல்வங்களையும், இன்பத்திற்குரிய பொருட்களையும் அடைவான்.{104,105} குள்ளன் பிடித்தமானவனாக இருப்பதைப் போலவே அவனும் அனைவரின் அன்புக்குரியவனாவான். அவனுடைய மகன்களும், பேரப்பிள்ளைகளும் பெருகுவார்கள், அவன் நோய்களில் இருந்து விடுபட்டு, அனைத்து சாதனைகளையும் செய்வான்.{106} இதைப் படிப்பவனிடம் தலைவன் ஜனார்த்தனன் நிறைவடைகிறான்; இதனால் அவன் விருப்பத்திற்குரிய அனைத்துப் பொருட்களையும் அடைகிறான். இவ்வாறே கிருஷ்ணத்வைபாயனர் {வியாசர்} சொல்லியிருக்கிறார்" என்றார் {வைசம்பாயனர்}[2].{107}(98-107)

[2] இத்துடன் பவிஷ்ய பர்வத்தின் முக்கிய அத்தியாயங்கள் அனைத்தும் மன்மதநாததத்தரின் பதிப்பில் நிறைவடைகின்றன. சித்திர சாலை பதிப்பில் இதற்குப் பிறகும், 73. கிருஷ்ணனிடம் ருக்மிணி ஒரு மகனை வேண்டுவது, 74. கிருஷ்ணன் கைலாச மலை யாத்திரையை நினைவுகூர்வது, 75. யாதவர்களிடம் துவாராவதியைக் காக்குமாறு கிருஷ்ணன் சொல்வது, 76. கிருஷ்ணன் பதரிகாஸ்ரமம் செல்வது, 77. கிருஷ்ணன் பதரிகாஸ்ரமத்தில் வரவேற்கப்படுவது, 78.கிருஷ்ணனின் சமாதிநிலை, 79. பிசாசங்களின் வருகை, 80. கண்டாகர்ணன் கிருஷ்ணனைச் சந்திப்பது, அவனது தியானம், 81. கண்டாகர்ணன் விஷ்ணுவால் தெய்வீகப் பார்வை அருளப்படுவது, 82. கண்டாகர்ணனின் விஷ்ணு துதி, 83. கண்டாகர்ணன் முக்தியடைவது, 84. கிருஷ்ணனின் தபம், 85. இந்திரனின் மேற்பார்வை, 86. சிவன் கிருஷ்ணனிடம் வருவது, 87. கிருஷ்ணனின் சிவத்துதி, 88. விஷ்ணுவைப் புகழ்ந்த சிவன், 89. கிருஷ்ணனின் வடிவை விளக்கிய மஹாதேவன், 90. சிவனின் விஷ்ணு துதி, 91.பௌண்டரகன் கதை, 92. பௌண்டரகன் நாரதர் உரையாடல், 93.துவாரகையை முற்றுகையிட்ட பௌண்டகரன், 94. யாதவர்களின் போர் முயற்சி, 95. சாத்யகி பௌண்டரகன் உரையாடல், 96. சாத்யகி, பௌண்டரகன் போர், 97. போர் தொடர்ச்சி, 98. ஏகலவ்யனின் படை அழிவது, 99. பௌண்டரகப் போர், 100. தவத்தில் இருந்து திரும்பி வந்து பௌண்டரகனுடன் போரிட்ட கிருஷ்ணன், 101. பௌண்டரக வதம், 102. வேட்டையாடப்பட்ட ஏகலவ்யன், 103. வைசம்பானரிடம் ஜனமேஜயன் கேள்வி, 104. ஹம்சன் டிம்பகன் பிறப்பு, 105. ஹம்சன், டிம்பகன் அடைந்த வரங்கள், 106. அவர்களின் வேட்டை, 107. துர்வாசரின் ஆசிரமத்தில் ஹம்சனும், டிம்பகனும், 108. சந்நியாச தர்மத்தை நிந்திப்பது, 109. ஹம்சனையும், டிம்பகனையும் கடிந்து கொண்ட துர்வாசர், 110. துவாரகை சென்ற ரிஷிகள், 111. கிருஷ்ணனிடம் முறையிட்ட துர்வாசர், 112. ஹம்சனையும், டிம்பகனையும் கொல்லப் போவதாகச் சொன்ன கிருஷ்ணன், 113. தூதனுப்பிய ஹம்சனும் டிம்பகனும், 114. தூதனாகச் சென்ற ஜனார்த்தனன், 115. ஹம்சன், டிம்பகனின் கோரிக்கைகளைத் தெரிவித்த ஜனார்த்தனன், 116.கிருஷ்ணனின் மறுமொழி, 117. ஹம்சனின் பேச்சு, 118. கிருஷ்ணனின் செய்தித் தெரிவித்த சாத்யகி, 119. துவாரகை திரும்பிய சாத்யகி, 120. புஷ்கரைக்குப் புறப்பட்ட கிருஷ்ணன், 121. இருபடைகளுக்கிடையிலான போர், 122.போர் தொடர்ச்சி, 123.விசரகன் வதம், 124. ஹம்சன் பலராமன் போர், 125. சாத்யகி டிம்பகன் போர், 126.வசுதேவரும், உக்ரசேனரும் செய்த போர். 127. கிருஷ்ணன் ஹம்சன் போர், 128. ஹம்ச வதம், 129. டிம்பகனின் தற்கொலை, 130. கிருஷ்ணனைச் சந்தித்த யசோதையும், நந்தகோபரும், 131. புஷ்கரையில் ரிஷிகளால் துதிக்கப்பட்டுத் துவாரகை திரும்பிய கிருஷ்ணன் என்ற தலைப்புகளில் இன்னும் 58 அத்தியாயங்கள் இருக்கின்றன. மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த வாமன அவதாரத்துடன் பவிஷ்ய பர்வமும், ஹரிவம்சமும் நிறைவடைகிறது. சித்திரசாலை பதிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு கிடைத்தால் மேற்சொன்ன அத்தியாயங்கள் அனைத்தையும் மொழிபெயர்க்க பேராவல்தான். இருப்பினும் அது கிடைக்காததால், "மஹாபாரதம், ஹரிவம்சம் ஆகியவற்றைப் படிப்பதால் உண்டாகும் பலன்கள்" சொல்லப்படும் பின்வரும் இரண்டு அத்தியாயங்களோடு ஹரிவம்சம் முழுமையாக நிறைவடைகிறது. பிற்காலத்தில் வாய்ப்பேற்படும்போது, நிச்சயம் மேற்சொன்ன 58 அத்தியாயங்களையும் மொழிபெயர்க்க முயற்சிப்பேன். 

பவிஷ்ய பர்வம் பகுதி – 47ல் உள்ள சுலோகங்கள் : 107

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்