Monday, 1 March 2021

அநிருத்தனுக்கான கவலையில் யாதவர்கள் | விஷ்ணு பர்வம் பகுதி – 178 – 122

(ஷ்ருதஹ்ருதாநிருத்தபாஷபந்தநஸ்ய க்ருஷ்ணஸ்ய ஷோணிதபுரகமநம்)

Anxiety of the yadavas for Aniruddha | Vishnu-Parva-Chapter-178-122 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : துவாரகையில் பெண்களின் ஓலம்; அநிருத்தனைத் தேடிச் சென்ற ஒற்றர்கள்; கிருஷ்ணனைத் துதித்த கருடன்; பாணனோடு போர்புரியச் சென்ற கிருஷ்ணன்...


Krishna and yadavas

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அநிருத்தன் பணயக் கைதியான போது, அவனது அன்புக்குரிய மனைவியரும், தோழியரும், அவனில்லாமல் அன்றில் பறவைகளைப் போல அங்கே {துவாரகையில்} அழுது கொணிடருந்தனர்.(1) {அவர்கள்}, "ஐயோ, தலைவர் கிருஷ்ணரின் பாதுகாப்பிலும் நாங்கள் அச்சத்தாலும், துயரத்தாலும் பீடிக்கப்பட்டவர்களாகவும், ஆதரவற்றவர்களாகவும் அழுது கொண்டிருக்கிறோம்.(2) எவருடைய தோள்களின் நிழலில் ஆதித்யர்கள், மருத்துகள், இந்திரனின் தலைமையிலான தேவர்கள் ஆகியோரும் தேவலோகத்தில் கவலையில்லாமல் வாழ்கின்றனரோ அவருக்கே இவ்வுலகில் இத்தகைய பேரிடர் நேர்ந்திருக்கிறது. ஐயோ, அவரது வீரப் பேரனான அநிருத்தனை அபகரித்துச் சென்றவன் எவன்?(3,4) ஐயோ, தாங்கிக் கொள்ள முடியாததாக இருக்கும் வாசுதேவரின் கோபமெனும் நெருப்பைத் தூண்டிய அந்தத் தீய மனம் படைத்தவன், இவ்வுலகில் நிச்சயம் அச்சமற்றவனே.(5) அவன், வாயை அகலமாகத் திறந்திருக்கும் யமனுடைய பற்களின் முன் நிற்கிறான். உண்மையில் அத்தகையே பகைவனாலேயே வாசுதேவனின் முன்பு போரில் நிற்க இயலும். சச்சியின் தலைவனாகவே {இந்திரனாகவே} இருந்தாலும், யது மன்னனான கேசவனுக்கு இத்தகைய தீங்கை இழைத்துவிட்டு உயிரோடு தப்ப முடியுமா?(6,7) ஐயோ, இன்று எங்கள் கணவர் அபகரிக்கப்பட்டாரோ, எங்கள் தலைவன் எங்களைக் கைவிட்டு எங்களைப் பரிதாபத்திற்குரியோர் ஆக்கினாரோ. ஓ! எங்கள் தலைவனின் பிரிவால் நாங்கள் யமனின் வசத்தை அடைந்திருக்கிறோம்" என்று சொல்லி அழுதனர்.(8)

இவ்வாறு ஓலமிட்ட அந்த அழகிய பெண்கள் தொடர்ந்து அழுது, கண்ணீரை ஏராளமாகச் சிந்தினர்.(9) கண்ணீரால் நிறைந்த அவர்களுடைய கண்கள், மழைக்காலத்தில் நீரில் மூழ்கிய தாமரைகளின் அழகுடன் திகழ்ந்தன.(10) அவர்களின் கண்கள், குருதியில் குளித்தவை போன்று தோன்றின. அந்த மாளிகையில் அந்தப் பெண்களின் அழுகையானது, ஆயிரக்கணக்கான அன்றில் பறவைகள் வானத்தில் கதறிக் கொண்டிருப்பதைப் போன்ற ஒலியை உண்டாக்கியது.(11,12)

அச்சத்தால் விளைந்ததும், கேட்கப்படாததுமான அந்த ஓலத்தைக் கேட்ட யது தலைவர்கள் அனைவரும், தங்கள் தங்கள் வீடுகளில் இருந்து திடீரென வெளியே வந்தனர்.(13) தாக்கப்படும்போது குகைகளைவிட்டு வெளியே வரும் சிங்கங்களைப் போலவே அந்த யாதவர்களும் வெளியே வந்து, அன்பால் தடைபட்ட குரலுடன், "கிருஷ்ணர் நம் அனைவரையும் முழுமையாகப் பாதுகாக்கிறார். இந்த அச்சம் எங்கிருந்து வந்தது? அநிருத்தனின் வீட்டில் ஏன் இத்தகைய ஒலி கேட்கப்படுகிறது" என்றனர்.(14,15)

அப்போது கிருஷ்ணனுடைய சபையின் பெரும் பேரிகை கொண்டு வரப்பட்டு, முழக்கப்பட்டது; அந்த ஒலியால் யாதவர்கள் அனைவரும் அங்கே கூடினர்.(16) அவர்கள் ஒருவருக்கொருவர், "என்ன காரியம்?" என்று கேட்டுக் கொண்டனர். தாங்கள் கேட்டவாறே அவர்கள் ஒவ்வொருவரும் பதிலளித்துக் கொண்டனர்.(17) போரில் பயங்கரர்களான யாதவர்கள், அதைக் கேட்டதும் கோபத்தால் சிவந்த கண்களில் கண்ணீரால் நிறைந்தவர்களாக நின்றனர்; அவர்கள் வெறிகொண்டவர்களாகப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தனர்.(18)

தாக்குபவர்களில் முதன்மையான கிருஷ்ணனே மீண்டும் மீண்டும் பெருமூச்சு விடுவதையும், மற்றவர்கள் அமைதியாக இருப்பதையும் கண்ட விப்ருது,(19) "ஓ! கிருஷ்ணா, மனிதர்களில் முதன்மையான நீ ஏன் கவலையால் பீடிக்கப்பட்டிருக்கிறாய்? உன் தோள்களின் பாதுகாப்பில் வாழும் யாதவர்கள், பெரும் எண்ணிக்கையில் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கின்றனர்.(20) பெருஞ்சக்திவாய்ந்த சக்ரன் {இந்திரன்}, வெற்றி, தோல்விக்கான பொறுப்பை உன்னிடம் ஒப்படைத்துவிட்டு மகிழ்ச்சியாக உறங்கிக் கொண்டிருக்கிறான். {பிறகு ஏன் நீ சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறாய்?}(21) உன் உற்றார் உறவினர் அடியற்ற துன்பக் கடலில் மூழ்குவதைப் பார். {ஓ! பெருங்கரங்களைக் கொண்டவனே, மூழ்கிக் கொண்டிருக்கும் அவர்களை உன்னால் மட்டுமே உயர்த்த முடியும்}.(22) உன் கவலைக்கான காரணமென்ன? ஓ! மாதவா, நீ ஏன் ஏதும் பேசாதிருக்கிறாய்? இத்தகைய வெற்று எண்ணங்களில் நீ ஈடுபடலாகாது" என்றான்.(23)

இவ்வாறு சொல்லப்பட்டவனும், பிருஹஸ்பதியைப் போன்று நுண்ணறிவுமிக்கப் பேச்சாளனுமான வாசுதேவன், சிறிது நேரம் மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டபடியே இருந்துவிட்டுப் பிறகு, "ஓ! விப்ருது, இது குறித்துச் சிந்தித்துக் கவலையடைந்தேன்.(24,25) எவ்வளவு சிந்தித்தாலும் என்னால் எதையும் தீர்மானிக்க இயலவில்லை. எனவே, நீ கேட்டாலும் மறுமொழி கூற முடியாத நிலையில் நான் இருக்கிறேன்.(26) ஓ! யாதவர்களே {தாசார்ஹர்களே}, நான் ஏன் கவலையில் நிறைந்திருக்கிறேன் என்று உண்மையாகச் சொல்கிறேன் கேட்பீராக.(27) அநிருத்தன் அபகரிக்கப்பட்டதால் பூமியின் மன்னர்களும் என் நண்பர்களும் என அனைவரும் என்னை இயலாதவனெனக் கருதுவார்கள். {நம்மை பலவீனர்கள் என்று கருதுவார்கள்}.(28) முன்னர் நம் மன்னர் ஆஹுகர் {உக்ரசேனர்} சால்வனால் அபகரிக்கப்பட்டாலும் பயங்கரப் போருக்குப் பிறகு நாம் அவரை மீட்டு வந்தோம்.(29) ருக்மிணியின் மகனான பிரத்யும்னன், தன் குழந்தைப் பருவத்தில் சம்பரனால் அபகரிக்கப்பட்டான். ஆனால் அவன் {பிரத்யும்னன்}, போரில் அவனை {சம்பரனைக்} கொன்றுவிட்டுத் திரும்பி வந்துவிட்டான்.(30) ஆனால் அநிருத்தன் எங்கே கடத்திச் செல்லப்பட்டிருக்கிறான்? ஓ! மனிதர்களில் முதன்மையானவர்களே, இத்தகைய கவலையையும், மனத் துன்பத்தையும் இதற்கு முன் நான் அனுபவித்ததாக எனக்கு நினைவில்லை.(31) சாம்பலால் மறைக்கப்பட்ட {தூசிபடிந்த} காலை என் தலையில் வைத்தவனையும், அவனது உற்றார் உறவினரையும் போரில் நான் கொல்வேன்" என்றான்.(32)

கிருஷ்ணன் இதைச் சொன்னதும், சாத்யகி, "ஓ! கிருஷ்ணா, அநிருத்தனைக் கண்டுபிடிக்க எங்கும் ஒற்றர்கள் அனுப்பப்படட்டும். மலைகளுடனும், காடுகளுடனும் கூடிய பூமியில் அவர்கள் அவனைத் தேடட்டும். வெளிப்படையாகத் தூதர்களும், மறைமுகமாக ஒற்றர்களும் இந்தப் பணியில் ஈடுபடட்டும்" என்றான்".(33,34)

வைசம்பாயனர், "கேசவனின் சொற்களைக் கேட்ட மன்னன் ஆஹுகன் {உக்ரசேனன்}, அநிருத்தனைக் கண்டுபிடிப்பதற்காக விரைந்து செல்லுமாறு தூதர்களுக்கு ஆணையிட்டான்.(35) உயரான்ம ஆஹுகன், "பூமியிலும், பூமிக்கு அடியிலும் உள்ள நாடுகள் அனைத்திலும் தேடுங்கள்" என்று ஆணையிட்டுவிட்டு, அவர்களுக்குத் தேவையான போதுமான குதிரைகளையும், தேர்களையும் கொடுத்தான்.(36) அவன், "குதிரையின் முதுகில் ஏறி விரைந்து சென்று, செடிகொடிகளாலும், மரங்களாலும் மறைக்கப்பட்டிருக்கும் {வேணுமந்த மலையிலும்}, ரிக்ஷவான் மலையிலும், ரைவதக மலையிலும் தேடுவீராக. அங்கே இருக்கும் காடுகள், தோட்டங்கள் ஆகியவற்றில் எந்தத் தயக்கமும் இல்லாமல் நுழைந்து ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் தேடுவீராக.(37,38) குதிரைகளிலும், யானைகளிலும் ஏறி விரைந்து சென்று, யாதவர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான அநிருத்தனைக் கண்டுபிடியுங்கள்" என்றான் {உக்ரசேனன்}.(39)

அப்போது படைத்தலைவனான அனாதிருஷ்டி, களைப்பில்லா செயல்பாடுகளைக் கொண்ட நித்தியனான கிருஷ்ணனிடம்,(40) "ஓ! தலைவா, கிருஷ்ணா, நீண்டகாலமாக உன்னிடம் இதைச் சொல்ல விரும்பினேன். நீ விரும்பினால், அதை இப்போது சொல்கிறேன் கேட்பாயாக.(41) அஸிலோமன், புலோமன், நிசுந்தன், நரகன், சௌபலனான சால்வன், மைந்தன், திவிவிதன் ஆகியோர் உன்னால் கொல்லப்பட்டனர்.(42) தேவர்களுக்காகப் பெரும்போர் நேர்ந்தபோது, ஹயக்ரீவனையும் அவனது உற்றார் உறவினர் அனைவரையும் நீ கொன்றாய்.(43) ஓ! கோவிந்தா, ஒவ்வொரு போரிலும் நீ இந்தப் பணிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றினாய். எவரும் உன் சாரதியாகச் செயல்படவில்லை.(44) ஓ! கிருஷ்ணா, பாரிஜாதத்தை அபகரித்தபோது, கடினமான பெருஞ்சாதனையை நீ செய்தாய்.(45) ஓ மாதவா, அந்தப் போரில் ஐராவத யானையில் அமர்ந்து வந்தவனும், போரில் திறன்மிக்கவனுமான வாசவனை {இந்திரனை} நீ உன் சொந்த தோள் வலிமையால் வென்றாய்.(46) அந்தப் போரின் விளைவாக உங்கள் இருவருக்கிடையில் பெரும்பகை மூண்டது. {பகையுடன் தொடர்புடைய பல காரியங்கள் இதில் இருக்கின்றன}.(47) அந்த மகவான்தான் {இந்திரன்தான்} அநிருத்தனை அபகரித்திருக்கிறான் என நான் நினைக்கிறேன்; உன் மீது கொண்ட பகையை அவனாலன்றி வேறு யாரால் நிறைவேற்ற முடியும்?" என்று கேட்டான்.(48)

பெருஞ்சக்திவாய்ந்த அநாதிருஷ்டி இவ்வாறு சொன்னதும், ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சு விட்ட கிருஷ்ணன்,(49) "ஓ! ஐயா, அவ்வாறு சொல்லாதே. தேவர்கள் அற்ப காரியங்களையும், நன்றியற்ற செயல்களையும் செய்பவர்களல்ல; அவர்கள் பெண்களைப் போலவும், மூடர்களைப் போலவும் செயல்படுபவர்களல்ல.(50) நான் தேவர்களின் சார்பாகத் தானவர்களை அழிப்பதற்காகக் கடும்பணிகளைச் செய்திருக்கிறேன். அவர்களை நிறைவடையச் செய்வதற்காக, போரில் செருக்குமிக்க அசுரர்களைக் கொன்றிருக்கிறேன்.(51) தேவர்கள் எனக்கு ஆதரவானவர்கள், என் மனம் அவர்களிடம் அர்ப்பணிப்பு உள்ளதாக இருக்கிறது, நான் அவர்களின் அர்ப்பணிப்புமிக்கத் தொண்டனாக இருக்கிறேன். எனவே, இவ்வாறு என்னை அறிந்த அவர்கள், எவ்வாறு எனக்குத் தீங்கிழைப்பார்கள்?(52) நீ உன்னுடைய சிறுபிள்ளைத் தனத்தால் இவ்வாறு சொல்கிறாய், அவர்கள் அற்பர்களல்ல. அவர்கள் தங்கள் தொண்டர்களிடம் வாய்மை நிறைந்தவர்களாகவும், கருணை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.(53) அவர்களிடம் இருந்து ஆபத்து நேரும் என நான் அஞ்சவில்லை. இது மஹேந்திரனாலோ, பிற தேவர்களாலோ செய்யப்பட்டதல்ல என நான் உறுதியாகச் சொல்வேன். அநிருத்தன், கணிகையரால் அபகரிக்கப்பட்டிருக்க வேண்டும்" என்றான் {கிருஷ்ணன்}".(54)

அற்புதச் செயல்களைச் செய்யும் கிருஷ்ணனின் இந்தக் கவலை நிறைந்த சொற்களைக் கேட்டு, சொற்களின் உண்மைப் பொருளைப் புரிந்து கொள்ளவல்ல அக்ரூரன், இனிய சொற்களில்,(55) "ஓ! தலைவா, இந்திரனின் பணியும், நம் பணியும் ஒன்றே, நம் பணியும் சச்சியின் தலைவனுடைய பணியும் ஒன்றே {நம் காரியத்தில் இந்திரனும், இந்திரனின் காரியத்தில் நாமும் விருப்பம் கொண்டவர்களே}.(56) நாம் தேவர்களைப் பாதுகாக்கிறோம், அவர்கள் நம்மைப் பாதுகாப்பார்கள். நாம் தேவர்களுக்காகவே மனிதர்களாகப் பிறந்திருக்கிறோம்" என்றான்.(57)

மதுசூதனனான கிருஷ்ணன், அக்ரூரனின் சொற்களால் தூண்டப்பட்டவனாக, பொருள்பொதிந்த இனிய சொற்களில்,(58) "தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள் ஆகியோராலோ, ராட்சசர்களாலோ பிரத்யும்னன் மகன் அபகரிக்கப்படவில்லை. பெருஞ்சிறப்புமிக்க அந்த வீரன், ஆண்துணை நாடும் ஏதோ ஒரு பெண்ணால் மயக்கப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும்.(59) தைத்திய, தானவப் பெண்கள் இயல்பாகவே மயங்கச் செய்பவர்கள், ஆசை கொண்டவர்கள். உண்மையில் பிராத்யும்னன் {அநிருத்தன்} அவர்களாலேயே அபகரிக்கப் பட்டிருக்க வேண்டும். வேறு எந்த இடத்தில் இருந்தும் நமக்கு அச்சம் ஏற்படுவதில்லை" என்றான்".(60)

வைசம்பாயனர், உயரான்மக் கிருஷ்ணன் இதைச் சொன்னதும், காரியத்தின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொண்ட யாதவர்கள் அனைவரும் அவனை உயர்வாக மெச்சினார்கள்.(61) சூதர், மாகதர், வந்திகள், புலவர்கள் ஆகியோர் மகிழ்ச்சியடைந்து மாதவனின் இல்லத்தில் துதிகளைப் பாடத் தொடங்கினர்.(62) அதேவேளையில், அநிருத்தனைக் கண்டுபிடிக்க அனுப்பப்பட்ட தூதர்கள் தர்பார் மண்டபத்திற்குத் திரும்பி வந்து மெதுவாகவும், கவலையுடனும்,(63) "ஓ! மன்னா, தோட்டங்கள், காடுகள், குகைகள், ஆறுகள், குளங்கள் ஆகியவற்றை நூறு முறை தேடியும் அநிருத்தனை எங்கும் காண முடியவில்லை" என்றனர்.(64)

{வைசம்பாயனர் தொடர்ந்தார்}, ஓ! மன்னா, ஜனமேஜயா, கிருஷ்ணனால் அனுப்பப்பட்ட மற்ற தூதர்களும் திரும்பி வந்து, "நாங்கள் எங்கும் தேடிவிட்டோம், ஆனால் பிராத்யும்னன் {அநிருத்தன்} காணப்படவில்லை.(65) ஓ! யது தலைவா, அநிருத்தனைத் தேடுவதற்கு நாங்கள் இதற்கு மேல் என்ன செய் வேண்டும் என்பதைச் சொல்வீராக" என்றனர்.(66)

இந்தச் சொற்களைக் கேட்ட யாதவர்கள் அனைவரும் இதயம் தளர்ந்தவர்களாகித் தங்கள் கண்களில் கண்ணீர் பெருக்கினர். அவர்கள் ஒருவருக்கொருவர், "நாம் இனி என்ன செய்வது?" என்று கேட்டுக் கொண்டனர்.(67) அவர்களில் பலர், கண்களில் கண்ணீர் நிறைந்தவராகவும், உதடுகளைக் கடிப்பவர்களாகவும், சிலர் சிடுசிடுப்பவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் நோக்கத்தை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்துச் சிந்தித்தனர்.(68) இவ்வாறு சிந்தித்த அவர்கள் பல்வேறு சொற்களைப் பேசினர். அவர்கள் பெருங்கவலையில் பீடிக்கப்பட்டவர்களாக அநிருத்தன் எங்குச் சென்றிருக்கக்கூடும் என்று சிந்தித்தனர்.(69) கோபத்தால் நிறைந்திருந்த யாதவர்கள், ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்தபடியே, அநிருத்தன் எங்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பான் என்று நினைத்து பெருங்கவலையுடன் அந்த இரவைக் கழித்தனர்.(70) அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போதே இரவும் கடந்து சென்றது. அந்நேரத்தில், பேரிகை, சங்கு ஒலிக்கும் காரியத்தில் நியமிக்கப்பட்டிருந்த மனிதர்கள் அவற்றின் ஒலிகளால் கிருஷ்ணனை அவனது மாளிகையில் இருந்து எழுப்பினர்.(71)

காலையில் சூரியன் எழுந்ததும், நாரதர் தனியொருவராகச் சிரித்தபடியே தர்பார் மண்டபத்திற்குள் நுழைந்தார்.(72) அங்கே யாதவர்கள் அனைவருடன் கூடியவனாகக் கிருஷ்ணனைக் கண்டு, அந்த மாதவனின் வெற்றியை {ஜய முழக்கத்தால்} புகழ்ந்து, உக்ரசேனனையும், பிறரையும் வணங்கினார்.(73) போரில் வெல்லப்பட முடியாதவனும், பெருஞ்சக்தி வாய்ந்தவனுமான கிருஷ்ணன், மனக்கலக்கத்துடன் இருந்தாலும் எழுந்திருந்து நாரதரை வரவேற்று நாரதருக்கு மதுபர்க்கத்தையும், பசுக்களையும் காணிக்கையளித்தான்.(74) அதன்பிறகு, அந்தத் தெய்வீக முனிவர், விலைமதிப்புமிக்க விரிப்பால் மறைக்கப்பட்ட வெண் இருக்கையில் அமர்ந்ததும், பொருள் பொதிந்த சொற்களைப் பேசத் தொடங்கினார்.(75) {நாரதர்}, "நீங்கள் அனைவரும் ஏன் அலிகளை {திறனற்றவர்களைப்} போலக் கவலையால் பீடிக்கப்பட்டவர்களாக, அமைதியானவர்களாக, உற்சாகம் இழந்தவர்களாக, ஊக்கமிழந்தவர்களாக இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.(76)

உயரான்ம நாரதர் இதைச் சொன்னதும், வாசுதேவன் மறுமொழியாக, "ஓ! மதிப்புமிக்க ஐயா,(77) ஓ! பிராமணரே, இரவில் எவராலோ அநிருத்தன் அபகரிக்கப்பட்டான். ஓ! உறுதியான நோன்புகளைக் கொண்ட முனிவரே, நீர் அவனைக் குறித்து ஏதாவது கேட்டிருந்தாலோ, பார்த்திருந்தாலோ எங்களுக்குச் சொல்வீராக. ஓ! பாவமற்றவரே, இதன் மூலம் நீர் எனக்கு நற்பணியைச் செய்தவராவீர்" என்றான்.(78,79)

உயரான்மக் கேசவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அவர் புன்னகைத்தவாறே, "ஓ! மதுசூதனா, கேட்பாயாக,(80) ஒப்பற்ற ஆற்றல்படைத்த பாணனுக்கு உஷையென்ற பெயரில் ஒரு மகள் இருக்கிறாள். அவளுக்காகவே, அப்சரஸ் சித்திரலேகை காமனின் மகனை {அநிருத்தனை} அபகரித்துச் சென்றாள்; இதன் காரணமாகத் தேவாசுரர்களுக்கு இடையிலான போரைப் போலப் பாணனுக்கும், அநிருத்தனுக்குமிடையில் பெரும்போர் மூண்டது.(81,82) {அவர்கள் இருவருக்கிடையில் பயங்கரமான பெரும்போர் மூண்டது. பிராத்யும்னனுக்கும் {அநிருத்தனுக்கும்} பாணனுக்கும்இடையிலான அந்தப் போர், பலிக்கும், வாசவனுக்கும் இடையில் நடந்த போரைப் போல இருந்தது}.(83) {பெருமைமிக்கதும், அற்புதம் நிறைந்ததுமான அந்தப் போரை நானும் கண்டேன்}. போரில் ஓயாத அநிருத்தனைக் கண்டு அஞ்சி வீழ்ந்த பாணன், தன் மாயா சக்திகளைப் பயன்படுத்தி, பாம்புக் கணைகளின் மூலம் பெருஞ்சக்தி வாய்ந்த அநிருத்தனைக் கட்டி விட்டான். ஓ! கருடத்வஜா, பாணன் அவனைக் கொல்லவே ஆணையிட்டான்;(84,85) ஆனால் அவனது அமைச்சன் கும்பாண்டன் அவ்வாறு செய்வதைத் தடுத்தான். இளவரசன் அநிருத்தன் பாணனுடன் போரில் ஈடுபட்டபோது, பின்னவன் தன் மாயா சக்தியைப் பயன்படுத்தி, பாம்புக் கணைகளின் மூலம் அவனைக் கட்டினான்.(86) அநிருத்தன் இன்னும் உயிருடன் இருக்கிறான்; அந்த வீரன் பொறுமையாகக் காத்திருக்கிறான். எனவே, ஓ! கிருஷ்ணா, வெற்றியை விரும்புகிறவர்கள் தங்கள் உயிரைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கக் கூடாது. {உயிரே போனாலும் வீரர்கள் தங்கள் துணிவைச் சார்ந்து நிலைத்து நிற்பார்கள்}. எழுவாயாக, விரைவில் நீ வெற்றியையும், புகழையும் அடைவாய்" என்றார்".(87,88)

வைசம்பாயனர், "பெருஞ்சக்திவாய்ந்தவனும், ஆற்றல்மிக்கவனுமான வாசுதேவன், அணிவகுப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான்.(89) பெருந்தோள்களைக் கொண்ட ஜனார்த்தனன், புறப்பட இருந்த நேரத்தில், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் குடிமக்கள் அவன் மீது சந்தனப் பொடிகளையும் {சந்தன சூர்ணங்களையும்}, பொரிகளையும் பொழிந்தனர்.(90)

நாரதர், "ஓ! பெருந்தோள்களைக் கொண்ட கிருஷ்ணா, நீ இப்போது கருடனை நினைப்பாயாக, அவனைத் தவிர வேறு எவனாலும் அந்த வழியில் செல்ல முடியாது.(91) ஜனார்த்தனா, அந்த வழி எவ்வளவு கடினமானது என்பதைக் கேட்பாயாக. அநிருத்தன் இப்போது இருக்கும் சோணிதபுரம், இந்த இடத்தில் இருந்து பதினோராயிரம் யோஜனைகள் தொலைவில் இருக்கிறது[1].(92) பெருஞ்சக்திவாய்ந்தவனான வினதையின் மகன், மனோவேகம் கொண்டவன்; அவன் பாணனை ஒரு கணத்தில் சுட்டிக் காட்டிவிடுவான். எனவே, ஓ! கோவிந்தா, அவனை அழுத்து வரச் செய்வாயாக; அவன் உன்னை அங்கே அழைத்துச் செல்வான்" என்றார்".(93,94)

[1] ஒரு யோஜனை என்பது 8 கி.மீ. அளவுக்கு இணையானது என்பது ஆர்யபட்டரின் குறிப்பு. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் 13 கி.மீக்கு இணையானது என்கிறார். The Ancient Geography of Indiaவில் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் {Alexander Cunningham) 13.2 கி.மீ. என்கிறார். ஒரு யோஜனை என்பது 1.6 கி.மீ. தான் என்று சிலர் வாதிடுகின்றனர். தகவல்: https://en.wikipedia.org/wiki/Yojana. எனவே ஒரு யோஜனை 1.6 கி.மீ.ஆக இருந்தால், இந்தத் தொலைவு 17,600 கி.மீ வரும். 8 கி.மீ-ஆக இருந்தால், 88,000 கி.மீ., 13.2 கி.மீ.-ஆக இருந்தால், 1,45,200 கி.மீ. பூமியின் சுற்றளவே 40,075 கி.மீ. தான் என்பது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது. சென்னையில் இருந்து உத்திரப்ரதேசத்தின் பிரயாக் செல்லும் தொலைவு 1760 கி.மீ. ஆகும். இந்தத் தொலைவை கற்பனையில் எண்ணிப் பார்க்கவும், ஒரு யோஜனை என்பது எவ்வளவு தொலைவு இருக்கலாம் என்பதை ஆய்ந்தறியவும் மட்டுமே இந்தத் தகவல்கள் இங்கே அளிக்கப்படுகின்றன.

வைசம்பாயனர், "நாரதரின் சொற்களைக் கேட்ட கோவிந்தன், தன் மனத்தில் கருடனை நினைத்தான்; அவனும் கூப்பிய கரங்களுடன் கிருஷ்ணனின் முன்பு வந்து நின்றான்.(95) வினதையின் பெருமைமிக்க மகனான அவன் {கருடன்}, உயரான்மா கொண்ட தேவகியின் மகனை வணங்கிவிட்டு, இனிய சொற்களில்,(96) "ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, தாமரை உந்தி படைத்த தலைவா, ஏன் என்னை நினைத்தாய்? நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய விரும்புகிறேன்.(97) ஓ! தலைவா, நான் எவனுடைய நகரத்திற்குச் சென்று அதனை அழிக்க வேண்டும். கோவிந்தா, உன் காந்தியையும், என் பலத்தையும் அறியாதவன் எவன்?(98) ஓ! வீரா, ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, உன் கதாயுதத்தின் வலிமையையும், உன் சக்கரத்தின் நெருப்பையும் அறியாதவன் எவன்? செருக்கால் தன் அழிவை விரும்பும் அந்த மூடன் எவன்?(99) காட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட பலதேவன், தன் சிங்கமுகக் கலப்பையை யாருடைய கழுத்தில் வைக்கப் போகிறான்? ஓ! தலைவா, இன்று எவனுடைய உடல் பிளக்கப்பட்டுப் பூமியில் விழப் போகிறது?(100) ஓ மாதவா, உன் சங்கின் முழக்கத்தலால் இன்று எவனுடைய மனம் கலங்கப் போகிறது? குடும்பத்துடன் யமலோகம் செல்லப் போகிறவன் எவன்?" என்று கேட்டான்.(101)

வினதையின் நுண்ணறிவுமிக்க மகன் இதைச் சொன்னதும், வாசுதேவன், {பின் வரும் சொற்களைச் சொன்னான். ஓ! பேசுபவர்களில் முதன்மையானவனே, அந்தச் சொற்களைக் கேட்பாயாக. அவன்},(102) "ஓ! பறவைகளில் முதன்மையானவனே, கேட்பாயாக. வெல்லப்பட முடியாத அநிருத்தன், சோணித நகரத்தில் {பலியின் மகனான} பாணனால் உஷைக்காகச் சிறை பிடிக்கப்பட்டிருக்கிறான். காமம் நிறைந்த அநிருத்தன் நஞ்சுமிக்கப் பாம்புகளால் கட்டப்பட்டிருக்கிறான்.(103) ஓ! பறவைகளின் மன்னா, அவனை விடுவிக்கவே நான் உன்னை அழைத்தேன். {வேகத்தில் உனக்கு இணையானவன் வேறு எவனும் இல்லை. நீ பறவைகளில் முதன்மையானவன். ஓ! கசியபரின் மகனே}, ஓ! பெருஞ்சக்தி கொண்டவனே, அந்த வழியில் வேறு எவராலும் செல்ல முடியாது.(104) எனவே, அநிருத்தன் இருக்கும் இடத்திற்கு என்னை விரைவாகக் கொண்டு செல்வாயாக. ஓ! வீரா, உன் மருமகளான வைதர்ப்பி {பிரத்யும்னன் மனைவியான ருக்மவதி}, தன் மகன் மீது கொண்ட அன்பின் காரணமாகவும், {அவனைக் காணும் ஆவலிலும்} தொடர்ந்து அழுது கொண்டிருக்கிறாள்.(105) அந்தப் பெண், உன் ஆதரவினால் தன் மகனுடன் சேரட்டும். ஓ! வீரா, ஓ! பெருங்கரங்களைக் கொண்டவனே, ஓ! பாம்புகளைக் கொல்பவனே, முன்பு என்னுடன் சேர்ந்து நீ அமுதத்தை அபகரித்துச் சென்றாய். நீ என் வாகனமானாய்[2], விருஷ்ணிகள் அனைவரும் உன் தொண்டர்களே {பக்தர்களே}. அன்பாலும், அர்ப்பணிப்பாலும் வைக்கப்படும் வேண்டுகோளை இன்று நீ காப்பாயாக.(106,107) என் நற்பணிகளின் மீது ஆணையாகச் சொல்கிறேன், பறவைகளின் மத்தியில் உன்னைப் போல வேகமாகப் பறக்கக்கூடியவர் வேறு எவருமில்லை. {அறச்செயல்களின் விளைவாக நான் உன்னிடம் பேசுகிறேன்}.(108) உன் சிறகுகளை அடித்துப் போர்வீரர்களைக் கொன்று தனியொருவனாகவே அடிமைத்தளையில் இருந்து நீ உன் அன்னையை விடுவித்தாய்.(109) பலத்துடன் கூடியவனான நீ தேவர்களை முதுகில் சுமந்தபடியே கடக்கமுடியாத பல நாடுகளில் திரிகிறாய். உன் உதவியால் அவர்களும் வெற்றிகளை ஈட்டுகிறார்கள்.(110) கனத்தில் மேருவைப் போன்றவனாகவும், கனமற்றவற்றில் காற்றைப் போன்றவனாகவும் நீ இருக்கிறாய். உன்னைப் போன்ற பெருஞ்சக்திவாய்ந்தவர்கள் எவரும் இதற்கு முன்பும் இருந்ததில்லை, இப்போதும் இல்லை, எதிர்காலத்திலும் ஒருவரும் இருக்கப் போவதில்லை.(111) ஓ! பெருமைமிக்கவனே, பெரும்பிரகாசம் கொண்டவனும், வாய்மை நிறைந்தவனுமான வினதையின் மகனே, அநிருத்தனுக்காக இப்போது நீ எங்களுக்கு உதவி செய்வாயாக" என்று கேட்டான்.(112)

[2] மஹாபாரதம் ஆதிபர்வம் 33:16ல் உள்ள செய்தியை இது நினைவுக்குக் கொண்டு வருகிறது. 

கருடன், "ஓ! பெருந்தோள்களைக் கொண்ட கிருஷ்ணா, உன் சொல் ஆச்சரியமானது. ஓ! கேசவா, என் வெற்றிகள் அனைத்தும் உன் ஆதரவால் கிட்டியவை.(113) ஓ! மதுசூதனா, நீ இவ்வாறு என்னைப் புகழ்ந்ததால் நான் மதிக்கப்பட்டவனும், அருளப்பட்டவனுமாக ஆனேன். ஓ! பெருந்தோள்களைக் கொண்ட கிருஷ்ணா, உன் மகிமைகள் துதிக்கப்பட்டாலும் நீ என் புகழைப் பாடினாய்.(114) வேதங்களின் தலைவனும், தேவர்களின் ஆட்சியாளனும், விருப்பங்கள் அனைத்தையும் கொடுப்பவனும், நிச்சயம் பயனைத் தரும் பார்வை கொண்டவனும், வரங்களை நாடுவோருக்கு அவற்றைக் கொடுப்பவனும் நீயே.(115) நான்கு கரங்களையும், நான்கு வடிவங்களையும் {வாசுதேவ, சங்கர்ஷன, பிரத்யும்ன, அநிருத்த மூர்த்திகளைக்} கொண்டவன் நீயே; நான்கு வகை நெருப்புகளையும் {சதுர்ஹோத்ரத்தையும்}, நான்கு ஆசிரமங்களையும், நான்கு வர்ணங்களையும் விதித்தவனும், பெரும்புலவனும் {பெரும் நுண்ணறிவுமிக்க மகாகவியும்} நீயே.(116) ஓ! தலைவா, {சாரங்க} வில், {சுதர்சனச்} சக்கரம், {பாஞ்சஜன்ய} சங்கு ஆகியவற்றைத் தரிப்பவன் நீயே. முந்தைய உடல்களில் {கூர்ம, வராக அவதாரங்களில்} பூமியைத் தாங்குபனாக அறியப்பட்டவன் நீயே;(117) கலப்பை {லாங்கலம்}, கதாயுதம் {முசலம்}, சக்கரம் {ஆகியவற்றைத் தரிப்பவனும் {பலராமனும், விஷ்ணுவும்}, தேவகியின் மகனும் {கிருஷ்ணனும்}, சாணூரனைக் கலங்கடித்தவனும், பசுக்களை விரும்புகிறவனும், கம்சனைக் கொன்றவனும்,(118) கோவர்த்தன மலையைத் தூக்கியவனும், பெரும் மற்போர் வீரனும், அவர்களுக்குப் பிடித்தமானவனும், அவர்களை ஆதரிப்பவனும் நீயே; பெரும்புருஷன் நீயே;(119) பிராமணர்களை விரும்புகிறவனும், எப்போதும் அவர்களுக்கு நன்மை செய்வதில் ஈடுபடுகிறவனும், அவர்களை ஆதரிப்பவனும் நீயே. பிரம்மம் என்றும், தாமோதரன் என்றும், பிரலம்பன், கேசி ஆகியோரையும், பிற தானவர்களையும் கொன்றவன் என்றும் அறியப்படுபவன் நீயே.(120) ஓ! தலைவா, அசிலோமன், வாலி, ராவணன் ஆகியோரை அழித்தவனும், விபீஷணன், சுக்ரீவன் ஆகியோருக்கு நாட்டைக் கொடுத்தவனும் நீயே.(121) {வாமன அவதாரத்தில்} பலியின் நாட்டையும், ரத்தினங்கள் அனைத்தையும் {கௌஸ்துப ரத்தினத்தையும்} எடுத்துக் கொண்டவன் நீயே, பெருங்கடலில் பிறந்த பெரும் ரத்தினம் {தன்வந்திரி} நீயே.(122) மேருவின் வடிவில் இருக்கும் உன்னில் இருந்தே ஆறுகள் அனைத்தும் ஊற்றெடுக்கின்றன. வாள்தரித்தவனும், பெரும் வில்லாளியுமான தலைவன் வருணன் நீயே. {நஆந்தகம் என்ற வாள் தரித்தவனும், சரங்க வில் தரித்தவனும், வில்லாளிகளில் சிறந்தவனும் நீயே}.(123) தாசார்ஹன், கோவிந்தன் என்ற பெயர்களில் அறியப்படுபவன் நீயே. {விற்களை விரும்புகிறவனாக இருந்து பெரும் வில்லை [சாரங்கத்தை] தரிப்பவன் நீயே}., பெருங்கடலைக் கடைந்தவன் நீயே,(124) வானம் நீயே, இருள் நீயே பல பலன்களைத் தரும் சொர்க்கம் நீயே, தேவலோகத்தைத் தாங்கும் பெரியவன் நீயே.(125) ஓ! தலைவா, பெரும் மேகமும், மூவுலகங்களின் வித்தும், {கோப நெருப்பால் மூவுலகங்களை ஒடுக்குபவனும்}, கோபம், பேராசை {லோபம்}, விருப்பம் ஆகியவையும் நீயே.(126) {ஆசைகளைக் கொடுப்பவனும், ஆசையும் நீயே}, பெரும் வில்லாளியும், காமனும், அழிவு, மறுமலர்ச்சி எனும் பெருஞ்சக்கரமும் {பெரும்புகலிடமும்} நீயே.(127) வடிவங்களை அறிந்தவனும், அவற்றுடன் கூடியவனுமான ஹிரண்யகர்ப்பனும் {பிரம்மனும்}, மதுசூதனனும், படைப்பாளனும், பெருந்தேவனும், எண்ணற்ற குணங்களைக் கொண்டவனும் நீயே.(128) ஓ! யதுக்களில் முதன்மையானவனே, உன் மகிமைகளே துதிக்கப்பட வேண்டுமென்றாலும் நீ என் புகழைப் பாட விரும்புகிறாய். பயங்கரம் நிறைந்த உயிரினங்கள்,(129) உன் கண்களால் பார்க்கப்பட்டால், யமதண்டத்தால் கொல்லப்பட்டு நரகை அடைகின்றன. ஓ! மாதவா, உன் ஆதரவுடன் கூடிய அன்புப் பார்வையைப் பெறும் உயிரினங்கள்,(130) இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியை அடைகின்றன. ஓ! பெருங்கரங்களைக் கொண்டவனே, நான் இப்போது உன் வசத்தில் இருக்கிறேன்" என்றான் {கருடன்}.(131)

அப்போது புறப்படுவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்திய கருடன் கேசவனிடம், "ஓ! பெருஞ்சக்திவாய்ந்த வீரா, நான் இங்கே காத்திருக்கிறேன், நீ என் முதுகில் ஏறுவாயாக" என்றான்.(132)

அப்போது கருடனின் கழுத்தை ஆரத்தழுவி கொண்ட மாதவன், "ஓ! தோழா, பகைவனைக் கொல்வதற்காக இந்த அர்க்கியத்தை ஏற்பாயாக" என்றான்.(133)

பெருந்தோள்களைக் கொண்டவனும், சங்கு, சக்கர, கதாதாரியுமான புருஷோத்தமன் {கிருஷ்ணன்}, சுபர்ணனுக்கு {கருடனுக்கு} அர்க்கியம் அளித்த பிறகு அவனுடன் முதுகில் ஏறி அமர்ந்தான்.(134) அவன் மிகச் சிறந்த கங்கணங்களால் அலங்கரிக்கப்பட்டவனாகவும், கரிய மயிர் கொண்டவனாகவும் கரியவனகாவும், வெற்றியாளனாகவும் இருந்தான்;(135) அவன் நான்கு வரிசை பற்களையும் {தாடைகளையும்}, நான்கு கரங்களையும் கொண்டிருந்தான். அவன் நான்கு வேதங்களுக்கும், அவற்றின் அங்கங்களுக்கும் அதிகாரியாக இருந்தான், மார்பில் ஸ்ரீவத்சம் என்ற மாயக் குறியையும், தாமரை போன்ற கண்களையும், சிலிர்த்த மயிரையும், மென்மையான பேச்சையும்,(136) இணையான விரல்களையும், நகங்களையும், சிவந்த விரல்களையும், சிவந்த நகங்களையும், சிவந்த கண்களையும் கொண்டிருந்தான். அவனுடைய குரல் இனிமையானதாக இருந்தது. {அவனுடைய பெரிய கரங்கள் பருத்திருந்தன}.(137) முட்டி வரை நீளும் கரங்களையும், தாமிரவண்ண முகத்தையும் அவன் கொண்டிருந்தான். அவனுடைய நடை சிங்கத்தைப் போல இருந்தது, ஆயிரஞ்சூரியர்களின் பிரகாசத்தை அவன் கொண்டிருந்தான்.(138) உயிரினங்களின் தலைவனும், அவற்றைப் பாதுகாப்பவனும், அவற்றோடு அடையாளங்காணப் படுபவனும் அவனே. தலைவன் பிரஜாபதி {கசியபர்}, மகிழ்ச்சியுடன் அவனுக்கு எட்டு வகை ஆன்ம சக்திகளை {அஷ்டைஸ்வர்யங்களை} அளித்தார். அவன் நித்தியமானவன். பிரஜாபதி, சாத்யர்கள், தேவர்கள்,(139) வந்திகள், மாகதர்கள், பெரும் ரிஷிகள், வேத, வேதாங்கங்களில் திறன்மிக்கவர்கள் ஆகியோர் அவனுடைய தூய மகிமைகளைத் துதிக்கின்றனர்.(140) பெருஞ்சக்திவாய்ந்த வாசுதேவன், துவாரகா நகரைப் பாதுகாப்பதற்கான ஆணைகளை வழங்கிவிட்டுப் புறப்படுவதற்கு ஆயத்தமானான்.(141)

கிருஷ்ணன், கருடனின் முதுகில் அமர்ந்ததும், ஹலாயுதனும் {பலராமனும்}, பகைவரைக் கலங்கடிப்பவனான பிரத்யும்னனும் அவனுக்குப் பின்னால் அமர்ந்தனர்.(142) அந்த நேரத்தில் சித்தர்களும், சாரணர்களும், பெரும் முனிவர்களும் வானத்தில் இருந்து கேசவனிடம், "ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, பாணனையும், அவனது தொண்டர்களையும் வெல்வாயாக. பெரும்போரில் உன் முன்பு எவனாலும் நிற்க இயலாது. செழிப்பின் தேவியான லக்ஷ்மி உன் மகிழ்ச்சியைச் சார்ந்தே இருக்கிறாள், உண்மையில் வெற்றி என்பதே உன் பலத்தைச் சார்ந்தே இருக்கிறது. உன் பகைவனான அந்தத் தைத்திய மன்னனையும் {பாணனையும்}, அவனது தொண்டர்கள் அனைவரையும் போரில் நிச்சயம் நீ வீழ்த்துவாய்" என்றனர். கேசவன் அந்தச் சொற்கள் அனைத்தையும் கேட்டவாறே சென்றான்" என்றார் {வைசம்பாயனர்}.(143-145)

விஷ்ணு பர்வம் பகுதி – 178 – 122ல் உள்ள சுலோகங்கள் : 145
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்