(வியாஸம் ப்ரதி ராஜஸூயவிஷயே ஜநமேஜயப்ரஷ்நம்)
Vyasa's presence at Janamejaya's sacrifice | Bhavishya-Parva-Chapter-02 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : நாக வேள்வி நிறைவடைந்ததும், ராஜசூய வேள்வி செய்ய விரும்பி அதற்கான பொருட்களைத் திரட்டிய ஜனமேஜயன்; வியாசர் அங்கே வந்தது; ஜனமேஜயனின் ஐயங்களைத் தீர்த்தது...
சௌனகர் {சௌதியிடம்}, "வியாசரின் சீடரால் {வைசம்பாயனரால்} மீளுரைக்கப்பட்டதைப் போலவே அனைத்துப் பர்வங்களுடன் ஹரிவம்சத்தை மொத்தமாக எனக்கு உரைத்திருக்கிறாய்.(1) அமுதத்தைப் போன்றதும், பாவங்கள் அனைத்தையும் அழிக்கவல்லதுமான முடிவற்ற ஹரிவம்ச வரலாறு நம்மை நிறைவடையச் செய்யட்டும்.(2) ஓ! பொறுமையுடன் கூடியவனே, இந்த வரலாறு காதுகளுக்கு இனிமையாக இருப்பதால் எங்கள் இதயங்களுக்கு {மனங்களுக்குப்} பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. ஓ! சௌதி, சர்ப்ப யக்ஞம் {நாக வேள்வி} நிறைவடைந்ததும் அற்புதமிக்க இந்த வரலாற்றை {ஹரிவம்சத்தைக்} கேட்ட பிறகு, மன்னன் ஜனமேஜயன் என்ன செய்தான்?" என்று கேட்டார்.(3)

