Saturday 25 April 2020

குரோஷ்டுவின் குடும்பம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 34

(விருஷ்ணி வம்ச வர்ணனம்)

Krousthu's Family | Harivamsa-Parva-Chapter-34 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : குரோஷ்டுவின் மகன்கள்; விருஷ்ணி குலத்தின் மூன்று கிளைகள்; உக்ரஸேனரின் மகளான ஸுகாத்ரியை மணந்து கொண்ட அக்ரூரர்; குரோஷ்டுவின் மூன்றாவது மகனான சூரன்; சூரனுக்குப் பிறந்த வஸுதேவனும், மேலும் ஒன்பது பேரும்; சூரனுக்குப் பிறந்த ஐந்து மகள்கள்; அவர்களுடைய சந்ததிகள்...

Vrishni Heroes - depiction from 4th century

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "குரோஷ்டுவுக்குக் காந்தாரி மற்றும் மாத்ரி என இரு மனைவிகள் இருந்தனர்; அவர்களில் காந்தாரி, பெருஞ்சக்தி கொண்ட அனமித்ரனைப் பெற்றாள், மாத்ரி, யுதாஜித் மற்றும் தேவமீடுஷன் ஆகியோரைப் பெற்றாள். அங்கே விருஷ்ணி குலத்தின் மூன்று கிளைகள் இருப்புக்கு வந்தன.(1,2) மாத்ரியின் மகன் {யுதாஜித்}, விருஷ்ணி மற்றும் அந்தகன் என்ற இரு மகன்களைப் பெற்றான். விருஷ்ணியின் மகன்கள், சுவபல்கன் மற்றும் சித்ரகன் ஆகியோராவர்.(3) ஓ! மன்னா, சுவபல்கன் எங்கெல்லாம் வாழ்ந்தானோ, அங்கெல்லாம் நோயையோ, பஞ்சத்தையோ குறித்த அச்சமில்லை.(4) ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, ஒரு காலத்தில் மழைத்தேவனான இந்திரன் காசி மன்னனின் நிலப்பரப்பில் மூன்று ஆண்டுகளாக மழைபொழியாதிருந்தான்.(5)



அதன்படி அந்த மன்னன் மதிப்புக்குரிய சுவபல்கனை தன் நாட்டுக்கு அழைத்து வந்தான். அவன் அங்கே வாழ்ந்து வந்ததன் விளைவால் இந்திரன் மழையைப் பொழிந்தான்.(6) சுவபல்கன், காசி மன்னனின் மகளான காந்தினியைத்[1] தன் மனைவியாக அடைந்தான். அவள் {காந்தினி} நாள்தோறும் பிராமணர்களுக்குப் பசுக்களைக் கொடுத்து வந்தாள்.(7) அவள் தன் தாயின் கருவறையில் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தாள். அவ்வாறு அவள் தன் தாயின் கருவறையில் பல ஆண்டுக்ள வாழ்ந்து வந்ததால், அவளுடைய தந்தை, அவளிடம், "விரைவில் பிறப்பாயாக. உனக்கு நன்மை நேரட்டும், ஏன் நீ இன்னும் அங்கே வாழ்வகிறாய்?" என்று கேட்டான். கருவறையில் இருந்த மகள், "நான் நாள்தோறும் ஒரு பசுவைக் கொடையளிப்பேன். இதற்கு நீர் உடன்பட்டால் நான் பிறப்பேன்" என்று மறுமொழி கூறினாள். தந்தை, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லித் தன் மகளின் விருப்பத்தை நிறைவேற்றினான்.(8-10)

[1] காம்+தினி; காம்தததி = பசுவைக் கொடையளிப்பவள் என்பதால் காந்தினி எனக் கொள்க

சுவபல்கன், காந்தினி என்ற அந்தப் பெண்ணிடம் வீரனும், தயாளனும், சாத்திரங்களை நன்கறிந்தவனும், பல யாகங்களைச் செய்தவனும், பல கொடைகளை அளித்தவனும், விருந்தினர்களுக்கு அன்பானவனுமான அக்ரூரனைப் பெற்றான்.(11) உபாசஞ்சன் {உபாஸங்கன்}, சத்கு {மத்ரு}, மிருதுரன், அரிமேஜயன், அரிக்ஷிபன் {அவிஹிபன்}, உபேக்ஷன், சத்ருக்னன், அரிமர்தனன், தர்மத்ருக், யதிதர்மன், கித்ரமோஜன் {கிருத்ரன்}, {போஜன்}, அந்தகன், ஆவாஹு, பிரதிவாஹு ஆகியோர் அக்ரூரனுடன் பிறந்தோராவர். அழகிய ஸுந்தரி அவனுடைய தங்கையாக இருந்தாள்.(12,13) ஓ! குருவின் வழித்தோன்றலே, அக்ரூரன், உக்ரசேனனின் மகளான ஸுகாத்ரியிடம், தேவர்களைப் போன்ற சக்திமிக்கவர்களான பிரஸேனன் மற்றும் உபதேவன் ஆகியோரைப் பெற்றான்.(14) பிருது, விப்ருது, அஷ்வக்ரீவன், அஷ்வபாஹு, ஸுபார்ஷ்வகன், கவேஷி {கவேஷணன்}, அரிஷ்டனேமி, அஷ்வன், ஸுதர்மன், தர்மப்ருத், ஸுபாஹு, பஹுபாஹு ஆகியோர் அக்ரூரனுடன் {அக்ரூரனின் தாத்தா சுவபல்கனுடன்} பிறந்தவனான சித்ரகனின் மகன்களாவர். அவனுக்கு {சித்ரகனுக்கு} சிரவிஷ்டை மற்றும் சிரவணை என்ற பெயர்களில் இரு மகள்களும் இருந்தனர்.

குரோஷ்டுவின் மூன்றாவது மகன் தேவமீடுஷன் அஷ்மகியிடம் சூரன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான். அவன் {சூரன்}, தன்னுடைய போஜ ராணியிடம் {மாரிஷையிடம்} பத்து மகன்களைப் பெற்றான்.(15-17) அவர்களில் வலிமைமிக்கக் கரங்களையும், ஆனகதுந்துபி என்ற பட்டப்பெயரையும் கொண்டவ வஸுதேவன் முதலில் பிறந்தான். அந்நேரத்தில் சொர்க்கத்தில் எக்காளங்களின் ஒலிகளும், பூமியில் துந்துபிகளின் பேரொலிகளும் எழுந்தன. சூரனின் வீட்டில் பெரும் மலர்மாரி பொழிந்தது. வஸுதேவனின் அழகு, மனிதர்களின் உலகில் ஒப்பற்றதாக இருந்தது. மனிதர்களில் முதன்மையானவனான அவன் சந்திரனைப் போன்ற அழகு நிறைந்தவனாக இருந்தான்.(18-20) அதன் பிறகு, தேவபாகன், தேவஷ்ரவன், அனாத்ருஷ்டி, கனவகன், வத்ஸாவான், கிருஞ்ஜிமன், சியாமன், சமீகன், கண்டூஷன் ஆகியோர் வரிசையாகப் பிறந்தனர். இவர்களே சூரனின் பத்து மகன்களாவர். இவர்களைத் தவிரச் சூரனுக்கு, பிருதுகீர்த்தி, பிருதை, சுருததேவி, சுருதசிரவை மற்றும் ராஜாதிதேவி என்ற ஐந்து அழகிய மகள்களும் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் வீரமிக்க மகன்களை ஈன்றனர்.

ஓ! குருவின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, குந்தி மன்னன் {குந்திபோஜன்} பிருதையை {சூரனின் இரண்டாம் மகளைப்} பெற விரும்பினான்.(21-23) எனவே, சூரன், முதியவனும், வழிபடத்தகுந்தவனுமான குந்திபோஜனுக்கு அவளை {தன் இரண்டாம் மகளான பிருதையை} அளித்தான். இவ்வாறு அவள் {பிருதை} குந்திபோஜனால் தத்தெடுக்கப்பட்டதன் விளைவாக அவள் குந்தி என்ற பெயரைப் பெற்றாள்.(24)

அந்தன், {சூரனின் மூன்றாம் மகளான} சுருததேவியிடம் ஜக்ருஹுவைப் பெற்றான்.

சேதியின் மன்னன், {சூரனின் நான்காம் மகளான}சுருதசிரவையிடம் பெருஞ்சக்திமிக்கச் சிசுபாலனைப் பெற்றான்.(25) அவன் தன்னுடைய முற்பிறவியில் ஹிரண்யகசிபுவாக இருந்தான்.

விருத்தசர்மன், {சூரனின் முதல் மகளான} பிருதுகீர்த்தியிடம் பெருஞ்சக்திமிக்க வீரனும், கரூஷ மன்னனுமான தந்தவக்ரனைப் பெற்றான்.

குந்திபோஜன் {சூரனின் இரண்டாம் மகளான} பிருதையைத் தன் மகளாகத் தத்தெடுத்தான். பாண்டு அவளைத் {பிருதையைத்/ குந்தியைத்} திருமணம் செய்து கொண்டான்.(26,27) அறவோனான யுதிஷ்டிரனை தர்மனும், பீமசேனனை வாயுவும் (காற்றின் தேவனும்), வீரர்களில் முதன்மையானவனும், சக்தியில் தன்னைப் போன்றவனும், உலகில் கொண்டாடப்பட்டவனுமான தனஞ்சயனை[2] இந்திரனும் அவளிடம் பெற்றனர்.

[2] "இஃது அர்ஜுனனின் மற்றுமொரு பெயராகும். அவன் வளங்களின் தேவனான குபேரனை வீழ்த்தியதால் இந்தப் பெயரைப் பெற்றான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

விருஷ்ணி மகன்களில் இளையவனான {க்ரோஷ்டு மூலம் காந்தாரிக்குப் பிறந்த} அனமித்ரனிடம் ஸினி/சினி பிறந்தான்.(28,29) அவனுடைய மகன் ஸத்யகனும், அவனுடைய {ஸத்யகனின்} மகன்கள் யுயுதானனும், ஸாத்யகியுமாவர்?[3]. யுயுதானனின் {ஸாத்யகியின்} மகன் அஸங்கனும், அவனுடைய {அஸங்கனின்} மகன் பூமியும் ஆவர். அவனுடைய {பூமியின்} மகன் யுகந்தரனோடு அந்தக் குலத்தின் வரிசை முடிந்து.

பெரும் உத்தவன், {சூரனின் இரண்டாம் மகனான} தேவபாகனின் மகனாவான். அவன் கல்விமான்களில் முதன்மையானவனாகவும், தேவர்களைப் போன்ற சிறப்புமிக்கவனாகவும் அறியப்பட்டான்.

{சூரனின் நான்காம் மகனான} அனாதிருஷ்டி தன் மனைவியான அஷ்மகியிடம் நிவ்ருத்தசத்ரு என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான்.

{சூரனின் மூன்றாம் மகனான} தேவசிரவன், சத்ருக்னன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான்.(32) தேவசிரவனின் {மற்றொரு} மகன் ஏகலவ்யன் நிஷாதர்களால்[4] வளர்க்கப்பட்டு, அதன்படியே நைஷாதி என்று அழைக்கப்பட்டான் {என்று நாம் கேள்விப்படுகிறோம்}[5].(33)

{சூரனின் ஆறாம் மகனான} வத்ஸவானுக்குப் பிள்ளையில்லை என்பதால் சூரனின் மகனான பலமிக்க {சூரனின் மகன்களில் மூத்தவனான} வசுதேவன், தனக்குப் பிறந்த வீர மகன் கௌசிகனை அவனுக்குக் கொடுத்தான்.(34)

[3] இங்கே மன்மதநாததத்தரின் பதிப்பில் யுயுதானனும், சாத்யகியும் வெவ்வேறாகக் காட்டப்படுகின்றனர். நிச்சயம் இது பிழையாகவே இருக்க வேண்டும். தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "ஸாத்யகி என்கிற யுயுதானன்" என்று இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஸத்யகனின் மகன் யுயுதான சாத்யகி ஆவான்" என்றிருக்கிறது.

[4] தாழ்ந்த சாதி மக்கள் என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "தேசிரவனுக்கு மற்றொரு மகன் இருந்தான் என்றும், அவன் ஏதோவொரு காரணத்திற்காகக் குழந்தைப் பருவத்திலேயே வெளியேற்றப்பட்டு, பழங்குடி மக்களால் வளர்க்கப்பட்டான் என்றும் நாம் கேள்விப்படுகிறோம், அவனை அவர்கள் ஏகலவ்யன் என்று அழைக்கிறார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "சுருததேவன் சத்ருக்னன் என்ற பெயரில் ஒரு மகனைக் கொண்டிருந்தான். அவனுக்கு மற்றொரு மகனும் இருந்தான் அவன் உன்னதமற்ற நிஷாதர்களால் வளர்க்கப்பட்டான் என்றும் கேள்விப்படப்படுகிறது. அவன் நிஷாதர்களால் வளர்க்கப்பட்டான், அவனுடைய பெயர் ஏகலவ்யன் ஆகும்" என்றிருக்கிறது.

{சூரனின் பத்தாம் மகனான} கண்டூஷனுக்கும் பிள்ளை இல்லை என்பதால், சாருதேஷ்ணன், ஸுசாரு, பஞ்சாலன், க்ருதலக்ஷணன் என்ற நான்கு மகன்களை விஷ்வக்ஸேனன் {விஷ்ணு} அவனுக்குக் கொடுத்தான்.(35) அந்த வீரன் (சாருதேஷ்ணன்} போர்க்களத்தில் போரிடாமல் ஒருபோதும் திரும்பியவனல்ல. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பெருங்கரம் கொண்ட ரௌக்மிணேயனே அவர்கள் அனைவரிலும் இளையவனாவான்.(36) அவன் பயணப்படும்போதேல்லாம், "சாருதேஷ்ணனால் கொல்லப்படும் பல்வேறு விலங்குகளின் இனிய இறைச்சியை நாம் உண்ணலாம்" என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான காக்கைகள் அவனைப் பின்தொடர்ந்து சென்றன[6].(37)

[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த மூன்று ஸ்லோகங்களிலும் உள்ள வாக்கியங்களைப் பகுப்பது மிகக் கடினமாகும். எம்.என்.தத் {மன்மதநாததத்தர் இதை மிக மேலோட்டமாக மொழிபெயர்த்திருக்கிறார். கிடைத்திருக்கும் வட்டார மொழிபெயர்ப்புகளில், விஷ்வக்ஸேனன், சாருதேஷ்ணன், ரௌக்மிணேயன் என்ற பெயரிடல் மூலம் சாருதேஷ்ணன் ருக்மிணியின் இளைய மகன் என்று பொருத்தமற்ற வகையில் கூறப்பட்டுள்ளது. {இக்கதைப்படி} இன்னும் பிறக்காத கிருஷ்ணனின் வருங்கால மனைவியான ருக்மிணிக்கு விஷ்வக்ஸேனனின், அதாவது கிருஷ்ணனின் அருளால் பிறக்கும் இளைய மகனான சாருதேஷ்ணன் கண்டூஷனுக்குக் கொடுக்கப்பட்டான் என்று {பொருத்தமற்ற வகையில்} சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பட்டால், கிருஷ்ணன், தான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத மனைவியான ருக்மிணியிடம் தன் தந்தையின் தம்பிக்காகப் {தன் சிறியதந்தைக்காகப்} பெற்றான் என்ற பொருளைத் தரும். ரௌக்மிணேயன் மற்றும் விஷ்வக்ஸேனன் ஆகியோர் யாராக இருந்தாலும், சாருதேஷ்ணன் என்பது உணவைக் கொடுப்பவன் என்ற பொருளைத் தரும். எனவே இஃது இந்தக் கேள்வியில் உள்ள கதாபாத்திரத்திற்குக் காக்கைகள் தரும் பெயர் என்று கொள்ளலாம்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "வலிய கரங்களைக் கொண்டவனும், துணிச்சல்மிக்கவனுமான ருக்மிணியின் மகனே அவர்கள் அனைவரிலும் இளையவனாகவும், போரில் இருந்து ஒருபோதும் புறமுதுகிடாதவனுமாக இருந்தான்" என்றிருக்கிறது. இதன் அடிக்குறிப்பில், "இது பொருத்தமற்றதாக இருக்கிறது. ருக்மிணி கிருஷ்ணனை மணந்து கொண்டாள். அவர்களது மகன் பிரத்யும்னன் ஆவான். ஆனால் இங்கே இன்னும் கிருஷ்ணன் பிறக்கவே இல்லையே" என்றிருக்கிறது.

{சூரனின் ஐந்தாம் மகனான} கனவகனுக்குத் தந்த்ரிஜன் மற்றும் தந்த்ரிபாலன் என்ற இரு மகன்கள் இருந்தனர்.

{சூரனின் ஏழாம் மகனான} அவகிருஞ்ஜிமன், வீரன், அஷ்வபானு என்ற இரு மகன்களைக் கொண்டிருந்தான்.

{சூரனின் எட்டாம் மகனான} சியாமனின் மகன்கள் ஸுமித்ரனும், சமீகனுமாவர். பின்னவன் {சமீகன்} நாட்டை அடைந்தான். அவன் தன்னை ஒரேயொரு மாகாணத்தின் மன்னனாக இருப்பதற்குத் தகுந்தவனென்று எனக் கருதியதால், ராஜசூய வேள்வியைச் செய்தான்[7].(38,39) அவன், பகைவர்களற்றவனான யுதிஷ்டிரனின் உதவியைப் பெற்று தன் பகைவர்கள் அனைவரையும் கொன்றான்.

இனி வசுதேவனின் வழித்தோன்றல்களைச் சொல்கிறேன் கேட்பாயாக.(40) பல கிளைகளைக் கொண்டதும், பெருஞ்சக்திமிக்கதும், மூன்று வகையானதுமான விருஷ்ணி குலத்தைக் குறித்துத் தியானிப்பவன், இவ்வுலகில் எந்தத் தீப்பேற்றினாலும் துன்பமடையமாட்டான்" என்றார் {வைசம்பாயனர்}.(41)

[7] மற்ற சக்திகள் அனைத்தையும் அடக்கிவிட்டு உயர்ந்த தலைவனாகும் ஒரு பேரரசனால் மட்டுமே செய்யக்கூடிய அறம் சார்ந்த ஒரு விழாவாகும். மன்னன் சமீகன், ஒரே ஒரு மாகாணத்திற்கு மட்டுமே மன்னனாக இருப்பதில் நிறைவடையவில்லை" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "வசுதேவனின் மற்றொரு தம்பியான சியாமன், அவனுடைய தம்பியான சமீகனைத் தன் மகனைப் போலவே பார்த்துக் கொண்டான். எனவே, சமீகன் போஜர்களின் நாட்டை அடைந்தான். அவன் போஜ நாட்டுக்கு மட்டும் மன்னனாக இருப்பதை விரும்பாமல் ராஜசூய வேள்வியைச் செய்தான்" என்று இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "சியாமனின் மகன் சுமித்ரனாவான். சமீகன் நாட்டை அடைந்தான். அவனுடைய மகன் அஜாதசத்ரு பகைவர்களை அழித்தான்" என்றிருக்கிறது.

ஹரிவம்ச பர்வம் பகுதி – 34ல் உள்ள சுலோகங்கள் : 41
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்