Friday, 24 April 2020

ஹைஹயர்களும் கார்த்தவீரியனும் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 33

(யதுவம்ச வர்ணனம் - கார்த்தவீர்யோத்பத்தி)

An account of the Haihayas and Kartavirya | Harivamsa-Parva-Chapter-33 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : யதுவின் ஐந்து மகன்கள்; முதல் மகனான ஸஹஸ்ரதனின் குலத்தில் உதித்த கார்த்தவீர்யார்ஜுனன்; அவனது தோற்றமும் அழிவும்; தாலஜங்கர்கள்; ஹைஹய குலம்; சூரசேனநாடு; யயாதியின் ஐந்து மகன்களுடைய குலங்களைக் குறித்து அறிவதால் உண்டாகும் பலன்கள்...

Karthaviryaarjuna
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "யது தேவர்களுக்கு நிகரான ஐந்து மகன்களைக் கொண்டிருந்தான். அவர்கள், ஸஹஸ்ரதன், பயோதன், க்ரோஷ்டன், நீலன் மற்றும் அஞ்ஜிகன் ஆகியோர் ஆவர். ஓ! மன்னா, ஸஹஸ்ரதனுக்கு, பெரும் பக்திமான்களான ஹைஹயன், ஹயன் மற்றும் வேணுஹயன் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். ஹைஹயனின் மகன் தர்மநேத்ரன் என்ற பெயரில் கொண்டாடப்பட்டான். அவனுடைய {தர்மநேத்ரனின்} மகன் கார்த்தனும், அவனுடைய மகன் ஸாஹஞ்ஜனும் ஆவர்.(1-3) அந்த மன்னன் ஸாஹஞ்ஜனி என்ற பெயரைக் கொண்ட நகரத்தை அமைத்தான். மன்னன் மஹிஷ்மான் அவனுடைய {ஸாஹஞ்ஜனின்} மகனாவான். அவனால் மாஹிஷ்மதி நகரம் அமைக்கப்பட்டது. பலம் நிறைந்தவனான பத்ரஸேண்யன் மஹிஷ்மானின் மகனாவான். என்னால் ஏற்கனவே நினைவுகூரப்பட்ட படியே அவன் {பத்ரஸேண்யன்} வாராணஸியின் ஆட்சியாளனாக இருந்தான். பத்ரஸேண்யனின் மகன் துர்தமனாவான்.(4-6)


துர்தமனின் மகன் நுண்ணறிவுமிக்கக் கங்கன் {கனகன்} ஆவான். கங்கனுக்கு, உலகில் புகழ்பெற்றவர்களும், கிருதவீர்யன், கிருதௌஜன், கிருதவர்மன் மற்றும் கிருதாக்னி என்ற நான்கு மகன்கள் இருந்தனர். ஆயிரம் கரங்களைக் கொண்டவனும், தீவுகளான ஏழு கண்டங்களின் பேரரசனுமான அர்ஜுனன் {கார்த்தவீர்யார்ஜுனன்}, கிருதவீர்யனுக்குப் பிறந்தவனாவான். அவன் தனியாகவே, சூரியன் போன்ற பிரகாசமிக்கத் தன் தேரில் உலகை வென்றான்.(7-9) பத்து லட்சம் ஆண்டுகள் கடுந்தவம் இருந்த கீருதவீர்யன், அத்ரியின் மகனான தத்தரை {தத்தாத்ரேயரை} நிறைவடையச் செய்ததால், அவர் பெருஞ்சக்திமிக்க நான்கு வரங்களை அவனுக்கு அளித்தார். அவற்றில் முதலாவது, அவன் ஓராயிரம் கரங்களைப் பெறுவான் என்பதாகும்.(10,11) இரண்டாவது, அறமற்ற எண்ணங்களைத் தூண்டப்படுவதை முனிவர்கள் தடுப்பார்கள் {அவன் அதர்மத்தை நோக்கித் திரும்பும்போது ஓர் அறவோன் அவனைத் தடுப்பான்} என்பதாகும். மூன்றாவது, கடும் க்ஷத்திரிய ஆற்றலைக் கொண்டு உலகை வென்ற பிறகு, அவன் முறையாகத் தன் குடிமக்களை நிறைவடையச் செய்வான் என்பதாகும். நான்காவது, அவன் பல போர்களை வென்று, ஆயிரக்கணக்கான பகைவர்களை அழிக்கும்போது பெருஞ்சக்திமிக்க மனிதன் ஒருவனால் அவன் போரில் கொல்லப்படுவான் என்பதாகும்.(12,13)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த அரசமுனி போரில் ஈடுபடும்போது, தன் தவச் சக்தியாலும், மாய சக்தியாலும் ஆயிரம் கரங்களை அடைந்தான். அவன் தன் பேராற்றலைக் கொண்டு, தீவுகளான ஏழு கண்டங்களையும், பல மலைகளையும், பெருங்கடல்களையும் கைப்பற்றினான். ஓ! ஜனமேஜயா, அந்த மன்னன் {கார்த்தவீரியார்ஜுனன்}, தீவுகளான ஏழு கண்டங்களிலும் முறையாக எழுநூறு யாகங்களைச் செய்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(14-16) ஓ! பெருங்கரம் கொண்டவனே, அந்த யாகங்களில் ஆயிரக்கணக்கான கொடைகள் கொடுக்கப்பட்டன. அந்த யாகங்களின், தங்கத்தாலான வேள்வி ஸ்தம்பங்களும், பீடங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் தெய்வீகத் தேர்களில் வந்த தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் அப்ரசஸ்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அவனுடைய யாகங்களில், கந்தர்வர்களும், {கந்தர்வனான} நாரதனும் பாடல்கள் பாடினர். அவனுடைய மகிமையைக் கண்டு வரீதாஸன் {உபபர்ஹணன்} ஆச்சரியமடைந்தான்[1].(17,18)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "வாரீதாஸன், அல்லது உபபர்ஹணன் என்றழைக்கப்படும் கந்தர்வனின் மகனும், நாரதன் என்று அழைக்கப்படுபவனுமான ஒரு கந்தர்வன், இந்த மன்னனின் வேத சடங்குகளைக் கண்டு ஆச்சரியமடைந்து, இந்த மன்னனின் மகிமையை இவ்வழியில் பாடுகிறான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "வரீதாஸனின் மகனும், நாரதன் என்ற பெயரைக் கொண்டவனும், கல்விமானுமான ஒரு கந்தர்வன் இருந்தான். அவன் இவை அனைத்தின் மகத்துவத்தைக் கண்டு பாடத் தொடங்கினான்" என்றிருக்கிறது. இதன் அடிக்குறிப்பில், "தெய்வீக முனிவரான நாரதரோடு இவனைக் குழப்பிக் கொள்ளக்கூடாது" என்றிருக்கிறது.

{கந்தர்வனான} நாரதன், " மன்னர்களில் எவனாலும், யாகங்கள் செய்வது, கொடைகள் அளிப்பது, ஆற்றல் மற்றும் சாத்திர ஞானம் ஆகியவற்றின் மூலம் கார்த்தவீரியனின் மகிமையை அடைய முடியாது.(20) அவன் தன் யோக சக்தியின் மூலம், ஒரே நேரத்தில், தன்னுடைய கவசம், வாள் மற்றும் வில்லுடன், ஏழு தீவுகளான கண்டங்களின் மீது தன் தேரில் திரிவதை மக்கள் கண்டனர்" என்று பாடினார்.(21) அந்தப் பெரும் மன்னன் நீதியோடு தன் குடிமக்களைக் காத்த காரணத்தால், எதையும் இழக்காதவனாக, ஒரு போதும் துயரடையாதவனாக, தவறொன்றும் செய்யாதவனாக இருந்தான்.(22) அவன் அனைத்து வகைப் பொன் ஆபரணங்களின் உரிமையாளனாவும், உயர்ந்த தலைவனாகவும் இருந்தான். அவன் எண்பத்தையாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தான்.(23) அவன் பல யாகங்களைச் செய்து, பெரும்பரப்பைக் கொண்ட நிலங்களைத் தன் உடைமையாகக் கொண்டிருந்தான். அவன் அபரிமிதமாகப் பொழிவதன் காரணமாக இந்திரனைப் போன்றவனாகவும், தன் தவச் சக்திக்காக அர்ஜுனனைப் போன்றவனாகவும் இருந்தான்.(24) கூதிர் காலத்தில் ஆயிரங்கதிர்களுடன் ஒளிரும் சூரியனைப் போல அவன் கவசங்களுடன் கூடியவையும், வில்லின் நாண்கயிற்று அடிகளின் காரணமாகக் கடினமாவையுமான தன் ஆயிரம் கரங்களுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(25)

பெரும் பிரகாசம் கொண்ட அந்த மன்னன், நாகன்[2] கார்க்கோடகனின் மகன்களை வீழ்த்திவிட்டு, மனிதர்கள் வசிப்பதற்காக மாஹிஷ்மதி என்ற பெயரைக் கொண்ட நகரத்தை {அவர்களிடமிருந்து} கைப்பற்றினான்.(26) தாமரைக் கண் கொண்ட அந்த மன்னன், மழைக்காலங்களில் நீரில் விளையாடியபோது, தன் ஆயிரம் கரங்களால் பெருங்கடலின் போக்கை மாற்றினான்.(27) நுரைமாலைகளுடன் கூடிய நர்மதை ஆற்றின் நீரில் அவன் நீராடி விளையாடும்போது, அவள் தன் ஆயிரம் அலைகளுடன் அச்சத்துடனே அவனை அணுகினாள்.(28) அவன் தன் ஆயிரம் கரங்களால் பெருங்கடலைக் கலக்கும்போது, பாதாள லோகத்தில் வாழும் பேரசுரர்கள் செயலற்றவர்களாக அமைதியுமடைந்தனர்.(29) தேவாசுரர்களால் மந்தர மலை வீசப்பட்டபோது, பாற்கடல் கலங்கியதைப் போலவே, கிருதவீரியனின் மகனான மன்னன் அர்ஜுனனும் பெருங்கடலின் அலைகளை நசுக்கி, மீன்களையும், வேறு பெரும் நீர்வாழ் விலங்குகளையும் அசைத்து, காற்றில் நுரையைச் சுழற்றி, நீரில் சுழிகளை உண்டாக்கினான். மந்தர மலையின் அசைவால் விழிப்படைந்து, அமுதம் உண்டானதன் மூலம் அச்சமடைந்து, திடீரெனக் கலங்கியதைப் போலவே, அந்தப் பெரும் உரகர்கள், இந்தப் பயங்கர மனிதனைக் கண்டதும் அசைவற்றுப் பணிந்தனர். அவர்கள் மாலைத் தென்றலில் அசையும் வாழையிலைகளைப் போல அவன் முன்பு நடுங்கினர்.(30-33)

[2] "நாகர்கள், சக்திவாய்ந்த மன்னர்கள் பலர் செழித்தோங்கிய பழங்குடி இனத்தவராவர்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

அவன் {கார்த்தவீர்யார்ஜுனன்}, ஆணவம் நிறைந்தவனும், லங்கையின் மன்னனுமான ராவணனையும், அவனுடைய படையையும் தன் வலிமையால் வீழ்த்தி, ஐந்து கணைகளைக் கொண்டு அவனை {ராவணனை} உணர்வற்றவனாக்கி {மயக்கமடையச் செய்து}, தன் வில்லின் நாணில் அவனைக் கட்டி, மாஹிஷ்மதி நகருக்குக் கொண்டு வந்து, அங்கே சங்கிலியில் கட்டி வைத்திருந்தான்.(34) புலஸ்தியர், தம் மகன் ராவணன் அர்ஜுனனால் {கார்த்தவீர்யார்ஜுனனால்} சங்கலியைக் கொண்டு கட்டி வைக்கப்பட்டிருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டு அவனிடம் சென்றார். கிருதவீர்யனின் மகனான அர்ஜுனன், புலஸ்தியர் வேண்டிக் கொண்டதன் பேரில் ராவணனை விடுவித்தான்[3].(35) அவன் ஆயிரங்கரங்களால் இழுத்து தன் வில்லில் எழுப்பும் நாணொலி, அண்ட அழிவுக் காலத்தில் மேகங்களுக்கு மத்தியில் எழும் இடியொலிகளுக்கு ஒப்பாக இருந்தது.(36) ஆனால், தங்கப் பனை மரங்கள் நிறைந்த காட்டுக்கு ஒப்பான அந்த மன்னனின் {கார்த்தவீர்யார்ஜுனனின்} ஆயிரம் கரங்களைப் போரில் வெட்டிய பிருகு மகனின் (பரசுராமரின்} சக்தி எவ்வளவு பெரியதாக இருந்திருக்கும்?(37)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "கார்த்தவீர்யார்ஜுனன், நர்மதையாற்றில் தன் அந்தப்புரத்து மகளிருடன் நீராடி இன்புற்றிருக்கும்போது, அந்த ஆற்றின் நீரோட்டத்தைத் தடுத்தான். ராவணன் அந்த ஆற்றுப்படுகை உலர்ந்து போனதைச் சாதகமாகப் பயன்படுத்தி அங்கே சிவலிங்க வழிபாட்டைத் தொடங்கினான். கார்த்தவீர்யன் ஆற்றைவிட்டு வெளியேறியதும், தடங்கல் திடீரென விலகி, நீர் வேகமாகப் பாய்ந்து ராவணனையும், சிவலிங்கத்தையும் அடித்துச் சென்றது. இதனால் எரிச்சலடைந்த ராவணன், போருக்கான அறைகூவல் விடுத்தான். அதில் வீழ்த்துப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டான். புலஸ்தியர் குறுக்கிட்டுக் கார்த்தவீரியனிடம் இருந்து ராவணனை விடுவித்தார். இது காளிதாஸனின் ரகுவம்சத்தில் இருப்பது. எனினும், வாயு புராணத்தில், கார்த்தவீரியன் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்று ராவணனைச் சிறையில் அடைத்ததாக இருக்கிறது" என்றிருக்கிறது.

ஒரு காலத்தில் தாகத்தில் பீடிக்கப்பட்ட சித்திரபானு {அக்னிதேவன்}, {தன் தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காக} அவனிடம் (ஏதோவொன்றை) இரந்து கேட்டான். அந்த அர்ஜுனன், விபாவசுவிடம் {அக்னியிடம்} ஏழு தீவுகளான கண்டங்களையும் அளித்தான். நெருப்பின் தேவன் (சிறிது காலம் கழிந்ததும்) அவனுடைய நகரங்களையும், கிராமங்களையும் எரிக்க விரும்பினான். மனிதர்களில் முதன்மையான அந்தப் பெரும் கார்த்தவீரியனின் உதவியுடன் அவன் மலைகளையும், காடுகளையும் அழிப்பதில் வென்றான்.(38-40) பழங்காலத்தில் வருணனுக்கு மகனாகப் பிறந்தவரும், பிரகாசமானவருமான வசிஷ்டர், ஆபவர் என்ற மற்றொரு பெயரையும் கொண்டிருந்தார். நெருப்பின் தேவன், கார்த்தவீரியனோடு சேர்ந்து வருணன் மகனான அவருடைய அழகிய ஆசிரமத்தையும் எரித்தான். இதனால் அவர் {ஆபவர் / வசிஷ்டர்} பெருங்கோபம் அடைந்தார். கோபத்தில் இருந்த ஆபவ முனிவர், அர்ஜுனனிடம், "ஓ! ஹைஹயா, என் ஆசிரமத்தை நீ விட்டுவைக்காததால், நீ பெரும் சிரமத்துடன் அடைந்த உன் சாதனைகளை மற்றொரு மனிதன் {குந்தியின் மகனான மற்றொரு அர்ஜுனன்} அழிப்பான். முனிவனும், பலம் நிறைந்தவனும், வலிமைமிக்கவனும், பிராமணனும், பிருகு குலத்தில் ஜமதக்னிக்குப் பிறந்த மகனுமான ராமன் {பரசுராமன்}, உன்னுடைய ஆயிரங்கரங்களையும் கொய்து, உன்னையும் கொல்வான்" என்று சொல்லிச் சபித்தார்" என்றார் {வைசம்பாயனர்}.(41-45)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, ஓ! பகைவரை அடக்குபவனே, எவனுடைய நீதிமிக்க ஆட்சியின் கீழ் அவனுடைய குடிமக்களும் எதையும் இழக்கவில்லையோ, அந்தக் கிருதவீர்யனின் மகனான மன்னன் அர்ஜுனன், ஆபவ முனிவரின் சாபத்தின் காரணமாக மரணமடைந்தான்[4]. ஓ! குருவின் வழித்தோன்றலே, அவனே தத்தாத்ரேயரிடம் இவ்வரத்தை வேண்டியிருந்தான்.(46,47) அந்த உயரான்மாவின் நூறு மகன்களில் ஐவர் மட்டுமே உயிரோடு எஞ்சினர். அவர்கள் அனைவரும் சக்தி மிக்கவர்களாகவும், வீரர்களாகவும், அறம் சார்ந்தவர்களாகவும், நுண்ணறிவு மிக்கவர்களாகவும், ஆயுதப் பயன்பாட்டை நன்கறிந்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் சூரஸேனன், சூரன், திருஷ்டோக்தன் {திருஷ்டன்}, கிருஷ்ணன், அவந்தியின் மன்னனான ஜயத்வஜன் ஆகியோராவர்.(48,49)

[4] கார்த்தவீரியன் கதை மஹாபாரதம் ஆதிபர்வம் 116 மற்றும் 117 அத்யாயங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. 

கார்த்தவீரியனின் மகன்கள் அனைவரும் பலம் நிறைந்தவர்களாகவும், வலிமைமிக்கத் தேர்வீரர்களாகவும் இருந்தனர். ஜயத்வஜனின் மகன் பெருஞ்சக்திமிக்கத் தாலஜங்கன் ஆவான். அவனுடைய மகன்கள் தாலஜங்கர்கள் என்ற பெயரைக் கொண்டனர். ஓ! மன்னா, உயரான்ம ஹைஹய, வீதிஹோத்ர, ஸுஜாத, போஜ, அவந்தீ குலங்களும், இன்னும் வேறு குலங்களும் {தௌண்டிகேரர்களும்} தாலஜங்கர்கள் என்ற பெயரில் அறியப்பட்டனர்.(50-52) பரதன் மற்றும் ஸுஜாதனின் {ஸுதாஜாதனின்} வழித்தோன்றல்களை விளக்குவது அவசியமற்றது[5]. ஓ!மன்னா அறவோனான விருஷன் மற்றும் பிறர் யது குலத்தில் பிறந்தவராவர்.(53) விருஷன் குடும்பத் தலைவனாவான், அவனுடைய மகன் மது ஆவான். அவனுக்கு நூறு மகன்கள் இருந்தனர், அவர்களில் விருஷணன், குலத்தைத் தழைக்கச் செய்தான். விருஷணனில் இருந்து விருஷ்ணிகளும், மதுவில் இருந்து மாதவர்களும், யதுவில் இருந்து யாதவர்களும் பிறந்தனர். இவையே ஹைஹய குடும்பத்தின் பல்வேறு கிளைகளாகும்[6].(54,55)

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "ஹைஹய குலத்தில் வீதிஹோத்ரர்கள், ஸுஜாதர்கள், போஜர்கள், அவந்தீகள், தௌண்டிகேரர்கள் போன்றோர் பெரும் க்ஷத்திரிய வம்சங்களாக உருவெடுத்தனர். தாலஜங்கர்கள் மற்றும் பாரதர்களும் அதே போன்றவர்களே. பாரதர்கள் எண்ணிலடங்காதவர்களாக இருப்பதால் அவர்களை இங்கே திரும்பக் கூறவில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், " வீதிஹோத்ர, ஸுஜாத, போஜ, அவந்தீ, தொண்டிகேரர்கள் ஆகியோர் புகழ்பெற்ற தாலஜங்கர்களும், பேரான்ம ஹைஹயர்களின் குலத்தில் வந்தவர்களுமாவர். பாரதர்களின் குலத்தில் பிறந்த உன்னதமான பலரின் பெயர்கள் மீண்டும் சொல்லப்பட்டுள்ளன" என்றிருக்கிறது.
[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஆயிரம் வழிகளில் கொடையளிப்பவனும், யதுவின் முதல் மகனுமான ஸஹஸ்ரதனின் வம்சத்தைச் சொன்ன பிறகு, இனி வம்சத்தின் இரண்டாவது மகனான பயோதன் கணக்கில் கொள்ளப் படுகிறான். பயஹ்+தன் = நீர், கொடையளிப்பவன்; மேகம், விருஷ்ணி என்பது வார்ஷணன் என்பதும் மழை என்ற பொருளைத் தரும்" என்றிருக்கிறது.

சூரன், சூரஸேனன், சூரவீரன் போன்றோரும் ஹைஹயர்கள் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். அந்த உயரான்மாக்களின் நாடு, சூரசேனம் {சூரசேனதேசம்/ சூரராஷ்டிரம்/ சௌராஷ்டிரம்/ இன்றைய குஜராத்} என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இவ்வுலகில் நாள்தோறும் கிருதவீர்யனின் மகனான அர்ஜுனனுடைய பிறப்பைக் குறித்து நினைவுகூர்பவன், தன் உடைமையை இழக்கமாட்டான். ஒருவேளை அவன் அதை இழந்தாலும் மீண்டும் அடைவான்.(56,57) ஓ! மன்னா, நான் இவ்வாறு உலகில் கொண்டாடப்படும் யயாதியின் ஐந்து மகன்களுடைய குடும்பங்களைக் குறித்து உனக்குச் சொன்னேன். அவர்கள் அசையும் மற்றும் அசையா படைப்புகளைப் பாதுகாக்கும் ஐம்பூதங்களைப் போன்றவர்களாவர்.(58) வேதங்களையும், வேறு அற சாத்திரங்களையும் நன்கறிந்த ஒரு மன்னன், அந்த ஐந்து மன்னர்களின் பல்வேறு படைப்புகளைக் குறித்துக் கேட்டால், ஐம்புலன்களின் ஆட்சியாளனாகவும், தேவனைப் போன்றவனாகவும் மாறி, இவ்வுலகில் கிடைத்தற்கரிதான ஐந்து வரங்களை அடைவான். இந்த அனைத்து மன்னர்களின் குடும்பங்களைக் குறித்துக் கேட்டதன் மேலும் ஆயு, பெரும்புகழையும், வளங்களையும், மகன்களையும், சக்தி மற்றும் செழிப்பையும் அடைந்தான்.(59,60)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, இனி, யாகங்களைச் செய்தவனும், யது குலத்தின் தலைவனும், {யதுவின் மூன்றாம் மகனும்}, அறவோனுமான குரோஷ்டுவின் மிகச் சிறந்த, சக்திமிக்கக் குடும்பத்தை {குலத்தைக்} கேட்பாயாக. விருஷ்ணி குலத்தின் தலைவனான இவனுடைய குடும்பத்திலேயே கிருஷ்ணனாக விஷ்ணு பிறந்தான். குரோஷ்டுவின் குடும்பக் கதையைக் கேட்பதன் மூலம் ஒரு மனிதன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்" {என்றார் வைசம்பாயனர்}.(61,62)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 33ல் உள்ள சுலோகங்கள் : 62
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்