(ராமக்ருஷ்ணயோர்வித்யாஸம்பாதனம்)
Krishna brings back this preceptor's son from the ocean | Vishnu-Parva-Chapter-88-033 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : சாந்தீபனி முனியிடம் குருகுல வாசம் சென்ற பலராமனும், கிருஷ்ணனும்; குருவின் மரித்துப் போன மகனை மீட்டு குருதக்ஷிணை கொடுத்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வீரனும், பலமிக்கவனுமான கிருஷ்ணன், ரோஹிணியின் மகனுடன் {பலராமனுடன்} சேர்ந்து யாதவர்களால் நிறைந்திருக்கும் மதுரா நகரில் வாழத் தொடங்கினான்.(1) இளமை மிளிரும் அரச அழகில் அவனது உடல் படிப்படியாக ஒளிரத் தொடங்கியது, பெருங்கடலைப் போன்ற யமுனையால் அலங்கரிக்கப்பட்ட மதுரா நகரில் அவன் திரியத் தொடங்கினான்[1].(2)
