(திரிசங்குசரிதம்)
Legend of Trishankhu | Harivamsa-Parva-Chapter-13 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : விஷ்வாமித்ரரின் சந்ததியைப் பாதுகாத்த ஸத்யவிரதன்; வசிஷ்டரின் பசுவைக் கடத்தி உண்ட ஸத்யவிரதன்; ஸத்யவிரதன் திரிசங்கு என்ற பெயரைப் பெற்றது; திரிசங்குவை உடலோடு சொர்க்கம்புகச் செய்த விஷ்வாமித்ரர்; திரிசங்குவின் மகன் ஹரிஷ்சந்திரன்; ஹரிஷ்சந்திரனின் கொடிமரபில் வந்த ஸகரன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஸத்யவிரதன், தான் கொண்ட பக்தி, கருணை, உறுதி ஆகியவற்றால் எப்போதும் பணிவுடன் விஷ்வாமித்ரரின் சந்ததியைப் பாதுகாத்தான்.(1) அவன், காட்டு மான்கள், கரடிகள், எருமைகள் ஆகியவற்றைக் கொன்று அவற்றின் இறைச்சியை விஷ்வாமித்ரருடைய ஆசிரமத்தின் அருகில் உள்ள மரங்களில் கட்டினான்.(2) தன் தந்தையான மன்னன் {திரையாருணன்} காட்டுக்குச் சென்றதும், அவனது {தன் தந்தையின்} கட்டளையின் பேரில் மாற்றான் மனைவியைக் கொள்வதில்லை என்ற நோன்பை நோற்று ஒரு பயிற்சியாளனாகப் பனிரெண்டு ஆண்டுகள் காட்டில் இருந்தான்.(3) வசிஷ்ட முனிவர், அரசுப் புரோகிதராக இருந்தபடியால், அவரே அயோத்யா நகரத்தையும், நாட்டையும் பாதுகாத்து வந்தார்.(4)