(ஜராஸந்தாபிகமனம்)
Balarama gets Vishnu | Vishnu-Parva-Chapter-97-041 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : மது அருந்திய பலராமன்; வாருணி, காந்தி, கமலா தேவிகளைச் சந்தித்தது; விஷ்ணுவின் கிரீடத்தைக் கிருஷ்ணனுக்குச் சூடிய கருடன்; படையெடுத்து வந்த ஜராசந்தன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஜமதக்னியின் மகனான ராமர் {பரசுராமர்} சென்ற பிறகு, யது குலத்தைத் தழைக்கச் செய்பவர்களான ராமனும் {பலராமனும்}, கிருஷ்ணனும் தாங்கள் விரும்பிய தோற்றங்களை ஏற்றுக் கொண்டு அழகிய கோமந்த மலைச்சிகரத்தில் திரியத் தொடங்கினர்.(1) கருநீல நிறமும், வெண்ணிறமும் கொண்ட அந்த இளைஞர்கள் இருவரும், மார்பில் காட்டு மலர்மாலைகளைச் சூடிக் கொண்டும், கருநீலத்திலும், மஞ்சள் நிறத்திலுமான ஆடைகளை அணிந்தும் மேனியில் மலையின் மண்ணைப் பூசிக்கொண்டும், மலைச்சிகரத்தின அழகிய காடுகளில் விளையாடும் நோக்கிலும், கோள்கள் எழுகையிலும், மறைகையிலும் அவற்றையும், ஒளிக்கோள்களான {ஜ்யோதிகளான} சூரியனையும், சந்திரனையும் காணும் நோக்கிலும் திரியத் தொடங்கினர்.(2-4)
