(ஷம்பரவதம்)
Shamvara's death | Vishnu-Parva-Chapter-164-108 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : பார்வதியைத் துதித்த பிரத்யும்னன்; சம்பரனின் முத்கரத்தைத் தாமரை மாலையாகப் பெற்ற வரம்; பிரத்யும்னன் ஏவிய வைஷ்ணவாஸ்த்திரம்; சம்பரன் வதம்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "கோபத்தில் நிறைந்த சம்பரன் தன் முத்கரத்தை எடுத்தான். ஓ! பரதனின் வழித்தோன்றலே, சம்பரன் தன் முத்கரத்தை எடுத்தபோது பனிரெண்டு சூரியர்களும் அங்கே உதித்தனர் {அந்த ஆயுதம் பனிரெண்டு சூரியன்களுக்கு ஒப்பான ஒளியுடன் இருந்தது},(1) மலைகள் அசைந்தன, பூமி நடுங்கினாள். பெருங்கடலின் நீர் கரையைக் கடந்தது, தேவர்கள் கலக்கமடைந்தனர்,(2) வானம் கழுகுகளால் நிறைந்திருந்தது, எரிகொள்ளிகள் விழுந்தன, கடுங்காற்று வீசியது, இந்திரன் குருதி மழையைப் பொழிந்தான்.(3) இந்தத் தீய சகுனங்கள் அனைத்தையும் கண்ட வீரன் பிரத்யும்னன், உடனே தன் தேரில் இருந்து இறங்கினான். பிறகு தன் கரங்களைக் குவித்தபடி,(4) சங்கரனின் அன்புக்குரிய மனைவியான பார்வதியை நினைவுகூர்ந்து, தலைவணங்கியபடியே அவளது மகிமைகளைத் துதிக்கத் தொடங்கினான்.(5)
பிரத்யும்னன், "கார்த்திகேயனின் அன்னையான {மலைகளின் தேவியான} காத்யாயனியை வணங்குகிறேன். மூவுலகங்களின் அன்னையான {மூவுலகங்களிலும் மாயைகளை உண்டாக்கும்} காத்யாயனியை மீண்டும் வணங்குகிறேன்.(6) எங்கள் பகைவரை அழித்த தேவியை வணங்குகிறேன். கிரீசனின் மனைவியான கௌரியை வணங்குகிறேன். நிசும்பனின் இதயத்தைத் துளைத்து, சும்பனையும் கொன்ற தேவியை வணங்குகிறேன்.(7) காளராத்ரியையும் {பிரளய கால இரவாக இருப்பவளும்}, கௌமாரியையும் வணங்குகிறேன். மலைகள் சார்ந்த காட்டில் வாழும் தேவியைக் கரங்கூப்பித் தலைவணங்குகிறேன்.(8) விந்திய மலையில் வாழ்பவளும், கோட்டைகளை அழிப்பவளும், துர்க்கையாக {ரணதுர்க்கையாக} இருப்பவளும், போரில் விருப்பம் கொண்டவளும், ஜயை, விஜயையாக இருப்பவளுமான அந்தப் பெருந்தேவிக்குத் தலைவணங்குகிறேன்.(9) வெல்லப்படமுடியாதவளும், பகைவரைப் பீடிப்பவளும், கையில் மணியைக் கொண்டவளும், மணிகளின் மாலையால் அலங்கரிக்கப்பட்டவளுமான தேவிக்குத் தலைவணங்குகிறேன்.(10) கொடியில் சிங்கத்தைச் சின்னமாகக் கொண்டவளும், திரிசூலபாணியும், எருமை முக அசுரனை {மஹிஷாசுரனைக்} கொன்றவளும், சிங்கத்தை வாகனமாகக் கொண்டவளுமான தேவிக்குத் தலைவணங்குகிறேன்.(11) அங்கங்கள் இல்லாத ஒரே அம்சம் கொண்டவளும் {ஏகாநம்ஸையும்}, வேள்வியில் உரைக்கப்படும் புனித காயத்ரியும், பிராமணர்களின் சாவித்ரியுமான தேவியைக் கரங்கூப்பித் தலைவணங்குகிறேன்.(12) ஓ! தேவி, போரில் எப்போதும் என்னை நீ காத்து, எனக்கு வெற்றி மகுடம் சூட்டுவாயாக" என்று வேண்டினான்.
அந்தத் தேவியும் இதயத்தில் நிறைவடைந்தவளாக,(13) "ஓ! பெருங்கரங்களைக் கொண்டவனே, ஓ! ருக்மிணியின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனே, என்னைப் பார். ஓ! மகனே, என்னைக் காண்பது கனியில்லாமல் போகாது {என் தரிசனம் வீண்போகாது}. எனவே, ஒரு வரத்தை வேண்டுவாயாக" என்றாள்.(14)
தேவியின் சொற்களைக் கேட்டதும் அவனுக்கு மயிர்க்கூச்சம் ஏற்பட்டது, அவனது மனம் இன்பத்தால் நிறைந்தது. அவன் அந்தத் தேவியை வணங்கிவிட்டு தன்னுடைய நோக்கத்தை அவளிடம் தெரிவித்தான்,(15) "ஓ! தேவி, என்னிடம் நிறைவடைந்திருக்கும் நீ, நான் விரும்பியதைக் கொடுப்பாயாக. ஓ! கௌரவத்தை அளிப்பவளே, நான் என் பகைவர் அனைவரையும் வெல்வேனாக.(16) ஓ! தேவி, உன் மேனியில் இருந்து உண்டானதும், சம்பரனுக்கு உன்னால் கொடுக்கப்பட்டதுமான அந்த முத்கரம் என் மேனியைத் தீண்டிய உடன் தாமரை மாலையாகட்டும்" என்றான்.(17)
அதைக் கேட்ட அந்தத் தேவி, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு அங்கேயே அப்போதே மறைந்து போனாள்.(18) பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னனும், பெரும் மகிழ்ச்சியுடன் தேரில் ஏறினான். அப்போது பெருஞ்சக்திவாய்ந்த சம்பரன் தன் முத்கரத்தை எடுத்துச் சுழற்றியபடியே அதைப் பிரத்யும்னனின் மார்பின் மீது வீசினான்.(19,20) பிரத்யும்னன் மீது பட்டவுடனேயே அது தாமரை மாலையாகி அவனது கழுத்தை அலங்கரித்தது. அவன் விண்மீன்களால் சூழப்பட்ட நிலவைப் போலத் தெரிந்தான்.(21) முத்கரம், தாமரை மாலையானதைக் கண்ட தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் ஆகியோரும், பெரும் முனிவர்களும் பிரத்யும்னனை அவனது முன்னிலையிலேயே உயர்வாகப் பேசினர் {வாழ்த்தினர்}.(22)
அப்போது அந்தக் கேசவன் மகன் {பிரத்யும்னன்}, தன் வில்லை வளைத்து, நாரதர் கொண்டு வந்த வைஷ்ணவக் கணையை அதில் பொருத்திவிட்டு,(23) "ஓ! கணையே, நான் கேசவனால் பெறப்பட்ட ருக்மிணியின் மகனாக இருந்தால், அந்த உண்மையின் வலிமையைக் கொண்டு போர்க்களத்தில் சம்பரனைக் கொல்வாயாக" என்றான்.(24)
உன்னத மனம் கொண்ட பிரத்யும்னன், இதைச் சொல்லிவிட்டு, மூவுலகங்களையும் எரித்துவிடுபவனைப்போலத் தன் வில்லை வளைத்து அந்தக் கணையைச் சம்பரன் மீது ஏவினான்.(25) விருஷ்ணி தலைவனால் ஏவப்பட்ட அந்தக் கணையும் சம்பரனின் மார்பைத் துளைத்து பூமிக்குள் நுழைந்தது.(26) அந்த வைஷ்ணவக் கணையின் சக்தியால் அவனது சதை, எலும்புகள், நரம்புகள், மண்டையோடு, குருதி ஆகியவை அனைத்தும் சாம்பலாகின.(27)
பேருடல் படைத்தவனும், பாவியுமான அந்தத் தானவன் சம்பரன் இவ்வாறு கொல்லப்பட்டதும் தேவர்களும், கந்தர்வர்களும் மகிழ்ச்சியில் நிறைந்தனர்.(28) ஊர்வசி, மேனகை, ரம்பை, விப்ரசித்தி, திலோத்தமை ஆகியோரும், பிற அப்சரஸ்களும் நடனமாடினர், உயிருள்ள, உயிரற்ற மொத்த படைப்புகளும் அவ்வாறே ஆடின.(29) தேவர்களுடன் கூடிய தேவ மன்னன் மகிழ்ச்சியடைந்தான், அவர்கள் பிரத்யும்னனைப் புகழ்ந்தவாறே அவன் மீது மலர் மாரியைப் பொழிந்தனர்.(30) மதுசூதனனின் மகனான மதனனால் {காமனான பிரத்யும்னனால்} தைத்தியர்களின் மன்னன் போரில் கொல்லப்பட்டதும், தேவர்கள் தங்கள் பகைவன் மீது கொண்ட அச்சத்தில் இருந்து விடுபட்டு, பிரத்யும்னனைத் துதித்துவிட்டுத் தேவலோகத்திற்குச் சென்றனர்.(31) போரில் களைத்திருந்த ருக்மிணியின் மகன், ஒரு காதலன் தன் காதலியிடம் செல்வதைப் போல விரைவான எட்டுகளை எடுத்து வைத்து நகரத்திற்குச் சென்று தன் மனைவியைச் சந்தித்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(32)
விஷ்ணு பர்வம் பகுதி – 164 – 108ல் உள்ள சுலோகங்கள் : 32
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |