(ருக்மிணீஸ்வயம்வரார்தம்)
Rukshmini's swayamvara | Vishnu-Parva-Chapter-103-047 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : விதர்ப்ப இளவரசி ருக்மிணியின் சுயம்வரம் குண்டினபுரத்தில் நடைபெறுவதை அறிந்த கிருஷணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அந்த நேரத்தில் குடிமுதல்வனின் வீட்டுக்கு ஒப்பான பலதேவனின் வீட்டில் ஒற்றர்கள்[1] கூடினர்.(1) அந்த ஒற்றர்கள், வருங்காலச் சச்சரவுகள் குறித்து அறிவிக்க விரும்பி அங்கே வந்தபோது, கிருஷ்ணனின் ஆணையின் பேரில் முன்னணி யாதவர்கள் அனைவரும் சபையில் கூடினர்.(2)
[1] சித்திரசாலை பதிப்பில், "உலகக் காரியங்களை நன்கறிந்த மனிதர்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்த அத்தியாயம் முழுமையும், இதற்குப் பின்னர் வரப்போகும் அத்தியாயங்கள் பலவும் இல்லை. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ஒற்றர்கள்" என்றிருக்கிறது.
முன்னணி யாதவர்கள் அனைவரும் அந்த ஆலோசனைக்கூட்டத்தில் கூடிய போது, அந்த ஒற்றர்கள், எதிர்காலத்தில் நேரப்போகும் மன்னர்களின் அழிவை அறிவிக்கும் வகையில்,(3) "ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, போஜன் மகனின் {ருக்மியின்} அழைப்பின் பேரில் குண்டின நகரத்தில் {குண்டினபுரத்தில்} மன்னர்களின் பெருங்கூட்டம் நடைபெற இருக்கிறது. பல்வேறு மாகாணங்களின் மன்னர்கள் அங்கே விரைகின்றனர்.(4,5) ருக்மியின் முதல் சகோதரியான ருக்மிணிக்குச் சுயம்வரம் நடைபெறப்போகிறது என அங்குள்ள மக்கள் அறிவிப்பதை நாங்கள் கேட்டோம்.(6) ஓ! ஜனார்த்தனா, இதற்காக மன்னர்கள் அனைவரும், தங்கள் படைகளுடனும், தொண்டர்களுடனும் அங்கே செல்கின்றனர்.(7) ஓ! யாதவா, பொன்னாபரணங்களில் அலங்கரிக்கப்பட்டவளும், மூவுலகங்களிலும் அழகானவளுமான ருக்மிணியின் சுயம்வரம் இன்றிலிருந்து மூன்றாம் நாளில் நடைபெற இருக்கிறது.(8) சிங்கங்களையும், புலிகளையும் போன்ற செருக்குடையவர்களும், ஒருவரையொருவர் தாக்கிப் போர்புரிய விரும்புகிறவர்களும், மதங்கொண்ட யானையின் நடையைக் கொடையாகக் கொண்டவர்களும், பெருஞ்சக்திவாய்ந்தவர்களுமான அனைவரும் யானைகளிலும், குதிரைகளிலும், தேர்களிலும் சென்று அங்கே கூடப்போகின்றனர். அந்த உயரான்மாக்களின் நூற்றுக்கணக்கான முகாம்களை அங்கே நாம் காணப் போகிறோம்.(9,10) ஓ! யதுவின் வழித்தோன்றலே, பூமியின் மன்னர்கள் அனைவரும் கூடியிருக்கும்போது, நாம் ஏன் மனச்சோர்வுடன் தனித்திருக்க வேண்டும்? வெற்றியடைவதற்காக நம் படைகள் சூழ அனைவரும் புறப்படுவோம்" என்றனர்.(11)
யதுக்களில் முதன்மையான கேசவன் {கிருஷ்ணன்}, இதயத்தைத் தைக்கும் ஈட்டி போன்ற அந்தச் சொற்களைக் கேட்டுத் தன் படையுடன் உடனே புறப்பட்டான்.(12) பேராற்றல் படைத்த யாதவர்களும் போரில் ஈடுபடும் நோக்கத்துடன் தங்கள் தேர்களில் ஏறி, செருக்கில் நிறைந்த தேவர்களைப் போல அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(13) நடவடிக்கைக்குத் தயாராக இருந்த அந்தச் சக்திவாய்ந்த படையுடனும், தன் கையில் உயர்த்தப்பட்ட சக்கரம், கதாயுதத்துடனும் ஈசானனைப் போலக் கிருஷ்ணன் அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(14) வாசுதேவனைப் {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்ற பிற யாதவர்கள், சூரியனைப் போன்று பிரகாசிப்பவையும், கிங்கிணி மணியொலிகளுடன் கூடியவையுமான தேர்த் திரளுடனும் அவனுடைய அழகை மேலும் அதிகரித்தனர்.(15)
முற்போக்குப் பார்வை கொண்ட கோவிந்தன் புறப்படும் நேரத்தில் உக்ரசேனனிடம், "ஓ! பாவமற்றவரே, ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, நீர் என் தமையனுடன் {பலராமனுடன்} இங்கே காத்திருப்பீராக.(16) நாங்கள் புறப்பட்டு இந்நகரம் வெறுமையாக இருக்கும்போது, வஞ்சக நடத்தை கொண்டவர்களும், விதிகளை நன்கறிந்தவர்களும், நம்மிடம் அச்சங்கொண்டிருந்தாலும் தேவலோகத்திலுள்ள தேவர்களைப் போலக் குண்டின நகரத்தில் இன்புற்றிருப்பவர்களுமான க்ஷத்திரியர்கள், ஜராசந்தனின் விருப்பத்தின் பேரில் தாக்கக்கூடும்" என்றான் {கிருஷ்ணன்}".(17,18)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பெருஞ்சிறப்புவாய்ந்த அந்தப் போஜ மன்னன் {உக்ரசேனன்}, கிருஷ்ணனின் சொற்களைக் கேட்டுப் பற்றில் ஈர்க்கப்பட்ட தேன் போன்ற சொற்களில் மறுமொழி கூறும் வகையில்,(19) "ஓ! கிருஷ்ணா, ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, ஓ! யதுக்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனே, ஓ! பகைவரைக் கொல்பவனே, நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக(20) நீ எங்களை விட்டுச் சென்றால், கணவனற்ற பெண்ணைப் போல இங்கேயும் {இந்நகரிலும்}, {இந்த நாட்டில்} எங்கேயும் எங்களால் மகிழ்ச்சியாக வாழ இயலாது.(21) ஓ! குழந்தாய், ஓ! கௌரவங்களை அளிப்பவனே, எங்கள் தலைவனான உன் தோள்வலிமையை நாங்கள் உறைவிடமாகக் கொண்டிருப்பதால், இந்திராதி தேவர்களுக்கே அஞ்சமாட்டோம் என்றால் மன்னர்களைக் குறித்துச் சொல்வதற்கென்ன?(22) ஓ! யதுக்களில் முதன்மையானவனே, வெற்றியடைவதற்காக நீ செல்லுமிடமெங்கும் நாங்களும் உன்னைப் பின்தொடர்ந்து வருவோம்" என்றான் {உக்ரேசேனன்}.(23)
தேவகியின் மகன் {கிருஷ்ணன்}, அந்த மன்னனின் {உக்ரசேனனின்} சொற்களைக் கேட்டுப் புன்னகைத்தவாறே, "நீர் விரும்பிய அனைத்தையும் நான் செய்வேன். இதில் ஐயமில்லை" என்றான் {கிருஷ்ணன்}" என்றார் {வைசம்பாயனர்}[2].(24)
[2] சித்திரசாலை பதிப்பிலும், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பிலும் இந்த அத்தியாயம் இன்னும் தொடர்ந்து சென்று 46 ஸ்லோகங்களில் நிறைவடைகிறது. இதில் அதிகம் வரும் 22 ஸ்லோகங்கள் மன்மதநாததத்தரின் பதிப்பில் அடுத்த அத்தியாயமாக வருகிறது.
விஷ்ணு பர்வம் பகுதி – 103 – 047ல் உள்ள சுலோகங்கள் : 24
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |