(பிரத்யும்நவிவாஹோ ருக்மிவதம்)
Marriage of Rukshmavati | Vishnu-Parva-Chapter-118-062 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : ருக்மியின் மகளான சுபாங்கி கிருஷ்ணனின் மகனான பிரத்யும்னனைத் திருமணம் செய்து கொண்டது; கிருஷ்ணனின் பேரனான அநிருத்தன் ருக்மியின் பேத்தியான ருக்மவதியைத் திருமணம் செய்து கொண்டது; பகடையால் உயிரை இழந்த ருக்மி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வெகு காலம் கழிந்ததும், பகைவர்களைக் கொல்பவனான பலம்வாய்ந்த ருக்மி, தன் மகள் {சுபாங்கி சுயம்வரத்தில்} கணவனைத் தேர்ந்தெடுக்க உள்ளதாக அறிவித்தான்.(1) செல்வந்தர்களும், பலம்வாய்ந்தவர்களுமான மன்னர்களும், இளவரசர்கள் பலரும் பல்வேறு நாடுகளில் இருந்து ருக்மியால் அழைக்கப்பட்டு அவனுடைய வீட்டுக்கு வந்தனர்.(2) மற்ற இளவரசர்களுடன் சேர்ந்து {கிருஷ்ணனின் மகனான} பிரத்யும்னனும் அங்கே சென்றான். ருக்மியின் மகள் அவனைக் கண்டதும் அவனையே மணந்து கொள்ள விரும்பினாள். அருளுடனும், பிரகாசத்துடனும் கூடிய அவளும் தன் அழகுக்காகப் பூமியில் கொண்டாடப்பட்டாள். எனவே, கேசவனின் மகன், அழகிய கண்களைக் கொண்ட அவளை மணந்து கொள்ள விரும்பினான்[1].(3,4) பலம்வாய்ந்த மன்னர்கள் அனைவரும் சுயம்வர மண்டபத்தில் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, விதர்ப்ப மன்னனின் மகள் {சுபாங்கி} பகைவரைக் கொல்பவனான பிரத்யும்னனைத் (தன் கணவனாகத்) தேர்ந்தெடுத்தாள்.(5)
