(கஶ்யபக்ருதம் ருத்ரஸ்தோத்ரம்)
Attributes of Hari | Vishnu-Parva-Chapter-129-073 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : அமராவதி நகரைக் கிருஷ்ணன் கைப்பற்றப் போகிறான் என்பதை நாரதர் மூலம் கேள்விப்பட்ட இந்திரன் பிருஹஸ்பதியுடன் ஆலோசித்தது; பிருஹஸ்பதி கசியபருடன் ஆலோசித்தது; கசியபர் சொன்ன ருத்ர ஸ்தோத்ரம்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "முனிவர்கள் அனைவரிலும் முதன்மையான நாரதர், அழகிய துவாரகா நகருக்கு வந்து, பகைவரை அடக்குபவனும், உயிரினங்களில் முதன்மையானவனுமான நாராயணனைக் கண்டார்.(1) தன் மாளிகையில் சத்யபாமாவுடன் சுகமாக அமர்ந்திருந்த அவன், சக்திகள் அனைத்தையும் கடந்த தன் எழில்மிகு வடிவின் விளைவால் பேரழகுடன் தோன்றினான்.(2) உறுதிமிக்க நோன்புகளைக் கொண்ட உயரான்மாவான அந்தக் கேசவன், சிந்தனையில் ஆழ்ந்திருப்பதையும், வெறும் சொற்களால் மட்டுமே தன்னுடைய அன்புக்குரிய சத்யபாமாவுக்கு நிறைவளித்துக் கொண்டிருப்பதையும் அவர் கண்டார்.(3) தெய்வீகமான அந்த அதோக்ஷஜன், நாரதரைக் கண்டதும் (தன் இருக்கையில் இருந்து) எழுந்து, சாத்திர விதிப்படி அவரை வழிபட்டான்.(4) நாரதர் சுகமாக அமர்ந்து, (பயணத்தின்) களைப்பனைத்தும் நீங்கிய பிறகு, மதுசூதனன் அவரிடம் பாரிஜாத மரம் குறித்துப் புன்னகையுடன் வினவினான்.(5) அப்போது, ஓ! ஜனமேஜயா, தவத்தகுதி கொண்ட அந்த முனிவர் இந்திரனின் சொற்களை முழு விபரங்குளுடன் அவனது தம்பியிடம் {இந்திரனின் தம்பியான கிருஷ்ணனிடம்} சொன்னார்.(6)
கிருஷ்ணன், நாரதரிடம் இருந்து அந்தச் சொற்கள் அனைத்தையும் கேட்டு இவ்வாறு பேசினான், "ஓ! அறம்சார்ந்த முனிவர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, நாளையே நான் தேவலோகம் செல்லப் போகிறேன்" {என்றான் கிருஷ்ணன்}.(7) இவ்வளவு மட்டுமே பேசிய அந்த ஹரி, நாரதருடன் கடலுக்குள் நுழைந்து அங்கே கமுக்கமாக மீண்டும் அவரிடம்,(8) "ஓ! முனிவரே, இன்றே மஹேந்திரனின் வசிப்பிடத்திற்குச் சென்று, தேவர்களில் முதன்மையான உயரான்ம இந்திரனிடம் என்னுடைய இந்தச் சொற்களை உள்ளபடியே சொல்வீராக.(9) "ஓ! சக்ரா, ஓ! தலைவா, பாரிஜாதத்தை இங்கே கொண்டு வருவதில் நான் உறுதியாக இருக்கிறேன்; உண்மையில் ஒரு போர் நடந்தால் என் முன்னே (ஒரு கணமும்) உன்னால் நிற்க இயலாது" என்று {நான் சொன்னதாகச்} சொல்வீராக" {என்றான் கிருஷ்ணன்}.(10)
கிருஷ்ணன் இவ்வாறு சொன்னதும், மீண்டும் தேவலோகத்திற்குச் சென்ற நாரதர், அளவற்ற சக்தி கொண்ட கிருஷ்ணனின் சொற்கள் அனைத்தையும் தேவர்களின் தலைவனிடம் சொன்னார்.(11) பலனைக் கொன்றவனான சக்ரன், அதன் பிறகு பிருஹஸ்பதியிடம் சென்று அனைத்தையும் சொன்னான்; ஓ! குருக்களை மகிழச் செய்பவனே, அவன் சொன்னதைக் கேட்ட பிருஹஸ்பதி இவ்வாறு பேசினார்.(12) {பிருஹஸ்பதி}, "ஓ! ஐயோ, பிரம்மனின் வசிப்பிடத்தில் நான் இல்லாததாலேயே நியாயமற்ற இந்தக் காரியம் உண்டானது[1]. இது வேற்றுமையை உண்டாக்கும்.(13) ஓ! அண்டத்தின் தலைவா, என்னிடம் சொல்லாமல் நீ ஏன் இக்காரியத்தைத் தொடங்கினாய்?(14) ஓ! விருத்திரனைக் கொன்றவனே, முன்வினையில் இருந்து பிறந்த விதியாலேயே உலகம் வழிநடத்தப்படுகிறது; அதைத் தவிர்க்கும் சக்தி எவருக்கும் கிடையாது.(15) செயல்களை அவசரமாகத் தொடங்குவது பாராட்டத்தக்கதல்ல; எனவே, அவசரமாகத் தொடங்கப்பட்ட இக்காரியம் நிச்சயம் நமக்கு அவமதிப்பையும், தோல்வியையும் தரும்" என்றார் {பிருஹஸ்பதி}.(16)
[1] சித்திரசாலை பதிப்பில், "ஐயோ, நான் பிரம்மலோகத்திற்குச் சென்ற போது கெடுவாய்ப்பாக இந்தப் பயங்கரக் கேடு நேரிட்டிருக்கிறது" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "நான் ப்ரஹம்மனின் இடத்திற்குச் சென்ற சமயம் இந்த நீதியற்ற செயல் ஆரம்பிக்கப்பட்டது" என்றிருக்கிறது.
அப்போது மஹேந்திரன் உயரான்ம பிருஹஸ்பதியிடம், "தற்போதைய சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வதே இப்போது உமக்குத் தகும்" என்றான்.(17) அறம்சார்ந்த மனம் கொண்டவரும், முற்போக்கான புத்தியைக் கொண்டவரும், கடந்த கால, எதிர்காலக் காரியங்கள் அனைத்தையும் அறிந்தவருமான பிருஹஸ்பதி, முகம் தாழ்த்தி சற்று நேரம் சிந்தித்த பிறகு, அவனிடம்,(18) "இனி, உன் மகனின் (ஜயந்தனின்) துணையுடன் நீ ஜனார்த்தனனை எதிர்த்துச் சிறப்பாகப் போரிட முயற்சி செய்வாயாக. ஓ! சக்ரா, பின்னர் நான் நீதியின்படியும், அரசியல் ரீதியாகவும் சரியானதைச் செய்வேன்" என்று மறுமொழி கூறினார்.(19)
இவ்வாறு சொன்ன பிருஹஸ்பதி, பாற்கடலுக்குள் சென்று அங்கே இருந்த உயரான்ம கசியபரிடம் அனைத்தையும் சொன்னார்.(20) பிருஹஸ்பதியிடம் இருந்து அதை (பாரிஜாதம் தொடர்பாக நடந்தவை குறித்துக்) கேட்ட கசியபர், சினமடைந்தவராக, "இது நடந்தே தீரும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை.(21) நூறு வேள்விகளைச் செய்தவன், பெருஞ்சக்திவாய்ந்த தேவசோம {தேவசர்ம / கௌதம} முனிவரின் தகுதிக்குத் தகுந்த அவரது மனைவியிடம் காமம் நிறைந்த இச்சை கொண்டான்; அவன் பின்பற்றிய அந்தத் தீய நடத்தை இப்போது அவனைப் பீடிக்கிறது.(22) ஓ! முனிவரே {காசியபரே}, அந்தப் பாவத்தைத் தணிப்பதற்கே நான் இவ்வாறு நீரில் வாழ்ந்து {ஜலவாசதவம் செய்து} வருகிறேன். இருப்பினும் அந்தக் கொடும்பாவம் அவனை இப்போது பீடிக்கிறது.(23) ஓ! தவத்தகுதி கொண்டவரே, விதியின் உதவி இருப்பின் நான் அதிதியுடன் அங்கே சென்று (குருதி சிந்தாமல் இருக்கும் வகையில்) அவர்கள் இருவரையும் தடுத்து, இணக்கங்கொள்ளச் செய்வேன்" என்றார் {கசியபர்}.(24)
அதன்பிறகு அறஆன்மாவான பிருஹஸ்பதி, மரீசியின் மகனிடம் {கசியபரிடம்}, "தக்க நேரம் வந்தால், நீர் நல்ல நேரத்தில் அங்குச் செல்வீர்" என்று சொன்னார்.(25) "நன்று" என்று சொன்ன கசியபர், பிருஹஸ்பதிக்கு விடைகொடுத்து அனுப்பினார்; அதன் பிறகு அவர் உயிரினங்கள் அனைத்தின் தலைவனான ருத்ர தேவனை வழிபடச் சென்றார்.(26) அதிதியின் துணையுடன் கூடியவரும், நுண்ணறிவுமிக்கவரும், சிறப்புமிக்கவருமான கசியபர், ஒரு வரத்தை அடைய விரும்பி, அமைதிநிறைந்தவனும், காளையைச் சின்னமாகக் கொண்டவனுமான உயரான்ம தேவனை வழிபட்டார்.(27) அதன்பிறகு, மரீசியின் மகனான கசியபர், அண்டத்தின் ஆசானான ஈசான தேவனை நிறைவடையச் செய்வதற்காக வேதத்தில் சொல்லப்பட்டவையும், தம்மால் தொகுக்கப்பட்டவையுமான துதிகளால் அவனைத் துதிக்கத் தொடங்கினார்.(28)
கசியபர், "பெரிய காலடிகளைக் கொண்டவனும் {உருக்ரமனும்}[2], அண்டத்தின் புதிய {பெரிய} காரணனும் {விச்வக்ரமனும்}, பரமனும் {ஈசனும்}, உலகத்தைப் படைத்தவனும் (படைப்பாற்றலின் காரணனும்) {ஜகத்ச்ருஷ்டிகர்த்தாவும்}, அறத்தின் மூலம் மட்டுமே அடையப்படக்கூடியவனும், அருளின் தலைவனும் (தன்னை வழிபட்டுத் துதிப்பவருக்கு அருள்பனும்) {வரம் அளிப்பவனும்}, தற்கட்டுப்பாட்டையும், தெய்வீக சக்தியையும் கொண்டவனும் எவனோ அந்தச் சிறப்புமிக்க அண்டத்தின் தலைவனை நான் வணங்குகிறேன்.(29) தேவர்களின் தலைவன் எவனோ, பாவமழிப்பவன் எவனோ, அண்டம் விரிவதற்கான புதிய காரணமாகவும், வலிய காரணமாகவும் இருப்பவன் எவனோ, அவனுடைய புத்தியின் வடிவமாகவே புனித நீர்நிலைகள் இருக்கின்றன[3]. அண்டத்தின் அந்தப் பரம ஆட்சியாளனுடைய புகலிடத்தையே நான் நாடுகிறேன் {பரம ஆட்சியாளனை நான் சரணடைகிறேன்}.(30) தற்கட்டுப்பாட்டைக் கொண்ட ஒரு தபசியின் தோற்றத்தில் இருந்து கொண்டு, வேதாந்தக் கோட்பாடுகளை அறியாத தற்கட்டுப்பாடில்லாதவர்களைக் கொன்று, நட்புசார்ந்த குணங்களைக் கைவிட முயன்றவனும், மகிழ்ச்சி நிறைந்த வடிவத்தையும், புனிதமான தோற்றத்தையும் கொண்டவனும் எவனோ அண்டத்தின் தலைவனான அவனிடமே (தலை) வணங்கி அவனது புகலிடத்தை நான் நாடுகிறேன்.(31) உலகத்திலுள்ள மேலானவர்களின் பாதுகாப்பைக் கவனித்துக் கொள்பவனும், ஒளிகள் அனைத்திற்கும் ஒளியானவனும், அண்டத்தில் மறுப்பிற்கிடமில்லாதவனும், பெருந்தலைவனும், ஸுக்ருதம் என்ற பெயரால் அறியப்படும் பிரம்மத்தின் தோற்றமாக இருப்பவனும், மாற்றமற்றவனும், வெல்லப்பட முடியாதவனும், சோமச்சாற்றையும், சந்திரவொளிக்கற்றைகளையும் உண்டு வாழ்ந்து தவங்களைச் செய்யும் முனிவர்களுக்கு வரங்களை அளிப்பவனும் எவனோ அவனே தன் நித்திய சக்தியால் என்னைப் பேணி வளர்க்கட்டும்.(32)
[2] "இது மூவுலகங்களையும் கைப்பற்றிய கதையைக் குறிப்பிடும் ஸ்லோகமாகும். அதாவது கிருஷ்ணன், வாமன அவதாரத்தில் மூன்று அடிகளால் சொர்க்கம், பூமி, பாதாளம் ஆகியவற்றைக் கைப்பற்றியதும், உபநிஷத்துகளில் குறிப்பிடப்படுவதுமான அண்ட மாயா கோட்பாட்டைக் குறிப்பிடுகிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[3] "ஸ்ருதியின் உரை இங்கே குறிப்பிடப்படுகிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். இங்கே மன்மதநாததத்தரின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து நம் தமிழ் மொழிபெயர்ப்பு சற்றே மாற்றப்பட்டிருக்கிறது. சித்திரசாலை பதிப்பில், "தேவர்களின் மன்னனும், பாவங்கள் அனைத்தையும் அழிப்பவனும், மொத்த உலகிலும் படர்ந்தூடுருவி இருப்பவனும், நீரின் மங்கலக் கருவறையாக இருக்கும் பூமியின் உரிமையாளனுமான அண்டத்தின் தலைவனுடைய புகலிடத்தை நான் நாடுகிறேன்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "தேவர் தலைவன், பாபத்தையழிப்பவன், ஜகன் மாயையால் ஜகத்தாகப் பரவியவன், உமது கர்ப்பத்தில் ஜலமும், மங்களமான பூமிகளும் உள" என்றிருக்கிறது.
அதர்வ வேதத்தில் பறைசாற்றப்படுபவனும், அழகிய தலைகளைக்[4] கொண்டவனும், உயிரினங்களின் பிறப்பிடமும், சாதித்தவனும், வீரனும், தானவர்களை அழித்தவனும், வேள்விகளில் எரிக்கப்படும் புனித ஆகுதியாக இருப்பவனும், அண்டத்தின் தலைவனும் எவனோ அந்தத் தெய்வீகமானவனின் புகலிடத்தையே நான் நாடுகிறேன்.(33) அண்டந்தழுவிய இந்த மாய வலை எவனில் பின்னப்பட்டுள்ளதோ, அண்டமாகவும், அதன் ஆன்மாவாகவும் எவன் இருக்கிறானோ, தன்னிடம் பற்று கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனும், சொர்க்கங்களுக்கு உயரப் பறந்து செல்லும் வாகனத்தைக் கொண்டவனும் எவனோ அந்த அண்டத்தின் தலைவன் என்னிடம் எப்போதும் அருள் நிறைந்தவனாக நிறைவடையட்டும் (அல்லது என்னுடைய மகிழ்ச்சிக்கு எப்போதும் பிறப்பிடமாக இருக்கட்டும்).(34) நம் இதயங்களில் உலவுபவனும், (தன்னில் கிளைத்த வேதங்களெனும்) அழகிய கிளைகளைக் கொண்ட வரம்பற்ற புத்தியைக் கொண்டவனும், பெருஞ்சக்திவாய்ந்த அறத்தலைவனும், வழிபடத்தகுந்தவனும், ஆயிரங்கண்களைக் கொண்டவனும், நூறு வெவ்வேறு வழிகளில் செய்யப்பட்ட செயல்களின் பலன்களைப் பகிர்ந்தளிப்பவனும், உலகங்களின் படைப்பாளனும், சீற்றமிக்கவனுமான அந்த மஹாதேவனையே நான் வணங்குகிறேன்.(35) யோகத்தின் மூலம் அடையக்கூடிய தூய்மையானவனும் (இரண்டற்றவனும்), வேதங்களில் புகழப்படுபவனும், பாவத்திற்கு அப்பாற்பட்டவனும், அழிவுக்குக் காரணனும், உலகில் இன்ப துன்பங்களின் பிறப்பிடமும், படைப்புகள் அனைத்தின் தலைவனும், அண்டத்தின் சுமையைச் சுமப்பவனும், (காலம் முதலிய) அழிவு சக்திகளின் வசிப்பிடமும், பிறையால் நெற்றி அழகூட்டப்பட்டவனும் எவனோ அந்தத் தேவனிடமே நான் தலைவணங்கிச் செல்கிறேன்.(36)
[4] "இவை உபநிஷத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ள சுயத்தின் ஐந்து கோஷங்கள் அல்லது உறைகளாகும். உடல்சார்ந்த (தேஹமயம்), உயிர்சார்ந்த (பிராணமயம்), உணர்வு சார்ந்த (மனோமயம்), கருத்து சார்ந்த (விஞ்ஞானமயம்), அருள்சார்ந்த (ஆனந்தமயம்) தலைகளேஆகியனவே அவையாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
திரிசூலபாணியும், (செயல்களுக்கான) பலனை விரைந்தளிப்பவனும், தீய ஆசைகளின் ஆதிக்கத்தைக் குறைத்து, அமைதியின் குணங்களை அதிகரிக்கச் செய்பவனும், வேள்விகள் முதலிய நல்ல செயல்களாக இருப்பவனும், பாவங்களை விரைவாக அழிக்கக்கூடிய அறத்தகுதிகளின் குணமாக இருப்பவனும், நல்லியல்புக் கோட்பாட்டுடன் புனிதமாகச் செய்யப்படும் செயல்களில் விளையும் அறத்தகுதிகளின் பலன்களைப் அடைபவனும், அனைத்தின் உண்மையான சாரமாக இருப்பவனும், (தூய்மையெனும்) நோன்பை நோற்பவனும் எவனோ அவனது புகலிடத்தையே நான் நாடுகிறேன்.(37) எல்லையற்ற ஆற்றலைக் கொண்டவனும், செயல்கள் அனைத்தையும் ஆதரிப்பவனும், முதன்மையாக இருப்பவனும், (பிற தேவர்களைப் போலல்லாமல்) வேள்வி வழிமுறைகளில் இருந்து விடுபட்டவனும், ஞானம் கொண்டவனும், வேள்விப் புரோஹிதர்களால் தொடங்கப்படும் வேள்விகளின் காரணனும், வேள்வி ஹவிஸை உண்பவனும், அண்டத்தில் முதலில் பிறந்தவனும், படைப்புகளில் மூத்தவனும், நல்லோரின் மத்தியில் பிரம்மத்தைப் போன்றவனும் எவனோ அவனது புகலிடத்தையே நான் நாடுகிறேன் {அவனைச் சரணடைகிறேன்}.(38) (படைப்பின் அடிப்படைகளான) குணங்களைக் கடந்தவனும், பிருஷ்ணியின் மகனான விஷ்ணுவைப் போன்றவனும், மாயப்படைப்பைக் கடந்தவனும், பேரின்பத்தின் மூலம் அண்டத்தைக் கலங்கடிப்பவனும், அழகிய தூய்மையான சுயத்தைக் கொண்டவனும், புத்தியாக இருப்பவனும், தீயோரை மாயையால் பீடிப்பவனும் எவனோ அவனையே நான் வணங்குகிறேன்.(39) தீங்கிழைக்கும் செயல்களில் இருந்து விடுபட்டவர்களும், அறத்தையே அடையாளமாகக் கொண்டவர்களுமான யோகிகளின் அரையசை ஓங்காரமாக இருப்பவனும், நோன்பிலும், விற்கலையிலும் உறுதியானவனும், வீசும் {ஏவும்} செயலாகவே இருப்பவனும், வீரனும், வில்லாளிகளில் சாதனையாளனும், ஆயுதங்களின் எல்லைக்கு அப்பாற்பட்டவனும், உயிருடன் கூடிய படைப்புகளின் தலைவனும், அவற்றை அழிப்பவனும் எவனோ அவனையே நான் வணங்குகிறேன்.(40)
இரண்டற்றவனும் (முற்றிலும் ஒப்பற்றவனும்), அனைத்தின் நண்பனும், கடந்த காலமாகவும், எதிர்காலமாகவும் இருப்பவனும், நெருப்பின் வடிவில் (எரிக்கப்படும் வேள்விக் காணிக்கைகளை) ஹவிஸைக் காண்பவனும், காமம் முதலிய ஆசைகள் அனைத்தையும் அழிப்பவனும், ராட்சசர்களைக் கொல்பவனும், பகுக்க முடியாதவனும், வகுப்பவனும் எவனோ அந்தச் சிறப்புமிக்கத் தேவனே என்னைப் பாதுகாப்பானாக.(41) உலகங்களின் ஒரே தலைவனும், ஒருவனாக இருப்பினும் அண்டத்தில் உள்ள அனைத்திலும் நுழைந்திருப்பவனும், உயிர் மூச்சுகளுக்கே (மருத்துகளுக்கே) உயிரையும், மூச்சையும் கொடுத்தவனும் (அஃதாவது, உயிருக்கே உயிர் கொடுத்தவனும்), உள்ளார்ந்த தீங்கற்ற தன்மையின் காரணமாக எப்போதும் நட்புடனும், இனிமையுடனும் கவனிக்கப்படுபவனும் எவனோ அந்த நற்செயல்களைச் செய்யும் தேவனே இன்று அருள்களையும் மகிழ்ச்சியையும் அடைய என்னை வழிநடத்துவானாக.(42) பிரம்மனின் வடிவில் இருந்து கொண்டு நல்லியல்பின் சாரத்தோடு சத்யலோகத்தையும், இந்த மாய அண்டம் முழுவதையும் படைத்தவனும், பிரம்மத்தையும் அனைத்தையும் அறிந்தவனும், ஆறு சிறப்புகளைக் கொண்டவனும், பகைவரை அழிக்கும் வெவ்வேறு அவதாரங்களில் எண்ணற்ற வடிவங்கள் எடுத்தவனும் எவனோ அந்தத் தேவனே என்னைப் பாதுகாப்பானாக.(43) காமத்திற்குரிய, அதிகாமத்திற்குரிய அதிசயப் பொருட்களை வெளிப்படுத்துபவனும் {இந்திரியங்களுக்கு அப்பாற்பட்டவனும்}, பிறப்பற்றவனும், தன்னிறைவுடன் இருப்பவனும், பகுக்கப்படாமல் முழுமையாக இருப்பவனும், புலன்நுகர் பொருட்களுடன் தொடர்பில் இருப்பவனும், செழிப்பை அருள்பவனும், உயிரைக் கொடுப்பவனும், மான் {யானைத்} தோல் சூடியவனும், பரம பரவச {பேரின்ப} நிலையாக இருப்பவனும், வீசும் காற்றுக்கு உயிராக இருப்பவனும், கருத்தாக்கங்களின் கொள்ளிடமும், மகிழ்ச்சியை உண்டாக்குபவனும் எவனோ அந்தத் தேவனே தன்னுடைய இரு மனைவியரின் துணையுடன் எனக்கு அருள் புரியட்டும்.(44)
முக்கண்களைக் கொண்டவனும், ஊட்டமளிப்பவனும், இருபிறப்பாளர்களுக்கு அறத்தைக் கற்பிப்பதற்காக வேள்வி செய்பவர்களுக்கு வரங்களை அளிப்பவனும், போர்களில் வெற்றி பெறும் சிறந்தவர்களில் மிகச் சிறந்தவனும், தலைவனும், தேவர்களுக்குத் தேவனும் எவனோ அந்த ருத்ரனின் பாதுகாப்பையே நான் நாடுகிறேன்.(45) நெருப்பின் வடிவில் தேவர்களின் வாயாக இருப்பவனும், தீமை செய்வோரை அழிப்பவனும், சோம வேள்வியாக இருப்பவனும், இம்மையில் இருப்பெனும் மரத்தை ஒழிப்பவனும், செயல்கள் அனைத்தின் சாட்சியாக இருப்பவனும், அனைத்தையும் அழிப்பதற்கான ஆதாரமாக இருப்பவனும், உயிரினங்களின் தலைவனும், குணங்களையும், அவற்றின் களஞ்சியங்களையும் அறிந்தவனும் எவனோ அந்த ருத்ரனின் புகலிடத்தையே நான் நாடுகிறேன்.(46) செருக்கற்றவனும், வேள்விகளைச் செய்பவனும், உலகங்களின் தொடக்கமாகவும், நடுப்பகுதியாகவும், முடிவாகவும் இருப்பவனும், அமைதி நிலையாகவும், ஒருங்கிணைந்த நிலையாகவும் இருப்பவனும், வேள்விகளில் பாடப்படுபவனும், வேதங்களில் எண்ணற்ற பல தேவர்களாகப் பரிந்துரைக்கப்படுபவனும், தேவலோகத்தையும் ஒழுங்கமைப்பவனும் எவனோ அந்த ருத்ரனின் புகலிடத்தையே நான் நாடுகிறேன்.(47) யானைத் தோலை அணிந்தவனும், நோன்புகளையும், விரதங்களையும் செய்பவனும், மண்டலத்தால் {மேகலையால்} அலங்கரிக்கப்பட்டவனும், எளிதில் மகிழ்ந்து நிறைவடைபவனும், பாவத்திலிருந்து விடுபட்டுக் கோபத்தைக் கட்டுப்படுத்துபவனும், எப்போதும் இருப்பவனும், பரமாத்மாவும், இயல்பில் நிலையானவனும், சடாமுடி தரித்தவனும், துதிக்கத் தகுந்தோரால் துதிக்கப்படுபவனும் எவனோ அந்தத் தலைவனையே நான் வணங்குகிறேன்.(48)
தேவர்களின் தேவனும், புனிதமானவர்களுக்குப் புனிதமானவனும், வேள்விகளின் வேள்வியும், பெரியனவற்றில் பெரியவனும், நூறு (எல்லையற்ற) தோற்றங்களைக் கொண்டவனும், (கண்களின் கண்களும், காதுகளின் காதையும் போல) புலன்களை ஆள்பவர்கள் அனைவரின் ஆட்சியாளனும், எப்போதும் புகழப்படுபவனும் எவனோ அவனுடைய புகலிடத்தையே நான் நாடுகிறேன்.(49) இதயங்கள் அனைத்திலும் அதிசயமாக இருப்பவனும், புதிரான பட்டப்பெயர்களைக் கொண்ட புருஷனும், தானாக வெளிப்படும் பிரணவமும், வெளிப்படுத்தும் காரணிகளான ஒளி, கண்கள் முதலியன இல்லாதபோதும் வெளிப்படுபவனும், ஜீவன் என்று அறியப்படும் தெய்வீக வடிவத்தின் சக்திவாய்ந்த {முக்கியமான மூலமான} காரணனும், குணங்கள் அனைத்தையும் கொண்டவனும், அருள்கள் அனைத்தின் களஞ்சியமும் எவனோ அந்தத் தேவனையே நான் வணங்குகிறேன்.(50) இரண்டையும் (பருப்பொருளையும், மனத்தையும்) உண்டாக்குபனாக இருந்தாலும், உண்டாக்கப்படாதவனாக இருப்பவனும் (அல்லது பருப்பொருள், மனம் ஆகியவற்றின் பிறப்பிடமும், அவற்றைப் படைக்காதவனும், காரணங்கள் அனைத்தையும் கடந்தவனான ஒருவன்), (நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு) நுட்பமானவனும், படைப்புகள் அனைத்துடன் ஒன்றாகவும் வேறாகவும் (ஒருங்கிணைந்தும், வேறுபட்டும்) இருப்பவனும், தானே இருப்பவனும், இருப்பின் அழிவிடமாக இருப்பவனும், இனிமை, பரவசம், பேரின்பம் ஆகியவற்றைத் தீங்கில்லாமல் கொடுப்பவனும் எவனோ அவனே என்னைப் பாதுகாப்பானாக.(51) ஒவ்வொருவரின் அருகிலும் இருப்பவனும், சாதனை {முயற்சி} செய்பவர்களுக்கு வெளிப்படுபவனும், தன்னை மதிப்புடன் {பயபக்தியுடன்} நம்புகிறவர்களுக்கு, "நான் முழுமையானவன்" என்ற ஞானத்தை அளிப்பவனும், பெரியவையும், நல்லவையுமான செயல்களின் தலைமை தேவனும், ஆசைகளையும், ஆறு சிறப்புகளையும் நிறைவேற்றுபவனும் எவனோ அந்தத் தலைவனே என்னைப் பாதுகாப்பானாக.(52)
மனம் சார்ந்த, உடல் சார்ந்த துன்பங்களின் பிறப்பிடத்தை அழிப்பவனும், திறனுக்கும், பொருளுக்கும் காரணனும், (ஆசைகளின்) பரிணாமமும் {ஆசைகளை ஏற்படுத்துபவனும்}, பரம சக்தியை {உச்ச ஆற்றலைக்} கொண்டவனும் எவனோ அந்தத் தேவர்களின் தேவனே தன் ஆற்றல்மிகு ஆயுதங்களைப் பயன்படுத்தி என்னுடைய துன்பங்களுக்கும், நல்லோரின் துன்பங்களுக்குமான காரணத்தை அறுப்பானாக.(53) பழங்காலத்தில் தேவர்களுக்குப் பெருந்துன்பம் விளைவித்தவர்களும், தந்திரம் நிறைந்தவர்களுமான தானவர்கள் பயங்கரக் கணைகளைக் கொண்டு வெறும் முட்களைப் போல எவனால் வெட்டப்பட்டனரோ, அண்டத்தின் நீரை எவன் நிலைத்திருக்கச் செய்கிறானோ அந்தப் பரமனே என்னைப் பாதுகாப்பானாக.(54) வேள்வி செய்த தக்ஷன், எந்தத் தேவனுக்குரிய வேள்விக் காணிக்கையின் பகுதியை ஒழிக்க விரும்பினானோ அந்த வேள்விகளின் தலைவனும், அனைத்துப் பொருட்களின் தொடக்கமாகவும், முடிவாகவும் இருப்பவனும், தக்ஷனின் வேள்வியை அழித்தவனும், எல்லாம்வல்லவனுமான அந்தப் புத்திமானே என்னைக் காப்பானாக.(55) உலகத்தைப் படைத்து அழிப்பவனும், புதிர்களின் புதிராக இருப்பவனும், முதன்மைக் கருத்துகளைக் கொண்டவனும், அனைத்துப் பொருட்களில் இருந்து வேறுபட்டவனாக இருப்பினும், விஷ்ணுவின் வடிவில் வேள்விகளில் இருப்பவனும், ஆறு சிறப்புகளின் முதன்மையான புகலிடமுமான (ஆறு குணங்களுக்கு முக்கியனுமான) அந்த நாராயணத் தேவனே என் மகனான இந்திரனைப் பாதுகாப்பானாக.(56)
படைப்பு, இருப்பு, ஒழிப்பு என்ற குணங்களின் மூன்று நிலைகளையும் தன்னில் கொண்டவனும், சிறந்த கொள்கையை (சத்வ குணத்தைத்) தன் இயல்பில் கொண்டவனும், உலகத்தைப் பாதுகாப்பவர்களைப் பாதுகாத்து, தீமை செய்வோரை அழித்து ருத்திரனின் வடிவில் இருப்பவனும், அண்டத்தின் தொடக்கமும், உலகை ஒடுக்குபவர்களை ஒழிப்பவனும் எவனோ,(57) எண்ணற்ற வடிவங்களைக் கொண்ட விஷ்ணுவின் மிகச்சிறிய பகுதியாக இருப்பவன் எவனோ, பிரம்மனும், அவனுடைய மகன்களும், மரீசியின் தலைமையிலான பிராமணர்களும் எவனிடம் பிறந்தார்களோ, எவனுடைய வசிப்பிடத்திற்குள் அவர்களால் நுழைய முடியாதோ அந்த நல்லோரின் பாதுகாவலனே, உமாதேவியுடன் சேர்ந்து என்னிடம் நிறைவடைவானாக.(58) பூதங்கள்[5] எவனிடம் எழுந்தனவோ, அவற்றைப் பராமரிப்பவன் எவனோ, (அழிவின் வடிவில்) அவை எவனிடம் கலக்குமோ, நினைவுசக்தியாகவும், செழிப்பாகவும், பரமனை அர்ப்பணிப்புடன் தேடும் உயரான்மாவுக்குப் புதிர்களை வெளிப்படுத்துபவனாகவும் இருப்பவன் எவனோ அந்தத் தேவனே எங்கள் துன்பங்கள் அனைத்திற்கும் ஒரு முடிவைக் கொண்டு வருவானாக.(59) அண்டத்தின் ஆண் படைப்புகள் அனைத்தும் முக்கண் தேவனே, பெண் பகுதிகள் அனைத்தும், அனைத்தையும் தாங்கும் உமாதேவியே. அண்டத்தில் இவர்களைக் காட்டிலும் மூன்றாவது வேறொன்றும் கிடையாது. அனைத்துமாக, அனைத்தின் தலைவனாகப் பரப் பிரம்மமாக இருப்பவன் மஹாதேவன் மட்டுமே" என்று சொல்லி {கசியபர்} துதித்தார்.(60)
[5] "இந்து தத்துவத்தின் படி இவை, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்தாகும் {பஞ்சபூதங்களாகும்}" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
காளையைச் சின்னமாகக் கொண்டவனும், அறத்தின் ஆன்மாவும், எல்லாம் வல்லவனுமான அந்தத் தேவன், இவ்வாறு துதிக்கப்பட்டதும் அறத்தை நிலைக்கச் செய்பவர்களில் முதன்மையான கசியபரிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(61) தேவர்களின் தலைவனான அவன், நிறைவடைந்த இதயத்துடன் கசியபரிடம், "ஓ! உலகங்களைப் படைத்தவரே (பிரஜாபதியே), நீர் என்னை வேண்டிய காரணத்தை நான் அறிவேன்.(62) உயரான்ம தேவர்களான இந்திரனும், உபேந்திரனும் அமைதியடைவார்கள்; ஆனால் சிறப்புமிக்க ஜனார்த்தனன், பாரிஜாத மரத்தைக் கொண்டு செல்வான்.(63) ஓ! கசியபரே, பெரும் தவம் செய்தவரான தேவசோம ({தேவசர்ம} கௌதம) முனிவர், தன் மனைவியுடன் இணைய விரும்பிய மஹேந்திரனைச் சபித்தார். (தற்போதைய பேரிடர் அந்தச் சாபத்தின் விளைவாகவே நேர்கிறது).(64) ஓ! அறம் சார்ந்தவரே, இப்போது நீர் தக்ஷனின் மகளான அதிதியின் துணையுடன் சக்ரனின் வசிப்பிடத்திற்குச் செல்வீராக; உமது மகன்கள் இருவரும் நிச்சயம் அருளப்படுவார்கள் {அவர்களுக்கு மங்கலம் உண்டாகும்}" என்றான் {சிவன்}.(65)
தாமரையில் பிறந்தவனின் மகனுக்கு மகனும் {பிரம்மனின் மகனான மரீசி முனிவரின் மகனும்}, ஒப்பற்றவரும், அருளப்பட்டவருமான கசியபர், ஹரதேவனின் இந்தச் சொற்களைக் கேட்டு மகிழ்ச்சியான இதயத்துடன் தேவர்களின் வசிப்பிடத்திற்குச் சென்று, தேவர்களின் ஆசானான மஹாதேவனை வணங்கினார்" என்றார் {வைசம்பாயனர்}.(66)
விஷ்ணு பர்வம் பகுதி – 129 – 073ல் உள்ள சுலோகங்கள் : 66
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |