(ராமக்ருஷ்ணயோர்மதுராகமனம்)
Krishna's arrival at Mathura | Vishnu-Parva-Chapter-101-045 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கரவீரபுரத்திலிருந்து மதுரா திரும்பிய ராமனும், கிருஷ்ணனும்; அவர்களுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வசுதேவனின் வீர மகன்கள் {பலராமன், கிருஷ்ணன்} இருவரும் தமகோஷனுடன் சேர்ந்து வழியில் பயணிகளின் விதிகளுக்கு இணங்க ஐந்து இரவுகளை ஓரிரவைப் போலக் கழித்தனர். மதுரா நகரை அவர்கள் அடைந்த போது, உக்ரசேனனின் தலைமையிலான யாதவர்கள் அனைவரும் அவர்களை வரவேற்பதற்காக நகரத்தைவிட்டு வெளியே வந்தனர்.(1-3) மதுராவைச் சேர்ந்த வணிகர்கள், குடிமக்கள், அமைச்சர்கள், சிறுவர்கள், முதியவர்கள் அனைவரும் அவர்களை வரவேற்பதற்காக வெளியே வந்தனர்.(4)
நாற்சந்திகள் அனைத்தும் மாலைகளாலும், கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டன; மகிழ்ச்சியை அறிவிக்கும் எக்காளங்கள் ஒலிக்கப்பட்டன, துதிபாடிகள் மனிதர்களில் சிறந்தவர்களான அவ்விருவரின் மகிமைகளையும் பாடத் தொடங்கினர்.(5) அந்தச் சகோதரர்கள் இருவரும் திரும்பியதால் மதுரா நகர் முழுவதும் மகிழ்ச்சிமிக்கதாக, இன்பம் நிறைந்ததாக இந்திர விஜயத்தின் போது இருப்பதைப் போல அழகானதாக இருந்தது.(6) பாடகர்கள், "!ஓ! யாதவர்களே, உலகில் கொண்டாடப்படும் ராமன், கோவிந்தன் என்ற இரு சகோதரர்களும் தங்கள் நகரத்திற்குத் திரும்பியிருக்கின்றனர். மகிழ்ச்சியாக விளையாடுவீராக" என்று அறிவித்தபடியே யாதவர்களின் மகிமைகளை அதிகமாக வர்ணிக்கும் இனிய பாடல்களை நெடுஞ்சாலைகளில் பாடத் தொடங்கினர்.(7,8)
ராமனும், கிருஷ்ணனும் மதுரா நகரை அடைந்த போது, அங்கே அழுக்கடைந்த உடைகளுடன் சுயநினைவற்றவனாக வறியவன் எவனும் இல்லை.(9) பசுக்கள், குதிரைகள், யானைகள் ஆகியன மகிழ்ச்சியாக இருந்தன, பறவைகள் மங்கல ஒலிகளை வெளியிடத் தொடங்கின, ஆண்களும், பெண்களும் நல்ல ஸுகமான மனநிலையை அடைந்தனர்.(10) புழுதியற்ற மங்கலத் தென்றல் பத்துத் திக்குகளிலும் வீசத் தொடங்கியது, கோவில்களில் இருந்த தெய்வங்களின் மூர்த்திகள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.(11) அவர்கள் வந்த போது, கிருத யுகத்தில் தோன்றும் அறிகுறிகள் {நற்சகுனங்கள்} அனைத்தும் மதுராவில் தோன்றின.(12)
அழகிய குதிரைகளால் இழுக்கப்படும் தேரில் அமர்ந்தபடி ராமனும் கேசவனும், மங்கல நேரத்தில் மதுரா நகருக்குள் நுழைந்தனர்.(13) சக்ரனைப் பின்தொடரும் தேவர்களைப் போல யாதவர்கள் ராமனையும், கோவிந்தனையும் பின்தொடர்ந்து அந்த அழகிய நகருக்குள் சென்றனர்.(14) பிறகு, {அஸ்த} மலைக்குள் நுழையும் சூரியனையும், சந்திரனையும் போல யதுவின் வழித்தோன்றல்களான அவ்விருவரும் தங்கள் தந்தையான வஸுதேவனின் வீட்டிற்குள் மகிழ்ச்சி நிறைந்த முகங்களுடன் நுழைந்தனர்.(15) வஸுதேவன் மகன்களான அவ்விருவரும், தங்கள் தங்களுக்குரிய ஆயுதங்கள் ஆங்காங்கே வைத்துவிட்டு, முழுமையான மகிழ்ச்சியை அடைந்தனர்.(16)
அதன்பிறகு அவர்கள் வஸுதேவனின் பாதங்களை வணங்கிவிட்டு, மன்னன் உக்ரசேனனுக்கும், அங்கே கூடியிருந்த முன்னணி யாதவர்களுக்கும் உரிய மதிப்பை வழங்கினர்.(17) அவர்களாலும் பதிலுக்கு வரவேற்கப்பட்ட அவர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் அன்னையின் அந்தப்புரத்திற்குள் நுழைந்தனர்.(18) மீமானிடச் செயல்களைச் செய்பவர்களும், அழகிய முகங்களைக் கொண்டவர்களுமான ராமனும், கேசவனும், இவ்வழியிலேயே உக்ரசேனனைப் பின்பற்றி மதுராவில் மகிழ்ச்சியாகச் சில நாட்களைக் கழித்தனர்" என்றார் {வைசம்பாயனர்}[1].(19)
[1] ஹரிவம்ச விஷ்ணு பர்வம் 37ம் அத்தியாயம் முதல் இந்த 45ம் அத்தியாயம் வரை உள்ள செய்திகள் பிபேக்திப்ராயின் பதிப்பில் இல்லை.
விஷ்ணு பர்வம் பகுதி – 101 – 045ல் உள்ள சுலோகங்கள் : 19
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |