(உஷயா ஸஹாநிருத்தஸ்ய விவாஹ꞉ உஷாஹரணஸமாப்திஷ்ச)
Aniruddh's wedding and reception | Vishnu-Parva-Chapter-187-131 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : துவாரகையில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்த பெண்கள்; உஷை அநிருத்தனுடன் இன்புற்றிருத்தல்; விஷ்ணு மஹாத்மியம்; பலஸ்ருதி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அப்போது, பெருந்தோள்களைக் கொண்ட ஆஹுகன் {உக்ரசேனன்}, பேரொளி படைத்த கிருஷ்ணனிடம், தன் விழிகள் விரிய, "ஓ! யதுவின் வழித்தோன்றலே, நான் சொல்வதைக் கேட்பாயாக.(1) ஓ! என் குழந்தாய், நீ {அநிருத்தனும், நீயும்} நலத்துடன் திரும்பியதைக் கண்டோம். அவன் முறையாகக் கவனிக்கப்படுகிறான். அநிருத்தன் மீண்டதற்கும், திருமணம் செய்து கொண்டதற்கும் பெரும் விழா ஒன்றை {திருமண வரவேற்பை} ஏற்பாடு செய்வாயாக.(2) பெருமைமிகு உஷை, அநிருத்தனுடன் சேர்ந்தவளாகவும், தோழிகளால் சூழப்பட்டவளாகவும் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறாள்.(3) உயரான்மக் கும்பாண்டனின் பெருமைமிகு மகள் {ராமா / ராமை / ரமை} உஷையின் தோழியாகச் சேர்க்கப்பட வேண்டும். வைதர்ப்பி {விதர்ப்ப மன்னனின் மகள்}[1] செழித்திருக்கட்டும்.(4) எழில்மிகு கும்பாண்டன் மகளைச் சாம்பனுக்கும், எஞ்சிய கன்னிகையரை பிற இளவரசர்களுக்கும் முறையாக {திருமணம் முடித்துக்} கொடுப்பாயாக.(5)
[1] இங்கே சொல்லப்படுவது, கிருஷ்ணனின் மனைவியான {ருக்மியின் தங்கையான} ருக்மிணியாகவும் இருக்கலாம். பிரத்யும்னனின் மனைவியான {ருக்மிணியின் சகோதரன் ருக்மியின் மகள்} சுபாங்கியாகவும் இருக்கலாம். இருவரும் விதர்ப்ப நாட்டு இளவரசிகளே. அநிருத்தனின் மற்றொரு மனைவியான {ருக்மிணியின் சகோதரன் ருக்மியின் பேத்தி} ருக்மவதியும் விதர்ப்ப இளவரசியே. சித்திரசாலை பதிப்பிலும், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பிலும், கும்பாண்டனின் மகளுடைய பெயர் இங்கே ராமா என்று குறிப்பிடப்படுகிறது.
உன் வசிப்பிடத்திலும், அநிருத்தனின் வசிப்பிடத்திலும் பெரும் விழா நடைபெறட்டும்.(6) அந்தப்புரத்தில் இசைக்கருவிகளை இசைக்கும் கன்னிகையரின் இனிய குரலைக் கேட்பாயாக. அவர்களில் சிலர் ஆடவும், வேறு சிலர் பாடவும் செய்கிறார்கள்.(7) சிலர் மகிழ்ச்சியுடன் ஒருவரோடொருவர் உரையாடிக் கொண்டிருக்கின்றனர். சிலர் மாலைகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டு, பல்வேறு நிறங்களிலான உடைகளை உடுத்திக் கொண்டு அங்கேயும் இங்கேயும் திரிந்து வருகின்றனர்.(8) சிலர் மதுவின் ஆதிக்கத்தில் ஒருவரையொருவர் தழுவிக் கொள்கின்றனர், சிலர் மகிழ்ச்சியால் விரிந்த கண்களுடன் பகடை விளையாடுகின்றனர்" என்றான் {உக்ரசேனன்}[2].(9)
[2] சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில், "பாஷா பாரதம் பதிப்பில் இந்த 9ம் ஸ்லோகத்திற்குப் பிறகு இரு வரிகள் இருக்கின்றன" என்றிருக்கிறது. அந்த இருவரிகள் கீழே அடைப்புக்குறிக்குள் பின்தொடர்கின்றன.
{அப்போது கிருஷ்ணன், ருக்மிணியிடம், "பார்வதி தேவியால் அன்புடன் அனுப்பப்பட்ட மயிலின் மீதேறி}[3] தோழியர் சூழ உஷை வருகிறாள்; அவளை அரண்மனைக்குள் அழைத்துச் செல்வாயாக.(10) அழகியும், உன்னதமானவளும், உஷை என்ற பெயரைக் கொண்டவளுமான இந்தப் பாணன் மகள், நம் குலத்திற்குத் தகுந்த மருமகளாவாள். இவளை மதிப்புடன் வரவேற்பாயாக" என்றான் {கிருஷ்ணன்}.(11)
[3] இந்த வாக்கியம் மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. இது சித்திரசாலை பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டு இங்கே அளிக்கப்படுகிறது.
சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி நலந்தரும் சடங்குகளைச் செய்த பெண்கள் அழகிய உஷையை அநிருத்தனின் வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.(12) தேவகி, ரேவதி, விதர்ப்ப இளவரசியான ருக்மிணி ஆகியோர் அநிருத்தனைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.(13) {ரேவதியும், ருக்மிணியும் உஷையை வீட்டின் மையத்திற்கு அழைத்துச் சென்று, "நாங்கள் அநிருத்தனைக் காணும்படி செய்த நீ நமது நற்பேற்றைப் பெருகச் செய்தாய்" என்றனர்}[4].(14) பேரிகைகளின் முழக்கத்துடன் அந்த அறைக்குள் உஷை அழைத்துச் செல்லப்பட்ட போது, அழகிய காரிகைகள் மங்கலச் சடங்குகளைச் செய்யத் தொடங்கினர்.(15) யது குலத் தலைவர்களின் உறைவிடத்திற்குள் இருந்த உஷையும் பேரின்பத்தை அனுபவித்தபடி அந்த மாளிகையில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாள்.(16)
[4] இந்த வாக்கியம் மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. இது சித்திரசாலை பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டு இங்கே அளிக்கப்படுகிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், இந்த அத்யாயத்தின் பெரும்பகுதி இல்லை. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ரேவதி, ருக்மிணி இருவரும் விசேஷமான கல்யாண மாளிகையில் புகுந்து சொன்னார், "மருமகளே, அநிருத்தனை ஸ்வப்னத்தில் நீ கண்டதால் அத்ருஷ்டவசமாகப் பெருமடைகிறோம்" என்றார்கள்" என்றிருக்கிறது.
சில நாட்கள் கழிந்ததும், தெய்வீகப் பெண்ணின் வடிவில் இருந்தவளும், அழகிய இடை கொண்டவளுமான சித்திரலேகை, உஷையிடமும், தன் தோழியரிடமும் விடைபெற்றுக் கொண்டு சொர்க்கலோகத்திற்குச் சென்றாள்.(17) அழகியும், அசுர இளவரசியுமான உஷையின் தோழியர் சென்ற பிறகு, மாயாவதி அவளை முதலில் அழைத்துத் தன் வசிப்பிடத்திற்குக் கொண்டு சென்றாள்.(18) பிரத்யும்னனின் மனைவியான அவள் {மாயாவதி}, இளமைநிறைந்தவளும், அழகியுமான தன் மருமகள் உஷையைக் கண்டு, விலைமதிப்புமிக்க ரத்தினங்களையும், ஆடைகளையும் அவளுக்குக் கொடுத்து வரவேற்றாள்.(19) அதன்பின்பு, யது குல வழக்கத்தின்படி அந்தக் குலப் பெண்கள் அனைவரும் புதிய மருமகளான உஷையை முறையாக வரவேற்றனர்".(20)
வைசம்பாயனர், "ஓ! குருகுலத்தைத் தாங்குபவனே {ஜனமேஜயா}, போரில் விஷ்ணுவால் பாணன் வீழ்த்தப்பட்டதையும், அவன் {பாணன்} உயிருடன் விடப்பட்டதையும் இவ்வாறே நான் உனக்கு விளக்கிச் சொன்னேன்.(21) அதன்பிறகு கிருஷ்ணன், யாதவர்கள் சூழ உயர்ந்த செழிப்பை அனுபவித்துக் கொண்டு துவாரகையில் வாழ்ந்தபடியே, மொத்த உலகையும் ஆண்டான்.(22) இவ்வாறே, ஓ! மன்னா, வாசுதேவன் என்ற பெயரில் பூமியில் அவதரித்த விஷ்ணு, யதுகுலத்தில் முதன்மையானவனாகக் கொண்டாடப்பட்டான்.(23) விருஷ்ணி குலத்தில், வசுதேவனின் குடும்பத்தில், தேவகியிடம், பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணு பிறந்த காரணத்தை முன்பு நீ என்னிடம் கேட்டாய். இவையே அந்தக் காரணங்கள்.(24) ஓ! ஜனமேஜயா, அற்புத நிகழ்வைக் குறித்த {மதுரா} அத்யாயங்களில் நாரதரின் கேள்வி, வாசுதேவனின் மறுமொழி தொடர்பாக நான் விரிவாக உரைத்தது அனைத்தையும் நீ கேட்டாய்.(25) அதன் மூலம், மதுராவில் கிருஷ்ணனின் வாழ்வு, அவனது ஒழுக்கம் ஆகியவற்றைக் குறித்த உன் ஐயங்களை நான் போக்கினேன், அவனது செயல்பாடுகள் அனைத்தையும் விளக்கிச் சொன்னேன்.(26)
கிருஷ்ணனே அற்புதங்களின் வசிப்பிடமாவான்; அவனை விட அற்புதம் நிறைந்தது வேறேதுமில்லை. விஷ்ணுவால் நிகழ்த்தப்படாத அற்புதம் வேறேதுமில்லை.(27) அருளப்பட்டவர்களில் முதன்மையானவனும், அருளின் பிறப்பிடமும், நற்பேற்றை அருள்பவனும், அற்புதம் நிறைந்தவனும் விஷ்ணுவே ஆவான்.(28) வாசுதேவனைவிட அற்புதம் நிறைந்தவன் வேறெவனும் இல்லை. ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், மருத்துகள், அசுவினி இரட்டையர்கள் ஆகியோரும், வானம், பூமி, திக்குகள், நீர், ஒளிக்கோள்கள் ஆகியவையும் அவனே.(29) படைப்பவனும், காப்பவனும், அழிப்பவனும், வாய்மை, தவம், ஆகியவையும், பெரும்பாட்டன் பிரம்மனும் விஷ்ணுவே ஆவான்.(30) நாகர்களில் அனந்தனும், ருத்ரர்களில் சங்கரனும், தேவர்களின் தலைவனும் {இந்திரனும்}, மொத்த அண்டமும் அவனே. அசைவன, அசையாதன உள்ளிட்ட இந்த அண்டம் நாராயணனில் இருந்தே தோன்றியது. ஓ! பரதனின் வழித்தோன்றலே, அவனை நீ வணங்குவாயாக. (31,32)
கேசவனின் மகிமையையும், பாணனுடன் அவன் செய்த போரையும் நான் இவ்வாறே மீளுரைத்தேன். அதைக் கேட்டதன் மூலம் மட்டுமே {பாணன் பங்கத்தைக் கேட்டதன் மூலம் மட்டுமே} நீ உன் குலத்தின் ஒப்பற்ற தகுநிலையை அடைவாய்.(33) பாணனுடன் கேசவன் செய்த போரையும், அவனது மிகச் சிறந்த பணியையும் தியானிப்பவன், பாவத்தால் தீண்டப்படமாட்டான், அவன் அறம்பிறழமாட்டான்.(34) ஓ! ஜனமேஜயா, வேள்வி முடிந்ததும் {நாகவேள்வி முடிந்ததும்} உன்னால் கேட்கப்பட்டதற்கு இணங்க, விஷ்ணுவின் மகிமைமிக்கச் செயல்பாடுகள் அனைத்தும் {வைஷ்ணவியானது} இவ்வாறே என்னால் உனக்கு விளக்கிச் சொல்லப்பட்டது.(35)
ஓ! மன்னா, இந்த அற்புதம் நிறைந்த கருப்பொருட்கள் அனைத்தையும் தன் மனத்தில் தியானிப்பவன், பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, விஷ்ணுலோகத்தை {வைகுண்டத்தை} அடைவான்.(36) ஒவ்வொரு நாள் காலையிலும் இதை {விஷ்ணு மஹாத்மியத்தை} உரைப்பவன் இம்மையிலும், மறுமையிலும் எந்தப் பேரிடரையும் சந்திக்க மாட்டான்.(37) இதை உரைப்பதன் மூலம், பிராமணர்கள் வேத அறிஞர்கள் ஆவார்கள், க்ஷத்திரியர்கள் வெற்றிகளை அடைவார்கள், வைசியர்கள் செல்வங்களைத் திரட்டுவார்கள், சூத்திரர்கள் விருப்பங்கள் அனைத்தையும் அடைந்து, நன்மையைப் பெறுவார்கள். இதை உரைப்பவனைத் தீப்பேறு அண்டாது, அவன் நெடுநாள் வாழ்வை {தீர்க்காயுளுடன்} வாழ்வான்[5]" என்றார் {வைசம்பாயனர்}".(38,39)
[5] இந்நூல் கற்போர் கேட்போருக்கு உண்டாகும் நற்பெயன்களைக் கூறும் இப்பகுதி "பலஸ்ருதி" என்றழைக்கப்படுகிறது.
சௌதி, "ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே {சௌனகரே}, பரிக்ஷித்தின் மகனான ஜனமேஜயன், இந்த ஹரிவம்சத்தைக் கவனத்துடன் கேட்டு, தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டான்.(40) ஓ! சௌனகரே, இவ்வாறே நான் ஹரியின் குலத்தை {வம்சத்தைச்} சுருக்கமாகவும், விரிவாகவும் உமக்கு விளக்கிவிட்டேன். இன்னும் வேறென்ன கேட்க விரும்புகிறீர்?" என்று கேட்டார்.(41)
*********விஷ்ணு பர்வம் முற்றும்*********
*********அடுத்தது பவிஷ்ய பர்வம்*********
விஷ்ணு பர்வம் பகுதி – 187 – 131ல் உள்ள சுலோகங்கள் : 41
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |