(கிருஷ்ணபீஷ்மகஸம்வாதம்)
Conversation between Krishna and Bhishmaka | Vishnu-Parva-Chapter-108-052 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனைத் துதித்த பீஷ்மகன்; மதுரா திரும்பிய கிருஷ்ணன்...
பீஷ்மகன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! தேவர்களின் தலைவா, என் மகன் {ருக்மி} குழந்தைத்தனமாகத் தன் சகோதரியை {ரும்மிணியை} சுயம்வரத்தில் கொடுக்க விரும்புகிறான் என்றாலும் நான் அதை விரும்பவில்லை.(1) அவன் முற்றிலும் குழந்தைத்தனமானவன்; நான் (இவ்வகையில் என் மகளைக்) கொடுக்க விரும்பவில்லை. என் மகள் {ருக்மிணி}, தானே காணும் ஒருவனையே தேர்ந்தெடுக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்[1].(2) ஓ! தலைவா, என் மகனுடைய தீய நடத்தைக்காக நான் உன்னை அமைதி அடையச் செய்கிறேன். அமைதியடைந்து (அவனை) நீ மன்னிப்பாயாக" என்றான்.(3)
[1] சித்திரசாலை பதிப்பில், "அவள் தானே ஒருவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "எனது அபிப்ராயம் ஒருத்தி ஒருவனையே நன்கு ஆலோசித்து வரிப்பாள்" என்றிருக்கிறது.
கிருஷ்ணன் {பீஷ்மகனிடம்}, "உமது மகன் {ருக்மி} சிறுவனாக இருக்கும்போதே இந்த மன்னர்கள் அனைவரையும் தூண்டியிருக்கிறான் எனில், வயது முதிரும்போது எவ்வளவு ஆணவத்துடன் இருப்பானென எனக்குத் தெரியவில்லை.(4) இந்தப் பூமியில் பெரும் அரச குலத்தில் பிறந்த எவனும், ஒரேயொரு மன்னனின் முன்பும் பொய்ம்மை பேசினாலும், அவன் யமனின் தண்டனையெனும் நெருப்பில் தன் சுயத்தையும், தன் தவத்தால் அடைந்தவையும், சூரியக் கதிர்களைப் போன்ற பிரகாசமானவையுமான உலகங்கள் அனைத்தையும் எரிக்கிறான்[2].(5,6) ஓ! தலைவா, இதுவே மன்னர்களின் அறக்கடமையென நான் அறிகிறேன், பழங்காலத்தில் பிரம்மனும் மனிதர்களின் முதன்மையான கடமையென இதையே சுட்டிக்காட்டியிருக்கிறான்.(7) ஓ! மன்னா, இந்தச் சூழ்நிலையில் இந்தச் சபையில் மன்னர்களின் முன்னால் உமது மகனால் எவ்வாறு பொய் சொல்ல முடிந்தது?(8) இது போகட்டும், உமது மகனால் அழைக்கப்பட்ட மன்னர்களின் மாபெருங்கூட்டம் கூட்டம் குறித்து உமக்கேதும் தெரியாது என்ற உமது கூற்றிலும் நான் பெரும் ஐயங்கொள்கிறேன்.(9) ஓ! மன்னா, சூரியனையும், சந்திரனையும் போன்று கூடியிருக்கும் மன்னர்களை நீர் முறையாக வரவேற்றிருக்கிறீர், விருந்தோம்பல் செய்திருக்கிறீர்; தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படைகள் உமது நகரில் காட்டாட்டம் ஆடியுள்ளன, இருப்பினும், உமது மகனின் செயல் எதையும் நீர் அறியாதிருக்கிறீர். இஃது எவ்வாறு நேரும்?(10,11) ஓ! மன்னா, நால்வகைப் படைகளும் உமக்குக் கவலை ஏற்படுத்தவில்லையென்றாலும், அவற்றின் வரவை எவ்வாறு நீர் அறியாமல் இருந்தீர் என்பதில் நான் பெரும் ஐயங்கொள்கிறேன்.(12)
[2] சித்திரசாலை பதிப்பில், "பெருங்குலங்களில் பிறந்தவர்களும், மனிதர்களின் தலைவர்களுமான இங்கே இருக்கும் மன்னர்கள், சூரியக் கதிர்களைப் போல மங்கலமாக ஒளிரும் உலகங்களைத் தவத்தால் அடைந்திருக்கின்றனர். இவர்களில் எவன் ஒருவனும் பேராசையினால் ஒரேயொரு மன்னனிடம் பொய் சொன்னாலும், அவன் உலகில் உயிரோடு எஞ்சமாட்டான். அவன் தண்டனை எனும் நெருப்பில் எரிக்கப்படுவான்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "எவன் ஒரு ராஜா எதிரில் மயக்கத்தால் பொய் செல்வானோ, அவன் இவ்வுலகில் வாழமாட்டான். இவ்வுலகில் உயர்ந்த அரச குலப் பிறப்பாலாகிய நலத்தால் பெற்ற மேன்மையுடைய சூர்ய சந்த்ர ஸமான உலகங்களையும் நீதி தண்டனையாகிற அக்னி எரித்துவிடும்" என்றிருக்கிறது.
ஒருவேளை, ஓ! மன்னா, என் வருகை உமது நலத்திற்கு உகந்ததல்லவென நினைத்து, தகுதியற்ற இத்தகையவனுக்கு விருந்தோம்பல் அளிக்காமல் இருந்திருப்பீர்.(13) ஓ! பெருங்கரங்களைக் கொண்டவரே, நான் இங்கு வந்த பாவத்திற்காக ஏன் நீர் உமது மகளை (சுயம்வரத்தில்) கொடுக்காமல் இருக்கிறீர்? என்னைவிட்டுவிட்டு ஒரு நல்ல கணவனிடம் உமது மகளை அளிப்பீராக[3].(14) மனுவும், சட்டம் வழங்கியவர்களில் முன்னணியில் உள்ள பிறரும், ஒரு கன்னிகையின் வழியில் தடைகளை விதிப்பவன் {கன்னிகாதானத்தைத் தடுப்பவன்} தானே நரகில் வீழ்ந்து வீணாகிறான் என்று விதித்திருக்கின்றனர்.(15) ஓ! மன்னா, இதற்காகவே நான் சபா மண்டபத்திலும் நுழையவில்லை, {நீர் விரும்பாத} விருந்தோம்பலையும் ஏற்கவில்லை.(16) ஓ! மன்னா, {அவமதிப்பில் உண்டான} நாணத்தால் பெரிதும் பீடிக்கப்பட்ட நான் விதர்ப்ப நகரில் என் தொண்டர்களுக்கு ஓய்வளிக்க விரும்பினேன், விருந்தினர்களை எப்போதும் விரும்புபவரான கைசிகர் எங்களுக்கு முறையான விருந்தோம்பலை அளித்தார். நானும் கருடனின் துணையுடன் தேவலோகத்தில் வாழ்வது போல இங்கே வாழ்ந்து வருகிறேன்" என்றான் {கிருஷ்ணன்}".(17,18)
[3] சித்திரசாலை பதிப்பில், "என்னை மறுத்துவிட்டு உமது மகளைத் தகுந்தவருக்கு அளிப்பீராக. நான் வந்த தீங்கின் காரணமாக ஏன் உமது மகளை அளிக்காமல் இருக்கிறீர்?" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "என்னை விட்டுவிட்டு, கன்னிகை ஸத்பாத்ரத்தில் கொடுக்கப்பட்ட என் வரவின் தோஷத்தால் ஏன் கன்னிகையை (மணம் செய்து) கொடுக்கிறீரில்லை" என்றிருக்கிறது.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "எரிதழல் போலப் பிரகாசிக்கும் கிருஷ்ணன் இடி போன்ற இந்தச் சொற்களைப் பொழிந்தபோது, மன்னன் பீஷ்மகன் இனிய சொற்களைத் தெளித்து அவனை ஆறுதல் கொள்ளச் செய்தான்.(19)
பீஷ்மகன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! தேவலோகத்தின் தலைவா, நீ அமைதியடைவாயாக. ஓ! மனிதலோகத்தின் தலைவா, என்னை நீ மன்னிப்பாயாக. நான் அறியாமையெனும் இருளால் பீடிக்கப்பட்டிருக்கிறேன்; ஞானக்கண்களை நீ எனக்குத் தருவாயாக.(20) நாங்கள் சதையாலான கண்களைக் கொடையாகக் கொண்டிருக்கும் பிறழ்புத்தி கொண்ட மனிதர்கள். எனவே, தீர்மானிக்காமல் நாங்கள் செய்யும் எதுவும் நிறைவேறுவதில்லை.(21) எனினும், தேவர்களின் தேவனான உன்னை இப்போது நாங்கள் அடைந்திருக்கிறோம். என் பார்வை அறிவில் வளர்ந்து, செயல்கள் நிறைவேறட்டும்.(22) {பலவீனமான படைகளைக் கொண்டு வெல்லும்} பெரும்படைத் தலைவர்களைப் போல ஞானிகளும், அறநெறிகளைப் பகுத்தறிவதன் மூலம் செய்ய இயலாத செயல்களைச் செய்கிறார்கள்.(23) உன்னைத் தஞ்சமடைந்த எனக்கு அச்சமேதுமில்லை. இனி நான் செய்ய விரும்புவதைக் கேட்பாயாக.(24) ஓ! தேவர்களின் மன்னா, என் மகள் மற்றொருவனைத் தேர்ந்தெடுத்துவிடக்கூடும் என்ற அச்சத்தினால் நான் அவளைச் சுயம்வரத்திற்கு அனுமதிக்க விரும்பவில்லை. ஓ! தேவர்களின் தலைவா, நீ என்னிடம் அமைதி கொள்வாயாக. என்னிடம் கோபங்கொள்ளாதே" என்றான் {பீஷ்மகன்}.(25)
கிருஷ்ணன் {பீஷ்மகனிடம்}, "ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்ட மன்னா, ஓ! பாவமற்றவரே, உமது கூற்றுகளின் பயனை நான் உணரவில்லை {நீர் சொல்லிப் பயனென்ன?}. உமது மகளைக் கொடுப்பீரா, மாட்டீரா என்பதை ஒழுங்கு செய்பவன் எவன்?(26) தேவி போன்ற ருக்மிணியின் வடிவே என்னை இவ்விடம் அழைத்து வந்தது. ஆனால், அவளை எனக்கே நீர் கொடுக்க வேண்டும், வேறு எவனுக்கும் கொடுக்கக்கூடாது என்று நான் சொல்லக்கூடாது.(27)
பழங்காலத்தில் தேவர்கள், தங்கள் அம்சங்களில் பிறப்பதற்காக {அவதாரம் செய்வதற்காக} சுமேரு மலையில் கூடிய போது, அவர்கள் அவளிடம் {லட்சுமியிடம்}, "ஓ! அகன்ற இடுப்பைக் கொண்டவளே, நீ உன் கணவனுடன் மனிதர்களின் உலகிற்குச் செல்வாயாக. குண்டின நகரத்தில் {குண்டினபுரத்தில்} பீஷ்மகனின் வீட்டில் {ருக்மிணியாகப்} பிறந்து, கேசவனுடன் சேர்வாயாக" என்றனர்.(28,29)
ஓ! மன்னா, நான் இதை உமக்கு வெளிப்படையாகச் சொல்கிறேன்; சீரிய ஆலோசனைக்குப் பிறகு முறையென நினைப்பதை நீர் செய்வீராக.(30) ஓ! மன்னா, உண்மையில் உமது மகள் ருக்மிணி ஒரு பெண்ணல்ல; அவள் ஸ்ரீதேவி ஆவாள். பிரம்மனின் சொற்களைக் கேட்டு, ஒரு நோக்கத்திற்காக அவள் (பெண்ணாகப்) பிறந்திருக்கிறாள்.(31) மன்னர்கள் அனைவரும் கூடியிருக்கும் சுயம்வரத்தில் அவளைக் கொடுக்கக்கூடாது. அவள் தனியாக இருக்கையில் ஒரு மணமகனை அழைத்து அவனிடம் நீர் அவளைக் கொடையளிக்க வேண்டும். இவ்வாறே அஃது ஒரு க்ஷத்திரியனின் கடமைகளைச் செய்ததாகும்.(32) ஓ! மன்னா, லக்ஷ்மியை சுயம்வரத்தில் நீர் கொடுக்கக்கூடாது. நல்ல மணமகனைத் தேர்ந்தெடுத்து, உரிய அறச்சடங்குகளின்படி நீர் அவளை அவனுக்குக் கொடையளிக்க {கன்னிகாதானம் செய்ய} வேண்டும்.(33) வினதையின் மகன் {கருடன்}, சுயம்வரத்தில் தடையேற்படுத்துவதற்காகவே தேவர்களின் மன்னனால் அனுப்பப்பட்டுக் குண்டின நகரத்திற்கு வந்திருக்கிறான்.(34)
நானும், மன்னர்களின் சுயம்வர விழாவையும், தாமரைகளில்லாத அழகிய கமலமான உமது மகளையும் காணவே இங்கு வந்திருக்கிறேன்.(35) "என்னை மன்னிப்பாயாக" என்று என் முன்னிலையில் நீர் சொன்னதை நான் முறையெனக் கருதுகிறேன். ஓ! மன்னா, இதில் நான் குற்றமேதும் காணவில்லை.(36) ஓ! தலைவா, நான் ஏற்கனவே அமைதியாகத் தான் இருக்கிறேன். நான் உமது ஆட்சிப்பகுதிக்கு மென்வடிவத்தில் வந்ததிருப்பதால், நான் அமைதியாக இருக்கிறேன் என்பதை அறிவீராக.(37) ஓ! மன்னா, ஒருவனுடைய குறைகளைக் களைவது நன்மைகள் பலவற்றைக் கொண்ட பொறுமையேயாகும். எனவே, என்னைப் போன்ற ஒருவனுடைய மனம் பொறுமையின்மை என்ற பாவத்தால் எவ்வாறு பீடிக்கப்பட்டிருக்கும்?(38) ஓ! மன்னா, ஒழுக்கம், வாய்மை, நல்லியல்பின் குணம் ஆகியவற்றைக் கொண்ட குலத்தில் பிறந்த உம்மில் எவ்வாறு பாவம் இணைந்திருக்கும்?(39) குறிப்பாக நான் என் படையுடன் வந்திருப்பதால் என்னை அமைதியுள்ளவனாக அறிவீராக, ஏனெனில், நான் அவர்களை {என் பகைவரை} ஒருபோதும் படையுடன் எதிர்கொள்வதில்லை.(40)
நான் என் இதயத்தில் பொறுமையின்மையை வளர்த்திருக்கும்போது, என் கையில் சூரியனைப் போன்ற பிரகாசமிக்க ஆயுதங்களேந்தி என் வாகனமானவனும், பறவைகளில் முதன்மையானவனுமான கருடனின் முதுகில் அமர்ந்து செல்வேன்.(41) ஓ! மன்னா, நீர் என் தந்தையின் வயதுடையவர் என்பதால் அவரைப் போலவே என்னால் மதிக்கத் தகுந்தவர். ஒரு தந்தை தன் மகனை நடத்துவதைப் போலவே என்னிடம் நடந்து கொண்டு உமது நாட்டை நன்கு ஆள்வீராக.(42) ஒரு கோழையின் இதயத்தில் வசிக்கும் பாவத்திற்குத் தூய ஆன்மா கொண்ட ஒரு வீரனின் இதயத்தில் எவ்வாறு இடமிருக்கும்?(43) என் நடத்தையை ஒரு தந்தை தன் மகனிடம் கொண்ட அன்பைப் போன்று தூய்மையானதாக அறிவீராக. விதர்ப்பத்தின் மன்னர்களான இவர்கள் இருவரும் {கிரதரும், கைசிகரும்} எமக்கு விருந்தோம்பளித்துத் தங்கள் நாட்டையும் எமக்கு அளித்திருக்கின்றனர். இந்தக் கொடையின் பயனாக அவர்களுக்கு முன்பிருந்த பத்துத் தலைமுறை பித்ருக்கள் தேவலோகத்தை அடைந்திருக்கின்றனர்.(44,45) அவர்களின் அரச குலத்தில் பின் பிறக்கப்போகும் மகன் முதல் பத்துத் தலைமுறை பேரர்கள் வரை தேவலோகத்தை அடைவார்கள்.(46) அவர்கள் இருவரும் கூடத் தங்கள் நாட்டை நீண்ட பல வருடங்கள் முட்களேதுமின்றி {தடைகளேதுமின்றி} அனுபவித்து, அவர்கள் விரும்பும்போது முக்தியை அடைவார்கள்.(47) என்னுடைய அபிஷேகத்தில் கலந்து கொண்ட உன்னத மன்னர்களும் உரிய காலத்தில் தேவலோகம் செல்வார்கள்.(48) ஓ! மன்னா, உமக்கு நன்மை நேரட்டும். நான் இப்போது போஜ மன்னரால் {உக்ரசேனரால்} பாதுகாக்கப்படும் அழகிய மதுரா நகருக்கு வினதையின் மகனுடன் செல்லப் போகிறேன்" என்றான் {கிருஷ்ணன்}".(49)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தேவர்களிலும், யதுக்களிலும் முதன்மையான கிருஷ்ணன், மன்னன் பீஷ்மகனிடம் இதைச் சொல்லிவிட்டு, பிற மன்னர்கள் அனைவரையும் வரவேற்று, விதர்ப்பத்தின் மன்னர்களான கிரதன், கைசிகனுடன் அந்தச் சபையைவிட்டு வெளியே வந்து தன் தேருக்குச் சென்றான்.(50) கேசவன் புறப்பட்டதைக் கண்ட அரசமுனி பீஷ்மகனின் முகமும், பிற மன்னர்களின் முகங்களும் கவலையால் பீடிக்கப்பட்டன.(51) செந்தாமரைக் கண்களையும், ஆயிரம் கால்களையும், ஆயிரங்கண்களையும், ஆயிரம் கைகளையும், ஒளிபொருந்திய ஆயிரம் மகுடங்களையும், ஆயிரந்தலைகளையும் கொண்டவனும், தெய்வீக மலர்மாலைகள், உடைகள், நறுமணப் பொருட்கள், களிம்புகள், ஆபரணங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவனும், தெய்வீக ஆயுதங்களை ஏந்தியிருப்பவனும், சூரியன், சந்திரன், நெருப்பு என்ற மூன்று கண்களைக் கொண்டவனும், தலைமையானவனும், சுயம்புவுமான கிருஷ்ணனை மன்னன் பீஷ்மகன் கண்ட நேரத்தில் அவனுக்குத் தலைவணங்கித் தன் உடலாலும், மனத்தாலும், வாக்காலும் அவனது மகிமைகளைத் துதிக்கத் தொடங்கினான்.(52-55)
பீஷ்மகன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! தேவர்களின் தேவா, ஓ! நாராயணா, ஓ! பாராயணா, தோற்றமும், அழிவுமற்றவன் நீயே. நித்தியமான தலைமை தேவனான உன்னை நான் வணங்குகிறேன்.(56) சுயம்புவான தேவன் நீயே, தாமரை உந்தியும், சடா முடியும் கொண்டவனும், அண்டத்திற்கு ஒப்பானவனும், தண்டம் தரித்தவனும் நீயே, தாமிர வண்ணனும் நீயே. நான் உன்னை வணங்குகிறேன்.(57) ஹம்சமும், சக்கரமும், வைகுண்டனும், பிறப்பற்றவனும், பரமாத்மனும் நீயே. நான் உன்னை வணங்குகிறேன்.(58) இருப்பும், இல்லாமையும், யோகியும், புராதன புருஷனும், மூவகைக் குணங்களைக் கடந்த புருஷர்களில் முதன்மையானவனும் நீயே. நான் உன்னை வணங்குகிறேன்.(59) ஓ! தலைவா, ஓ! தேவர்களில் முதன்மையானவனே, உலகங்கள் அனைத்தின் தலைவன் நீயே, ஆன்ம அறிவை அடைந்தவர்களின் தலைவன் நீயே. நான் உன் பக்தன். என்னிடம் அமைதி கொண்டு எனக்கு ஒரு வரத்தை அளிப்பாயாக" என்று துதித்தான் {பீஷ்மகன்}".(60)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பெருந்தேவனான கிருஷ்ணனின் மகிமைகளை மன்னர்களின் முன்னிலையில் இவ்வாறு பாடிய பீஷ்மகன், விலைமதிப்புமிக்க ரத்தினங்களையும், முத்துகளையும், வைடூரியத்தகடுகளையும் அவனுக்குக் கொடையாக அளித்தான். அதன் பிறகு அவன் பெருஞ்சக்திவாய்ந்த வினதையின் மகனையும் {கருடனையும்} இவ்வாறு வணங்கினான்.(61,62)
பீஷ்மகன், "கசியபரின் மகனும், காற்றின் வேகம் கொண்டவனும், விரும்பிய பல வடிவங்களை ஏற்கவல்லவனுமான தெய்வீகப் பறவையை {கருடனை} நான் வணங்குகிறேன்" என்று சொன்னான்".(63)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இவ்வாறு வினதையின் மகனுடைய மகிமைகளைச் சுருக்கமாகப் பாடிய பீஷ்மகன், பல்வேறு வகைகளிலான மிகச் சிறந்த ஆடைகளை அவனுக்கு {கருடனுக்குக்} காணிக்கையளித்தான்.(64)
வாசவனின் தம்பியும், தாமரைக் கண்ணனுமான கிருஷ்ணன் புறப்பட்டுச் சென்றதும், மன்னர்கள் அனைவரும் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர். பெருஞ்சக்திவாய்ந்தவனான கிருஷ்ணன், இவ்வாறு தரப்பட்ட கௌரவங்களை ஏற்றுக் கொண்டு, மன்னர்கள் அனைவருக்கும் விடையளித்துவிட்டு, மென்வடிவில் இருக்கும் பறவைகளில் முதன்மையான வினதையின் மகனைத் தனக்கு முன்விட்டுக் கொண்டு, பெருந்தேர்கள் சூழத் திக்குகள் அனைத்திற்கும் ஒளியூட்டியபடியே மதுராவிற்குப் புறப்பட்டுச் சென்றான்.(65-67)
அந்த நேரத்தில், பேரிகைகள், படகங்கள், சங்கங்கள், துந்துபிகள் ஆகியவற்றின் ஒலிகளும்,(68) பாம்புகளின் ஒலிகள் {யானைகளின் பிளிறல்கள்}, குதிரைகளின் கனைப்பொலிகள், பெரும் மேக முழக்கத்திற்கு ஒப்பான தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலிகள் ஆகியவற்றுடன் கூடிய பேராரவாரம் அங்கே எழுந்தது.(69) பெருஞ்சக்திவாய்ந்தவனான கிருஷ்ணன் புறப்பட்டுச் சென்ற பிறகு, தேவர்கள் அந்தச் சபாமண்டபத்துடனும், மிகச்சிறந்த அந்த அரியணையுடனும் தேவலோகத்தை அடைந்தனர். நான்கு வகையான பெரும்படைகள் சூழ இரண்டு மைல்கள் {ஒரு குரோச} தொலைவிற்கு ஜனார்த்தனனைப் பின்தொடர்ந்து சென்ற மன்னர்கள், பிறகு அவனது {கிருஷ்ணனுடைய} ஆணையின் பேரில் சுயம்வரத்திற்குத் திரும்பி வந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}[4].(70,71)
[4] மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த அத்தியாயம் 69 ஸ்லோகங்களுடன் இருக்கிறது. சித்திரசாலை பதிப்பிலும், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பிலும் 71 ஸ்லோகங்கள் இருக்கின்றன. எனினும், மூன்று பதிப்புகளிலும் செய்திகளில் மிகையோ, குறையோ கிடையாது. மூன்று பதிப்புகளிலும் 63ம் ஸ்லோகம் வரை ஒரே மாதிரியாகவே ஸ்லோக எண்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. சித்திரசாலை பதிப்பையும், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பையும் ஒப்புநோக்கியும், மன்மதநாததத்தரின் பதிப்பில் ஸ்லோக எண் பிரிப்பில் உள்ள பிழையை உணர்ந்தும், இங்கும் இது 71 ஸ்லோகங்களைக் கொண்ட அத்தியாயமாக மாற்றப்பட்டுள்ளது.)
விஷ்ணு பர்வம் பகுதி – 108 – 052ல் உள்ள சுலோகங்கள் : 71
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |