(ஆர்யாஸ்தவம்)
Attributes of the Goddess | Vishnu-Parva-Chapter-58-003 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : நாராயணி தேவியிடம் விஷ்ணு சொன்ன ஆரியத் துதி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மூவுலகங்களின் தலைவியான நாராயணிதேவியை வணங்கிவிட்டு, புராதன முனிவர்களால் பாடப்பட்ட புனிதத்துதியை {ஆரியத்துதியை} நான் உரைக்கப் போகிறேன்.(1)
"ஓ! தேவி, விடுதலை {முக்தி}, புத்தி, மகிமை, நாணம், கல்வி, உலகங்கள் அனைத்தின் முன்னேற்றம் மற்றும் நாட்டம் ஆகியவை நீயே. சந்தியொளி, இரவு, கதிர், உறக்கம், காலனின் இரவு {காளராத்ரி} ஆகியவற்றோடு அடையாளங் காணப்படுபவள் நீயே.(2) வழிபடத்தகுந்த {ஆரிய} காத்யாயனி தேவியும், பிரம்மச்சரிய நோன்பை நோற்கும் கௌசிகியும், கார்த்திகேயனின் {முருகனின்} அன்னையும் நீயே. பலம்நிறைந்தவளும், கடுந்தவம் செய்பவளும் நீயே.(3) ஓ! தேவி, ஜயம், விஜயம், நிறைவு {துஷ்டி}, ஊட்டம் {புஷ்டி}, மன்னிக்கும் தன்மை {பொறுமை / க்ஷமம்}, கருணை {தயை} ஆகியவை நீயே. நீலப்பட்டுடைத் தரித்தவளும், யமனின் தமக்கையும் நீயே.(4) பல்வேறு வடிவங்களைக் கொண்டவளும் {பஹூரூபை}, வடிவமற்றவளும் {விரூபை}, பயங்கரம் நிறைந்த பெரிய கண்களைக் கொண்டவளும், பற்றார்வலர்களைப் பாதுகாப்பவளும் நீயே.(5)
ஓ! பெருந்தேவி, பயங்கரம் நிறைந்த மலைகளின் சிகரங்களிலும், ஆறுகள், குகைகள் மற்றும் காடுகளிலும் வாழ்பவளும், சபரர்கள்[1], பர்பரர்கள்[2], மற்றும் புளிந்தர்களால்[3] துதிக்கப்படுபவளும், மயில்தோகை கொடியுடைய தேரில் உலகங்களில் பயணிப்பவளும் நீயே.(6,7) கோழிகள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், சிங்கங்கள், புலிகள் ஆகியவற்றால் சூழப்பட்டவளும், மணிகளை முழக்கி வழிபடப்படுபவளும், விந்திய மலையில் எப்போதும் வாழ்பவளும் நீயே.(8) திரிசூலம், பட்டிஸம் {ஈட்டி} மற்றும் பிற ஆயுதங்களைத் தரித்தவள் நீயே. சூரியனையும், சந்திரனையும் கொடியாகக் கொண்டவள் நீயே. மாதத்தின் தேய்பிறையில் ஒன்பதாவது நாளும் {கிருஷ்ணபக்ஷ நவமியும்}, வளர்பிறையின் பதினோராம் நாளும் {சுக்லபக்ஷ ஏகாதசியும்} நீயே.(9) கலகத்தில் விருப்பம் கொண்டவளும், பலதேவனின் தங்கையுமான ரஜனியும், உயிரினங்கள் அனைத்தின் வசிப்பிடமும், விலங்குகள் அனைத்தின் மரணமும் உயர்ந்த கதியும், கோபாலனான நந்தனின் மகளும், தேவர்களின் வெற்றியைச் சுமப்பவளும் நீயே. மரவுரியும், சிறந்த உடையும் தரித்தவள் நீயே, பயங்கரம் நிறைந்த சந்தியொளி {ஸந்தியா காலத்தில் ஸஞ்சரிப்பவள்} நீயே.(10,11) கலைந்து விரிந்த கூந்தலைக் கொண்டவளும், மரணமும் {மிருத்யுவும்} நீயே. மதுவையும், இறைச்சியையும் விரும்புபவள் நீயே. (அழகிய வடிவம் கொண்ட) லக்ஷ்மியாக இருப்பினும் தானவர்களை அழிப்பதற்குப் பயங்கர வடிவத்தை ஏற்பவள் நீயே.(12)
[1] "இந்தியாவின் மலைசார்ந்த மாவட்டங்களில் வசிப்பவர்களும், அலங்காரத்திற்காக மயில் இறகுகளை அணிபவர்களுமான ஒரு காட்டுமிராண்டி இனம்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[2] "சீரழிந்த பழங்குடியினர் அல்லது சீர்கெட்டத் தொழிலைச் செய்பவர்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[3] "பண்படாத, புரிந்து கொள்ளமுடியாத பேச்சுவழக்கைப் பயன்படுத்தும் ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
மந்திரங்களின் அன்னையான வேதங்களின் சாவித்ரியும் {காயத்ரியும்}[4], கன்னிகைகளின் பிரம்மச்சரியமும் {கற்பும்}, பெண்களின் நற்பேறும் {சௌபாக்யமும்},(13) வேள்விகளின் புறப்பீடமும் {குண்டமும்}, புரோஹிதரின் கொடையும், உழவர்களின் கலப்பையும், உயிரினங்கள் அனைத்தின் பூமியும்,(14) கடலோடும் வணிகர்களின் வெற்றியும், பெருங்கடலின் கரையும், யக்ஷர்களின் முதல் பெண்ணும் {யக்ஷினியும்}[5], நாகர்களின் ஸுரஸையும்[6] நீயே,(15) பிரம்மஞானம் மற்றும் தொடக்கத்தை {தீக்ஷையை} அறிந்தவளும், பேரெழில் கொண்டவளும் நீயே. ஜோதிகளின் பிரகாசமும், நட்சத்திரங்களில் ரோஹிணியும்,(16) சபைகள், கோட்டைகள், ஆறுகளின் சங்கமங்கள் ஆகியவற்றின் முழுமையான செழிப்பும், முழுநிலவுநாளும் {பூர்ணிமையும்} நீயே.(17)
[4] "அன்றாடம் செய்ய வேண்டியதெனப் பிராமணர்களுக்கு விதிக்கப்பட்ட சடங்குகளில் முக்கியப் பகுதியாக விளங்குவதும், மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதுமான ஒரு புனித மந்திரமாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[5] "குபேரனின் தாய் {யக்ஷினி}" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[6] "நாகர்களின் தாய் {ஸுரஸை}" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
வால்மீகியின் கல்வி தேவியும் {ஸரஸ்வதியும்}[7], துவைபாயனரின் நினைவும் {ஸ்மிருதியும்}[8], அறக்காரியங்களில் ரிஷிகளின் புத்தியும், தேவர்களின் தீர்மானவுறுதியும் நீயே, தன்செயல்களால் துதிக்கப்படுபவளும், மதுவின் தேவியாக {ஸுராதேவியாக} உயிரினங்கள் அனைத்திலும் வாழ்பவளும் நீயே. ஓ! தேவி, தேவர்களின் மன்னனுடைய ஆயிரங்கண்களின் அழகிய பார்வையும்,(18,19) அக்னிஹோத்ரம் செய்யும் தவசிகளின் அரணியும், உயிரினங்கள் அனைத்திடமும் உள்ள பசியும், தேவர்களின் மனநிறைவு,(20) பலியுணவு {ஆகுதி}, புத்தி மற்றும் மூளையும், வஸுக்கள் அனைவரின் கொள்ளிடமும் {வஸுமதியும்}, மனிதர்களின் நம்பிக்கையும், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களின் இன்பமும் நீயே.(21) திசை, எதிர் திசை, நெருப்பின் தழல், கதிர், {அரக்கி} சகுநி, பூதனை, பயங்கர {அரக்கியான} ரேவதி, அனைத்து உயிரினங்களையும் மயங்கச் செய்யும் உறக்கம் மற்றும் க்ஷத்திரியை நீயே.(22) கல்வியில் பிரம்மவித்யை[9], ஓம் {ஓங்காரம்}[10], மற்றும் வஷட் {வஷட்காரம்}[11] ஆகியவை நீயே. பெண்களில் புராதனப் பார்வதியாக ரிஷிகளால் அறியப்படுபவள் நீயே.(23) கற்புக்கரசிகளில் அருந்ததியாக[12] பிரம்மனால் சொல்லப்பட்டவள் நீயே. உண்மையில் தேவர்களால் இந்திராணியாக[13] நிறுவப்பட்டவள் நீயே.(24) அசைவன மற்றும் அசையதானவற்றைக் கொண்ட இந்த அண்டத்தில் படர்ந்தூடுருவி இருப்பவள் நீயே. போர், எரியும் நெருப்பு, ஆறுகள், கள்வர்களிடம் அச்சம், குகைகள், அந்நிய நாடுகள், சபைகள் ஆகியவற்றிலும், பகைவரைத் தாக்குவதிலும், உயிரே பணயமாக இருக்கும் பிற காரியங்கள் அனைத்திலும் இருந்தும் நிச்சயம் மீட்பவள் நீயே.(25,26) என் இதயம், மனம், சித்தம் ஆகியவை அனைத்தும் உன்னிடம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றன. பாவங்கள் அனைத்தில் இருந்தும் என்னைக் காப்பாய் நீயே; எனக்கு இந்தத் தயவை காட்டுவாய் நீயே[14].(27)
[7] "மரபின்பிடி வால்மீகி கல்வி தேவியிடம் {ஸரஸ்வதியிடம்} வரத்தைப் பெற்று, தமது சிறந்த படைப்பான ராமாயணத்தை இயற்றினார்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[8] "துவைபாயன வியாசர், வேதங்கள் மற்றும் புராணங்கள் அனைத்தையும் மனப்பாடமாகத் தமது நினைவில் கொண்டிருந்ததால் கொண்டாடப்பட்டவர்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[9] "இது கல்வியின் வடிவங்கள் அனைத்திலும் சிறந்ததாகக் கருதப்படும் ஆத்மஞானம்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[10] "இது {ஓம் என்பது} தெய்வீக மறைமெய்ம்மைசார்ந்ததும், வேண்டுதல்கள் அனைத்திலும், இந்து உரைகள் பெரும்பாலானவற்றிலும் முன்வருவதும், விஷ்ணுவின் 'அ', சிவனின் 'உ', பிரம்மனின் 'ம' என்ற {ஓரசைப்} பெயர்கள் சேர்ந்ததுமான ஒரு {ஓரசைப்} பெயர்ச்சொல்லாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[11] "நெருப்பில் பலியுணவை {ஆகுதியை} இடும்போது சொல்லப்படுவதாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[12] "வசிஷ்ட முனிவரின் மனைவி" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[13] "தேவர்களின் ராணியும், இந்திரனின் மனைவியுமானவள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[14] இந்த அத்தியாயத்தின் 2ம் ஸ்லோகத்தில் இருந்து, 27ம் ஸ்லோகம் வரையுள்ள பகுதி ஆரியத் துதி என்று சொல்லப்படுகிறது.
ஓ! தேவி, காலை விடியலில் எழுந்து, தன்னைத் தூய்மை செய்து, மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு இந்தத் தெய்வீகத் துதியைச் சொல்பவனிடம் எப்போதும் நிறைவடைபவள் நீயே.(28) இதை {இந்த தெய்வீகத் துதியை} மூன்று மாதங்கள் உரைப்பவர்களுக்கு அவர்கள் விரும்பும் பொருட்களையும், ஆறு மாதங்கள் உரைப்பவர்களுக்கு மிகச் சிறந்த வரத்தையும், ஒன்பது மாதங்கள் உரைப்பவர்களுக்கு தெய்வீகப் பார்வையையும், முழுமையாக ஒரு வருடம் உரைப்பவர்களுக்கு அவர்கள் விரும்பும் ஸித்தியையும் அருள்பவள் நீயே.(29,30) ஓ! தேவி, பெரும் முனிவர் கிருஷ்ண துவைபாயனரால் {வியாசரால்} பதிவு செய்யப்பட்டிருப்பது போல, வாய்மையுடன் அடையாளங்காணப்படும் உயர்ந்த பிரம்மம் {பரப்ரம்மம்} நீயே. சங்கிலிகள் {கட்டுகள் / பந்தங்கள்}, மரணம், குழந்தைகள் மற்றும் செல்வத்தின் அழிவு, நோய் ஆகியவற்றில் இருந்து மனிதர்களுக்கு உண்டாகும் அச்சத்தை விரட்டுபவள் நீயே. விரும்பியவாறு பல்வேறு வடிவங்களை ஏற்று வரங்களை அளிப்பவள் நீயே.(31,32) கம்ஸனைக் கலங்கடித்து நீ ஒருத்தியாக உலகை அனுபவிப்பாய். நான் பசுக்களின் மத்தியில் ஒரு கோபாலனாக {இடையனாகப்} பிறக்கப் போகிறேன். என் பணியைச் செய்வதற்காக நான் கம்ஸனின் கோபாலனாவேன்".(33)
அந்தத் தலைவன் {விஷ்ணு}, (உறக்கத்தின் தேவியிடம்) இவ்வாறு சொல்லிவிட்டு மறைந்தான், அவளும், அவனை வணங்கி விட்டு, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி தன் உடன்பாட்டை வெளிப்படுத்தினாள்" என்றார் {வைசம்பாயனர்}[15].(34)
[15] சித்திரசாலை பதிப்பில் குறையாமலும், மிகாமலும் இதே உள்ளடக்கத்தைக் கொண்ட இந்தப் பகுதி 35 ஸ்லோகங்களைக் கொண்டதாக இருக்கிறது. புருஷோத்தமன் மற்றும் ஹரிந்திரநாத் ஆகியோரின் பதிப்பையே சுருங்கக் கூறுவதற்காக இங்கே சித்திரசாலை பதிப்பு என்று சொல்கிறேன். இவ்வாறு கொள்ளும்போது ஹரிவம்சபர்வம் செய்த தேசிராஜுஹனுமந்தராவின் பதிப்பையும் சித்திரசாலை பதிப்பெனவே கொள்ள வேண்டும். பிபேக்திப்ராயின் பதிப்பில் {செம்பதிப்பு / Critical Edition} இந்தப் பகுதியே தவிர்க்கப்பட்டிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில் {தென்னகப் பதிப்பில்} இதே உள்ளடக்கம் 37 ஸ்லோகங்களைக் கொண்டதாக இருக்கிறது.
விஷ்ணு பர்வம் பகுதி – 58 – 003ல் உள்ள சுலோகங்கள் : 34
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |