(பிரபாவதீபாணிக்ரஹணம்)
Pradyumna appears before Prabhavati and marries her | Vishnu-Parva-Chapter-150-095 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : பிரபாவதியை காந்தர்வ மணம்புரிந்த பிரத்யும்னன்; வஜ்ரநாபனின் தம்பி சுநாபனின் மகள்களான சந்திரவதி கதனையும், குணவதி சாம்பனையும் மணந்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதன்பிறகு, கிருஷ்ணனின் மகனான பிரத்யும்னன், "இந்தக் கன்னிகை முற்றிலும் என்னால் பீடிக்கப்பட்டிருக்கிறாள்" என்று நினைத்து அங்கிருந்த அன்னத்திடம் மகிழ்ச்சியாக,(1) "மாலையுடன் இருக்கும் {ஆறு பாதங்களுடன் கூடிய} வண்டுகள் பிறவற்றுடன் சேர்ந்து நானும் ஒரு வண்டின் வேடத்தில் இங்கே இருக்கிறேனெனத் தைத்தியனின் மகளிடம் சொல்வாயாக.(2) இப்போது நான் அவள் வசத்தில் இருக்கிறேன். அவள் விரும்பியவாறு என்னுடன் இருக்கலாம்" என்றான்[1]. ரதியின் கணவனான அவன் {காமனான பிரத்யும்னன்} இதைச் சொல்லிவிட்டு தன் சொந்த வடிவில் அங்கே தோன்றினான்.(3) அந்த நேரத்தில் அந்த வீடு நுண்ணறிவுமிக்க மதனனின் {மன்மதனான பிரத்யும்னனின்} மேனியொளியால் ஒளியூட்டப்பட்டிருந்தது. சந்திரனின் எழில்மிகு கதிர்கள் வெட்கமடைந்தன.(4) பர்வ நாள் ஒன்றில் {பௌர்ணமியில்} நீர்நிலைகளின் தலைவன் (பெருங்கடல்) இரவின் தலைவனுடன் (சந்திரனுடன்) எழுவதைப் போலப் பிரபாவதியின் காதல் கடல் அந்தக் காமனைக் கண்டதும் பெருகிற்று.(5)
