(ஹிடிம்பேந ஸாகம் வஸுதேவோக்ரஸேநயோர்யுத்தம் பலபத்ரேண ஹிடிம்பபராபவஷ்ச)
Hidimba | Bhavishya-Parva-Chapter-101 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: ஹிடிம்பனுடன் போரிட்ட வசுதேவரும், உக்ரசேனனும்; ஹிடிம்பனை வீழ்த்திய பலராமன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வசுதேவரும், உக்ரசேனனும் நரைமுடியும், சுருங்கிய தோலும் கொண்ட கிழவர்களாக இருந்தாலும், அவர்களும் மகிழ்ச்சியாக அந்தப் போரில் ஈடுபட்டனர்.(1) ஞானத்திலும், அதன் நடைமுறை பயன்பாட்டிலும் முன்னேற்றம் அடைந்தவர்களான அவர்கள் இருவரும், அரச வகையின் கடமைகளை முழுமையாக அறிந்திருந்தனர். ராக்ஷசனான அந்தத் துராத்மாவிற்கு {ஹிடிம்பனுக்கு} எதிரான போரில் அவர்கள் இருவரும் ஒன்றுகூடிப் போரிட்டனர்.(2) ராக்ஷசேந்திரனும், துராத்மாவுமான ஹிடிம்பன் மீது ஆயிரக்கணக்கான கணைகளை ஏவி அவனை அவர்கள் துன்புறுத்தினர்.(3)
நரமாமிசம் உண்ணும் ராக்ஷசேந்திரனான ஹிடிம்பன், பெரும் பலசாலியாகத் திகழ்ந்தான். அந்தத் துஷ்டாத்மா, நீண்ட கரங்களையும், வலிமைமிக்கத் தாடைகளையும், துருத்தும் வயிற்றையும், கோணலான கண்களையும் கொண்டிருந்தான். அவனது மயிர் செம்பட்டையாகவும், அவனது மூக்கு வல்லூறின் அலகைப் போலவும் இருந்தது. அவன் அச்சந்தரத்தக்க வகையில் பருத்த கரங்களைக் கொண்டிருந்தான். அவனது உடல் மயிர் எப்போதும் சிலிர்த்தபடியே இருந்தது.(4,5) அவனது உடலோ, மலையைப் போன்று பெரிதாக இருந்தது. தடித்த உதடுகளைக் கொண்ட அவனது வாய், நரியின் வாய்க்கு ஒப்பானதாக இருந்தது. பெரும் வயிற்றையும், நீண்ட பற்களையும் கொண்டிருந்த அந்த ராக்ஷசன், மொத்த உலகையும் விழுங்கிவிடத் தயாராக இருப்பவன் போலத் தெரிந்தான்.(6) அவன் உயர்ந்த தோள்களையும், அகன்ற மார்பையும், யானையின் தோற்றத்தை அளிக்கும் நீண்ட தொண்டையையும் கொண்டிருந்தான். அவன், உண்பதற்குப் பெட்டி பெட்டியான இறைச்சிளும், பருகுவதற்குக் குடங்குடமான குருதியும் படைக்கப்பட்டிருந்தன.(7)
மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அவன் யானைகளைச் சுழற்றி வீசி யானைகளையும், குதிரைகளைச் சுழற்றிவீசி குதிரைகளையும், படைவீரர்களை மோதச் செய்து மற்ற படைவீரர்களையும் கொன்றான். அவன் தேர்களை நொறுக்குவதற்குப் பிற தேர்களைக் கையில் எடுத்தான்.(8) அவன், தான் சுவாசிப்பதில் உண்டாகும் காற்றின் மூலம் மனிதர்களைத் தன் வாய்க்குள் உறிஞ்சி இழுத்தான். அந்த ஹிடிம்பன் போரிடுகையில், விருஷ்ணி குலத்தோர் சிலரைக் கொன்று, அந்தப் போர்க்களத்திலேயே அவர்களை உண்டான். உண்மையில் அவன், தன் முன் கண்ட எவனையும் கொன்றான்.(9,10) ராக்ஷசன் ஹிடிம்பன், யது குலத்தோர் மற்றும் விருஷ்ணி குலத்தோர் பலரை உண்டு, அவர்களின் சடலங்களில் எஞ்சியவற்றை {ஆங்காங்கே} வீசி எறிந்தான்.(11)
மன்னா {ஜனமேஜயா}, பிரளய காலத்தில் அண்டத்தை அழிக்கும் கோபம் நிறைந்த ருத்திரனைப் போலவே அந்த ராக்ஷசனும் எண்ணற்ற படைவீரர்களை விழுங்கினான்.(12) விருஷ்ணி குலத்தின் பலசாலி வீரர்கள் பலர், தங்கள் தோழர்கள் எவ்வாறு அந்த ராக்ஷசனின் உணவானார்கள் என்பதைக் கண்டு பீதியடைந்து திக்குகள் அனைத்திலும் தப்பி ஓடினர்.(13) மன்னா {ஜனமேஜயா}, வானரப்படைவீரர்கள் எண்ணற்றோரை உண்ட கும்பகர்ணனைப் போலவே இந்தப் புருஷாதகனும் {மனிதர்களை உண்பவனும்} விருஷ்ணி படையின் பெரும்பகுதியை விழுங்கினான்.(14)
அந்நேரத்தில் வசுதேவரும், உக்ரசேனனும், கோபக்கார சிங்கத்தை அணுகுமிரு கிழட்டு மான்களைப் போலக் கையில் விற்களுடன் அந்த ராக்ஷசன் முன்பு வந்தனர்.{15} அப்போது அந்த ராக்ஷசன், அந்தக் கிழவர்களை விழுங்கிவிடும் எண்ணத்துடன், தன் வாயைத் திறந்து கொண்டு அவர்களைநோக்கி விரைந்து சென்றான்.{16} அவன், அகன்று விரிந்த தன் வாயுடனும், சீற்றமிக்கக் கண்களுடனும் பாதாள லோகத்தில் இருந்து வந்தவனைப் போலத் தெரிந்தான். அவன், தன்னிரு பகைவரை நோக்கி விரைந்தபோது கூட, மனித இறைச்சியை மென்று கொண்டேயிருந்தான். எனினும், அனுபவம் மிகுந்த அந்தக் கிழட்டுப் போர்வீரர்கள் இருவரும், ஹிடிம்பன் தங்களை நெருங்கும் முன்பே விரைவாகத் தங்கள் கணைகளால் அவனது அகன்ற வாயை நிறைத்தனர்.{17,18}(15-18)
கோரமானவனும், பிசாசைப் போன்றவனும், தேவர்களுக்குப் பகைவனுமான அந்த ராக்ஷசன், அந்தக் கணைகள் அனைத்தையும் அப்படியே விழுங்கிவிட்டான். பிறகு அவன், விரிந்த வாயுடன் அந்தக் கிழட்டுப் போர்வீரர்கள் இருவரையும் நோக்கி விரைந்தான்.(19) அந்த ஹிடிம்பன், வசுதேவர் மற்றும் உக்ரசேனனின் கைகளில் இருந்த விற்களைப் பிடுங்கி அவற்றை முறித்தான். ராக்ஷசர்களில் சிறந்தவனும், பாவம் நிறைந்தவனுமான அந்த ராக்ஷசன், தன்னிரு கைகளையும் விரித்து வசுதேவரைக் கைப்பற்ற முனைந்தான்.(20,21)
அப்போது ஹிடிம்பன், "உக்ரசேனா, ஏன் என் முன் நிற்கிறாய்? இப்போதே உங்கள் இருவரையும் நான் தின்றுவிடுவேன்.(22) நீங்கள் என் உணவாக விதிக்கப்பட்டிருப்பதால், நீங்களாகவே விருப்பத்துடன் என் வாய்க்குள் நுழைவீராக. கிழவன் வசுதேவன், தன்னாலியன்ற அளவுக்குப் போரிட்டுக் களைத்திருப்பதாகவும், பசித்திருப்பதாகவும் தெரிகிறது. இவனைக் கிருஷ்ணனின் தந்தையாக விதி படைத்திருக்கிறது. எப்படியும் உங்கள் இருவரையும் நான் விட மாட்டேன். எனவே, போராடாமல் நீங்களாகவே என் வாய்க்குள் நுழைவீராக.(23,24) உங்கள் குருதியைப் பருகும்போது, நான் பெரும் நிறைவடைவேன். அதன்பிறகு, பழுத்த கிழவர்களான உங்கள் சதையை மகிழ்ச்சியாக நான் உண்பேன்" என்றான் {ஹிடிம்பன்}.(25)
அந்த ராக்ஷசேஷ்வரன், இதைச் சொல்லிவிட்டுத் தன் வாயை அகலவிரித்தபடியே வசுதேவரையும், உக்ரசேனனையும் நோக்கி விரைந்தான்.(26) மன்னா, விரைந்து வரும் அந்த ராக்ஷசனைக் கண்ட வசுதேவரும், உக்கிரசேனனும் பீதியடைந்தனர். அவர்கள் தங்கள் ஆயுதங்களை வீசியெறிந்துவிட்டுத் தங்களால் இயன்ற அளவு வேகத்துடன் தப்பி ஓடினர்.(27)
வசுதேவரும், உக்கிரசேனனும் பீதியடைந்து ஓடுவதைக் கண்ட பலராமன், ஹம்சனுடன் போரிடும் நிலையில் கிருஷ்ணனை விட்டுவிட்டு, அங்கிருந்து புறப்பட்டான். தப்பியோடும் வசுதேவர், உக்கிரசேனன் ஆகியோருக்கும், ஹிடிம்பனுக்கும் இடையில் தன்னை நிறுத்திக் கொண்ட அவன் {பலராமன்}, "ராக்ஷசா, இவ்விருவரையும் விட்டுவிட்டு என்னுடன் போரிடுவாயாக. என் பகைவனை வீழ்த்தும் நோக்கத்திலேயே நான் இங்கே வந்திருக்கிறேன். உன்னைக் கொல்வதன் மூலம் நான் உன் பெருந்தீனிக்கான முடிவை ஏற்படுத்துவேன்" என்றான்.
ஹலாயுதனான பலராமனின் இந்த அறைகூவலைக் கேட்ட ஹிடிம்பன், வசுதேவரையும், உக்கிரசேனனையும் விரட்டுவதை நிறுத்திக் கொண்டு, "முதலில் இப்படிக் குறுக்கிடுபவனை நான் உண்ண வேண்டும்" என்று நினைத்தான். இவ்வாறு நினைத்த அந்த ராக்ஷசன், தன் வாயை அகல விரித்தபடியே பலராமனை நோக்கி முன்னேறினான்.(28-32)
பெருஞ்சக்திவாய்ந்த பலராமன், தன் வில்லையும், கணைகளையும் ஒதுக்கிவிட்டு, தன் தோள்களை உள்ளங்கைகளால் தட்டியபடியே அந்த ராக்ஷசனின் வழியில் குறுக்கே நின்றான்.(33) பாவம் நிறைந்தவனும், மற்றொரு யமராஜனைப் போலத் தெரிந்தவனும், ராக்ஷசனுமான அந்த ஹிடிம்பன், தன் முஷ்டியால் பலராமனின் மார்பில் பலமாகத் தாக்கினான்.(34) அந்த ராக்ஷசனால் தாக்கப்பட்ட பலராமன், பெருங்கோபமடைந்து, அவன் மீது பெருந்தாக்குதலைத் தொடுத்தான்.(35) அப்போது பலராமனுக்கும், ஹிடிம்பனுக்கும் இடையில் கடுமையான ஒரு மற்போர் நேரிட்டது. சிங்கம் போன்ற அந்த வீரர்கள் இருவரும், காய்ந்த விறகுகளை முறிக்கையில் உண்டாகும் பிளவொலியைப் போல, வலிமைமிக்கத் தங்கள் முஷ்டி ஒலிகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்திரனின் வஜ்ரத்திற்கு நிகரான வலிமைமிக்கத் தாக்குதல்களால் ஹிடிம்பன் மீண்டும் மீண்டும் பலராமனின் மார்பைத் தாக்கினான். அதற்குப் பதிலடியாகப் பலராமனும், தேவர்களின் பகைவனான ஹிடிம்பனின் மார்பிலும், முகத்திலும் தன் உள்ளங்கைகளால் மிகத் தீவிரமான தாக்ஃகுதலைத் தொடுத்தான்.(36-39) பலராமனால் தாக்கப்பட்ட ராக்ஷசேஷ்வரன் ஹிடிம்பன், நடைமுறையில் சுயநனவிழந்து, முழங்கால் படிந்து விழுந்தான்.(40)
பலராமன், தன்னிரு கைகளாலும் அந்த ராக்ஷசனைப் பிடித்துச் சில காலம் வரை அவனை மீண்டும் மீண்டும் சுழற்றிக் கொண்டேயிருந்தான். பிறர் அனைவரும் சூழ்ந்திருந்து, பார்வையாளர்களாகக் கண்டு கொண்டிருந்த போதே ஹலாதரன் {பலராமன்}, அந்த ராக்ஷசேந்திரனை நான்கு மைல்கள் தொலைவிற்குச் சுழற்றி வீசினான். இவ்வாறே அந்தப் பயங்கர ராக்ஷசன் {ஹிடிம்பன்} பலராமனால் கொல்லப்பட்டான்[1].(41-43) பலபத்ரனால் {பலராமனால்} கொல்லப்பட்ட தங்கள் தலைவனான ஹிடிம்பனின் மரணத்தைக் கண்ட ராக்ஷசர்கள் அனைவரும் பீதியடைந்து திக்குகள் அனைத்திலும் தப்பி ஓடினர்.(44)
[1] ஹரிவம்சத்தின் பவிஷ்யபர்வ 101ம் அத்தியாயத்தில் சொல்லப்படும் இந்த ஹிடிம்பனும், முழுமஹாபாரதம் ஆதிபர்வம் 156ம் பகுதியில் கொல்லப்படும் ஹிடிம்பனும் ஒருவரா என்பது தெரியவில்லை. ஹரிவம்சத்தில் இங்கே ஹிடிம்பன் கொல்லப்படுகிறானா? ஒடுக்கப்படுகிறானா என்பதும் தெரியவில்லை. இங்கே சொல்லப்படும் மூலச்சொற்கள் கொலையைக் குறிப்பதாகவும் தெரியவில்லை. மஹாபாரதத்திலும், ஹரிவம்சத்திலும் குறிப்பிடப்படும் நிலப்பகுதிகளும் கிட்டத்தட்ட ஒன்றாக அமைவதாகவே தெரிகிறது. ஹரிவம்சத்தில் வரும் இந்த ஹம்சடிம்பகப்படலம் முழுமஹபாரதத்தின் ஆதிபர்வ, ஹிடிம்ப வத பர்வத்திற்கு ஒருவேளை காலத்தால் முற்பட்டதாக இருக்கலாம். அதாவது, இது திரௌபதி சுயம்வரத்திற்கு முன்பு நிகழ்ந்த நிகழ்வாக இருக்கலாம்.
அவனால் {பலராமனால்} ஹிடிம்பன் கொல்லப்பட்டதும், தினேசன் {சூரியன்} தன் கதிர்களை உள்வாங்கிக் கொண்டு மேற்கில் மறைந்தான். போர்வீரர்களால் தங்கள் பகைவரைக் காணமுடியாத அளவுக்கு இருள் சூழ்ந்தது.(45) மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அண்டத்தின் வாயாகக் கருதப்படுபவனும், உயிரினங்கள் அனைத்தையும் காப்பவனும், ஜகத்குருவுமான சூரியன் சமுத்திரத்திற்குள் நுழைந்ததும், நட்சத்திரங்களின் நாதன் {சந்திரன்}, இரவின் இருளை அகற்றியபடியே வானில் தோன்றினான்.(46) ஹம்சனின் படைத்தலைவர்கள், அந்த இருளின் காரணமாக இரவில் போரை நிறுத்த தீர்மானித்தனர். அவர்கள், "மன்னர்களே, நாளை காலையில், கின்னரர்களின் கீதங்களால் நம்மை ஈர்க்கப் போகும் கோவர்த்தன மலையில் நம் போர் தொடரும்" என்றனர் {ஹம்சடிம்பகர்களின் படைத்தலைவர்கள்}. இதைக் கேட்டதும் அவர்கள் அனைவரும் கோவர்த்தன மலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்" என்றார் {வைசம்பாயனர்}.(47)
பவிஷ்ய பர்வம் பகுதி – 101ல் உள்ள சுலோகங்கள் : 47
மூலம் - Source |