(பிரத்யும்னதைத்யயுத்தம்)
Vajranabha wants to conquer the celestial region | Vishnu-Parva-Chapter-153-097 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : வஜ்ரநாபனை அறிவுறுத்திய கசியபர்; வஜ்ரநாபன் தன் மகள்களின் பிள்ளைகளைக் கொல்லச் சொன்னது; பிரத்யும்னன், கதன், சாம்பன் ஆகியோர் அசுரர்களை அழித்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஒப்பற்றவரான கசியபரின் வேள்வி {ஸத்ரயாகம்} நிறைவடைந்ததும், தேவர்களும், அசுரர்களும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(1) மூவுலகங்களை வெல்ல விரும்பிய வஜ்ரநாபன், அந்த வேள்வியின் முடிவில் கசியபரிடம் சென்றான். அவர் அவனிடம்,(2) "ஓ! வஜ்ரநாபா, கேட்பதற்குத் தகுந்தவையாக என் சொற்களை நீ நினைத்தால் நான் சொல்வதைக் கேட்பாயாக. {மகனே, மக்களால் சூழப்பட்டவனாக வஜ்ரபுரத்தில் வசிப்பாயாக}.(3) உங்கள் அனைவரிலும் சக்ரன் {இந்திரன்} மூத்தவனும், திறன்களில் முதன்மையானவனும் ஆவான்; அவன் பெருந்தவச் சக்திகளுடன் கூடியவனாகவும், இயல்பிலேயே பலவானாகவும், பிராமணர்களிடம் அர்ப்பணிப்புமிக்கவனாகவும்,(4) நன்றி நிறைந்தவனாகவும், மொத்த உலகின் மன்னனாகவும், நல்லோருக்கும், அறவோருக்கும் புகலிடமாகவும் திகழ்கிறான். {மூவுலகங்களின் மன்னனான அவனே அனைத்து உயிரினங்களின் நன்மையில் எப்போதும் முனைப்புடன் இருக்கிறான்}.(5) ஓ! வஜ்ரநாபா, உன்னால் அவனை {இந்திரனை} வெல்ல முடியாது, {இம்முயற்சியில்} நீயே கொல்லப்படுவாய். பாம்பின் கோபத்தைத் தூண்டியவன் தானே {பாம்பை மிதித்தவன்} அழிவடைவதைப் போல நீயும் உடனே அழிக்கப்படுவாய்" என்றார் {கசியபர்}.(6)





