Saturday 31 October 2020

கிருஷ்ணனின் சிவத்துதி | விஷ்ணு பர்வம் பகுதி – 131 – 075

(கிருஷ்ணக்ருதா சிவஸ்துதி)

The fight between Garuda and Airavata | Vishnu-Parva-Chapter-131-075 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : இரவில் போர்நிறுத்தம்; வில்வத்துடனும், கங்கை நீருடனும் கிருஷ்ணன் செய்த சிவஸ்துதி; வில்வோதகேஷ்வரன் என்ற பெயரை ஏற்ற சிவன்; பாரியாத்ர மலை பெற்ற வரம்...

Krishna and shiva

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "கிருஷ்ணன் தன் தேரில் ஏறிக் கொண்டு, ஐராவதத்தின் முதுகில் தேவர்களின் வலிமைமிக்கத் தலைவன் இருந்த பாரியாத்ர மலைக்குச் சென்றான்.(1) வசுதேவனுடைய உயரான்ம மகனின் சக்திகளை அறிந்த மலைகளில் முதன்மையான பாரியாத்ரம், ஜனார்த்தனன் வருவதைக் கண்டு சந்தனத்தை அரைக்கப் பயன்படும் {உளுந்தளவுக்கு} சிறு கல்லைப் போன்றாகி பூமியில் நுழைந்தது. அப்போது, ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, ரிஷிகேசன் அந்த மலையிடம் பெரும் நிறைவடைந்தான்.(2,3)

ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, கிருஷ்ணன் போரிடச் சென்றபோது, பாரிஜாதத்தை முதுகில் கொண்ட கருடனும் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.(4) பகைவரை அடக்குபவர்களும், பெருஞ்சக்திவாய்ந்த இருவருமான சாத்யகியும், பிரத்யும்னனும் பாரிஜாத மரத்தைக் காப்பதற்காகக் கருடனின் முதுகில் ஏறிச் சென்றனர்.(5) அந்நேரத்தில் சூரியன் அடிவானில் மறைந்து இரவு உண்டானது. ஆனால், ஓ! மன்னா, சக்ரனுக்கும், கேசவனுக்குமிடையில் மீண்டும் போர் தொடங்கியது.(6) பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணன், ஐராவத யானை கடுமையாகத் தாக்கப்பட்டுக் காயமடைந்திருப்பதைக் கண்டு, தேவர்களின் மன்னனிடம் இவ்வாறு பேசினான்.(7)

{கிருஷ்ணன் இந்திரனிடம்}, "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, யானைகளில் முதன்மையான ஐராவதன் கருடனால் பெருங்காயம் அடைந்திருக்கிறான்; இரவும் வேகமாக வளர்கிறது.(8) நாம் (இப்போது) போரை நிறுத்துவோம். நாளை காலையில் நீ விரும்பும் செயலைச் செய்வாயாக" என்றான். அப்போது தேவர்களின் மன்னனும், "அப்படியே ஆகட்டும்" என்று அவனுக்கு மறுமொழிகூறினான்.(9)

ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, சிறப்புமிக்க ஆன்மாவைக் கொண்ட தேவர்களின் மன்னன் புரந்தரன், கற்களால் ஒரு தற்காலிக கவிகையை அமைத்துக் கொண்டு புஷ்கரையின் அருகில் அவ்விரவு தங்கினான்.(10) அப்போது, பிரம்மன், பெரும் முனிவரான கசியபர், அதிதி ஆகியோரும், பிற தேவர்களும், முனிவர்களும் அவனிடம் வந்தனர்.(11) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, ஓ! குரு வம்சத்தின் வழித்தோன்றலே, சாத்யர்கள், விஷ்வேதேவர்கள், அசுவினி குமாரர்கள், ஆதித்யர்கள், ருத்ரர்கள், வசுக்கள் ஆகியோரும் அங்கே கூடினர்.(12)

மறுபுறம், ஓ! பாரதா {ஜனமேஜயா}, நாராயணனும் இனிமை நிறைந்த மலையான பாரியாத்ரத்தில் தன் மகனுடனும் {பிரத்யும்னனுடனும்}, சாத்யகியுடனும் தங்கினான்.(13) அப்போது, பெரும்பிரகாசம் கொண்ட அவன், சாணைக் கல்லின் வடிவத்தை ஏற்றிருந்த பாரியாத்ர மலைக்கு ஒரு வரத்தைக் கொடுத்தான்.(14) {கிருஷ்ணன்}, "ஓ! பெரும் மலையே, நீ சாணபாதம் {சரணபாதன்} என்றழைக்கப்படுவாய்; இமய மலையைப் போலவே நீயே மங்கலமும், புனிதமும் நிறைந்தவனாவாய்.(15) ஓ! மலைகளில் முதன்மையானவனே, இவ்வாறே நீ தலைசிறந்தவனாக இருப்பாய்; எண்ணற்ற வகை ரத்தினங்கள் நிறைந்தவனாகப் புகழ்பெற்ற மேரு மலையை விஞ்சியவனாக இருப்பாய். பல்வேறு வகையான மதிப்புமிக்க ரத்தினங்கள் நிறைந்த உன்னைக் கண்டு எப்போதும் நான் மகிழ்ந்திருப்பேன்" என்றான்.(16)

இவ்வாறு அந்த மலைக்கு வரத்தை அளித்த கேசவன், காளையைச் சின்னமாகக் கொண்ட தேவனை {சிவனை} முறையாக வணங்கிவிட்டு, ஆறுகளில் முதன்மையான கங்கையை நினைவுகூர்ந்தான்.(17) ஓ! பாரதா, இவ்வாறு கிருஷ்ணனால் நினைவுகூரப்பட்ட (விஷ்ணுவின் பாதத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட) அந்த விஷ்ணுபதி ஆறானவள் அங்கே வந்தாள். கிருஷ்ணன் அவளை வழிபட்டுவிட்டு, அவளது நீரில் தன் தூய்மைச் சடங்குகளைச் செய்தான்.(18) நித்யனான அந்த ஹரி, புனித ஆறான கங்கையின் நீரையும், வில்வ இலைகளையும் எடுத்துக் கொண்டு, அனைத்துப் பொருட்களின் தலைவர்களாக இருக்கும் அனைவருக்கும் தலைவனான ருத்ரதேவனை இருப்புக்கு அழைத்தான் {ஆவாஹணம் செய்தான்}.(19) அப்போது தேவனான மஹாதேவன், கங்கை நீரிலும், வில்வ இலைகளிலும் உமையுடனும், தன் தொண்டர்களான கணங்களுடனும் சேர்ந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டான் {கங்கை நீருக்கும் வில்வதளத்துக்கும் மேல் நின்றான்}.(20) கேசவன், பாரிஜாத மரத்தின் மலர்களைக் கொண்டு அவனை வழிபட்டான். பிறகு அந்த நாநயமிக்கவன் {கிருஷ்ணன்}, அனைத்தையும் படைத்தவனும், தலைவர்களுக்குத் தலைவனுமான அவனை {சிவனைத்} துதிக்கத் தொடங்கினான்.(21)

மங்கலனான அந்தக் கிருஷ்ணன், "ஓ! தேவா, (உன் படைப்புகளான) உயிரினங்களை மாயையில் மறைக்கிறாய், அவற்றை அழிக்கவும் செய்கிறாய்; உயிரினங்கள் பிறக்கும்போதே அண்டத்தில் படர்ந்தூடுருவியிருக்கும் ஒலியின் மூலம் உன்னை அவற்றுக்கு {அந்த உயிரினங்களுக்கு} வெளிப்படுத்திக் கொள்ளும் காரணத்தால் நீ ருத்ரன் என்றழைக்கப்படுகிறாய்; ஓ! தலைவா, நீ தானாக வெளிப்படுகிறாய்; நலந்தரும் உன் பாதுகாப்பில் என்னை நான் முழுமையாக ஒப்படைக்கிறேன். உன் பக்தர்களிடம் அர்ப்பணிப்புள்ளவனும், உன் அன்பைப் பெற்றவர்களின் அன்புக்குரியவனுமான எனக்கு {வெற்றி எனும்} புகழால் மகுடம் சூட்டுவாயாக.(22)

வாழ்வை பின்பற்றுவோரிடம் {வாழ்வின் இன்பங்களில்} பற்று கொண்டவர்களும் {கிருஹஸ்தர்களும்}, அவர்களை {அவற்றைத்} துறந்தவர்களுமாக {வானப்ரஸ்தர்களுமாக} இருக்கும் உயிரினங்கள் அனைத்தின் தலைவனாக இருப்பதால் நீ {உயிரினங்கள் அனைத்தின் தலைவன் என்ற பொருளில்} பசுபதி என்று அழைக்கப்படுகிறாய். செயல்கள் அனைத்தையும் செய்பவன் நீயே. ஓ! தேவர்களின் தேவா, தெய்வீக வீரர்களின் பகைவரைக் கொல்பவனான உன்னைக் காட்டிலும் மேலான எவனும் அண்டத்தில் இல்லை.(23)

ஓ! தலைவா, தொடக்கமாகவும், உயிரைக் கொடுப்பவனாகவும், தெய்வீகப் பேராசான்கள் அனைவரின் மனநிறைவுக்கும் காரணனாகவும் இருப்பதால், சாத்திரங்கள் அனைத்தின் முக்கியப் பொருளை அறிந்த நல்லோராலும், கல்விமான்களாலும் நீ தேவர்களின் தேவன் என்று {ஈசன் என்றும் ஈஷ்வரன் என்றும்} அழைக்கப்படுகிறாய்.(24)

ஓ! புத்தியின் பிறப்பிடமே, ஓ! வெளிப்பட்டிருக்கும் படைப்புகள் அனைத்தின் தலைவா, புலப்படும் உலகம் {யாவும்} படைப்பாளர்கள் அனைவரையும் படைத்து, நலந்தரும் வரங்களை அளிக்கும் சுயம்புவான உன்னால் பெறப்பட்டதால் (பிறந்திருப்பவற்றின் பிறப்பிடம் என்ற பொருளில்) நீ பவன் என்று அழைக்கப்படுகிறாய்.(25)

ஓ! தேவர்கள் அனைவருக்கும் மேலான தேவா, வெல்லப்பட்ட தேவாசுரர்கள் அனைவராலும், அனைத்து உயிரினங்களாலும் நீ {ஈசனாக} மகுடம் சூட்டப்பட்டதால் அண்டத்தைப் உண்டாக்கும் (மிக உயர்ந்த தேவனான) மஹேஸ்வரன் என நீ அழைக்கப்படுகிறாய்.(26)

ஓ! வரங்களை அளிப்பவனே, ஓ! அளவில்லா ஆற்றல் கொண்டவனே, அனைவராலும் துதிக்கப்படுபவன் நீ என்பதாலே நலம்விரும்பும் தேவர் எப்போதும் உன்னை வழிபடுகிறார்கள், அதன் காரணமாகவே நல்லோரால் விரும்பப்படும் பகவான் என்ற பெயரால் நீ கொண்டாடப்படுகிறாய்; அனைத்து உயிரினங்களில் ஆன்மாவாக இருக்கும் உன் இருப்பையே அது குறிப்பிடுகிறது (அனைத்து உயிரினங்களிலும் ஈசனாக நீ இருக்கிறாய்}.(27)

ஓ! சொர்க்கத்தின் தலைவர்களில் முதன்மையானவனே, ஓ! எல்லையற்றவனே, ஓ! தேவா, உற்பத்திக்கும், (பூமி, வானம், வெளி, சூரியன், நெருப்பு, காற்று முதலிய) பதிமூன்று கூறுகளுக்கும் காரணனாக நீ இருப்பதால் அளவில்லா புகழ் கொண்ட திரியம்பகன் என்று முக்கியமாக நீ அழைக்கப்படுகிறாய்.(28)

பகைவரை அடக்குவதால் சர்வன் என்றும், எவராலும் வெல்லப்பட முடியாதவனாக இருப்பதால் அப்ரமேயன் என்றும் அழைக்கப்படுகிறாய். ராஜக் கோட்பாடுகள் முதலியவற்றால் அனைத்தையும் ஆள்வதால் நீ அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பவன் {ஸர்வவியாபி} என்றழைக்கப்படுகிறாய்; இன்பத்தின் பிறப்பிடமாக இருப்பதால் நீ சங்கரன் என்றழைக்கப்படுகிறாய்; வேதமே உன் சொல்லாக இருப்பதால் ஒலியின் தலைவனாகவும், சூரியனைவிடப் பிரகாசமிக்கவனாக இருப்பதால் அர்காக்ரயதேஜனாகவும் நீ இருக்கிறாய்.(29)

ஓ! அனைவரின் தலைவா, ஆனந்தத்தால் {பேரின்பத்தால்} உன் பக்தர்களுக்கு மகுடம் சூட்டுவதும், உன் பகைவரான அசுரர்களுக்கும் நன்மையைக் கற்பிப்பதுமான அண்டந்தழுவிய பேரின்ப அம்சத்திற்காக உன்னை எல்லையில்லா ஆற்றல் கொண்டவனும், தானே வெளிப்பட்டவனுமான {சுயம்புவுமான} சங்கரன் என்று அறத்தின் சாரமறிந்த நல்லோர் அழைக்கின்றனர்.(30)

ஓ! அபரிமித ஆற்றல் கொண்ட ஈஷ்வரனே, பழங்காலத்தில் தேவர்களின் தலைவன் தன் வஜ்ரத்தால் உன் தொண்டையில் தாக்கினான்; அதற்குப் பதிலடி கொடுக்கும் திறனை கொண்டிருந்தாலும், அன்பினால் நீ தொண்டை நீலமாகப் பொறுத்துக் கொண்டாய்; இந்தக் காரணத்தால் நீ நீலகண்டன் என்ற பெயரால் கொண்டாடப்படுகிறாய்.(31)

ஓ! சோமதேவா, அசையும் படைப்புகளிலும் {உயிரினங்களிலும்}, அசையாத படைப்புகளிலும் {உயிரற்ற பொருட்களிலும்} ஆண், பெண் குறியீடுகளாக இருப்பதால் பொருட்களில் சாரமறிந்த பிராமணர்கள், அண்டத்தைப் பாதுகாப்பவளும், எப்போதும் துதிக்கத்தக்கவளுமான அம்பிகை என்றும், (முழுமைக்கு எதிரான) தகுதிவாய்ந்த இருப்பின் பிறப்பிடம் {குணவான்} என்றும் உன்னை அழைக்கிறார்கள்.(32) கருத்துடன் கூடிய உற்பத்தியாகவும், செயல்திறமிக்க சக்திகளாகவும் வேதங்களில் உள்ள மாயை என்றறியப்படும் புதிர்நிறைந்த சக்தியான மஹாதத்வம் நீயே. சடங்குகளில் தீக்ஷை பெற்றவர்களின் யஜ்ஞமும் {வேள்வியும்}, அவர்களின் முக்கிய ஆற்றலும், யோகிகளின் பேராத்மாவும் நீயே; எனவே, உன்னைப் போன்ற ஓர் இருப்பும் {இதுவரை} இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை, இருக்கவும் முடியாது.(33) ஓ! தேவர்களின் தேவா, நானும், பிரம்மனும், கபிலரும், அனந்ததேவனும் {ஆதிசேஷனும்}, பிரம்மனின் சிறப்புமிக்க மகன்கள் யாவரும் உன் அம்சங்களால் உண்டானோம்; அனைவரின் தலைவன் நீயே, அனைத்தின் முக்கியக் காரணன் நீயே, துதிக்கத் தகுந்த முழுமையானவன் நீயே" என்றான் {என்று துதித்தான் கிருஷ்ணன்}.(34)

இவ்வாறு துதிக்கப்பட்டவனும், காளையைத் தன் சின்னமாகக் கொண்டவனுமான மஹாதேவன், தன் வலக்கரத்தை நீட்டி நாராயணனிடம் இவ்வாறு பேசினான்,(35) {சிவன் கிருஷ்ணனிடம்}, "ஓ! தேவர்களில் சிறந்தவனே, நீ விரும்பிய பொருட்களை அடைவாய்; பாரிஜாத மரத்தை நீ கொண்டு செல்வாய்; உன் மனம் {ஏமாற்றத்தால்) கிஞ்சிற்றும் துன்புறாது.(36) ஓ! வலிமைநிறைந்த கிருஷ்ணா, மைநாக மலையில் நீ செய்த தவங்களையும், அந்தச் சந்தர்ப்பத்தில் நான் உனக்களித்த வரத்தையும் நினைவுகூர்வாயாக.(37) "நீ கொல்லப்பட முடியாதவனாக இருப்பாய்", "நீ வெல்லப்பட முடியாதவனாக இருப்பாய்", "நீ என்னைவிட அதிகமாக வெல்லப்பட முடியாதவனாக {சூரனாக} இருப்பாய்" என்றெல்லாம் அப்போது நான் சொன்னவை அப்படியே ஆகும், மாறாக நடக்காது (நான் சொன்ன சொல் பிசகாமல் நடக்கும்).(38) மேலும், ஓ! தேவர்களில் முதன்மையானவனே, அறம்சார்ந்தவனே, உன்னால் தொகுக்கப்பட்ட இந்தத் துதியால் என்னைத் துதிப்பவன் நிச்சயம் உயர்ந்த அறத்தையும், போரில் பகைவரிடம் வெற்றியையும், உயர்ந்த வகையிலான மதிப்பையும் அடைவான்.(39) ஓ! பாவமற்றவனே, ஓ! தேவர்களின் தலைவா, உன்னால் இங்கே வழிபடப்பட்ட நான் வில்வோதகேஷ்வரன் என்றழைக்கப்பட்டு, என்னை அணுகுவோர் அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுவேன்.(40) ஓ! கேசவா, ஓ! ஜனார்த்தனா, கல்விமானும், வணக்கமுள்ளவனுமான எந்தப் பக்தன், நோன்பு நோற்று இங்கே மூன்று இரவுகளைக் கழிப்பானோ அவன் தான் விரும்பும் உலகங்களை அடைவான்.(41) (புனித ஆறான) கங்கையும் இங்கே அவிந்தியா {அவிந்தியை} என்றழைக்கப்படுவாள். உரிய மந்திரங்கள் சொல்லி அந்த நீரில் செய்யப்படும் தூய்மைச் சடங்குகள் கங்கையில் செய்த புண்ணியச் செயல்களுக்கு இணையானவையாக இருக்கும்.(42) ஓ! வலிமைமிக்க ஜனார்த்தனா, இந்த மலையின் உச்சியில் உள்ள குகையின் அடியில் ஷட்புரம் என்றழைக்கப்படும் தானவர்களின் நகரம் இருக்கிறது. தேவர்களின் வழிகளிலும், அண்டத்தின் பாதையிலும் முட்களாக இருப்பவர்களும், தீய ஆன்மா கொண்டவர்களுமான வலிமைமிக்க தானவர்கள் அந்தக் காட்டுக்குள் {பூமிக்கடியில்} மறைந்திருக்கின்றனர்.(43,44) ஓ! பாவமற்றவனே, ஓ! தேவா, பிரம்மன் அவர்களுக்கு அளித்த வரத்தின் மூலம் அவர்கள் தேவர்களால் கொல்லப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள்; எனவே, ஓ! கேசவா, இப்போது மனிதத் தோற்றத்தில் இருக்கும் நீ அவர்களைக் கொல்வாயாக" என்றான் {சிவன்}.(45)

Vindhya and Satpuras

ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, இவ்வாறு சொல்லி வாசுதேவனை ஆரத்தழுவிய மஹாதேவன் அந்த இடத்திலேயே மறைந்து போனான்.(46) இவ்வாறு மஹாதேவன் சென்ற பிறகு, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, அந்த நாளின் விடியலில் கோவிந்தன்  (பாரியாத்ர) மலையிடம்[1], "ஓ! மலைகளில் முதன்மையானவனே, பிரம்மனால் கொடுக்கப்பட்ட வரத்தின் மூலம் தேவர்களாலும் கொல்லப்பட முடியாத வலிமைமிக்க அசுரர்கள் உனக்கடியில் வாழ்கிறார்கள்.(47,48) அவர்கள் பெருஞ்சக்தி வாய்ந்தவர்களாக இருப்பினும், (உனக்கடியில் பூமிக்குள்) நான் அவர்களை அடைக்கும்போது அவர்களால் வெளியே வர இயலாது; இவ்வாறு வழிமுறைகள் துண்டிக்கப்படும் அவர்கள் அந்த இடத்திலேயே மடிவார்கள்.(49) ஓ! பெரும் மலையே, நானும் உன்னில் பொதிந்திருப்பேன். ஓ! மலையே, பயங்கரம் நிறைந்த அந்த அசுரர்களைத் தடுத்துக் கொண்டு நான் உன்னில் வாழ்ந்திருப்பேன்.(50) ஓ! மலைகளில் முதன்மையானவனே, உன் சிகரத்தில் ஏறி என் வடிவைக் காணும் எவனும் ஆயிரம் பசுக்களைக் கொடையாக அளித்த தகுதியை {புண்ணியத்தை} அடைவான்.(51) உன் கற்களைக் கொண்டு என் சின்னத்தை அமைத்து பக்தியுடன் தினமும் வழிபடுவோர், என்னையே {பரமபதத்தை} அடைவார்கள்" என்றான் {கிருஷ்ணன்}.(52)

[1] இங்கேயும், இதற்கு முந்தைய அத்தியாயத்திலும் குறிப்பிடப்படும் பாரியாத்ர மலையானது, மஹாபாரதச் சபா பர்வத்தின் 10ம் அத்யாயம் 31ம் ஸ்லோகத்திலும், பீஷ்ம பர்வம் 9ம் அத்யாயத்திலும் குறிப்பிடப்படுகிறது. பாரியாத்ரம் என்ற இந்த மலை சாணபாதம் எனப் பெயர் மாற்றப்பட்டதாக இந்த அத்யாயத்தின் 15ம் ஸ்லோகம் குறிப்பிடுகிறது. அதற்கடியில் ஷட்புரம் என்ற காடு அல்லது தானவ நகரம் இருப்பதாகவும் இந்த அத்யாயத்தின் 43ம் ஸ்லோகம் குறிப்பிடுகிறது. மேற்கண்ட நில வரைபடத்தைக் கண்டால் இது விந்திய மலைக்குத் தென்புறத்தில் இருத்தல் வேண்டும். அங்கேயே அவிந்தியை என்ற ஆறும் இருத்தல் வேண்டும்.

இவ்வாறே வரமளிப்பவனான விஷ்ணு, அந்தத் தலைவனுக்கு வரமளித்தான். பிழைசெய்யாதவனான அந்தத் தேவன் அதுமுதல் அவ்விடத்தில் பொதிந்திருக்கிறான்.(53) ஓ! குருக்களின் வழித்தோன்றலே, தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டோர், விஷ்ணுவை அடையும் நோக்குடன் அந்த மலையின் கல்லால் ஒரு தோற்றத்தை அமைத்து அங்கே எப்போதும் அவனை வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்" என்றார் {வைசம்பாயனர்}.(54)

விஷ்ணு பர்வம் பகுதி – 131 – 075ல் உள்ள சுலோகங்கள் : 54
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்