Wednesday, 24 February 2021

அநிருத்தனைத் தேற்றிய ஆரியா தேவி | விஷ்ணு பர்வம் பகுதி – 177 – 121

(அநிருத்தக்ருதார்யாஸ்தவோ தத்வரளாபஷ்ச)

The goddess consoles Aniruddha | Vishnu-Parva-Chapter-177-121 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : ஆர்யா தேவிக்கான துதி; கட்டில் இருந்து விடுபட்ட அநிருத்தன்; ஆர்யா துதியின் பெருமை...


Vanasura and Aniruddha

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பலியின் மகனான மன்னன் பாணனால் வீரன் அநிருத்தனும், உஷையும் சோணித நகரத்தில் சிறை பட்டிருந்தபோது,(1) அவன் தன் பாதுகாப்புக்காகக் கௌமாரி தேவியின் {கோடாவதி தேவியின்} புகலிடத்தை நாடி அவளது புகழைத் துதியாகப் பாடினான். {அதைக் கேட்பாயாக}.(2) எல்லையற்றவனும், சிதைவற்றவனும், நித்திய தேவனுமான தலைவன் நாராயணனை வணங்கிவிட்டு,(3) வழிபடத்தகுந்தவளும், வரம் தருபவளும், தேவர்களாலும், உலகங்களாலும் வழிபடப்படுபவளும், சண்டீ, காத்யாயனி, ஆரியா என்று அழைக்கப்படுபவளுமான தேவியை ஹரியால் துதிக்கப்பட்ட அவளது பெயர்களைக் கொண்டு பாடப் போகிறேன்.(4) தேவர்கள், முனிவர்கள், ராட்சசர்கள் ஆகியோரால் துதிக்கப்படும் மங்கலையான அந்த ஆர்யா தேவியின் மகிமையை உரைத்துவிட்டு, அனைத்திலும் படந்தூடுருவி இருப்பவளும், தேவர்கள் அனைவராலும் வணங்கப்படுபவளுமான அவளைத் துதிக்கப் போகிறேன்.(5)

அநிருத்தன் {துதிக்கத் தொடங்கினான்}, "மஹேந்திரன், விஷ்ணு ஆகியோரின் தங்கையை என் நலத்துக்காக நான் வணங்குகிறேன். தூய்மையடைந்தவனாக, தூய்மையடைந்த மனத்துடன் கூடியவனாகக் கூப்பிய கரங்களுடன் நான் அவளது மகிமைகளை உரைக்கப் போகிறேன்[1].(6)

[1] 6ம் ஸ்லோகத்திலிருந்து 34ம் ஸ்லோகம் வரை இனி வரப்போகும் பகுதியும், அதற்குப் பின்னர் 42ம் ஸ்லோகத்திலிருந்து 48ம் ஸ்லோகம் வரையுள்ள பகுதியும் மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்த அத்யாயம் முழுமையும் இல்லை. சித்திரசாலை பதிப்பிலும், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பிலும் பின்வருவன இருக்கின்றன. விடுபட்டிருக்கும் இந்தப் பகுதி சித்திரசாலை பதிப்பில் இருந்து மொழிபெயர்த்து இங்கே அளிக்கப்படுகிறது.

{கௌதமியே (துர்க்கையே), கம்சனுக்கு அச்சத்தை ஏற்படுத்தியவளே, யசோதையின் மகிழ்ச்சியை அதிகரிப்பவளே, தூய்மையானவளே, நந்தகோபனின் மகளாகக் கோகுலத்தில் பிறந்தவளே, (நான் உன்னை வணங்குகிறேன்).(7) விவேகியே, நுண்ணறிவு மிக்கவளே, நிபுணத்துவம் மிகுந்தவளே (தக்ஷையே}, மங்கலையே, மென்மையானவளே, தனுவின் மகன்களை {தானவர்களை} ஒடுக்குபவளே, அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பவளே, அனைத்தினாலும் வணங்கப்படுபவளே, (நான் உன்னை வணங்குகிறேன்).(8) கண்களுக்குப் புலப்படுபவளே (தர்சணியே), பக்தர்களை நிறைவடையச் செய்பவளே (பூரணியே), மாயை படைப்பவளே, தேவர்களுக்கு ஆகுதிகளை அளிப்பவளே (நெருப்பின் தேவியே / வஹ்னியே), சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஒளியைத் தருபவளே, அமைதியைத் தருபவளே, உறுதிமிக்கவளே, அன்னை தேவியே, அனைத்தையும் குழப்புபவளே (மோஹினியே), சோஷணியே, (நான் உன்னை வணங்குகிறேன்).(9)

தேவர்களாலும், ரிஷிகளாலும் தொண்டாற்றப்படுபவளே, தேவர்கள் அனைவராலும் வணங்கப்படுபவளே, காளி தேவியே, காத்யாயனி தேவியே, பகைவருக்குப் பயங்கரியே, அச்சத்தை அழிப்பவளே, (நான் உன்னை வணங்குகிறேன்).(10) உலக முடிவில் ஏற்படும் அழிவிரவின் தேவியே, விரும்பியவாறு வந்து செல்பவளே, முக்கண்களைக் கொண்டவளே, கற்பின் தேவியே, மின்னலின் தேவியே, மேகமுழக்கம் செய்பவளே, வேதாள வாஹினியே, பரந்த முகம் படைத்தவளே, (நான் உன்னை வணங்குகிறேன்).(11) துருப்புகளின் {கணங்களின்} தலைவியே, பெருஞ்சிறப்பு வாய்ந்தவளே, நல்ல சகுனத்தை அளிக்கும் சகுனியெனும் பெரும் பறவையே, நாட்களில் {நட்சத்திரங்களில்} ரேவதியே, திதிகளில் பஞ்சமி, சஷ்டி, பூர்ணிமை, சதுர்தசி திதிகளாக இருப்பவளே, (நான் உன்னை வணங்குகிறேன்).(12)

இருபத்தேழு நட்சத்திரங்களின் வடிவில் இருப்பவளே, ஆறுகளின் வடிவில் இருப்பவளே, பத்து திக்குகளாகத் திகழ்பவளே, நகரங்கள், செயற்கைக் காடுகள், தோட்டங்கள், கோபுரங்கள் ஆகியவற்றில் இருப்பவளே, (நான் உன்னை வணங்குகிறேன்).(13) சரஸ்வதி தேவியே, (தக்ஷனின் மனைவியும், பணிவின் தேவியுமான) ஹ்ரீ தேவியே, (விஷ்ணுவின் மனைவியும், செல்வத்தின் தேவியுமான) ஸ்ரீ தேவியே, கங்கை ஆறே, கந்தர்வியே, யோகினியே, நன்மக்களுக்குப் புகழையும், நம்பிக்கையையும், யோகத்தையும் அளிப்பவளே, அவர்களுக்குத் திசைகளைக் காட்டுபவளே, அவர்களைத் தீண்டுபவளே, நான் உன்னை வணங்குகிறேன்.(14) வேதங்களின் அன்னையே, சாவித்ரி தேவியே, பக்தர்களிடம் அன்பு செலுத்துபவளே, தவம் செய்பவளே, அமைதியை விளைவிப்பவளே, ஏகனாம்சையே {ஒரே அங்கத்தைக் கொண்டவளே} (துர்க்கா தேவியே), தொன்மையான தேவியே {ஸநாதன தேவியே}, (நான் உன்னை வணங்குகிறேன்).(15)

குடில்களில் வசிப்பவளே, (கௌடீரியே), அமுத தேவியே (துர்க்கையே, மதிரையே), பகைவரிடம் கோபங்கொள்பவளே (சண்டியே / சண்டீ), மலைய மலைகளில் வசிப்பவளே, அனைத்தின் தாயே, பகைவரிடம் அச்சத்தை விளைவிப்பவளே, துர்க்கா தேவியே {கூஷ்மாண்டீ}, மலர்களை விரும்புபவளே, (நான் உன்னை வணங்குகிறேன்).(16) பகைவருக்குப் பயங்கரத் தேவியே, போதையூட்டும் மதுக்களில் இருப்பவளே, விந்திய, கைலாச மலைகளில் வசிப்பவளே, சிறந்த பெண்ணே, சிங்க வாஹினியே, பல வடிவங்களைக் கொண்டவளே, கொடியில் காளையைச் சின்னமாகக் கொண்ட தேவியே, (நான் உன்னை வணங்குகிறேன்).(17) காணப்பட அரிதான தேவியே {துர்லபே}, வெல்லப்பட அரிதானவளே {துர்ஜயே}, அடையப்பட முடியாத தேவியே (துர்க்கையே), நிசும்பனுக்கு அச்சத்தைக் காட்டியவளே, தேவர்களால் விரும்பப்படுபவளே, ஸுரா தேவியே, வஜ்ரதாரியின் {இந்திரனின்} தங்கையே, மங்கலையே, (நான் உன்னை வணங்குகிறேன்).(18)

மலைவாழ் இனங்களின் தேவியே (துர்க்கையே), மரவுரியை உடையாக உடுத்துபவளே, கள்வர்களின் படையால் வணங்கப்படுபவளே, நெய்யுண்பவளே, சோமம் பருகுபவளே, மென்மையான தேவியே, மலைகள் அனைத்திலும் வசிக்கும் தேவியே, (நான் உன்னை வணங்குகிறேன்).(19) சும்பன், நிசும்பன் ஆகியோரை ஒடுக்கிய தேவியே, யானைத் தலைகளுக்கு ஒப்பான பெரும் முலைகளைக் கொண்ட தேவியே, சித்தசேனையின் {சித்தர்களின் படைக்கு} அன்னையே, சித்தர்களாலும், சாரணர்களாலும் தொண்டாற்றப்படுபவளே, (நான் உன்னை வணங்குகிறேன்).(20) சரா தேவியே, குமாரனின் {முருகனின்} அன்னையே, மலை மகளான பார்வதி தேவியே, ஐம்பது தெய்வீகக் கன்னியராக இருப்பவளே (தக்ஷனின் மகள்களாக இருப்பவளே)[2], தேவர் கூட்டத்தின் மனைவியராக இருப்பவளே, (நான் உன்னை வணங்குகிறேன்).(21)

[2] சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில், "தக்ஷனின் மகள்களான இந்த 50 பேரில், 27 பேர் சோமனுக்கு {சந்திரனின்} மனைவியர், 13 பேர் கசியபரின் மனைவியர், 10 பேர் தர்மனின் {யமனின்} மனைவியரும் ஆவர். இந்தச் செய்தி கீதா பிரஸ் பதிப்பில் வெளிவந்த புத்தகத்தில் 853ம் பக்கத்தின் அடிக்குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது" என்றிருக்கிறது.

கத்ருவின் ஆயிரம் மகன்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோரின் சிறந்த பெண்களாக இருப்பவளே (நாகர்களின் மனைவியராக இருப்பவளே), உலகால் மதிக்கப்படுபவளே, சொர்க்கத்தில் தேவ மகளிராக இருப்பவளே, (நான் உன்னை வணங்குகிறேன்).(22) முனிவர்களின் மனைவியரிலும், யக்ஷ, கந்தர்வர், வித்யாதர பெண்களிலும், மனிதர்களின் உலகில் உள்ள அறம்சார்ந்த உன்னதப் பெண்களிலும் படர்ந்தூடுருவியிருக்கும் தேவியே, (நான் உன்னை வணங்குகிறேன்).(23) ஓ! தேவி, இந்தப் பெண்களில் அனைத்தின் புகலிடமாக இருப்பவள் நீயே. நான் உன்னை வணங்குகிறேன். ஓ! தேவி, மூவுலங்களில் உள்ள அனைத்தாலும் வணங்கப்படுபவளே, கின்னரர்களால் பாடப்படும் பாடல்களில் தொண்டாற்றப்படுபவளே, {நான் உன்னை வணங்குகிறேன்}.(24)

ஓ! தேவி, எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவளே, அளக்கப்பட முடியாதவளே, ஓ! கௌதமி தேவியே, இவ்வாறும், இன்னும் பல பெயர்களிலும் துதிக்கப்படுபவளே, நான் உன்னை வணங்குகிறேன்.(25) ஓ! தேவி, எந்தத் தடங்கலுமின்றி இந்தக் கட்டுகளில் இருந்து நான் விரைவாக விடுபடத் திருவுளம் கொள்வாயாக. ஓ! அகன்ற விழியாளே, என்னைப் பாதுகாப்பாயாக. நான் உன் பாதங்களின் புகலிடத்தை நாடுகிறேன்.(26)

அனைத்து வகைக் கட்டுகளில் இருந்து விடுவிக்க வல்லவள் நீயே. பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், சந்திரன், சூரியன், காற்று, அசுவினி இரட்டையர், வசுக்கள், தாதா, பூமி, பத்து திக்குகள்[3], புயல்களின் தேவன் {மருத்தன்}, மழையின் தேவன் {பர்ஜன்யன்}, தாதா, பூமி, பத்துத் திக்குகள்,(27,28) பசுக்கள், விண்மீன் இனங்கள் {நட்சத்திரங்கள்}, கோள்கள், ஆறுகள், மடுக்கள், ஓடைகள், பெருங்கடல்கள், வித்யாதரர்கள், உரகர்கள்,(29) பாம்புகள், கருடர்கள், கந்தர்வ கணங்கள், தெய்வீக மகளிர் {அப்சரஸ் கணங்கள்} ஆகியோரும், இந்த மொத்த உலகமும், தேவியின் {தேவி உன்} பெயர்கள் உரைக்கப்பட்டால் துதிக்கப்பட்டவர்களாவர்" என்றான் {அநிருத்தன்}.(30)

[3] சித்திர சாலை பதிப்பின் அடிக்குறிப்பில், "அஸ்வினிகள், வசுக்கள், சாத்யர்கள் என்று கீதா பிரஸ் பதிப்பில் இருக்கிறது" என்றிருக்கிறது.

{வைசம்பாயனர் தொடர்ந்தார்}, "தேவியின் இந்தப் புனிதத் துதியைக் கவனத்துடன் உரைப்பவனுக்கு, ஏழாம் மாதத்தில் தேவி வரமளிக்கிறாள்.(31) பதினெட்டுக் கரங்களைக் கொண்ட தேவி, தெய்வீக ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுகிறாள். அவளது அங்கங்கள் அனைத்தும் ஆபரணங்களால் ஒளிர்கின்றன. அவள் ஒளிமிக்க மகுடத்தால் அலங்கரிக்கப்படுகிறாள்".(32)

{மீண்டும் அநிருத்தன்}, "ஓ! காத்யாயனி தேவி, நான் உன்னைத் துதிக்கிறேன். சிறந்த வரத்தை எனக்கு அருள்வாயாக. ஓ! தேவி, ஓ! வரங்களை அளிப்பவளே, ஓ! அழகிய கண்களைக் கொண்டவளே, நான் உன்னைத் துதிக்கிறேன்.(33) ஓ! பெருந்தேவி, நான் உன்னை வணங்குகிறேன். நீ எப்போதும் என்னிடம் நிறைவடைந்திருப்பாயாக. வரத்தையும், நீண்ட வாழ்நாளையும், செழிப்பையும், பொறுமையையும், உறுதியையும் எனக்கு அருள்வாயாக.(34) ஓ! கௌரவங்களை அளிப்பவளே, உன்னை நான் வணங்குகிறேன். இந்தக் கட்டுகளில் இருந்து என்னை விடுவித்து எனக்கு உயிரையும், உடல்நலத்தையும் தருவாயாக" என்றான் {அநிருத்தன்}.(35)

இவ்வாறு துதிக்கப்பட்ட பெருந்தேவியான துர்கை, அநிருத்தன் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றாள். பற்றார்வலர்களிடம் {பக்தர்களிடம்} அன்பு கொண்ட அந்தத் தேவி, பாணனின் நகரத்தில் சிறை பட்டிருந்த அநிருத்தனை விடுவித்தாள். அவள் தடுக்கப்பட முடியாத வீரனான அநிருத்தணனின் முன்பு தோன்றி அவனைத் தேற்றினாள்.(36,37) பெருஞ்சக்திவாய்ந்த அந்த வீரன் அப்போது அவளை வணங்கினான். {கட்டப்பட்டுக் கிடந்த அநிருத்தனிடம் தேவியும் நிறைவடைந்தாள்}.(38) பிறகு அந்தத் தேவி, பாம்புகளாலான வலிய கயிறுகளை {நாகபாசங்களை} தன் விரல்களாலேயே வெட்டி, {உஷையின் மனத்தைக் கவர்ந்த கள்வனான} அநிருத்தனை விடுவித்தாள்.(39) {அந்தத் தேவி, பாணனின் நகரத்தில் கட்டப்பட்டுக் கிடந்த வீரனான அநிருத்தனிடம் நிறைவடைந்த முகத்துடன், ஆறுதல் தரும் சொற்களைப் பேசினாள்}.(40) {அவள்}, "ஓ! அநிருத்தா, நீ இன்னும் சில நாட்கள் இங்கே காத்திருப்பாயாக. தைத்தியர்களைக் கொல்பவனான கதாதாரி {கிருஷ்ணன்}, பாணனின் ஆயிரம் கைகளையும் அறுத்து, இந்தத் தளைகளில் இருந்து உன்னை விடுவித்து, உன் நகருக்கு அழைத்துச் செல்வான்" என்றாள்".(41)

{"வைசம்பாயனர், "பறவைகளின் மன்னன் (கருடன்) மீது ஏறிச் சென்று, அநிருத்தனையும், பாணன் மகளையும் {உஷையையும்} பாணனின் நகரத்தை விட்டு அழைத்து வர ஹரி (கிருஷ்ணன்) ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது, பேரசுரனான பாணன், உடனடியாக நேர்ந்த இந்த அவமதிப்பைக் கேள்விப்பட்டு இறுமாப்படைந்தான்[4].

[4] சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த ஸ்லோகம் கீதா பிரஸ் பதிப்பிலும், பாஷாபாரதம் தொகுதி 6லும் இல்லை" என்றிருக்கிறது. எனவே, ஸ்லோக எண் கொடுக்கப்படவில்லை.

ஓ! ஜனமேஜயா, சந்திரன் போன்ற பிரகாசமிக்க முகத்தைக் கொண்ட அநிருத்தன் மகிழ்ச்சியடைந்தவனாக மீண்டும் தேவியைத் துதித்தான். அநிருத்தன், "ஓ! தேவி, நான் உன்னை வணங்குகிறேன். ஓ! வரம் அளிப்பவளே, ஓ! மங்கலமானவளே, ஓ! தேவர்களின் பகைவரை அழிக்கும் தேவியே, நான் உன்னை வணங்குகிறேன்.(42) விரும்பியவாறு செல்லக்கூடியவளே, எப்போதும் மங்கலையான உன்னை நான் வணங்குகிறேன். அனைத்தின் நன்மையை விரும்புகிறவளும், அனைவருக்கும் பிடித்தவளுமான உன்னை நான் வணங்குகிறேன். பகைவருக்கு எப்போதும் பயங்கரியாக இருக்கும் உன்னை நான் வணங்குகிறேன். கட்டுகளில் இருந்து விடுவிக்கப்படக் காரணமான உன்னை நான் வணங்குகிறேன்.(43) ஓ! பிராமணி, இந்திராணி, ருத்ராணி, கடந்த கால, எதிர்கால, நிகழ்காலத்தின் மங்கல தேவியே, நான் உன்னை வணங்குகிறேன். ஓ! நாராயணி, அனைத்து வகை அச்சங்களில் இருந்தும் என்னைப் பாதுகாக்கும் உன்னை நான் வணங்குகிறேன்.(44) ஓ! அண்டத்தின் தலைவியே, ஓ! அன்பானவளே, ஓ! பொறுமையானவளே, ஓ! பெரும் தவங்களைச் செய்தவளே, ஓ! அர்ப்பணிப்பை விரும்புகிறவளே, ஓ! உலகின் அன்னையே, ஓ! மலையின் {ஹிமவானின்} மகளே, ஓ! பூமித் தாயே, நான் உன்னை வணங்குகிறேன்.(45) ஓ! நாராயணி, நான் உன்னை வணங்குகிறேன். ஓ! அகன்ற விழிகளைக் கொண்டவளே, என்னைப் பாதுகாப்பாயாக. ஓ! அசுரர்களுக்கு அச்சம் ஏற்படுத்துபவளே, என் கவலைகள் அனைத்தில் இருந்தும் என்னைக் காப்பாயாக.(46) ஓ! ருத்திரனுக்கு அன்பானவளே, ஓ! பெரும் நற்பேறு பெற்றவளே, ஓ! பக்தர்களின் கவலைகளை அழிப்பவளே, ஓ! தேவி, கட்டுகளில் இருந்து விடுபட்டிருக்கும் நான் உன்னிடம் தலை வணங்குகிறேன்" என்று வழிபட்டான்.(47)

ஓ! ஜனமேஜயா, ஆர்யா தேவிக்கான இந்தப் புனித மந்திரத்தை {ஆர்யா ஸ்தவத்தை} மிகக் கவனத்துடன் துதிப்பவன் எவனும் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, விஷ்ணுவின் உலகை அடைவான். கட்டுகளில் {பற்றுகளில்} இருந்து விடுபடுவான். வியாசரின் சொற்கள் இவ்வாறே வாய்மை நிறைந்தவையாகும்" என்றார் {வைசம்பாயனர்}.(48)

விஷ்ணு பர்வம் பகுதி – 177 – 121ல் உள்ள சுலோகங்கள் : 48
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்