Sunday, 10 May 2020

விஷ்ணுவின் தோற்றம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 42

(விஷ்ணோ꞉ ஈஸ்²வரத்வ கத²னம்)

Vishnu's appearance | Harivamsha-Parva-Chapter-42 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : தேவர்களைப் பீடித்த அசுரர்கள்; தானவர்களை அழிக்க அவதரித்த விஷ்ணுவின் தோற்றம்; அங்கு தோன்றிய நிமித்தங்கள்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, விஷ்வனான (பாதுகாப்பின் தலைவனான) விஷ்ணுவும், ஸத்ய யுகத்தில் ஹரியும், தேவர்களில் வைகுண்டனும், மனிதர்களில் கிருஷ்ணனுமான அந்த ஈஷ்வரனின் மகிமையையும், அவனது கடந்த கால, எதிர்காலச் செயல்கள் பலவற்றின் நோக்கங்களையும் முறையாகக் கேட்பாயாக[1].(1,2) அந்தத் தலைவன் புலப்படாதவனாக இருப்பினும், (பல்வேறு காலகட்டங்களில்) {பல்வேறு} வடிவங்களை ஏற்பவனாக இருக்கிறான். படைப்புகள் அனைத்தின் காரணனும், நித்யனுமான நாராயணன் ஆவான்.(3) இந்த நாராயணன், கிருத யுகத்தில் ஹரியின் வடிவை ஏற்றான். பிரம்மன், இந்திரன், சந்திரன், தர்மன், சுக்ரன், பிருஹஸ்பதி ஆகியோரனைவரும் நாராயணனின் வடிவங்களே ஆவர்.(4)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "விஷ்ணுவின் விஷ்வத்வம் {அண்டத்தைப் பாதுகாக்கும் தன்மை}, ஹரித்வம் {கவலைகளை அகற்றும் தன்மை}, வைகுண்டத்வம் {பக்தியின் மூலம் முக்தியைத் துரிதமாக அடையச் செய்யும் தன்மை}, கிருஷ்ணத்வம் {சகிக்கும் தன்மை}, ஈஷ்வரத்வம் {நல்லோருக்குத் தலைமை தாங்கும் தன்மை}, கஹணாகர்மங்களை {கடந்த காலத்தில் அவன் செய்த மற்றும் எதிர்காலத்தில் அவன் செய்யப்போகிற செயல்களின் தன்மை ஆகியவற்றைக்} கேட்பாயாக" என்றிருக்கிறது.

யதுவின் மகனான {யதுவின் குலத்தில் தோன்றிய} விஷ்ணு, மன்னன் இந்திராவரஜன் {இந்திரனின் தம்பி} என்ற பெயரில் அதிதியின் மகனானான்.(5) நாராயணன், தேவர்களை ஆதரிப்பதற்காகவும், அவர்களின் பகைவர்களான தைத்தியர்கள், தானவர்கள் மற்றும் ராட்சசர்களை அழிப்பதற்காகவும் அதிதியின் மகனாகப் பிறந்தான்.(6) பழங்காலத்தில் இந்தப் பரமாத்மா, பிரம்மனைப் படைத்தான். முதல் கல்பத்தில் அந்தப் பரமபுருஷன், பிரஜாதிபதிகள் அனைவரையும் படைத்தான்.(7) அவர்கள் {பிரஜாபதிகள்}, பல்வேறு வடிவங்களை ஏற்று, மிகச் சிறந்த பிராமணக் குடும்பங்கள் {குலங்கள்} பலவற்றின் நிறுவனர்கள் ஆனார்கள். பல்வேறு கிளைகளுடன் கூடிய நித்திய வேதமானது[2], இந்த உயரான்மாக்களில் இருந்தே வெளிப்பட்டது.(8)

[2] "இந்துக்கள் தங்கள் மதத்தை வேதங்களெனும் இந்த வெளிப்பாட்டின் மூலமே அடைந்தனர். அவர்கள், வேதங்கள் தொடக்கமும், முடிவுமற்றன என்று கருதுகிறார்கள். ஒரு புத்தகம் தொடக்கமோ, முடிவோ இல்லாதிருப்பது என்பது நகைப்புக்குரியதாகத் தோன்றலாம். ஆனால் வேதங்கள் என்பன எந்தப் புத்தகங்களையும் குறிப்பிடும் பொருளைக் கொண்டதல்ல. வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு நபர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்ம விதிகளின் ஒன்றுதிரண்ட கருவூலம் என்றே அவை பொருள்படும். ஈர்ப்பு விதி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அஃது இருந்ததைப் போலவே, ஆன்ம உலகை நிர்வகிக்கும் இந்த விதிகளும், மனிதகுலத்தால் மறக்கப்பட்டாலும் இருந்து கொண்டே இருக்கும். ஆன்மாக்களுக்கும், ஆன்மாக்களுக்கும் இடையிலான, தனிப்பட்ட ஆன்மாவுக்கும், ஆன்மாக்கள் அனைத்தின் தந்தைக்கும் இடையிலான ஒழுக்கம், நெறி, ஆன்மிகம் சார்ந்த உறவுகள் ஆகியவை, அவற்றைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே இருந்தன, நாம் மறந்து போனாலும் அவை இருந்து கொண்டேதான் இருக்கும். இந்த விதிகளைக் கண்டுபிடித்தவர்கள் ரிஷிகள் என்றழைக்கப்பட்டனர், அவர்கள் இந்துக்களால் பெரிதும் மதிக்கப்பட்டனர்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

அற்புதம்நிறைந்த விஷ்ணுவின் பெயர்களை இவ்வாறு நான் சொன்னேன். இனி மீண்டும் மீண்டும் சொல்லத் தகுந்ததை என்னிடம் இருந்து கேட்பாயாக.(9) அசுரன் விருத்திரன் கொல்லப்பட்ட பிறகு, சத்ய யுகம் முடிவதற்கு முன்பே உலகப் புகழ்பெற்ற தாருகனுடனான போர் நடைபெற்றது.(10) பயங்கரம் நிறைந்த தானவர்கள், போர் வெற்றியால் உண்டான ஊக்கத்தாலும், கந்தர்வர்கள், யக்ஷர்கள், உரகர்கள் மற்றும் ராட்சசர்களின் துணையைக் கொண்டும் தேவர்கள் மீதான கடுந்தாக்குதலில் ஈடுபட்டனர்.(11) போரில் ஆயுதங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதும், அவர்கள் தானவர்களால் கொல்லப்படும் நிலையில் இருந்தனர். இதனால் கலக்கமடைந்திருந்த அவர்கள், அனைத்தையும் அறிந்தவனும், பாதுகாப்பின் தேவனுமான தலைவன் நாராயணனின் புகலிடத்தை நாடினர்.(12)

அதேவேளையில், சூரியன், சந்திரன் மற்றும் கிரகங்களுடன் வானத்தில் நெருப்புக் கங்குகளைப் பொழிந்து வந்த மேகங்களின் பயங்கர முழக்கம் கேட்டுக் கொண்டிருந்தது. ஏழு வகையான காற்றுகளும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன.(13,14) கொதிநீரோட்டங்கள், மின்னல்களின் வீழ்ச்சி, மின்னல் வேகக் காற்றுகள் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டும், அவற்றால் எரிக்கப்படுவதையும் போன்று தோன்றிய பூமி, பயங்கர ஒலிகளை வெளியிடத் தொடங்கியது. ஆயிரக்கணக்கான எரிகொள்ளிகள் வானில் இருந்து விழுந்து கொண்டிருந்தன. தேர்கள் கீழே விழவும், மேலே எழவும் தொடங்கின.

இந்தச் சகுனங்களைக் கண்ட மக்கள், நான்கு யுகங்களும் முடியும்போது ஏற்படுவதைப் போன்ற அச்சத்தால் பீடிக்கப்பட்டனர்.(15-17) மொத்த உலகும், ஒன்றும் புலப்படாத நிலையில் இருளில் மூழ்கியிருந்தது. இருளால் மறைக்கப்பட்டிருந்த பத்துத் திசைப்புள்ளிகளும் புலப்படாமல் இருந்தன.(18) அழிவுக்கால மேகத் திரையுடன் கூடிய மாதத் தேய்பிறையின் இருள் அவதாரம் போல அஃது இருந்தது. சூரியன் மேகமூட்டத்தில் மறைந்திருந்ததால் மொத்த வானமும் இருளில் மூழ்கியிருந்தது.(19) கரிய நிறம் கொண்ட தெய்வீக ஹரி, இருளுடன் சேர்த்து இந்த மேகங்களையும் விலக்கி, தன் தெய்வீக வடிவை வெளிப்படுத்தினான்[3].(20)

[3] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பின்வரப்போவது விஷ்ணுவின் ஸ்துதி பாடமாகும். விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைப் போல இதை மனப்பாடமாகக் கற்க விரும்பும் வாசகர்கள், ஸமாஸாயுக்த ஸ்லோகங்களாக, அதாவது பிரிக்கப்படாத கூட்டுச் சொற்றொடர்களாக இந்த வலைப்பக்கங்களின் வேறோரிடத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் உரையைப் படிக்குமாறும், படித்தல் / கற்றல் வசதிக்காக ஒப்பிட்டுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில், டீகாதாத்பர்ய ஸ்லோகங்கள், அதாவது கூட்டுச் சொற்களை உடைத்து அமைக்கப்பட்ட வரிகளைக் கொண்டு அவற்றுக்குரிய மந்திர இசையொலியைப் பெற முடியாது" என்றிருக்கிறது. தே.ரா.ஹ.ரா.பதிப்பின் இந்த அடிக்குறிப்பில் குறிப்பிட்டிருப்பது போலவே விருப்பமுள்ள வாசகர்கள், நம் வலைத்தளத்தில் https://harivamsam.arasan.info/2020/05/Harivamsa-Harivamsha-Parva-Adhyaya-42.html என்ற சுட்டியில் 20ம் ஸ்லோகத்திற்கு மேல் இருந்து படிக்கலாம்.

அவன் மேகம்போல் உடல்கருத்தவன், அஞ்சனம்போல் மயிர் கருத்தவன். கருமலைக் கிருஷ்ணன் உரு கருத்தவன்.(21) தழலெனும் மஞ்சள் உடைதரித்தவன், பொன்னால் மேனி அலங்கரித்தவன். யுகக்கடை நெருப்பாய் புகை இருள் பொதிந்த உடலோடு எழுந்தவன்.(22) எண்மடங்கு தோள் வளர்த்தவன், மகுடத்தால் தலை மறைத்தவன், பொன்னாயுதங்களால் புறங்கை அழகு செய்தவன்.(23) சூரிய சந்திரக் கதிர்கள் பீடித்தும் அசையா மலை போன்று இருந்ததும், பச்சைக்கல் வண்ணக் கச்சையில் கட்டப்பட்டதும், நந்தகம் என்று அழைக்கப்பட்டதுமான வாளுடன் கூடிய கை திளைத்தவன். அரவங்கள் போன்ற கணைகள் கொண்டவன்.(24)

கைகளில் தண்டம், வஜ்ரம், கலப்பை, சங்கு, சக்கரம், கதாயுதம், சாரங்க வில்லைக் கொண்டவன். அந்த விஷ்ணுவானவன், ஸ்ரீயே மரமும், பொறுமையே அடிவாரமுமான மலைபோன்றவன். மஞ்சள்வண்ணக் குதிரைகள் பூட்டி, கருடச் சின்னக் கொடிகள் ஏந்தி, மந்தர மலையே அச்சாகி, அரவு அனந்தன் வாராகி, மேருவும், குபேரனும் தன்னில் இருக்க, பலநிறப் பூக்கள் அலங்கரித்து, விண்மீன் கோள்கள் நிறைந்து நின்றத் தேரினில் சுகமாய் அமர்ந்திருந்தான். வானில் ஒளிரும் தெய்வீகத் தேரில் என்றும் காக்கும் தேவர்களின் தலைவன் {விஷ்ணு} அமர, தைத்தியரிடம் வீழ்ந்து, அச்சத்தால் பீடிக்கப்பட்ட தேவர்கள் அவனைக் கண்டனர்.(25-28)

இந்திரன் தலைமையில் தேவர்கள் அனைவரும், அவனைக் கண்டதும் வியந்து இரைந்தனர், பின் அனைவரும் நாடும் உறைவிடமான அந்தத் தலைவனின் புகலிடத்தை நாடி நின்றனர்.(29) அன்பு இறையோன் விஷ்ணுவானவன், இந்தப் பெருங்கூச்சல் கேட்டுக் கடும்பெரும் போரில் தானவரை அழிக்கத் திருவுளம் கொண்டனன்.(30) தூய வானில் நிலைத்திருந்தவன், தேவர் முதல்வன் விஷ்ணுவானவன், "மருத்துகளே, உமக்கு நலம் உண்டாகட்டும். சுகமாக இருப்பீராக. தானவர்களை இதோ நான் வீழ்த்திவிட்டேன். மூவுலகும் நீவிர் திரும்பப் பெறுவீர், அஞ்சாதீர்" என்று உறுதியளித்தான்.(31,32)

வாய்மைநிறைந்த ஹரியின் சொற்களால் வரவேற்கப்பட்ட தேவர்கள், பெருங்கடலில் அமுதம் பெற்ற இன்பம் போல் பேர் உவகை அடைந்தனர்.(33) இருள் அகன்றது, நாரைகள் அரற்றல் வெளியிட்டன. மங்கலக் காற்றுகள் வீசின, பத்துத் திக்குகள் தெளிவடைந்தன. ஒளிரும் விண்மீன்கள் நிலவை வலம் வந்தன, ஒளிக்கோள்கள் பிறவும் பரிதியைச் சுற்றத் தொடங்கின. கோள்கள் ஒன்றோடொன்று பகையாதிருந்தன, ஆறுகளனைத்தும் மகிழ்ச்சியில் திளைத்தன. தேவ வீதிகள் அழகு நிறைந்து வானில் தோன்றின.(34-36)

ஆறுகள் அமைதியாய் பாயத் தொடங்கின, பெருங்கடல் தோறும் கலங்காதிருந்தன. மனிதரின் உள்ளுறுப்புகள் நலமாய் இயங்கின.(37) பெருமுனிவர்கள் துயரம் களைந்து வேத மந்திரம் ஓதத் தொடங்கினர். போரில் பகைவர் அனைவரையும் கொல்வேனெனத் தலைவன் அளித்த உறுதி கேட்டதும்,ஊட்டமளிக்கும் இனிய பலிகளைத் தீயும் உண்ணத் தொடங்கினான். வேள்விகள் முறையாய் வேட்கப்பட்டன, மனிதரின் மனங்களும் திளைத்திருந்தன" என்றார் {வைசம்பாயனர்}.(38,39)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 42ல் உள்ள சுலோகங்கள் : 39
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அசமஞ்சன் அதிரதன் அந்தகன் அரிஷ்டன் அர்ஜுனன் அனு அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆஹுகன் இந்திரன் இளை உக்ரஸேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உல்பணன் ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குரோஷ்டு குவலாஷ்வன் கூனி சகடாசுரன் சததன்வன் சத்யகர்மன் சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சிவன் சூரன் சூரியன் சைசிராயணர் தக்ஷன் தசரதன் தன்வந்தரி தாரை திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பார்வதி பிரதீபன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மார்க்கண்டேயர் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வருணன் வஸு வஸுதேவன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு