(கிருஷ்ண வம்ச வர்ணனம் - கிருஷ்ண ஜன்ம அனுகீர்த்தனம்)
Vasudeva's Family | Harivamsa-Parva-Chapter-35 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : வசுதேவரின் மனைவிமாரும், அவர்களின் சந்ததியும்; திரிகர்த்தர்களின் புரோஹிதருக்கும், யாதவர்களின் புரோஹிதருக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கு; அதனால் பிறந்த காலயவனன்; காலயவனனுக்கு அஞ்சி மதுராவில் இருந்து துவாரகைக்குச் சென்ற யாதவர்கள்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வஸுதேவனின் மனைவியர் பதினான்கு பேரில் முதலாமவள் பூருகுலத்தைச் சேர்ந்த ரோஹிணியும், இரண்டாமவள் மதிரா {இந்திரா}, மூன்றாமவள் வைசாகி, நான்காமவள் பத்ரை, ஐந்தாமவள் ஸுனாமை {ஸுனாம்னி}, ஆறாமவள் ஸஹதேவி, ஏழாமவள் தேவகி, எட்டாமவள் சாந்திதேவி, ஒன்பதாமவள் ஸ்ரீதேவி, பத்தாமவள் தேவரக்ஷிதை, பதினொன்றாமவள் விருகதேவி, பனிரெண்டாமவள் உபதேவி, பதிமூன்றாமவள் ஸுதனு, பதினான்காமவள் படர்வை {படவை} ஆகியோராவர். இறுதியிருவரும் அவனது பெண் பணியாட்களாவர்[1].(1-3)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "ஸுதனு மற்றும் படவை ஆகிய இருவரும் அவனுடைய பரிசாரிகைகளாக {பணிப்பெண்களாக} இருப்பினும், தாஸிகளாக {அடிமைப்பெண்களாக} இல்லாமல், போகபத்னிகளாக {கூத்திகளாக} இருந்தபடியால், அவர்களும் பதிமூன்றாம் மற்றும் பதினான்காம் மனைவிகளாக அறியப்பட்டனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்த மூன்று ஸ்லோகங்களும் இல்லை.
பூரு குலத்தின் ரோஹிணி, பாஹ்லீகனின் மகளாவாள். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவளே ஆனகதுந்துபியின் {வஸுதேவனின்} பெரும் அன்புக்குரிய முதல் மனைவியாவாள்.(4) வஸுதேவன், ரோஹிணியிடம் தன் மூத்த மகன் ராமனையும் {பலராமனையும்}, ஸாரணன், சடன், துர்தமன், தமனன், சுவப்ரன், பிண்டாரகன், உசீநரன் ஆகிய மகன்களையும், சித்ரா என்ற பெயரில் ஒரு மகளையும் பெற்றான். ஓ! குருவின் வழித்தோன்றலே, இந்தச் சித்ராவே {சுபத்ரா}, ஸுபத்ரை என்ற பெயரில் அழைக்கப்பட்டாள்.(5-6)
வஸுதேவன், {தன் ஏழாம் மனைவியான} தேவகியிடம் பெருஞ்சிறப்புமிக்கச் சௌரியைப்[2] பெற்றான். ராமன் {பலராமன்} ரேவதியிடம், தன் அன்புக்குரிய மகனான நிசடனைப் பெற்றான். அர்ஜுனன், ஸுபத்ரையிடம் வலிமைமிக்கத் தேர்வீரனான அபிமன்யுவைப் பெற்றான். அக்ரூரன், காசி மன்னனின் மகளிடம் ஸத்யகேதுவைப் பெற்றான்[3].(7-8) இனி, வசுதேவன் தன் உன்னத மனைவியர் எழுவரிடம் பெற்ற மகன்களைக் குறித்துக் கேட்பாயாக.(9)
[2] "இது கிருஷ்ணனின் பெயர்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த வாக்கியம் இங்கே பொருத்தமற்றதாக இருக்கிறது" என்றிருக்கிறது.
போஜனும், வியயனும் {வஸுதேவனின் எட்டாம் மனைவியான} சாந்திதேவியின் மகன்களாவர்.
விருகதேவன் மற்றும் கதன் ஆகியோர் {வஸுதேவனின் ஐந்தாம் மனைவியான} ஸுனாமையின் மகன்களாவர்.(10)
{பத்தாம் மனைவியான} தேவரக்ஷிதை உபாஸங்கனைத் தன் மகனாக அடைந்தாள்.
திரிகர்த்த மன்னனின் மகள் {வஸுதேவனின் பதினோராம் மனைவியான} விருகதேவி உயரான்ம அகாவஹனைப் பெற்றாள். அவனுடைய {திரிகர்த்த மன்னனின்} புரோஹிதர் சைசிராயணர் (தமது மைத்துனரும், யாதவர்களின் புரோகிதருமான [கர்க்கரின் வழித்தோன்றலான] கார்க்கியரின்} ஆண்மையைச் சோதிக்க விரும்பினார்[4].(11,12)
விருகதேவன் மற்றும் கதன் ஆகியோர் {வஸுதேவனின் ஐந்தாம் மனைவியான} ஸுனாமையின் மகன்களாவர்.(10)
{பத்தாம் மனைவியான} தேவரக்ஷிதை உபாஸங்கனைத் தன் மகனாக அடைந்தாள்.
திரிகர்த்த மன்னனின் மகள் {வஸுதேவனின் பதினோராம் மனைவியான} விருகதேவி உயரான்ம அகாவஹனைப் பெற்றாள். அவனுடைய {திரிகர்த்த மன்னனின்} புரோஹிதர் சைசிராயணர் (தமது மைத்துனரும், யாதவர்களின் புரோகிதருமான [கர்க்கரின் வழித்தோன்றலான] கார்க்கியரின்} ஆண்மையைச் சோதிக்க விரும்பினார்[4].(11,12)
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "விருகதேவி, திரிகர்த்த மன்னனின் மகளாவாள். திரிகர்த்த மன்னனின் புரோகிதர் கார்க்கிய பிராமணக் குலத்தைச் சேர்ந்த சைசிராயணர் ஆவார். இந்தச் சைசிராயணரின் மைத்துனர், யாதவர்களின் புரோகிதரான கர்க்க பிராமணக் குலத்தைச் சேர்ந்த கர்க்கராவார். திரிகர்த்தர்களின் புரோகிதரான சைசிராயணர் ஒரு முறை தன் மைத்துனரான யாதவர்களின் புரோஹிதர் கர்க்கனின் ஆண்மையில் ஐயம் வளர்த்து, தன் கரத்தை கர்க்கரின் மறைவுப்பகுதியில் வைத்தார். இத்தகைய நடவடிக்கை யாதவர்களின் கர்க்க முனிவரிடம் எந்த நாட்டத்தையும் தூண்டாமல் அவர் தமது நோன்புகளில் உறுதியாக அதைச் சகித்துக் கொண்டார். அப்போது திரிகர்த்தர்களின் புரோகிதரான சைசிராயணர் விஷமமாக யாதவர்களின் கர்க்க முனிவரை ஓர் அலியென அழைத்தார். பின்னர் இது யாதவர்களின் சபையில் பரப்பட்டபோது, யாதவர்கள் அனைவரும் அவரை மறைமுகமாகக் குறிப்பிட்டு உரக்க நகைத்ததனால் அந்த முனிவர் பெரும் கோபம் கொண்டார்" என்றிருக்கிறது.
கார்க்கியர் தம்மீது சுமத்தப்படும் போலிக்குற்றச்சாட்டின் பேரில் கோபத்தில் நிறைந்து பனிரெண்டு ஆண்டுக் காலம் கருப்பு இரும்பைப் போல இருந்தார்[5].(13) அதன் பிறகு அவர் {கார்க்கியர்} ஒரு மாட்டிடையரின் மகளுடன் வாழ்ந்தார். கோபாலி என்ற பெயரைக் கொண்ட ஒரு தேவகன்னிகை இந்தத் தோற்றத்தில் அவரிடம் வந்தாள்.(14) சூலபாணியின்[6] ஆணையின் பேரில் கார்க்கியர், மனித வடிவில் உள்ள தமது மனைவியை, தடுக்கப்பட முடியாததும், ஒருபோதும் இறவாததுமான கருவைக் கொண்டு கருவுறச் செய்தார்.(15)
[5] "இது சொற்களை இழந்த வாக்கியம் போலத் தெரிகிறது. சைசிராயணர் தன் மைத்துனரான கார்க்கியரைச் சோதித்து, அவர் தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர் என்பதைக் கண்டறிந்தார் என்பது இங்கே கருத்து. எனினும் அவர் அந்த உண்மையைத் தவறாகக் கற்பிதம் செய்து கொண்டு அவருக்கு ஆண்மை இல்லை என்று நினைத்தார். இது கார்க்கியரின் கோபத்தைத் தூண்டி, அஃது அடங்குவதற்குப் பனிரெண்டு ஆண்டுகள் ஆனது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "கர்க்க முனிவர் முகஞ்சுழித்தாலும், அங்கேயே தன் கோபத்தை வெளிக்காட்ட முடியாமல், கருநீலமாக மாறி, அச்சுறுத்தும் வகையில் வானம் போலக் கருப்பாகத் தெரிந்து அந்த ஆண்மையின்மைக் குற்றச்சாட்டின் மூலம் புகழடைந்தார். அவர் இந்தக் கோபத்தில் இருந்து விடுபடப் பனிரெண்டு ஆண்டுகளாகின. பின்னர் ஆண்மையின்மை என்ற பழியில் இருந்து விடுபடுவதற்காக அவர் ஒரு பாற்காரியுடன் பழகினார்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "மற்றொரு வகையில் படித்தால், ’அவர் சிவனின் அருளுக்காகத் தவம் செய்த அந்தக் காலத்தில் கரும்பழுப்பு துருவை உண்டார்’ என்றும் கொள்ளலாம்" என்றிருக்கிறது.
[6] "இது சிவனின் பெயர். சூலத்தைக் கையில் தரித்தவன் என்பது இதன் பொருள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
அவள் {கோபாலி என்ற அப்ரசஸ்}, காலயவனன் என்ற பெயரில் பெரும் சக்திமிக்க மன்னனைப் பெற்றாள். காளைகளைப் போன்ற தலைகளைக் கொண்ட குதிரைகள் அவனைப் போர்க்களத்திற்குக் கொண்டு சென்றன[7].(16) ஓ! மன்னா, அந்தக் குழந்தை {காலயவனன்}, குழந்தைப்பேறற்றவனான யவன மன்னனின் நகரத்தில் வளர்ந்து வந்தான்[8]. அதன்படியே அவன் காலயவனன் என்று பெயரிடப்பட்டான்.(17) போர் புகும் விருப்பத்தை வளர்த்துவந்த அந்த மன்னன் {காலயவனன்}, {அரியணையை அடைந்ததும்} இது குறித்து இருபிறப்பாளர்களிடம் கேட்டான். அனைத்துமறிந்த நாரதர், விருஷ்ணி மற்றும் அந்தகக் குலங்களைச் சார்ந்தோரிடம் போரிடுமாறு அவனைக் கேட்டுக் கொண்டார்.(18)
[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "முன்பாதி காளைகளைப் போன்றும், பின்பாதி குதிரைகளைப் போன்றும் இருந்த குதிரைகளைப் போர்க்களத்தில் காலயவனன் செலுத்தினான்" என்றிருக்கிறது. மேலும் அதன் அடிக்குறிப்பில், "காலயவனன் என்பதற்கு ’வெளிநாட்டைச் சேர்ந்த கருப்பன்’ என்று பொதுவாகப் பொருள் சொல்லப்படுகிறது. ஆனால் காலயவனன் என்பதைக் காலஜவனன் என்று எடுத்துக் கொண்டால் ’காலத்தின் வேகம் கொண்ட போர்வீரன்’ என்று பொருள்தரும்" என்றிருக்கிறது.
[8] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "அந்த அப்சரஸ் அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்ததும் மறைந்தாள். கார்க்கியர் அந்தக் குழந்தையை யவனர்களின் மன்னனிடம் ஒப்படைத்தார். யவனர்கள் என்போர் கிரேக்கர்கள் அல்லது ஐயோனியர்கள் {கிரேக்கப் பேரினங்கள் நான்கில் ஓரினத்தைச் சேர்ந்தோர்} ஆவர்" என்றிருக்கிறது.
அதன்பேரில், ஓரக்ஷௌஹிணி படைவீரர்களுடன்[9] மதுராவுக்குப் புறப்பட்ட காலயவனன், விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் வீட்டுக்குத் தன் தூதனை அனுப்பினான்.(19) அப்போது, விருஷ்ணிகளும், அந்தகர்களும், காலயவனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக நுண்ணறிவுமிக்கக் கிருஷ்ணனைத் தங்கள் தலைவனாகக் கொண்டு ஆலோசித்தனர்.(20) பிறகு, பினாகிக்கு {பினாகபாணிக்கு}[10] மதிப்பளித்த அவர்கள், அழகான தங்கள் மதுரா நகரத்தில் இருந்து தப்பிச் செல்லும் தீர்மானத்தை அடைந்து, குசஸ்தலையின் துவாரகையில்[11] குடியேறும் எண்ணத்தை அடைந்தனர். கிருஷ்ணனின் பிறப்புக் கதையைத் தூய்மையுடனும், தற்கட்டுப்பாட்டுடனும் கேட்கும் ஒருவன் கல்விமானாகவும், மகிழ்ச்சியுடையவனாகவும், கடன்களில் இருந்து விடுபட்டவனாகவும் ஆகிறான்" என்றார் {வைசம்பாயனர்}.(21,22)
[9] ஓர் அக்ஷௌஹிணி என்பது "1,09,350 காலாட்படை வீரர்கள், 65,610 குதிரைகள், 21,870 தேர்கள், 31,870 குதிரைகளைக் கொண்ட ஒரு முழுமையான படை" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். மஹாபாரதம், ஆதிபர்வம் 2:23-27ல் ஓர் அக்ஷௌஹிணிக்கு இதே எண்ணிக்கைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
[10] "இது சிவனின் பெயராகும். பினாகம் அல்லது திரிசூலத்தைப் பிடித்தவன் என்ற பொருளைத் தரும்" என்று மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். பினாகம் என்பது சிவனின் வில்லாகும்.
[11] "கன்யாகுப்ஜம் அல்லது கன்னோஜ் நாட்டில் துவாரகை அமைந்துள்ளது" என்று மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். உண்மையில் கன்யாகுப்ஜம் உத்திரப்ரதேசத்தில் அமைந்திருக்கிறது. துவாரகைக்கும் இதற்கும் தொடர்பே இல்லை. மேலதிக தகவல்களுக்கு கன்யாகுப்ஜம் மற்றும் கன்னோசி குறித்த விக்கிப்பீடியா பக்கத்தைப் பார்க்கவும்.
ஹரிவம்ச பர்வம் பகுதி – 35ல் உள்ள சுலோகங்கள் : 22
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |