(மநோதாரணவிசாரம்)
The creation of Gandharvas etc | Bhavishya-Parva-Chapter-18 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : அப்சரஸ்கள், கந்தர்வர்கள் ஆகியோரும், சரஸ்வதி தேவியும் மற்றும் பல உயிரினங்களும் படைக்கப்பட்டது; மெய் அறிவியல்களான பிரம்ம யோகம், சாங்கிய யோகம்...
வைசம்பாயனர் {ஜனமேயஜனிடம்}, "பெரும்பாட்டன் {பிரம்மன்}, தூய புத்தியின் வடிவை ஏற்றுத் தன் மனத்திறன்களின் மூலம் மொத்த படைப்பையும் கருதிப்பார்த்து, புறப் பொருட்கள் அனைத்தில் இருந்தும் தன் உள் ஆன்மாவை விலக்கி பிரம்மத்தை அடைவதற்கான செயல்களில் ஈடுபடுகிறான். மனக்குவிப்பில் ஈடுபட்டும், பிரம்மத்துடன் ஐக்கியமடைந்தும் அவன் தன் மனத்தால் சந்ததியைப் படைத்தான்.{1,2} எல்லாம் வல்லவனான பிரம்மன் தன் கண்களின் மூலம் அழகிய அப்சரஸ்களையும், தன் மூக்கின் நுனியில் இருந்து தும்புருவையும், பலவண்ண ஆடைகளை உடுத்தியவர்களும், வேதங்களை ஓதுவதிலும், பாடுவதிலும், ஆடுவதிலும், இசைக்கருவிகளை இசைப்பதிலும் திறன் படைத்தவர்களும், நூற்றுக்கணக்கானவர்களும், ஆயிரக்கணக்கானவர்களுமான கந்தர்வர்கள் பிறரையும் படைத்தான்.{3,4}
