(விஷ்ணும் ப்ரதி ப்ரஹ்ம வாக்யம்)
Vishnu's reply | Harivamsha-Parva-Chapter-55 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : நாரதரிடம் பேசிய விஷ்ணு; சாபத்தின் காரணமாக கசியப முனிவர் வஸுதேவனாகப் பிறந்திருப்பதை விஷ்ணுவுக்குச் சொன்ன பிரம்மன்; வஸுதேவனின் மகனாகப் பிறக்கத் தீர்மானித்த விஷ்ணு...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தேவர்களை ஆள்பவனும், தலைவனுமான மதுசூதனன், நாரதரின் சொற்களைக் கேட்டுப் புன்னகைத்தவாறே {பின்வரும்} மங்கலச் சொற்களில்,(1) "ஓ! நாரதா, மூவுலகங்களின் நன்மைக்காக நீ என்னிடம் சொன்ன சொற்கள் அனைத்திற்கும் உரிய மறுமொழியைக் கேட்பாயாக.(2) இந்தத் தானவர்கள் அனைவரும் மனித வடிவங்களை ஏற்றுப் பூமியில் பிறந்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.(3) கம்ஸனும், பூமியில் உக்ரசேனன் மகனாகப் பிறந்திருக்கிறான் என்பதை அறிவேன். கேசி ஒரு குதிரையாகப் பிறந்திருக்கிறான் என்பதையும் அறிவேன்.(4) குவலயப்பீடன் என்ற யானையையும், சாணூரன் மற்றும் முஷ்டிகன் என்ற மற்போர்வீரர்களையும், காளையின் வடிவில் இருக்கும் தைத்தியன் அரிஷ்டனையும் நான் அறிவேன்.(5) கரனையும், பேரசுரன் பிரலம்பனையும் நான் அறிவேன். பலியின் மகளான பூதனையையும் நான் அறிவேன்.(6) வினதையின் மகனிடம் {கருடனிடம்}[1] கொண்ட அச்சத்தால் யமுனையில் புகுந்து அங்கே வாழும் காளியனை நான் அறிவேன்.(7)
[1] "பாம்புகளை உண்பவனான கருடன்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
மன்னர்கள் அனைவரின் தலைவனான ஜராசந்தன், பிராக்ஜ்யோதிஷ நகரத்தில் வாழும் நரகாசுரனையும் நான் நன்கறிவேன்.(8) பூமியில் சோணிதபுரம் என்ற நகரத்தில் பாணன் ஒரு மனிதனாகப் பிறந்திருக்கிறான். ஆயிரம் கரங்களைக் கொண்டவனும், ஆற்றல்மிகுந்தவனும், செருக்கு நிறைந்தவனுமான அந்த அசுரன் தேவர்களாலும் வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறான். பாரதவர்ஷத்தின் பெரும்பொறுப்பு என்னைச் சார்ந்தது என்பதையும் நான் அறிவேன்.(9,10) இந்த மன்னர்கள் அனைவரும் எவ்வாறு காணாமல் போவர்கள் என்பதையும் நான் அறிவேன். மனித வடிவில் இருப்பவர்களும், போர்க்களத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவர்களுமான அந்தத் தானவர்களின் அழிவையும், சக்ரலோகத்தின் மகிழ்ச்சியையும் நான் காண்கிறேன்.(11) நான் எனக்காகவும், பிறருக்காகவும் யோகத்தில் நுழையப் போகிறேன். நான், மனிதர்களில் உலகிற்குச் சென்று, மனித வடிவை ஏற்று, கம்ஸனின் தலைமையில உள்ள அந்த வலிமைமிக்க அசுரர்கள் அனைவருக்கும் அழிவைக் கொண்டு வருவேன். எந்த வழிமுறையின் மூலம் அவன் {கம்ஸன்} அமைதியை அடைவானோ அவ்வழிமுறையிலேயே நான் அவனைக் கொல்வேன்.(12,13) என் யோகத்தின் மூலம் நான் இந்த வழிமுறைகள் அனைத்தையும் வகுப்பேன். தேவர்களின் எதிரிகள் அனைவரையும் போரில் அழிப்பதே என் தற்போதைய கடமையாகும்.(14) பூமியின் சார்பாகவும், என் ஆணையின் பேரில் பூமிக்கு இறங்கி வந்த தேவர்கள், ரிஷிகள் மற்றும் கந்தர்வர்கள் அனைவரின் சார்பாகவும் தங்களைத் தியாகம் செய்த பெருமைமிக்கவர்கள் அனைவரின் பகைவரையும் நான் கொல்வேன்.(15) ஓ! நாரதா, நான் ஏற்கனவே இதைத் தீர்மானித்துவிட்டேன். பெரும்பாட்டன் பிரம்மன் அங்கே எனக்கு ஒரு வீட்டை அமைக்கட்டும்.(16) ஓ! பெரும்பாட்டனே, நான் எந்த நாட்டில் பிறந்து, எந்த வீட்டில் வாழ்ந்து அவர்களைக் கொல்ல வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக" என்றான் {நாராயணன்}.(17)
பிரம்மன், "ஓ! தலைவா, ஓ! நாராயணா, வெற்றிக்கான திறவுகோலையும், பூமியில் உன் பெற்றோராகப் போவது யார் என்பதையும் என்னிடம் கேட்பாயாக.(18) உன் குடும்பத்திற்கு மகிமையேற்படுத்தும் வகையில் நீ யாதவர்களின் குலத்தில் பிறக்கப் போகிறாய்.(19) நன்மைக்காக இந்த அசுரர்களை ஒழித்தும், உன் பெருங்குடும்பத்தைப் பெருக்கியும் நீ மனித குல வகைகளை {வர்ணங்களை} நிறுவுவாய். இது குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக.(20)
ஓ! நாராயணா, பழங்காலத்தில் உயரான்ம வருணன் பெரும் வேள்வியை நடத்திக் கொண்டிருந்தபோது, அந்த வேள்விக்குப் பால்தரும் பசுக்கள் அனைத்தையும் கசியபர் அபகரித்தார்.(21) கசியபர், அதிதி மற்றும் ஸுரபி என்ற இரு மனைவிகளைக் கொண்டிருந்தார். அவர்கள் வருணனிடம் இருந்து பசுக்களை ஏற்க விரும்பவில்லை[2].(22) அதன்பிறகு என்னிடம் வந்து தலைவணங்கிய வருணன், "ஓ! மதிப்புமிக்கவரே, ஆசான் என் பசுக்கள் அனைத்தையும் அபகரித்துச் சென்றார்.(23) ஓ! ஐயா, அவரது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்ட பின்னரும் அவர் அந்தப் பசுக்களைத் திருப்பித் தரவில்லை. அவர் தமது மனைவியரான அதிதி மற்றும் ஸுரபியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்.(24) ஓ! தலைவா, என்னுடைய பசுக்களான அவை அனைத்தும் தெய்வீகமான, நித்தியமான பாலை விரும்பும்போதெல்லாம் தரக்கூடியவையாகும். அவை, தங்கள் சக்தியாலேயே தங்களைப் பாதுகாத்துக் கொண்டு கடல்களில் திரிந்து வருபவையாகும்.(25) தேவர்களின் அமுதத்தைப் போல அவை இடையறாமல் பால் தரக்கூடியவை ஆகும். கசியபரைத் தவிர அவற்றைக் கவர்ந்து செல்ல வேறு எவராலும் இயலாது.(26) ஓ! பிரம்மா, தேர்ந்தவராக இருந்தாலும், ஆசானாக இருந்தாலும், யாராக இருந்தாலும் ஒருவர் வழிதவறினால் அவரைக் கட்டுப்படுத்த வேண்டியவர் நீரே. எங்கள் உயர்ந்த புகலிடமாக இருப்பவர் நீரே.(27) ஓ! உலகின் ஆசானே, தங்களுக்குரிய வேலையைச் செய்யாத சக்திவாய்ந்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்படாவிட்டால் உலகில் ஒழுங்கு நீடிக்காது.(28) நீர் எல்லாமறிந்தவரும், அனைத்தின் தலைவருமாவீர். என் பசுக்களை என்னிடம் தந்தால் நான் பெருங்கடலுக்குச் செல்வேன்.(29) இந்தப் பசுக்களே என் ஆன்மாவாகவும், எனக்கு எல்லையற்ற பலத்தைத் தருபவையாகவும் இருக்கின்றன. உமது படைப்புகள் அனைத்திலும் பசுக்களும், பிராமணர்களும் சக்தியின் நித்திய பிறப்பிடங்களாவர்.(30) பசுக்களே அனைத்திலும் முதன்மையாகக் காக்கப்பட வேண்டியவை. அவை பாதுகாக்கப்படும்போது, அவை பிராமணர்களைப் பாதுகாக்கின்றன. பசுக்களையும், பிராமணர்களையும் பாதுகாப்பதன் மூலம் உலகம் ஆதரிக்கப்படுகிறது" என்றான் {வருணன்}.(31)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "பழங்காலத்தில் மழையின் தேவனான உயரான்ம வருணன் ஒரு வேதச் சடங்கைச் செய்து கொண்டிருந்தபோது, அந்த வேள்விக்குப் பால்தருபவையும், வருணனுடையவையுமான கறவைப்பசுக்கள் அனைத்தையும் கசியபர் கைப்பற்றினார். கசியபரின் மனைவியரான அதிதி மற்றும் சுரபி ஆகிய இருவரும், பசுக்களைத் திருப்பித் தருமாறு வருணன் அவர்களிடம் பலமுறை வேண்டிக் கேட்டாலும் அவனுக்கு அவற்றைத் திருப்பித்தர மறுத்தனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பழங்காலத்தில் உயரான்ம வருணன் ஒரு வேள்வியைச் செய்தான். எனினும் கசியபர் அந்த பெரும் வேள்விக்குப் பால் தரும் பசுக்களை அபகரித்தார். அதிதி மற்றும் சுரபி ஆகிய இருவரும் கசியபரின் மனைவியராக இருந்தனர். வருணன் அவர்களை வேண்டிக் கொண்டும் அவர்கள் பசுக்களைத் திருப்பித் தரவில்லை"" என்றிருக்கிறது.
ஓ! அச்யுதா, நீரின் மன்னனான வருணனால் இவ்வாறு சொல்லப்பட்டும், பசுக்கள் களவாடப்பட்டது உண்மையென்பதை அறிந்தும் நான் கசியபனை சபித்தேன்.(32) பசுவைக் களவு செய்த உயரான்ம கசியபனின் அந்தக் கூறுடன் {அம்சத்துடன்} அவன் பூமியில் ஒரு கோபாலனாக {இடையனாகப்} பிறப்பான்.(33) தேவர்கள் பிறப்பதற்கான மரத்துண்டுகளைப் போன்றவர்களும், அவனது மனைவியருமான ஸுரபி மற்றும் அதிதி ஆகிய இருவரும் அவனுடனேயே செல்ல வேண்டும்.(34) அவர்களுடன் கோபாலனாகப் பிறந்து அங்கே மகிழ்ச்சியாக வாழ்வான். கசியபனைப் போன்றே சக்திமிக்க அவனது கூறானவன் {அம்சமானவன்}, வஸுதேவன் என்ற பெயரைப் பெற்று, பூமியில் பசுக்களுக்கு மத்தியில் வாழ்வான். மதுராவுக்கு அருகில் கோவர்த்தனம் என்ற பெயரில் ஒரு மலை இருக்கிறது.(35,36) கம்ஸனுக்குக் கப்பம் கட்டி வாழும் அவன் {கசியபன் / வசுதேவன்}, பசுக்களிடம் பற்று கொண்டவனாக இருப்பான். அவனது மனைவியரான அதிதி மற்றும் ஸுரபி ஆகிய இருவரும் தேவகி மற்றும் ரோஹிணி என்ற பெயரில் வசுதேவனின் இரு மனைவிகளாகப் பிறப்பார்கள்.(37,38) அவன் ஒரு கோபாலனின் குணங்கள் அனைத்தையும் கொண்ட ஒரு சிறுவனாகப் பிறந்து, முன்பு மூன்று காலடிகளைக் கொண்ட உன் வடிவில் நீ வளர்ந்ததைப் போலவே வளர்வான்.(39) ஓ! மதுசூதனா, உலகின் நன்மைக்காக (யோக) வடிவில் உன்னை மறைத்துக் கொண்டு நீ அங்கே செல்வாயாக.(40) உன் வெற்றி மற்றும் ஆசிகளுக்கான வியப்பொலிகளுடன் கூடிய தேவர்கள் அனைவரும் உன்னை வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர்.(41) நீ பூமிக்கு இறங்கி, ரோஹிணி மற்றும் தேவகி ஆகியோருக்கு பிறந்து அவர்களை நிறைவடையச் செய்வாயாக. ஆயிரக்கணக்கான கோபகன்னிகைகளும் {கோபியரும்} பூமியை மறைத்திருப்பார்கள்.(42) ஓ! விஷ்ணு, நீ காட்டில் பசுக்களை மேய்த்துத் திரிந்து வரும்போது, அவர்கள் காட்டு மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் உன் அழகிய வடிவைக் காண்பார்கள்.(43) ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, ஓ! பெருந்தோள்களைக் கொண்ட நாராயணா, கோபாலர்களின் கிராமங்களில் நீ சிறுவனாகச் செல்லும்போது மக்கள் அனைவரும் சிறுவர்களாவார்கள் {சிறுவர்களைப் போலாகிவிடுவார்கள்}.(44) ஓ! தாமரைக் கண்களைக் கொண்டவனே, காட்டில் பசுக்களை மேய்த்து, மேய்ச்சல் நிலங்களில் ஓடி, யமுனையின் நீரில் நீராடும் அவர்கள் உன்னிடம் பெரும்பற்றும் ஆர்வமும் கொண்ட கோபாலர்கள் அனைவரும் தங்கள் மனங்களை உனக்கே அர்ப்பணித்து, உனக்கு உதவி செய்வார்கள். வஸுதேவனின் வாழ்வு அருளப்பட்டதாக இருக்கும்.(45,46) நீ அவனைத் தந்தை என்றும், அவன் உன்னை மகன் என்றும் அழைப்பீர்கள். கசியபனைத் தவிர வேறு எவனை உன்னால் தந்தையாக ஏற்க முடியும்?(47) ஓ! விஷ்ணு, அதிதியைத் தவிர வேறு எவளால் உன்னைக் கருவில் கொள்ள முடியும்? எனவே, ஓ! மதுசூதனா, தன்வயமான யோகத்துடன் நீ வெற்றியை நோக்கிச் செல்வாயாக. நாங்கள் எங்களுக்குரிய வசிப்பிடங்களுக்குச் செல்லப் போகிறோம்" என்றான் {பிரம்மன்}".(48)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தலைவன் விஷ்ணு, தேவர்களைத் தேவலோகத்திற்குச் செல்ல ஆணையிட்டுவிட்டுப் பாற்கடலின் வடக்குப் பகுதியில் உள்ள தன் வசிப்பிடத்திற்குச் சென்றான்.(49) இந்தப் பகுதியில், மேரு மலையில், நடந்து செல்வதற்கு மிகக் கடினமானதும், சூரிய கணநிலை நேரத்தில் அவனது மூன்று காலடிகளைக் கொண்டு வழிபடப்படுவதுமான ஒரு குகை {பார்வதி குகை} இருக்கிறது.(50) எல்லாம்வல்லவனும், நுண்ணறிவுமிக்கவனுமான ஹரி, அந்தக் குகையில் தன் பழைய உடலை விட்டுவிட்டு, தன் ஆன்மாவை வசுதேவனின் இல்லத்திற்கு அனுப்பினான்" என்றார் {வைசம்பாயனர்}[3][4].(51)
[3] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில், "தேவர்களைத் தங்கள் தெய்வீக உலகங்களுக்குச் செல்ல அனுமதித்த விஷ்ணு, மேரு மலை குறுக்கிடும் தன் வசிப்பிடமான பாற்கடலின் வடக்குப் பகுதிக்குச் சென்றான். இந்த வடக்குப் பகுதியில் இருக்கும் அந்த மலையில் ஆழமானதும், ஊடுருவ முடியாததுமான பார்வதி குகை இருக்கிறது. அங்கே மூன்று காலடிகளில் நடந்தவனும் குள்ளச் சிறுவனுமான வாமனனாக இருந்த விஷ்ணுவின் காலடித்தடங்கள் இருக்கின்றன, அந்தக் காலடித்தடங்கள் மங்கல நாட்களின் போது வழிபடப்படுகின்றன. அப்போது அந்த விஷ்ணு, தன் இன்றியமையாத வடிவத்தை அந்தக் குகையில் எவ்வாறு வைக்கலாம் என்பதையும், மனிதகுலத்தில் தன் எதிர்காலத் தந்தையான வசுதேவனின் இல்லத்தில் எவ்வாறு தான் இணைய வேண்டும் என்பதையும் சிந்தித்தான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "விஷ்ணு, தேவர்களைச் சொர்க்கத்திற்குச் செல்ல அனுமதித்தான். அவன் க்ஷீரோதக் கடலின் {பாற்கடலின்} வடக்கில் இருக்கும் தன் உலகத்திற்குச் சென்றான். அங்கே மேரு மலையில் ஊடுருவிச் செல்ல மிகக் கடினமானதும், பார்வதி என்ற பெயரைக் கொண்டதுமான ஒரு குகை இருக்கிறது. மூன்று காலடிகளைக் கொண்டவனின் காலடித் தடங்கள் அங்கே இருக்கின்றன, மங்கலத் தருணங்களில் அவை எப்போதும் வழிபடப்படுகின்றன. அந்தப் புராதன இடத்தில் ஹரி தன் உடலை ஓய்வில் கிடத்தினான். அந்தத் தலைவன், தான் வஸுதேவனின் இல்லத்தில் பிறக்கும் வகையில் தன் ஆத்மாவை யோகத்தில் பூட்டினான்" என்றிருக்கிறது.
[4] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் ஹரிவம்சத்தின் முதல் பர்வமான ஹரிவம்ச பர்வம் நிறைவடைகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் முதல்பர்வம் நிறைவடையும் குறிப்புக் கொடுக்கப்படாமல், அடுத்தடுத்த அத்யாயங்களுக்கு அடுத்தடுத்த அத்யாய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஹரிவம்ச பர்வம் பகுதி – 55ல் உள்ள சுலோகங்கள் : 51
***ஹரிவம்சத்தின் முதல் பர்வமான ஹரிவம்ச பர்வம் முற்றும்***
***அடுத்தது இரண்டாம் பர்வமான விஷ்ணு பர்வம்***
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |