(விஷ்ணும் ப்ரதி தேவருஷே நாரத வாக்யம்)
The birth of the daityas | Harivamsha-Parva-Chapter-54 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : நாராயணனைச் சந்தித்த நாரதர்; லவணனுக்கும் சத்ருக்கனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; மதுரா நகரத்தை நிறுவிய சத்ருக்னன்; பூமியில் பிறந்திருக்கும் அசுரர்கள் செய்யும் கொடுமைகளைச் சொன்னது; நாராயணன் அவதரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட நாரதர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "நாராயணன் வெற்றியடைந்ததும், பூமியில் தன் நிலையாகப் பூமியில் இருக்கும் ஒரு வீட்டுக்குச் சென்ற பிறகு, தேவர்கள் தங்கள் கூறுகளை {அம்சங்களை} பாரதக் குலத்தில் பிறக்க {அவதரிக்கச்} செய்த பிறகு, தர்மன், இந்திரன், பவனன், தெய்வீக மருத்துவர்களாக அஸ்வினி இரட்டையர், சூரியன் ஆகியோரின் கூறுகள் பூமியில் இறங்கிய பிறகு, தேவர்களின் புரோஹிதர் {பிருஹஸ்பதி} தன் கூறொன்றில் பூமியில் இறங்கிய பிறகு, வஸுக்களின் எட்டாவது கூறும் {பீஷ்மரும்} பூமியில் இறங்கிய பிறகு, காலன் மற்றும் கலியின் கூறுகள் பூமிக்கு வந்த பிறகு, சுக்ரன், வருணன், சங்கரன், மித்ரன், குபேரன், கந்தர்வர்கள், உரகர்கள், யக்ஷர்கள் ஆகியோரின் கூறுகள் பூமியில் இறங்கிய பிறகு, நாரதர் நாராயண சக்தியில் ஒரு கூறாக வெளியே வந்தார்[1].(1-6) நெருப்பைப் போன்று பிரகாசமாக இருந்த அவர், உதயச் சூரியனைப் போன்ற கண்களையும், பெரியதும், பரந்ததுமான ஜடமுடியையும் கொண்டிருந்தார். அவர் சந்திரக் கதிர்களைப் போன்ற வெள்ளை உடையை உடுத்திக் கொண்டு, பொன்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவராக இருந்தார்.(7) அவர், அறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் பெண்தோழியைப் போல இருந்த {மஹதி என்ற பெயரைக் கொண்ட} ஒரு வீணையைச்[2] சுமந்து கொண்டு, தன் உடலில் போர்த்திய மான்தோலுடனும், பொன்னாலான புனித நூலுடனும் {முப்புரிநூலுடனும்} இருந்தார். தன் கரங்களில் தண்டம் மற்றும் கமண்டலுவுடன்[3] அவர் இரண்டாவது சக்ரனை {இந்திரனைப்} போல இருந்தார்.(8)
[1] "தர்மனின் கூறு {அம்சம்} யுதிஷ்டிரன், சக்ரனின் கூறு அர்ஜுனன், பவனனின் கூறு பீமசேனன். அசுவினி இரட்டையர்கள் நகுலன் மற்றும் சகாதேவனாகப் பிறந்தனர். சூரியன் கர்ணனாகவும், தேவர்களின் புரோகிதரான பிருஹஸ்பதி துரோணராகவும், எட்டாவது வஸு, பீஷ்மராகவும், காலன் விதுரனாகவும், கலி துரியோதனனாகவும் பிறந்தனர். சோமன் அபிமன்யுவாகவும், சுக்ரன் பூரிஸ்ரவஸ் ஆகவும், வருணன் சுருதாயுவாகவும், சங்கரன் அஸ்வத்தாமனாகவும், மித்ரன் கணிகராகவும், குபேரன் திருதராஷ்டிரனாகவும், கந்தர்வர்கள் மற்றும் பிறர் உக்ரசேனன், துச்சாசனன் மற்றும் பிறராகவும் பிறவி எடுத்தனர் {அவதரித்தனர்}" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். தேசிராஜுஹனுமந்த ராவின் பதிப்பில், இந்த 1 முதல் 6ம் ஸ்லோகம் வரை, "பூமி அன்னை பிரம்மனிடம் உறுதிமொழியைப் பெற்றுக் கொண்டு திரும்பிய போது, பாரத வம்சத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தேவர்கள் பூமியில் அவதரித்தனர்" எனத் தொடங்கி, "இவ்வாறு தேவர்கள் பூமியில் அவதரித்த போது, அவர்களை வானத்தில் இருந்து தேவ முனியான நாரதர் கண்டு, பூமியில் அவர்களுக்கு மத்தியில் விஷ்ணு இல்லாததை உணர்ந்தார்" என்று முடிகிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இவ்வாறே இருக்கிறது.
[2] "இது நரம்புகளைக் கொண்ட இசைக்கருவி" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[3] "இது நீரெடுத்துச் செல்ல பயன்படும் ஒரு பாத்திரம்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
எப்போதும் சச்சரவுகளை வளர்க்கும் அந்தப் பெரும் முனிவர், கல்விமானாகவும், கந்தர்வ வேதத்தை[4] நன்கறிந்தவராகவும், இந்தப் பூமியில் ஏற்படும் பிளவுகளுக்கான ரகசிய காரணங்களைப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டராகவும் இருந்தார். தம் விருப்பத்தின் பேரில் பகைவர்களை உண்டாக்கும் வழக்கம் கொண்ட அந்தப் பிராமணர் {நாரதர்}, இரண்டாவது கலியைப் போன்றிருந்தார். அந்தப் பெரும் முனிவர் தேவர்கள் மற்றும் கந்தர்வர்களின் நிலத்தில் முதன்மைப் பேச்சாளராகவும், நான்கு வேதங்களை ஓதுபவராகவும், முதல் ரிக்கை உரைப்பவராகவும் இருந்தார்.(9-11) இறப்பிலியும், எப்போதும் பிரம்மலோகத்தில் திரிபவருமான அந்த நாரத முனிவர், {பிரம்மலோகத்தில்} தேவர்களின் கூட்டத்திற்கு மத்தியில்(12) சோர்வடைந்த இதயத்துடன் விஷ்ணுவிடம் பேசினார். {அவர்}, "ஓ! நாராயணா, மன்னர்களின் அழிவுக்காக ஏற்பட்ட தேவர்களின் பிறவிகள் {அவதாரங்கள்} பயனற்றவையாகின.(13) ஓ! தேவலோகத்தின் தலைவா, நீ இங்கிருக்கும்போது, மன்னர்களுக்குள் உண்டாகும் இந்தப் பிளவு எந்தப் பயனையும் விளைவிக்காது. நாராயணனின் யோகமில்லாமல் அவர்களின் பணி நிறைவடையாது என்றே நான் நினைக்கிறேன்.(14) ஓ! தேவர்களின் தேவா, நீ ஞானியும், பொருட்களின் உண்மையான சாரங்களை அறிந்தவனும் ஆவாய். பூமிக்காக இத்தகைய பணியை ஏற்படுத்துவது உனக்குச் சரியானதல்ல.(15) விழிகளின் பார்வையும், பலமிக்கவையின் தலைவனும் நீயே. யோகியரில் முதன்மையானவனும், அனைத்தின் புகலிடமும் நீயே.(16) பூமியில் தேவர்களின் பிறப்பைக் கண்டும், சுமையில் இருந்து பூமியை விடுவிப்பதற்காக உன் சக்திக்கூறை {அம்சத்தை} ஏன் நீ முதலில் அனுப்பவில்லை?(17) தேவர்கள் அனைவரும், உன்னைத் தங்கள் உதவியாகக் கொண்டும், உன்னால் வழிநடத்தப்பட்டு, உன்னோடு அடையாளங்காணப்பட்டும் இந்தப் பூமியல் ஒரு செயல்பாட்டில் இருந்து மற்றொன்றுக்கு நீந்திச் செல்வார்கள்.(18) ஓ! விஷ்ணு, எனவேதான் உன்னை அனுப்பி வைப்பதற்காக நான் இந்தத் தேவர்களின் கூட்டத்திற்கு விரைந்து வந்தேன்; அதற்கான காரணத்தைக் கேட்பாயாக.(19) ஓ! நாராயணா, தாரகனை வேராகக் கொண்ட போரில் உன்னால் கொல்லப்பட்டுப் பூமியின் பரப்பிற்குச் சென்ற தைத்தியர்கள் பலரின் இயக்கங்களைக் கேட்பாயாக.(20)
[4] "இஃது இசைக்கலையாகும். இது கந்தர்வர்களுக்கான சிறப்புக் கொடையாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
பூமியின் பரப்பில் மதுரா என்ற பெயரில் ஓர் எழில்மிகு நகரம் இருக்கிறது. யமுனைக் கரையில் அமைந்திருக்கும் அதனில் செழிப்புமிக்கக் கிராமங்கள் பல நிறைந்திருக்கின்றன. அங்கே போரில் தடுக்கப்பட முடியாதவனும், மது என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு பெரும் தானவன் இருந்தான். அவன் பெரும் சக்திவாய்ந்தவனாகவும் உயிரினங்கள் அனைத்தையும் அச்சுறுத்துபவனாகவும் இருந்தான். பெரும் மரங்கள் நிறைந்ததும், பயங்கரமானதும், மது என்ற பெயரைக் கொண்டதுமான ஒரு பெரிய காடு இருந்தது; முன்பு அவன் {தானவன் மது} அங்கே வாழ்ந்திருந்தான்.(23) பெருந்தானவனான லவணன், மதுவின் மகனாவான். அபரிமிதமான பலத்தைக் கொடையாகக் கொண்டிருந்த அவன் உயிரினங்கள் அனைத்தையும் அச்சுறுத்தி வந்தான்.(24) அங்கே பல ஆண்டுகள் விளையாடிக் கொண்டிருந்த அந்தத் தானவன், செருக்கால் நிறைந்தவனாகத் தேவர்கள் அனைவரையும், பிறரையும் அச்சுறுத்தி வந்தான்.(25)
தரசரதனின் பக்தியுள்ள {அறம்சார்ந்த} மகனும், ராட்சசர்களுக்குப் பயங்கரனுமான ராமன் அயோத்யாவை ஆண்டுக் கொண்டிருந்த போது, தைத்தியர்கள் அனைவராலும் துதிக்கப்பட்ட அந்தத் தானவன் {லவணன்}, அந்தப் பயங்கரமான காட்டுக்குச் சென்றான். அந்த லவணன், கடுமையாகப் பேசக்கூடிய ஒரு தூதனை ராமனிடம் அனுப்பினான். அவன் {அந்தத் தூதன்}, "ஓ! ராமா, நான் உன் நாட்டின் எல்லைக்கருகே வாழ்கிறேன். தானவன் லவணன் உன் பகைவனாவான். மன்னர்கள் ஒரு பலமிக்கப் பகைவனை வைத்துக் கொள்ள விரும்புவதில்லை.(26-28) தன் குடிமக்களின் நலத்தை நாடும் மன்னன் ஒருவன், தன் அரச கடமைகளைச் செய்து, தன் எல்லை மற்றும் வளங்களைப் பெருக்கி, தன் பகைவர்களை எப்போதும் வீழ்த்த வேண்டும்.(29) தன் குடிமக்களை நிறைவடையச் செய்ய விரும்புபவனும், முடிசூட்டு நீரால்[5] நனைத்த மயிரைக் கொண்டவனுமான மன்னன், புலன்களில் சிறப்பாளுமை கொள்வது நிச்சய வெற்றியைக் கொடுக்கும் என்பதால் முதலில் தன் புலன்கள் அனைத்தையும் வெல்ல வேண்டும்.(30) தன் நிலையை எப்போதும் வலுவாகவும், முழுமையாகவும் வைத்திருக்க விரும்பும் மன்னனைப் போன்ற ஆசான் மக்களுக்கு வேறெவனும் இல்லை என்பதால், அவன் தன் மக்களுக்கு ஒழுக்கம் சார்ந்த விதிகளைக் கற்பிக்க வேண்டும்.(31) ஒரு நுண்ணறிவுமிக்க மன்னன், ஆபத்துகளுக்கும், தீமைகளுக்கும் நடுவே இருக்கும்போது, தன் படையைப் பலப்படுத்த வேண்டுமேயன்றி தன் பகைவர்களிடம் அச்சங்கொள்ளக் கூடாது.(32) மனிதர்கள் அனைவரும், தங்களுடன் பிறந்த பலமிக்கப் பகைவர்களான தங்கள் புலன்களாலேயே கொல்லப்படுகின்றனர். பொறுமையற்ற மன்னன் ஒருவன், தங்கள் பகைவர்கள் தங்களுக்கு நன்மை செய்கிறார்கள் என்று கொள்ளும் தவறான கருத்தினால் கொல்லப்படுகிறான்.(33) நீ, உன் மனைவியின் காரணமாகவும், மடத்தனமான பற்றின் காரணமாகவும், ராவணனையும், அவனது படையையும் கொன்றாய். நீ செய்த அந்தப் பாவச்செயலை நான் பெரிதாகவோ, மதிப்பிற்குரியதாகவோ நான் கருதவில்லை.(34) காட்டில் வாழ்ந்து, நோன்பு நோற்று வந்த நீ, ஓர் அற்ப ராட்சசனைக் கொறாய். இத்தகையை நடத்தையைப் பக்திமான்களிடம் காண முடியாது.(35) சகிப்பினால் பிறக்கும் அறமானது, பக்திமான்களை ஒரு மங்கலமான, நியாயமான இடத்திற்கு இட்டுச் செல்லும். அறியாமையினால் நீ ராவணனைக் கொல்லவும், காடுறை வானரர்களைக்[6] கௌரவிக்கவும் செய்தாய்.(36) நீ நோன்பை நோற்று வந்தபோது, அற்ப மனிதர்களின் நடத்தையைப் பின்பற்றி உன் மனைவிக்காக ராவணனைப் போரில் கொன்றதால் அவன் உண்மையில் அருளப்பட்டவனென ஆகிவிட்டான்.(37) தீய மனம் கொண்டவனும், தன் புலன்களைக் கட்டுப்படுத்தாதவனுமான அந்த ராவணன் போரில் உன்னால் கொல்லப்பட்டான். எனவே, நீ போரிட வல்லவனாகிறாய். வா, இன்று என்றோடு போரிடவாயாக" என்று {லவணன் சொன்னதாக அந்தத் தூதன்} சொன்னான்.(38)
[5] "முடிசூட்டுவிழாவின் போது, மன்னனின் தலையில் புனித நீரைத் தெளிப்பது வழக்கமாகும். எனவே, இங்கே இது முடிசூட்டு விழாவைக் கண்ட மன்னன் என்ற பொருளைத் தரும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[6] "சரியாகச் சொல்வதென்றால் இங்கே சொல்லப்படுபவர்கள் குரங்குகளல்ல; அவர்கள் தென்னிந்தாவின் ஒரு மாகாணத்தில் வாழ்ந்த காட்டுமிராண்டி இனத்தைச் சேர்ந்தவர்களாவர்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். ஆசிரியர் வலிந்து இந்தப் பொருள் கொள்ள வேண்டிய அவசியமேதும் இல்லை. எனினும் செய்திருக்கிறார்.
கடுமொழி உரைப்பவனான அந்தத் தூதனின் இந்தச் சொற்களைக் கேட்ட ராமன், பொறுமையுடன் புன்னகைத்தவாறே, "ஓ! தூதா, அந்த இரவுலாவியிடம் கொண்ட மதிப்பினால், என்னைப் பழிப்பதைச் சுகமாகக் கருதி நீ சொல்பவை நியாமானவையல்ல.(39,40) என் மனைவி அபகரித்துச் சென்ற அந்த ராவணன் கொல்லப்பட்டிருந்தாலும், என் மனைவி அபகரிக்கப்பட்டிருந்தாலும் , நீதியின் வழிகளைப் பின்பற்றி செல்லும் நான் கலங்கடிக்கப்பட்டிருந்தாலும் அதில் பழிப்பதற்கென்ன இருக்கிறது?[7](41)
நீதியின் வழிகளை அறவழிகளை எப்போதும் பின்பற்றும் அறவோர், தங்கள் சொற்களாலும் பிறரைப் பழிக்கமாட்டார்கள். பக்திமான்களுக்காக எப்போதும் விழித்திருக்கும் தெய்வத்தைப் போல, அதற்கு இணையாக அவனும் தீயவர்களுக்காக விழிந்திருந்தான்.(42) தூதனின் கடமையை நீ செய்தாய். தாமதம் செய்யாதே, இப்போதே செல்வாயாக. தங்களைத் தாங்களே பெரிதாகக் காட்டிக் கொள்ள விரும்பும் அற்பர்களை என்னைப் போன்ற மனிதர்கள் காயப்படுத்துவதில்லை.(43) போரில் பகைவரை ஒடுக்குபவனான என் தம்பி சத்ருக்னன் இதோ இருகிறான். தீய மனம் கொண்ட அந்தத் தைத்தியனுக்காக இவன் காத்திருப்பான்" என்றான் {ராமன்}.(44)
ராமனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், அந்த மன்னனால் ஆணையிடப்பட்டவனும் அந்தத் தூதன், சத்ருக்னனுடன் புறப்பட்டுச் சென்றான். சுமித்ரையின் மகனான சத்ருக்னன், வேகமாகச் செல்லும் ஒரு தேரில் ஏறி, பெரிதான மதுவனத்திற்குச் சென்று, போரில் ஈடுபட விரும்பியவனாக அங்கே ஒரு கூடாரத்தை அமைத்தான்.(45,46) தைத்தியன் லவணன், அந்தத் தூதனின் சொற்களைக் கேட்டுக் கோபமடைந்தான். மதுவனத்தைவிட்டுப் போருக்குப் புறப்பட்டான். பிறகு அங்கே சத்ருக்னனுக்கும், லவணனுக்கும் இடையில் ஒரு பயங்கரப் போர் நடந்தது. அவர்கள் இருவரும் வீரர்களாகவும், வலிமைமிக்க வில்லாளிகளாகவும் இருந்தனர். இருவரும், கூரிய கணைகளால் ஒருவரையொருவர் தாக்கினர். போர்க்களத்தைவிட்டு எவரும் பின்வாங்கவும் இல்லை, ஒருவரும் களைப்படையவும் இல்லை.(47-49) சத்ருக்னனின் கணைகளால் அந்தப் போரில் பெரிதும் தாக்கப்பட்ட தானவன் லவணன், தன் கைகளில் கதாயுதம் {ஜயசூலம்} இல்லாததால் தோல்வியைச் சந்தித்தான்.(50) அதன்பிறகு அவன், தனக்கு வரமாகக் கிடைத்ததும், உயிரினங்கள் அனைத்தையும் கலங்கடிக்கவல்லதுமான தெய்வீக அங்குசத்தை எடுத்துக் கொண்டு அந்தப் போரில் முழங்கத் தொடங்கினான்.(51) அவன் அதைக் கொண்டு சத்ருக்னனின் தலைப்பாகையைப் பற்றி, ராகவனின் தம்பியான அவனை இழுக்கத் தொடங்கினான்.(52) அப்போது சத்ருக்னன், தங்கக் கைப்பிடி கொண்டதும், மிகச் சிறந்ததுமான தன் குத்துவாளை எடுத்துக் கொண்டு, அந்தப் போரில் லவணனின் தலையை அறுத்தான்.(53) சுமித்ரையின் வீரமகனும், நண்பரைகளை மகிழ்ச்சியடையச் செய்பவனுமான அவன் {சத்ருக்னன்}, அந்தப் போரில் லவணாசுரனைக் கொன்று, தன் ஆயுதங்களால் அந்தக் காட்டை அழித்தான்.(54) சுமித்ரையின் பக்திமிக்க மகனான அந்தச் சத்ருக்னன், அந்தக் காட்டை அழித்து, அந்த மாகாணத்தின் நன்மைக்காக ஒரு நகரத்தை அமைத்து அங்கே வாழத் தொடங்கினான். பழங்காலத்தில் மதுவனத்தில் லவணாசுரனைக் கொன்ற சத்ருக்னன் அங்கே மதுரா என்ற பெயரில் ஒரு நகரத்தைக் கட்டினான்.(55,56)
அந்தப் பெரிய நகரம், சுவர்கள், நுழைவாயில்கள் மற்றும் கதவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கிராமங்கள், உயர்ந்த கட்டடங்கள் மற்றும் தோட்டங்கள் பலவற்றையும் {அஷ்டப்ரஹாரங்களை} அது கொண்டிருந்தது.(57) அதன் எல்லைகள் நன்கு அமைக்கப்பட்டு, அழகாகக் கட்டப்பட்டிருந்தன. சுவர்கள் மிக உயரமாக இருந்தன. அகழிகள், ஒரு பெண்ணின் இடையைச் சுற்றி இருக்கும் ஆபரணத்தைப் போல இருந்தன.(58) கற்களாலும், செங்கற்களாலும் அமைந்திருந்த கட்டடங்கள் கேயூரங்களைப் போல இருந்தன. அழகிய அரண்மனைகள் காது குண்டலங்களைப் போல இருந்தன. நன்கு பாதுகாக்கப்பட்ட வாயில்கள் திரைகளைப் போல இருந்தன, குறுக்குச் சாலைகளான உலாவீதிகள் {பெண்ணின்} புன்னகையைப் போல இருந்தன. நலமிக்க வீரர்கள், யானைகள், குதிரைகளையும், மற்றும் தேர்களையும் அது {அந்நகரம்} கொண்டிருந்தது. பிறை வடிவத்திற்கு ஒப்பான அது யமுனையின் கரையில் அமைந்திருந்தது. அழகிய சந்தைகளைக் கொண்டிருந்த அது, தன் ரத்தினத்திரள்களுக்கான பெருமையைக் கொண்டிருந்தது. அங்கே இருந்த வயல்கள் தானியங்களால் நிறைந்திருந்தன. தேவர்களின் மன்னன் (இந்திரன்) சரியான பருவ காலத்தில் மழையைப் பொழிந்தான். அங்கே இருந்த ஆண்களும் பெண்களும் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தனர்.(59-61) போஜர்களின் குலத்தில் பிறந்தவனும், பெருஞ்சக்தி கொண்டவனுமான மன்னன் சூரசேனன் அங்கே ஆட்சி செய்து கொண்டிருந்தான். உக்ரசேனன் என்ற பெயரில் கொண்டாடப்படும் மஹாசேனனைப் போன்ற பலமிக்கவன் {உக்ரசேனன்}, {இப்போது} அங்கே {ஆட்சி செய்து கொண்டு} இருக்கிறான்.(62,63)
ஓ! விஷ்ணு, நீ எவனைக் கொன்றாயோ, அவன் அவனது {உக்ரசேனனின்} மகனாக இருக்கிறான். தாரகனை வேராகக் கொண்டிருந்த போரில் நீ யாரைக் கொன்றாயோ அந்தக் காலநேமி என்ற பெயரைக் கொண்ட தைத்தியன், போஜ குலக்கொழுந்தாகக் கம்ஸனாகப் பிறந்திருக்கிறான். சிங்கத்தைப் போன்ற நடையைக் கொண்ட அந்த மன்னன் உலகில் கொண்டாடப்பட்டு வருகிறான்.(64,65) அவன் உலகின் மன்னர்கள் அனைவருக்கும் பயங்கரனாகவும், உயிரினங்கள் அனைத்தையும் அச்சுறுத்துபவனாகவும் இருக்கிறான்.(66) அவன் விடா முயற்சி கொண்டவனாகவும், இரக்கமற்றவனாகவும் இருக்கிறான். அவனது குடிமக்கள் அவனைக் கண்டு மயிர்சிலிர்க்கும் அளவுக்கு அவன் செருக்கு வாய்ந்தவனாக இருக்கிறான்.(67) அவன் ஒருபோதும் தன் அரச கடமைகளைச் செய்யாதவனாகவும், தன் சொந்த மக்களுக்கே ஒருபோதும் மகிழ்ச்சி அளிக்காதவனாகவும் இருக்கிறான். அவன் தன் நாட்டுக்கென எந்த நன்மையையும் ஒருபோதும் செய்யாமல், ஒரு கொடுங்கோலனைப் போலவே எப்போதும் நடந்து கொள்கிறான்.(68) எவன், தாரகப் போரில் உன்னால் வீழ்த்தப்பட்டானோ, அவன் இப்போது போஜ குலத்தில் கம்ஸனாகப் பிறந்திருக்கிறான். இறைச்சியை உண்டு வாழும் அவன் தன் அசுர இதயத்துடன் உலகங்கள் அனைத்தையும் ஒடுக்கி வருகிறான்.(69) எவன் குதிரையைப் போன்றிருந்தானோ, ஹயக்ரீவன் என்ற பெயரால் அறியப்பட்டானோ, அவன் கம்ஸனின் தம்பியான கேசியாகப் பிறந்திருக்கிறார்.(70) உடலற்றவனும், தீயவனும், {சிங்கம் போன்ற} பிடரி மயிருடன் கூடிய அசுரனும், குதிரையைப் போலக் கனைப்பவனுமான அவன் இப்போது பிருந்தாவனத்தில் தனியாக வாழ்ந்து வருகிறான். அவன் மனித இறைச்சியை {நரமாமிசத்தை} உண்டு வாழ்ந்து வருகிறான்.(71) பலியின் மகனான அரிஷ்டன், தான் விரும்பும் வடிவங்களை ஏற்கவல்ல பேரசுரன் ககுத்மியாகப் பிறந்திருக்கிறான். காளையைப் போன்ற வடிவத்தைக் கொண்டிருக்கும் அவன், பசுக்களின் பகைவனாக இருக்கிறான்.(72) திதியின் மகனும், தானவர்களில் முதன்மையானவனுமான ரிஷ்டன், கம்ஸனின் யானையாகப் பிறந்திருக்கிறான்.(73) பயங்கரம் நிறைந்த தைத்தியன் லம்பன், பிரலம்பனாகப் பிறந்திருக்கிறான். அவன் ஓர் ஆல மரத்தினடியில் பாண்டரன் {பாண்டீரன்} என்ற பெயரில் வாழ்ந்து வருகிறான்.(74) கரன் என்ற பெயரில் அறியப்பட்டிருந்த தைத்தியன், பயங்கரம் நிறைந்த அசுரன் தேனுகனாகப் பிறந்திருக்கிறான். பனைமரக்காட்டில் வாழ்ந்து வரும் அவன் உயிரினங்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறான்.(75) வராஹன் மற்றும் கிஷோரன் என்ற பெயர்களைக் கொண்ட முதன்மையான அசுரர்கள் இருவர், சாணூகன் {சாணூரன்} மற்றும் முஷ்டிகன் என்ற பெயர்களில் எப்போதும் அரங்கில் இருக்கும் மற்போர் வீரர்களாகப் பிறந்திருக்கின்றனர்.(76) தானவர்களுக்கும் அந்தகர்களாகத் தெரியும் மயன் மற்றும் தாரன் {தாரகன்} என்ற இரு தானவர்கள், பிராக்ஜ்யோதிஷம் என்ற பெயரைக் கொண்டதும், பூமியின் மகனான நரகனுக்கு உரியதுமான நகரத்தில் இப்போது வாழ்ந்து வருகின்றனர்.(77)
ஓ! நாராயணா, இந்தத் தானவர்கள் அனைவரையும் கொன்றவனும், அவர்களின் வடிவங்களை அழித்தவனும் நீயே. அவர்கள் இப்போது மனித உடல்களை ஏற்று உலகின் மக்களை ஒடுக்கி வருகின்றனர்.(78) அவர்கள் உன் பெயரைப் பாடுவதை எதிர்த்து உன்மீது பற்றுக் கொண்டவர்களை அழிக்கின்றர். உன் தயவால் மட்டுமே அவர்கள் அழிவைச் சந்திப்பார்கள்.(79) சொர்க்கத்தில் அவர்கள் உன்னைக் கண்டு அஞ்சினார்கள், கடலிலும் அவர்கள் உன்னைக் கண்டு அஞ்சினார்கள், பூமியிலும் அவர்கள் உன்னிடம் அஞ்சுவார்கள். அவர்களுக்கு அச்சத்தின் பிறப்பிடம் வேறேதும் இல்லை.(80) ஓ! ஸ்ரீதரா, அந்தத் தீய தானவர்களை நீ கொல்வாயாக; வேறு எவராலும் அவர்களைக் கொல்ல முடியாது. சொர்க்கத்தில் இருந்து அனுப்பப்பட்ட தைத்தியர்கள் பூமியில் புகலிடத்தைக் காண்கின்றனர்.(81)
ஓ! கேசவா, நீ விழித்திருப்பதால், தேவலோகத்தில் உன்னால் கொல்லப்பட்ட அந்தத் தைத்தியன் சொர்க்கத்திற்குச் செல்வது கடினம் என்பதால், அவன் மனித உடலை ஏற்று மீண்டும் எழுந்திருக்கிறான்.(82) எனவே, ஓ! நாராயணா, உலகிற்கு நீ வருவாயாக. நாங்களும் பூமியில் இறங்குகிறோம். தானவர்களின் அழிவுக்காக நீ உன்னைப் படைப்பாயாக.(83) வெளிப்படாத உன் வடிவங்கள், தேவர்களுக்குப் புலப்படுவதும், புலப்படாதவையுமாக இருக்கின்றன. உன்னால் படைக்கப்பட்ட தேவர்கள் அந்த வடிவங்களில் பூமியில் இறங்குவார்கள்.(84) ஓ! விஷ்ணு, நீ பூமிக்கு இறங்கி வரும்போது, கம்ஸனால் ஆள இயலாது, பூமி எதற்காக வந்தாளோ அந்த நோக்கமும் நிறைவேறும்.(85) பாரத நிலத்தில் தொழில்கள் அனைத்தின் ஆசான் நீயே, அனைத்தின் விழிகளும், உயர்ந்த புகலிடமும் நீயே. எனவே, ஓ! ரிஷிகேசா, நீ பூமிக்கு வந்து, தீயவர்களான அந்தத் தானவர்களைக் கொல்வாயாக" என்றார் {நாரதர்}".(86)
ஹரிவம்ச பர்வம் பகுதி – 54ல் உள்ள சுலோகங்கள் : 86
![]() |
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English | ![]() |