Wednesday 24 June 2020

இந்திரன் தந்த தண்டனை | விஷ்ணு பர்வம் பகுதி – 73 – 018

(கோவர்த்தனதாரணம்)

Indra sends down punishment | Vishnu-Parva-Chapter-73-018 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கோவர்த்தன மலையைத் தூக்கி ஆயர்பாடியைக் காத்த கிருஷ்ணன்...

Krishna raising up Govardhana hill

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தேவர்களின் மன்னனான சக்ரன் {இந்திரன்}, தன்னைக் கௌரவிக்கும் விழா இவ்வகையில் தடுத்து நிறுத்தப்பட்டபோது, ஸம்வர்த்தகம் என்றழைக்கப்படும் மேகங்களை அழைத்து,(1) "ஓ! மேகங்களே, யானைகளே, உங்கள் மன்னனிடம் நீங்கள் மதிப்பேதும் கொண்டிருந்தால், நான் விரும்புவதைச் செய்வது உங்கள் கடமை என்று கருதினால், (என் சொற்களைக் கேட்பீராக).(2) இந்தப் பிருந்தாவனவாசிகள் அனைவரும் தாமோதரனிடம் {கிருஷ்ணனிடம்} பற்றுடன் இருக்கிறார்கள். நந்தனும் பிற கோபர்களும் என் விழாவுக்கு எதிராக இருக்கிறார்கள்.(3) எனவே, வாழ்நாள் முழுவதும் அவர்கள் எதைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கிறார்களோ, கோபர்கள்[1] என்ற பெயரை அவர்கள் எதனால் அடைந்தார்களோ அந்த விலைமதிப்பற்ற பசுக்களை மழை மற்றும் காற்றைக் கொண்டு ஏழு இரவுகளுக்குள் துன்பமடையச் செய்வீராக.(4) நான் (என் யானையான) ஐராவதத்தில் இருந்து கொண்டு பயங்கர மழையையும், காற்றையும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய பிரகாசமான நீரையும் வெளியிடுவேன்.(5) பயங்கர மழை மற்றும் காற்றுடன் பசுக்கள் மற்றும் விரஜவாசிகள் அனைவரையும் கொன்று, அவர்கள் அனைவரும் மண்ணை முத்தம் கொடுத்த பிறகு, அவர்களைவிட்டு அகல்வீராக" என்றான் {இந்திரன்}.(6)

[1] "கோ என்பது பசுவையும், ப என்ற வேர்ச்சொல் பாதுகாவல் என்பதையும் குறிப்பதால் {கோபன் என்ற} இச்சொல்லுக்குப் பசுக்களைக் காப்பவர்கள் என்று பொருள் கொள்ளப்படுகிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்கள். ஆநிரை காப்பவர்களாக இருப்பதால் இவர்கள் ஆயர்கள் என்று தமிழில் அழைக்கப்படுகிறார்கள்.

பலம்வாய்ந்தவனான பாகசாஸனன் {இந்திரன்}, தனக்கான விழா கிருஷ்ணனால் நிறுத்தப்பட்டதன் காரணமாக மேகங்களுக்கு இவ்வாறு ஆணையிட்டான்.(7) அதன்பிறகு, பயங்கரம் நிறைந்தவையும், அளவில் மலைக்கு ஒப்பானவையுமான கருநீல மேகங்கள் பயங்கரமாக முழங்கியபடியே அனைத்தைப் பக்கங்களிலும் வானத்தை மறைத்தன.(8) இந்திர வில்லால் அலங்கரிக்கப்பட்ட மேகங்கள், தொடர்ந்து மின்னல்களை உண்டாக்கியபடியே ஆகாயத்தை இருளில் மூழ்கச் செய்தன.(9) மேகங்களில் யானைகளுக்கு ஒப்பான சிலவும், மகரங்களுக்கு[2] ஒப்பான சிலவும், பாம்புகளுக்கு ஒப்பான சிலவும் என அனைத்தும் ஒன்றையொன்று தீண்டியபடியே வானத்தில் நகரத் தொடங்கின.(10) பத்து லட்சம் யானைகளுக்கு ஒப்பான மேகங்கள் ஒன்றுக்கொன்று நெருங்கியவையாக வானை மறைத்து, கேடுநிறைந்த நாளை உண்டாக்கியது.(11) நிகரளவு மழையைக் கொண்ட மேகங்களில், மனிதர்களின் கைகளுக்கு ஒப்பான சிலவும், யானையின் துதிக்கைகளுக்கு ஒப்பான சிலவும், மூங்கில்களுக்கு ஒப்பான சிலவும் என அனைத்தும் தங்கள் உள்ளடக்கங்களான நீரை பொழியத் தொடங்கின.(12)

[2] "முதலைக்கு ஒப்பான நீர்விலங்குக்கான ஒரு வேர்ச்சொல் இஃது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். இது புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் அடிக்கடி சொல்லப்படும் ஒரு புராதன நீர்வீலங்கின் பெயராகும்.

கடக்கமுடியாததும், ஆழமானதும், எல்லையற்றதுமான பெருங்கடலே வானத்தில் நிலை கொண்டிருப்பதைப் போன்ற அந்தப் பருவ நிலையைக் கண்டு மக்கள் அஞ்சினர்.(13) மலைபோன்ற மேகங்களின் பயங்கர முழக்கங்களைக் கேட்டுப் பறவைகள் தங்கள் கூடுகளில் இருந்து வெளிவர இயலாமல் இருந்தன, விலங்குகள் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடின.(14) அண்ட அழிவுக்காலத்திற்கு ஒப்பான பயங்கரமான மேகங்கள் அதிகமாகப் பொழிந்த மழையால் மனிதர்களின் உடல்கள் நிறமிழந்தன.(15) கோள்களும், விண்மீன்களும் பார்வையில் இருந்து மறைந்தன, சூரிய மற்றும் சந்திரக் கதிர்களை இழந்த வானமானது தன் ஒளியை இழந்திருந்தது.(16) மேகங்களால் பொழியப்பட்ட தொடர்மழையால் அங்கே இருந்த நிலம் குளத்தின் வடிவை ஏற்றது.(17) மயில்களின் அகவல்கள் உரக்கத் தொடங்கின, பிற பறவைகளும் மென்குரலை வெளியிடத் தொடங்கின. ஆறுகள் அளவில் பெருகித் தங்கள் கரைகளில் வளர்ந்த மரங்களை அடித்துச் சென்றன.(18) மேகங்களின் முழக்கங்கள், மற்றும் வஜ்ரங்களின் இடியோசைகளால் செவியிலறையப்பட்டவை போலப் புற்களும், மரங்களும் அங்கே நடுங்கத் தொடங்கின.(19)

அச்சத்திலிருந்த ஆயர்கள், "இதோ உலகின் முடிவு நெருங்கிவிட்டது, பூமி ஒரே நீர்ப்பரப்பாகப் போகிறது" என்று தங்களுக்குள் பேசத் தொடங்கினர்.(20) அந்தப் பயங்கர மழைப் பொழிவில் பசுக்கள் பெருந்துயரடைந்தன. அவை அசைவற்றவையாக நின்று கொண்டு உரக்கக் கதறத் தொடங்கின.(21) அவற்றின் உடல்கள் நனைந்து, தொடைகளும், கால்களும் அசைவற்றிருந்தன, குளம்புகளும், வாய்களும் செயலற்றிருந்தன, மயிர் சிலிர்த்திருந்தது, அவற்றின் வயிறும் மடியும் மெலிந்தன.(22) களைப்பால் சில மடிந்தன, அச்சத்தால் சில கால் மடங்கி விழுந்தன, கன்றுகளுடன் சில உறைபனியில் மூழ்கி விழுந்தன.(23) பசியால் மெலிந்த வயிறும், களைத்த தொடைகளும் கொண்ட சில பசுக்கள், தங்கள் கன்றுகளைத் தழுவியபடியே உறங்கின.(24) இவ்வாறு மழையால் தாக்கப்பட்டு, உற்சாகமிழந்து நடுங்கிய பசுக்களும், கன்றுகளும், துயர்மிக்கப் பரிதாபகரமான முகங்களுடன் கிருஷ்ணனைப் பார்த்து, "எங்களைக் காப்பாய், எங்களைக் காப்பாயாக" என்று கதறின.(25)

இன் சொல் சொல்பவனான கிருஷ்ணன், அந்தக் கடும்புயல் பசுக்கள் மீது நடத்தும் ஒடுக்குமுறையையும், கோபர்களுக்கு நேரப்போகும் மரணத்தையும் கண்டு பெருங்கோபமடைந்தான். சிறிது நேரம் தியானித்த அவன், (26,27) "இது நேரும் என்பது நான் முன்பே அறிந்ததுதான். எவ்வாறெனினும், இம்மழையில் இருந்து பசுக்களைப் பாதுகாக்க, காடுகளையும், சோலைகளையும் கொண்டதும், மலைகளில் சிறந்ததுமான இந்தக் கோவர்த்தனத்தைப் பெயர்த்தெடுத்து, அவற்றுக்கான {பசுக்களுக்கான} புகலிடமாக இதை {இந்த மலையை} மாற்றப் போகிறேன்.(28) உண்மையில் பூமியில் ஒரு கோளாக {பூமாதேவியின் வீடு போல} இருக்கும் இம்மலை என்னால் தாங்கப்படும்போது, பசுக்களையும், ஆயர்களையும் இதனால் {இம்மலையால்} பாதுகாக்க இயலும் என்பதில் ஐயத்திற்கிடமில்லை" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.(29)

வாய்மையையே தன் ஆற்றலாகக் கொண்டவனும் {ஸத்ய பராக்ரமனும்}, சிறந்த மலைக்கு ஒப்பானவனுமான கிருஷ்ணன், இவ்வாறு தியானித்து, தன் கரங்களின் வலுவை வெளிப்படுத்தும் வகையில் தன் கைகளால் அந்த மலையைப் பெயர்த்தெடுத்தான்.(30) மேகங்களுடன் கூடிய அந்த முதன்மையான மலை, கிருஷ்ணனின் இடக்கையால் தாங்கப்பட்ட போது, தன் குகைகளுடன் ஒரு வீட்டைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது.(31) அந்த மலை பெயர்க்கப்பட்ட போது, அதன் மேட்டுச் சமவெளியில் இருந்த பாறைகள் அசைக்கப்பட்டு, மரங்கள் கீழே விழுந்தன.(32) அந்த மலை அசைக்கப்பட முடியாததாக இருப்பினும், சுழலும் சிகரங்களுடனும், கீழேவிழும் மரங்களுடனும், நடுங்கும் உச்சிகளுடனும் கிருஷ்ணனுடைய சக்தியால் விண்ணுக்கு உயர்ந்தது.(33) ஒன்றுகூடிய மேகங்கள் அனைத்தும், தங்கள் நீரின் உள்ளடக்கங்களை அதன் {அம்மலையின்} அருகில் பொழிந்து கொண்டிருந்தன. {அம்மலையில்} விரைவாகச் செல்லும் நீரோடைகளால் பாறைகள் தளர்த்தன, அந்த மலையும் தொடர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தது.(34) எனினும் மழையைப் பொழியும் மேகங்களையோ, பாறைகளைப் பொழியும் மலையையோ, முழங்கும் காற்றையோ ஆயர்களால் உணர்ந்தறிய முடியவில்லை.(35)

மலையோடு இணைந்திருந்த மேகங்கள், அந்தச் சிறந்த மலையின் ஊற்றுகளை நெருங்கி, மயிலிறகுகளால் அலங்கரிக்கப்பட்டவை போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தன.(36) அனைத்துப் பக்கங்களில் இருந்தும் வித்யாதரர்கள், உரகர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோர், "கோவர்த்தன மலை சிறகுகளைக் கொடையாகக் கொண்டு உயரப் பறக்கிறது" என்று ஆச்சரியமடையத் தொடங்கினர்.(37) ஆயிரம் அடுக்குகளைக் கொண்டதும், பெயர்க்கப்பட்டதுமான அந்த மலையின் மண் அடுக்குகளிலிருந்து வெள்ளை, கடுஞ்சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களிலான கனிமப் பொருட்கள் கீழே கொட்டத் தொடங்கின.(38) அந்தச் சிறந்த மலையின் சிகரங்கள் சில தளர்ந்து தொய்ந்தன, சில நொறுங்கின, அவற்றில் மிக உயரமானவை மேகங்களுக்குள் நுழைந்தன.(39) மலையின் அசைவால் மரங்களும் நடுங்கின, அவற்றின் மலர்கள் நிலத்தில் அனைத்துப் பக்கங்களிலும் கொட்டிக் கிடந்தன.(40) பெருந்தலைகளைக் கொண்ட பாம்புகள், பாதி உடல் அலங்கரிக்கப்பட்டவையாகத் தங்கள் பொந்துகளில் இருந்து வெளிவந்தன, பறவைகள் வானில் பறக்கத் தொடங்கின.(41) பெரும் மழையாலும், மலையை உயர்த்தியதன் விளைவாகவும் உண்டான அச்சத்தில் இந்த வானுலாவிகள் {பறவைகள்} தொடர்ந்து மேலே போகவும், கீழே வரவும் தொடங்கின.(42) சிங்கங்கள் நீருண்ட மேகங்களைப் போலவும், புலிகள் கடையும் மத்துகளைப் போலவும் கோபத்தில் முழங்கத் தொடங்கின.(43)

தன் வடிவில் மாற்றமடைந்தும், சீரான, சீரற்ற, கடப்பதற்கரிதான இடங்களைக் கொண்டதுமான அம்மலை மற்றொரு மலையைப் போலத் தோன்றியது.(44) அதிகமான மழைப்பொழிவின் காரணமாக அது {கோவர்த்தன மலை} ருத்ரனால் கலங்கடிக்கப்பட்ட திரிபுரனைப் போல[3] வானில் தெரிந்தது.(45) தடி போன்ற கிருஷ்ணனின் கையால் உயர்த்தப்பட்ட அந்தப் பெருமலை, அடர்நீல மேகங்களால் மறைக்கப்பட்டு அங்கே ஒரு குடையைப் போலத் தெரிந்தது.(46) மேகமுழக்கங்கள் கனவு காணச் செய்ததால், அந்தக் கோவர்த்தனன் {அந்த மலை} குகை போன்ற தன் முகத்தைக் கிருஷ்ணனின் கரங்கள் என்ற தலையணையில் வைத்து உறங்கினான்.(47) மரங்களால் மறைக்கப்பட்ட சிகரங்களுடன் கூடிய அந்த மலையானது, பறவைகளின் இன்னிசையற்றதாக, மழையால் நனைந்ததாக, மயில்களின் அகவல்களை இழந்ததாக வானத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(48) அந்த மலையின் மேட்டுச்சமவெளிகள் அசைந்து நடுங்கிக் கொண்டிருந்ததால் சிகரங்களும், காடும் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவை போல இருந்தன.(49) மேகங்கள், தேவர்களின் மன்னனால் அவசரப்படுத்தப்பட்டும், காற்றினால் உந்தப்பட்டும் அதன் {மலையின்} முன்பு தங்கள் உள்ளடக்கங்களைத் தொடர்ந்து பொழியத் தொடங்கின.(50) மேகங்களால் மறைக்கப்பட்டதும், கிருஷ்ணனின் கையால் தாங்கப்பட்டதுமான அந்த மலையானது, மன்னனால் ஒடுக்கப்படும்போது ஏற்படும் சக்கரக்குறிகளின் அடையாளத்தைக் கொண்ட ஒரு நாட்டைப் போலத் தெரிந்தது.(51) அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு கிராமம் தனக்கு முன் ஒரு நகரத்தைக் கொண்டிருப்பதைப் போலவே மேகங்கள் அந்த மலையைச் சூழ்ந்து நின்றன[4].(52)

[3] "தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு இடையிலான போரில் ருத்ரன் அல்லது சிவனால் வீழ்த்தப்பட்ட தானவத் தலைவனின் பெயர்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[4] சித்திரசாலை பதிப்பில், "மழைமேகங்களால் சூழப்பட்டுக் கிருஷ்ணனின் கையில் அமைந்திருந்த அந்த மலை, பகை மன்னர்களால் கடுந்துன்பத்துக்கு ஆளான ஒரு நாட்டைப் போல இருந்தது. அந்த மலையைச் சூழ்ந்திருந்த மழைமேகக் கூட்டங்கள், தலைநகரைச் சுற்றி இருக்கும் ஒரு நாட்டைப் போல இருந்தன" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "கிருஷ்ணனின் கைநுனியில் இருந்ததும், மேகங்களால் சூழப்பட்டதுமான அந்த மலையானது, ஒரு சக்கரத்தில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருப்பதைப் போலத் தெரிந்தது. ஒரு மன்னனால் படையெடுத்து முற்றுகையிடப்பட்ட நாட்டைப் போல அஃது இருந்தது. பெரும் எண்ணிக்கையிலான மேகங்கள் அந்த மலையைத் தொடர்ந்து சூழ்ந்தன. தலைநகரைச் சூழ்ந்திருக்கும் பெரிய, செழிப்புமிக்க நாட்டைப் போல அஃது இருந்தது" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "கிருஷ்ணனின் கைமுனையில் நேராக ஏந்தப்பட்ட மேகங்களுடன் கூடிய மலை சத்ரு ராஜாவால் ஆக்ரமித்து ஸேனைகளால் முற்றுகையிடப்பட்ட தேசம் போலத் தோன்றுகிறது. அந்த மலையைச் சுற்றி அந்த மேகக்கூட்டம் நின்றது. தலைநகரைச் சுற்றி விஸ்தரிக்கும் விரிவான நாடு போல் அந்த மலையைக் கையில் வைத்து (எடை நிறுப்பது போல்) தெரியக்காட்டி, ஆயர்கள் ரக்ஷகன் க்ருஷ்ணன் ப்ரஹ்மா போலிருந்து புன்சிரிப்புடன் சொன்னான்" என்றிருக்கிறது.

தலைவன் கிருஷ்ணன், பிரம்மனை {பிரஜைகளைக் காக்கும் பிரஜாபதியைப்} போலக் கோபர்களைக் காப்பதற்காக அந்த மலையை உயர்த்தி, அதைத் தன் விரலின் நுனியில் வைத்தான். அப்போது அவன் புன்னகையுடன்,(53) "காற்றும் புகமுடியாததும், பசுக்களின் புகலிடமுமான இந்த மலைவீட்டை தேவர்களாலும் புரிந்து கொள்ள முடியாத சில தெய்வீக வழிமுறைகளால் {விஷ்ணு மாயையால்} நான் கட்டியிருக்கிறேன்.(54) மாட்டுமந்தைகள், அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்காக, கடுங்காற்று வீசாத இந்த இடத்திற்குள் விரைவாக நுழையட்டும்.(55) உங்கள் நிலைமேன்மைக்கும் {அந்தஸ்துக்கும்}, மந்தைகளின் எண்ணிக்கைக்கும் தகுந்த விகிதத்திலும், நீங்கள் விரும்பும் வகையிலும் இந்த இடத்தைப் பிரித்துக் கொண்டு, மழையில் இருந்து விடுபடுவீராக.(56) ஐந்து குரோசம் நீளமும், ஒரு குரோசமும் அகலமும் பரந்திருந்த இந்த மலையைப் பெயர்த்து நான் கட்டியிருக்கும் இந்தப் பெரிய வீடானது {நான் ஏற்படுத்தியிருக்கும் இந்தப் பெரிய வெளியானது}, மூவுலகங்களுக்கும் கூட இடமளிக்கும் எனும்போது விரஜத்தைப் பற்றிச் சொல்வானேன்?[5]" என்றான் {கிருஷ்ணன்}.(57)

[5] சித்திரசாலை பதிப்பில், "கோபர்களே, தேவர்களுக்கும் சாத்தியமற்ற என் தெய்வீக சக்தியால் உங்களுக்கும், பசுக்களுக்கும் இந்த மலையையே வீடாக்கியிருக்கிறேன். இந்த உறைவிடத்தினுள் காற்றும் புகமுடியாது. பசுக்கள் அனைத்தும் ஓய்வைப் பெற இங்கே அவற்றை விரைவாகக் கொண்டு வாருங்கள். காற்றின் தொல்லைகளுக்கு உட்படாமல் அவை இங்கே சுகமாக இருக்கட்டும். நீங்கள் இந்த இடத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். நான் மழையைத் தவிர்த்துவிட்டேன். மலையைத் தூக்கியதன் மூலம், நீங்கள் வாழ்வதற்குத் தகுந்த பெரிய இடத்தை அமைத்திருக்கிறேன். இந்தப் பெரிய இடம் ஐந்து குரோசம் நீளமும், ஒரு குரோசம் அகலமும் கொண்டதாகும். நான் மூவுலகங்களையும் காக்க இயன்றவனாக இருக்கும்போது, இந்த விரஜத்தை என்னால் காக்க முடியாதா?" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தேவர்களாலும் இதைச் செய்ய இயலாது. என் தெய்வீகத் தன்மையால் நான் இதை விதித்தேன். ஓ! கோபர்களே, நான் இந்த மலையைக் கொண்டு ஒரு வீட்டை அமைத்திருக்கிறேன். புயலைக் கடந்து கால்நடைகள் இங்கே புகலிடத்தை அடையும். கால்நடைகள் அமைதியை அடையும் வகையில் மந்தைகளை விரைவாக இங்கே கொண்டு வாருங்கள். காற்றில்லாத இந்த இடத்தில் அவை மகிழ்ச்சியாக வசிக்கட்டும். எங்கே பசுமந்தைகள் இருக்குமோ, எங்கே மகிழ்ச்சி காணப்படுமோ அதுவே விரஜமாகும். நான் மழையைத் தடுத்துவிட்டேன். இந்தப் பகுதியை உங்களுக்குள் பகிர்ந்து கொள்ளுங்கள். மலையை உயர்த்தி இந்தப் பெரிய இடத்தை உண்டாக்கியிருக்கிறேன். நான் மூவுலகங்களையும் விழுங்கவல்லவன். இந்த இடம் எம்மாத்திரம்?" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ஆயர்களே, இது தேவர்களால் நினைக்கவும் முடியாதது. திவ்ய முறைப்படி (விஷ்ணு மாயை) என்னால் செய்யப்பட்ட மலை வீடு. காற்று புகாதது. பசுக்களுக்குப் புகலிடம். பசுக்கூட்டங்கள் க்ஷேமத்தின் பொருட்டு இதில் சீக்ரம் நுழையட்டும். காற்றடிக்காத இடங்களில் ஸுக குறைவில்லாமல் வஸிக்கட்டும். என்னால் மழை தடுப்புச் செய்யப்பட்டது. அந்தஸ்து, கூட்டம், மனப்பொருத்தம், ஸுகம் இவற்றுக்குத் தக்கபடி இந்த இடம் பகிர்ந்து கொள்ளப்படட்டும். மலை பெயர்த்தெடுக்கப்பட்ட இந்தப் பெரிய இடம் என்னால் நிறுவப்பட்டது. ஐந்து க்ரோச வட்டமும், ஒரு க்ரோச குறுக்களவும் உடையது. பெரிய மூன்று லோகத்தையும் ரக்ஷிப்பதற்கு சக்தி வாய்ந்தது. ஆய்ப்பாடியை ரக்ஷிப்பதற்குக் கேட்பானேன்" என்றிருக்கிறது.

வெளியே மேகங்களின் முழக்கம் மற்றும் மாடுகளின் ஒலி ஆகியவற்றுடன் சேர்ந்து கோபர்களின் மத்தியில் பெரும் அமளி ஏற்பட்டது.(58) ஆயர்களால் வரிசைப்படுத்தப்பட்ட பசுகள் அந்தச் சிறந்த மலையின் பெருங்குகைக்குள் நுழைந்தன.(59) அந்த மலையின் அடியில் உயர்ந்த கல் தூணைப் போல நின்றிருந்த கிருஷ்ணன், அன்புக்குரிய விருந்தினனைப் போல அந்த மலையை ஒருகையில் தாங்கிக் கொண்டிருந்தான்.(60) அதன்பிறகு, மழைக்கு அஞ்சியவர்களான விரஜவாசிகள் தங்கள் வண்டிகள் மற்றும் பாத்திரங்களுடன் அந்த மலைவீட்டுக்குள் நுழைந்தனர்.(61) பலம்வாய்ந்த ஸதக்ரது {இந்திரன்}, கிருஷ்ணனின் இந்த மீமானிடச் செயலையும், தன் சொற்கள் பொய்த்ததையும் கண்டு மேகங்களை {மழைபொழியாமல்} விலகுமாறு கேட்டுக் கொண்டான்.(62) அவன், பூமியை ஏழு இரவுகளுக்கு விழாக்கள் ஏதுமற்றதாகச் செய்த மேகங்களால் சூழப்பட்டவனாகத் தேவலோகத்திற்குத் திரும்பிச் சென்றான்.(63) இவ்வாறு ஏழு இரவுகளுக்குப் பிறகு தேவர்களின் மன்னன் விலகி, மேகங்களில் இருந்து வானம் விடுபட்டுத் தெளிவடைந்த போது, சூரியன் முழுப் பிரகாசத்துடன் உதித்தான்.(64) பசுக்களும், ஆயர்களும் தாங்கள் (குகைக்குள்) நுழைந்த அதே வழியில் தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(65) வரங்களைத் தருபவனும், பூதங்கள் அனைத்துடன் அடையாளங்காணப்படுபவனுமான தலைவன் கிருஷ்ணன், உலகங்கள் அனைத்தின் நன்மைக்காக மகிழ்ச்சியான இதயத்துடன் அந்தச் சிறந்த மலையை நிறுவினான்[6]" என்றார் {வைசம்பாயனர்}.(66)

[6] "கிருஷ்ணன் கோவர்த்தன மலையைத் தன் விரல்களில் ஒன்றில் தாங்கிய அதிசயம் கிட்டத்தட்ட அனைத்துப் புராணங்களிலும், மஹாபாரதத்தின் சபா பர்வத்தில் கூட விளக்கப்படுகிறது. ஒரு மனிதன், அதுவும் பத்து வயதைக் கொண்ட ஒரு சிறுவன் கோவர்த்தனம் போன்ற ஒரு பெருமலையைத் தூக்குவது சாத்தியமற்றது என்ற நேரடி பொருளில் காணும்போது இந்நிகழ்வு நிச்சயம் நம்பமுடியாததாகவே இருக்கிறது. இது கோபர்களைப் பாதுகாப்பதற்காகக் கிருஷ்ணன் வெளிப்படுத்திய அற்புத சக்தியைக் குறிக்கும் உருவகம் என்பதில் ஐயத்திற்கிடமில்லை. பின்வரும் விளக்கத்தைக் கொண்டு அந்த உருவகத்தைப் பாதிப்பேதுன்றி உறுதி செய்யலாம். அவன் இந்திரனின் வழிபாட்டை நிறுத்தியால் அவனது தொண்டர்கள் {இந்திர வழிபாட்டாளர்கள் / மேகங்கள்} கோபர்களைத் தாக்கிய போது, கிருஷ்ணன் அவர்களையும், அவர்களது கால்நடைகள் மற்றும் பொருட்களையும் அந்த மலையில் அமர்த்திவிட்டு, இந்திரனின் தொண்டர்களுடன் போரிட்டான். இந்த அத்தியாயத்தின் பிற்பகுதியில் கோபர்கள் தங்கள் 'மலைவீடான' அந்த மலையின் குடைவரையில் நுழைந்தார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. மலையின் பிரமாண்டமான குகைகளில் ஒன்றில் அவர்கள் தஞ்சம் புகுந்தார்கள் என்பதையும், இந்திரனை வழிபட்டவர்களின் தாக்குதலுக்கு எதிராகக் கிருஷ்ணன் அவர்களைப் பாதுகாத்தான் என்பதையும் விளக்கும் உருவகமாக ஒருவேளை இஃது இருக்கலாம். விளக்கமென்னவாக இருப்பினும், இந்தச் சந்தர்ப்பத்தில் அவன் ஒரு மீமானிட அருஞ்செயலைச் செய்து காட்டினான் என்பது நிச்சயம் உண்மையாகும்" என மன்தநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

விஷ்ணு பர்வம் பகுதி – 73 – 018ல் உள்ள சுலோகங்கள் : 66
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்