Saturday 24 April 2021

நான் நாராயணன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 10

(ஏகார்ணவே பகவந்மார்கண்டேயஸம்வாத꞉)

The God after dissolution | Bhavishya-Parva-Chapter-10 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : நாராயணனின் வயிற்றுக்குள் இருந்து வெளிப்பட்ட மார்க்கண்டேயர்; ஒற்றைப் பெருங்கடலையும், சிறுவனையும் கண்டு கலங்கியது; மார்க்கண்டேயருக்கும் நாராயணனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...


Markandeya-Rishi-sees-the-illusory-potency-of-the-Lord

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இவ்வாறு அனைத்தும் ஒற்றைப் பெருங்கடலாக மாற்றப்பட்டதும், பெருஞ்சிறப்புவாய்ந்த தலைவன் ஹரி, பொருள் காரணமாக அமைந்திருந்த அண்டத்திற்கு அழிவை ஏற்படுத்தித் தூய புத்தியாக நிலைத்திருக்கிறான்.{1,2} ரஜஸ் குணத்திற்கு அப்பாற்பட்டவனும், நித்தியனெனக் கல்விமான்களால் சொல்லப்படும் பெரியவனுமான நாராயணன், தன் நனவால் மறைக்கப்பட்டவனாக, ரஜஸ் குணம், பூதங்கள் ஆகியவற்றின் பயனாக இருக்கும் கடக்கப்பட முடியாத பெருங்கடலுக்குள் மூன்று யுகங்கள் உறங்கிக் கிடக்கிறான்.{3,4} தலை, பாதங்கள் முதலியவற்றைக் கொண்ட புருஷனை யோகத்தாலும், வேள்விகளாலும் அடையலாம், ஆனால் மஹாபுருஷன் அவனிடம் இருந்து வேறுபட்டவனாவான். இந்தத் தூய புத்தி அனைத்திலும் கிடக்கிறது.{5}

தலைவன் தன் வாயில் {முகத்தில்} இருந்து பிரம்மனையும், சாமம் ஓதுபவர்களையும், தன் கரங்களில் இருந்து ஹோதாக்களையும், ஆத்வர்யு புரோஹிதர்களையும், படைத்தான்.{6} அதன்பிறகு, மித்ரனையும், வருணனையும், வேதம் ஓதுபவர்களையும், ஸம்பிரஸ்தாரரையும், பிரதிஷ்டாதாரரையும் படைத்தான்.{7} அவன் தன் வயிற்றில் இருந்து பிரதிஹர்தாரரையும், போதாரரையும் படைத்தான். அவன் தன் தொடைகள் இரண்டில் இருந்து அத்யபகரையும், நேஷ்டாரரையும் படைத்தான்.{8} தன் கைகளில் இருந்து அக்நீதரரையும், ஸுப்ரஹ்மண்யரையும், தன் தோள்களில் இருந்து கிராவாரரையும், உந்நேதாரரையும் படைத்தான்.{9} இவ்வாறே தலைவன் திறன்மிக்க இந்தப் பதினாறு வேள்விப் புரோகிதர்களையும் படைத்தான். தலைவன் வேதங்களில் பரமாத்மாவாக அறியப்படுகிறான்.{10} வேள்விகளின் மூலம் ஒருவன் அவனை அடையலாம். வேதங்கள், உபநிஷத்கள், வேள்விகள் ஆகியவையே அவனை அடைவதற்கான வழிமுறைகளாகச் சொல்லப்படுகின்றன.{11} தலைவன் தூய புத்தியின் வடிவில் நிலைத்திருக்கும்போது ஓர் அற்புத நிகழ்வு நடைபெறுகிறது. அதை மார்க்கண்டேயர் கண்டதாக நாம் கேள்விப்படுகிறோம்[1].{12}(1-12)

[1] இந்தக் கதை மஹாபாரதம் வனபர்வம் 187ம் அத்தியாயத்தில் மார்க்கண்டேய முனிவரே யுதிஷ்டிரனிடம் சொல்வதாக வருகிறது.  இரண்டுக்கும் இடையில் சில பல வேறுபாடுகள் இருக்கின்றன.

மஹாமுனி மார்க்கண்டேயர், தலைவன் கொடுத்த வரத்தின் மூலமும், தம் சக்தியின் மூலமும் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்தார். அவர் களைப்படைந்தபோது {அண்டம் அழிந்தபோது}, அவனது வயிற்றுப் பொந்துக்குள் வாழ்ந்திருந்தார்.{13} அங்கே அவர் பெயர்களை உரைத்து {நாம ஜபம் செய்து}, ஹோமத்தையும், கடுந்தவங்களையும் செய்தார். அதன்பிறகு புனிதப் பயணமாகப் புறப்பட்டு உலகின் புனிதத்தலங்கள், ஆசிரமங்கள், பல்வேறு நாடுகள், நகரங்கள் என அனைத்துக்கும் சென்றார்.{14} இவ்வாறு பயணித்த அவர் படிப்படியாகத் தலைவனின் வாயை விட்டு வெளியே வந்தார்; ஆனால் தேவனின் மாயசக்தியில் மூழ்கிய அவரால் தாம் வெளியே வந்துவிட்டோம் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.{15,16}(13-16)

இவ்வாறு அவனது வாயில் இருந்து வெளியே வந்த மார்க்கண்டேயர், அறியாமை இருளில் அனைத்தும் மறைக்கப்பட்டதும், தூய புத்தியாக இருக்கும் பிரம்மத்தை ஒற்றைப் பெருங்கடலாகக் கண்டார்.{17} அதைக் கண்ட அவர் பேரச்சத்தால் பீடிக்கப்பட்டவராகத் தமது உயிர் குறித்துக் கவலை கொண்டார்.{18} ஆனால் அவர், தூய புத்தியைக் கண்டு நிறைவடைந்து, பேராச்சரியத்தில் நிறைந்தார். குறிப்பாகவோ, மொத்தமாகவோ அனைத்தையும் பகுத்துப் பார்க்க இயலாமல் அச்சத்தால் பீடிக்கப்பட்ட அவர்,{19} "இஃது என் எண்ணமா? மயக்கமா? கனவா? இவையனைத்தும் எனக்கு வேறு ஒளியில் தெரிகின்றனவே, ஒன்றும் உண்மையாகத் தெரியவில்லையே.{20} உண்மையானது, பற்றுகளும், அறியாமையின் துன்பமும் அற்றது. அஃது ஒருபோதும் இத்தகைய மனோ விருப்பத்தில் தோன்றாது. சந்திரனும், சூரியனும், காற்றும், மலைகளும், பூமியும் இல்லாத இந்த இடம் யாது?" என்று நினைத்தார்.{21}

அவர் இவ்வாறு நினைத்தபோது, நீருண்ட மேகம் போல இருந்த அந்தப் பெருங்கடலில், மலை போன்ற புருஷன் உறங்கிக் கிடப்பதைக் கண்டார். அந்தப் புருஷன் தன் சூரியப் பிரகாசத்தால் உலகங்களைப் பீடித்துக் கொண்டிருந்தான்.{22} அவன் தன்னைத் தாங்கிக் கொள்ளும் ஈர்ப்பு விசைக்காக விழித்திருந்து ஒரு பாம்பைப் போல மூச்சுவிட்டுக் கொண்டிருந்தான்.{23}(17-23)

அந்தப் பெரும் முனிவர் மார்க்கண்டேயர், "இவன் யாராக இருக்கக்கூடும்?" என்று ஆவல் கொண்டவராகத் தலைவனை அணுகி படிப்படியாக அவனது வயிற்றுப் பொந்துக்குள் நுழைந்தார்.{24} அங்கே நுழைந்ததும், தாம் கண்டது கனவே என்ற உறுதியான நம்பிக்கையுடன் முன்பு போலவே அங்கே திரியத் தொடங்கினார்.{25} முன்பு மார்க்கண்டேயர் புனிதத் தலங்கள் அனைத்துக்கும் சென்று பூமியின் பரப்பில் திரிந்து வந்ததைப் போலவே இப்போதும் அங்கெல்லாம் சென்றார்.{26} அவர், தேவனின் வயிற்றுப் பொந்துக்குள் ஏராளமான கொடைகளுடன் வேள்விகளைச் செய்தோர் நூற்றுக்கணக்கானோரையும், பிராமணர்களையும், நான்கு ஆசிரமக் கடமைகளை நோற்பவர்களும், நல்ல வழிகளைப் பின்பற்றுபவர்களும், நல்லொழுக்கம் கொண்டவர்களுமான பிற வர்ணத்தாரையும் தமது யோக சக்தியின் மூலம் கண்டார்.{27,28} நுண்ணறிவுமிக்க மார்க்கண்டேயரால் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வருடங்கள் அங்கே பயணித்தாலும் அந்தப் பொந்தின் எல்லையை அடைய முடியவில்லை.{29}(24-29)

பிறகு ஒரு காலத்தில் மீண்டும் மார்க்கண்டேயர் (தலைவனின்) வாயில் இருந்து வெளியே வந்து, ஒரு சிறுவன் ஆலமரத்தின் கிளையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.{30} ஒற்றைப் பெருங்கடலால் சூழப்பட்டிருந்த அந்தக் காட்டின் உட்பகுதி பனியால் மறைக்கப்பட்டிருந்ததால் எதுவும் புலப்படவில்லை; பூமி நால்வகை உயிரினங்கள் அற்றதாக இருந்தது, அனைத்தையும் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தது.{31,32} இதைக் கண்ட மார்க்கண்டேயர் ஆவலில் நிறைந்தாலும், ஆயிரஞ்சூரியர்களின் பிரகாசத்தைக் கொண்ட அந்தச் சிறுவனின் அருகே செல்ல இயலவில்லை. தலைவனின் மாயைக்கு அஞ்சிய அவர் தனிமையில் நீரில் நின்றவாறே,{33} "இதை நான் ஏற்கனவே கண்டேனில்லையா?" என்று நினைத்தார். பிறகு அவர், அமைதியானதும், எல்லையற்றதுமான அந்தப் பெருங்கடலுக்குள் இறங்கி, அச்சத்துடன் களைப்படைந்தும் அங்கே ஓய்வெடுக்கத் தொடங்கினார்[2].{34}(30-34)

[2] மஹாபாரதம் வனபர்வம் 188ம் அத்தியாயத்தில் நாராயணன் மார்க்கண்டேயரிடம் பேசியது சொல்லப்பட்டிருக்கிறது. 

அப்போது அன்னத்தின் வடிவை ஏற்றிருந்த தலைவன் புருஷோத்தமன், தன் யோகசக்தியின் மூலம் சிறுவனாகி, மேக முழக்கம் போன்ற குரலில் பேசத் தொடங்கினான்.(35) தலைவன், "ஓ! மகனே, ஓ! வீரர்களிலும், தவசிகளிலும் முதன்மையானவனே, ஓ! மார்க்கண்டேயா, நீ சிறுவனாக இருக்கிறாய். நீ உழைப்பால் பெரிதும் களைப்படைந்திருக்கிறாய். என் அருகில் வா, அச்சம் வேண்டாம்" என்றான்.(36)

மார்க்கண்டேயர், "பல்லாயிரம் ஆண்டுகள் கொண்ட என் வயதையும், தவத்தையும் அழித்து, பெயர் சொல்லியும் அழைத்து என்னை இவ்வாறு பீடிப்பவன் {துன்புறுத்துபவன்} எவன்?{37} அண்டத்தின் தலைவனான பிரம்மன் நீண்ட வாழ்நாளைக் கொண்டவனாக என்னை நியமித்திருக்கும்போது, தேவர்களில் எவரும் என்னை இவ்வாறு அழைப்பது தகாது.{38} என் தவச் சக்தியால் என்னுடைய தலை அழியா தன்மையை அடைந்துள்ளது. உயிரை விட விரும்பும் எந்த மனிதன் என் பெயரைச் சொல்லி அழைத்து மரணத்தைக் காணும் விருப்பத்தை உணர்ந்தான்?" என்று கேட்டார்".{39}(37-39)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பெரும் முனிவர் மார்க்கண்டேயர் கோபத்தில் இவ்வாறு தம்மை வெளிப்படுத்திக் கொண்டபோது, தலைவன் சினத்தில் நிறைந்திருந்த அவரிடம் மீண்டும் பேசினான்.(40)

தலைவன், "ஓ! மகனே, நான் உன் தந்தையும், ஆசானும், புராதன புருஷனும், உனக்கு நீண்ட வாழ்நாளை அருளியவனுமான ரிஷிகேசன் ஆவேன். நீ ஏன் என்னை அணுகாதிருக்கிறாய்?(41) முன்பு உன் தந்தை ஹிரண்யகர்ப்பன், கடுந்தவங்களைச் செய்து ஒரு மகனைப் பெறுவதற்காக என்னைத் துதித்தான்.{42} எல்லையற்ற வாழ்நாளையும், நெருப்பைப் போன்ற பிரகாசத்தையும், பயங்கரத் தலையையும் கொண்ட மஹாரிஷியாக உன்னைப் படைத்து என் விருப்பத்துடன் நான் உன்னை அவனுக்கு அளித்தேன்.{43} நான் யோகத்தில் ஈடுபட்டு, எங்கும் பரந்த பெருங்கடலில் விளையாடிக் கொண்டிருக்கும்போது என் உற்றார் உறவினனைத் தவிர வேறு எவனாலும் என்னைக் காண இயலாது" என்றான்".{44}(42-44)

வைசம்பாயனர், "தமது பெயரையும், குலத்தையும் கேட்டவரும், நீண்ட ஆயுளைக் கொண்டவரும், உலகால் துதிக்கப்படுபவரும், பெரும் தவசியுமான மார்க்கண்டேயர், மகிழ்ச்சிமிக்க இதயத்துடனும், ஆச்சரியத்தால் விரிந்த விழிகளுடனும், தலைக்கு மேல் தமது கரங்களைக் குவித்துக் குனிந்த தலையுடன் தலைவனை வணங்கினார்.(45,46)

மார்க்கண்டேயர், "ஓ! பாவமற்றவனே, சிறுவனின் வடிவை ஏற்று ஒற்றைப் பெருங்கடலில் கிடக்கும் உன் மாயா சக்தியை உண்மையில் நான் அறிய விரும்புகிறேன்.{47} ஓ! தலைவா, இஃது என்ன வடிவம்? நீ இவ்வுலகில் என்ன பெயரால் அழைக்கப்படுகிறாய்? இங்கே ஒரு பூதமும் இல்லையே. நீயே பெரும்பூதம் என நினைக்கிறேன்" என்றார்.{48}(47,48)

தலைவன், "நானே நாராயணன், பிரம்மமும், உயிரினங்கள் அனைத்தின் பிறப்புக் காரணனனும் நானே. பூதங்கள் அனைத்தையும் படைப்பவன் நானே, அவற்றை அழிப்பவனும் நானே.{49} இந்திரனும், பருவகாலங்களுக்கு மத்தியில் வருடம், யுகங்களின் யுகம், யுகங்களின் சுழற்சி ஆகியவையும் நானே.{50} உயிரினங்கள் மற்றும் தேவர்களின் மொத்தக் கூட்டமும் நானே. பாம்புகளில் சேஷன் நானே, பறவைகளில் கருடன் நானே,{51} ஆயிரம் தலைகளையும், ஆயிரம் கால்களையும் கொண்டவன் நான், நானே ஆதித்யன், நானே வேள்வி புருஷன், நானே வேள்வி, நானே ஆகுதிகளைச் சுமக்கும் அக்னி, என்னை நித்தியனாக அறிவாயாக.{52} உலகில் கடுந்தவங்களைப் பயின்று தங்கள் ஆன்மாக்களைத் தூய்மையடைச் செய்தவர்களும், பல பிறவிகளாக இதைப் பயின்று என் அறிவுப் புலன்களைக் கட்டுப்படுத்தியவர்களுமான இருபிறப்பாளர்களில் நான் பிராமண யதியாக இருக்கிறேன்.{53} தூய ஞானமும், அண்டத்தின் ஆன்மாவும், யோகிகளில் முதன்மையானவனும் நானே. பூதங்கள் அனைத்தையும் அழிப்பவனும், அண்டத்தின் கதியும் நானே.{54} கர்மம் நானே, சக்தி நானே, உயிரினங்களிடம் அறத்தை எடுத்து வைப்பவன் நானே. எனக்கென்று கர்மமேதும் இல்லை.{55} உயிரினங்களின் நித்திய ஆன்மா நானே. பிரகிருதி நானே, புருஷன் நானே, அழிவற்ற நித்தியமான பரமன் நானே.{56} அனைத்து வகைகளையும் பின்பற்றுவோரின் கடமையாகவும், தவமாகவும் இருப்பவன் நானே. பாற்கடலின் தலைமை தேவனான ஹயசிரன் நானே.{57}

வாய்மை நானே, உண்மை நானே, பெரியவன் நானே, பிரஜாபதி நானே. வேள்விகளால் துதிக்கப்படத்தகுந்த பெரும் நிலையாகவும், சாங்கியமாகவும், யோகமாகவும், கல்வியின் தலைவனாகவும் அறியப்படுபவன் நானே.{58} ஒளி, காற்று, பூமி, வானம், நீர், பெருங்கடல், விண்மீன்கள், பத்துத்திக்குகளும் நானே. வருடம், சோமன், இந்திரன், சூரியன்,{59} பாற்கடல், பிற பெருங்கடல்கள், காட்டுத்தீ, சம்வர்த்தக நெருப்பும் நானே. நீராலான ஹவியைப் பருகுபவன் நானே. புராதனனும், பெரியவனும், எதிர்காலமுமான நான், அனைத்தின் பிறப்பிடமாக அறியப்படுகிறேன். இவ்வுலகில் உன்னால் காணப்படும், கேட்கப்படும் யாவும் நானே.{60-62} ஓ! மார்க்கண்டேயா, இந்த அண்டத்தை இதற்கு முன்பே நான் படைத்திருக்கிறேன். இதோ பார், இன்று நான் அதைப் படைக்கப் போகிறேன், மீண்டும் மீண்டும் ஒவ்வொரு யுக சுழற்சியிலும் நான் இதைச் செய்வேன்.{63} இவை யாவற்றையும் புரிந்து கொண்டு, அறத்தையும், என் ஆன்ம சக்திகளையும் அடையும் ஆவலில் என் வயிற்றுப் பொந்துக்குள் மகிழ்ச்சியாகத் திரிவாயாக.{64} பிரம்மனுடன், முனிவர்களும், தேவர்களும் என்னுடலில் வாழ்ந்து வருகிறார்கள். எனவே, என்னை வெளிப்பட்டவனாகவும், வெளிப்படாதவனாகவும், யோகமாகவும், வெற்றிகொள்ளப்படாதவனாகவும் அறிவாயாக.{65} மூவுலகங்களின் பெரும்புதிரான ஓம் எனும் மந்திரமும், வாழ்வின் மூன்று நோக்கங்களை அளிக்கும் என அறியப்படும் புனித காயத்ரி மந்திரமும் நானே" என்றான் {நாராயணன்}".{66}(49-66)

வைசம்பாயனர், "அண்ட வடிவை ஏற்ற தலைவன் மார்க்கண்டேய ரிஷியைத் தன் வாய் வழியாக வயிற்றுக்குள் நுழையச் செய்ததைப் பெரும் முனிவர் வியாசர் வேதங்களிலும், புராணங்களிலும் விளக்கிச் சொல்லியிருக்கிறார்.{67} முனிவர்களில் முதன்மையான மார்க்கண்டேயர், வெளிப்படாத பரமாத்மாவைத் தனிப்பட்ட முறையில் கண்டு, பராமனந்தத்தில் திளைக்கவும், வயிற்றின் பொந்துக்குள் நுழைந்து அங்கே மகிழ்ச்சியுடன் ஓய்ந்திருந்தார்.{68} நித்திய தலைவனான பரமாத்மா, பல்வேறு வடிவங்களை ஏற்று, சூரியனும், சந்திரனும் அற்ற பெருங்கடலில் திரிந்து படிப்படியாக உலகை உண்டாக்கி, அழிவுக்கான நேரம் வரும்போது அதை அழிக்கிறான்" என்றார் {வைசம்பாயனர்}.{69}(67-69)

பவிஷ்ய பர்வம் பகுதி – 10ல் உள்ள சுலோகங்கள் : 69

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்