Wednesday 10 March 2021

ஹரிஹர ஐக்கியம் | விஷ்ணு பர்வம் பகுதி – 183 – 127

(பிரஹ்மவாக்யாத்க்ருஷ்ணபாணயோர்யுத்தநிவ்ருத்தி꞉ பிதாமஹஜிஜ்ஞாஸயா மார்கண்டேயகர்த்ருகம் ஹரிஹரமாஹாத்ம்யகீர்தனம் ஸ்தவகதனம் ச)

The earth goes to Brahma; Markandeya explains how Brahma, Vishnu, Siva are one | Vishnu-Parva-Chapter-183-127 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : சிவனைக் கலங்கடித்த கிருஷ்ணன்; பிரத்யும்னன் செய்த போர்; சிவனிடம் பேசிய பிரம்மன்; சிவ விஷ்ணு ஐக்கியம் நிறுவப்படல்; ஹரிஹராத்மகத் துதி...


Encounter between Shiva and Krishna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "{வைஷ்ணவ ஆயுதத்தால்} (சிவனின்) முக்கண்களும் எரிந்து கொண்டிருந்த போது, உலகங்கள் அனைத்தும் இருளில் மூழ்கின; நந்தியும், ருத்ரனும், அவனது தேரும் புலப்படவில்லை.(1) அப்போது கோபத்தாலும், பலத்தின் காரணமாகவும் இரண்டு மடங்கு பிரகாசத்துடன் எரிந்து கொண்டிருந்த ருத்ரன், நான்கு பக்கங்களிலும் கூரிய ஈட்டிகளைக் கொண்டதும், திரிபுரமெரிக்கப் பயன்பட்டதுமான தன் கணையை {சதுர்முகப் பாணத்தை} எடுத்துக் கொண்டான்.(2) அந்த முக்கண் தேவன், அந்தக் கணையை எடுத்துத் தன் வில்லில் பொருத்தி அதை ஏவ முற்பட்டபோது, அனைவரின் மனங்களையும் அறியும் உயரான்ம வாசுதேவன் {கிருஷ்ணன்} அதை அறியவந்தான்.(3) அதன்பிறகு, கரநளினம் கொண்டவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான புருஷோத்தமன் ஜிரும்பணம் {கொட்டாவி} எனும் ஆயுதத்தை எடுத்து, அதைக் கொண்டு ஹரனைக் கொட்டாவி விட வைத்தான் {அவனைச் சோம்பியிருக்கச் செய்தான்}.(4) அசுரர்களையும், ராட்சசர்களையும் வெல்பவனும், வில், கணைகளுடன் கூடியவனுமான தெய்வீக ஹரன், அந்தக் கணையால் கலக்கமடைந்து, நனவை இழந்தான்.(5) {சக்தியால் செருக்கில் இருந்த பாணன், வில், கணைகளுடன் கூடிய ஹரன் கொட்டாவி விடுவதைக் கண்டு அவனைத் தூண்டினான்}.

அனைத்துடனும் அடையாளங்காணப்படுபவனும் {பூதாத்மாவும்} பெருஞ்சக்திவாய்ந்தவனுமான கிருஷ்ணன், தன் ஆயுதத்தால், வில்லுடனும், கணைகளுடனும் தன் சொந்த வடிவமாகவே இருந்த ருத்திரனைக் கலங்கடித்துவிட்டுத் தன் சங்கை முழக்கினான்.(6) சங்கரன் கலங்கியதைக் கண்டும், அவனுடைய பாஞ்சஜன்ய சங்கின் முழக்கத்தையும், அவனுடைய சாரங்க வில்லின் நாணொலியையும் கேட்டும் உயிரினங்கள் அனைத்தும் அச்சத்தால் நிறைந்தன.(7) அதே நேரத்தில் போர்க்களத்திற்கு வந்த ருத்ரனின் தொண்டர்கள் {கணங்கள்}, மாயப் போர் புரிந்து பிரத்யும்னனைத் தாக்கினர்.(8) எனினும், பெருஞ்சக்திவாய்ந்தவனும், ஆற்றல்மிக்கவனுமான அந்த மகரகேதனன் {மீன் கொடியோன்}, அவர்கள் அனைவரையும் உறங்கச் செய்து, தங்களுக்கு மத்தியில் எண்ணற்ற பிரமதர்களைக் கொண்ட தானவர்களைத் தன் கணைகளால் கொல்லத் தொடங்கினான்.(9,10) களைப்பில்லா இயக்கத்தைக் கொண்ட ருத்திரன் கொட்டாவி விட்ட போது, அவனுடைய வாயில் இருந்து தீச்சுடர் வெளிப்பட்டுப் பத்து திக்குகளையும் எரித்தது.(11)

பெருஞ்சக்திவாய்ந்தவர்களுடைய அந்தப் படைகளால் தாக்கப்பட்ட பூமாதேவி {பிரித்வி}, நடுங்கியவளாகப் பிரம்மனை அணுகி,(12) "ஓ! பெருங்கரங்களைக் கொண்டவரே, ஓ! பெருந்தேவா, பெருஞ்சக்திகளால் நான் தாக்கப்படுகிறேன். மீண்டும் பரந்து விரிந்த ஒரே பெருங்கடலாகி விடும் அளவுக்கு நான் ருத்திரனின் கனத்தாலும், கேசவனின் கனத்தாலும் பீடிக்கப்படுகிறேன்.(13) ஓ! பெரும்பாட்டா, பொறுத்துக் கொள்ள முடியாத இந்தச் சுமையை நான் சுமந்து வருவது குறித்துச் சிந்திப்பீராக. என் சுமையில் இருந்து நான் விடுபடுவதற்கும், அசைவன, அசையாதன ஆகிய படைப்புகளை நான் தாங்குவதற்கும் உரிய வழிமுறைகளைக் கண்டடைவீராக" என்றாள்".(14)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இதைக் கேட்ட பெரும்பாட்டன் {பிரம்மன்}, கசியபரின் மகளிடம் {காசியபியிடம் / பூமியிடம்}, "ஒரு கணம் {ஒரு முஹுர்த்த காலம்} பொறுத்துக் கொள்வாயாக. உன் சுமையில் இருந்து நீ விடுபடுவாய்" என்றார்.(15)

அதன்பிறகு பிரம்மன், ருத்ரனிடம், "இந்தப் பேரசுரனைக் கொல்லும் வழிமுறைகளை நீயே வகுத்தாய்[1]; பின்பு ஏன் நீ அவனைப் பாதுகாக்க விரும்புகிறாய்?(16) ஓ! பெருங்கரங்களைக் கொண்டவனே, கிருஷ்ணனுடன் நீ போரில் ஈடுபடுவதை நான் விரும்பவில்லை. கிருஷ்ணன் உன் இரண்டாவது உடல் என்பதை நீ அறியமாட்டாயா?" என்று கேட்டான்.(17)

[1] உன் கொடிமரம் நொறுங்கும்போது போர் நேரும் எனப் பாணனுக்குச் சிவன் அளித்த வரத்தை இங்கே பிரம்மன் நினைவுகூர்கிறான். காண்க: ஹரிவம்ச விஷ்ணு பர்வம் 117: 30,31 

நித்தியத் தலைவனான அந்த முக்கண்ணன், பிரம்மனின் சொற்களைக் கேட்டுப் பிரம்மத்தின் {ஆன்மாவின்} மீது மனத்தைக் குவித்து அதற்குள் அசைவன, அசையாதன உள்ளிட்ட மூவுலகங்களையும் கண்டான்.(18) பெரும் யோகியான அந்தப் பவன், வில்லுடனும், கணைகளுடனும் தான் ஸ்தம்பித்திருப்பதைக் கண்டு, தான் அளித்த வரத்தையும், துவாரகையில் தான் சொன்னதையும் தியானத்தின் மூலம் சிந்தித்தான்;(19) எனவே அவன் {பிரம்மனிடம்} மறுமொழி கூறாதிருந்தான். அவன் தன்னில் கிருஷ்ணனையும், தாங்கள் இருவரும் ஒருவரே {பிரம்மமே} என்பதையும் கண்டு தணிவடைந்தவனாகப் போர்க்களத்தை விட்டு அகன்றான்.(20)

ருத்ரன் பிரம்மனிடம், "ஓ! தலைவா, இனியும் நான் போரிடேன். கிருஷ்ணனுக்கும், பாணனுக்கும் இடையில் நடக்கும் இந்தப் போரில் பூமி தன் சுமையில் இருந்து விடுபடுவாள்" என்றான்.(21)

அதன் பிறகு, கிருஷ்ணனும், ருத்ரனும் பெருமகிழ்ச்சியுடன் போர்க்களத்தை விட்டு ஓய்ந்து, ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்டனர்.(22) அந்தப் பெரும் யோகிகள் இருவரும் ஒன்று சேர்ந்த போது, அவர்களை எவராலும் காண முடியவில்லை. {உலகமே அவர்களை இவ்வாறு அமைத்தது என்பதைக் கண்ட பெரும்பாட்டனான பிரம்மன் மட்டுமே அவர்களை ஒருவராக உணர்ந்தான்}.(23)

அனைத்தையும் படைத்தவனான பிரம்மன், ஹரனுக்கும், ஹரிக்கும் இடையில் சமாதானத்தைக் கொண்டு வந்தும், அவர்களில் தன்னைக் கண்டும் தன் அருகில் இருந்த முனிவர்களான நாரதரிடமும், மார்க்கண்டேயரிடமும்,(24) "இரவில் கனவில் பவனையும், கேசவனையும், மந்தர மலையின் அருகில் உள்ள தடாகத்தில் கண்டேன்.(25) அங்கே ஹரனை ஹரியின் வடிவிலும், ஹரியை ஹரனின் வடிவிலும் கண்டேன். ஹரன், தன் கைகளில் சங்கு, சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைக் கொண்டிருந்தான், மஞ்சளாடை உடுத்தியிருந்தான், கருடனைச் செலுத்தினான்.(26) ஹரி, தன் கைகளில் திரிசூலம், பட்டிசம் ஆகியவற்றைக் கொண்டிருந்தான், புலித்தோலை உடுத்தியிருந்தான், காளையைச் செலுத்தினான்.(27) பேரற்புதமிக்க அக்காட்சியைக் கண்டு நான் ஆச்சரியத்தால் நிறைந்தேன். ஓ! மார்க்கண்டேயரே, உண்மையை {இதில் உள்ள ரகசியத்தை} எனக்கு விளக்கிச் சொல்வீராக" என்று கேட்டான் {பிரம்மன்}.(28)

மார்க்கண்டேயர், "சிவன் விஷ்ணுவுக்கு ஒப்பானவன், விஷ்ணு சிவனுக்கு ஒப்பானவன், இதில் வேறுபாடேதும் எனக்குத் தெரியவில்லை. அவ்விருவரும், மங்கலமானவர்களும்,(29) தொடக்கம், நடு, முடிவு ஆகியவை அற்றவர்களும், நித்தியமானவர்களும், குறைவற்றவர்களும் ஆவர். ஹரிக்கும், ஹரனுக்கும் ஒப்பான வடிவை விளக்குகிறேன் கேட்பீராக.(30) விஷ்ணுவே ருத்ரனாவான்; ருத்ரனே பிரம்மனாவான். பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் ஆகியோர் ஒருவரே, ஒரே வடிவம் கொண்டவரே.(31) அவர்கள் மூவரும், பெரும் தவசிகளும், பாதி உடல் பெண்ணாகக் கொண்ட தலைவர்களும், சுயம்புக்களும், வரங்களை அளிப்பவர்களும், அண்டத்தின் அதிகாரிகளுமாவர்.(32) நீருடன் நீர் கலப்பதைப் போலவே விஷ்ணு ருத்ரனுடன் ஒன்றாகிறான் {ருத்ரனுடன் கலக்கும் விஷ்ணு ருத்ரமயனாகிறான்}.(33) நெருப்புடன் நெருப்பு கலப்பதைப் போலவே ருத்ரனும் விஷ்ணுவுக்கு ஒப்பாகிறான் {விஷ்ணுவுடன் கலக்கும் ருத்ரன் விஷ்ணுமயனாகிறான்}.(34) ருத்திரன் நெருப்புக்கு ஒப்பானவன் {அக்னிமயமானவன்}, விஷ்ணு சோமனுக்கு ஒப்பானவன் {சந்திரமயமானவன் / அமுதமயமானவன்}. அசைவன, அசையாதன உள்ளிட்ட படைப்புகளைக் கொண்ட இந்த அண்டமானது, நெருப்பும் சோமனும் இணைந்த ஒன்றாகும் {அக்னி சோம மயமானதாகும்}.(35) மஹேஷ்வரனே அவற்றை அழிப்பவன், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றுக்கு ஒப்பான தலைவன் நாராயணனும், மஹேஷ்வரனும் ஹிரண்யகர்ப்பனுக்கும் {பிரம்மனுக்கும்}, பெரும் கோட்பாடுகளுக்கும் அடிப்படை காரணிகளாக அமைகின்றனர் {நாராயணனும், சிவனும் கர்த்தாவிற்கும், காரணத்திற்கும் கர்த்தாக்களாக இருக்கின்றனர்}. அவ்விருவருமே வேதங்களைக் கொடுப்பவர்கள். அவர்களே அண்டத்தைப் படைப்பவர்களும், பாதுகாப்பவர்களுமாவர்.(36,37) இந்திரனின் வடிவில் மழையைப் பொழிபவர்களும், சூரியனின் வடிவில் கதிர்களைப் பரப்புபவர்களும் அவர்களே. காற்றின் வடிவில் வீசி அனைத்தையும் படைப்பவர்கள் அவர்களே. இவ்வாறே, ஓ! பெரும்பாட்டா, நான் உமக்குப் பெரும் ரகசியத்தை விளக்கிச் சொன்னேன்.(38) இதை நாள்தோறும் படிப்பவனும், கேட்பவனும், விஷ்ணுவின் சக்தியாலும், ருத்ரனின் சக்தியாலும் படைக்கப்பட்ட மிகச் சிறந்த உலகை அடைவார்கள் {விஷ்ணு, ருத்ரன் ஆகியோரின் விருப்பத்திற்குரிய உயர்ந்த கதியை அடைவார்கள்" என்றார் மார்க்கண்டேயர்}.(39)

{வைசம்பாயனர் தொடர்ந்தார்}, "படைப்பவனும், காப்பவனும், அழிப்பவனுமாக இருக்கும் பிரம்மன், ஹரி, ஹரன் ஆகியோரின் மகிமைகளை நான் பாடப் போகிறேன்.(40) ருத்ரனுக்குப் பரமன் விஷ்ணு, விஷ்ணுவுக்குப் பரமன் ருத்ரன். அவர்கள் ஒருவராகவே இருப்பினும், இவ்வுலகில் இரு வடிவங்களில் திரிகின்றனர்.(41) சங்கரன் இல்லாமல் விஷ்ணுவும் இல்லை, கேசவன் இல்லாமல் சிவனும் இல்லை. இதன் காரணமாகவே, ருத்ரனும், உபேந்திரனும் முற்காலத்தில் ஒருமையை அடைந்தனர். ஓருடலாக இருக்கும் ருத்ரனையும், கிருஷ்ணனையும் வணங்குகிறேன்.(42) முக்கண்ணனை {சிவனை} வணங்குகிறேன், இரண்டு கண்ணனை {விஷ்ணுவை} வணங்குகிறேன், தாமிரக் கண்ணனை {சிவனை} வணங்குகிறேன், தாமரைக் கண்ணனை {விஷ்ணுவை} வணங்குகிறேன்.(43) {குமாரனின் குருவையும் [சிவனையும்], பிரத்யும்னனின் குருவையும் [விஷ்ணுவையும்] வணங்குகிறேன்}. பூமியைத் தாங்குபவனையும் {விஷ்ணுவையும்}, {கங்கையைத் தரித்தவனையும் [சிவனையும்] வணங்குகிறேன}.(44) மயில் இறகுகளைத் தரிப்பவனையும் {கிருஷ்ணனையும்}, கேயூரம் தரித்தவனையும் {சிவனையும்} வணங்குகிறேன். மண்டையோட்டு மாலையால் அலங்கரிக்கப்பட்டவனையும் {சிவனையும்}, காட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனையும் {விஷ்ணுவையும்},(45) திரிசூல பாணியையும், சக்கரபாணியையும், தங்கக் கொடிமரம் கொண்டவனையும் {விஷ்ணுவையும்}, பிரம்ம தண்டம் கொண்டவனையும் {சிவனையும்} வணங்குகிறேன்.(46) தோலாடை உடுத்தியவனை வணங்குகிறேன், மஞ்சளாடை {பீதாம்பரம்} உடுத்தியவனை வணங்குகிறேன். லக்ஷ்மியின் தலைவனையும், உமையின் தலைவனையும் வணங்குகிறேன்.(47) திரிசூலபாணியையும், கதாதாரியையும் வணங்குகிறேன். சாம்பல் மேனியனையும், நீலவண்ண மேனியனையும் வணங்குகிறேன்.(48) சுடலையில் வாழ்பவனையும், ஆசிரமத்தில் {பெருங்கடலில்} வாழ்பவனையும் வணங்குகிறேன். காளையை வாகனமாகக் கொண்டவனையும், கருடனை வாகனமாகக் கொண்டவனையும் வணங்குகிறேன்.(49) ஒரே வடிவில் இருப்பவனையும், பல வடிவங்கள் கொண்டவனையும், அழிவின் தலைவனையும், மூவுலகங்களையும் தாங்குபவனையும் வணங்குகிறேன்[2].(50)

[2] மன்மதநாததத்தரின் பதிப்பில் இத்துடன் இந்த அத்யாயம் நிறைவடைகிறது. பின்வருவன சித்திர சாலை பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

மென்மையான வடிவம் கொண்டவனையும், கடுமையான வடிவம் கொண்டவனையும் வணங்குகிறேன். பல்வேறு பார்வைகளைக் கொண்டவனையும், மென்மையான பார்வையைக் கொண்டவனையும் வணங்குகிறேன்.(51) தக்ஷனின் வேள்வியை அழித்தவனை வணங்குகிறேன். பலியைக் கட்டியவனை வணங்குகிறேன். மலையில் வசிப்பவனை வணங்குகிறேன். பெருங்கடலில் வசிப்பவனை வணங்குகிறேன்.(52) தேவரின் பகைவரைக் கொல்பவனை வணங்குகிறேன். திரிபுரம் அழித்தவனை வணங்குகிறேன். நரகனைக் கொன்றவனை வணங்குகிறேன். காமனின் அங்கங்களை அழித்தவனை வணங்குகிறேன்.(53) அந்தகனைக் கொன்றவனை வணங்குகிறேன். கைடபனைக் கொன்றவனை வணங்குகிறேன். ஆயிரங்கரத்தோனை வணங்குகிறேன். பல கரங்களைக் கொண்டவனை வணங்குகிறேன்.(54) ஆயிரந்தலையோனை வணங்குகிறேன். பல தலைகளைக் கொண்டவனை வணங்குகிறேன். தலைவன் தாமோதரனை வணங்குகிறேன். இடையில் புல் மாலை அணிந்த தலைவனை {முஞ்ச மேகலையனை} வணங்குகிறேன்.(55)

ஓ! தலைவன் விஷ்ணுவே, நான் உன்னை வணங்குகிறேன். ஓ! தலைவன் சிவனே நான் உன்னை வணங்குகிறேன். ஓ! தலைவா, நான் உன்னை வணங்குகிறேன். தேவர்களால் வழிபடப்படும் தலைவா, நான் உன்னை வணங்குகிறேன்.(56) ஓ! சாம மந்திரங்களில் துதிக்கப்படும் தலைவா, நான் உன்னை வணங்குகிறேன். ஓ! யஜுர் வேதங்களில் துதிக்கப்படும் தலைவா, நான் உன்னை வணங்குகிறேன். ஓ! தேவர்களின் பகைவரைக் கொல்பவனே, நான் உன்னை வணங்குகிறேன். ஓ! தேவர்களாலும் வழிபடப்படுபவனே நான் உன்னை வணங்குகிறேன். செயல்படுபவர்களின் செயலாக இருக்கும் தலைவனை நான் வணங்குகிறேன். அளவற்ற ஆற்றல் படைத்தவனை வணங்குகிறேன். ஓ! புலன்களின் தலைவா, நான் உன்னை வணங்குகிறேன். ஓ! பொன்மயிர் கொண்டவனே, நான் உன்னை வணங்குகிறேன்.(57)

பேராத்மாக்களான ருத்ரனுக்கும், விஷ்ணுவுக்கும் உரிய இந்தத் துதியை முனிவர்கள் அனைவரும் ஓதுகின்றனர். இந்தத் துதியைப் பெரும் முனிவர்களில்(58) வேதவிற்பன்னரான வியாசர், புத்திமானான நாரதர், பாரத்வாஜர், கர்க்கர், விஷ்வாமித்ரர் ஆகியோரும், பேராத்மாக்களான அகஸ்தியர், புலஸ்தியர், தௌமியர் ஆகியோரும் ஓதினர்.(59)

இந்த ஹரிஹரத் துதியை {ஹரிஹராத்மகத்தை} நாள்தோறும் படிப்பவர்கள் எந்நோயில் இருந்தும் விடுபட்டு, வலிமையுடன் திகழ்வார்கள். இதில் ஐயமில்லை.(60) அவர்கள் எப்போதும் செழிப்பையே அடைவார்கள். அவர்கள் ஒருபோதும் சொர்க்கத்தில் இருந்து நழுவமாட்டார்கள்.(61) குழந்தைகளற்றவர்கள் குழந்தைகளைப் பெறுவார்கள். கன்னிகை நல்ல கணவனை அடைவாள். கருவுற்ற பெண் இந்தத் துதியைக் கேட்டால் அவள் சிறந்த மகனைப் பெறுவாள்.(62) இந்தத் துதி ஓதப்படும் இடத்தில் ராட்சசர்களும், பிசாசங்களும், பெருந்தடைகளும் அச்சத்தை ஏற்படுத்துவதில்லை" {என்றார் வைசம்பாயனர்}.(63)

விஷ்ணு பர்வம் பகுதி – 183 – 127ல் உள்ள சுலோகங்கள் : 63
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்