(பித்ரு கல்பம் - 3 | யோகாப்ரம்சாநிரூபணம்)
Bharadwaja's Family | Harivamsa-Parva-Chapter-19 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : தவத்தகுதி குறைந்த பரத்வாஜரின் மகன்கள்; மானஸத்தின் அக்கரையில் இருந்தது; அவர்கள் மேன்மையடையும் வழிகளை மார்க்கண்டேயரிடம் சொன்ன சனத்குமாரர்...
{ஸனத்குமாரர் சொன்னதாக} மார்க்கண்டேயர், "ஓ! குழந்தாய், முந்தைய யுகத்தில், பரத்வாஜரின் மகன்களான பிராமணர்கள் யோகப்பயிற்சிகளை மேற்கொண்டாலும், தங்கள் அத்துமீறல்களால் மாசடைந்தார்கள்.(1) யோகப் பயிற்சிகளில் தொடர்ந்து வரம்புமீறி தகுதி குறைந்தவர்களாக ஆனதால், மானஸம் என்றழைக்கப்படும் பெருந்தடாகத்தின் அக்கரையில் நனவற்ற நிலையில் நீடித்திருந்தார்கள்.(2) (தாங்கள் செய்த) அத்துமீறல்களைக் கழுவிக் கொண்டோம் என்ற நினைவால் கலக்கமடைந்து, (பிரம்மத்துடன்) ஐக்கியமடையத் தவறிய அவர்கள், காலக் குணங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டவர்களானார்கள்[1].(3) அவர்கள் யோக பாதையில் இருந்து விலகிச் சென்றாலும், தேவர்களின் நிலத்தில் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தனர். அவர்கள் குருக்களின் நிலத்தில் மனிதர்களில் முதன்மையானவர்களாகக் குசிகனின் மகன்களாகப் பிறப்பார்கள்.(4) அவர்கள் பித்ருக்களுக்காக உயிரினங்களைக் கொல்வதன் மூலம் அறப் பயிற்சிகளைத் தொடர்வார்கள். மேலும் (இவ்வாறே) தகுதி குறைந்தவர்களாக இன்னும் இழிந்த பிறவிகளையும் அடைவார்கள்.(5)
[1] "அவர்கள் மற்ற உயிரினங்களைப் போல உரிய காலத்தில் மரணத்தை எய்தும் இறக்கும் நிலையை அடைந்தார்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
பித்ருக்களின் ஆதரவு மற்றும் மாசற்ற பிறவியின் காரணமாக அவர்கள் அந்த இழி பிறப்புகளின் நினைவில் கொள்வார்கள்.(6) அவர்கள் கட்டுப்பாட்டுடன் கூடிய மனங்களைக் கொண்டவர்களாக அறப் பயிற்சிகளை எப்போதும் செய்து வருவார்கள். மேலும் தங்கள் கர்மத்தின் மூலம் அவர்கள் பிராமண நிலையையும் அடைவார்கள்.(7) அப்போது அவர்கள் தங்கள் மாசற்ற பிறப்பின் விளைவால் (பரமாத்மாவுடன் மனித ஆன்மா கொள்ளும்) ஐக்கிய ஞானத்தை அடைவார்கள். பின்னர் மீண்டும் முழுமையை அடைந்து, நித்திய உலகத்தையும் அவர்கள் அடைவார்கள்.(8) இவ்வாறே நீ மீண்டும் மீண்டும் அறத்தில் கவனம் செலுத்தி, யோகத்தில் முழுமையான தேர்ச்சியை அடைவாய்.(9) வரம்புக்குட்பட்ட புத்தியைக் கொண்ட மனிதர்கள் யோகத்தில் தேர்ச்சியடைவது மிக அரிதே. ஒருவேளை அவர்கள் அதை அடைந்தாலும், தாங்கள் செய்யும் தீமைகளால் மாசடைந்து அதை இழப்பார்கள். அக்கிரமங்களைச் செய்து, பெரியோரைத் துன்புறுத்துவர்களும் (யோகத்தை இழக்கிறார்கள்).(10)
நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் இரக்காதவர்கள், புகலிடம் நாடுவோரைப் பாதுகாப்பவர்கள், வறியோரை அலட்சியம் செய்யாதவர்கள் {அவமதிக்காதவர்கள்}, கொண்ட வளங்களால் செருக்கில் மிகாதவர்கள்,(11) உணவு மற்றும் பசி தொடர்பான பிறவற்றில் முறையான பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள், பணியைச் சுறுசுறுப்பாகச் செய்பவர்கள், தியானம் மற்றும் கல்வியில் முனைப்புக் கொண்டவர்கள், களவுபோன {தொலைந்துபோன} உடைமைகளை மீட்க முனையாதவர்கள், இன்பங்களையே எப்போதும் நாடாதவர்கள்,(12) இறைச்சியோ, போதை தரும் மதுவோ உண்ணாதவர்கள், பாலியல் இன்பங்களுக்கு அடிமையாகாதவர்கள், பிராமணர்களுக்குத் தொண்டு செய்பவர்கள், தூய்மையற்ற உரையாடல்களில் இன்பம் கொள்ளாதவர்கள், சோம்பி இராதவர்கள், அகந்தையும், அகங்காரமும் அற்றவர்கள் போன்ற திறன்மிகுந்தவர்கள் இவ்வுலகில் அடைதற்கரிதான யோகத்தை அடைவார்கள்.(13,14) கோபத்தை அடக்கியாள்பவர்களும், அகங்காரம் மற்றும் செருக்கைக் களைந்தவர்களும், நோன்புகளைக் கடைப்பிடிப்பவர்களும், அமைதியான ஆன்மாக்களைக் கொண்டவர்களுமான மனிதர்கள் {தேவ} ஆசிகளால் மகுடம் சூட்டப்படுகின்றனர். அந்தக் காலத்துப் பிராமணர்கள் இவ்வாறே இருப்பர்.(15,16) தாங்கள் செய்த தவறுகளின் விளைவால் உண்டான மூடத்தனங்களை நினைவில் கொண்டு, கல்வியிலும், தியானத்திலும் ஈடுபட்டு, அமைதியின் வழியில் அவர்கள் நடப்பர்.(17)
ஓ! அறம் அறிந்தவனே, யோகத்தைவிட மேன்மையான அறச்சடங்கு வேறேதும் இல்லை. அதுவே அற நடைமுறைகள் அனைத்துக்கும் மேன்மையானதாக இருக்கிறது. எனவே, ஓ! பிருகுவின் வழித்தோன்றலே, அதை {யோகத்தைப்} பயில்வாயாக.(18) வரையறுக்கப்பட்ட உணவை உட்கொண்டு வாழ்பவனும், தன் புலன்களை அடக்கி ஆள்பவனும், மதிப்புநிறைந்தவனுமான ஒருவன் வருடங்கள் அதிகமாக ஆக யோகத்தை அடைகிறான்" {என்றார் ஸனத்குமாரர்} .(19)
இதைச் சொன்ன ஸனத்குமாரர் அங்கேயே அப்போதே மறைந்து போனார். பதினெட்டு ஆண்டுகள் எனக்கு ஒரு நாளைப் போலத் தோன்றின.(20) தேவர்களின் தலைவரான அவரைப் பதினெட்டு ஆண்டுகள் வழிபட்டாலும், அந்தத் தெய்வீகமானவரின் அருளால் நான் துன்பமெதையும் உணரவில்லை.(21) ஓ! பாவமற்றவனே, காலத்தில் (காலம் சென்ற போதும்) நான் பசியையோ, தாகத்தையோ உணரவில்லை. அதன் பிறகு நான் என் சீடனிடம் இருந்து காலத்தைக் குறித்து அறிந்தேன்" என்றார் {மார்க்கண்டேயர்}.(22)
ஹரிவம்ச பர்வம் பகுதி – 19ல் உள்ள சுலோகங்கள் : 22
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |