Tuesday 7 April 2020

பித்ருகணங்களின் அமைப்பு | ஹரிவம்ச பர்வம் பகுதி – 18

(பித்ரு கல்பம் - 2)

An account of Pitris | Harivamsa-Parva-Chapter-18 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : வடிவமற்ற மூன்று வகை பித்ருக்களையும், வடிவத்துடன் கூடிய நான்கு வகை பித்ருக்களையும் குறித்து மார்க்கண்டேயருக்கு விளக்கிச் சொன்ன சனத்குமாரர்...

மார்க்கண்டேயர் {பீஷ்மரிடம்}, "ஓ! கங்கையின் மைந்தா {பீஷ்மா}, மிகத்தொடக்கத்திலிருந்து அனைத்தையும் என்னிடம் இருந்து கேட்பாயாக. தேவர்களில் பிரகாசமானவரும், தேவர்களில் முதன்மையானவரும், நித்திய தேவரும், மதிப்பிற்குரியவருமான ஸனத்குமாரர் இவ்வாறு பேசிய பிறகு, நான் மீண்டும் அவரிடம் என் ஐயங்களைக் குறிப்பிட்டேன்.(1,2)



{மார்க்கண்டேயர்}, "அந்தப் பித்ரு கணங்களின் எண்ணிக்கை எவ்வளவு? அவர்கள் எந்த உலகத்தில் இருக்கிறார்கள்? சோமத்தில் (சோமச் சாற்றில்) இருந்து ஊட்டத்தைப் பெறும் முன்னணி தேவர்கள் எங்களே வாழ்கிறார்கள்?" என்று கேட்டேன்.(3)

ஸனத்குமாரர் {மார்க்கண்டேயரிடம்}, "ஓ! வேள்வி செய்பவர்களில் முதன்மையானவனே, ஏழு {வகை} பித்ரு கணங்கள் இருக்கின்றனர் என்றும், அவர்கள் அனைவரும் சொர்க்கத்தில் வாழ்கின்றனர் என்றும் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளன. அவர்களில் நால்வர் {நான்கு வகையினர்} வடிவமுள்ளவர்கள், மற்ற மூவரும் {மூன்று வகையினர்} வடிவமற்றவர்கள்.(4) ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவனே {மார்க்கண்டேயா}, அவர்கள் இருக்கும் உலகம், அவர்களது தோற்றம், ஆற்றல் மற்றும் பெருமைகள் அனைத்தையும் நான் விரிவாகச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(5) அவர்களில் மிகச் சிறந்த மூவர் {மூவகையின்}, தர்மத்தின் வடிவத்தை ஏற்கின்றனர். அவர்களது பெயர்களையும், உலகங்களையும் சொல்கிறேன் கேட்பாயாக.(6) பிரகாசமானவர்களும், வடிவமற்றவர்களும், பிரஜாபதியின் மகன்களுமான பித்ருக்கள் வாழும் உலகங்கள் நித்தியமானவையாகும்.(7)

ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவனே, விராஜர்களின் உலகம் வைராஜம் என்ற பெயரில் அறியப்படுகிறது. தேவர்கள் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் படி அவர்களைத் துதிக்கின்றனர்.(8) இந்தப் பிரம்மவாதிகள், தங்கள் யோகப் பாதைகளில் இருந்து பிறழும்போது, கீழேயுள்ள (நித்தியமான) ஸநாதன உலகங்களுக்குக் வந்து, ஆயிரம் யுகங்கள் முடிந்ததும் தங்கள் பிறப்பை அடைகின்றனர்.(9) பிறகு மிகச்சிறந்த சாங்கிய யோகத்தை மீண்டும் தங்கள் நினைவில் அடைந்து, தங்கள் சக்திகளில் முழுமையான வளர்ச்சியைப் பெற்று, அடைவதற்கு மிக அரிதான யோகநிலையை மீண்டும் அவர்கள் அடைகிறார்கள்.(10) ஓ! குழந்தாய், அவர்கள், யோகிகளின் தவச் சக்திகளை அதிகரிக்கச் செய்யும் பித்ருக்கள் ஆவர், மேலும் அவர்கள் பழங்காலத்தில் தங்கள் யோகத்தின் மூலம் சோமனை நிறைவடையச் செய்தவர்களாவர்.(11) எனவே, குறிப்பாக யோகிகளுக்கே சிராத்தங்கள் செய்யப்பட வேண்டும். இதுவே உயரான்மாக்களான சோமத்தைப் பருகுபவர்களின் {பித்ருக்களின்} முதல் தோற்றமாகும்[1].(12)

[1] "இந்த வைராஜர்கள் ஆயிரம் யுகங்களைக் கொண்ட ஒவ்வொரு கல்பத்திற்கும் பிறகு பிறக்கிறார்கள். ஏனெனில் அவர்களது யோகமானது, அஃதாவது அண்ட ஆன்மாவுடன் தன்னான்மாவை ஒன்றிணைக்க வடிவமைக்கப்பட்ட அவர்களுடைய தவமானது, முடிவிலா உலகத்தில் வசிப்பவர்களாகவும், வடிவமற்றவர்களாகவும், உயர்வான வழிபாட்டுக்குத் தகுந்தவர்களாகவும் அவர்கள் இருந்தாலும் வெளிப்படாத பரமாத்மாவான சகுண பிரம்மத்தை அவர்களை அடையச் செய்யாது. அவர்கள் மீண்டும் மீண்டும் பிரம்மனைப் பின்பற்றும் பிரம்மாவாதிகளாகி, இறுதியாகப் பரமாத்மாவிற்குள் கலப்பார்கள். இந்த யோகங்கள் தங்கள் யோக சக்தியின் மூலம் சோமனை வளப்படுத்துகிறார்கள்; இங்கே சோமனே வாழ்வின் கோட்பாடாக இருக்கிறான். எனவே, முதல் காணிக்கைகள் இந்த யோகிகளுக்கே கொடுக்கப்பட வேண்டும்" என்றிருக்கிறது

அவர்களின் மனத்தில் பிறந்த மகள் மேனை, மலைத்தலைவன் இமயத்தின் முதல் மனைவியாவாள். அவளுடைய மகன் மைநாகன் என்று அழைக்கப்பட்டான்.(13) அவனுடைய மகன் பிரகாசமிக்கப் பெருமலையான கிரௌஞ்சனாவான். மலைகளில் சிறந்தவனான இவன் வெண்மையானவனாகவும், அனைத்து வகை ரத்தினங்கள் நிறைந்தவனாகவும் இருந்தான்.(14) மலைகளின் மன்னனானவன் {இமயம்}, மேனையிடம், அபர்ணை, ஏகாபர்ணை, மூன்றவதாக ஏகபாதளை என்ற மூன்று மகள்களைப் பெற்றான்.(15) தேவர்களும், தானவர்களும்கூடச் செய்வதற்கரிய கடுந்தவங்களைச் செய்த அந்த மூன்று மகள்களும், அசையும், மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய உலகங்கள் அனைத்தையும் கலங்கடித்தனர்.(16) ஏகாபர்ணை ஒரே ஒரே இலையைக் கொண்டு வாழ்ந்தாள், ஏகபாதளை ஒரேயொரு பாதளை மலரை {பாதிரி / புன்காலி மலரை} உண்டு வாழ்ந்தாள்.(17) அபர்ணையானவள் உணவைக் கைவிட்டுக் கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கிய போது அவளுடைய அன்னையானவள் {மேனை} தாயன்புடன் "உ.. மா.." {ஓ!... வேண்டாம்...} என்று சொல்லித் தடுத்தாள்.(18) இவ்வாறு தன் தாயால் சொல்லப்பட்ட அந்த அழகிய தேவி, கடுந்தவங்களைச் செய்து மூவுலகங்களாலும் உமா {உமை} என்ற பெயரால் கொண்டாடப்பட்டாள்.(19) அவள் யோக தர்மிணி[2] என்ற பெயராலும் கொண்டாடப்பட்டாள். ஓ! பார்க்கவா, இந்த மூன்று கன்னியருடன் கூடிய இந்த உலகம் (எப்போதும்) நீடித்திருக்கும்.(20)

[2] "இஃது உமா தேவியின் பெயராகும். யோகப் பயிற்சிகள் செய்வதில் இயல்பான உந்துதல் கொண்டவள் என்பது பொருளாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

யோக சக்தியுடன் கூடிய மூவரும் கடுந்தவங்களில் முழுமை பெற்ற உடல்களைக்[3] கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் அனைவரும் பிரம்ம ஞானத்தை அறிந்திருந்தனர், மேலும் அவர்கள் தங்கள் உடலின்பத்திற்குரிய ஆசைகள் அனைத்தையும் கட்டுப்படுத்தியவர்களாக இருந்தனர்.(21) அழகிய உமையே அவர்களில் மூத்தவளாகவும், முதன்மையானவளாகவும் இருந்தாள். பெரும் யோக சக்திகளைக் கொடையாகக் கொண்டிருந்த அவள் {உமை} பெருந்தேவனான சிவனை அணுகினாள்.(22) ஏகாபர்ணை என்பவள், நுண்ணறிவுமிக்கவரும், பெரும் யோகியும், ஆசானும், உயரான்மாவும், கரியவருமான தேவலரின் மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்.(23) ஏகபாதளையை ஜைகிஷவ்யரின் மனைவி என்று அறிவாயாக. உன்னதரான அவ்விரு கன்னியரும், அவ்விரு யோகாசான்களை அணுகினர்[4].(24)

[3] "மூலத்தில் இங்கே தபமயம் என்ற சொல் இருக்கிறது. அதை ஆங்கிலத்தில் சரியாக மொழிபெயர்ப்பது கடினமாகும். தபம் என்பது, எரியும் நெருப்புக்கு மத்தியில் அமர்ந்து ஒருவன் தன்னைத்தானே வெயிலுக்கும், குளிருக்கும் வெளிப்படத்துவதைப் போன்ற கடுந்தவப்பயிற்சியைக் குறிக்கும். இத்தகைய பயிற்சிகளால் ஒரு யோகியானவன் தன் உடலை தட்பவெப்பமயத்தின் ஆதிக்கத்தில் இருந்து விடுவித்துத் தன் ஆசைகளைக் கட்டுப்படுத்துகிறான். எனவே, தபமய உடல் என்பது, வெப்பம் மற்றும் குளிருக்குப் பழக்கப்பட்டதும், தட்பவெப்ப ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டதும், அனைத்து இயக்கங்களின் தேர்ச்சி பெற்றதுமான ஓர் உடல்நிலையாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[4] ஸ்லோகம் எண் 5 முதல் 24 வரை வடிவமற்ற பித்ருக்களில் முதல் வகையினர் {வைராஜர்கள்} விளக்கப்பட்டனர்.

குடிமுதல்வரான மரீசியின் மகன்களும், பித்ருக்கள் {மூதாதையர்} வசிப்பதும், சோமயாகிகளுடையதும்[5], சோமபதம் என்றழைக்கப்படுவதுமான உலகத்துக்குத் தேவர்கள் நீர்க்காணிக்கைகளை அளிக்கன்றனர்.(25) அக்னிஷ்வதர்கள் என்றழைக்கப்படும் அவர்கள் அளவற்ற சக்தியைக் கொடையாகக் கொண்டவர்களாவர். அவர்களது மனத்தில் பிறந்தவளும், கீழ்நோக்கிப் பயணிப்பவளும், அச்சோதை என்ற பெயரைக் கொண்டவளுமான மகள் ஒருத்தியை அவர்கள் கொண்டிருந்தனர்.(26) அதிலிருந்து (அச்சோதை எனும் அந்த ஆற்றிலிருந்து) அச்சோதை என்ற பெயரில் ஒரு தடாகம் எழுந்தது. அவள் தன் பித்ருக்களை முன்பின் பார்த்தவளல்ல.(27) (இருப்பினும்) அழகிய புன்னகையைக் கொண்டவளான அவள், உடலற்ற தன் பித்ருக்களைக் கண்டாள். அவள் அவர்களது மனத்தில் பிறந்தவளாதலால் அவர்கள் அவளை அறிந்தாரில்லை. இத்தீயூழின் காரணமாக அந்த அழகிய காரிகை {அச்சோதை} பெரிதும் வெட்கமடைந்தாள். அமவஸு என்ற பெயரைக் கொண்டவனும், அயுவின் சிறப்புமிக்க மகனும், {அவளுடைய} பித்ருவுமான வசு {உபரிசரவசு}, அப்சரஸ் அத்ரிகையுடன் தேரில் வானலோகத்தில் செல்வதைக் கண்டு (முதலில்) அவனை[6] நினைத்தாள்.(28-30)

[5] "இந்துக் கருத்துகளின் படி தேவர்களால் மிகவும் விரும்பப்படும் இனிய பானமான சோமச் சாற்றை அளிப்பதன் மூலம் தேவர்களை இருப்புக்கு அழைப்பவர்கள் சோமயாகிகளாவர்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[6] "மூலத்தில் வப்ரே என்ற சொல் இருக்கிறது. இது கணவனைத் தேர்ந்தெடுத்தல் என்ற பொருளைத் தரும். இஃது ஒரு தேவன் அல்லது மனிதனின் ஆசியைப் பெறுதல் என்ற பொருளையும் கூடத் தரும். ஒரு மகள் தன் மூதாதையரில் ஒருவரைத் தன் கணவனாகக் கொள்ள முடியாது என்பது வெளிப்படையானது எனவே, "அவனை ஏற்று, தன் தந்தைக்கான காணிக்கைகளை அவனுக்கு அளிக்க நினைத்தாள்" என்றே இங்குப் பொருள் கொள்ள வேண்டும். அந்தக் கன்னிகை தன் பித்ருக்களைக் காண விரும்பும் கதையின் பின்புலமும் இதை நிரூபிக்கிறது. எனவே அவள் முதலில் வசுவைக் கண்டபோது அவள் அவனைத் தன் தந்தையாகக் கருதி அவனைத் துதித்திருக்க வேண்டும். பின்புதான் அவன் தன் தந்தையல்ல என்பதையும் அவளுடைய உண்மையான பித்ருக்கள் மூன்று தேர்களில் இருந்தார்கள் என்பதையும் காண்கிறாள். இது வெளிப்படையான வரம்புமீறல் என்பதால் பின்னர் இதன் காரணமாக அவள் வசுவின் மகளாகப் பிறக்க விதிக்கப்பட்டாள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

விரும்பும் வடிவங்களை ஏற்கவல்லவளான அவள் தன் தந்தையல்லாமல் மற்றொருவரை அவ்வறா நினைத்த இந்தத் தவறின் காரணமாகத் தன் யோக சக்தியை இழந்து கீழே விழுந்தாள்.(31) அவ்வாறு அவள் தேவலோகத்தில் இருந்து விழுந்தபோது, எசாரேணு {திரஸாரேணு}[7] அளவுள்ள மூன்று தேர்களில் தன் மூதாதையரான பித்ருக்கள் இருப்பதைக் கண்டாள்.(32) அவர்கள் மிக நுட்பமானவர்களாக, தெளிவற்றவர்களாக, தெளிந்த நெய்யில் இடப்படும் நெருப்பைப் போன்றவர்களாகத் தெரிந்தனர். அவள் துயரத்துடன் தலைகீழாக விழுந்து கொண்டிருந்தபோது, "என்னைக் காப்பீராக" என்று கதறினாள்.(33) தேர்களில் நிலை கொண்டிருந்த பித்ருக்கள், வானலோகத்தில் இருந்த தங்கள் பெண்ணிடம் "அஞ்சாதே" என்றனர். அப்போது அவள் தூய சொற்களைக் கொண்டு தன் பித்ருக்களை நிறைவடையச் செய்தாள்.(34)

[7] பிபேக்திப்ராயின் பதிப்பின் அடிக்குறிப்பில், "திரஸாரேணு என்பது நுட்பமானது என்ற பொருளைத் தரும். அதாவது, சூரிய ஒளிக் கற்றையில் நகர்வதாகக் காணப்படும் சிறு தூசியே திரஸாரேணு என்பதாகும்" என்றிருக்கிறது.

அப்போது பித்ருக்கள், வரம்புமீறலின் காரணமாகத் தன் தகுதிகள் அனைத்தையும் இழுந்த அந்தப் பெண்ணிடம், "ஓ! தூய புன்னகை கொண்டவளே, உன் அறியாமையினாலேயே நீ உன் தகுதிகள் அனைத்தையும் இழந்தாய்.(35) தேவர்கள், இவ்வுலகில் தங்கள் உடல்களால் செய்த செயல்களின் பலன்களைச் சொர்க்கத்தில் அடைகிறார்கள்.(36) (சிலவேளைகளில்)[8] தேவர்கள் (வெறுமனே) தங்கள் தீர்மானத்தின் மூலமாகவே தங்கள் செயல்களின் பலன்களை அடைகிறார்கள், ஆனால் மனிதகுலம் மறுமையை அடைந்தபிறகே அவற்றை அறுவடை செய்கிறது" என்றனர்.(37) தன் பித்ருக்களால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்தக் கன்னிகை அவர்களை நிறைவடையச் செய்யத் தொடங்கினாள். அப்போது உண்மையைத் தங்கள் மனங்களில் உணர்ந்த அவர்கள் அனைவரும், கருணையினால் அவளிடம் நிறைவடைந்தனர்.(38)

[8] "நிலைத்தன்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இங்கே சிலவேளைகளில் என்ற சொல்லைச் சேர்த்திருக்கிறோம். முந்தைய ஸ்லோகத்தில் தேவர்களும் இவ்வுலகத்தில் செயல்களைச் செய்து, அவற்றுக்கான பலன்களை மறுமையில் அடைகின்றனர் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறே தேவர்களும் கர்மத்தின் ஆதிக்கத்திற்கு உட்படுகின்றனர் என்றாகிறது. இந்த ஸ்லோகத்திலே, வெறுமனே அவர்களின் தீர்மானத்தினாலேயே அவர்கள் தங்கள் செயல்களின் பலன்களை அடைகின்றனர் என்றிருக்கிறது. எனவே, அந்த நிலைத்தன்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகச் சில வேளைகளில் என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளது. தேவர்கள் கர்மத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாக இருப்பினும், சிலவேளைகளில் அவற்றில் இருந்து விடுபட்டிருந்தனர் என்று ஆசிரியர் கருதுவது வெளிப்படையாகவே இங்குத் தெரிகிறது. ஆனால் மனிதர்களுக்கு அவ்வாறில்லை. அவர்கள் தங்கள் செயல்களுக்கான பின்விளைவுகளை எந்தச் சூழ்நிலையிலும் தவிர்க்க முடியாது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

இவையனைத்தும் தவிர்க்கமுடியாதவை என்பதை அறிந்த அவர்கள், அந்தக் கன்னிகையை (ஒரு வழியில்) செயல்படச் சொல்லி, அவளிடம், "பூமியில் மனிதர்களுக்கு மத்தியில் பிறக்கும் உயரான்ம மன்னன் வசுவின் {உபரிசரவசுவின்} மகளாக நீ பிறப்பாய். அவனது மகளாகப் பிறக்கும் நீ, அடைதற்கு மிக அரிதான உன்னுடைய உலகத்தை அடைவாய்.(39,40) நீ பராசரரின் சிறப்புமிக்க மகனை {வியாசரை} ஈன்றெடுப்பாய். அந்தப் பெரும்பிராமணத் தவசி, வேதத்தை நான்கு பகுதிகளாகப் பிரிப்பான்.(41) (முற்பிறவியில் மன்னன்) மஹாபிஷனாக இருந்த மன்னன் சந்தனுவுக்கு, சிறப்புமிக்கோரும், அறவோருமான விசித்ரவீரியன் மற்றும் சித்திராங்கதன் என்ற இரு மகன்கள் பிறப்பார்கள். இந்த மகன்களை ஈன்ற பிறகு நீ உன் உலகத்தை அடைவாய். பித்ருக்களிடம் வரம்புமீறியதால் நீ {மனித குலத்தில் பிறந்து} இந்த இழிபிறவியை அடைவாய்.(42,43) இந்த மன்னன் {உபரிசர வசு} தன் மனைவியான அத்ரிகையிடம் உன்னைத் தன் மகளாகப் பெறுவான். பதினெட்டாவது[9] துவாபர யுகத்தில் நீ ஒரு மீனாக {மீனின் மகளாகப்} பிறப்பாய்" என்றனர்.(44) பித்ருக்களால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்தக் கன்னிகை தாஸேயி குடும்பத்தில் சத்தியவதியாகப் பிறந்தாள். முதலில் ஒரு மீனாகப் பிறந்த அவள் மன்னன் வசுவின் மகளானாள்[10].(45)

[9] தேசிராஜு ஹனுமந்தராவ் மற்றும் பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் இஃது இருபத்தெட்டாம் துவாபர யுகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
[10] ஸ்லோகம் எண் 25 முதல் 45 வரை வடிவமற்ற பித்ருக்களில் இரண்டாம் வகையினர் {அக்னிஷ்வதர்கள்} விளக்கப்பட்டனர்.

கண்களுக்கினிய காட்சிகளைக் கொண்டதும், பர்ஹிஷதர்கள் என்று சொர்க்கத்தில் கொண்டாடப்படுபவர்களுமான பித்ருக்கள் வசிக்கும் வைப்ராஜ உலகம் தியுலோகத்தில் அமைந்துள்ளது.(46) பெரும்பிரகாசம் கொண்ட தேவர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள், நாகர்கள், சர்ப்பங்கள் (பாம்புகள்), சுபர்ணங்கள் (பறவைகள்), அந்த உலகத்திற்காக (அந்த உலகத்தை அடைவதற்காக) பலியுணவுகளைக் காணிக்கையளிக்கின்றனர்.(47) அவர்கள் உயரான்மக் குடிமுதல்வரான புலஸ்தியரின் சந்ததியினராவர். அவர்கள் அனைவரும் பெருமைமிக்கவர்களாகவும், உயர்ந்த தகுதிகளைக் கொண்டவர்களாகவும், சக்திமிக்கவர்களாகவும், கடுந்தவநோன்புகளைப் பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர். அவர்களின் மனத்தில் பிறந்த மகள் பீவரி என்று அறியப்பட்டாள். பெருந்தவசியான அவள், ஒரு தவசியின் மனைவியாகவும், ஒரு தவசியின் தாயாகவும் இருந்தாள்.(48,49)

ஓ! அறவோரில் முதன்மையானவனே, துவாபர யுகம் தொடங்கும்போது, பெரும் தவசியும், பராசர குல பிராமணர்களில் முதன்மையானவனும், யோகியுமான சுகன் அந்த யுகத்தில் பிறப்பான். அவன், புகையற்ற நெருப்பைப் போல வியாசனால் அரணியில் பெறப்படுவான்.(50,51) அவன் {சுகன்}, பித்ருக்களின் மகளான அவளிடம் {பீவரியிடம்}, பெரும் சக்திமிக்க யோக ஆசான் கிருஷ்ணன், கௌரன், பிரபு மற்றும் ஷம்பு என்ற நான்கு மகன்களும், பிரம்மதத்தனுக்குத் தாயாகப் போகிறவளும், மன்னன் அனுஹனுனின் ராணியாகப் போகிறவளும், கிருத்வை என்ற பெயரைக் கொண்டவளுமான {கீர்த்திமதி என்ற பெயரிலும் அறியப்பட்டவளுமான} ஒரு மகளையும் பெறுவான்.(52,53) நுண்ணறிவுமிக்கவனும், பக்திமானும், தவசியுமான சுக முனிவன், நோன்பு நோற்பவர்களான இந்த யோக ஆசான்களைப் பெற்று, தன் தந்தையிடம் {வியாசனிடம்} இருந்து பல்வேறு வகையான அறங்களையும் {தர்மங்களையும்} கேட்டு, சென்ற எவரும் திரும்பி வராததும், நித்தியமானதும், சிதைவில்லாததும், தொல்லைகள் ஏதும் அற்றதும், வடிவமற்ற பித்ருக்கள் அறத்தின் வடிவில் வசித்திருப்பதும், விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் இந்தக் கருப்பொருள் தோன்றியதுமான பிரம்மலோகத்திற்குச் சென்றான்[11].(54-56)

[11] ஸ்லோகம் எண் 46 முதல் 56 வரை வடிவமற்ற பித்ருக்களில் மூன்றாம் வகையினர் {பர்ஹிஷதர்கள்} விளக்கப்பட்டனர்.

சுகாதர்கள் {சுகலர்கள்}<1> என்று அறியப்படும் குடிமுதல்வன் வசிஷ்டரின் பித்ருக்கள் சொர்க்கத்தில் நித்தியமாக வாழ்கிறார்கள். மேலும் அவ்வுலகம் {ஜ்யோதிர்பாஸம் / ஜ்யோதிஷ்மந்தம்} ஆசைகள் அனைத்தையும் நிறைவடைச் செய்யும் திறனை அருளும் பிரகாசத்தால் ஒளியூட்டப்பட்டதாகும். பிராமணர்கள் எப்போதும் அவர்களுக்குப் பலியுணவுகளைக் காணிக்கையளிக்கின்றனர்.(57) தேவலோகத்தில் அவர்களின் மனத்தில் பிறந்த மகள் கோ {கௌ} என்று அறியப்படுவாள். அவள் உன் குடும்பத்தில் (திருமணம் செய்து) கொடுக்கப்பட்டுச் சுகனின் {சுக்ரனின்} மற்றொரு அன்புக்குரிய மனைவியாக இருப்பாள். சாத்யர்களுக்குத் தங்கள் புகழை எப்போதும் அதிகரிப்பவளும், ஏகசிருங்கை என்ற பெயரைக் கொண்டவளுமான நன்கறியப்பட்ட மகள் ஒருத்தியைக் கொண்டிருக்கின்றனர்[12].(58) அவள் சூரியக் கதிர்களைப் போன்ற பிரகாசமிக்க உலகத்தில் வாழ்கிறாள்.

[12] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வேறு இடங்களில் இவர் சுக்ரன் என்று குறிப்பிடப்படுகிறார். இங்கே பிழை ஏற்பட்டிருக்க வேண்டும். இந்த அத்தியாயத்தின் 24ம் ஸ்லோகத்தில் ஏகாபர்ணை ஏகபாதளை ஆகியோரின் மகன்களைச் சொல்லும்போது, அபர்ணையின் {பார்வதி / உமையின்} சந்ததியை ஹரிவம்சம் சொல்லவில்லை. வேறு ஏதோவொரு இடத்தில் அசுரர்களின் ஆசானான சுக்ராச்சாரியார் அபர்ணை, அல்லது பார்வதியின் செயற்கை மகன் {சிவாம்சஸம்பூதன்} என்றும், இந்தக் கன்னிகை கோ அல்லது ஏகசிருங்கை அவருடைய மனைவி என்றும் குறிப்பிடப்படுகிறது" என்றிருக்கிறது.

தங்கள் செயல்களுக்கான கனிகளை {பலன்களை} அறுவடை செய்ய விரும்பும் க்ஷத்திரியர்கள், முன்பு சாத்யர்களுக்குச் செழிப்பை அளித்த அங்கிரஸின் மகன்களை<2> நிறைவடையச் செய்கின்றனர். அவர்களுடைய மனதில் பிறந்த மகள் யசோதை என்று அறியப்பட்டாள்.(59,60) அவள் விஷ்வமஹதனின் மனைவியும், விருத்தசர்மனின் மருமகளும், உயரான்ம அரச முனியான திலீபனின் தாயுமாவாள்.(61) ஓ! மகனே, முந்தைய தேவர்களின் யுகத்தில், மன்னன் திலீபன் நடத்திய ஒரு பெரும் குதிரை வேள்வியில் பெரும் முனிவர்கள் பல்வேறு கருப்பொருள்களை மகிழ்ச்சியுடன் ஓதினர்.(62) ஏதோவொரு சாண்டிலி (சாண்டிலயன்} வழித்தோன்றலில் இருந்து அக்னி (நெருப்பின் தேவன்) பிறந்ததைக் கேட்டவர்களும், திலீபனின் வேள்விகளைச் செய்யும் உயரான்மாக்களையும், வாய்மை நிறைந்தவர்களையும் காண்பவர்களுமான மக்களே தேவலோகத்தை வெல்வார்கள்.(63)

சூதன்வாக்கள் {ஸுஸ்வதர்கள் என்றழைக்கப்படும்}<3> குடிமுதல்வன் கர்த்தமனின் பித்ருக்கள் உன்னதப் பிராமணரான புலஹரிடம் இருந்து தோன்றினர்.(64) புலன்கடந்த நுட்பமான அசைவுகளைக் கொடையாகக் கொண்ட அவர்கள், விரும்பியபடி நகர்பவர்கள் வசிக்கும் உலகங்களில் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் செயல்களுக்கான கனிகளை {பலன்களை} அறுவடை செய்ய விரும்பும் வைசியர்கள் இவர்களுக்குப் பலியுணவுகளைக் காணிக்கை அளிக்கின்றனர். அவர்களது மனத்தில் பிறந்த மகள் விரஜை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறாள். ஓ! பிராமணா, அவள் யயாதியின் தாயாகவும், நஹுஷனின் மனைவியாகவும் இருப்பாள்.(66) இவ்வாறே நான் {வடிவம் கொண்ட பித்ருக்களில்} மூவகையினரை விளக்கிச் சொன்னேன். இனி, நான்காவது வகையைச் சொல்கிறேன் கேட்பாயாக.

கவியின் மகள் ஸுவதையிடம் பெறப்பட்டவர்களும், சோமச்சாற்றைப் பருகுபவர்களுமானவர்கள், ஹிரண்யகர்ப்பனின் சந்ததியினராவர்<4>. சூத்திரர்கள் அவர்களை நிறைவடையச் செய்கின்றனர்.(67) அவர்கள் வசிக்கும் வானுலகம் மானஸம் என்றழைக்கப்படுகிறது. அவர்களுடைய மனத்தில் பிறந்த மகள், ஓடைகளில் முதன்மையான நர்மதை ஆவாள்.(68) அவள் தென்வழியில் பயணித்து உயிரினங்களைத் தூய்மைப்படுத்துகிறாள். அவள் புருகுத்ஸனின் மனைவியும், திராஸதஸ்யுவின் தாயுமாவாள்.(69) பித்ருக்கள் துதிக்கப்பட வேண்டும். பல்வேறு யுகங்களில் இது புறக்கணிக்கப்படும்போது குடிமுதல்வனான மனு அவர்களைக் கௌரவிக்கும் வகையில் சிராத்தம் செய்வதை அறிமுகப்படுத்துகிறான்.(70)

ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவனே, பித்ருக்கள் அனைவரிலும் யமனே முதலில் பிறந்தவனாவான், அவனே அனைத்து உயிரினங்களையும் தன்னறத்தால் காத்தான். எனவே, அவனே சிராத்ததேவன் என்று வேதங்களில் நியமிக்கப்பட்டிருக்கிறான்.(71) புனித மந்திரங்களைச் சொன்ன பிறகு, பித்ருக்களை நிறைவடையச் செய்ய வெள்ளியிலோ, வெள்ளிப் பாத்திரங்களிலோ பலியுணவு காணிக்கை அளிக்கப்பட வேண்டும்.(72) முதலில் விவஸ்வானின் மகனான யமனை நிறைவடையச் செய்து, பிறகு சோமனையும் நிறைவடையச் செய்த பிறகு, ஒருவன் நெருப்புக்குப் பலியுணவைக் காணிக்கையளிக்க வேண்டும். நெருப்பில்லாத போது நீருக்குக் காணிக்கை அளிக்கப்பட வேண்டும்.(73)

பித்ருக்கள், தங்களை நிறைவடையச் செய்பவனிடம் நிறைவடைந்து, ஊட்டம், எண்ணற்ற சந்ததி, செல்வம் மற்றும் ஆசைக்குரிய பொருட்கள் அனைத்தையும் அவனுக்கு அளிக்கின்றனர். ஓ! தவசியே, தேவர்களை விட மூதாதையரின் வழிபாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.(74,75) தேவர்களுக்கு முன்பே பித்ருக்கள் நிறைவடையச் செய்யப்பட வேண்டும் என்று சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளது. எளிதில் நிறைவடையும் பின்னவர்கள் {பித்ருக்கள்}, கோபத்தில் இருந்து விடுபட்டவர்களாக மனிதர்களுக்கு மிகச்சிறந்த நிறைவை அளிக்கிறார்கள்.(76)

ஓ! பிருகுவின் வழித்தோன்றலே, பித்ருக்களின் நிறைவு எப்போதும் நிலையானதாகும். எனவே நீ அவர்களை வணங்குவாயாக. நீ எப்போதும் உன் பித்ருக்களிடமும், குறிப்பாக என்னிடமும் அர்ப்பணிப்புடன் இருக்கிறாய்.(77) உனக்கு நன்மை விளையச் செய்வதை நான் செய்வேன். நீ அதைக் காண்பாயாக. ஓ! பாவமற்றவனே, நான் உனக்குத் தெய்வீகப் பார்வையையும், பகுத்தறியும் ஞானத்தையும் ஒன்றாக அளிக்கப் போகிறேன்.(78) ஓ! மார்க்கண்டேயா, அதற்கான வழிமுறைகளைக் கவனமாகக் கேட்பாயாக. இது தேவர்களின் யோக நிலையல்ல, ஆனால், தேவர்களின் மிகச் சிறந்த நிலையாகும்.(79) முழுமையான தவச் சக்திகளை உடைய மனிதர்களே தங்கள் கண்களால் என்னைக் காண முடியும்" {என்றார் சனத்குமாரர்}.

அவரது முன்னிலையில் இருந்த என்னிடம் இவ்வாறு பேசிய தேவர்களின் தலைவன் {ஸனத்குமாரர்}, தேவர்களும் அடைதற்கரிதான தெய்வீகப் பார்வையையும், பகுத்தறியும் ஞானத்தையும் எனக்குக் கொடுத்து, இரண்டாவதாக எரியும் நெருப்பைப் போலத் தான் விரும்பிய உலகத்திற்குச் சென்றார்.(80,81) ஓ! குருக்களில் முதன்மையானவனே {பீஷ்மா}, அந்தத் தேவனின் உதவியால், இவ்வுலக மனிதர்களின் புத்திக்கு அப்பாற்பட்டவை (காரியங்கள்) குறித்து நான் கேள்விப்பட்டதைக் கேட்பாயாக" {என்றார் மார்க்கண்டேயர்}.(82)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 18ல் உள்ள சுலோகங்கள் : 82
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்