(ப்ரவ்ருத்திதர்மபலம்)
The fruits of Yoga | Bhavishya-Parva-Chapter-20 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : தக்ஷன் மகள்களைப் பெற்றது; அவர்களை தர்மன், கசியபர், சோமன் ஆகியோருக்குக் கொடுத்தது; யோகத்தின் பயன்கள்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, கல்வியின் அனைத்து வகைகளிலும் பொருளாக இருக்கும் என நான் நினைக்கும் நித்திய பிரம்மனைக் கொண்ட திரேதா யுகத்தைக் குறித்து நான் அறிய விரும்புகிறேன்" என்றான்.(1)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "புருஷர்களில் முதன்மையான தக்ஷன், ஊக்கமிழந்தவனாக மேரு மலையின் உச்சியில் தன் யோக சக்தியின் மூலம் ஒரு பெண் வடிவை ஏற்றான்.{2} நன்கு அமைந்த தொடைகள், முலைகள், தாமரை போன்ற முகம், கருவிழிகள் ஆகியவற்றுடன் அவன் பேரழகு படைத்த ஒரு காரிகையானான்.{3} தக்ஷ பிராசேதஸ், தன் பாதி உடலால் அந்தக் காரிகையிடம் பத்மங்கள் என்ற பெயரில் கன்னிகையரைப் பெற்றான்.{4} அதன் பிறகு தக்ஷன், தன் ஆண் வடிவின் மூலம் பெண் வடிவைக் கைவிட்டு மிக அழகிய மனித வடிவை ஏற்றான்.{5} ஸ்மிருதிகளால் அங்கீங்கரிக்கப்பட்ட பிரம்மத் திருமணச் சடங்குகளின்படி, அவன் அந்தக் கன்னிகையரை {திருமணம் செய்து} கொடுத்தான்.{6} அவன் அவர்களில் பத்து கன்னிகைகளைத் தர்மனுக்கும், பதிமூவரை கசியபருக்கும், இருபத்தெழுவரை சோமனுக்கும் கொடுத்தான்[1].{7}
[1] ஹரிவம்சபர்வம் 3:27-30ல் தக்ஷன் அறுபது மகள்களைப் பெற்றதாகக் குறிப்பு இருக்கிறது. மஹாபாரதம் சாந்தி பர்வம் 343:59லும் இதே குறிப்புக் கிடைக்கிறது.
ஓ! மன்னா, தக்ஷன் தன் மகள்களுக்குத் திருமணம் செய்து கொடுத்த பிறகு, பிரம்மன் வாழ்ந்து வந்த பிரயாகை என்ற புனிதத்தலத்திற்குச் சென்றான்.{8} அங்கே அவன் தன் மனம் சார்ந்த, புத்தி சார்ந்த புலன்களைக் குவித்து, தவம் பயின்று மான் உடன் சேர்ந்து உலகம் முழுவதும் பயணித்தான். அவன், புற்கள், கிழங்குகள், கனிகள் ஆகியவற்றை உண்டு தொடர்ந்து கடுந்தவங்களைச் செய்து வந்தான்.{9} தீங்கிழைக்காத அவனது குணத்தைக் கண்டு அந்த மான் பெரிதும் மகிழ்ந்தது; தொடக்கச் சடங்கு {தீக்ஷை} பெற்றவர்களும், அறப்பணிகளைச் செய்பவர்களும், தவம், துறவு, நோன்பு ஆகியவற்றின் மூலம் பாவம் அழிந்தவர்களுமான பிராமணர்கள் அவனது தவங்களின் பயன்களைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தனர்.{10}(2-10)
யோகத்துக்கும், புத்திசார்ந்த புலங்களுக்கும் இடையில் மோதல் நடக்கும் நேரத்தில் உடல்சார்ந்த துன்பங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாதவனும், தன் மனத்தைக் கட்டுப்படுத்தியவனும், காலத்தை அறிந்தவனுமான ஒரு மனிதன், தான் அனைத்தையும் அறிந்தவனாக இருப்பதன் காரணமாக யஜ்ஞம் {வேள்வி} மூலம் அடையப்பட்ட கர்மத்தையும், ஆன்ம பலத்தையும் காண்கிறான்.{11} {இவ்வாறான} துறவிகள், மான்களுடனும், தங்கள் மனைவியருடனும் கூடியவர்களாகக் காய்கறி உணவை உண்டு, கவலை அற்றவர்களாக முதுமையை அடைகிறார்கள்.{12} வேதங்களைக் கற்றறிந்த பிராமணர்கள், மனித உடலிலேயே பெரும் பிரம்மத்தைக் கண்டு, அதை {அந்த உடலை} பிரம்மத்தின் நிலம் அல்லது பிரம்மக்ஷேத்திரம் என்று அழைக்கிறார்கள்.{13}(11-13)
பணிகளில் இருந்து மனம் விலகியவர்களும், கோபத்தையும், ஆசையையும் அடக்கியவர்களும், நித்திய வழியில் செல்ல விரும்பி பூமியில் திரிபவர்களுமான யதிகள் இதையே சொல்கிறார்கள்.{14} {மனிதர்கள்} சமாதி, அல்லது மனக்குவிப்பு அடையும் நேரத்தில் மொத்த படைப்பும் பிரம்மத்தில் மூழ்குகிறது. மேலும் அவர்கள் முற்பிறவியில் செய்த செயல்களின் காரணமாக மீண்டும் அவை உலகில் தோன்றுகின்றன. {மனிதர்கள்} சமாதி அடையும் நேரத்தில் உயிரினங்கள் அனைத்தும் பிரம்மத்தில் கலந்தாலும், அவர்களின் முற்பிறவி செய்ல்பாடுகளின் காரணமாக அவை மீண்டும் பூமியில் தோன்றுகின்றன.{15} சமாதி அடையும் நேரத்தில் உயிரினங்கள் அனைத்தும் வெளிப்படாமல் இருந்தாலும், இயற்கை போக்கின் மூலம் அவை மீண்டும் வெளிப்படுகின்றன. எனவே இயற்கையை வெல்வது மிகக் கடினமானதாகும். காலத்தினுடைய பண்புகளின் காரணமாக உயிரினங்கள் வெளிப்பட்டும், வெளிப்படாமலும் இருக்கின்றன.{16}(14-16) அசைவனவோ, அசையாதனவோ, திரளானவையோ {ஸ்தூலமானவையோ}, நுட்பமானவையோ {ஸூக்ஷ்மமானவையோ} எனப் படைப்பின் ஒவ்வொரு பொருளும் காலத்தின் ஆதிக்கத்தில் யோகத்தை அடையலாம். உயிரற்ற பொருள்களுக்கே இந்த யோகம் சாத்தியமாக இருக்கும்போது ஒவ்வொரு மனிதனும் கடவுளுடன் ஐக்கியமாகும் ஞானத்தை அடைய முயல வேண்டும்.{17}
நித்தியரான கசியபர், காலப்போக்கில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களையும் தக்ஷனின் மகள்களிடம் பெற்றார். ஓ! மன்னா, ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், விச்வதேவர்கள், மருத்துகள், பல தலைகளைக் கொண்ட பாம்புகள், சாத்யர்கள், பன்னகர்கள்,{19} கந்தர்வர்கள், கின்னரர்கள், யக்ஷர்கள், கழுகுகள், சிறகுகளுடன் கூடிய கருடன், கின்னரனான ஸுவாஸன்,{20} பசுக்கள், நான்கு கால் உயிரினங்கள், மனிதர்கள், அசைவன, அசையாதன உள்ளிட்ட மொத்த பூமி, மலைகள்,{21} யானைகள், சிங்கங்கள், புலிகள், குதிரைகள், தந்தம் படைத்த விலங்குகள், பன்றிகள், ஓநாய்கள், மான்கள்,{22} நான்கு வெண்தந்தங்களைக் கொண்ட யானைகள், விரும்பிய வடிவை ஏற்கவல்ல உயிரினங்கள் ஆகியவையும் படைக்கப்பட்டன.{23}
நித்திய அறத்தின் நிலமான {சனாதன தர்ம க்ஷேத்திரமான} பாரதவர்ஷத்தில், முந்தைய கல்பத்தில் இருந்ததைப் போலவே முனிவர்கள், அதே வடிவம், அழகு, குணம், சக்தி ஆகியவற்றுடன் பிறந்தனர்.{24} வேதங்களில் தேர்ந்தவர்களும், ஆத்ம அறிவை அடைந்தவர்களுமான பக்திமான்கள், தன் மனத் திறன்களின் மூலம் புற உலகம், அக உலகம் ஆகிய இரண்டையும் படைத்தனர். சொர்க்க லோகத்தில் தேவர்கள் அனைவரும் குடியேறினர்.{25}(17-25)
இல்லறவாசிகளை {கிருஹஸ்தர்களைத்} தவிர, தவங்கள் நோற்பதன் மூலம் ஆன்ம சக்தியை அடைபவர்களும், பிரம்மசரிய வாழ்வைப் பின்பற்றுவதன் மூலம் அதை அடைபவர்கள், ஆசான்களின் மூலம் அதை அடைபவர்களும், சித்தியின் மூலம் யோகத்தை அடைபவர்களும் துன்பம் மிகுந்த செயல்களைச் செய்வது கட்டாயமல்ல.{27,28} மனங்களைக் கட்டுப்படுத்தி, பொறுமையுடனும், மன்னிக்கும் தன்மையுடனும், உறுதியுடனும் உள்ளவர்கள், தங்கள் மனைவியருடன் அறச்சடங்குகளைப் பயின்று தேவலோகத்தில் திரிவார்கள்" என்றார் {வைசம்பாயனர்}.{28}(26-28)
பவிஷ்ய பர்வம் பகுதி – 20ல் உள்ள சுலோகங்கள் : 28
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |