(கர்மமார்ககதநம்)
Kshatra yuga described | Bhavishya-Parva-Chapter-19 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : பிரம்ம யுகம்; க்ஷத்ரயுகம்; வர்ண வேறுபாடு; தக்ஷனின் படைப்புத் தொழில்...
ஜனமேயஜன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! பிராமணரே, பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுப்பதால் பிரம்மம் என்றழைக்கப்படும் முதல் யுகத்தைக் குறித்து நான் கேட்டிருக்கிறேன். ஓ! தலைவரே, இப்போது உகந்தவை அறிந்த ரிஷிகளால் பாடப்பட்டதும், சுருக்கமாகவும், விரிவாகவும் அமைந்த விதிமுறைகளைக் கொண்டதும், வேள்விகளால் அழகூட்டப்பட்டதுமான க்ஷத்ர யுகத்தைக் குறித்துக் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்.(1,2)
வைசம்பாயனர், "பல்வேறு ஈகைகளாலும், வேள்விகளாலும் போற்றப்பட்டதும், பல்வேறு உயிரினங்களால் அழகூட்டப்பட்டதுமான க்ஷத்ர யுகத்தின் பெருமையை நான் பாடப்போகிறேன்.(3)
நான்கு கரங்களைக் கொண்ட விஷ்ணுவாகத் தன்னை அறியும் தலைவன், இந்தக் கல்பத்தில் வேறுபாடுகளைக் கண்டு, பிரம்மனால் பெறப்பட்ட தக்ஷனாக அவதரித்துப் பல சந்ததிகளை உண்டாக்கினான். அவன், புலன்களிலும், உடலிலும் உள்ள பற்றைக் களைந்ததன் விளைவால், அகத்தில் உள்ள சுயத்தின் {ஆன்மாவின்} ஞானத்தைக் கொண்டிருந்ததாலும் பிராமணர்களுக்கு மத்தியில் புகழ்பெற்றவனாக இருந்தான். கட்டை விரலளவே இருந்த இந்தப் பிராமணர்கள் அனைவரும், முக்திக்கு வழிவகுக்கும் ஒழுங்குமுறைகளையும், அறச் சடங்குகள் பிறவற்றையும் பின்பற்றியதால் சூரிய லோகத்தைக் கடந்து செல்ல வல்லவர்களாகவும், பிற லோகங்கள் அனைத்திலும் திரிய வல்லவர்களாகவும் இருந்தனர். அவர்கள் எப்போதும் வேள்விகள் செய்வதிலும், புலன்களையும், மனப்புலன்களையும் அடக்குவதிலும் மும்முரமாக இருந்தனர். ஈஷ்வர இன்பத்தை ஈட்டுவதற்காக அவர்கள் தங்களை வேதச் சடங்குகளில் ஈடுபடுத்திக் கொண்டனர். அவர்கள் மூன்று வேதங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். பிரம்மசரிய வாழ்வைப் பின்பற்றிய அவர்கள் பிரம்மஞானத்தில் ஐயம்தெளிந்தவர்களாக இருந்தனர். நல்லொழுக்கத்தையும், நிறைந்த புத்தியையும் கொண்டவர்களான இந்தப் பிராமணர்கள், ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு மரணமடைந்தனர்.(4-8)
பிராமணர்களிடம் சத்வ குணமும், க்ஷத்திரியர்களிடம் ரஜஸ் குணமும், வைசியர்களிடம் ரஜஸ்-தமஸ் குணங்களும், சூத்திரர்களிடம் தமஸ் குணமும் நிறைந்திருக்கின்றன.(9) பிராமணர்களின் வண்ணம் வெள்ளையும், க்ஷத்திரியர்களின் வண்ணம் சிவப்பும், வைசியர்களின் வண்ணம் மஞ்சளும், சூத்திரர்களின் வண்ணம் புகை போன்ற கரு நிறமும் ஆகும். சிந்தனை நிறைந்த விஷ்ணுவால் இவ்வாறே அவர்கள் பகுக்கப்பட்டார்கள்.(10) ஓ! மன்னா, இவ்வாறே இவ்வுலகில் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று குணங்களின் அடிப்படையிலும், வண்ணங்களின் அடிப்படையிலும் பகுக்கப்பட்டனர்.(11) பணிகளின் வழிமுறைகளைக் கொண்டு மதிப்பிடப்பட்டாலும், உயர்ந்தவையும், அற்புதமானவையும், வெவ்வேறு வகையிலானவையுமான கடமைகளை நோற்கும் ஒரே அளவைக் கொண்ட மனிதர்கள் அவற்றின் பலன்களைப் பெறுவதற்காக நான்கு வர்ணங்களாகப் பகுக்கப்பட்டனர்.(12) முதல் மூன்று வர்ணத்தினர், வேதங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளைச் செய்யும் உரிமை பெற்றவர்கள். எனவே, ஓ! மன்னா, விஷ்ணுவிடம் நீ கொண்ட நம்பிக்கையின் காரணமாக நீ வேதங்களைப் படிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறாய். இதன் காரணமாகவே பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் என்ற மூன்று வர்ணத்தாரின் பிறப்பும் தலைவனின் {விஷ்ணுவின்} அருளால் நிகழ்கிறது.{13}
விஷ்ணுவின் உண்மை வடிவைக் குறித்த அறிவொளியைக் கொடுக்கும் பணிகளால் சூழப்பட்ட தலைவன் தக்ஷ பிராசேதஸ், தன் யோக சக்தியின் மூலமும், ஞானத்தின் மூலமும் படைப்புத் தொழிலை மேற்கொண்டான்.{14} அதன்பிறகு, கலைகளின் மேன்மைக்காகவும், மூன்று வர்ணங்களுக்கும் தொண்டு செய்வதற்காகவும் சூத்திரர்கள் படைக்கப்பட்டனர்.{15} தொடக்கச் சடங்கைச் செய்வதற்கோ {தீக்ஷை பெறுவதற்கோ}, வேதங்களைப் படிப்பதற்கோ அவர்கள் உரிமை பெற்றவர்கள் அல்லர்.{16} கோல்களின் {அரணிக் கட்டைகளின்} உராய்வினால் நெருப்பு உண்டாவதற்கு முன்பு புகை எழுந்தாலும், அது நடைமுறைக்குப் பயன்படாததைப் போலவே, இவ்வுலகில் பிறவியை எடுத்துத் தங்களைப் பெருக்கிக் கொள்ளும் சூத்திரர்கள், தொடக்கச் சடங்கைப் {தீக்ஷை} பெறாதவர்களாக இருப்பதால் பல்வேறு வேத சடங்குகளையும் செய்ய இயலாதவர்கள் ஆகிறார்கள்.{17}(13-17)
பிறகு தக்ஷன், வேதங்களை ஆதரிப்போரும், வலுவானவர்களும், பேராற்றலும், சக்தியும், பிரகாசமும் கொண்டவர்களான தன் மகன்கள் பிறரைப் பெற்றான்.{18}
தக்ஷன் அவர்களிடம், "ஓ! சக்திமிக்க மகன்களே, உங்கள் வாய்களில் இருந்து உங்கள் அன்னையான பூமாதேவியின் பலத்தை அறிய விரும்புகிறேன். நான் சக்திமிக்கவனாக இருக்கிறேன் என்பதால் என்னால் பூமியின் எல்லையைக் காண முடியவில்லை; நீங்களும் என்னைப் போலவே இருக்க வேண்டும்.{19} உண்மையை உறுதி செய்து கொண்ட பிறகு நான் ஆற்றலையும், பலத்தையும் உயிரினங்களுக்கு மத்தியில் பிரித்துக் கொடுப்பேன். மண்ணின் பரப்பு அதிகமாக இருக்கும் காரணத்தால் என் உயிரினங்கள் தங்களைப் பெருக்கிக் கொள்வார்கள்" என்றான்.{20}
தலைவனுடைய பெரும் படைப்பாற்றலின் சாரத்தைக் கொண்ட பூமாதேவி, தன்னைக் காண விரும்பிய தக்ஷனின் மகன்களிடம் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை.{21} கிருத யுகத்தில், சத்வ குணத்தைக் கொண்ட பிரஜாபதியின் மகன்களுடைய தூய ஆன்மாக்கள், புருஷனால் தூண்டப்படாமல் உயிரினங்கள் அனைத்தின் அன்னையான இயற்கையெனும் பிரக்ருதியைக் கண்டு தூய்மையடையும்போது, வியர்வையின் மூலமும், முட்டைகளின் மூலமும் உண்டாகும் அனைத்தையும் படைத்து, இயற்கையாகவே உயிரினங்களைக் குறைத்தும், பெருக்கியும் படைப்பின் பயன்களைப் பெறுகின்றன" என்றார் {வைசம்பாயனர்}.{22,23}(18-23)
பவிஷ்ய பர்வம் பகுதி – 19ல் உள்ள சுலோகங்கள் : 23
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |