Wednesday 26 May 2021

பிராணாயாமத்தின் செயல்முறை | பவிஷ்ய பர்வம் பகுதி – 21

(ப்ராணாயாமவர்ணநம்)

The process of Pranayama | Bhavishya-Parva-Chapter-21 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பிராணாயாமம் குறித்த விளக்கம்; புற வேள்வியும், அக வேள்வியும்; வேதாந்தக் கருத்தைச் சொன்ன ஆசான்...

Pranayama

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "புலன்களையும், கோபத்தையும் கட்டுப்படுத்திய மனிதர்கள், சடாமுடியும், மான்தோலும் தரித்து, மூக்குக்கும்[1] புருவங்களுக்கும் இடையில் உள்ள சந்தியில் தங்கள் மனத்தைக் குவிப்பார்கள்.(1) நெற்றியில் உள்ள இந்த இடமே எலும்புகளின் சாரமாகத் திகழ்கிறது; உடல் அழிந்த பிறகும் இஃது அழிவதில்லை. இஃது உயிர் மூச்சான பிராணனால் சூழப்பட்டிருக்கிறது. உயிர் மூச்சானது, காற்று, இருமல், சளி {வாதம், பித்தம், கபம்} ஆகியவற்றை உண்டாக்கியபடி குழாய்களின் வழியே இங்கே செல்கிறது. இந்த இடமே, பிரம்மத்தை உணர்ந்து, துன்பங்கள் அனைத்தில் இருந்து விடுபட வழிவகுக்கிறது.{2} இங்கே மூன்று குழாய்களும், ஐந்து உயிர்மூச்சுகளும் ஐக்கியமாகின்றன. எனவே, யோகிகள் இங்கே தங்கள் மனத்தை நிலைக்கச் செய்து, பெரும்பிரம்மத்தின் இருப்பை உணர முயற்சிக்கின்றனர்.{3} மந்திரங்களின் வித்தாக இருக்கும் ஓம் எனும் மந்திரத்தை உரைத்து வேள்விகளைச் செய்பவர்களும், முழுமையான பேரின்பத்தில் தங்கள் ஆன்மாவை மூழ்கச் செய்பவர்களுமான பிராமணர்கள், உயிர் மூச்சின் ஒற்றை நெருப்பை மட்டுமே வைத்துக் கொண்டு அதை ஐந்தாகப் பிரிக்கிறார்கள்.{4} வேதங்களை நன்கறிந்த முனிவர்கள் இந்த நெருப்பை (பூரகம், கும்பகம், ரேசகம் என்ற) மூன்று தடங்களில் {வழிகளில்} திருப்பி விடுகின்றனர். இவ்வாறு அவர்கள் இதை மூன்றாகப் பிரித்து, பூரகம் முதலிய பிற நடைமுறைகளைப் பயின்று உண்மையான ஆத்ம ஞானத்தை அடைகிறார்கள்{5}.(2-5)

[1] "இந்த அத்தியாயம் முழுவதும் உருவகத்தால் அமைந்திருக்கிறது. பிராணாயாமம், அதாவது மூச்சை அடக்கும் யோகச் செயல்முறை குறித்துச் சொல்கிறது. உண்மையில் உரையில் இருக்கும் சொல் பிதாமஹ என்பதாகும், அதன் பொருள் பெரும்பாட்டன் என்பதாகும். உருவகமாகச் சொன்னால் செயல்பாடுகளின் தந்தை, அதாவது செயலுக்கான காரணத்தின் தந்தையான தூய பிரம்மமாகும். இவ்வாறு ஒவ்வொரு சொல்லும் உருவகமாக ஒரு பொருளைக் கொண்டிருக்கிறது. மொத்த அத்தியாயமும் உருவகமாக இருப்பதால், ஏற்கனவே சில உரையாசிரியர்கள் செய்திருப்பதைப் போலவே, இதையும், அடுத்தடுத்த அத்தியாயங்களையும் சாதாரணமாகவே மொழிபெயர்த்து, உருவக விளக்கத்தை மட்டும் வாசகர்களுக்கு அளிக்கலாம் என நாம் நினைக்கிறோம். சொல்லுக்குச் சொல்லால் அமைந்த நேரடி மொழிபெயர்ப்பால் உள்ள பொருளைப் புரியவைக்க முடியாது என்பது நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்த மொத்த பர்வத்துக்கும் {இந்த பவிஷ்ய பர்வத்திற்கும்} இந்தப் புத்தகத்தின் அசல் உள்ளடக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாததால் இஃது இடைசெருகலாகவே தெரிகிறது. இது வெறுமனே யோகம் மற்றும் அண்டத் தோற்றவியல் தொடர்புடையதாக இருக்கிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

ஒரு பெரும் நெருப்பானது, ஆகுதிகள் மூலம் தன்னைப் பரவச் செய்கிறது. ஸ்வதாவின் வடிவில் அது மந்திரங்களுக்கான வெற்றிகரமான பயன்களை உண்டாக்குகிறது[2].(6) எப்போதும் வெல்பவனும், உயிரினங்களைக் கௌரவிப்பவனும், தெய்வீகனுமான தக்ஷன், அனைத்தின் பெரும்பாட்டனும், பிராமணர்களைப் படைத்தவனுமான பிரம்மனுக்குப் பிறக்கிறான்[3].(7) அவன் தண்டீ[4], சர்மீ[5], ஷரீ[6], கட்கீ[7], ஷிகீ[8], மேலும் அவன் தாமரையைப் போன்ற முகம் படைத்தவன். அவன் இயல்பாகவே கவலையற்றவனாகவும், கோபத்தையும், ஆசையையும் கட்டுப்படுத்தியவனாகவும் இருந்தான்.(8) வேதத்துடன் ஐக்கியமடைந்த பிரம்மம், புஷ்கரம் என்று போற்றப்படுகிறது, இந்திரனால் பாடப்பட்ட சாம வேத ஸ்லோகங்கள், பிரம்மவாதிகளால் உரைக்கப்படுகின்றன[9].(9)

[2] "உயிர் மூச்சை அடக்கும் பிராணாயாமத்தைப் பயில்பவன், உயிர் மூச்சை இழுத்து விடுவதற்கு ஏற்ற படி, பிரம்மரந்தரமெனும் நெற்றிக்குக் காற்றை இழுக்க வேண்டும்; அதன்பிறகு, அங்கிருந்து அதை இழுத்து புருவங்களின் மத்தியில் நிறுத்த வேண்டும்; அதன் பிறகு அவன் கண்களின் மூலம் அதை இழுத்து மூக்கின் நுனி மீது நிறுத்த வேண்டும். அங்கிருந்து அதை நாக்கின் வேர்ப்பகுதிக்கு இழுக்க வேண்டும். அங்கிருந்து அதை இதயத்திற்கு மாற்ற வேண்டும், அங்கிருந்து பிறப்புறுப்புக்கும், அங்கிருந்து உடலுக்கும், அங்கிருந்து குதத்திற்கும், அங்கிருந்து தொடைகளின் வேர் பகுதிக்கும், அங்கிருந்து தொடைகளின் நடுப்பகுதிக்கும், அங்கிருந்து மூட்டுகளுக்கும், அங்கிருந்து கைகளின் வேர் பகுதிகளுக்கும், அங்கிருந்து ஜங்கத்திற்கும் (தொடைகளின் பாதி), அங்கிருந்து கணுக்கால்களுக்கும், அங்கிருந்து அங்குஸ்தத்திற்கும் {விரல்களுக்கும்}, அங்கிருந்து பாதத்திற்கும் அந்தக் காற்றை மாற்ற வேண்டும். இவ்வாறு பிராண நெருப்பை {உயிர் காற்றை} ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இழுக்கும் அவன், பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, ஆன்மா தூய்மையடைந்து, நிலவும், விண்மீன்களும் நிலைத்திருக்கும் வரை வாழ்வான். ஒருவன் தன் உடலுக்குள் உயிர் மூச்சை நிறுத்துவது ஸ்வதாவாகும். இந்த உடல்சார்ந்த யோகச் செயல்முறையின் மூலம் ஒருவன் தன் உயிர் மூச்சை முழுமையாக அடக்கலாம். இவ்வாறு பிராணாயாமம் பயிலும் ஒருவன், வாயு, இருமல், சளி {வாத, பித்த, கபக்} கோளாறுகள் அனைத்தில் இருந்தும் விடுபடலாம்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[3] "தக்ஷன் - மேற்கொள்ளும் பணிகள் அனைத்திலும் வெற்றிகரமானவன், அதாவது, தலைமைக்குரிய சக்திகளுடன் கூடியவன்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[4] "பூரக நடைமுறையைப் பயிலும்போது, அவன் தன் மூக்கின் மூலம் உயிர் காற்றைக் கொண்டு தன்னைத் தானே நிரப்பி ஒரு கோலை {தண்டத்தைப்} போலக் கடினமாவதால், அந்தக் கோலைப் போன்றவன் என்ற பொருளில் தண்டீ என்று அழைக்கப்படுகிறான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[5] "கும்பகமெனும் உடல் சார்ந்த நடைமுறையைப் பயிலும்போது, அவன் ஒரு தோல்பையை நிரம்புவதுபோல உயிர்க்காற்றால் நிரம்பியிருப்பதால் சர்மீ என்று அழைக்கப்படுகிறான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[6] "ரேசகம் பயிலும்போது {உயிர் காற்றை முழுவதும் வெளியேற்றி} நாணலைப் போல அவன் மெலிவதால் ஷரீ என்று அழைக்கப்படுகிறான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[7] அவன் உலகப்பற்று எனும் மரத்தை வெட்டும் வாளைப் போன்று கூர்மையாக இருந்தான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[8] "அவன் தக்ஷனின் வடிவில் நிறைவுடன் இருந்தான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[9] "இந்த ஸ்லோகத்தில் வரும் புஷ்கரம் என்பது ஆன்மாவையும், புத்திசார்ந்த புலங்களான மேதத்தையும் குறிக்கும். இந்திரன் என்பது தன் சுயத்தை {ஆன்மாவைக்} கண்ட மனிதனைக் குறிக்கும். சாம வேதத்தில் வரும் ஸ்லோகம், "நானே உணவு, உணவே நான்" என்றிருக்கிறது. தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களும், ஆன்ம உள்ளொளியைக் கொடையாகக் கொண்டவர்களுமான ரிஷிகள், தங்கள் மனக்குவிப்பின் மூலம் பெறும் சக்திகளைப் பெருக்குவதற்காக வேள்விகளைச் செய்கிறார்கள். ஆத்மாவானது உடலில் எப்போதும் தோன்றினாலும் உடலுக்கான பற்றுகளைக் கைவிட்டு அவன் தன்னைத் தானே ஈஷ்வரனாக வெளிப்படுத்திக் கொள்கிறான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

தெளிந்த நெய், பால், வாற்கோதுமை முதலியவை புற வேள்விகளில் அர்ப்பணிக்கப்படுகின்றன, ஆனால் ஆன்ம வேள்வியில் மனத்தில் உண்டாகும் அனைத்தும் மனக்குவிப்பின் மூலம் பரமாத்மா எனும் பீடத்தில் வேட்கப்படுகின்றன.(10) (தன்னலமெனும்) விறகைக் கடைந்து, (தெய்வம் மறையும்) நெருப்பால் எரிக்கப்பட்டு, (உடல் இன்பமெனும்) வன்னி மரத்தில் இருந்து திரட்டப்பட்டவனும், பிரம்மத்தை அறிந்தவனுமான ஒருவன், அங்கே பரமாத்மாவை அழைத்து வருவான்.(11) தாழ்ந்த வேள்வியில் {புற வேள்வியில்} முக்கியத்துவமற்ற பொருள்கள் நெருப்புக்குள் வீசப்படுகின்றன அதனால் உண்டாகும் மாறுபாடுகளின் படி சொர்க்கமோ, இழிந்த இடமோ மனிதர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன; ஆனால் மனோ வேள்வியில் அதுபோல் கிடையாது[10].(12) தாழ்ந்த யஜ்ஞத்தில் பலன்கள் நெருப்புக்கு உடைமையாக்கப்படுகின்றன, ஆனால் ஆத்ம யஜ்ஞத்தில் பிரம்மவாதிகள்[11], {அந்தப் பலன்களை} ஆன்ம பயிற்சிகளுக்கு உடைமையாக்குகின்றனர். பிரம்ம செல்வத்தைச் செலவழித்துச் செய்யப்பட்ட பிரம்ம யஜ்ஞத்தின் போது பிருஹஸ்பதி, ஆறு மாதங்களில் நான்கு வேதங்களையும் அடைந்தான்[12].(14) அவன், தன் குருகுலத்தின் சீடர்களுக்கு, உயர்ந்த, அழகிய எழுத்துகளுடன் கூடிய சரஸ்வதியின் வடிவமான இந்த வேதத்தைப் போதித்து, அதை இசையாக அமைத்தான்.(15) பிராமண என்ற சொல்லின் மூலம் விளக்கப்படும் வேள்வி, பிரம்மனால் குறிப்பிடப்பட்டதுபோல, இரண்டாவது பிரம்ம லோகத்தைப் போலத் தெரியும்[13].(16) வேதமெனும் சொல்லால் பிரம்மனின் வாயில் இருந்து வெளிப்பட்டதும், சான்று குறித்து எந்த ஐயமும் இல்லாததுமான இந்த வேள்வி {பிரம்மயஜ்ஞம்}, அவனால் செய்யப்படுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பல்வேறு பொருள்களின் மூலம் பேசுவது போலச் செழிப்படைகிறது.(17)

[10] "இங்கே யோகம் என்பது ஒரு வேள்வியுடன் ஒப்பிடப்படுகிறது. ஒரு மனோ வேள்வியில், அதாவது யோகத்தில் ஒருவன் இழிந்த பொருட்களை நெருப்பில் ஆகுதிகளாக அர்ப்பணிக்க வேண்டிய தேவையில்லை. ஒரு யோகி, புற வேள்வி செய்வது போன்ற நடைமுறைகளை நோற்கவில்லை எனினும், அதே பலன்களை அவன் ஈட்டுகிறான். {மனோ வேள்வியைச் செய்யும்} யோகிகள் பித்ரு லோகத்தைக் காண வேண்டுமென விரும்பும்போது, பித்ருக்கள் அவர்களின் முன்பு தோன்றுவார்கள் என்று ஸ்ருதி சொல்கிறது. ஒரு யோகி முழுமையான நிலையை அடையும்போது அவன் இதுவரை காணாதவையும், கேட்காதவையுமான பொருள்களைக் காண்கிறான். புற வேள்விகளை வேட்கும் சாதாரணர்கள், பரமாத்மாவை அறியும் உரிமையைப் பெறுவதில்லை; அவர்கள் ஈஷ்வரனை அறிய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆத்மாவே உண்மையான, முழுமையான கடவுள் ஆகும். ஈஷ்வரன் மாயையுடன் கூடிய கடவுள், அல்லது படைப்பாற்றலாக இருக்கிறான். புற வேள்விகளில் மதிப்பு இல்லாமை, மிகையான மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்றப்படி பலன்களில் வேறுபாடு இருக்கும், ஆனால் ஆத்மயஜ்ஞத்தில், அதாவது யோகத்தில் அதுபோன்ற ஏதும் கிடையாது, முக்தி அடைவதே அனைவருக்கும் பொதுவான நோக்கமாக இருக்கும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[11] "உலகின் சாதாரண வேள்விகளில் மக்கள் தாங்கள் அளிக்கும் பல்வேறு பொருள்களுக்கு ஏற்றபடி பலன்களை அடைகின்றனர். ஆனால் யோகிகள், ஆன்ம பண்பாட்டின்படி, பிரம்ம லோகத்தில் பலன்களை அடைகின்றனர். இவ்வுலகிலேயே பிரம்மத்தைக் கண்ட முனிவர்கள், தலைமைக்குரிய பல சக்திகளை அடைகிறார்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[12] "அதாவது, தகுதிவாய்ந்த ஒரு மனிதன், யோகப் பயிற்சியில முழுமையை ஆறு மாதங்களுக்குள் அடைகிறான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[13] "(பணிகள் செய்வதற்கான போக்காக இருக்கும்) பிருவிருத்தியின் விளைவாக இருக்கும் புறவேள்வியானது, ஆன்ம யோகத்தைப் போலத் தோன்றும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

(சாதாரண) வேள்விகள், விறகு {ஸமித்து}, சந்திரச்செடிகள் {சோமகலஷை}, வேள்விக் கரண்டிகள், பாத்திரங்கள், இரவலர்கள், செல்வம் வேண்டும் மனிதர்கள், வாற்கோதுமை முதலிய பிற பொருள்கள், பாத்திரங்கள் நிறைந்த நீர் ஆகியவற்றால் செய்யப்படுகின்றன.(18) அந்த வேள்விகள், செல்வங்களையும், பொன்னையும் பெரும்பிரம்மத்திற்கு அர்ப்பணித்து, (பிராமணர்களுக்குக் கொடுக்கப்படும்) பசுக்கள், கன்றுகள் ஆகியவற்றுடன் நடத்தப்படுகின்றன.(19) வேதங்களை ஓதுவதுடன் சாம வேத ஸ்லோகங்களை உரைத்து, பிரம்ம ஞானத்தால் நிறைந்த கர்மம் எனும் அங்கத்துடன் தொடர்வது, வழிபாடு எனும் அறிவியலுடன் ஐக்கியமடைகிறது.(20) விறகுகளால் அமைக்கப்பட்ட யஜ்ஞ வடிவில் இருப்பவனும், மருத்துகளுடன் சேர்த்து மனத்தில் நினைக்கப் படுபவனுமான பிரம்மன், பிரம்மத்தில் இருந்து தனியாக உதித்த பொருள்களை நெருப்பில் ஆகுதிகளாகச் செலுத்தி ஆத்மாவிலேயே இயல்பாக நிலைத்திருக்கிறான்.(21)

உயிரினங்கள் அனைத்தின் தலைவனான பிரம்மன், வேதங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளின்படி பிரம்மத்தை மதிக்கும் வகையிலும், தூய புத்தியின் வடிவில் இருக்கும் பிரம்மத்தைத் தீண்டும் வகையிலும் வேள்விகளை வேட்பதில்லை.(22) எல்லாம் வல்லவனான பிரம்மன், வன்னி மரத்தில் உண்டாகும் விறகை நெருப்பில் கடைந்து அக்னிஷ்டோம வேள்வி செய்து தேவர்களை அமைதிப்படுத்தி நிறைவடையச் செய்கிறான்.(22) வேள்வி வேட்கும் நேரத்தில் அந்தக் கூட்டம் சபை உறுப்பினர்களால் அலங்கரிக்கப்படுகிறது, சமஸ, அத்யர்யு புரோகிதர்கள் அதைச் செய்யும்போது இனிய ஸ்லோகங்களை உரைக்கிறார்கள்.(23) ஓ! மன்னா, சூரியனையும், சந்திரனையும் போன்ற பிரகாசமிக்கவர்களும், வேதங்களிலும், அவற்றின் அங்கங்களிலும் தேர்ச்சியடைந்தவர்களுமான தவசிகளால் அந்தப் பெரும் வேள்வி அலங்கரிக்கப்படுகிறது.(25)

வேதங்களை உரக்க உரைப்பதால் அந்த வேள்வி இரண்டாவது பிரம்மலோகம் போலத் தோன்றியது. தேவர்கள் பூமிக்கு இறங்கி வந்தனர். தேவர்களைப் போன்றவர்களும், பணிவுடன் கூடியவர்களும், பிரம்மஞானத்துடன் வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் அறிந்தவர்களுமான பிராமணத் தவசிகளால் அந்தப் பெரும் வேள்வி சொர்க்கத்திலும், பூமியிலும் மதிக்கப்பட்டது.(26,27) பிராமணர்களால் செய்யப்பட்ட அந்தப் பெரும் வேள்வி, வேள்விக் களத்தில் மூட்டப்பட்ட மூன்று நெருப்புகளைப் போல எரிந்து, பிரம்ம லோகத்தைப் போல ஒளிர்ந்தது.{28} அந்தப் பெரும் வேள்வியில் பிரம்மவாதிகள், இந்திரனால் பாடப்பட்ட சாமவேத ஸ்லோகங்களையும், சாத்திரங்களால் அனுமதிக்கப்பட்ட யஜுர் வேத ஸ்லோகங்களையும் உரைத்தனர்.{29} வாய்மை நிறைந்தவர்களும், தற்கட்டுப்பாட்டை உடையவர்களும், பிரமத்துக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களுமான தவ முனிவர்களை மனத்தில் நினைத்தவுடனேயே அவர்கள் அங்கே வந்தனர்.{30}(28-30) பிரம்மனால் பெறப்பட்டவனும், பெரும் இறையியல் அறிஞர்களில் வழிபடத்தகுந்தவனுமான பிருஹஸ்பதி, பல்வேறு வடிவங்களை ஏற்று, அந்த வேள்வியில் ஹோதாவாகவும், பிரம்மனாகவும் செயல்பட்டான்.(31)

அந்த வேள்வி நிறைவடைந்ததும், அந்த வேள்வியைச் செய்தவன் {பிருஹஸ்பதி} அந்தச் செயலுக்கான பலன்களை விஷ்ணுவுக்கு அர்ப்பணித்து, ஆன்ம ஆற்றலின் மூலம் இறுதிக் கருவை அடைந்த அதிதியின் மூலம் பிறந்தான்.(32) பிறப்பும், அறியாமையும், அதன் செயல்பாடும் அற்றவனும், பிரம்ம ஞானத்தை அறிந்தவனுமான அவன் {பிருஹஸ்பதி}, இன்பதுன்பங்களில் இருந்து விலகி இருப்பதும், இந்திரனும், இன்னும் பிற தேவர்களும் வெளிப்பட்டதும், சிதைவில்லா ஆன்ம பயிற்சிகளின் மூலம் அடையக்கூடியதுமான விஷ்ணுவின் பாதத்தை அடைந்தான். புலன்களில் இருந்தும், பற்றுக்குக் காரணமாக அமையும் புலன்நுகர் பொருட்களில் இருந்தும் விடுபட்ட முனிவர்களும் அவனைப் போலவே {விஷ்ணுவின் பாதத்தை} அடைவார்கள்.(33,34)

முற்பிறவி செயல்பாடுகளின் காரணமான ஆசைகளால், பல்வேறு புலன்நுகர் பொருட்களும் உண்டாகி மனத்தை முழுமையாக வெல்கின்றன. எனவே ஒருவன் மிகக் கவனமாக இந்த ஆசைகளை அடக்க வேண்டும்.(35) முனிவர்கள், பல்வேறு புலன்நுகர் பொருள்களை அனுபவித்தாலும், அவற்றின் கட்டுப்பாட்டுக்குள் அடங்குவதில்லை. தற்கட்டுப்பாடே உயர்ந்த பண்பாகக் கல்விமான்களால் கருதப்படுகிறது.(36) ஓம் எனும் சொல்லால் பெற்ற போதனையின் மூலம் ஆன்ம ஞானத்தை அடைந்த பிரம்மவாதிகளின் மனம் கல்வியால் பீடிக்கப்படுவதில்லை.(37) வேதங்களை எப்போதும் உரைக்கும் பிராமணர்கள், பக்திமான்களும், தேவர்களும் வாழும் உலகத்தையே சிறந்த லோகம் எனக் கருதுகிறார்கள்.(38) ஓ! பாரதா, ஓ! மன்னா, தேவர்கள் அழிவைச் சந்திக்காமல் வேள்வி காணிக்கைகளால் ஊட்டம் பெற்று விளங்குவதும், வேள்வி செய்பவன், கவலையற்றவனாகத் தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து தன் கர்மத்தின் மூலம் அடையக்கூடியதுமான உலகமே சிறந்தலோகமாகும்.(39) (சாதி {வர்ணம்}, தகுநிலை ஆகியவற்றில்} வேற்றுமை பார்க்கும் மனிதர்கள், பாறை போன்ற இந்த உடலை, முக்தி அடையும் நோக்கத்திற்காகப் பயன்படுத்த முடியாது[14].(40,41) ஓ! மன்னா, கர்மம் செய்வதில் மும்முரமாக இருக்கும் பிராமணர்கள், தங்கள் செயல்களின் பயன்களை அனுபவித்த பிறகு, சொர்க்கத்தில் இருந்து விரட்டப்பட்டு, நிறம் மங்கிய முகங்களுடனும், மாயையால் பீடிக்கப்பட்ட மனங்களுடனும் பூமியில் வாழ்வார்கள்.(42)

[14] "ஒரு மனிதன், அனைவரையும் தன்னைப் போன்றவர்களாகவே காணாதவரையில் அவனால் உண்மையான முக்தியை அடையமுடியாது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

இனிய பேச்சைக் கொண்டவரும், பாவங்களைப் போக்குபவர்களில் முதன்மையானவரும், அமைதியான வடிவம் கொண்டவருமான ஆசான், பின் வரும் வேதாந்த போதனைகளை இருபிறப்பாளர்களிடம் சொன்னார்.{43} "இந்த உடலையும், புலன்களையும் சுயமாக கருதுவதால் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பகைமை கொள்கிறீர்கள். ஆயிரம் தேவ வருடங்கள் ஆனாலும், உடல்மீது கொண்ட பற்றெனும் இந்தப் பாறையை உடைக்க முக்தியைத் தவிர வேறெதனாலும் முடியாது.{44} மனத்தைக் குவிப்பதன் மூலம், நீங்கள் அனைவரும் ஒரே ஆத்மாவே {சுயமே} என்பதை உணரும்போதும், மனவெறுப்பேதுமின்றி அனைத்து உயிரினங்களுடனும் நீங்கள் நட்பை உண்டாக்கிக் கொள்ளும்போதும், இவ்வுடலே சுயமெனும் உங்கள் தவறான கருத்து அழிவடையும்.{45}(43-45) கோபம், பொறாமையெனும் இரண்டு உணர்வுகளும் வெற்றியடையும் இயல்பின் ஆற்றலைப் பெருகச் செய்யும்; கோபமும், பொறாமையுமற்ற ஆற்றல் பிரம்மத்திடம் அர்ப்பணிப்பைப் பெருகச் செய்யும்.(46) தூய புத்தியைப் பயன்படுத்தி இம்மையிலும், மறுமையிலும் இன்பங்களைவிட்டு விலகும்போதும், பளிங்கு மலை போல இவ்வுடலைப் பெரிதாக்கும் நெருப்பு, நீர், உணவு ஆகியவையும், அவற்றின் செயல்பாடுகளும், சொற்கள், உயிர் காற்று, மனம் ஆகியவையும் அழிவடையும் போதும், மனைவியின் துணைகளும், பிற துணைகளும், மனத்திறன்கள், சாத்திரங்கள், உணர்வுகள் ஆகியவையும் தகரும்போதும், உடல் சார்ந்த பற்றெனும் இந்த மலையைப் பிளக்குமாறு நான் உங்களுக்கு ஆணையிடுவேன். அப்போதுதான் உங்களாலும் அதை {உடல் சார்ந்த பற்றெனும் அந்த மலையைப்} பிளக்க முடியும்" என்று சொன்னார் அந்த ஆசான்" என்றார் {வைசம்பாயனர்}.(47-49)

பவிஷ்ய பர்வம் பகுதி – 21ல் உள்ள சுலோகங்கள் : 49

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்