Friday 21 February 2020

குலங்களின் வரலாறு - தக்ஷனின் சந்ததி | ஹரிவம்ச பர்வம் பகுதி – 03

(மருத்துத்பத்திகதனம்)

An account of various families: Daksha's offspring| Harivamsa-Parva-Chapter-03 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : தக்ஷன் சந்ததியை உண்டாக்கிய வகை; ஹர்யஷ்வர்கள்; ஸபலாஷ்வர்கள்; நாரதரின் மறுபிறப்பு; கசியபர்; தக்ஷனின் மகள்கள்; உயிரினங்களின் பிறப்பு...

ஜனமேஜயன், "ஓ! வைசம்பாயனரே, தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பாம்புகள் {உரகர்கள்} மற்றும் ராட்சசர்களின் தோற்றத்தை விரிவாக விளக்குவீராக" என்று கேட்டான்.(1)


வைசம்பாயனர் சொன்னார், "ஓ! மன்னா, "சந்ததியை உண்டாக்குவாயாக" என்று ஸ்வயம்பூ மனுவால் ஆணையிடப்பட்ட தக்ஷன் சந்ததியை எவ்வாறு உண்டாக்கினான் என்பதைக் கேட்பாயாக.(2) திறன் வாய்ந்த தக்ஷன் முதலில், முனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், ராட்சசர்கள், யக்ஷர்கள், பூதங்கள், பிசாசங்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளிட்ட {மரபணு சாராத} தன் மனோ சந்ததியை உண்டாக்கினான்.(3)

குடிமுதல்வனும் {பிரஜாபதியும்}, நுண்ணறிவுமிக்கவனுமான மஹாதேவனுடைய எண்ணம் அதுவல்ல என்பதால், {தக்ஷன்} தன் மனத்தில் பிறந்த இவை பல்கிப் பெருகாத போது, தன் படைப்பு பல்கிப் பெருக வேண்டும் என்று நினைத்தும், பாலினக் கலவியின் மூலம் சந்ததியை உண்டாக்க விரும்பியும், குடிமுதல்வன் வீரணனின் மகளான அஸ்னிகியை {அஸிக்னியை} மணந்து கொண்டு, ஒரு மகனைப் பெறவும், ஒரு பெரும் குலத்தைப் பெற்றெடுக்கும் ஆற்றலைப் பெறவும் {அந்த தக்ஷன்} தவத்தில் ஈடுபட்டான்.(4-6) அதன்பேரில், ஆற்றல்மிக்கக் குடிமுதல்வன் தக்ஷன், வீரணன் மகள் அஸ்னிகியிடம் {ப்ரவர்த்தகர்கள் என்றழைக்கப்பட்ட} ஐயாயிரம் மகன்களைப் பெற்றெடுத்தான்.(7)

செய்திகளைக் கொண்டு செல்ல எப்போதும் விரும்பும் நாரதர், சந்ததியைப் பெருக்க விரும்பும் அந்தப் பெரும் மனிதர்களைக் கண்டு, அவர்களின் அழிவுக்காகவும், தாம் சபிக்கப்படவும் {அவர்களிடம்} பேசினார்.(8) தக்ஷனுக்கும், அவனது சாபத்திற்கும் அஞ்சிய தவசி கசியபர், பிரம்மனால் பெறப்பட்ட இதே நாரதரை, தாமே அவனது {தக்ஷனின்} மகளிடம் மீண்டும் பெற்றார்.(9) முதலில் பிரம்மனே நாரதரைப் பெற்றெடுத்தார்; அதன் பின்பு அந்தத் தெய்வீகத் தவசிகளில் முதன்மையானவர் (கசியபர்), வீரணன் மகளான அஸ்னிகியிடம் {அஸ்னிகியின் மகளிடம்} அந்தத் தவசிகளில் சிறந்தவரை {நாரதரைப்} பெற்றெடுத்தார்.(10) ஹர்யஷ்வர்கள் என்ற பெயரில் கொண்டாடப்பட்டவர்களும், தக்ஷனின் மகன்களுமான அவர்கள் {பிரவர்த்தகர்கள்}, நிச்சயம் அவரால் {நாரதரால்} கொடுக்கப்பட்ட சாத்திர அறிவின் மூலமே உடல்பற்றில் இருந்து விடுபட்டுப் புலப்படாதவர்களானார்கள்.(11) அளவிலா ஆற்றல் கொண்ட தக்ஷன், நாரதரை அழிக்க ஆயத்தமான போது, தன் முன் முன்னணி தவசிகளைக் கொண்ட பரமேஷ்டி (பிரம்மன்), (அவ்வாறு செய்ய வேண்டாமென) அவனை {தக்ஷனை} இரந்து கேட்டான்.(12) அதன்பேரில் தக்ஷன், பரமேஷ்டியின் மகனான நாரதர், தன் மகளுக்கு {தக்ஷனுடைய மகளுக்கு} மகனாகப் பிறக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டான்.(13) அதன்பேரில் தக்ஷன், தன் மகளைப் பரமேஷ்டிக்குக் கொடுத்தான்; அந்த முனிவரும் {கசியபரும்}, தக்ஷனின் சாபத்திற்கு அஞ்சி அவளிடம் நாரதரைப் பெற்றார்[1]" {என்றார் வைசம்பாயனர்}.(14)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் இணையப் பதிப்பில் "இனிய சொற்பொழிவாளரும், தெய்வீக தவசியுமான நாரதர், ஹர்யஸ்வர்கள் என்றழைக்கப்படுபவர்களும், உயர்ந்த நற்பேற்றைப் பெற்றவர்களும், தங்கள் சந்ததியைப் பெருக்கப் போகிறவர்களுமான தக்ஷனின் ஐயாயிரம் மகன்களையும் கண்டு, இனப்பெருக்கம் சார்ந்த அவர்களின் அணுகுமுறையை மாற்றுவதற்காகவும், எல்லாம்வல்லானை நோக்கி அதைச் செலுத்துவதற்காகவும், தக்ஷனிடம் இருந்து அழிவுகரமான சாபத்தைப் பெறவும் அவர்களுக்கு இம்மை கடந்த இயங்கியல் குறித்து அவர் உபதேசித்தார்.(8) தக்ஷன் நாரதரைச் சபித்த காரணத்தால், பரமேஷ்டியான பிரம்மன், தன் சிறந்த சந்ததியாக யாரைப் படைத்தாரோ அந்தத் தவசி நாரதரை, தக்ஷனின் மகள் போன்ற அவனது மைத்துனியிடம் தவசியான கசியபர் பெற்றார்.(9) முன்னர்ப் பிரம்மாவே நாரதரை எழச் செய்தார். தக்ஷன் நாரதருக்கு அளித்த சாபத்தின் காரணமாக, பிரஜாபதி வீரணனின் மகளான பெண்மணி அஸிக்னியின் மூலம் சிறந்த தெய்வீக தவசியான நாரதர் மீண்டும் வெளிப்பட நேர்ந்தது. அசிக்னியானவள், தக்ஷனுடைய மனைவியின் கடைசித் தங்கையாவாள். தக்ஷனானவன், இந்தக் கடைசி மைத்துனியான அஸிக்னியைத் தன் மகளாகக் கருதி பிரஜாபதியான கசியபருக்கு அவளை மணமுடித்துக் கொடுத்தான். இவ்வாறே, மற்றொரு சந்தர்ப்பத்தில் கசியபர் நாரதருக்குத் தந்தையாக இருந்ததால், நாரதரை உண்டாக்கியதில் அவரும் பிரம்மனுக்கு ஒப்பானவரானார்.(10) ஹரியஸ்வர்கள் என்ற பெயரில் புகழ்பெற்றவர்களாக இருந்த தக்ஷனின் அந்த ஐயாயிரம் மகன்களும், ஒருமை அமையாத பன்மையைச் சொல்லும் நாரதரின் வாக்கால் துன்புறுத்தப்பட்டு, உலகம் சார்ந்த வாழ்வில் மயக்கம் நீங்கியவர்களானார்கள்.(11) எனவே, அவர்கள் எல்லாம் வல்லானை நோக்கிச் செல்லும் பாதையைத் தேடி உலகில் தொலைந்து போனார்கள். இதில் ஐயமேதும் இல்லை. பின்னர், வீரனான தக்ஷன், நாரதரை அழிப்பதற்காக எழுந்தபோது, பிரம்மன் தவசிகளின் கூட்டத்தைத் தன் முன்னணியில் கொண்டு தக்ஷனிடம் சென்று, நாரதரை அழிக்க வேண்டாமென வேண்டினான். பிரம்மனோடு வந்த முனிவர்கள், பிரம்மனுக்கும் தக்ஷனுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தத்தை உண்டாக்கியபோது, தக்ஷன் பிரம்மனிடம், "உமது மகனான நாரதன், என் மகள் போன்ற என் கடைசி மைத்துனியிடம் என் பேரனாக வெளிப்படுவான்" என்றான். நாரதர் அதற்கு உடன்பட்டார். பின்பு தக்ஷன், தன் மகள்களில் பதிமூன்று பேரை தவசி கசியபருக்கு மணமுடித்துக் கொடுத்த போது, தன் மகள் போன்ற தனது கடைசி மைத்துனியையும் தவசி கசியபருக்குக் கொடுத்தான். தக்ஷனின் சாபத்திற்கு அஞ்சிய நாரதர் அவளிடம் இருந்து மீண்டும் வெளிப்பட்டார்.(11-14)" என்றிருக்கிறது.

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, பெரும் முனிவரான நாரதரால் தக்ஷனின் மகன்கள் ஏன் கொல்லப்பட்டனர் என்பதை நான் உண்மையில் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்.(15)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஹர்யஷ்வர்கள் என்றழைக்கப்பட்டவர்களும், உயர்ந்த ஆற்றலைக் கொண்டவர்களுமான தக்ஷனின் மகன்கள், சந்ததியைப் பெருக்கும் நோக்கில் வந்த போது நாரதர் அவர்களிடம்,(16) "ஓ! தக்ஷனின் மகன்களே, அனைத்தின் காரணத்தையும் அறியாதவர்ளாக இருப்பினும் சந்ததியை உண்டாக்க விரும்புகிறவர்களாக இருப்பதால், நீங்கள் அனைவரும் எவ்வளவு மூடர்களாக இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. சொர்க்கத்திலும், பூமியிலும், பாதாளத்திலும் இருப்பது யார் என்பதை அறியாமல் நீங்கள் எவ்வாறு சந்ததியை உண்டாக்க விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார்[2].(17)

[2] "உள்ளேயும், வெளியேயும், மேலேயும், கீழேயும் என எங்கும் பரமாத்மாவே இருக்கிறான். அவனே இவை யாவையும் படைத்தான். எனவே, அவனை நீங்கள் முதலில் அறிவீராக. அதன் பிறகு, அவனால் படைக்கப்பட்ட பூமியில் நீங்கள் மக்கள் தொகையைப் பெருக்கலாம்" என்ற பொருளில் நாரதர் சொல்வதாக தேசிராஜுஹனுமந்தராவ் விளக்குகிறார். பிபேக் திப்ராயின் பதிப்பில், "நீங்கள் மூடர்களாவீர். பூமியின் உட்புறத்தையும், அதன் மேலே இருப்பதையும், கீழே இருப்பதையும் நீங்கள் அறியமாட்டீர்கள். உங்களால் குடிமக்களை எவ்வாறு உண்டாக்க முடியும்?" என்று கேட்பதாக இருக்கிறது.

அவரது சொற்களைக் கேட்ட தக்ஷனின் வழித்தோன்றல்கள், ஒருவருக்கொருவர் அக்கறை காட்டாமல், அனைத்தின் காரணனைக் காண பல்வேறு திசைகளுக்குச் சென்றனர்.(18) தங்கள் உயிர் மூச்சுகளை அடக்கி, தூய பிரம்மத்தை அடைந்த அவர்கள் முக்தியை அடைந்தனர். கடலில் இருந்து திரும்பாத ஆறுகளைப் போல இப்போது வரையிலும் அவர்கள் திரும்பவில்லை.(19) இவ்வாறு அந்த ஹர்யஷ்வர்கள் காணாமல் போனபோது, சந்ததியை உண்டாக்கவல்லவனும், பிரசேதஸின் மகனுமான தக்ஷன், வீரணனின் மகளிடம் மீண்டும் ஓராயிரம் மகன்களைப் பெற்றான்.(20) அந்த ஷபலாஷ்வர்கள் மீண்டும் தங்கள் சந்ததியைப் பெருக்க விரும்பியபோது, அவர்களுக்கும் நாரதரால் அதே சொற்கள் சொல்லப்பட்டன.(21)

அப்போது அவர்கள் {ஷபலாஷ்வர்கள்} தங்களுக்குள், "பெருந்தவசியான நாரதர், நியாயமான காரியத்தையே பேசினார். நாம் நமது தமையன்மார்களின் பாதச்சுவடுகளையே பின்பற்ற வேண்டும்; அதில் ஐயமேதும் கிடையாது.(22) பூமியின் பரிமாணத்தை அறிந்து கொண்டு, முழு மனதுடனும், நிதானமாகவும் முறையான வரிசையில் சந்ததியை உண்டாக்குவோம்" என்றனர்.(23)

அவர்களும் அதே வழியில் பல்வேறு திசைகளுக்குச் சென்றனர். பெருங்கடலில் இருந்து ஆறுகள் திரும்பாததைப் போல, இப்போது வரையிலும் அவர்கள் திரும்பவில்லை.(24)

ஷபாலாஷ்வர்களும் காணாமல் போன போது, கோபம் கொண்ட தக்ஷன், நாரதரிடம், "நீ அழிவைச் சந்தித்து, கருவறையில் வாழும் {கர்ப்பவாசத்தின்} வலியை அனுபவிப்பாயாக" என்றான்.(25)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அதுமுதல் உடன் பிறந்தோனொருவன் {ஒரு சகோதரன்} மற்றொருவனைத் தேடிச் சென்றால் அழிவையே சந்திக்கிறான். எனவே கல்விமான்கள் அதைச் செய்யக்கூடாது.(26) தன் மகன்கள் இவ்வாறு நாடுகடத்தப்பட்டு, அழிவையடைந்ததை அறிந்த குடிமுதல்வன் தக்ஷன், மீண்டும் வீரணன் மகளிடம் அறுபது மகள்களைப் பெற்றான். இதை நாம் கேள்விப்படுகிறோம்.(27) ஓ! குருவின் வழித்தோன்றலே, குடிமுதல்வரான கசியபர், சந்திரன் {சோமன்}, தர்மன் மற்றும் வேறு முனிவர்களும் அந்தத் தக்ஷனின் மகள்களில் இருந்தே தங்கள் மனைவிமாரைக் கொண்டனர்.(28) தக்ஷன், அவர்களில் பதின்மரை தர்மனுக்கும், பதிமூவரை கசியபருக்கும், இருபத்தெழுவரை சந்திரனுக்கும், நால்வரை அரிஷ்டநேமிக்கும், இருவரை பாஹுபுத்ரருக்கும் {பிருகுவுக்கும்}, இருவரை அங்கீரஸுக்கும், இருவரை கல்விமானான கிருஷாஷ்வருக்கும் {பிருஷாஷ்வருக்கும்} கொடுத்தான்[3].(29,30)

[3] இந்தப் பட்டியலில் தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் பாஹுபுத்ரருக்குப் பதில் பிருகுவென்றும், பிபேக்திப்ராயின் பதிப்பில் கிருஷாஷ்வர் என்பதற்குப் பதில் பிருஷாஷ்வர் என்றும் இருக்கின்றன.

ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, அருந்ததி, வஸு, யாமி {ஜாமி}, லங்கை {லம்பை}, பானு, மருத்வதி, ஸங்கல்பை, மஹூர்த்தை, ஸாத்யை மற்றும் விஷ்வை ஆகிய பதின்மரும் தர்மனின் மனைவியராவர். அவர்களது சந்ததியைச் சொல்கிறேன் கேட்பாயாக[4].(31) விஷ்வதேவர்கள் விஷ்வையின் மகன்களாவர், சாத்யை சாத்யஸ்களை ஈன்றாள். மருத்வதி, மருத்துகளின் தாயாவாள், வாஸுக்கள் வஸுவின் மகன்களாவர்.(32) பானுக்கள்[5] பானுவுக்கும், முஹூர்த்தங்கள்[6] முஹூர்த்தைக்கும் பிறந்த மகன்களாவர்.(33) {மந்திராபிமான தேவனான} கோஷன் லங்கையிடமும், {தெய்வீகப் பாதையாக இருக்கும்} நாகவிதி யாமியிடமும் பிறந்தனர். அருந்ததியானவள், பூமியில் உள்ள மூலிகைகள் அனைத்தையும் பெற்றாள்.(34) அனைத்தின் ஆன்மாவாக இருக்கும் உறுதிப்பாட்டின் தேவன் {ஸங்கல்பன்} ஸங்கல்பையிடம் பிறந்தான், {எல்லாம் வல்லவனிடம் உயிரினங்களைப் போகத் தூண்டும்} பிருஹலம்பன் {விருஷலம்பன்} நாகபிதையிடம் பிறந்தான்[7].(35)

[4] "புராணங்களில் முதலாம் தக்ஷன் என்று அறியப்படும் ஒருவன் இருக்கிறான். இந்தத் தக்ஷன் மேற்கண்ட பெண்களின் தந்தையான இரண்டாம் தக்ஷனாவான். முதலாம் தக்ஷன், பிரம்மனின் வலக்கைக் கட்டைவிரலில் இருந்து தோன்றிய பிரம்மனின் மனோமகனாதலால், நவபிரம்மாக்களான ஒன்பது பிரம்மாக்களில் ஒருவனாக மதிக்கப்படுகிறான். அவனது மனைவி பிரஸூதி என்று அறியப்படுகிறாள். முதலாம் தக்ஷனுக்கு இருபத்துனான்கு மகள்கள் இருந்ததாகவும், அவர்களில் ஷிரத்தை, லக்ஷ்மி, திருதி, துஷ்டி, புஷ்டி, மேதை, கிரியை, புத்தி, லஜ்ஜை, வபு, ஷாந்தி, ஸித்தி மற்றும் கீர்த்தி என்ற பதிமூவரை தர்மனுக்குக் கொடுத்தான் என்று விஷ்ணுபுராணம் சொல்கிறது. ஆனால், இவர்கள் அறத்தின் நுழைவாயில்களான தர்மத்வாரங்கள் எனக் கருதப்படுகின்றனர். அவர்களின் மூலம் தர்மன் தன் மனைவியர் ஒவ்வொருவரிடமும் ஒரு மகனைப் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் காமம், தர்ப்பம், நியமம், ஸந்தோஷம், லோபம், ஷ்ருதம், தண்டம், போதம், வினயம், வியவஸாயம், க்ஷேமம், ஸுகம் மற்றும் யஷம் ஆகியோராவர். எனவே, இரண்டாம் தக்ஷன், வேறொருவனாவான். இந்தத் தரவை இதுவரை யாரும் ஒருங்கிணைத்துத் தொகுக்கவில்லை" என தேசிராஜு ஹனுமந்தராவ் இங்கே விளக்குகிறார்.

[5] "இவர்கள் ஒளியின் முதன்மை தேவர்களாவர். தாதா, மித்ரன், அர்யமான், சக்ரன், வருணன், அம்ஷுமான், பகன், விவஸ்வான், பூஷன், ஸவிதன், த்வஷ்டன் மற்றும் விஷ்ணு என்ற பனிரெண்டு தன்னொளிகளாகும். இவர்கள் வைவஸ்வத மன்வந்தரத்தில் ஆதித்தியர்களாகவும், சக்ஷுர் மன்வந்தரத்தில் துஹிதர்களாகவும் இருப்பார்கள். கல்பத்தின் தொடக்கத்தில் சந்ததியைப் பெருக்குவதற்காகப் பிரம்மன் அவர்களை ஜயர்கள் என்றழைத்துப் படைத்தான். ஆனால் அவர்களும் தக்ஷனின் இரண்டு பிள்ளைக்கூட்டங்களைப் போலச் சந்ததியைப் பெருக்குவதில் ஈடுபடத் தயங்கியபோது, அவர்கள் ஒவ்வொரு மன்வந்திரத்திலும் பிறக்க வேண்டுமெனப் பிரம்மன் அவர்களுக்குச் சாபமிட்டான். எனவே அவர்களுடைய பிறப்பு ஒரு சுழற்சியானது" என தேசிராஜு ஹனுமந்தராவ் இங்கே விளக்குகிறார்.

[6] "இவர்கள், விநாடிகள், நிமிடங்கள் மற்றும் நேரத்தின் பிற இலக்கங்களுக்குரிய தலைமை தேவர்களாவர். இவர்கள் க்ஷணம், ஆதி, கால, பாகங்கள் அபிமான தேவர்களாவர். மேலும் முஹூர்த்தை ஜயந்தன் என்றழைக்கப்பட்ட ஒருவனையும் தோற்றுவித்தாள், அஃது இந்தப் பத்தியில் கொடுக்கப்படவில்லை" என தேசிராஜு ஹனுமந்தராவ் இங்கே விளக்குகிறார்.

[7] "இந்தப் பிறப்புகள் மற்றும் திருமணங்களில் உள்ள உருவகம் வேத சடங்கான யாகம் தொடர்புடையதாகும். மருத்துக்கள், ஆதித்யர்கள், அக்னி மற்றும் வசுக்கள் ஆகிய தேவர்கள் அனைவரும் யாக நடைமுறையுடன் கூடியவர்களாவர். அதற்கு அருந்ததி கொடுத்த பொருட்கள் அவசியமாகும். அப்போது யாகம் செய்வதற்கு, ஒரு சத் சங்கல்பம் என்ற நல்விருப்பம் அவசியமாகும். அந்த யாகம் முறையாகச் செய்யப்பட்டால், அதைச் செய்பவன், சொர்க்கத்தின் சிக்கலான பாதையான நாகவிதி என்ற பாதையில் நடப்பான். அப்போது, கனியும் நிலை என்ற விருஷம் ஏராளமாக இருக்கும்" என தேசிராஜு ஹனுமந்தராவ் இங்கே விளக்குகிறார்.

ஓ! மன்னா, தக்ஷனால் சந்திரனுக்கு அளிக்கப்பட்ட மகள்கள் அனைவரும் கணியத்தில் {சோதிடத்தில்} நக்ஷத்திரங்கள் அல்லது கோள்கள் என்ற பெயரில் கொண்டாடப்படுகின்றனர்.(36) பெரும்பிரகாசம் கொண்ட தேவர்கள் எட்ட வசுக்கள் {அஷ்டவஸுக்கள்} என்ற பெயரில் கொண்டாடப்பட்டனர். நான் அவர்களின் பெயர்களை முழுமையாகச் சொல்கிறேன்.(37) ஆபன், த்ருவன், ஸோமன், தரன், அனிலன், அனலன், ப்ரத்யூஷன் மற்றும் ப்ரபாஸன் ஆகிய எண்மரும் எட்டு வசுக்கள் என்று அறியப்படுகின்றனர்.(38)

ஆபனின் மகன்கள் வைதன்டியன், ஷ்ரமம், ஷாந்தன், முனி ஆகியோராவர். உயிரினங்களை அழிப்பவனான தெய்வீக காலன் துருவனின் மகனாவான்.(39) சோமனின் மகன் வர்ச்சஸ் வர்சாஸ்வியைப் பெற்றான். வேள்விக் காணிக்கைகளைச் சுமந்து செல்லும் த்ரவிணன், தரனின் மகனாவான். அவன் தன் மனைவியிடம் மனோஹரன், ஷிஷிரன், ப்ராணன், ரமணன் ஆகியோரைப் பெற்றான்.(40) அனிலனின் மனைவி சிவையாவாள். இவர்களின் மகன் மனோஜவனாவான். போக்கு அறியப்படாதவனான அனிலனுக்கு இரு மகன்கள் இருந்தனர்.(41) அக்னியின் மகன் குமாரன், ஷரப் புற்களின் முட்களில் ஒளிர்ந்தான். ஷாகன், விஷாகன், நைகமேயன், பிருஷ்டஜன் ஆகியன அவனுடைய பெயர்களாகும்.(42) மேலும் கிருத்திகையரின்[8] வாரிசாக அவன் இருந்ததால் கார்த்திகேயன் என்றும் அழைக்கப்பட்டான். அக்னி தன் சக்தியில் நான்கில் ஒரு பகுதியைக் கொண்டு ஸ்கந்தனையும், சனத்குமாரரையும் படைத்தான்.(43) முனிவர் தேவலர் ப்ரத்யூஷனின் மகனாவார், அவருக்கு மன்னிக்கும் தன்மை கொண்டவர்களும் {க்ஷமாவந்தன்}, கடுந்தவம் நோற்பவர்களுமான {தபஸ்வின் என்ற} இரண்டு மகன்கள் இருந்தனர்[9].(44) பற்றற்றவளும், அழகியும், பிருஹஸ்பதியுடன் பிறந்தவளுமான யோகசித்தை, பிரம்மச்சிரய வாழ்வைப் பின்பற்றி உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்தாள்.(45) அவளே எட்டாவது வஸுவான ப்ரபாஸனின் மனைவியானாள். உன்னதக் குடி முதல்வனான விஷ்வகர்மன் அவளிடம் பிறந்தான்.(46) தேவர்களின் தச்சனான அவன் அவர்களுக்குத் தேர்களையும், ஆயிரக்கணக்கான உன்னதப் பொருட்களையும், ஆடைகளையும் செய்து கொடுத்து, கைவினைஞர்களில் முதன்மையானவனாக இருந்தான். மனிதகுலமானது, அவனுடைய கலையையே தங்கள் தொழிலாக ஏற்றுக் கொண்டு தங்கள் வாழ்வாதாரங்களை அமைத்துக் கொள்கிறது.(47,48)

[8] "குமரனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள், தேவகன்னியராவர்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[9] "ப்ரத்யூஷன் என்றழைக்கப்பட்ட வஸு, தேவலன் என்ற பெயரைக் கொண்ட ஒரு மகனையும், ருஷ்டி என்ற பெயரைக் கொண்ட ஒரு மகளையும் பெற்றான். இந்த தேவலன், கனிவானவர்களும், இணக்கமானவர்களுமான இரண்டு மகன்களைப் பெற்றான்" என்று தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் இருக்கிறது.

சிவனின் அருளாலும், தவத்தால் தூய்மையடைந்த இதயத்தாலும் சுரபியானவள் கசியபரின் மூலம் பதினோரு ருத்திரர்களைப் பெற்றாள்.(49) ஓ! பரதனின் வழித்தோன்றலே, அஜைகபாத், அஹிர்புத்னியன், ருத்ரஷ்வன், த்வஷ்டன், ஸ்ரீமான், விஷ்வரூபன் ஆகியோர் துவஷ்டனின் மகன்களாவர்[10].(50) ஹரன், பஹுரூபன், திரையம்பகன், அபராஜிதன், விருஷகபி, கபர்தி, ரைவதன், மிருகவ்யதன், சர்ப்பன், கபாலி ஆகியோர் மூவுலகங்களுக்கும் தலைமை தாங்கும் பதினோரு ருத்திரர்களாக அறியப்படுகின்றனர்.(51,52) ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, ஒப்பற்ற சக்தியுடன் கூடியவர்களான இத்தகைய நூற்றுக்கணக்கான ருத்திரர்கள், அசையும் மற்றும் அசையாத படைப்பெங்கும் பரவியுள்ளனர் எனப் புராணங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.(53)

[10] "தன்னொடுக்கத்தினாலும், மஹாதேவனின் அருளாலும், தக்ஷப்ரஜாபதியின் மகளும், கசியப பிரஜாபதியின் மனைவியுமான சுரபியானவள் பதினோரு ருத்திரர்களை வடிவமைத்தாள். அந்தப் பதினோரு ருத்திரர்களைத் தவிர, அஜைகபாத், அஹிர்புத்னியன், த்வஷ்டன், ருதன் ஆகியோரும் சுரபியின் சந்ததியினராக இருந்தனர். த்வஷ்டனின் மகன் பெரும் மகிமை பொருந்திய விஷ்வரூபன் ஆவான்" என்று தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தச்சுத் தொழில் செய்யும் மனிதர்கள் அனைவரும் அந்த உயர் ஆன்மாவையே {விஷ்வகர்மாவையே} பின்பற்றுகின்றனர். அஜைகபாத், அஹிபுத்னியன், த்வஷ்டன் மற்றும் வீரமிக்க ருத்திரன் ஆகியோர் இருந்தனர். துவஷ்டனுக்கு விஷ்வரூபன் என்ற பெயர் கொண்டவனும், சிறப்புமிக்கவனும், அழகனுமான ஒரு மகன் இருந்தான்" என்றிருக்கிறது. இதில் சுரபி, தக்ஷன் மற்றும் கசியபரின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, உலகங்களெங்கும் பரவியிருக்கும் கசியபரின் மனைவிகளைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக: அவர்கள் அதிதி, திதி, தனு, அரிஷ்டை, ஸுரவை {ஸுரஸை}, ஸுரபி, வினதை, தாம்ரை, க்ரோதவஷை, இரை, கத்ரு, முனி மற்றும் ஸ்வஸை {கஸை} ஆகியோராவர்[11]; இனி அவர்களின் சந்ததியைக் கேட்பாயாக.(54,55) முந்தைய {சாக்ஷுஷ} மன்வந்தரத்தில் பனிரெண்டு தேவர்கள் முன்னணியில் இருந்தனர். வைவஸ்வத மன்வந்தரத்தில் அவர்கள் துஷிதர்கள் என்ற பெயரில் ஒருவருக்கொருவர் உரையாடினர்.(56) உயர்ந்த சிறப்புகளைக் கொண்ட அப்போதைய சக்ஷுஷ மனுவின் ஆட்சியில், அனைத்து உயிரினங்களின் நன்மைக்காக ஒன்றுகூடிய அவர்கள் {துஷிதர்கள்} அனைவரும்,(57) "வைவஸ்வத மன்வந்தரத்தில் அதிதியின் கருவறைக்குள் நாம் அனைவரும் நுழைந்து நற்பேற்றை அடைவோம்" என்றனர்".(58)

[11] முழுமஹாபாரதம் ஆதிபர்வம் பகுதி 65ல் அதிதி, திதி, தனு, காலை, தனாயு, சிம்ஹிகை, குரோதை, பிராதை, விஸ்வை, வினதை, கபிலை, முனி மற்றும் கத்ரு என்ற வரிசையில் பெயர்கள் சொல்லப்படுகின்றன.

வைசம்பாயனர் சொன்னார், "சக்ஷுஷ மனுவின் மன்வந்தரத்தில் இதைச் சொன்ன அவர்கள், மரீசியின் மகனான கசியபர் மூலம் தக்ஷனின் மகளான அதிதியால் பெற்றெடுக்கப்பட்டனர்.(59) சக்ரன், விஷ்ணு ஆகிய இருவரும் அவளிடம் பிறந்தவர்களே. ஓ! பரதனின் வழித்தோன்றலே, அர்யமான், தாதா, த்வஷ்டன், பூஷன், விவஸ்வான், ஸவிதா, மித்ரன், வருணன், அம்ஷன், மற்றும் பகன் என்ற பதின்மரும் அதிதியிடம் பிறந்தனர் என்று சொல்லப்படுகிறது.(60,61) சக்ஷுஷ மன்வந்தரத்தில் துஷிதர்கள் என்ற பெயரைக் கொண்டிருந்தவர்கள், வைவஸ்வத மன்வந்தரத்தில் பனிரெண்டு ஆதித்யர்களாக அறியப்பட்டனர்.(62) நோன்புகளை நோற்பவர்களும், ஒப்பற்ற சக்தியைக் கொண்டவர்களுமான சோமனின் இருபத்தேழு மனைவியரும் தங்கள் சந்ததியாகத் தாரகைகளை {ஒளிக்கோள்கள் / நட்சத்திரங்களைப்} பெற்றெடுத்தனர்.(63) அரிஷ்டநேமியின் மனைவியர் பதினாறு மகன்களைப் பெற்றெடுத்தனர். கல்விமானான குடிமுதல்வன் பஹுபுத்ரன், வித்யுத் (மின்னல்), அசனி (இடி), மேகன் (மேகம்), இந்திரதனுஸ் (வானவில்) ஆகிய நான்கு மகன்களைக் கொண்டிருந்தான்.(64) ரிக்குகளின் சிறந்த படைப்புகள் ப்ரத்யங்கீரஸிடமிருந்து தோன்றியவை, மேலும் தெய்வீக முனிவரான கிருஷாஷ்வன் பல்வேறு தெய்வீக ஆயுதங்களின் தலைமை தேவர்களைப் பெற்றெடுத்தான்[12].(65)

[12] "ப்ரத்யங்கீரஸிடமிருந்து பிறந்தவர்கள் ரிக் வேதத்தின் சிறந்த ரிக் பாடல்களாகினர். மேலும் தாக்குதலுக்குரிய ஆயுதங்களாக அரச முனியான கிருஷாஷ்வனின் சந்ததியினராகினர்" என தேசிராஜு ஹனுமந்தராவின் பதிப்பில் இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பிரம்மரிஷிகளால் மதிக்கப்படும் ரிக்வேதத்தின் சிறந்த பாடல்கள் அங்கீரசிடம் இருந்து உண்டானவை. தேவரிஷி பிருஷாஷ்வனின் மகன்கள் தேவர்களின் ஆயுதங்களாக இருந்தனர்" என்றிருக்கிறது.

ஓ! குழந்தாய் {ஜனமேஜயா}, இந்த தேவர்கள் ஆயிரம் யுகங்களுக்குப் பிறகு மீண்டும் தங்கள் பிறப்பை அடைகின்றனர். அவர்களில் முப்பத்துமூவர்[13] தாங்களாகவே பிறப்பை அடைகின்றனர்.(66) ஓ! மன்னா, இவ்வுலகில் சூரியன் எழுந்து மறைவதைப் போலவே, இந்த தேவர்களின் தோற்றமும் மறைவும் குறிப்பிடப்படுகின்றன. இவர்கள் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றி மறைகிறார்கள்.(67,68)

[13] "8 வசுக்கள், 11 ருத்திரர்கள், 12 ஆதித்யர்கள், பிரம்மன் மற்றும் இந்திரன் ஆகியோரே இந்த முப்பத்துமூன்று தேவர்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

கசியபர் திதியிடம், ஹிரண்யகசிபு மற்றும் ஹிரண்யாக்ஷன் என்ற இரு பலமிக்க மகன்களைப் பெற்றார். இதை நாம் கேட்டிருக்கிறோம்.(69) மேலும் அவர் {கசியபர்}, விப்ரசித்தியால் மணந்து கொள்ளப்பட்டவளும், ஸிம்ஹிகை என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு மகளையும் பெற்றார். பெரும் பலம் கொண்டவர்களான அவளுடைய மகன்கள் ஸைம்ஹிகேயர்கள் என்ற பெயரில் கொண்டாடப்பட்டனர். ஓ! மன்னா, அவர்களுடைய எண்ணிக்கை பத்தாயிரம் என்று சொல்லப்படுகிறது.(70) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அவர்கள் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மகன்களையும், பேரப்பிள்ளைகளையும் பெற்றனர். இப்போது ஹிரண்யகசிபுவின் பிள்ளைகளைச் சொல்கிறேன் கேட்பாயாக.(71) அவன் நன்கறியப்பட்ட ஆற்றலைக் கொண்டவர்களான நான்கு மகன்களைக் கொண்டிருந்தான். அனுஹ்ராதன், ஹ்ராதன், சக்திமிக்கப் பிரல்ஹாதன் {ப்ரஹ்ராதன் / பிரஹலாதன்}.(72) நான்காவதாக ஸங்கிராதன் {ஸம்ஹ்ராதன்} ஆகியோராவர். ஹ்ராதனின் மகன் ஹ்ரதன் ஆவான். ஸுந்தன் மற்றும் நிஸுந்தன் ஆகிய இருவரும் ஸம்ஹ்ரதனின் மகன்களாவார்.(73) ஆயு, சிபி, காலன் ஆகியோர் அனுஹ்ராதனின் மகன்களாவர். பிரல்ஹாதனின் மகன் விரோசனன் ஆவான்; அவனது {விரோசனனின்} மகன் பலியாவான்.(74) ஓ! மன்னா, பலிக்கு நூறு மகன்கள் இருந்தனர், அவர்களில் பாணன் மூத்தவனாக இருந்தான். த்ருதராஷ்ட்ரன், ஸூர்யன், சந்த்ரமாஸ் {சந்த்ரன்}, இந்திரதாபனன், கும்பநாபன், கர்தபாக்ஷன், குக்ஷி ஆகியவை அவர்களில் மற்றும் சிலரின் பெயர்களாகும். அவர்களில் பாணன் மூத்தவனாகவும், சக்திமிக்கவனாகவும், பசுபதியின் {சிவனின்} அன்புக்குரிய பற்றாளனாகவும் இருந்தான்.(75,76) முந்தைய கல்பத்தில் பாணன், உமையின் தெய்வீகத் தலைவனை {உமாபதியை / சிவனை} நிறைவடையச் செய்து, "நான் உன் அருகிலேயே இருக்க வேண்டும்" என்ற வரத்தை வேண்டினான்.(77) பாணன் தன் மனைவியான லோஹிதையிடம் இந்த்ரதமனன் என்ற பெயர் கொண்ட ஒரு மகனைப் பெற்றான். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அசுரர்கள் அவனது சக்திக்கு வசப்பட்டனர்.(78) கல்விமான்களும், உயர்ந்த சக்தியைக் கொண்டவர்களுமான ஜர்ஜரன் {ஜர்ஜலன்}, சகுனி, பூதஸந்தாபனன், சக்திமிக்க மஹாநாபன், {விக்ராந்தன்}, காலநாபன் ஆகிய ஐவரும் ஹிரண்யாக்ஷனின் மகன்களாவர்.(79)

தனுவுக்குப் பயங்கர ஆற்றலைக் கொண்ட நூறு மகன்கள் பிறந்தனர். அவர்கள் அனைவரும் தவசிகளாகவும், பெருஞ்சக்தி கொண்டவர்களாகவும் திகழ்ந்தனர். முன்னுரிமையின் வரிசையில் அவர்களின் பெயர்களைக் கேட்பாயாக.(80) தனுவின் மகன்களான த்விமூர்த்தன், சகுனி, சங்குசிரன், விபு, சங்குகர்ணன், விரவன் {விராதன்}, கவேஷ்டன் {கவேஷ்டீ}, துந்துபி, அயோமுகன், சம்பரன், கபிலன், வாமன மாரீசி, மகவானன், இரன் {சங்குசிரன்}, வ்ருகன், விக்ஷோபணன், கேது, கேதுவீர்யன், சதஹ்ரதன், இந்திரஜித், ஸத்யஜித் {ஸர்வஜித்}, வஜ்ரநாபன், பலமிக்கவனான மஹாநாபன், {விக்ராந்தன்}, காலநாபன், ஏகசக்ரன், உயர்ந்த சக்தியையும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்ட மஹாபாஹு, தாரகன், வைச்வானரன், புலோமன், வித்ராவணன், மஹாஸுரன், ஸ்வர்பானு, வ்ருஷபர்வன், பேரசுரனான துஹுண்டன், ஸூக்ஷ்மன், நிசந்த்ரன் {அதிசந்த்ரன்}, ஊர்ணநாபன், மஹாகிரி, அஸிலோமன், ஸுகேசீ, சடன், பலகன், மதன், ககனமூர்த்தன், பெருந்தவசியான கும்பநாபன், பிரமதன், தயன் {மயன்}, குப்தன், சக்திமிக்க ஹயக்ரீவன், வைஸ்ருபன், விரூபாக்ஷன், ஸுபதன், ஹரன், அஹரன், ஹிரண்யகசிபு, சல்யன் {சம்பரன்}, {சரபன், சலபன்} மற்றும் விப்ரசித்தி ஆகியோர் கசியபரால் பெறப்பட்டனர். உயர்ந்த சக்தி கொண்ட அந்தத் தானவர்களில் விப்ரசித்தியே தலைமையானவனாக இருந்தான்.(81-89) ஓ! மன்னா, இந்தத் தானவர்கள் அனைவரின் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் உள்ளிட்ட சந்ததியை என்னால் பட்டியலிடமுடியாது.(90) பிரபை ஸர்வணனின் {ஸ்வர்பானுவின்} மகளாவாள், சசி புலோமனின் மகளாவாள், உபதானவி ஹயசிரனின் மகளாவாள், மேலும் சர்மிஷ்டை விருஷபர்வனின் மகளாவாள்[14].(91)

[14] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "ஸ்வர்பானு புலோமையிடம், உபதானவி, ஹயசிரை மற்றும் பிரபை என்ற மூன்று பெண்களைப் பெற்றான். மேலும், விருஷபர்வன், ஷர்மிஷ்டை என்ற கன்னிகையைப் பெற்றான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஸ்வர்பானுவுக்குப் பிரபை என்ற பெயரிலும், புலோமனுக்குச் சசி என்ற பெயரிலும் மகள்கள் இருந்தனர். உபதானவி, ஹயசிரை, சர்மிஷ்டை ஆகியோர் விருஷபர்வனின் மகள்களாவர்" என்றிருக்கிறது.

வைஷ்வானரனுக்குப் புலோமை மற்றும் காளிகை என்ற இரு மகள்கள் இருந்தனர். மரீசியின் மகனான கசியபரின் மனைவியரும், பெரும் பலம் வாய்ந்தவர்களுமான அவர்கள் இருவரும் பல பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர்.(92) அவர்கள் அறுபதினாயிரம் தானவர்களைப் பெற்றனர்; அவர்களில் பதினாலாயிரம் பேர் ஹிரண்ய நகரத்தில் {ஹிரண்யபுரத்தில்} வாழ்ந்தனர்.(93) கடுந்தவங்களை நோற்றவரான கசியபர், பௌலோமர்கள் மற்றும் காலகேயர்கள் என்றழைக்கப்பட்ட பெரும்பலம்வாய்ந்த தானவர்களைப் பெற்றார்.(94) பிரம்மன், ஹிரண்ய நகரத்தில் வாழ்ந்தோருக்கு தேவர்களாலும் அழிவு நேராதபடி செய்தான். இவர்கள் பின்னர்ப் போரில் ஸவ்யஸாசியால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டனர்.(95)

நஹுஷன் பிரபையின் மகனாவான், ஜயந்தன் சசியின் மகனாவான், சர்மிஷ்டை பூருவைப் பெற்றெடுத்தாள், உபதானவி துஷ்மந்தனை {துஷ்யந்தனைப்} பெற்றெடுத்தாள்.(96) விப்ரசித்தி, தானவர்களில் மிகப் பயங்கரமான மற்றொரு வர்க்கத்தினரை ஸிம்ஹிகையிடம் பெற்றான்.(97) தைத்திய மற்றும் தானவ சக்திகளின் கலவையால் அவர்கள் பயங்கரம் நிறைந்த பேராற்றலுடன் வளர்ந்தனர். பெரும் பலம் நிறைந்த பதிமூன்று தானவர்கள், ஸைம்ஹிகேயர்கள் என்ற பெயரில் கொண்டாடப்பட்டனர்.(98) ஐஷன் {சல்யன்}, நபன், பலன் {வம்சன்}, வாதாபி, நமுசி, இல்வலன், கஸ்ருமன் {ஸ்வஸ்ருமன்}, அஞ்ஜிகன், நரகன், காலநாபன், ஸரன் {ஸுகன்}, போதரணன், சக்திவாய்ந்த வஜ்ரநாபன் ஆகியோரே அவர்களாவர்.(99,100) அவர்களில் சூரியனையும், சந்திரனையும் ஒடுக்கும் ராஹு மூத்தவனாவான். ஹ்ராதனுக்கு ஸுகன் {மூகாஸுரன்} மற்றும் துஹுண்டன் {துஹுண்டாஸுரன்} என்ற இரு மகன்கள் இருந்தனர்.(101)

சுந்தன், தாரகையிடம் {தாடகையிடம்}, மாரிசி என்ற பெயரில் ஒரு மகனையும், தேவர்களைப் போன்ற சக்தியுடன் கூடிய சிவமானன் (என்ற பெயரில்) மற்றொருவனையும் பெற்றான்.(102) தனுவின் குலத்தைப் பெருக்கிய இந்தத் தானவர்கள் அனைவரும் உயர்ந்தவர்களாயிருந்தனர். அவர்களுடைய மகன்களும், பேரப்பிள்ளைகளும் எண்ணிக்கையில் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் இருந்தனர்.(103) பெரும் தவம் செய்த உன்னதர்களாக நிவாடகவசர்கள், {ஹரிண்ய கசிபுவின் மகனான} தைத்தியன் ஸம்ஹ்ராதனின் குலத்தில் பிறந்தனர்.(104) மணிமதி நகரத்தில் {மணிமதிபுரத்தில்} வாழ்ந்த தானவர்கள், மூன்று கோடி சந்ததியைப் பெற்றனர். தேவர்களால் அவர்களை அழிக்க முடியவில்லை, அவர்கள் அர்ஜுனனால் கொல்லப்பட்டனர்.(105)

{கசியபரின் மனைவியான} தாம்ரை, பெரும்பலம் பொருந்திய காகீ, ஸ்வேனீ {ஸ்யேனீ}, பாஸீ, ஸுக்ரீவீ, சுசி, கித்ரிகை {க்ருத்ரிகை} ஆகிய ஆறு மகள்களைப் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.(106) காகீ காக்கைகளையும், உலூகீ ஆந்தைகளையும், ஸ்வேனீ ஸ்வேனப் பறவைகளையும், பாஸீ பாசப்பறவைகளையும், கித்ரிகை கழுகுகளையும், சுசி நீர்க்கோழிகளையும், ஸுக்ரீவீ குதிரைகள், ஒட்டகங்கள் மற்றும் கழுதைகளையும் பெற்றனர்[15]. தாம்ரையின் குடும்ப விளக்கம் இவ்வாறே இருக்கிறது.(107,108)

[15] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "காகியானவள், காக்கைகள், ஆந்தைகள், கோட்டான்கள் ஆகியவற்றையும், ஸ்யேனீ பருந்துகளையும், பாஸீ சிறுபருந்துகளையும், கிருத்ரிகை கழுகுகளையும், சுசி நீர்ப்பறவைகளையும், சுக்ரீவீ குதிரைகள், ஒட்டகங்கள் மற்றும் கோவேறு கழுதைகளையும் பெற்றனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இவ்வாறே இருக்கிறது.

வினதைக்கு அருணன், கருடன் என்ற இரு மகன்கள் இருந்தனர். பறவைகளில் முதன்மையான ஸுபர்ணன் {கருடன்}, தன் செயலால் அபரிமிதமான பலமிக்கவனாக வளர்ந்தான்.(109) ஸுரஸை பெரும் பலமிக்க ஆயிரம் பாம்புகளையும், பல தலைகளைக் கொண்ட உயர் ஆன்ம வானுலாவிகளையும் பெற்றெடுத்தாள்.(110) பலமிக்கவர்களாகவும், அளவிலா சக்தி கொண்டவர்களாகவும், பல தலைகளைக் கொண்டவர்களாகவும், கத்ருவின் சந்ததியாகவும் இருந்த நாகர்கள் ஸுபர்ணனுக்கு {கருடனுக்கு} அடங்கியவர்களாப் பிறந்தனர்.(111) சேஷன், வாஸுகி, தக்ஷகன், ஐராவதன், மஹாபத்மன், கம்பலன், அச்வதரன், ஏகபத்ரன் {ஏலாபத்ரன்}, சங்கன், கார்க்கோடகன், தனஞ்சயன், மஹாநீலன், மஹாகர்ணன், த்ருதராஷ்ட்ரன், வலாஹகன், குஹரன், புஷ்பதம்ஷ்ட்ரன், துர்முகன், ஸுமுகன், சங்கன், சங்கபாலன், கபிலன், வாமனன், நஹுஷன், சங்கரோமன், மணு {மணி} ஆகியோர் அவர்களில் தலைவர்களாக இருந்தனர். பாம்புகளை உண்டு வாழும் கருடனால் இந்தப் பயங்கரப் பாம்புகளின் பதினாலாயிரம் மகன்களும், பேரப்பிள்ளைகளும் விழுங்கப்பட்டனர். இந்த வர்க்கம் கோபம் நிறைந்தது என்பதை அறிவாயாக. நிலத்தில் பிறந்தவையும், பற்களைக் கொண்டவையுமான விலங்குகள், பறவைகள் மற்றும் நீரில் பிறந்த விலங்குகள் அனைத்தும் தரையின் சந்ததியாகும். ஸுரபி பசுக்களையும், எருமைகளையும் பெற்றெடுதாள்.(112-117)

மரங்கள், கொடிகள், தோப்புகள் மற்றும் அனைத்து வகைப் புற்களையும் இரை உண்டாக்கினாள். கஸையானவள் {ஸ்வஸையானவள்}, யக்ஷர்கள், ரக்ஷர்கள், முனிவர்கள், அப்சரஸ்களைப் பெற்றாள்.(118) அரிஷ்டையானவள், குறையற்ற ஆற்றலுடன் கூடிய பலமிக்கக் கந்தர்வர்களையும், கசியபரில் இருந்து தோன்றியதாகக் கூறப்படும் அசையும், மற்றும் அசையாத படைப்புகளையும் பெற்றாள்.(119) நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மகன்களும், பேரப்பிள்ளைகளும் அவர்களுக்குப் பிறந்தனர். ஓ! குழந்தாய் {ஜனமேஜயா}, ஸ்வாரோசிஷ மன்வந்தரத்தில் படைப்பு இவ்வாறே இருந்தது.(120) வைவஸ்வத மன்வந்தரத்தில் நீண்ட காலம் நீடித்த வருணனின் வேள்வியில் காணிக்கை அளித்த குடிமுதல்வன் பிரம்மனின் படைப்பை நான் இப்போது உனக்கு விளக்கப் போகிறேன்.(121) முன்னர் முனிவரெழுவரையும் {சப்தரிஷிகளையும்} தன் மனத்தில் உண்டாக்கிய போது, பெரும்பாட்டன் {பிரம்மன்} அவர்களைத் தன் மகன்களாகக் கருதினான்.(122)

ஓ! பரதனின் வழித்தோன்றலே, தேவர்களுக்கும், அசுரர்களுக்குமிடையில் போர் மூண்டபோது, மகன்கள் கொல்லப்பட்டவளான திதியானவள் கசியபரை நிறைவடையச் செய்யத் தொடங்கினாள்.(123) அவளால் முறையாகத் துதிக்கப்பட்டு, நிறைவடையச் செய்யப்பட்ட கசியபர் ஒரு வரத்தை அளித்து அவளை நிறைவடையச் செய்தார். அவளும், இந்திரனைக் கொல்வதற்குப் பெரும்பலம் நிறைந்த ஒரு மகனை வேண்டினாள். இவ்வாறு இரந்து கேட்டபோது அந்தப் பெருந்தவசியும் {அவள் கேட்ட} அதே வரத்தை அவளுக்குக் கொடுத்தார்.(124,125) மரீசியின் மகன் {கசியபர்}, சிறு கவலையுமின்றி அவளுக்கு அந்த வரத்தை அளித்து, "தூய்மையாக இருந்து, நோன்புகளைக் கடைப்பிடித்து, நூறு ஆண்டுகள் கருவைச் சுமந்திருந்தால் இந்திரனைக் கொல்லும் ஒரு மகனை நீ பெறுவாய்" என்றார்.(126,127) ஓ! ஏகாதிபதி, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி, தூய்மையாக இருந்த திதி, பெருந்தவசியான தன் கணவரிடம் இருந்து கருவைப் பெற்றாள்.(128) அளவற்ற பலம் கொண்ட முன்னணி தேவர்களில் ஒருவனை நினைத்த அவர் {கசியபர்}, அழிவற்றவர்களாலும் {தேவர்களாலும்} அழிக்கப்பட முடியாத ஆற்றலைத் தூண்டிவிட்டு திதியை அறிந்தார். பிறகு பெரும் நோன்புகளுடன் கூடிய அவர், தவங்களைச் செய்வதற்காக மலை சார்ந்த பகுதிக்குச் சென்றார்.(129,130) பாகனைக் கொன்றவன் {பாகஸாஸனன் /இந்திரன்} அந்த நாள் முதலே அவளிடம் குற்றம் தேடினான். நூறு வருடங்கள் நிறைவடைவதற்கு முன்பு ஒரு நாள், திதியானவள் தன் பாதங்களைக் கழுவாமல் தன் படைக்கையில் படுத்தாள். அவளது தூய்மையற்ற நிலையைக் கண்ட தேவர்களின் மன்னன் {இந்திரன்} அவளது வயிற்றுக்குள் நுழைந்து அவளை உறங்கச் செய்தான்.(131,132)

பிறகு அந்த வஜ்ரதாரி {இந்திரன்} அந்தக் கருவை ஏழு துண்டுகளாக அறுத்தான். வஜ்ரத்தால் துண்டுகளாக அறுக்கப்பட்ட கருவானது அழத்தொடங்கியது. சக்ரன் மீண்டும் மீண்டும், "அழாதே, அழாதே {மாருதம், மாருதம்}" என்றான்.(133) அதன் பிறகு அந்தக் கருவானது ஏழு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டது. பகைவர்களைக் கொல்பவனான இந்திரன், கோபவசமடைந்து, தன் வஜ்ரத்தைக் கொண்டு ஒவ்வொரு துண்டையும் மேலும் ஏழாக அறுத்தான். ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, அவற்றிலிருந்தே மருத்துகள் என்றழைக்கப்பட்ட தேவர்கள் தோன்றினர்.(134,135) மகவானால் {இந்திரனால்} (அழாதே மாருதம் என்று சொல்லப்பட்ட போது) மருத்துகள் பிறந்தனர், அவர்கள் அனைவரும் வஜ்ரதாரிக்கு உதவி செய்பவர்களானார்கள்.(136) ஓ! ஜனமேஜயா, இவ்வாறு உயிரினங்கள் பெருகியபோது, அளவிலா சக்தி கொண்ட முதன்மையான தேவனை {இந்திரனைத்} தேற்றிய ஹரி; அதன் பிறகு, பல்வேறு குடி முதல்வர்களிடம் பேரரசுகளை அளித்தான், அவர்களில் பிருது முதலில் மன்னனாக நிறுவப்பட்டான்.(137,138) வீரனான விஷ்ணு, ஜிஷ்ணு, குடி முதல்வன், மழையின் மன்னன் ஆகியோர் அந்த ஹரியே, அவனுடைய புலப்படும் வடிவமாகக் காற்று இருக்கிறது. மொத்த அண்டமும் அவனுடையதே.(139) ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, எவன் உயிரினங்களின் படைப்பை அறிந்தவனோ, எவன், மருத்துகளின் மங்கலப் பிறப்பைப் படிக்கவோ, கேட்கவோ செய்கிறானோ அவனுக்கு இவ்வுலகில் மீண்டும் பிறக்கும் அச்சம் கிடையாது எனும்போது மறுமையில் அச்சம் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?" {என்றார் வைசம்பாயனர்}.(140)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 03ல் உள்ள சுலோகங்கள் : 140
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்