(புந்யாகவிதி)
The history of the Punyaka rite | Vishnu-Parva-Chapter-134-078 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : புண்யக நோன்பின் வரலாறு குறித்து நாரதரிடம் கேட்ட ருக்மிணி; புண்யக நோன்பின் விதி குறித்து உமையிடம் கேட்ட அருந்ததி...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, துவைபாயனரின் {வியாசரின்} அருளால் நீர் அனைத்தையும் எனக்குச் சொன்னீர். எனவே, புண்யக அறச்சடங்கின் தோற்றம் குறித்து எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! அறம்சார்ந்த மன்னர்களில் முதன்மையானவனே, முன்பு உமையால் சொல்லப்பட்ட விதிகளுக்கு ஏற்ப மனித குலத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புண்யகச் சடங்கை {புண்யக விரத அனுஷ்டான முறையைக்} குறித்துக் கேட்பாயாக.(2) ஓ! பாவமற்ற மன்னா, களைப்பில்லா செயல்பாடுகளைக் கொண்ட கிருஷ்ணனால் தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மரம் எடுத்துச் செல்லப்பட்டு, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் போர் தொடங்கி ஷத்புரத்தின் தானவர்கள் பயங்கரமாகக் கொல்லப்பட்ட பிறகு, நுண்ணறிவுமிக்க நாரத முனிவர் துவாராவதி நகருக்குச் சென்றார்.(3,4)
தேவியைப் போன்ற ஜாம்பவதியும், மதிப்புமிக்கச் சத்யபாமாவும், காந்தார மன்னனின் தவப்புதல்வியும் {யோகயுக்தையும்}, அறம்சார்ந்தவர்களும், கற்புக்கரசிகளும், திறன்மிக்கவர்களுமான கேசவனின் மனைவிமார் எண்ணற்றவரும்[1] ஒன்றுகூடியிருந்தபோது, பீஷ்மகனின் மகளான ருக்மிணி, அப்போது அங்கே கிருஷ்ணனுடன் இருந்தவரும், இறையியலை நன்கறிந்தவரும், பிராமணர்களில் முதன்மையானவருமான நாரதரிடம்,(5-7) "ஓ! முனிவரே, பேசுபவர்களிலும், அறம்சார்ந்தவர்களிலும் முதன்மையானவரே, புனிதமான சடங்குகளின் {புண்யக நோன்புகளின்} தோற்றம், அவற்றைச் செய்வதற்கான விதிமுறைகள், பலன்கள், அவற்றோடு தொடர்புடைய கொடைகள் அளிக்கும் தருணங்கள் ஆகியவற்றைக் குறித்துக் கேட்கும் பேராவலால் பீடிக்கப்பட்டிருக்கிறோம். அன்புகூர்ந்து அவற்றை விரிவாகச் சொல்வதன் மூலம் அதை நீக்குவீராக" என்றாள்.(8,9)
[1] விஷ்ணு பர்வம் 61:43ம் ஸ்லோகத்தின் அடிக்குறிப்பில், கிருஷ்ணனின் முக்கிய மனைவிகளாக 1. சூரியனின் மகளான காளிந்தி, 2. வசுதேவனின் தங்கையான ராஜாதி தேவிக்கும், அவந்தி மன்னனுக்கும் பிறந்த மகளான மித்ரவிந்தை (சைப்யை என்று அறியப்படுபவள்), 3. கோசல நாட்டு மன்னன் நக்னஜித்தின் மகளான ஸத்யா (கௌசல்யா), 4. ஜாம்பவானின் மகளான ஜாம்பவதி, 5. வசுதேவனின் தங்கையான சுருதகீர்த்தியின் மகள் ரோஹிணி (பத்ரை என்றும், கைகேயி என்றும் அறியப்படுபவள்), 6. மத்ர மன்னனின் மகளான லக்ஷ்மணை, 7. சத்ராஜித்தின் மகளான சத்யபாமா, 8. காந்தாரி ஆகிய எட்டு பேர் குறிப்பிடப்படுகின்றனர். முதல் மனைவியான ருக்மிணி {விதர்ப்பி} ஸ்ரீதேவி என்பதால் இங்கே கணக்கில் கொள்ளப்படவில்லை. சில பட்டியல்களில் காந்தாரி விடுபடுகிறாள். ஒருவேளை காந்தாரியும், மித்ரவிந்தையும் ஒருத்தியாகவே இருக்கலாம். இந்த செய்தி வாசகரின் நினைவுக்காக இங்கே மீண்டும் அளிக்கப்படுகிறது.
நாரதர், "ஓ! அறச்சடங்குகளை அறிந்த பாவமற்ற வைதர்ப்பிப் பெண்ணே {விதர்ப்ப மன்னனின் மகளான ருக்மிணியே}, பழங்காலத்தில் புண்யகச் சடங்கின் விதிமுறைகளை உமை எவ்வாறு விளக்கினாள் என்பதைக் கேட்பாயாக.(10) ஓ! தேவி, தூய நோன்புகளைக் கொண்ட உமாதேவி ஒரு சந்தர்ப்பத்தில் புண்யக அறச்சடங்கைச் செய்தாள்; அந்தச் சடங்கின் நிறைவில் அவள் தன் நண்பர்கள் {தோழியர்} அனைவரையும் அழைத்தாள்.(11)
அதிதி, எல்லாம் செய்யவல்ல சக்தி படைத்த தக்ஷனின் பிற மகள்கள், கணவரிடம் கொண்ட அர்ப்பணிப்பால் உலகில் புகழ்பெற்ற புலோமனின் மகள் சசி {இந்திராணி},(12) பெரும் சதி, சோமனின் {சந்திரனின்} அன்புக்குரிய மனைவியரான {நட்சத்திரங்களுமான} ரோஹிணி, பூர்வபல்குனி {பூரம்}, ரேவதி,(13) சதபிஷக் {சதயம்}, மகம் ஆகியோர் அனைவரும் முன்பே அங்கே வந்து பெருந்தேவியான உமையை வழிபட்டுக் கொண்டிருந்தனர்.(14) அழகிய ஆறுகளின் தலைமை தேவியரான கங்கை, சரஸ்வதி, வேணி, கோதாவரி, வைதரணி, கண்டகி ஆகியோரும்,(15) {ஆறுகளாக இருக்கும் தேவிகள்} பிறரும், மங்கலக் கற்புக்கரசியான பெண்மணிகளான லோபாமுத்ரையும், தங்கள் ஆற்றலால் அண்டத்தை நிலைநிறுத்துபவர்களான {மங்கல தேவியர்} பிறரும்(16), மலைகளின் மங்கல மகள்கள் {மலைப்பெண்டிர்}, உறுதியான நோன்புகளைக் கொண்ட நெருப்பின் மகள்கள் {அக்னிமகளிர்}, நெருப்பை ஆள்பவனின் {அக்னியின்} மனைவியான ஸ்வாஹா, சிறப்புமிக்கவளான சாவித்ரி தேவி,(17) குபேரனின் அன்புக்குரிய மனைவியான ஹிருத்தி {ருத்தி}, நீர்நிலைகளின் தலைவனுடைய ராணி {வருணபத்னி}, பித்ருக்களை ஆள்பவனுடைய மனைவி {யமபத்னி}, வசுக்களின் மனைவியர் {வசுபத்னிகள்},(18) தவமும், நோன்புகளும் நோற்பவர்களான ஹிரி {ஹ்ரி}, ஸ்ரீ, திருதி {த்ருதி}, கீர்த்தி, ஆசா, மேதா, பிரீதி {ப்ரீதி}, மதி, கியாதி, ஸன்னதி ஆகியோரும்,(19) ஓ! பேரிளமை கொண்ட பெண்ணே, அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதில் ஈடுபடும் பிற தேவியரும் அங்கே இருந்தனர். அந்தச் சடங்கு நிறைவடைந்தபோது, அந்த அம்பிகை {உமாதேவி} பல்வேறு வகையான தானிய, ரத்தின மலைகளையும், பல்வேறு வண்ணங்களிலான துணிகளையும், மிகச் சிறந்த ஆபரணங்களையும் கொடுத்து அவர்கள் அனைவரையும் கௌரவித்தாள்.(20,21)
கற்புக்கரசிகளும், தவமெனும் செல்வம் கொண்டவர்களுமான அவர்கள் அந்தத் தேவி {உமாதேவி} கொடுத்த கொடைகளை ஏற்றுக் கொண்டு, தங்கள் இருக்கைகளில் அமர்ந்து, பல்வேறு காரியங்கள் குறித்த உரையாடல்களில் ஈடுபட்டனர்.(22) ஓ! கணவனையே தேவனாகக் கொண்டவளே, புண்யகச் சடங்கு குறித்து அவர்களது உரையாடல் வளர்ந்தபோது, அந்தத் தேவி அது தொடர்பான பலவற்றையும், அதைச் செய்யும் விதிமுறைகளையும் குறித்துப் பேசினாள்.(23) அப்போது சோமனின் மகளான அருந்ததி, கற்புக்கரசிகள் கூடியிருந்த அந்தச் சபையின் ஒப்புதலுடன் புண்யகச் சடங்கு தொடர்பான மிக முக்கியமான விதிகளைக் குறித்து உமாதேவியிடம் கேட்டாள்.(24)
ஓ! வைதர்ப்பி {ருக்மிணி}, உமாதேவி, அவர்கள் அனைவரையும் நிறைவடையச் செய்யவும், அனைத்து உயிரினங்களுக்கும் நன்மையை விளைவிக்கவும் அந்த அறச்சடங்குகள் குறித்து என் முன்னிலையில் அவர்களுக்குச் சொன்னாள்.(25) ஓ! அழகானவளே, அந்நேரத்தில் உமை ரத்தினங்களின் மலையை எனக்குக் கொடையளித்தாள்; நானும் அந்தக் கொடையை ஏற்றுக் கொண்டு, பிராமணர்களின் தொண்டுக்காக அதை அர்ப்பணித்தேன்.(26) ஓ! மங்கலப் பெண்ணே {கல்யாணி}, புண்யகச் சடங்குகளைக் குறித்து நான் கண்டதையும், கற்புக்கரசியான அருந்ததியிடம் உமை சொன்னதையும் இவர்கள் {இந்தப் பெண்கள்} அனைவருடன் சேர்ந்து கேட்பாயாக. நான் தொடக்கத்தில் இருந்தே அதை முழுமையாக உரைக்கப் போகிறேன்" {என்றார் நாரதர்}.(27,28)
விஷ்ணு பர்வம் பகுதி – 134 – 078ல் உள்ள சுலோகங்கள் : 28
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |