(ருக்மிபராஜயம்)
Rukshmi attacks Krishna and is defeated | Vishnu-Parva-Chapter-117-061 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : ருக்மிணியைத் திருமணம் செய்த கிருஷ்ணன்; கிருஷ்ணனிடம் தோல்வியடைந்த ருக்மி; ருக்மிணியின் பிள்ளைகள்; கிருஷ்ணனின் திருமணங்கள்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ருக்மி, தன் தங்கை {ருக்மினி} கிருஷ்ணனால் கடத்தப்பட்டாள் என்பதைக் கேட்டதும், கோபத்தால் நிறைந்தவனாக, "கிருஷ்ணனைக் கொன்று, ருக்மிணியை மீட்காமல் நான் குண்டின நகரத்திற்கு {குண்டினபுரத்திற்குத்} திரும்பமாட்டேன்" என்று பீஷ்மகனின் முன்பு உறுதிமொழியேற்றான்.(1,2) வீரனான ருக்மி கோபத்தில் இதைச் சொல்லிவிட்டு, பயங்கர ஆயுதங்களும், கொடிகளும் நிறைந்த தேரில் ஏறினான். ஒரு பெரும்படை சூழ விரைவாக அவன் புறப்பட்டுச் சென்றான்.(3) பீஷ்மகனின் மகன்களும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், கிராதன், அம்சுமான், சுருதர்வன், வேணுதாரி ஆகியோரும், தக்காணத்தின் மன்னர்களும், கிரதக் கைசிகத்தைச் சேர்ந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறரும் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(4,5)
பெருந்தொலைவைக் கடந்த பிறகு அவர்கள் நர்மதை ஆற்றின் அருகே கோவிந்தனையும், அவனது அன்புக்குரிய மனைவியையும் {ருக்மிணியையும்} கண்டனர்.(6) செருக்கு நிறைந்த ருக்மி, தன் படையை அங்கேயே நிறுத்திவிட்டு, தேரோடு தேர் தனியாக மோதும் வகையில் மதுசூதனனிடம் சென்று அறுபத்துநான்கு கூரிய கணைகளால் அவனைத் துளைத்தான். ஜனார்த்தனனும் எழுபது கணைகளால் பதிலுக்கு அவனைக் காயப்படுத்தினான்.(7,8) ருக்மி மிகக் கவனமாக இருந்தபோதிலும், பெரும்பலம்வாய்ந்தவனும், வீரமிக்கவனுமான மாதவன், அவனுடைய தேரின் கொடிக்கம்பத்தையும், அவனுடைய தேரோட்டியின் உடலில் இருந்து தலையையும் துண்டித்தான்.(9) அவனை {ருக்மியைக்} கடும் நிலையில் கண்ட தக்காணத்து மன்னர்கள் ஜனார்த்தனனைக் கொல்லும் நோக்கத்துடன் அவனைச் சூழ்ந்தனர்.(10) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அம்சுமான் பத்துக் கணைகளாலும், சுருதர்வன் ஐந்தாலும், வேணுதாரி ஏழாலும் அவனைத் தாக்கினர்.(11)
அப்போது பேராற்றல் வாய்ந்த கோவிந்தன், அம்சுமானின் மார்பில் தாக்கியபோது அந்த மன்னன் துன்பத்துடன் தன் தேரில் அமர்ந்தான்.(12) அதன்பிறகு நான்கு கணைகளால் சுருதர்வனின் நான்கு குதிரைகளைக் கொன்ற மாதவன், வேணுதாரியின் கொடிக்கம்பத்தையும் வெட்டிவீழ்த்தி, அவனது வலக்கரத்திலும் காயமேற்படுத்தினான்.(13) அடுத்தக் கணமே அவன் ஐந்து கணைகளால் சுருதர்வனையும் தாக்கிக் காயப்படுத்தியபோது, அவன் தன் தேரின் கொடிக்கம்பத்தைப் பிடித்தவாறே பெருந்துன்பத்துடன் கீழே அமர்ந்தான்.(14) இவ்வாறு வாசுதேவன் கணைமாரியைப் பொழியத் தொடங்கிய போது, கிரதக் கைசிகத்தைச் சேர்ந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும் அவனை நோக்கி விரைந்தனர்.(15) கோபமடைந்த ஜனார்த்தனன் தன் கணைகளால் அவர்களுடைய கணைகளை அறுத்தான். அவர்கள் மிகக் கவனமாக இருந்தாலும் அவன் அவர்கள் அனைவரையும் காயமடையச் செய்தான்.(16) பெரும்பலம்வாய்ந்தவனான அவன் {கிருஷ்ணன்} அந்த மன்னர்கள் அனைவரையும் காயப்படுத்திவிட்டு, கோபம்நிறைந்த மற்ற மன்னர்களை நோக்கி விரைந்து சென்றான்.(17)
கோபத்தில் நிறைந்திருந்த ருக்மி, தன் படை தப்பி ஓடுவதைக் கண்டு ஐந்து கூரிய கணைகளால் கேசவனின் மார்பில் காயத்தை ஏற்படுத்தி, அத்தகைய மூன்று கணைகளால் அவனுடைய தேரோட்டியையும் காயப்படுத்தி, வளைந்த முனையுடைய கணையால் அவனது {கிருஷ்ணனின்} கொடிக்கம்பத்தையும் வெட்டி வீழ்த்தினான்.(18,19) ருக்மி, கோபத்தில் அறுபது கணைகளால் கேசவனைத் துளைத்து மிகக் கவனமாக இருந்தாலும், அவன் {கிருஷ்ணன்} அவனுடைய {ருக்மியின்} வில்லை அறுத்தான்.(20) பேராற்றல் கொண்ட ருக்மி, அத்தகைய மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு கேசவனைக் கொல்வதற்காக தெய்வீக ஆயுதங்களை ஏவத் தொடங்கினான்.(21) பெருஞ்சக்திவாய்ந்த மாதவன், தன் ஆயுதங்களால் அவனது ஆயுதத்தை எதிர்த்து, மீண்டும் அவனது வில்லை அறுத்து, மூன்று கணைகளால் அவனது தேரையும் நொறுக்கினான்.(22) வீரமிக்கவனான மன்னன் ருக்மி இவ்வாறு தன் வில்லும், தேரும் நொறுங்கியவனாகத் தன் வாளையும், கேடயத்தையும் எடுத்துக் கொண்டு தன் தேரில் இருந்து கீழே குதித்தான்.(23) இவ்வாறு அவன் குதிப்பதைக் கண்ட கேசவன், கோபத்தில் அவனுடைய வாளை வெட்டி வீழ்த்தி, இறகுபடைத்த மூன்று கூரிய கணைகளால் அவனது மார்பைத் துளைத்தான்.(24) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ருக்மி, வஜ்ரத்தால் வீழ்ந்த பெரும் அசுரனைப் போல மொத்த பூமியும் எதிரொலிக்கும்படி மயக்கமடைந்து கீழே விழுந்தான்.(25) அதன் பிறகு கேசவன் தன் கணைகளால் மற்ற மன்னர்களைத் தாக்கத் தொடங்கினான். எனினும், ருக்மி வீழ்ந்ததைக் கண்ட அவர்கள் தப்பி ஓடினார்கள்.(26) அசைவற்றவனாகப் பூமியில் கிடக்கும் தன் அண்ணனைக் கண்ட ருக்மிணி, அவனது {ருக்மியின்} உயிருக்காக விஷ்ணுவின் பாதங்களில் வீழ்ந்தாள்.(27) கேசவன் அவளை உயர்த்தி, வாரித் தழுவிக் கொண்டு அவளுக்கு ஆறுதலளித்தான். பிறகு ருக்மியின் பாதுகாப்புக்கு உறுதியளித்துவிட்டு அவன் தன் நகரத்திற்குப் புறப்பட்டுச் சென்றான்.(28)
மறுபுறம் ராமன் {பலராமன்} தலைமையிலான விருஷ்ணிகள் ஜராசந்தனையும், பிறரையும் வீழ்த்திவிட்டு, மகிழ்ச்சியாகத் துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(29) தாமரைக் கண்ணனான கேசவன் புறப்பட்ட பிறகு போர்க்களத்திற்கு வந்த சுருதர்வன், தன் தேரில் ருக்மியை ஏற்றிக் கொண்டு தன் நகரத்திற்கு அவனை இட்டுச் சென்றான்.(30) ஆணவம் கொண்டவனும், உணர்வுமிக்கவனுமான ருக்மி, தன் தங்கையை மீட்க இயலாமல் தன் உறுதிமொழி நொறுங்கிப் போனதைக் கண்டு குண்டின நகரத்திற்குள் நுழைய விரும்பவில்லை.(31) அவன் {ருக்மி}, விதர்ப்ப மாகாணத்தில் போஜகதம் என்ற பெயரால் பூமியில் கொண்டாடப்படும் மற்றொரு நகரத்தைத் தான் வசிப்பதற்காக அமைத்தான்.(32) பெரும்பலம்வாய்ந்த ருக்மி அந்த நகரத்தில் வசித்தவாறே தென்மாவட்டங்களை ஆட்சி செய்யத் தொடங்கினான், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மன்னன் பீஷ்மகன், குண்டின நகரத்தில் வாழ்ந்து வந்தான்.(33)
ராமன், விருஷ்ணி படையுடன் துவாரகையை அடைந்தபோது, கேசவன் முறைப்படி ருக்மிணியின் கரம்பற்றினான் {திருமணம் செய்து கொண்டான்}.(34) அதன் பிறக அவன், சீதையுடன் ராமனும், புலோமனின் மகளான சசியுடன் புரந்தரனும் மகிழ்ச்சியாக வாழ்ந்ததைப் போல இனிமை நிறைந்த தன் மனைவியின் துணையில் இன்புற்றிருந்தான்.(35) அழகியும், நல்லியல்பைக் கொண்டவளும், தூய்மையானவளும், அனைத்து நற்குணங்களையும் கொண்டவளுமான அந்த ருக்மிணியே கிருஷ்ணனின் முதல் மனைவியாவாள்.(36) பலம்வாய்ந்தவனான மாதவன் அவளிடம், பெருஞ்சக்திவாய்ந்தவர்களான பிரத்யும்னன், சாருதேஷ்ணன், ஸுதேஷ்ணன்,(37) ஸுஷேணன், சாருகுப்தன், வீரமிக்கச் சாருபாஹு, சாருவிந்தன், ஸுசாரு, பத்ரசாரு,(38) பலம்வாய்ந்தவர்களில் முதன்மையான சாரு என்ற பத்து மகன்களையும், சாருமதி என்ற பெயரில் ஒரு மகளையும் பெற்றான். அவர்கள் அனைவரும் ஆயுதங்களில் தேர்ச்சி அடைந்தவர்களாகவும் போரில் பயங்கரர்களாகவும், அறவியல், அரசியல் ஆகியவற்றை நன்கறிந்தவர்களாகவும் இருந்தனர்.(39)
வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மதுசூதனன், உயர்ந்த குலங்களில் பிறந்தவர்களும், நற்குணங்களைக் கொண்டவர்களுமான(40) காளிந்தி, மித்ரவிந்தை, அயோத்தியின் மன்னன் நக்னஜித்தின் மகளான ஸத்யை, ஜாம்பவான் மகளான ஜாம்பவதி, விரும்பும் வடிவத்தை ஏற்கவல்லவளும்,(41) நற்குணம் கொண்டவளும், மத்ர மன்னனின் மகளுமான ரோஹிணி, அழகிய கண்களைக் கொண்ட லக்ஷ்மணை, ஸத்ராஜித்தின் மகள் ஸத்யபாமா என்ற பெயர்களைக் கொண்டவர்களுமான வேறு ஏழு அழகிகளையும் மணந்து கொண்டான்.(42) அதையும் தவிர, அழகில் அப்ஸரஸ் போன்றவளும், ஸைப்யனின் மகளுமான காந்தாரியும் அவனுடைய மற்றொரு ராணியாக இருந்தாள்[1]. அளவற்ற ஆற்றலைக் கொண்ட ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, ஒரே நேரத்தில் பதினாறாயிரம் கன்னிப்பெண்களை மணந்து கொண்டு ஒரே நேரத்தில் அவர்களுடன் இன்புற்றிருந்தான்.(43) ஆடம்பரங்களுக்குப் பழக்கப்பட்ட அவர்கள் அனைவரும் விரும்பிய விலைமதிப்புமிக்க ஆடைகளும், ஆபரணங்களும் கொடுக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டனர்.(44) சக்திவாய்ந்தவர்களும், பெரும்பலம் கொண்டவர்களும், ஆயுதங்கள் அனைத்திலும் தேர்ச்சியடைந்தவர்களும், வேள்விகளையும், அறச்சடங்குகளையும் செய்பவர்களுமான ஆயிரக்கணக்கான மகன்களை மாதவன் அவர்களிடம் பெற்றான்" என்றார் {வைசம்பாயனர்}.(45)
[1] உரையாசிரியர் நீலகண்டரின் உரைப்படி, கிருஷ்ணனுக்கு 1. சூரியனின் மகளான காளிந்தி, 2. வசுதேவனின் தங்கையான ராஜாதி தேவிக்கும், அவந்தி மன்னனுக்கும் பிறந்த மகளான மித்ரவிந்தை (சைப்யை என்று அறியப்படுபவள்), 3. கோசல நாட்டு மன்னன் நக்னஜித்தின் மகளான ஸத்யா (கௌசல்யா), 4. ஜாம்பவானின் மகளான ஜாம்பவதி, 5. வசுதேவனின் தங்கையான சுருதகீர்த்தியின் மகள் ரோஹிணி (பத்ரை என்றும், கைகேயி என்றும் அறியப்படுபவள்), 6. மத்ர மன்னனின் மகளான லக்ஷ்மணை, 7. சத்ராஜித்தின் மகளான சத்யபாமா, 8. காந்தாரி ஆகிய எட்டு மனைவிகள் இருந்தனர். முதல் மனைவியான ருக்மிணி {விதர்ப்பி} ஸ்ரீதேவி என்பதால் இங்கே கணக்கில் கொள்ளப்படவில்லை. சில பட்டியல்களில் காந்தாரி விடுபடுகிறாள். ஒருவேளை காந்தாரியும், மித்ரவிந்தையும் ஒருத்தியாகவே இருக்கலாம்.
விஷ்ணு பர்வம் பகுதி – 117 – 061ல் உள்ள சுலோகங்கள் : 45
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |