(புண்யகவ்ரதவர்ணனம்)
Punyaka described by Uma | Vishnu-Parva-Chapter-135-079 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கற்புக்கரசிகளின் மேன்மையைக் கூறி புண்யக நோன்பில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைச் சொன்ன உமாதேவி ...
உமை {அருந்ததியிடம்}, "ஓ! தூய புன்னகையுடையவளே, என் கணவரின் {சிவனின்} அருளால் நான் அனைத்தையும் அறிந்தவளான போது, அறச்சடங்குகள் அனைத்தின் புனித விதிமுறைகளையும் அறிந்து கொண்டேன்.(1) ஓ! அருந்ததி, அந்தப் புனிதச் சடங்குகளின் விதிமுறைகள் ஏற்கனவே நித்தியமாக இருந்து வந்தவையாக இருப்பினும், மஹாதேவனின் தயவாலேயே நான் அவற்றை அறிந்து கொண்டேன்.(2) ஓ! குற்றமற்ற பெண்ணே, தெய்வீகமானவரும், நுண்ணறிவுமிக்கப் பவனுமான என் கணவரின் {பவனான சிவனின்} ஆணையின் பேரில் நான் அந்த அறச்சடங்குகளைச் செய்தேன்.(3) கற்பையும், புனிதச் சடங்குகளையும் பயில விரும்புவோருக்கேற்ற அறச்சடங்குகள் புராணங்களில் {புண்யக விதிகள் பழைய ரிஷிகளால்} சொல்லப்பட்டிருக்கின்றன.(4) ஓ! அறம்சார்ந்த அருந்ததி, கொடைகளும், உண்ணாநோன்புகளும் {உபவாசங்களும்}, நற்செயல்களும், அறச் செயல்களும் கற்பற்ற பெண்களுக்குப் பலனற்றவையாகின்றன.(5)
பாலியல் கலவியென்ற பாவத்தின் மூலம் அறச்சடங்குகள் மாசடைகின்றன. கணவனை வஞ்சிப்பவர்களோ, பாவம்நிறைந்த கலவியில் ஈடுபடுபவர்களோ புனிதச் சடங்குகளின் பலன்களை ஒருபோதும் அடைவதில்லை; மாறாக அவர்கள் நரகத்திற்குச் செல்கிறார்கள்.(6) கணவனையே தங்கள் தேவனாகக் கொண்டவர்களும், நல்லியல்புடனும், கற்புடனும் கூடியவர்களும், தங்கள் தலைவனைத் தவிர வேறு மனிதனை {ஆடவனை} அறியாதவர்களும், அறத்தில் முழு மன அர்ப்பணிப்புடன் கூடியவர்களும், கற்புக்கரசிகளின் வழியையே ஒரே புகலிடமாகக் கொண்டு அதையே பின்பற்றுபவர்களுமான காரிகையரே இந்த அண்டத்தை நிலைக்கச் செய்கிறார்கள்.(7) சொல்லாலும் பாவம் இழைக்காதவர்களாக, தூய்மையானவர்களாக, நுண்ணறிவுமிக்கவர்களாக, பேச்சில் இனிமை நிறைந்தவர்களாக, எப்போதும் அறச்சடங்குகளைச் செய்பவர்களாக இருக்கும் பெண்களே இந்த உலகைப் பாதுகாக்கிறார்கள்.(8)
ஒரு மனைவியானவள், தன் கணவன் வறியவனாகவோ, பிணியுற்றவனாகவோ, வீழ்ந்தவனாகவோ {ஒழுக்கங்கெட்டவனாகவோ} இருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் அவனைக் கைவிடக்கூடாது. இதுவே நித்திய அறமாகும் {இந்த தர்மம் மிகப் பழையது}.(9) கணவன் திறனற்றிருந்தாலும், தவறான செயல்களை இழைத்தாலும், வீழ்ந்தவனானாலும் கூட ஒரு மனைவியால் தன்னையும், அவனையும் காத்துக் கொள்ள முடியும்.(10) சொற்களால் பாவமிழைத்த பெண்களுக்கான தூய்மைச் சடங்குகளை வேதங்களில் முனிவர்கள் வகுத்துள்ளனர். ஆனால், பாலியல் கலவியால் பாவமிழைத்தவர்களுக்கு எந்தத் தவமும் இல்லை (பரிகாரமும் விதிக்கப்படவில்லை); எப்போதைக்கும் வீழ்ந்துவிட்டவர்களென அவர்களை நீ கருதுவாயாக.(11)
ஓ! அருளப்பட்ட பெண்ணே, நல்லோரின் பாதையில் நடக்க விரும்பும் பெண், தன் கணவனின் விருப்பத்தின்படியே {அவனுடைய அனுமதியின் பேரிலேயே} சடங்குகளைச் செய்யவும், உண்ணா நோன்புகளை நோற்கவும் வேண்டும்.(12) ஒழுக்கங்கெட்ட கலவியின் மூலம் ஒரு பெண் இழிந்த பிறவியை அடைகிறாள். மேலும் அவள் ஆயிரம் பிறவிகள் எடுத்தாலும் சிறந்த வாழ்வை {நல்ல கதியை} அடைவதில்லை.(13) ஒழுக்கங்கெட்ட பெண், தற்செயலாக மானிடப் பெண்ணாகப் பிறந்தாலும், அவள் சண்டாள வகையில் பிறந்து, மிகத் தீயவளாகி, நாயின் இறைச்சியை உண்டு வாழ்வாள்.(14) ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவளே, கணவனையே பெண்களின் தேவனாக முனிவர்கள் நியமித்திருக்கின்றனர். கணவன் எவளிடம் நிறைவுடன் இருக்கிறானோ, அவளே கற்புடைய நல்ல மனைவி {சதிதர்மசாரினி} ஆவாள்.(15) பேராவலின் மூலம் வீழ்ந்துவிட்ட பெண்களுக்குப் புனித உலகமேதும் கிடையாது. ஓ! மென்மையான பெண்ணே, தங்கள் கணவர்களிடம் அர்ப்பணிப்புள்ள நிலையான மனங்களைக் கொண்டவர்களும், சொல்லாலும், செயலாலும், மனத்தாலும் அவர்களை அலட்சியம் செய்யாதவர்களுமான பெண்களே அறச்சடங்குகளின் பலன்களை அடைவார்கள்.(16,17) ஓ! அழகிய பெண்ணே, என் தவத்தின் மூலம் நான் கண்ட தேவலோகத்திற்கான அறச்சடங்குகளின் விதிமுறைகளை {புண்யக விதி முழுமையும்} அனைவருடன் சேர்ந்து நீயும் கேட்பாயாக.(18)
ஓ! உறுதியான நோன்புகளைக் கொண்டவளே, தவத்தையோ, உண்ணா நோன்பையோ {உபவாசத்தையோ} செய்ய விரும்பும் கற்புள்ள பெண் ஒருத்தி, அதிகாலையில் எழுந்து, நீராடிய பின், தன்னுடைய மாமனாரின் பாதங்களையும், மாமியாரின் பாதங்களையும் வணங்கி, அதன் பிறகு தன் கணவனிடம் அதைச் சொல்ல வேண்டும் {தவமோ, உண்ணா நோன்போ இருக்கப் போகிறேன் என்று சொல்லி அவனிடம் அனுமதி கேட்க வேண்டும்}. பிறகு குசப்புல்லையும் {தர்ப்பைப் புல்லையும்}, ஒரு தாமிரப் பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு,(19,20) ஒரு பசுவின் வலது கொம்பில் தண்ணீர் தெளிக்க வேண்டும். பிறகு தற்கட்டுப்பாட்டுடன் தூய்மைச் சடங்குகளைச் செய்த தன் கணவனின் தலையில் அவள் அந்த நீரைத் தெளிக்க வேண்டும்.(21) அதன் பிறகு அவள் தன் தலையில் அதை ஊற்ற வேண்டும். விதிகளின் கோட்பாட்டில் அமைந்த இந்த நடைமுறையானது புனிதத்தலங்கள் அனைத்திலும் நீராடல் {மூவுலகு புண்ய தீர்த்த ஸ்நாநம்} என்றழைக்கப்படுகிறது.(22) ஓ! பெரும் அருந்ததி, ஒரு விரதத்தையோ, உண்ணாநோன்பையோ {உபவாசத்தையோ} செய்யும்போது கணவன், மனைவி இருவரும் இவ்வழியிலேயே நீராட வேண்டும்.(23)
ஹரனின் சக்தியின் மூலமும், என் தவத்தின் மூலமும் நானே இதைக் கண்டேன். ஓர் அறச் சடங்கைச் செய்யும்போது ஒருத்தி தன் காலைத் தானே கழுவிக் கொள்ள வேண்டும்; கணையை {அம்புகளைப்} பயன்படுத்துவதும், உறங்குவதும், அமர்வதும் கூடாது. உண்ணாநோன்பையோ, விரதத்தையோ நோற்பவளான ஒரு பெண் கண்ணீர் சிந்தவோ, சச்சரவு செய்யவோ {சண்டை போடவோ}, கோபப்படவோ கூடாது, அவ்வாறு செய்தால் உடனே அவள் வீழ்ந்தவளாவாள் {விரதங்கெட்டவளாவாள்}.(24,25)
ஓ! சந்திரனுக்குப் பிறந்தவளே, ஒரு விரதத்தையோ, உண்ண நோன்பையோ நோற்கும் சந்தர்ப்பத்தில் ஒரு பெண் வெள்ளை ஆடையையும், வெள்ளை உள்ளாடையையும் அணிய வேண்டும்.(26) அவள் நாணல் போன்ற புல்லால் காலணி {திருணம்} செய்து பயன்படுத்த வேண்டும்.(27) அவள் அஞ்சனமை {மையிடுதல் மஞ்சள் பூச்சு, சந்தனப்பூச்சு}, நறுமணப்பொருட்கள், மலர்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.(28) மரக்குச்சியினால் பற்களைத் துலக்காமலும், தலையை அலம்பாமலும் அவள் தன் தூய்மைச் சடங்குகள் அனைத்தையும் மண்ணால் செய்ய வேண்டும்.(29) அந்த மண்ணை அகற்ற வில்வம், நெல்லி கலந்த நீரால் தன்னுடைய தலையை அலம்ப வேண்டும். {அவற்றிலேயே அமுதமும் இருக்கிறது, ஸ்ரீயும் இருக்கிறாள். மண் கலந்த நீரிலேயே அவள் தலைமுழுக வேண்டும், பிறகு வில்வம், நெல்லி கலந்த நீரால் தலையை அலம்ப வேண்டும்}.(30) அவள் தன் தலை, பாதம், உடல் ஆகியவற்றில் எண்ணெய் தேய்க்கக் கூடாது[1].(31)
விரத, நோன்புக் காலங்களில் எருது, ஒட்டகம், கழுதை ஆகியவற்றால் இழுக்கப்படும் வண்டிகளை எப்போதும் தவிர்க்க வேண்டும், மேலும் ஆடையில்லாமல் நீராடக் கூடாது.(32) ஓ! சோமனின் மங்கல மகளே {அருந்ததி}, ஆறு, அல்லது ஊற்றின் {அருவி} நீரில் நீராடுவது சிறந்தது, நீரில் பிறந்த {தாமரை, அல்லிச்} செடிகள் நிறைந்த தடாகங்களிலும்,(33) கிணறுகளிலும் நீராடுவது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. வெளிப்படையாக வெளியே {பொது இடங்களுக்கு} வராத பெண்களுக்கு இது வசதியானதல்ல என்பதன் தொடர்ச்சியாக அவர்கள் பாத்திரத்தில் உள்ள நீரில் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள்.(34) பழைய வழக்கமான இத்தகைய நடைமுறையில் புதிய பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும். இவ்வழியில் தன் தலையைக் கழுவுபவள் {சிரஸ்நாநம் செய்பவள்}, தபங்களின் பலன்களை அடைகிறாள்" என்றாள் {உமை}.(35)
[1] மற்ற இரண்டு பதிப்புகளை ஒப்புநோக்கி இந்த வாக்கியம் மாற்றப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளபடியே மொழிபெயர்த்தால், "தலை, பாதம், உடல் ஆகியவற்றில் எண்ணெய் தேய்க்க வேண்டும்" என்று இருக்கும்.
விஷ்ணு பர்வம் பகுதி – 135 – 079ல் உள்ள சுலோகங்கள் : 35
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |