(த்யுதரோ꞉ புந꞉ ஸ்வஸ்தாநே நயநம்)
Satya perform the rite | Vishnu-Parva-Chapter-133-077 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : சத்யபாமையின் புண்யக நோன்பு; நாரதருக்குக் கொடையளித்துத் தன்னை மீட்டுக் கொண்ட கிருஷ்ணன்; பாரிஜாதத்தை மீண்டும் சொர்க்கத்திற்குக் கொண்டு சென்றது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! குருவின் வழித்தோன்றலே, முனிவர்களிலும், பேசுபவர்களிலும் முதன்மையானவரும், தவத்தையே செல்வமாகக் கொண்டவருமான நாரதர், கிருஷ்ணனால் நினைக்கப்பட்டவுடனேயே அங்கே வந்தார்.(1) ஓ! மன்னா, ஸ்ரீயின் அழகிய தலைவன் முறையாக அவரை வழிபட்டு, புண்யகச் சடங்குகளை ஏற்றுக்கொள்ளுமாறு மதிப்புடன் அழைத்தான்.(2)
ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, குறிப்பிட்ட நேரம் வந்த போது, அனைத்து உயிரினங்களையும் படைத்த நித்யனான வாசுதேவன், நீராடி நறுமணப் பொருட்களையும், மாலைகளையும் சூடிக்கொண்டு வந்த நாரதரைத் தன் அன்புக்குரிய சத்யாவுடன் {சத்யபாமாவுடன்} மகிழ்ச்சியாக வழிபட்டான்.(3,4) அந்த நல்லூழ் கொண்ட நங்கை {சௌபாக்யவதி சத்யபாமா}, கிருஷ்ணனின் கழுத்தைச் சுற்றி பூமாலையைச் சூடி பாரிஜாத மரத்துடன் சேர்த்து அவனைக் கட்டினாள்.(5) அதன்பிறகு கேசவனின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு அவனை நாரதருக்கு அர்ப்பணித்தாள். அதன்பிறகு அவள், ஆயிரம் பசுக்களையும், எள்ளும், பிற தானியங்களும், பிரகாசமான ரத்தினங்களும் கலந்து, ஒளிர்ந்து கொண்டிருந்த தங்க மலையையும் கொடையாக அளித்தாள்.(6,7)
பேசுபவர்களில் முதன்மையான நாரத முனிவர், அந்தப் பொருட்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, கேசவனிடம் மகிழ்ச்சியாக,(8) "ஓ! கேசவா, சத்யாவால் நீருடன் சேர்த்துக் கொடுக்கப்பட்ட நீ எனதானாய். என்னைப் பின்தொடர்ந்து வந்து நான் சொல்வதைச் செய்வாயாக" என்றார்.(9)
இதைக் கேட்ட ஜனார்த்தனன், "இதுவே முதல் படி {காரியம்}" என்று சொல்லிவிட்டு, புறப்பட ஆயத்தமாக இருந்த நாரதரைப் பின்தொடர்ந்து செல்லத் தொடங்கினான்.(10)
கேலிபேசுவதில் எப்போதும் நுண்ணறிவுமிக்கவரும், முனிவர்களில் முதன்மையானவருமான அவர் {நாரதர்}, இவ்வாறு பல்வேறு வகையில் கேலி பேசியபடி, "இங்கே இரு, நான் புறப்படுகிறேன்" என்று சொல்லி,(11) (கிருஷ்ணனின் கழுத்தில் இருந்து) மலர்மாலையை எடுத்துவிட்டு, "உன்னை விடுவிப்பதற்காகக் கன்றுக்குட்டியுடன் கூடிய ஒரு கபிலப் பசுவையும், எள்ளும் தங்கமும் நிறைந்த கருப்பு மான் தோலையும் {தோற்பையையும்} எனக்குக் கொடுப்பாயாக. காளையைச் சின்னமாகக் கொண்ட தேவனால் (சிவனால்) விடுதலைக்கான இந்த வழிமுறை விதிக்கப்பட்டது" என்றார்.(12,13)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஜனார்த்தனன், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி விடுதலைக்காக அவர் கேட்ட கட்டணத்தையே {கொடையையே} அவருக்குக் கொடுத்தான். அதன் பிறகு சிரித்துக் கொண்டே அவன் முனிவர்களில் முதன்மையான நாரதரிடம், "ஓ! நாரதரே, ஓ! அறமறிந்தவரே, நான் உம்மிடம் பெரிதும் நிறைவடைந்தேன். நீர் விரும்பிய வரத்தைக் கேட்பீராக, நான் அதை உமக்குத் தருவேன்" என்றான்.(14,15)
நாரதர், "ஓ! நித்யனே, பெரும் விஷ்ணுவே, நீ எப்போதும் என்னிடம் நிறைவுடன் இருப்பாயாக. உன் தயவால் நான் உன்னுடன் வசிக்கும் நிலையை அடைவேனாக.(16) ஓ! நல்லோரின் புகலிடமான விஷ்ணுவே, {நான் பிறப்பற்றவனாக இருப்பேனாக. ஒருவேளை} நான் மீண்டும் பிறக்க வேண்டியிருந்தால் எந்தப் பெண்ணிடமும் பிறக்காத பிராமணனாக இருப்பேனாக" என்று சொன்னார்.(17)
ஓ! பரதனின் வழித்தோன்றலே, தலைவன் விஷ்ணு, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொன்னான், பெரும் நுண்ணறிவுமிக்க நாரத முனிவரும் மகிழ்ச்சியடைந்தார்.(18) ஓ! குரு குலப் பேரரசே, ஹரியின் அன்புக்குரிய மனைவியான சத்யபாமா {ஹரிப்ரியை}, அந்தப் புண்யகச் சடங்கு நிகழ்ந்தபோது, பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணுவின் பதினாறாயிரம் மனைவியரையும் அழைத்திருந்தாள்.(19) அந்தச் சடங்கு நிறைவடைந்ததும், சசி முன்பு வாசுதவேனிடம் கொடுத்த தெய்வீக ஆடைகளையும், ஆபரணங்கள் அனைத்தையும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தாள்.(20)
அங்கே இருந்த பாரிஜாதம், வாசுதேவனின் ஆணையின் பேரில் தன் சிறப்புகள் அனைத்தையும் வெளிப்படுத்த தொடங்கியது.(21) உயரான்ம நாரதராலும், கேசவனாலும் அழைக்கப்பட்ட நண்பர்களும், உறவினர்களும் அந்தப் பாரிஜாதத்தின் சக்தியைக் காணத் தொடங்கினர்.(22) அந்தப் பெருவிழா நடந்தபோது, பெருஞ்சக்திவாய்ந்த ஹரி அங்கே பாண்டவர்களையும், பிருதை {குந்தி}, திரௌபதி, சுபத்திரை ஆகியோரையும் வரவழைத்தான்.(23) ஓ! குரு குல மன்னா, சுருதசிரவையும் அவளது மகனும் {சிசுபாலனும்}, பீஷ்மகனும் அவனது மகனும் {ருக்மியும்}, பிற நண்பர்களும், உறவினர்களும் அங்கே அழைக்கப்பட்டிருந்தனர்.(24) ஓ! மன்னா, இவ்வழியில் பெருஞ்சக்திவாய்ந்த ஜனார்த்தனன், பிருதையின் மகனான அர்ஜுனனுடன் சேர்ந்து தனது அந்தப்புரத்துப் பெண்களின் துணையுடன் மகிழ்ச்சியாகத் தன் நேரத்தைக் கடத்தத் தொடங்கினான்.(25)
இவ்வழியில் ஓர் ஆண்டுக் கடந்ததும், பெருஞ்சக்திவாய்ந்தவனும், ஒப்பற்ற ஆற்றலையும், நுண்ணறிவையும் கொண்டவனும், தேவர்களில் முதன்மையானவனும், அனைவரையும் காப்பவனுமான கேசவன், பாரிஜாதத்துடன் தேவர்களின் நகரத்திற்குத் திரும்பி சக்ரனையும், அதிதியையும், கசியபரையும் வணங்கினான்.(26,27) இவ்வாறு மதுசூதனன் வணங்கிய பிறகு அன்னையான அதிதி, "ஓ! தேவர்களில் முதன்மையானவனே, நீங்கள் இருவரும் எப்போதும் உடன்பிறந்த உணர்வோடு {ஸஹோதர வாத்ஸல்யத்தோடு} இருப்பீராக.(28) ஓ! ஜனார்த்தனா, என்னுடைய இந்த விருப்பத்தை நீ நிறைவேற்றுவாயாக" என்றாள். இதைக் கேட்ட நுண்ணறிவுமிக்கக் கேசவன் தன் அன்னையிடம், "அப்படியே ஆகட்டும்" என்றான்.(29)
பெருஞ்சக்திவாய்ந்தவனான வாசுதேவன், தன் தாய் தந்தையரை வணங்கிய பிறகு, அந்தச் சந்தர்ப்பத்திற்குத் தகுந்த பின் வரும் சொற்களுடன் தேவர்களின் மன்னனிடம்,(30) "ஓ! தேவர்களின் மன்னா, ஓ! கௌரவங்களை அளிப்பவனே, பூமியில் வாழ்ந்து வரும் கொல்லப்படாத தானவர்கள் அனைவரையும் அழிக்குமாறு உயரான்ம சிவனால் எனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.(31) இன்றிலிருந்து பத்து நாட்களுக்குள் அந்த அசுரர்கள் அனைவரையும் நான் கொல்வேன். ஓ! தேவர்களின் மன்னா, அந்தப் போர் நடக்கும் நேரத்தில் பிரவரனும்,(32) வீரனான ஜயந்தனும் சேர்ந்து அந்தத் தானவர்களைக் கொல்தற்காக ஆகாயத்தில் காத்திருக்க வேண்டும். அவர்களில் ஒருவன் மனித வடிவில் இருக்கும் தேவன், மற்றொருவன் தேவனின் மகன்.(33) பிரம்மனால் வழங்கப்பட்ட வரத்தின் மூலம் செருக்குடன் கூடிய அந்தத் தானவர்கள், தேவர்களால் கொல்லப்பட முடியாதவர்களாக இருந்தாலும், நான் இப்போது மனிதனாக இருப்பதால் அவர்களை நம்மால் கொல்ல முடியும்" என்றான்.(34)
இந்திரன் நிறைவடைந்தவனாகக் கிருஷ்ணனிடம், "அவ்வாறே ஆகட்டும்" என்றான். பிறகு, ஓ! ஜனமேஜயா அவர்கள் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர்" என்றார் {வைசம்பாயனர்}.(35)
விஷ்ணு பர்வம் பகுதி – 133 – 077ல் உள்ள சுலோகங்கள் : 35
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |