Thursday 20 August 2020

விரஜம் சென்ற பலதேவன் | விஷ்ணு பர்வம் பகுதி – 102 – 046

(ராமஸ்ய கோகுல்கமனம் யமுனாகர்ஷணம்)

Baladeva visits Vraja | Vishnu-Parva-Chapter-102-046 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : ஆயர்பாடியான கோகுலத்திற்குச் சென்று மகிழ்ந்த பலராமன்; யமுனையைக் கலப்பையால் பிருந்தாவனத்திற்கு இழுத்தது; மீண்டும் மதுரா திரும்பியது...

Balarama and Yamuna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இவ்வாறு சில நாட்கள் கடந்ததும், கோபர்களின் {ஆயர்களின்} நட்பை நினைவுகூர்ந்த ராமன் {பலராமன்}, கிருஷ்ணனின் ஒப்புதலுடன் தனியாக விரஜத்திற்கு {ஆயர்பாடிக்குச்} சென்றான்.(1) பகைவரைக் கொல்பவனும், அழகிய {காட்டு மலர்களாலும், தழைகள் முதலியவற்றாலுமான} காட்டு உடையை உடுத்திக் கொண்டவனுமான கிருஷ்ணனின் தமையன் {பலராமன்}, விரைந்து விரஜத்திற்குள் நுழைந்ததும், முன்பு தன்னால் அனுபவிக்கப்பட்ட பெரிய காட்டையும், நறுமணம் கமழும் தடாகங்களையும் முதலில் கண்டான்.(2,3) அவன் கோபர்களின் வயதுக்கும், ஒழுக்கத்திற்கும் தக்க நடந்து கொண்ட இனிய நடத்தையால் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்து, கோபிகைகளுடன் அழகிய உரையாடல்கள் பலவற்றை நிகழ்த்தினான்.(4,5)

விளையாடுபவர்களில் முதன்மையானவனும், அந்நிய நிலத்தில் {கரவீரபுரத்தில்} இருந்து சமீபத்தில் திரும்பியவனுமான ராமனிடம் முதிய ஆயர்கள் இனிய சொற்களில்,(6) "ஓ! பெருங்கரத்தோனே {பலராமனே}, ஓ! யதுவின் வழித்தோன்றலே, உனக்கு நல்வரவு. இன்று உன்னைக் கண்டதில் நாங்கள் நிறைவடைந்திருக்கிறோம்.(7) ஓ! வீரா, பகைவருக்குப் பயங்கரனாக மூவுலகங்களிலும் நீ கொண்டாடப்படுகிறாய். விரஜத்திற்கு {ஆயர்பாடிக்கு} நீ திரும்பி வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.(8) ஓ! வீரா, ஓ! யதுவின் வழித்தோன்றலே, நாங்கள் உன்னால் பாதுகாக்கப்படத் தகுந்தவர்களாகவோ, சொந்த இடம் உயிரினங்கள் பற்றுக் கொள்ளத் தகுந்ததாவோ இருக்க வேண்டும்[1].(9) ஓ! தெளிவான முகத்தைக் கொண்டவனே, உன் வரவை நாங்கள் எதிர்பார்த்தபோதே நீ எங்களை வந்து கண்டுவிட்டாய். உண்மையில் நாங்கள் தேவர்களும் மதிக்கத் தகுந்தவர்களாகிவிட்டோம்.(10) உன்னுடைய நற்பேற்றினாலும், உன் பெருமையினாலும் மற்போர்வீரர்களும், கம்ஸனும் கொல்லப்பட்டனர், உக்ரசேனரும் மன்னனாக நிறுவப்பட்டார்.(11) பெருங்கடலில் திமி போன்ற {திமிங்கலமாக இருந்த} பஞ்சஜன்யனுடன் ஏற்பட்ட போரையும், அவனது அழிவையும் கோமந்த மலையில் ஜராசந்தனுடனும், மற்ற க்ஷத்திரிய மன்னர்களுடன் நடந்த போரையும் நாங்கள் கேள்விப்பட்டோம்.(12) தரதனின் மரணத்தையும், ஜராசந்தனின் தோல்வியையும், அந்தப் பெரும்போரில் ஆயுதங்கள் இறங்கி வந்ததையும் நாங்கள் கேள்விப்பட்டோம்.(13) ஓ! வீரா, அழகிய கரவீர நகரத்தில் மன்னன் சிருகாலனைக் கொன்றதையும், அவனது மகனை {சக்ரதேவனை} அரியணையில் அமர்த்திக் குடிமக்களைத் தேற்றியதையும் நாங்கள் கேள்விப்பட்டோம்[2].(14) மதுரா நகருக்குள் {மீண்டும் திரும்பிய} உங்களது நுழைவு தேவர்களாலும் உரைக்கப்படத் தகுந்தது. அதன் மூலம் பூமி நிலைநிறுத்தப்பட்டு மன்னர்கள் அனைவரும் உங்கள் ஆளுகைக்குள் வந்தனர்.(15) உன்வரவால் நாங்கள் முன்போல் ஆதரிக்கப்பட்டவர்களாகி, நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியில் நிறைவடைகிறோம்" என்றனர்.(15)

[1] சித்திரசாலை பதிப்பில், "ஓ! யாதவர்களின் மகனே, நாங்கள் உன்னால் நிலை உயர்த்தப்பட வேண்டியவர்கள். அல்லது மகனே, நாங்கள் பிறந்த சொந்த நிலத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கும் மக்களாக இருக்கிறோம்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "ஓ! யாதவக் குல வழித்தோன்றலே, நாங்கள் உன்னால் வளர்கிறோம் என்பதில் ஐயமில்லை. ஓ! மகனே, நீ பிறந்த நிலத்தில் வசிக்கும் உயிரினங்கள் அனைத்தும் மகிழ்ச்சியாக இருக்கின்றன" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "வீர! யாதவ நந்தன! உன்னால் நாங்கள் பெருமைப்படத்தக்கவர். இதற்கோ குழந்தாய், எல்லோரும் ஜன்ம பூமியில் மகிழ்ச்சியடைகின்றனர்" என்றிருக்கிறது.

[2] ஸ்லோக எண்கள் 12 முதல் 14 வரையுள்ள செய்திகள் பிபேக்திப்ராயின் பதிப்பில் இல்லை.

அப்போது ராமன் தன்னைச் சுற்றியிருந்த கோபர்கள் அனைவருக்கும் மறுமொழி கூறும் வகையில், "யாதவர்களைவிடவும் நீங்கள் எங்களுக்குச் சிறந்த நண்பர்களாக இருக்கிறீர்கள்.(17) உங்களால் வளர்க்கப்பட்ட நாங்கள் குழந்தைப்பருவத்தை இங்கே விளையாடிக் கழித்தோம்.(18) உங்கள் வீடுகளில் உணவுண்டு, பசுக்களை மேய்த்தோம். நீங்கள் அனைவரும் எங்களின் உற்ற நண்பர்களாவீர்" என்றான்.(19)

ஹலாயுதன் {பலராமன்}, கோபர்களுக்கு மத்தியில் இந்தச் சொற்களைச் சொன்னபோது, அவர்களுடைய பெண்களின் {கோபியரின்} முகங்களில் மகிழ்ச்சி ரேகைகள் தென்பட்டன.(20) அதன்பிறகு பெரும் பலம்வாய்ந்தவனும், மது ஞானமறிந்தவனுமான ராமன் {பலராமன்}, காட்டுக்குச் சென்று அங்கே கோபிகைகளுடன் விளையாடத் தொடங்கினான்.(21) அப்போது காலதேச {இடம், நேரம் குறித்த} ஞானமறிந்த ஆயர்கள் வாருணி மதுவை அவனிடம் கொண்டு வந்தனர். வெண்மேக வண்ணம் கொண்ட ராமன், தன் நண்பர்களுடன் சேர்ந்து அந்தக் காட்டில் மதுவைப் பருகினான். அதன்பிறகு அந்த ஆயர்கள், காட்டில் விளைந்த அழகிய கனிகள், மலர்கள் பலவற்றையும், இறைச்சி, இனிய சாறுகள், முற்றாக மலர்ந்த தாமரைகளையும், அப்போதே பறித்த அல்லி மலர்களையும் அவனிடம் கொண்டு வந்தனர்.(22-24) கைலாய மலையால் அலங்கரிக்கப்பட்ட மந்தர மலையைப் போலவே ராமனும், காதுகளில் தொங்கும் குண்டலங்களுடனும், சற்றே சாய்ந்த நிலையில் பொருத்தப்பட்ட மகுடத்துடனும், சந்தனத்தால் பூசப்பட்ட குழல், தலையுடனும், காட்டு மலர் மாலைகளால் அலங்கரிப்பட்ட மார்புடனும் திகழ்ந்தான்.(25,26) மேகம் போன்ற கருநீல உடையுடுத்திய அவனது வெண்மேனி, இருளால் சூழப்பட்ட சந்திரனைப் போலத் தெரிந்தது. நாகப்படம் போல அவனது கைகளில் இருந்த கலப்பையும், விரல்களில் எரிந்து கொண்டிருந்த உலக்கையும் அவனது அழகை இன்னும் பெருக்கின.(27,28) இவ்வாறு பலவான்களில் முதன்மையான ராமன், மதுமயக்கத்தில் கண்கள் உருளக் கூதிர் கால இரவின் சந்திரனைப் போல அங்கே இன்புறத் தொடங்கினான்.(29)

அப்போது யமுனையிடம் ராமன், "ஓ! பெருங்கடலுக்குச் செல்லும் பேராறே, உன் நீரில் நீராடுவதன் மூலம் நான் உன்னை மணந்து கொள்ள விரும்புகிறேன். எனவே நீ உடல்வடிவுடன் வருவாயாக[3]" என்றான்.(30)

[3] சித்திரசாலை பதிப்பில், "ஓ! பேராறே, நான் நீராட விரும்புகிறேன். ஓ! பெருங்கடலுக்குச் செல்பவளே நீ உன் வடிவில் வருவாயாக" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஓ! பேராறே, நான் நீராட விரும்புகிறேன். ஓ! பெருங்கடலுக்குச் செல்பவளே, நீ உன் ஒளிவடிவை வெளிப்படுத்தி இங்கே வருவாயாக" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "மஹாநதி யமுனே! அழகியே! என்னிடம் வா!" என்றிருக்கிறது. பலராமன், யமுனையை மணந்து கொள்ளக் கேட்பதாக மற்ற மூன்று பதிப்புகளிலும் இல்லை.

யமுனையானவள், பெண்மையின் வழக்கத்தாலும், அறியாமையாலும், அவன் மதுவின் மயக்கத்தில் சொல்வதாகக் கருதி அவனது சொற்களை அலட்சியம் செய்து அவனிடம் வராமல் இருந்தாள்.(31) இதனால் கோபத்தில் நிறைந்தவனும், மதுமயக்கம் கொண்டவனுமான பலம்வாய்ந்த ராமன், தன் கலப்பை எடுத்துக் கொண்டு, அவளை இழுப்பதற்காகக் கீழே பார்த்தவாறு தலை தாழ்த்தி அமர்ந்தான்.(32) பூமியில் விழுந்த மலர் மாலையானது, இலைகளின் மூலம் தெளிந்த நீரைப் பொழியத் தொடங்கியது.(33) அதன் பிறகு ராமன், மனைவியின் விருப்பத்துடன் அவளை இழுப்பதைப் போல அந்தப் பேராற்றின் கரையைத் தன் கலப்பை முனையை வளைத்து இழுக்கத் தொடங்கினான்.(34) அந்நேரத்தில் ஆற்றின் நீரோட்டங்கள் கலங்கின, மீன்களும், நீர்வாழ் விலங்குகள் அனைத்தும் கலக்கமடைந்தன. யமுனையும் கலப்பையின் போக்கில் பின்தொடர்ந்து சென்றாள்.(35)

பெருங்கடலுக்குச் செல்லும் சக்திவாய்ந்த யமுனை ஆறானவள், மதுமயக்கத்திலுள்ள பெண் நெடுஞ்சாலையில் வழிதவறிச் செல்வதைப் போலக் கலப்பை நுனியால் சுட்டிக்காட்டப்பட்ட வழியைப் பின்தொடர்ந்து அச்சத்துடன் செல்லத் தொடங்கினாள்.(36) அவள் கரையை இடையாகவும், நீலோத்பல {பிம்ப} மலர்களை {கோவைக்கனிகளை} உதடுகளாகவும், நீரால் அடித்துச் செல்லப்படும் நுரைகளைக் கச்சையாகவும், பயங்கர நீரோட்டங்களை அசையும் அங்கங்களாகவும், கலக்கமடைந்த மீன்களைத் தன் ஆபரணங்களாகவும், வெள்ளை வாத்துகளை {ஹம்ஸங்களைத்} தன் பார்வையாகவும், புதிதாக மலர்ந்த காச {நாணல்} மலர்களைத் தன் பட்டாடையாகவும், கரைகளில் வளர்ந்திருக்கும் மரங்களைத் தன் மயிர்நுனிகளாகவும், நீரின் வேகத்தையே வழுக்கும் நடையாகவும், கலப்பை ஏற்படுத்திய கீறலைத் தன் கடைக்கண்ணாகவும், சக்கரவாகங்களைத் தன் முலைகளாகவும் கொண்டிருந்தாள்.(37-40) அவள் தாழ்நிலங்களில் செல்பவளாக இருப்பினும் மேல்நோக்கிச் செல்லுமாறு பிருந்தாவனக் காட்டுக்கு இழுத்துச் செல்லப்பட்டாள்.(41) யமுனையாறு பிருந்தாவனத்திற்கு இழுத்துவரப்பட்டபோது, அழுது ஓலமிடுபவை போன்றே நீர்க்கோழிகள் அவளைப் பின்தொடர்ந்து சென்றன.(42)

யமுனையானவள் பிருந்தாவனக் காட்டைக் கடந்த போது, ஒரு பெண்ணின் வடிவை ஏற்றுக் கொண்டு ராமனிடம்,(43) "ஓ! தலைவா, அமைதி அடைவீராக. எனக்குச் சாதகமற்ற உமது செயல்களைக் கண்டு நான் பீதியடைகிறேன். என்னுடைய நீர் வடிவம் மாற்றமடைவதைப் பாரும்.(44) ஓ! பெருந்தோள்களைக் கொண்டவரே, ஓ! ரோஹிணியின் மகனே, என் பாதையைவிட்டு என்னை இழுத்து வந்துவிட்டீர். எனவே, நான் ஆறுகளின் ஒழுக்கத்தில் இருந்து விலகிவிட்டேன்.(45) நான் பெருங்கடலிடம் செல்லும்போது, நடையில் செருக்குள்ளவர்களும், என் சக்களத்திகளுமான பிற ஆறுகள் தங்கள் நுரைகளுடன் என்னைக் கண்டு சிரித்து, ஒழுக்கம் விலகிய ஆறென என்னை அழைப்பார்கள்.(46) ஓ! வீரரே, ஓ! கிருஷ்ணனின் தமையரே, எனக்கு அருள்புரியுமாறு உம்மை இறைஞ்சுகிறேன். ஓ! தேவர்களில் முதன்மையானவரே, இதயத்தில் மகிழ்வீராக.(47) உமது ஆயுதத்தால் நான் இங்கே இழுத்து வரப்பட்டிருக்கிறேன். உமது சினத்தைத் தவிர்ப்பீராக. ஓ!பெருந்தோள்களைக் கொண்டவரே, ஓ! கலப்பைதாரியே {ஹலாயுதரே}, நான் உமது பாதம் பணிகிறேன். எந்தப் பாதையில் நான் செல்ல வேண்டுமென எனக்கு ஆணையிடுவீராக" என்றாள் {யமுனை}.(48)

மதுவால் மதிமயங்கியிருந்த கலப்பைதாரி {ஹலாயுதன் பலராமன்}, பெருங்கடலின் மனைவியான யமுனையானவள் தன் பாதத்தில் வீழ்வதைக் கண்டு,(49) "ஓ! அழகிய புருவங்களைக் கொண்ட எழில்மிகு யமுனையே, பெருங்கடலில் கலக்கப் போகும் மங்கலக் காரிகையே, என் கலப்பையால் சுட்டிக்காட்டப்பட்ட வழியைப் பின்தொடர்ந்து சென்று இந்த மாகாணத்திற்கு நீரளிப்பாயாக. ஓ! உன்னதமானவளே {புண்யவதியே}, விரும்பியவாறு அமைதியடைந்து நீ செல்வாயாக.(50,51) இவ்வுலகம் இருக்கும் வரை {கலப்பையால் உன்னை இழுத்து வந்த} என் புகழ் நிலைத்திருக்கும்" என்று மறுமொழி கூறினான் {பலராமன்}.

யமுனை இழுத்து வரப்பட்டதைக் கண்ட விரஜவாசிகள் {ஆயர்பாடி வாசிகள்} அனைவரும் ராமனிடம், "நல்ல செயல், நல்ல செயல்" என்று சொல்லி அவனை வணங்கினர். தாக்குபவர்களில் முதன்மையான ராமன், உன்னதமான யமுனையை விட்டுவிட்டு, ஒரு கணம் சிந்தித்தவனாக விரஜவாசிகள் {கோகுலவாசிகள்} அனைவரிடம் இருந்தும் விடைபெற்றுக் கொண்டு மங்கலமான மதுரா நகருக்கு திரும்பிச் சென்றான்.(52-54) ராமன் மதுராவுக்குச் சென்று அண்டத்தின் நித்திய சாறான மதுசூதனன் {கிருஷ்ணன்} இல்லத்தில் இருப்பதைக் கண்டான்.(55) அவன் காட்டுடையுடனும், புதிதாய் மலர்ந்த காட்டு மலர்மாலையால் மறைக்கப்பட்ட மார்புடனும் அவனைத் தழுவிக் கொண்டான்.(56) கலப்பைதாரியான ராமன் அங்கே வந்ததைக் கண்ட கோவிந்தனும் உடனே எழுந்து அவனுக்கு ஓர் இருக்கையை அளித்தான்.(57) ராமன் இருக்கையில் அமர்ந்ததும், ஜனார்த்தனன் விரஜத்தில் {கோகுலத்தில்} உள்ள நண்பர்களின் நலத்தையும், பசுக்களின் நலத்தையும் இனிய சொற்களில் விசாரித்தான்.(58)

அப்போது ராமன் தன் தம்பியிடம் இனிய சொற்களில், "ஓ! கிருஷ்ணா, நீ விசாரித்தவர்கள் அனைவரும் நலமாக இருக்கிறார்கள்" என மறுமொழி கூறினான்.(59) அதன் பிறகு ராமனும், கேசவனும், புராதனமானவையும், ஆதாயந்தரக்கூடியவையுமான பல்வேறு காரியங்கள் {புண்ணியக் கதைகள் பலவற்றைக்} குறித்து வசுதேவனின் முன்னிலையில் உரையாடிக் கொண்டிருந்தனர்" என்றார் {வைசம்பாயனர்}.(60)

விஷ்ணு பர்வம் பகுதி – 102 – 046ல் உள்ள சுலோகங்கள் : 60
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்