(ராமஸ்ய கோகுல்கமனம் யமுனாகர்ஷணம்)
Baladeva visits Vraja | Vishnu-Parva-Chapter-102-046 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : ஆயர்பாடியான கோகுலத்திற்குச் சென்று மகிழ்ந்த பலராமன்; யமுனையைக் கலப்பையால் பிருந்தாவனத்திற்கு இழுத்தது; மீண்டும் மதுரா திரும்பியது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இவ்வாறு சில நாட்கள் கடந்ததும், கோபர்களின் {ஆயர்களின்} நட்பை நினைவுகூர்ந்த ராமன் {பலராமன்}, கிருஷ்ணனின் ஒப்புதலுடன் தனியாக விரஜத்திற்கு {ஆயர்பாடிக்குச்} சென்றான்.(1) பகைவரைக் கொல்பவனும், அழகிய {காட்டு மலர்களாலும், தழைகள் முதலியவற்றாலுமான} காட்டு உடையை உடுத்திக் கொண்டவனுமான கிருஷ்ணனின் தமையன் {பலராமன்}, விரைந்து விரஜத்திற்குள் நுழைந்ததும், முன்பு தன்னால் அனுபவிக்கப்பட்ட பெரிய காட்டையும், நறுமணம் கமழும் தடாகங்களையும் முதலில் கண்டான்.(2,3) அவன் கோபர்களின் வயதுக்கும், ஒழுக்கத்திற்கும் தக்க நடந்து கொண்ட இனிய நடத்தையால் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்து, கோபிகைகளுடன் அழகிய உரையாடல்கள் பலவற்றை நிகழ்த்தினான்.(4,5)