Friday, 31 July 2020

யதுவின் மகன்களும், வெற்றிப்பேறுகளும் | விஷ்ணு பர்வம் பகுதி – 94 – 038

(யாதவோத்பத்தி தேஷாம் பராக்ரமாதிசம்)

The sons of Yadhu and their conquests | Vishnu-Parva-Chapter-94-038 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : மன்னன் யதுவின் சந்ததி; மாஹிஷ்மதி, புரிகம், கரவீரம், கிரௌஞ்சம், மதுரா ஆகிய நகரங்கள் அமைந்த வரலாறு; யாதவர்களின் உட்பகை ஆகியவற்றைக் கிருஷ்ணனுக்கு விளக்கிச் சொன்ன விகத்ரு...

Bahubali Movie Visualisation Scene of Mahishmati

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "{விகத்ரு கிருஷ்ணனிடம் தொடர்ந்தான்} நீண்ட காலத்திற்குப் [பிறகு மன்னன் யது, நாக மன்னனின் அந்த ஐந்து மகள்களிடமும், நீண்ட கரங்களைக் கொண்டவர்களும், முசுகுந்தன்[1], பத்மவர்ணன், மாதவன், ஸாரஸன், ஹரிதன் என்ற பெயர்களைக் கொண்டவர்களும், தன் குலக் கொழுந்துகளுமான ஐந்து அரசமகன்களைப் பெற்றான்.(1,2) ஒப்பற்ற ஆற்றலைக் கொண்ட அந்த மன்னன் {யது}, ஐம்பூதங்களைப் போன்ற அந்த ஐந்து மகன்களையும் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டான்.(3)

[1] மாந்தாதாவின் இளைய மகனின் பெயரும் முசுகுந்தனே ஆகும். இவனைக் குறித்து ஹரிவம்ச பர்வம் பகுதி 12ல் சொல்லப்பட்டிருக்கிறது. இவனும் அவனும் வெவ்வேறானவர்கள்.

செருக்கும், பலமும் கொண்டவர்களும், பூமியின் ஐந்து தூண்களைப் போன்றவர்களுமான அந்த ஐந்து சகோதரர்களும் தங்கள் தந்தையின் முன்பு நின்று, "ஓ! தந்தையே, நாங்கள் உரிய வயதை அடைந்திருக்கிறோம், பெரும்பலத்தைக் கொண்டவர்களாகவும் இருக்கிறோம். உமது கட்டளையின்படி நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எங்களுக்கு ஆணையிடுவீராக" என்று கேட்டனர்.(4,5)

மன்னர்களில் முதன்மையான யது, புலி போன்ற ஆற்றல் கொண்ட தன் மகன்களின் சொற்களைக் கேட்டும், பணியில் அவர்கள் கொண்டிருக்கும் ஆவலைக் கவனித்தும் நிறைவடைந்தவனாக,(6) "என் மகன் முசுகுந்தன், விந்திய, ரிக்ஷவான் மலைகளைச் சுற்றிலும் இரண்டு மலை நகரங்களைக் கட்டட்டும்.(7) என் மகன் பத்மவர்ணன் ஸஹ்ய மலையின் தெற்கே விரைவில் ஒரு நகரைக் கட்டட்டும்.(8) என் மகன் ஸாரஸன், ஸஹ்ய மலையின் மேற்கே சம்பக மரங்களால் அலங்கரிக்கப்பட்ட மாகாணத்தில் ஓர் அழகிய நகரத்தை அமைக்கட்டும்.(9) நீண்ட கரங்களைக் கொண்டவனான என் மகன் ஹரிதன், பாம்புகளின் மன்னனான தூம்ரவர்ணனுடையதும், மஞ்சள் நீர்க் கடலில்[2] அமைந்திருப்பதுமான தீவைப் பாதுகாக்கட்டும்.(10) பக்திமானும், நீண்ட கரங்களைக் கொண்டவனும், என் மகன்கள் அனைவரிலும் முதன்மையானவனும், அவர்களில் மூத்தவனுமான மாதவன், மரபுரிமையுடன் கூடிய வாரிசாக {பட்டத்து இளவரசனாக} நிறுவப்பட்டு என் நாட்டை {ஆநர்த்த நாட்டை} ஆட்சி செய்யட்டும்" என்றான் {யது}.(11)

[2] பிபேக் திப்ராயின் பதிப்பில் இதற்கு முந்தைய அத்தியாயமும், இந்த அத்தியாயமும், இதில் உள்ள செய்திகளும் இல்லை. மற்ற இரண்டு பதிப்புகளிலும் இங்கே "பச்சை நீர்க்கடலில்" என்றிருக்கிறது.

சாமரங்கள் மற்றும் பிறவற்றுடன் முறையாக நிறுவப்பட்ட அந்த மன்னர்களில் முதன்மையானவர்கள், தங்கள் தந்தையின் ஆணையின்படி அரச செழிப்பை அடைந்தவர்களாகத் தங்கள் நகரங்களை அமைப்பதற்காகத் தங்கள் தங்களுக்குரிய மாகாணங்களைத் தேடி புறப்பட்டுச் சென்றனர்.(12,13)

அரச முனியான முசுகுந்தன், தன் நகரத்தை அமைப்பதற்காக நர்மதையின் கரையில் அமைந்துள்ள கடக்கப்பட முடியாத மலைகளுடன் கூடிய விந்தியத்தின் உட்பகுதியைத் தேர்ந்தெடுத்து, நர்மதையின் {நீர்} மட்டத்தில் ஒரு பாலத்தைக் கட்டி, அந்த நகரத்தைச் சுற்றிலும் அடியற்ற நீர் நிறைந்த அகழிகளை அமைத்தான்.(14,15) நகரின் பல்வேறு பகுதிகளில் கோவில்களும், வண்டிகளுக்கான சாலைகளும், கடைகளும், நெடுஞ்சாலைகளும், தோட்டங்களும் கட்டப்பட்டன.(16) மன்னர்களில் முதன்மையான முசுகுந்தன், தன் நகரத்தை முக்கோணக் கொடிகளாலும், கொடிக்கம்பங்களாலும் அலங்கரித்து, செல்வம், தானியம், பசுக்களாலும் விரைவில் அதை நிறைத்தான். இந்திரனின் தலைநகரை (அமராவதியைப்) போன்று அது {அந்நகரம்} செழிப்புமிக்கதாக இருந்தது.(17) தேவர்களின் மன்னனை {இந்திரனைப்} போன்று பலம்வாய்ந்தவனான அந்த மன்னர்களில் முதன்மையானவன் {முசுகுந்தன்}, தன் சக்தியால் கட்டப்பட்ட அந்த நகரத்திற்கு இவ்வாறே பெயரிட்டான். இந்த நகரமானது, ரிக்ஷவான் மலையின் பாதுகாப்பில் கட்டப்பட்டதாலும், அங்கே பாறைகள் நிறைந்திருந்ததாலும் அது மாஹிஷ்மதி என்ற பெயரால் {இப்போது} கொண்டாடப்படுகிறது[3].(18,19) விந்தியம், ரிக்ஷவான் மலைகளுக்கு இடையில் அவன் தேவர்களின் நகரத்தைப் போன்ற பேரழகு கொண்டதும் நூற்றுக்கணக்கான தோட்டங்கள், செழிப்புமிக்கக் கடைகள், முற்றங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டதுமான நகரை புரிகம் என்ற பெயரில் அமைத்தான்.(20,21) அற ஆன்மா கொண்ட மன்னன் முசுகுந்தனால் ரிக்ஷவான் மலையைச் சுற்றி அந்நகரம் அமைக்கப்பட்டதால் அது புரிகம் என்று பெயரிடப்பட்டது.(22) இவ்வாறு அறவோரில் முதன்மையானவனும், பலம்வாய்ந்த மன்னனுமான முசுகுந்தன் தேவர்களால் அனுபவிக்கத் தகுந்த இரண்டு பெரிய நகரங்களைக் கட்டி அவற்றை ஆளத் தொடங்கினான்.(23)

[3] அதாவது, முதலில் இந்நகரம் அமராவதி என்ற பெயரிடப்பட்டது என்றும், பின்னர் மாஹிஷ்மதி என்ற பெயர் தானாக அமையும் என்றும் மன்மதநாததத்தரின் பதிப்பில் வரும் வரிகள் சொல்வதாகத் தெரிகிறது. சித்திரசாலை பதிப்பில், "அந்த மன்னர்களில் சிறந்தவன், புருஹூதனின் (இந்திரனின்) காந்திக்கு நிகரான செழிப்புமிக்க நகரத்தைத் தாமதமில்லாமல் நிர்மாணித்தான். பெருங்கற்கள் நிறைந்திருப்பதாலும், பெருமலையான ரிக்ஷத்தின் அடியில் இருப்பதாலும் இந்நகரம் மாஹிஷ்மதீ என்ற பெயரில் கொண்டாடப்படும்" என்றிருக்கிறது. முன்பே சொன்னது போலப் பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்த அத்யாயமும், இதிலுள்ள செய்திகளும் இல்லை. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "அரசஸ்ரேஷ்டன் குறுகிய காலத்திலேயே அந்த நகரை இந்த்ர நகர் போன்ற சோபை கொண்டதாகவும், செல்வம் மிக்கதாகவும் செய்தான். தேவஸ்ரேஷ்ட வீரமுடைய ராஜஸ்ரேஷ்டன், இந்த நகருக்குத் தனது ப்ரபாவத்தைக் கொண்டே மங்களமான பெயரையுமிட்டான். அந்நகருக்கு விந்த்ய மலைத் தாழ்வரையில் பெரிய கற்குவியல்கள் சேர்ந்திருப்பதால் "மாஹிஷ்தி" நகர் என்ற புகழ் பெயர் பொருந்தும் விந்திய மலை சிகரத்தின் (இரண்டு) பாதத்தின் இடையில் மேலான செல்வம் வாய்ந்த இந்த மாநகரையமைத்தான்" என்றிருக்கிறது.

அரசமுனியான பத்மவர்ணன், வேணையாற்றங்கரையில் அமைந்துள்ள சஹ்ய மலையில்[4] {சஹ்ய மலையின் பின்பக்கத்தில்} தேவதச்சனான விஷ்வகர்மனைப் போன்ற திறனை வெளிப்படுத்தி, செடிகளும், கொடிகளும் நிறைந்த பத்மாவத மாகாணத்தை அமைத்தான்.(24,25) அவனுடைய நகரம் கரவீரம் என்ற பெயரில் அறியப்பட்டது. அந்த மன்னன் {பத்மவர்ணன்}, தன்னுடைய ஆட்சிப்பகுதிகளின் சிற்றளவை அறிந்தவனாக ஒரே முழுமையான நாட்டை அமைத்தான்.(26)

[4] சஹ்ய மலை என்பது குஜராத் முதல், மஹாராஷ்டிரா, கர்னாடகா, கோவா, கேரளா, தமிழ்நாடு வரை நீண்டிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையாகும். இது "சஹ்யாத்ரி" என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு "நன்மைபயக்கும் மலைத்தொடர்" என்பது பொருளாகும். இதன் வடக்குப் பகுதி "சஹ்யம்" என்றும், மங்களூருக்குப் பிறகு வரும் தெற்குப் பகுதி "மலயம்" என்றும் நம்பப்படுகிறது. 

Western Ghats
ஸாரஸன், வளமிக்கதாக நன்கறியப்பட்டதும், அனைத்துப் பருவ காலங்களுக்கும் உரிய மரங்கள் நிறைந்ததுமான வனவாசி மாகாணத்தில், சம்பக மரங்களையும், அசோக மரங்களையும், தாமிர வண்ண பூமியையும் கொண்ட பேரெழில்மிக்கக் கிரௌஞ்ச நகரத்தைக் கட்டினான். (27,28)

ஹரிதன், ரத்தினங்கள் பலவும், அழகிய பெண்கள் பலரும் நிறைந்த கடல் தீவை ஆளத் தொடங்கினான்.(29) அவனுடைய நாட்டில் மத்குரர்கள் என்றழைக்கப்படும் மீனவர்கள் கடலின் பரப்பில் திரிந்து சங்குகளைத் திரட்டினர்.(30) பிற மாகாணங்களைச் சேர்ந்த மக்கள், நீரில் வளரும் பவளங்களையும், பிரகாசமிக்க முத்துக்களையும் குவியல்களாகத் திரட்டி வந்தனர்.(31) நிஷாதர்கள், நீரில் பிறக்கும் ரத்தினங்களைத் தேடிச் சிறு படகுகளில் சென்று அவற்றைத் திரட்டிப் பெரிய படகுகளில் குவித்து வந்தனர்.(32) அந்நாட்டின் மக்கள் மீனையும், இறைச்சியையும் உண்டு வாழ்ந்தனர். அந்த ரத்தினத் தீவில் வசித்தவர்கள், அனைத்து வகை ரத்தினங்களையும் எடுத்துக் கொண்டு, தொலைதூர நாடுகளுக்குப் படகுகளில் சென்று, வணிகத்திற்குரிய பொருட்களால் நிறைவடையும் வளங்களின் தேவனை {குபேரனைப்} போல ஹரிதனை நிறைவடையச் செய்து வந்தனர்.(33,34)

இவ்வாறு இக்ஷ்வாகு குலத்தில் தோன்றிய யதுவின் குலம், அவனது மகன்களால் நான்காகப் பிரிந்து, நான்கு கிளைகளாக {உட்பிரிவுகளாகப்} பகுக்கப்பட்டது.(35) பேரரசன் யது, தன் நாட்டை யதுகுலத்தில் முதன்மையான மாதவனிடம் உரிய காலத்தில் கொடுத்துவிட்டு, பூமிசார்ந்த தன் உடலைக் கைவிட்டு தேவர்களின் நகரத்திற்கு {தேவலோகத்திற்குச்} சென்றான்.(36) நல்லியல்பின் குணத்தையும் {சத்வ குணத்தையும்}, அனைத்து வகை அரச குணங்களையும், சத்வதன் என்ற பெயரையும் கொண்ட பலம்வாய்ந்த மகன் ஒருவன் அந்த மாதவனுக்குப் பிறந்தான்.(37) சத்வதனின் மகனும், பெரும்பலம் வாய்ந்தவனுமான பீமனும் {பிறகு} மன்னனானான். அவனுடைய வழித்தோன்றல்கள் அவனுடைய பெயரைக் கொண்டு பைமர்கள் என்றும், சத்வதனின் பெயரைக் கொண்டு சாத்வதர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.(38) இந்த மன்னன் {பீமன், ஆநர்த்த நாட்டை} ஆண்டுக் கொண்டிருந்த போது, அயோத்தியில் ராமன் செழித்திருந்தான் {செழிப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தான்}. (அந்த நேரத்தில்) {ராமனின் தம்பியான} சத்ருக்னன், லவணனை {லவணாசுரனைக்} கொன்று மதுவனத்தை அழித்தான்.(39) சுமித்ரையின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான அந்தத் தலைவன் {சத்ருக்னன்}, அந்தக் காட்டில் {தன்னால் அழிக்கப்பட்ட அந்த மதுவனத்தில் தான்} மதுரா நகரை அமைத்தான்[5].(40) காலப்போக்கில் ராமன், பரதன், சுமித்திரையின் இரு மகன்கள் (லக்ஷ்மணன், சத்ருக்னன்) ஆகியோர் பூமியில் தங்கள் பணிகளை முடித்துக் கொண்ட போது, விஷ்ணுவின் அந்த ஆட்சிப்பகுதியானது {மதுரா} தன் நாட்டோடு இணைந்திருந்த காரணத்தால், பீமன் அதைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அங்கே வாழத் தொடங்கினான்[6].(41,42)

[5] லவணனுக்கும் ராமனுக்கு ஏற்பட்ட பிணக்கு; அதைக் களைய ராமன் தன் தம்பியான சத்ருக்னனை மதுவனத்திற்கு அனுப்பியது; சத்ருக்னன் லவணனையும், மதுவனத்தையும் அழித்து அங்கே மதுரா நகரத்தை அமைத்தது ஆகிய நிகழ்வுகள் ஹரிவம்ச பர்வம் பகுதி 54ல் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 

[6] சித்திரசாலை பதிப்பில், "காலப்போக்கில் ராமனும், பரதனும், சுமித்ரையின் மகன்களும் (லக்ஷ்மணனும், சத்ருக்னனும்) விஷ்ணு லோகத்தை அடைந்தனர். மன்னன் பீமன், நாடுகளுக்கிடையில் இருந்த உறவின் காரணமாக அந்த நகரத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அங்கே வசிக்கத் தொடங்கினான்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ராமன், பரதன், ஸுமித்ரை குமாரர் லக்ஷ்மணன், ஸத்ருக்னன் இவர்களது காலம் கடந்ததும் (சத்ருக்னால் ஆளப்பட்டு வைஷ்ண ஸ்தானமான) மதுவனம் பீமனால் அடையப்பட்டது. இந்த நகர் ராஜாங்க நடவடிக்கை காரணமாகத் தன் வஸத்திலேயே நிறுவப்பட்டுத் தன்னாலேயே நேரில் ஆளப்பட்டது" என்றிருக்கிறது. இந்த மூன்று பதிப்புகளும் சொல்லும் செய்தியில் சில பல வேறுபாடுகள் இருக்கின்றன.

அதன் பிறகு அயோத்தியில் குசன் அரசனாகவும், லவன் இளவரசனாகவும் ஆன போது, அந்தகன் அந்த நாட்டை {மதுராவை} ஆளத் தொடங்கினான்.(43) அந்தகனின் மகன், மன்னன் ரேவதன் ஆவான். கடற்கரையில் {புதிதாக} அமைந்த அழகிய மலையில் அவனுக்கு {ரேவதனுக்கு} மன்னன் ரிக்ஷன் {ரைவதன்} பிறந்தான். அவனது {ரைவதனின்} பெயரைக் கொண்டே அந்த மலை இவ்வுலகில் ரைவதகம் என்று அறியப்பட்டது.(44,46) ரைவதனின் மகன் பெருஞ்சிறப்புமிக்க மன்னன் விஷ்வகர்ப்பன் ஆவான். பெரும்பலம்வாய்ந்தவனான அவன் {விஷ்வகர்ப்பன்} இவ்வுலகில் கொண்டாடப்பட்ட மன்னனாக இருந்தான்.(46) ஓ! கேசவா, அவன் {விஷ்வகர்ப்பன்}, தேவிகளை {தேவ மங்கையரைப்} போன்ற தன் மூன்று மனைவியரிடமும், குடிமுதல்வர்களைப் போன்றவர்களான வஸு, பப்ரு, சுஷேணன், ஸபாக்ஷன் என்ற மங்கல மகன்கள் நால்வரை பெற்றான். யதுவின் வழித்தோன்றல்களான அவர்கள் ஒவ்வொருவரும், குடிமுதல்வர்களைப் போன்ற புகழ்மிக்கவர்களாக இருந்தனர்.(47,48) ஓ! கிருஷ்ணா, இந்த யது குலத்தில் பிறந்த சந்ததிகளைக் கொண்ட அந்த மன்னர்களின் மூலம் இந்தக் குலம் பூமியெங்கும் பரவியது.(49) வஸுவுக்கு, வஸுதேவன் என்ற பெயரில் ஒரு பலம்வாய்ந்த மகனும், குந்தி, சுருதசிரவை {ஸுப்ரபை} என்ற பெயர்களில் அழகிய இரு மகள்களும் இருந்தனர்.(50) பூமியில் தேவியைப் போலத் திரிந்த குந்தி, மன்னன் பாண்டுவின் மனைவியாகவும், சுருதசிரவை, சேதி மன்னன் தமகோஷனின் மனைவியாகவும் இருந்தனர்.(51) ஓ! கிருஷ்ணா, இவ்வாறே உன் குலத்தின் தோற்றம் குறித்து முன்பே நான் கிருஷ்ண துவைபாயனரிடம் {வியாரிடம்} கேட்டறிந்ததை இப்போது உனக்குச் சொன்னேன்.(52) தற்போது நம் குலம் அழிவின் விளிம்பில் இருப்பதால், எங்களின் நன்மைக்காகவும், வெற்றிக்காகவும் சுயம்புவாக எழுந்த தெய்வமாக, எங்கள் குலத்தலைவனாக நீ பிறந்திருக்கிறாய்.(53)

{விகத்ரு கிருஷ்ணனிடம்} அனைத்தையும் அறிந்தவனாகவும், அனைவரையும் ஆதரிப்பவனாகவும் நீ இருக்கிறாய். தேவர்களாலும் புத்திக்கும் அப்பாற்பட்டவனாக நீ இருக்கிறாய். குடிமக்களில் ஒருவனாக அறிந்து உன்னை நாங்கள் மறைக்கலாம்.(54) ஓ! தலைவா {கிருஷ்ணனிடம்}, மன்னன் ஜராசந்தனுடன் போரிட வல்லவன் நீ, போரிடத் தீர்மானித்திருக்கும் நாங்களும் உன் வழிகாட்டலுக்கேற்ப உன்னைப் பின்தொடர ஆயத்தமாக இருக்கிறோம்.(55) மறுபுறம் ஒப்பற்ற ஆற்றலைக் கொண்ட ஜராசந்தன், மன்னர்கள் அனைவருக்கும் தலைவனாகவும், எண்ணற்ற படைவீரர்களைக் கொண்டவனாகவும் இருக்கிறான். ஆனால் நமது ஆதாரங்களோ {படைகளோ} குறைவானவையாக இருக்கின்றன.(56) இந்த நகரத்தில் உணவும், விறகும் குறைவானவையாக இருக்கின்றன. எந்தக் கோட்டையாலும் இது பாதுகாக்கப்படவில்லை. அகழியின் நீர் சரியாகப் பராமரிக்கப்படவில்லை, வாயில்களில் ஆயுதங்கள் வைக்கப்படவில்லை. எனவே இதைக் கொண்டு நம்மால் ஒரு நாள் போரையும் தாக்குப்பிடிக்க இயலாது. நீண்ட தொலைவுக்கு நீளும் மதில்களும், சுவர்களும் இதைச் சுற்றிக் கட்டப்பட வேண்டும்.(57,58) படைக்கொட்டில் {ஆயுதக்கிடங்கு} செங்கற்களால் சீரமைக்கப்பட வேண்டும்.

இந்நகரம் {மதுரா நகரம்} மனிதர்கள் பலரால் பாதுகாக்கப்படவில்லை, கம்ஸனின் பலத்தால் மட்டுமே இது {மதுரா நகரம்} பாதுகாக்கப்பட்டு வந்தது.(59) கம்ஸன் இறந்து, இப்போது புதிதாக அடையப்பட்டிருக்கும் நமது நாட்டைச் சேர்ந்த இந்நகரத்தால், புதிய முற்றுகையைத் தாக்குப்பிடிக்க இயலாது.(60) இந்த நகரம் முற்றுகையிடப்பட்டுப் பகைவர்களின் தாக்குதலுக்குள்ளாகும்போது, இந்நாடு முற்றிலும் நிர்மூலமாக்கப்படும், இதில் உள்ள மனிதர்களும் நிச்சயம் அழிவைச் சந்திப்பார்கள்.(61) நாம் வென்ற நாட்டை அடையவும், யாதவர்களுக்குள் இருக்கும் உட்பகையைச் சாதகமாக்கிக் கொள்ளவும் விரும்புகிறவர்கள் பகைமையை வெளிப்படுத்தி வருகின்றனர். எனவே, நமக்கு நன்மையை உண்டாக்குபவற்றை நீ செய்வாயாக.(62) நமது மன்னனின் {கம்ஸனின் மரணம்} காரணமாக, நம் நாடு ஆபத்தில் இருக்கும்போது, ஜராசந்தனிடம் கொண்ட அச்சத்தால் குதிகால் பிடரியில் பட ஓடிய மன்னர்களுக்கும் நாம் ஏளனத்திற்குரிய பொருளாவோம்.(63) ஓ! கேசவா, நகரத்தில் தடுக்கப்படும் மக்கள், "யாதவர்களின் உட்பகையால் நாம் அழிந்தோம்" எனத் துயரத்துடன் சொல்வார்கள்.(64) ஓ! கிருஷ்ணா, அன்பால் என் கருத்தை வெளிப்படுத்துகிறேனேயன்றி, உன்னில் கடமையுணர்வைத் தூண்டுவதற்காக நான் இவ்வாறு பேசவில்லை.(65) ஓ! கிருஷ்ணா, இப்போது நமக்கு நன்மையை உண்டாக்குபவற்றை நீ செய்வாயாக. நீயே இந்தப் படையின் தலைவன், நாங்கள் உன் ஆணைகளைப் பின்பற்றுவோம். அதையுந்தவிர, இந்தச் சச்சரவுக்கான வேர் நீயே. எங்களையும் காத்து, உன்னையும் காத்துக் கொள்வாயாக" என்றான் {விகத்ரு கிருஷ்ணனிடம்} என்றார் {வைசம்பாயனர் ஜனமேஜயனிடம்}.(66)

விஷ்ணு பர்வம் பகுதி – 94 – 038ல் உள்ள சுலோகங்கள் : 66
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்