(ஜாமதக்ன்யேன ராமக்ருஷ்ணயோ ஸங்கதி)
Krishna meets Parasurama | Vishnu-Parva-Chapter-95-039 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : பலராமனும், கிருஷ்ணனும் தென்திசை பயணம் செய்து பரசுராமரைச் சந்தித்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பெருஞ்சிறப்புமிக்க வஸுதேவன், விகத்ருவின் சொற்களைக் கேட்டு, மகிழ்ச்சிமிக்க இதயத்துடன், "ஓ! கிருஷ்ணா, அரசின் பேச்சாளர்களிலும், அரச ஆலோசனைகளின் பொருளை அறிந்தவர்களிலும் முதன்மையானவனும், புத்திமானுமான விகத்ரு சொல்வது உண்மையான, பொருள் நிறைந்த சொற்களுமாகும். இவன் அரச கடமைகள் தொடர்பானவற்றையும், அண்டத்திற்கு நன்மை விளைவிக்கும் உண்மைகளையும் சொல்லியிருக்கிறான். யதுக்களில் முதன்மையான இவன் சொல்வதைக் கேட்பாயாக" என்றான் {வஸுதேவன்}.(1-3)
மனிதர்களில் முதன்மையான கிருஷ்ணன், தன் தந்தையின் சொற்களையும், உயரான்ம விகத்ருவின் சொற்களையும் கேட்டு அறிவுக்குகந்த பின்வரும் சொற்களைச் சொன்னான்.(4) கிருஷ்ணன், "அறிவு, ஒழுங்கு, தர்க்கம், சாத்திரங்கள் ஆகியவற்றின் முன்னறிவிப்புகளை (முன்னறிவிப்புகளின் போக்கை) ஆய்வு செய்து உம்மால் சொல்லப்பட்டவற்றைக் கேட்டேன்.(5) என் மறுமொழியைக் கேட்பீராக, கேட்டபிறகு அதை ஏற்பீராக. ஒரு மன்னன், ஒழுக்கத்தையும், அறத்தையும் அடிப்படையாகக் கொண்ட நெறிகளின் விதிப்படி செயலாற்ற வேண்டும்.(6) அமைதியை ஏற்படுத்தல் {சமாதானம்}, சச்சரவு செய்தல், செல்கலன்கள் {வாகனங்கள்}, இருக்கைகள், பகை உண்டாக்கல், உதவி செய்தல் ஆகியவற்றை நாள்தோறும் தியானிக்க வேண்டும்[1].(7) கல்விமானான ஒரு மன்னன், {தன்னைவிட} பலம்வாய்ந்த ஒரு பகைவனின் முன்பு தன்னை நிறுத்திக் கொள்ளாமல் தப்பிச் செல்ல வேண்டும். உரிய காலத்திலும், தன் பலத்திற்கு ஏற்ற வகையிலும் அவன் போரில் ஈடுபட வேண்டும்.(8)
[1] சித்திரசாலை பதிப்பில், "பேச்சுவார்த்தை, போர், பயணம் (தப்பித்தல்), அமர்தல், பிரித்தல், சார்ந்திருத்தல் ஆகிய ஆறு குணங்களையும் மன்னன் தன் கருத்தில் கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்த அத்தியாயமும், இதில் உள்ள செய்திகளும் இல்லை. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ஸமாதானம், சண்டைப் போரில் முன்னேறுதல் அல்லது பின்வாங்குதல், பலத்துடன் ஒரே நிலையில் நிற்றல், மித்ர பேதம் செய்தல், சரணாகதி செய்தல் இந்த ஆறு ராஜ தத்வங்களை எப்போதும் யோசிக்க வேண்டும்" என்றிருக்கிறது.
எனவே, நான் இயன்றவனாக இருந்தாலும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இயலாத ஒருவனைப் போல இந்தக் கணத்திலேயே வழிபடத்தகுந்தவரான பலதேவருடன் {பலராமனுடன்} தப்பிச் செல்லப் போகிறேன்.(9) மதிப்புக்குரிய என் அண்ணனுடன், என்னைப் போலவே அழகாக இருக்கும் சஹ்ய மலையில் {மேற்குத் தொடர்ச்சி மலையின் வடக்குப் பகுதி} ஏறி, தக்காண பீட பூமிக்குள் {தென்னாட்டுக்குள்} நுழைந்து, கரவீரம், கிரௌஞ்சம், மலைகளில் முதன்மையான கோமந்தம் ஆகிய அழகிய நகரங்களைக் காணப் போகிறேன்.(10,11) அந்தப் பேரரசன் {ஜராசந்தன்}, நாம் புறப்பட்டதைக் கேள்விப்பட்டு, வெற்றிக்களிப்படைந்து, {மதுரா} நகருக்குள் நுழையாமல் செருக்குடன் எங்களைப் பின்தொடர்வான். அவன் தன் தொண்டர்களுடன் சஹ்யக் காடுகளுக்குச் சென்று எங்களைக் கைது செய்ய முயற்சி செய்வான்.(12,13) எனவே எங்களது புறப்பாடு யது குலத்திற்கு நன்மையை விளைவிக்கும். இதன் மூலம் மாகாணத்திற்கும் {நாட்டிற்கும்}, நகரத்திற்கும், குடிமக்களுக்கும் நன்மை விளையும்.(14) மற்றொரு நாட்டில் வெற்றியை அடைய விரும்பும் மன்னர்கள், பகைவன் தன் நாட்டில் இருந்து தப்பி ஓடும்போது, அந்தப் பகைவர்களைக் கொல்லாமல் போரில் இருந்து விலக மாட்டார்கள்" என்றான் {கிருஷ்ணன்}.(15)
இந்த உரையாடலுக்குப் பிறகு, வீரமிக்கக் கிருஷ்ணனும், சங்கர்ஷணனும், இயன்றவர்களாக இருப்பினும், மனத்தில் சிறிதளவும் கவலை கொள்ளாமல் தெற்கே புறப்பட்டுச் சென்றனர். (16) அவர்கள் விரும்பிய வடிவங்களை ஏற்றுக் கொண்டு நூற்றுக்கணக்கான தென்னாடுகளில் பயணிக்கத் தொடங்கினர்.(17) அதன்பிறகு சஹ்யமெனும் அழகிய மலையில் ஏறி இன்புற்று தெற்கே செல்ல வழிவகுக்கும் சாலையை அடைந்தனர்.(18) அவர்கள் அந்தச் சாலை வழியே சென்ற போது, தங்கள் குலத்தோரால் தலைமை தாங்கப்பட்டதும், சஹ்ய மலையால் அலங்கரிக்கப்பட்டதுமான கரவீரமெனும் நகரத்தைக் குறுகிய காலத்திற்குள் அடைந்தனர். அங்கே அவர்கள் வேணையாற்றங்கரையில் ஒரு பெரிய ஆல மரத்தைக் கண்டனர்[2].(19,20) அங்கே, மஹேந்திர மலையின் அருகே, பிருகுவின் வழித்தோன்றலும், ஒருபோதும் களைப்படையாதவரும், நித்தியமானவரும், பெரும் முனிவருமான ராமர் {பரசுராமர்}, அரணி மரம் போன்ற பால் வண்ணம் கொண்டதும், விரும்பியபோதெல்லாம் பால் தருவதும், {க்ஷீராணி என்ற} கன்றுடன் கூடியதுமான தம்முடைய வேள்விப் பசுவிடம் பால் கறந்து கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். தோளில் கோடரியும், மேனியில் மரவுரியும், தலையில் சடாமுடியும் தரித்திருந்தவரும், நெருப்பின் தழல் போன்று வெண்மையானவரும், சூரியனைப் போன்று பிரகாசிப்பவரும், கடலைப் போன்று அசைவற்றவரும், ஒரு நாளைக்கு மூன்று திருப்படையல்களைச் செய்வதால் மெலிந்தவரும், தேவர்களின் ஆசானை {பிருஹஸ்பதியைப்} போன்றவரும், க்ஷத்திரியர்களை அழிப்பவருமான அவர் {பரசுராமர்} அந்த மரத்தினடியில் {ஆலமரத்தினடியில்} அமர்ந்திருந்தார்.(21-26)
[2] வேணை ஆறு, கிருஷ்ணா ஆற்றுக்கு நீர் கொண்டு வரும் கிளையாறு என்று அறியப்படுகிறது. மஹாராஷ்டிர மாநிலத்தில் மேற்கில் உள்ள சதாரா மாவட்டத்தில் மஹாபலீஸ்வர் என்ற மலைசார்ந்த நகரத்தில் இந்த ஆறு உற்பத்தியாகிறது. கரவீரம் என்று இங்கே குறிப்பிடப்படும் நகரம் இந்த மஹாபலீஸ்வராகவும் இருக்கலாம்.
அப்போது பேசுபவர்களில் முதன்மையானவனும், மனிதர்களின் வரலாற்றை அறிந்தவனுமான கிருஷ்ணன், ரிஷிகளில் முதன்மையான அவரிடம் {பரசுராமரிடம்} இனிய சொற்களில்,(27) "ஓ! மதிப்புக்குரிய ஐயா, ரிஷிகளில் முதன்மையானவரும், பிருகு குலத்தில் பிறந்த ஜமதக்னியின் மகனும், க்ஷத்திரியர்களை அழித்தவருமான ராமராக {பரசுராமராக} நான் உம்மை அறிகிறேன்.(28) ஓ! பிருகுவின் வழித்தோன்றலே {பார்க்கவரே}, உமது கணைகளின் வேகத்தால் பெருங்கடலைக் கலங்கடித்து {அதன் நீரை வற்ற செய்து}, இரண்டாயிரம் முழம் அகலமும், ஆயிரம் முழம் நீளமும் கொண்ட {ஐநூறு விற்களின் {வில்லடி} அகலமும், ஐநூறு அம்புகளின் {அம்படி} நீளமும் கொண்ட} சூர்ப்பாரம் {சூர்பார்கம்} எனும் நகரத்தை நீர் அமைத்தீர். பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள சஹ்ய மலையின் வளமான {தாழ்வரையில்} காடுகளில் ஒரு பெரும் மாகாணத்தை {தேசத்தை} நீர் அமைத்தீர்.(29-31) உமது தந்தையின் அழிவை நினைவு கூர்ந்து, காட்டுக்கு ஒப்பான கார்த்தவீரியனின் ஆயிரம் கரங்களையும் உமது கோடரியால் துண்டித்தீர்.(32) உமது கோடரியால் கொல்லப்பட்டுப் பிரகாசமிழந்த க்ஷத்திரியர்களின் கொடுங்குருதியால் நனைந்த மண்ணை இன்னும் பூமியானவள் தன்னில் கொண்டிருக்கிறாள். ஓ! ரேணுகையின் மகனே, க்ஷத்திரியர்களை எதிர்த்துக் கோபத்துடன் பூமியில் போரிட்ட போது, பிடித்திருந்த அதே வகையிலேயே இங்கே அந்தக் கோடரி இருக்கிறது. ஓ!விப்ரரே, உம்மிடம் இருந்து சிலவற்றை நாங்கள் கேட்க விரும்புகிறோம். மனத்தில் தயக்கமேதுமில்லாமல் அதற்கு மறுமொழி கூறுவீராக.(33,34)
ஓ! முனிவர்களில் சிறந்தவரே, யமுனைக் கரையில் வாழும் இரு யாதவர்களைக் குறித்து நீர் ஒருவேளை கேள்விப்பட்டிருக்கலாம். மதுராவில் வாழும் அந்த யாதவர் இருவர் நாங்களே.(35) யதுக்களில் முதன்மையானவரும், எப்போதும் நோன்புகளை நோற்பவரும், எங்கள் தந்தையுமான வசுதேவர், நாங்கள் பிறந்தது முதல் கம்ஸன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக எங்களை விரஜத்தில் {ஆய்ப்பாடியில்} இருக்கச் செய்தார்.(36) அங்கே நாங்கள் அச்சமேதுமின்றி வள்ரந்தோம். நாங்கள் உரிய வயதை அடைந்ததும் சக்திவாய்ந்தவர்களாக மதுராவுக்குள் நுழைந்து, செருக்குமிக்கக் கம்சனை அவனது சபையில் வைத்து அழித்தோம்.(37,38) அதன் பிறகு அவனது தந்தையான உக்ரசேனரை முன்பு போலவே அவருக்கான அரச அலுவலில் நிறுவி, {மீண்டும்} ஆயர்குலச் சிறுவர்களின் பணியில் ஈடுபட்டோம்.(39)
ஓ! உறுதிமிக்க நோன்புகளைக் கொண்டவரே, அதன்பிறகு, ஜராசந்தன் எங்கள் நகரைப் பலமுறை முற்றுகையிட்டபோது நாங்கள் போரிட்டாலும், மேலும் போரிட இயன்றவர்களாக இருப்பினும், {மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட} அவனது ஆயத்தங்களினால் {படையெடுப்புகளால்} ஏற்பட்ட அச்சத்தினாலும், எங்கள் நகரத்தின் நன்மையையும், குடிமக்களின் நன்மையையும் விரும்பியதாலும், படைவீரர்கள், வாகனங்கள், கவசங்கள், ஆயுதங்கள் ஆகியன இல்லாத பலவீனர்களாக நாங்கள் இருந்ததாலும் வேறு ஆயத்தமேதும் செய்யாமல் கால்நடையாக எங்கள் நகரத்தை விட்டு வெளியேறினோம்.(40-42) ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, இவ்வாறே நாங்கள் உம்மிடம் வந்தோம். நீர் எங்களுக்கு ஆலோசனைகளை நல்கி வரவேற்பீராக" என்றான் {கிருஷ்ணன்}.(43)
பிருகு குலத்தில் பிறந்தவரும், ரேணுகையின் மகனுமான ராமர் {பரசுராமர்}, அவர்கள் தங்களுக்குத் தகுந்த சொற்களைச் சொல்வதைக் கேட்டு அறத்தைக் கருவாகக் கொண்ட சொற்களில் மறுமொழி கூறினார்.(44) {பரசுராமர்}, "ஓ! தலைவா, கிருஷ்ணா, உனக்கு ஆலோசனை கூறுவதற்காகவே என் சீடர்களின்றி நான் இங்கே தனியாக வந்தேன்.(45) ஓ! தாமரைக் கண்ணா, விரஜத்தில் {கோகுலத்தில்} உன் வசிப்பிடத்தையும், தீய ஆன்மாவைக் கொண்ட கம்ஸனும், பிற தானவர்களும் அழிந்ததையும் நான் அறிவேன்.(46) ஓ! அழகிய முகத்தைக் கொண்டவனே, ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, உனக்கும், ராமனுக்கும் {பலராமனுக்கும்} ஜராசந்தனுடன் ஏற்பட்ட சச்சரவை அறிந்தே நான் இங்கே வந்தேன்.(47) ஓ! கிருஷ்ணா, அண்டத்தின் நித்திய தலைவனான நீ சிறுவனாக இல்லாவிட்டாலும், தேவர்களின் பணியை நிறைவேற்றுவதற்காகச் சிறுவனாக இருக்கிறாய் என்பதை நான் அறிவேன்.(48)
உங்கள் பகைவனான ஜராசந்தனைத் தடுத்து, நீங்கள் சக்தியுடன் போரிடக் கூடிய இடத்தை நான் இப்போது சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(55) ஓ! மாதவா, உனக்கு நன்மை உண்டாகட்டும். இன்றே நாம் நமது கரங்களைக் கொண்டு புனித ஆறான வேணையை நீந்திக் கடந்து, இந்நாட்டின் எல்லையில் அமைந்துள்ள கடப்பதற்கரிதான மலையில் இரவைக் கழிப்போம்.(56) ஊனுண்ணும் பயங்கர விலங்குகளின் வசிப்பிடமும், மரம், செடி கொடிகள் நிறைந்ததும், பூத்துக் குலுங்கும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டதும், யஜ்ஞகிரி என்ற பெயரைக் கொண்டதுமான சஹ்ய மலையின் சிறு பகுதியில் ஓரிரவைக் கழித்து, கங்கையின் அருவிக்கு ஒப்பாக அந்தப் பெருமலையில் இருந்து வெளிவருவதும், பொற்தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டதுமான கட்வாங்கி {கட்வாங்க} ஆற்றைக் கடந்து, தவசிகளுடன் கூடிய பல்வேறு காடுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கங்கையின் {கங்கையின் அருவிகளுக்கு ஒப்பான} அருவிகளைக் காண்போம்.(57-59) மதிப்புக்குத் தகுந்தவர்களாக இருப்பினும் அவற்றைப் பொருட்படுத்தாத தவசிகளை அந்த மலையில் {யஜ்ஞகிரியில்} காண்போம். அதன்பிறகு அந்த {கட்வாங்கி} ஆற்றைக் கடந்து கிரௌஞ்சமெனும்[3] அழகிய நகரத்திற்குச் செல்வோம்.(60,61) ஓ! கிருஷ்ணா, அந்த மாகாணத்தின் {நாட்டின்} அறம்சார்ந்த மன்னன் மஹாகபி என்பவன் உன் குலத்தில் பிறந்தவனாவான்.(62) நாம் அந்த மன்னனைச் சந்திக்காமல், இரவைக் கழிப்பதற்காக நித்திய புனிதத் தலமான ஆந்துஹம் {ஆனதூஹம்} செல்வோம்.(63) அங்கே இருந்து புறப்பட்டு, சஹ்ய மலையின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள சிகரங்கள் பலவற்றுடன் கொண்டாடப்படும் கோமந்த மலைக்குச்[4] செல்வோம்.(64)
[3] கிரௌஞ்ச கிரி என்று கர்நாடகத்தில் ஓரிடம் இருக்கிறது.
[4] இன்றுள்ள கோவா மாநிலம் கோமந்தக நாடு என்றே அழைக்கப்பட்டது. கர்நாடகத்தின் ஷிமோகா மலையில் உள்ள சர்திரகுடி மலை இஃது என்றும் சிலர் சொல்கிறார்கள்.
கோமந்த மலை நாடான கோவாவில் {கர்னாடகம்} உள்ள ஷிமோகாவின் ஜோக் அருவி |
ஓ! கிருஷ்ணா, தேவர்களால் விதிக்கப்பட்டபடியே யாதவர்களுக்கும், பிற மன்னர்களுக்கும் இடையில் நடக்கும் அத்தகைய போரில் சதையும், குருதியும் கலந்த சேற்றால் பூமி நிறைந்திருக்கும்.(72) யமனுடைய வடிவங்களைப் போலத் தோன்றும் சக்கரம், கலப்பை, கௌமோதகீ எனும் கதாயுதம், சௌநந்தமெனும் உலக்கை ஆகியவையும் பிற வைஷ்ணவ {விஷ்ணுவின்} ஆயுதங்களும் காலனால் தூண்டப்பட்டு அந்தப் போரில் மன்னர்களின் குருதியைக் குடிக்கும்.(73,74) ஓ! கிருஷ்ணா, ஓ! தேவர்களின் வசிப்பிடமாக இருப்பவனே, தேவர்களால் விதிக்கப்பட்டபடியும், காலத்தால் கொண்டுவரப்பட்டபடியும் சக்கரத்தாலும், கதாயுதத்தாலும் அமையும் அந்தப் போரில் தேவர்களும், உன் பகைவர்களும் உன்னை விஷ்ணு வடிவில் காண்பார்கள்.(75,76)
நீண்ட காலமாக உன் நினைவுக்குள் வராத அந்தச் சக்கரத்தையும், கதாயுதத்தையும் தேவர்களின் பணியை நிறைவேற்றுவதற்காக விஷ்ணுவின் வடிவில் நீ எடுப்பாயாக.(77) உலகின் ஆதாரமான ரோஹிணியின் மகன் {பலராமன்}, பகைவரைக் கலங்கடிக்கவல்ல கலப்பையையும், பயங்கரமான உலக்கையையும் தேவர்களின் பகைவரை அழிப்பதற்காக எடுத்துக் கொள்ளட்டும்.(78) பூமியின் சுமையில் இருந்து அவளை விடுவிப்பதற்காக நடந்த கூட்டத்தில் தேவர்களால் பேசப்பட்டதுபோல, உலகில் மன்னர்களுடனான உன்னுடைய முதல் போரானது இதுவாகவே இருக்கும்.(79) இந்தப் போரில் நீ விஷ்ணுவின் வடிவை ஏற்று, ஆயுதங்களையும், செழிப்பையும், சக்தியையும் அடைந்து, பகைவரின் படையை அழிப்பாய்.(80) ஓ! கிருஷ்ணா, இந்தப் போரானது, ஆயுதங்கள் நிறைந்ததும், பாரதம் என்ற பெயரில் நடக்கப் போவதுமான மற்றொரு பெரும்போருக்கான வித்துகளைத் தூவும்.(81) எனவே, நீ மலைகளில் சிறந்த கோமந்தத்திற்குச் செல்வாயாக. ஜராசந்தன் அழிவின் விளிம்பில் இருக்கிறான் என்பது சில அறிகுறிகளின் மூலம் தெரிகிறது.(82) இந்த வேள்விப் பசுவின் அமுதம் போன்ற பாலைப் பருகிவிட்டு என்னால் சுட்டிக்காட்டப்பட்ட வழியில் செல்வாயாக. உனக்கு நன்மை நேரட்டும்" என்றார் {பரசுராமர்}.(83)
விஷ்ணு பர்வம் பகுதி – 95 – 039ல் உள்ள சுலோகங்கள் : 83
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |